ஸ்பெஷல் 26 ( இந்தி) – சிறகு ரவி.

This entry is part 20 of 26 in the series 24 பிப்ரவரி 2013

எத்தனுக்கு எத்தன் கதையைப், பரபரவென்று, 143 ந்¢மிடங்களில் சொல்லும் படம். புலனாய்வு துறை வேலை மறுக்கப்பட்டவன், பொய்யாக ஒரு புலனாய்வு குழு அமைத்து, கணக்கில் வராத பணத்தையும், நகைகளையும் அபகரிப்பது ஒன் லைன். ரசிகனை யோசிக்க விடாமல், துரித தூரந்தோ எக்ஸ்பிரஸாக அமைக்கப்பட்ட திரைக்கதை, மெயின் லைன்.

‘எ வெட்னஸ்டே’ படத்துக்குப் பிறகு வந்திருக்கும், நீரஜ் பாண்டேயின் படம். எதிர்பார்ப்புக்கு மேலேயே இருப்பது, அவருக்கு பச்சைக் கொடி. அடிதடி ஆர்ப்பாட்டம் இல்லாமல் அக்ஷய் குமார், ஏழு பிள்ளைகள் பெற்று, எட்டாவது வயிற்றில் இருக்கும் தந்தையாக அசத்தல் அனுபம் கேர். ( “எங்க வீட்டில டெலிவிஷன் இல்லப்பா!” ), கிஞ்சித்தும் சிரிக்காமல், ஒரு சிபிஐ அதிகாரியை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் மனோஜ் பாஜ்பாய், அவ்வப்போது கண்களுக்கு குளிரூட்ட, காஜல் அகர்வால், என படம் சக்கர அரண்மனையாக பயணிக்கிறது.

அஜ்ஜு (எ) அஜய்சிங் ( அக்ஷய் குமார் ), சண்டிகரில் இருக்கும் பி கே வர்மாவுடன் (அனுபம் கெர் ) கூட்டு சேர்ந்து, வரி ஏய்ப்பு, கறுப்புப்பணம் வைத்திருப்போரை, சி.பி.ஐ அதிகாரிகள் என்ற போர்வையில் ‘ரெய்ட்’ செய்து, எல்லாவற்றையும் அபகரிக்கிறான். பணம் தொலைத்தவர்கள், கணக்கில் வராத பணம் என்பதால், போலீசுக்கு போக விரும்பாத சூழலில், அவர்களைப் பிடிக்கும் பொறுப்பு அதிரடி சிபிஐ அதிகாரி வசீம் கானிடம் (மனோஜ் பாஜ்பாய் ) ஒப்படைக்கப்படுகிறது. கானின் கண்களில் மண்ணைத் தூவி, அஜய் நடத்தும் கடைசி பறிமுதலால், கானின் முகத்தில் சிரிப்பு கொந்தளிக்கிறது. இடையில் அஜய்க்கும், எதிர்த்த வீட்டுப் பிரியாவுக்கும் (காஜல் அகர்வால் ) இடையேயான மென்மையான காதல், கோடை வெய்யிலில் பொழியும் ஐஸ்கட்டி மழை. அடுத்த பாகத்துக்கு அச்சாரமாக படம் முடிகிறது.

சுவேதா சேத்தியின் பின்னணி இசை படத்திற்கு பலம். sri நாராயண ரெட்டியின் எடிட்டிங், படத்தின் வேகத்தை தக்க வைக்க, பெரிதும் உதவுகிறது. துரத்தல் காட்சிகளில் பாபி சிங்கின் கேமரா, மின்னல் வேகம். “கோரே முக்குடே பே “ என்றொரு திருமணப்பாட்டு; “முஜே மெய்ன் தூ” என்கிற சோகப்பாட்டு என எட்டுக்கு இரண்டு பழுதில்லை. ஆச்சர்யப்படும் விசயம், பாடல்கள் படத்தின் வேகத்தைக் குறைக்கவில்லை என்பதுதான். கீரவாணி, ஹிமேஷ் ரேஷ்மய்யா, சந்தன் ஷர்மா கூட்டணிக்குப் பாராட்டுக்கள்.

அசத்தல் டிவிஸ்டாக, போலீஸ் அதிகாரியாக வரும் ரன்பீர் சிங்கே ( ஜிம்மி ஷெர்கில்) போலி என்பதும், அவரது ஜீப் ஓட்டுனராக வரும் சாந்தி ( திவ்யா தத்தா ) அவனுடைய கூட்டுக் களவாணி என்பதும், இயக்குனர் காலரை தூக்கி விட்டுக் கொள்ளும் இடம்.

முருகதாசை மிஞ்சும் நீரஜ் பாண்டே, தமிழுக்கு வரமாட்டாரா என்கிற ஏக்கம், எழுந்து போகும் ரசிகனுக்கு ஏற்படுவதைத், தவிர்க்க முடியவில்லை. இம்மாதிரி ‘ நல்ல நல்ல இயக்குனர்களை நம்பி திரை நாடே இருக்குது தம்பி ‘

பரபரப்பு / புதுமையின் வேகம் / உள்ளம் கொள்ளை / புல்லட் டிரெயின். எப்டி வேணும்னாலும் சொல்லிக்கோங்க!

பாமரன் காமெண்ட்: அநியாயத்துக்கு காஜலை, ‘கண் மை’ மாதிரி, ஓரமாக இட்டுட்டாங்களேன்னுதான் ஒரே பீலிங் பங்காளி!

0

Series Navigationஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 1அமீரின் ஆதிபகவன் – “கலாச்சார தீவிரவாதத்தின் உச்சம்”
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *