“சின்னப்பயல் எண்டால் சரியாகத்தானிருக்கு”

This entry is part 29 of 32 in the series 13 ஜனவரி 2013

பெங்களூர் கப்பன் பார்க் ப்ரஸ்கிளப்பில்’ தவிட்டுக்குருவி என்று விளம்பரத்துல போட்ருந்தது, சரி , எதோ புத்தக வெளியீடாச்சே அதனால ப்ரஸ்கிளப்பில வெச்சிருக்காங்க போலருக்குன்னு நினைத்துக்கொண்டு போனேன். கப்பன் பார்க்ல இறங்கினதும் திருஜிய கூப்பிட்டு , பாஸ் எங்க கூட்டம்னு கேட்டேன். நீங்க எந்த ஸ்டேச்சூ கிட்ட நிக்கிறீங்கன்னார், அப்டியே விக்டோரியா ஸ்டேச்சூகிட்ட வந்துருங்கன்னார். சரி இப்ப ,எப்பவும் போல சுத்தத்தான் போகுதுன்னு நினைத்துக் கொண்டு ,நடையா நடந்தேன். பெங்களூர்ல இப்ப கொஞ்சம் வெய்யில் அடிக்க ஆரம்பிச்சுருக்கு, அதனால மரங்களுக்கிடையே அவ்வப்போது வெய்யில் வந்து போய்க் கொண்டிருந்தது. பார்க்கையே ஒரு சுத்து சுத்தி நடந்து போய் திரும்பும்போது , மணி கையசைத்துக்கூப்பிட்டார். இன்னிக்கு தான் சவரம் பண்ணீருந்தார் போல, அருமையா இருந்தது அவர் ஹேர் ஸ்டைல்.  Pun Intended..!

சரின்னு பக்கத்துல போகப் பார்க்கும்போது , இடைல கம்பி கட்டின வேலி இருந்தது , அதனால இன்னுங்கொஞ்சம் நேர போனீங்கன்னா உள்ள வர்றதுக்கு வழி இருக்குன்னார். அவ்வளவு தூரம் யாரு போறதுன்னு வேலில ஷூவை வெச்சு அப்டியே ஒரு குதி குதிச்சேன் பார்க்குக்குள்ள, (எத்தன தடவ தியேட்டர்ல ஏறிக்குதிச்சிருக்கோம் ;) ) , பக்கத்துல போனபோது , சுஜாதா தேசிகன், திருஜி கூட அருள் இனியன் ( விகடன் மாணவப்பத்திரிக்கையாளர் , “பெண் புலிப்போராளிகள் பரத்தையர் ஆக்கப்பட்ட கதை’ன்னு விகடன்ல எழுதி ஏகத்துக்கு விவாதங்களைக்கிளப்பியவர் ) நின்று கொண்டிருந்தார். முதற்சுற்று அறிமுகம் ஆனபிறகு மெதுவாக என்னருகே வந்து நான் ஒரு வேங்கை போல ,,ஹிஹி,,தாவி வந்த ஸ்டைல பாத்து “சின்னப்பயல் எண்டால் சரியாகத்தானிருக்கு”ன்னு யாழ்த்தமிழ்ல கூறினார். ;) திருஜி வழக்கமாக எல்லா தமிழ்நாட்டவர்களும் ஈழத்திலிருந்து வந்தவர்களைப்பார்த்து கேட்கும் கேள்வியைக் கேட்டார். இனியனும் தமது யூகத்திற்குட்பட்ட ஒரு பதிலைத்தான் சொன்னார் ஆனாலும் நாம் எல்லோரும் எதிர்பார்க்கும் பதில் அல்ல அது.

பின்னரும் மணிக்கு தொடர்ந்து செல் ஒலித்துக்கொண்டே இருந்தது, அப்பப்போ உள்ளங்கையைக் கூப்பி அதில் செல்லை வைத்துக்கொண்டு வருபவர்களுக்கு வழி சொல்லிக்கொண்டிருந்தார். சுஜாதா தேசிகன் அதிகம் பேசவில்லை எங்களிடம் , அறிமுகம் இல்லாத காரணாமாயிருக்கலாம் ( ஏகத்துக்கு ப்ளாக்ல எழுதித்தள்றார் ) , இப்போ “உடுப்பி” போய்ட்டு வந்தீங்களா’ன்னு கேட்டேன் , ஆச்சரியமாகப்பார்த்தவரை , இல்ல உங்க ‘ப்ளாக் ஃபாலோ பண்றேன்’னு சொல்லி வழிந்தேன் 

உள்ளூரிலேயே ஏழு ஆண்டுகள் கழிந்து விட்டது என்று செந்தமிழில் பகன்றுகொண்டே வந்தார்
கவிச்செல்வர் முருகன்  பிறகு எல்லாரிடமும் அதே போரடிக்கும் அறிமுக விளக்கம். விட்டால் இதிலேயே நேரம் கழிந்துவிடும் போலருக்கேன்னு யோசிக்கும் போதே , இரண்டு நபர்கள் , நாங்கள் இதுவரை சந்திக்காதவர்கள் வந்து சேர்ந்தனர். “இங்க மணி “ என்று இழுத்தனர், நான் என் கையைக்கொடுத்து ‘நாந்தான் மணி வாங்க வாங்க’ என்றேன், அவர்களும் அதை நம்பிக்கொண்டு சிரித்துக்கொண்டே கை கொடுத்தனர்,”நான் “இட்லி வடை”ன்னு ப்ளாக் வெச்சிருக்கேன் , இது என்னோட நண்பர் ரவீந்திரன்னு அறிமுகப் படுத்திக்கொண்டார்”. தேசிகன் என்னையும் இனியனையும் பார்த்துக்கொண்டிருந்தார்.
இனியன் “ஏங்க உங்கட குறும்புக்கு ஒரு அளவில்லையா” என்று அதே யாழ்த்தமிழில் சொன்னார் என்னிடம்..வந்தவர்களுக்கு ஏதும் விளங்கவில்லை. அப்போது பார்த்து மணி நாங்கள் நின்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார். “ இதோ இவர்தான் ஒரிஜினல் மணி “ என்று அறிமுகம் செய்து வைத்தேன் அவர்களுக்கு..சிரித்து மாளவில்லை. இடையிடையே புகைப்படங்கள் எடுத்துத்தள்ளிக்கொண்டிருந்தேன்.

எங்களை நோக்கி வந்த மணி வாங்க எல்லாரும், எதாவது ஒரு மரத்தடில உக்காந்து பேசலாம் என்றார், ஆனாலும் அப்போதும் ஹோசூர் கோஷ்ட்டி வரவில்லை, பா.வெங்கடேசன் மற்றும் பெரியசாமி நடராஜன் ஆகியோர். ஆனாலும் கூட்டம் சேர்ந்து கொண்டுதானிருந்தது. சரி இங்கயே உட்கார்ந்து விடலாம் என்று விழாநாயகன் மணி சொல்ல அனைவரும் ஒரு ரவுண்டு கட்டி அமர்ந்தனர். இதென்ன “வாசகர் வட்டம்” மாதிரி இருக்கேன்னு நினைத்துக்கொண்டேன். 

மணி தான் ஆரம்பித்தார், ஒவ்வொரு மாதமும் இது போல இலக்கியக்கூட்டங்கள் நடத்தலாம், விஷயங்களைப் பகிர்ந்துக்கலாம் என்று கொஞ்ச நேரமாக பேசிக்கொண்டேயிருந்தார். ராமலஷ்மி அதை நின்று கொண்டே கேட்டுக்கொண்டிருந்தார் கையில் கேமராவோடு , எப்படா சரியான ஆங்கிள் கிடைக்கும் , சுட்டுத்தள்ளலாம்னு , கேமராவாலதாங்க  ஐயப்பன் சுற்றி சுற்றி வந்து எல்லோரையும் போட்டோ எடுத்துக்கொண்டேயிருந்தார். நான் எடுத்தவரை  போதும் என்று என் கேமராவைக்கீழே வைத்துவிட்டேன், இனியனின் அருகிலமர்ந்து கொண்டு. பின்னர் சிறிது நேரத்திலேயே ஹோசூரிலிருந்து அனைவரும் வந்தே விட்டனர். பின்னாடியே ஒரு தேநீர் விநியோகிப்பவரும் சுற்றி சுற்றி வந்து பிளாஸ்டிக் தம்ளரில் ( இதுக்கு இன்னும் தடை இல்லை பெங்களூரில ) அனைவர்க்கும் தேநீர் கொடுத்துக்கொண்டிருந்தார்.

வந்த அனைவரும் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட பிறகு ( ஆஹா இன்னொரு சுத்து ஆரம்பிச்சிரும் போலருக்கேன்னு நெனச்சி நொந்தே போயிட்டேன் ,என்னை விட இனியன் தான் ரொம்ப சலித்துக்கொண்டார் ) ‘வடக்கு வாசல்’ பென்னேஸ்வரன் வந்திருந்தார். இங்க கிருஷ்ணகிரிக்கு ஒரு வேலையாக வந்திருந்தேன், மணி சொன்னதால இங்க வந்து கூட்டத்தில கலந்துகொண்டேன் என்றார்.

கூட்டம் கிட்டத்தட்ட ஆரம்பித்து சில நேரம் கழித்தே ‘சுஜாதா செல்வராஜ்’ வந்தார். தனியாகத்தான் வந்தார், வந்தவர் மணி அருகிலமர்ந்து கொண்டபோது வட்டம் கொஞ்சம் பெரிதாகியது. என்னைப்பார்த்து “ஹாய்” என்று கையசைத்துக்காட்டினார்.அப்போதும் ராமலஷ்மி நின்றுகொண்டே நோட்டம் விட்டுக்கொண்டு க்ளிக்கிக்கொண்டிருந்தார். அறிமுகங்களினூடே “அந்தி மழை” என்ற சிற்றிதழ் எல்லோருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

தூரன் குணா , வெங்கடேசன் அருகில் போய் அமர்ந்து கொண்டார் , பெரியசாமி மணிக்கும் , சுஜாதாவிற்கும் அருகிலமர்ந்து கொண்டு என்னைப்பார்த்து கையசைத்தார்.புன்முறுவல்கள் பரிமாறிக்கொண்டபோது , நிகழ்வு துவங்கியது .புத்தகம் கைகளிலிருந்து இன்னொருவர் கைகளுக்கு மாறியது , கரவொலிகள். வெங்கடேசன் சற்று , மணி’யைக்கடிந்துகொண்டே தமது பேச்சைத்தொடங்கினார், தமக்கு கவிதைத்தொகுப்பை இன்னும் சரியாக வாசிக்க போதுமான நேரம் கொடுக்காததற்கு. இருப்பினும் பலமுறை வாசித்துவிட்டுத்தான் வந்திருப்பதாக சொல்லிக்கொண்டு தம் உரையை தொடங்கினார். உட்கார்ந்திருந்த அனைவர்க்கும் , அதிக நேரம் தரையிலமர்ந்து .பழக்கமின்மையால் ( அது நல்ல புற்தரையாகவே இருப்பினும் ) , அவ்வப்போது கால் மாற்றி அமர்ந்துகொண்டனர், சிலர் எழுந்து நின்று பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இனியனைத் திரும்பிப்பார்த்தேன்  கொஞ்சம் தூரத்தில் நின்று கொண்டு யாரிடமோ செல்பேசியில் பேசிக்கொண்டிருந்தார். எழுந்து போகுமுன் என்னிடம் மட்டும் அவர் அடித்த கொமெண்ற்றை இங்கே பதிவு செய்ய ,,,ஹ்ம்…வேண்டாம்   விட்டுவிடலாம்.

“தமிழ்மணம்” தளத்தை ஆரம்பகாலங்களில் அறிமுகம் செய்து வைத்தவர்களில் முக்கியமான ஒருவர் , அதன் தொழில்நுட்ப விஷயங்களை கூட அமர்ந்து செய்து , அதை வெற்றிகரமாக தொடக்கியவர் “ கொங்குராசா” தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார். நீங்க தானே “உயிரோசை’ல கவிதைகள் எழுதுறவர்னு என்னைப்பார்த்து ஆச்சரியப்பட்டுகொண்டார். நிறையப் பேசிக் கொண்டிருந்தார் என்னிடம், தமிழ்ல இத்தனை ப்ளாக்’குள் வந்ததற்கான காரணங்களை பட்டியலிட்டார். நான் என்ன நினைத்துக் கொண்டிருந்தேனோ அதையே அவர் சொன்னது மனதுக்கு நிறைவைத் தந்தது. தமிழிலிருந்து பிரிக்கப்பட்டு ஆன்சைட்’டுகளில் வாடும் தமிழ்கூறும் நல்லுலக நெஞ்சங்கள் தான் இத்தனை வெற்றிக்குக்காரணம் என்றவர் இன்னொண்ணும் சொன்னார் , ரொம்ப ரகசியமான விஷயம், அது “ பேயோன்” என்ற பேரில் எழுதுபவர் யாருன்னு, ஹ்ம் ஹூம் , நான் சொல்லமாட்டேன். பேயோனின் ( @ThePayon இல்ல  ) இன்னொரு Twitter IDயையும் என்னிடம் பகிர்ந்துகொண்டார், எனக்கு என்னவோ போலிருந்தது இவர்தானா அவர் என்று   அப்ப ‘எம்டிஎம்’ இல்லியா ‘பேயோன்’ என்ற என் பாவமான கேள்விக்கு சிரித்துக்கொண்டே ‘இல்லை இல்லை’ என்று பதிலளித்தார்.

சுஜாதா செல்வராஜ் என்னைப்பார்த்து ( இது முதல் சந்திப்பு ) நான் உங்கள வேட்டீல்லாம் கட்டி ,பெரிய ஆளாயிருப்பீங்கன்னு நினைத்துக்கொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்டிலாம் இல்லங்க , நான் ரொம்பச் சின்னப்பயல் தான் என்று வழக்கமான பதில் சொன்னேன். ஒரு பெண்ணாக இருந்து கவிதை எழுதுவது என்பது எவ்வளவு கடினம் என்று கிடைத்த அந்த சொற்பநேரத்தில் மிகத் தெளிவாகவே தமது கருத்தைப் பகிர்ந்து கொண்டார். பெரியசாமி , நீங்க நிறைய சிறுகதை எழுதுங்க சுஜாதா, அப்பன்னா புத்தகம் கொண்டுவர்றதுக்கான வாய்ப்புகள் அதிகம் என்று சொன்னார். கேட்டுக்கொண்டிருந்த சுஜாதா ‘எனக்கு மெட்ரொ வரைக்கும் போகணும் யாராவது ட்ராப் பண்றீங்களான்னு கேட்டுக்கொண்டே ஒவ்வொருத்தராக பார்த்துக்கொண்டிருந்தார்’, பின்னர் வந்த தேசிகன், ‘வாங்க உங்கள நானே ட்ராப் பண்றேன்’ என்று அழைத்துக்கொண்டு சென்றார்.

அங்கு பேசிக்கொண்டிருக்கும்போது , இது வரை ஒதுங்கியே நின்ற ராமலஷ்மி , என்னருகில் வந்து நீங்கதானே “நவீனவிருட்சம்”லெ கவிதைல்லாம் எழுதுறதுன்னு , ஆஹா .!!! சிரித்துக்கொண்டே பதிலளித்தேன். நிறைய பெண் முகங்களும் இருந்தன கூட்டத்தில் , சிறுகதை எழுத்தாளர் சுஜாதா ( இந்திரா பார்த்தசாரதி’யின் உறவினர்,கார்ட்டூன்/சீரியல்களுக்கு குரல் கொடுப்பவர் என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார் ) , பின்னர் சுஜாதா தேசிகன், அப்புறம் நம்ம சுஜாதா செல்வராஜ், ஆமா பெங்களூர்னா சுஜாதான்னு பேர் வெச்சவங்கதான் இருக்கணுமான்னு கேக்கற அளவுக்கு ஏகப்பட்ட சுஜாதாக்கள்!

‘வடக்கு வாசல்’ பென்னேஸ்வரனிடம் அறிமுகப்படுத்திக்கொண்டேன். வடக்கு வாசலை ஒரு மாதம் காத்திருந்தும் இணையத்தில் வாசிப்பதாக சொன்னேன்.சந்தோஷப்பட்டவர் , இன்னும் உங்களுக்கு சிரமம் இனியும் இருக்காது என்றவரை நிமிர்ந்து பார்த்தேன், இனி இதழ் வரப்போவதில்லை என்று அவர் கூறியது எனக்கு கஷ்ட்டமாக இருந்தது.

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்த கூட்டம் நான் , பெரியசாமி, வெங்கடேசன் , தூரன் குணா என்ற அளவுக்கு சிறுத்துப்போனது. நடந்து கொண்டே வந்தோம், நன்கு இருட்டிவிட்டது, இந்த திருஜி எங்கப்பா போனார் என்று கேட்டுக்கொண்டே நடந்துகொண்டிருந்தோம். எங்களுக்கு கார்ப்பரேஷன் வரை போனால் ஹோசூர் பஸ் கிடைக்கும் என்றவர்களை , நேர போகலாம் , கொஞ்சம் நடந்தால் கார்ப்பரேஷனே வந்து விடும் என்று கூப்பிட்டு அழைத்துச்சென்றேன். அதற்குப்பிறகு திருஜியும் ஸ்ரீனியும் வந்து சேர்ந்தனர். அப்புறம் எல்லாருமாகச்சேர்ந்து ஒரு இடத்திற்கு சென்றோம். பெரியசாமி மதுவாகினி பற்றி பேச அழைத்துச் சென்றார் எல்லோரையும் அங்கு 

எல்லாம் முடிந்தபோது மிஞ்சியது நானும் தூரன் குணாவும் மட்டும், நடந்து வந்து 335E Volvo  பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்.எனக்குப் பிந்தைய நிறுத்தத்தில் அவரின் வீடு! நிறையப் பேசினார் AC Bus க்குள்ளே  கவிதையின் போக்கும், தொடர்ந்தும் எழுத வருபவர்களை கவனித்து வருவதையும், இடையிடையே Escalations பற்றியும் பேசிக்கொண்டே வந்தார். ‘இந்த IT சனியன ஒழிச்சிட்டா எல்லாம் சரியாப்போயிரும்’ என்று நான் சொன்னேன். ‘அப்டி இல்ல ராம், நமக்கு இந்த இலக்கிய ஈடுபாடு இருக்கிறதால தான் நாம இப்டி சொல்லிக்கிட்டு இருக்கோம்’ என்ற உண்மையைப் பகிர்ந்து கொண்டார். “நாளைக்கு வேலைக்குப்போகணுமா” என்ற எந்தன் கேள்விக்கு சோகமாக அவர் தலையாட்டிய விதம் என்னை என்னவோ செய்தது.

எனது நிறுத்தம் வந்ததும் , அவர் எனக்கென கையெழுத்திட்டுக்கொடுத்த “கடல் நினைவு” கவிதைத்தொகுப்பை வாசித்துப்பின் தெரிவிப்பதாக சொல்லிவிட்டு பல ஆக்ஸில்கள் கொண்ட அந்த பஸ்ஸின் கைப்பிடிக்கம்பிகளைக் கவனமாகப் பிடித்துக்கொண்டு இறங்கினேன். பெங்களூர் இரவுப்பனி கொஞ்சம் கொஞ்சமாக தரை இறங்கிக்கொண்டிருந்தது.

– சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

Series Navigationசாய்ந்து.. சாய்ந்துசுரேஷ்குமார இந்திரஜித் ”நானும் ஒருவன்” (புதிய சிறுகதைத் தொகுப்பு) ஒரு வாசிப்பனுபவம்
author

சின்னப்பயல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *