‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 21 இரா.முருகன் – ‘மூன்றுவிரல்’

This entry is part 1 of 26 in the series 17 மார்ச் 2013

மற்ற எந்தத் தொழிலில இருப்பவர்களையும்விட முழுக்க முழுக்கக் கற்பித்துக் கொண்ட பிம்பங்களின் அடிப்படையில் தமிழ்ப் படைப்புகளில் சித்தரிக்கப்படுகிறவர்கள் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் துறையில் இருக்கப்பட்டவர்கள்தாம்.

கணினி மென்பொருள் தொழில்நுட்ப் பணியாளர்கள் பெரும்பாலும் இருபத்தைந்திலிருந்து முப்பது வயதுக்குள் இருக்கும் இளைஞர்களும் யுவதிகளும். இந்த வயது வரம்பு, கம்ப்யூட்டர் என்ற பழைய மந்திரச் சொல்லின் பரவலான எச்ச சொச்ச கவன ஈர்ப்பு. அங்கோலாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை பறந்து இறங்கிக் கூடு கட்டி இந்த மென்பொருள் தொழிலாளர்கள் சம்பாதிக்கும் – இந்தியச் சராசரி வருமானத்தைவிடப் பல மடங்கு கூடுதலானது என்று பலராலும் கருதப்படும் – வருமானம் போன்றவற்றின் அடிப்படையில் சாப்டவேர் இஞ்சினீயர்களைப் பற்றிப் பலூனாக ஊதப்பட்ட வண்ண வண்ண இமேஜ்கள் தமிழ்க் கதைகளில் பிறக்க ஆரம்பித்தபோது இதெல்லாம் சீக்கிரம் தரைக்கு வந்துவிடும் என்று நினைத்து நான் என்பாட்டுக்கு கம்ப்யூட்டர் தொழிலிலும் அதோடு சம்மந்தப்படாத என் படைப்புலகத்திலும் மூழ்கி இருந்தேன்.

ஆனால் தமிழில் ஒரு படைப்புக்கூட இதுவரை மென்பொருளாளர்களைப் பற்றிய இப்படிப்பட்ட தட்டையான படிமத்தை உடைத்து அந்த்த் தொழிலில் ஈடுபட்டவர்களை நகமும் சதையுமாகச் சித்தரித்து அவர்களின் தொழில்சார்ந்த சிக்கல்களையோ, தினமும் சந்திக்க வேண்டி இருக்கும் சவால்களைப் பற்றியோ பேசவே இல்லை என்று எனக்குப் பட்டபோது, கம்ப்யூட்டர் துறையில் இருக்கும் தமிழ்ப் படைப்பாளன் என்ற முறையில் இவர்களைப் பற்றிய ஒரு முறையான பதிவை, என் படைப்பாக்கங்களின் ஒரு பகுதியாக முன் வைக்க உத்தேசித்தேன்.

நண்பர் பா.ராகவன் திடீரென்று தொலைபேசியில், தான் சார்ந்திருந்த பத்திரிகையின் இணையதளத்தில் நான் உடனே ஒரு தொடர்கதை எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, அது கம்ப்யூட்டர் துறை பற்றியதாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு யோசனையையும் தெரிவித்தார்.

‘ஐந்து நிமிடத்தில் திரும்ப ஃபோன செய்யறேன்…….தலைப்பைச் சொல்லுங்க.’

நான் என் கம்பஃயூட்டரில் வழக்கமான வேலையில் மூழ்கி இருந்தேன். புராஜெக்ட் மானேஜ்மென்ட் தொடர்பான சிக்கலான வேலைப் பங்கு பிரிப்புக்கு இடையே என்ன காரணத்தாலோ அந்த இயந்திரப் பிசாசு ஸ்தம்பித்து நின்றுபோக நான் அதைத் திரும்ப இயங்க வைக்க ரீபூட் செயது கொண்டிருந்தபோது உதயமான தலைப்புதான் ‘மூன்று விரல்’

திடீரென்று இயக்கம் மறந்து உறைவதும், திரும்பச் செயல்படத் தொடங்குவதும் கம்ப்யூட்டரின் குணாதிசயம் மட்டுமில்லை, அதோடு சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கை நியதியும்கூடத்தான் என்று தோன்றிய அந்தக் கணத்தில் உருவான கதையே இது.

இந்த நாவலில் வளைய வருகிறவர்கள் பெரும்பாலும் கம்ப்யூட்டர் தொழிலில் ஈடுபட்டவர்கள. ஆனால், தலையில் கொம்பு முளைக்காத, சட்டைப் பையிலும் கைப்பையிலும் டாலர் நோட்டுகள் பிதுங்கி வழிய, கழுத்தை இறுக்கும் டையும் கோட்டும் துனிநாக்கு ஆங்கிலமுமாக சூயிங் கம்மை மென்றபடி தரைக்கு மேலே சரியாக பத்து சென்டிமீட்டர் உயரத்தில் மிதக்காத சாதாரண மனிதர்கள் இவர்கள்.

‘அவனா…… அமெரிக்காவிலே பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியிலே மாசம் பத்து லட்சம் சம்பாதிச்சு, லாஸ் ஏஞ்சல்ஸிலே வீடும் காரும் வெள்ளைக்காரி தொடுப்புமா இருக்கானாம்……’ என்று பொருமி வியத்தலும், ‘கம்ப்யூட்டர்காரங்களுக்கு எல்லாம் அஷ்டமத்திலே சனி பிடிச்சு தொழிலே நசிஞ்சு போய், அவனவன் ராயர் காப்பி ஹோட்டல்லே வாழைக்காய் நறுக்கிக் கொடுத்திட்டு கிடக்கானாம்…… நல்லா வேணும்’ என்று இருமி எச்சில் உமிழ்ந்து இகழ்தலும் இங்கு இலமே!

இருபது வருடங்களாக இந்தத் துறையில் இருக்கும் அனுபவம், எனக்கு இந்த நாவலை எழுத மிகவும் பயன்பட்டாலும், அது மட்டும் ‘மூன்று விரல்’ இல்லை.

எல்லாப் படைப்புகளும் எழுதியவனை மீறி ஏதோ சொல்ல முற்படுகின்றன. முற்பட வேண்டும். அவற்றோடு ஊடாடும் வாசகர்கள், சொல்லப்பட்ட கதையையும் கடந்து தங்கள் எண்ண ஓட்டங்களை விரிக்க வழி செய்வதோடு எழுதியவனின் கடமை முடிந்து விடுகிறது.

இந்த முன்னுரையையும் இதோடு முடித்துக் கொள்ள அனுமதி வேண்டுகிறேன்.

அன்புடன்
இரா.முருகன்.

Series Navigationதிருக்குறளில் மனித உரிமைகள்!
author

வே.சபாநாயகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *