மொழிவது சுகம்: தூக்ளாஸ் கிரெஸ்ஸியெ

This entry is part 17 of 26 in the series 30 டிசம்பர் 2012

dgressieux9782849100721 9782849105047Indian-soldiers-exhbn-070

 

உலகின் பிறபகுதிகளைப்போலவே பிரான்சுநாட்டிலும் இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை எதிரொலிக்கும் வகையிற் சங்கங்கள் நூற்றுக் கணக்கில் செயல்படுகின்றன. தமிழர், மலையாளி, தெலுங்கர், பஞ்சாபியர், குஜராத்தியரென குழுச்சமுதாயமாக இயங்குவதும், அவரவர் வட்டார குறியீடுகளை நினைவூட்டும் வகையில் பண்டிகைகள், மொழி வகுப்புகள், பரதநாட்டியம், மோகினி ஆட்டமென்று நற்காரியங்களில் அக்கறைகாட்டுவதும் இச்சங்கங்களின் பொதுகோட்பாடுகள். எனினும் இந்திய துணைக்கண்டத்தைச்சேர்ந்த பிற மக்களிடமிருந்து  வேறுபடுத்திக்காட்ட போலிவுட்டையும், தீபாவளியையும் மறப்பதில்லை. பொதுவாக நமது மக்களுக்கென சில பிரத்தியேகக் குணங்களுண்டு, அவற்றையெல்லாம் தவிர்த்து ஒரு சிலரேனும் இப்படி பொதுநலனுக்கென தங்கள் நேரத்தை செலவிடுவதைப் போற்றத்தான் வேண்டும்.

ஏனைய இந்தியச்  சங்கங்களைக் காட்டிலும் இந்தியத் தமிழர்களை அடையாளப்படுத்துகிற புதுச்சேரி தமிழர்களின் சங்கங்கள் நீங்கள் நினைப்பதுபோலவே எண்ணிக்கையில் அதிகம். இத்தமிழ்ச் சங்க பொறுப்பாளர்கள் தொடக்கக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து வரும் பிரமுகர்களை வரவேற்று அவர்களுக்குக் கரசேவை செய்து ஊருக்கு அனுப்பிவைப்பார்கள். அதற்கு பிரதியுபகாரமாக அப்பிரமுகர்களும் இவர்களிடம் காசு வசூலித்து நன்றிக்கடனாகப் பாராட்டுவிழா நடத்துவார்கள். இன்று உலகத் தமிழிலக்கிய மாநாடு, அருந்தமிழ் விருது என்றெல்லாம் கூத்துகள் அரங்கேறுகின்றன. இவற்றை நடத்த எத்தகுதியும் வேண்டாம் ‘குப்பனும் கடைக்குப் போனான் கூடவே அவளும்போனாள்’ என்றெழுதவோ, பேசவோ, அப்படி பேசுவதைக்கேட்டு புளகாங்கிதம் அடைவதற்குண்டான சொற்ப அறிவோ போதுமானதென்பதுதான் இதிலுள்ள விபரீதம். பிரான்சு நாட்டின் தொடர்பால் கடந்த இரு நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்தியாவுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்கிறவர்கள் இல்லாமலில்லை. ‘குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாமல்’ தொல்லிலக்கியங்களைப் பிரெஞ்சுக்குக்கொண்டுசேர்த்த பெருமகன்களின் பட்டியல் பெரிது, அவர்களை இவர்களுக்குத் தெரியவும் தெரியாது:  உதாரணத்திற்கு தாவிது அன்னுசாமியையும், பிரான்சுவா குரோவின் உழைப்பும் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. பிரெஞ்சு தமிழிலக்கியம் பற்றிய குறைந்த பட்ச ஞானமுள்ளவர்களுக்குக்கூட இவ்வுண்மை விளங்கும்.

இதுபோன்ற கூத்துகளில் நாட்டமின்றி இந்திய விழுமியங்களை மேம்படுத்துவதே, விளம்பரமின்றி பிரெஞ்சுக்காரர்களிடம் அவற்றைக் கொண்டுசெல்வதே எனது மூச்சு என செயல்படுகிறவர்களில் ஒருவரை அண்மைக்காலத்தில் சந்தித்தேன்: பெயர் தூக்ளாஸ் கிரெஸ்ஸியே, ‘Les Comptoirs de l’Inde’ (1) என்றொரு அமைப்பை நடத்திவருகிறார். தூக்ளாஸ் கிரெஸ்ஸியெ ஒரு பிரெஞ்சுக்காரர்.  ஆனால் பிறந்ததும் இளமைப் பருவத்தின் பெரும்பகுதியைப் புதுச்சேரியில் கழித்ததும், பிரான்சு நாட்டினைக் காட்டிலும் கூடுதலாக இந்தியா மீது நாட்டம்கொள்ளவைத்திருக்கிறது.  ‘இந்தியாவின் நிறைகளை மட்டுமே கவனத்திற்கொண்டு, அதன் பெருமைகளைப் பிரெஞ்சு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் எனக்கு அதிக மகிழ்ச்சி’ என தன்னடக்கத்தோடு கூறுகிறார்.

புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு கல்வி நிறுவனத்தில் பிரெஞ்சு பேராசிரியராக பணிபுரியும் வெங்கட சுப்பராயநாயக்கர் என்பரும் நானுமாக இணைந்து ‘Chassé-Croisé -France Inde’ என்றொரு வலைத்தளத்தைத் தொடங்கி நடத்திவருகிறோம். அதைப்பார்த்த தூக்ளாஸ் கிரெஸ்ஸியே என்னைச் சந்திக்க விரும்புவதாக மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார். அவர் இருப்பது பாரீஸ் நகரில், நான் வசிப்பது பிரான்சுநாட்டின் தென்கிழக்கிலுள்ள அல்ஸாஸ் பிரதேச தலைநகரான ஸ்ட்ராஸ்பூர் நகரத்தில். பாரீஸ¤க்கும் எனது நகருக்கும் கிட்டத்தட்ட 500 கி.மீ தூரம். அடிக்கடி பாரீஸ் செல்கின்ற வழக்கமுமில்லை. வியாபார நிமித்தமாகப் பாரீஸ் வருகிறபோது அவசியம் சந்திக்கிறேனென்று தொலைபேசியில் அவரிடம் தெரிவித்தேன். ஒரு மழைநாளில் அவரைத் தேடிச்சென்றேன். அவருடைய அமைப்பு இயங்கும் இடத்தைப் பார்க்க வியப்பாக இருந்தது. பாரீஸில் வேறொருச்சங்கம் நானறிந்து முறையாக அத்தனை பெரிய இடத்தில் இயங்கி பார்த்த ஞாபகமில்லை.

“Les comptoirs de l’Inde என்ற இவ்வமைப்பை பிரெஞ்சு குடியுரிமைப்பெற்ற புதுச்சேரி நண்பர்களும், இந்திய பூமியை நேசிக்கும் பிரெஞ்சு நண்பர்களும் இணைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியிருக்கிறார்கள். இச்சங்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு புதுச்சேரி மக்கள் ‘இந்தியா’, ‘பிரான்சு’ என்ற இரட்டை பண்பாட்டிற்குச் சொந்தக்காரர்கள். புதுச்சேரி மக்களின் இவ்வபூர்வ அடையாளத்தைப் பேணுவதும்  பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழிருந்த புதுச்சேரியின் பழைய நினைவுகளை நினைவுகூர்வதும் தங்கள் குறிக்கோள் என்றார் கெரெஸ்ஸியெ. சங்கத்தின் பெயர் கடந்தகாலத்தை நினைவூட்டிய போதிலும் தங்கள் கவனம் முழுக்க முழுக்க எதிர்காலம் பற்றியதென்றும், அரசியல், சமூகம், பொருளாதாரம், சமயம், இலக்கியம் ஆகியவற்றில் இந்தியாவின் பங்களிப்பு குறித்த பிரக்ஞையை பிரெஞ்சு மக்களுக்கு (இந்தியாவைக்குறித்து சரியானப் புரிதலற்ற)  தெரிவிப்பது தங்கள் நோக்கமென்றும், அப்பபணியை மகிழ்ச்சியுடன் செய்வதாகவும் கூறினார்.

இந்தியா மற்றும் புதுச்சேரிபற்றிய ஆவணக்காப்பக மையம் ஒன்றை 1997ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து தொடங்கி நடத்திவருகிறார்கள். மூவாயிரத்திற்குக் குறையாத ஆவணங்களும், நூல்களும் இம்மையத்தில் வாசிப்பிற்கும், தகவல் சேகரிப்பிற்கும் கிடைக்கின்றன. புதுச்சேரி மற்றும் இந்தியா குறித்து ஆய்வில் ஈடுபடும் மாணவர்களுக்கும் பெரிதும் உதவக்கூடியவை. புதுச்சேரி மற்றும் இந்தியா பற்றிய கருத்தரங்குகள் பலவற்றை பல்கலைகழகங்களிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் தொடர்ந்து நடத்திவருகிறார்கள். இந்தியாவைக்குறித்த நான்கு ஆய்வு நூல்களை வெளியிட்டிருப்பது மிகப்பெரிய சாதனை. இந்தியப் பதிப்பகங்களுடன் தொடர்புகொண்டு படைப்பாளிகளையும் அவர்களுடைய படைப்புகளையும் பிரெஞ்சு வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிற பணியையும் கடந்த இரு ஆண்டுகளாக நண்பர் செய்துவருகிறார். வருடத்தோறும் சங்கத்தின் அரங்கில் இந்தியத் தூதரகத்தின் ஆதரவுடன் தொடர்ந்து இந்தியா, புதுச்சேரி, பிரெஞ்சு பண்பாட்டோடு தொடர்புடைய தமிழர்களைப்பற்றிய புகைப்படங்கள், ஓவியங்கள் கண்காட்சியையும் நடத்திவருகிறார்கள். பிரெஞ்சு தமிழர்களைப்பற்றிய பாரிய ஆய்வொன்றை (இவ்வாய்வு மொரீஷியஸ், மர்த்தினிக், குவாதுலூப், ரெயுனியோன் போன்ற கடந்தகாலத்திலும், இன்றும் பிரெஞ்சு நிர்வாகத்தோடு தொடர்புடைய பிரதேசங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது) கிரெஸ்ஸியெ சங்கம் நடத்தி, ஆவணப்படுத்தியுள்ளது. பிரெஞ்சு பலகலைகழகத்தைச்சேர்ந்த மாணவ மாணவிகள் பலர் தேடலுடன் இங்கே வருகிறார்கள்.

பிரெஞ்சு உள்துறை அமைச்சகத்திலிருந்து பணிஓய்வுபெற்றுள்ள தூக்ளாஸ் கிளெஸ்ஸியெ தமிழை வாசிக்கவும், பேசவும் செய்கிறார். படைப்பிலக்கியத்தில் ஆர்வம் இருக்கிறது: மொழிபெயர்ப்பாளர்,  எழுத்தாளர். புதுச்சேரி வரலாறோடு தொடர்புடைய இரு நூல்களை எழுதியுள்ளார். அவற்றைத் தமிழில் கொண்டுவருவது அவசியமென நினைக்கிறேன்.  இந்தியப் படைப்பிலக்கியங்களை பிரெஞ்சுக்கு அறிமுகப்படுத்தும் ஆர்வம் அவரிடம்  நிறைய இருப்பதைக் கேட்டு மகிழ்ந்தேன். 2011ல்இருந்து இந்திய புத்தகக் கண்காட்சியொன்றை ஏற்பாடு செய்து நடத்திவருகிறார். அண்மையில் நவம்பர் 17 18 தேதிகளில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நியூயார்க்கில் வசிக்கும் Abha Dawesar என்ற பெண் எழுத்தாளர் கலந்துகொண்டார்.

மேலும் தகவல்கள் அறிய:
www.comptoirsinde.org

——————————————

1. Les comptoirs de l’Inde, என்பதற்கு ‘இந்திய வணிகத் தளங்கள்’ என மொழிபெயர்க்கலாம். காலனிய ஆதிக்கத்தின்போது பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த இந்தியப் பிரதேசங்கள் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் இவை நான்கும் பிரெஞ்சு நிர்வாகத்தினரால் ‘Les comptoirs de l’Inde’ என அழைக்கப்பட்டன.

Series Navigationநந்தா பெரியசாமி என்னும் கலைஞன்: ’அழகன் அழகி’ திரைப்படத்தை முன்வைத்து….பெண்களின் விதிகள்
author

ஆதிமூலகிருஷ்ணன்

Similar Posts

Comments

  1. Avatar
    Soma Rajasundaram says:

    தமிழ் இனி மெல்ல சாகும் என்ற கூற்றை மாற்றி அமைத்து விரைவாக பெருகும் என பறை சாற்றும் தூக்லாஸ் கிரஜசிய போன்றோரின் கன்னி முயற்சி தமிழருக்கு ஒரு பாடம்.
    சோம இராஜசுந்தரம்
    சீசெல்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *