மூக்கு

This entry is part 18 of 26 in the series 17 மார்ச் 2013

Akutagawa_Ryunosuke_photo
ர்யுனொசெகெ அகுடாகோவா [1918]

மொழிபெயர்ப்பு வைதீஸ்வரன்

“”ஸென்ச்சீ நைய்கு [ Zenchi Naigu ] மூக்கு” என்று மட்டும் சொன்னால் போதும். இகி நொநொ [Ike-no-no ] கிராமத்தில் எல்லோருக்கும் தெரியும் நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்று.. அவர் பெயர் zen தத்துவப் பொருளை சுட்டுவதாக இருக்கலாம்; அவர் பத்து குருமார்களில் ஒருவராக க்யோடோவின் அரசாங்க அரண்மனையின் சிறப்பு ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம்….ஆனாலும் அவரைப் பற்றி யார் பேசினாலும் அது அவர் மூக்கைப் பற்றியதாகத் தான் இருக்கும்.

புருவ மத்தியிலிருந்து ஒரே பட்டையாக அகலமாக நீண்டு அவர் உதடுகளைக் கடந்து ஏதோ காய்கறி முளைத்துத் தொங்குவது போல் சுமார் ஆறு அங்குலத்துக்கு தொங்கிக் கொண்டிருந்தது. அவருடைய விநோதமான மூக்கு..

சின்ன வயது முதல் இப்போது வயது ஐம்பதையும் தாண்டி ஒரு கௌரவமான பதவியில் அமர்ந்திருக்கும் இன்றைய நாள் வரைக்கும் நைய்குவுக்கு தன் மூக்கைப் பற்றிய கவலை தீராமல் வருத்திக் கொண்டு தான் இருந்தது. இருந்தாலும் .எல்லாவற்றையும் துறந்து ஞான நிலைக்காக தவம் செய்ய வேண்டிய இந்த வயதில் ஒரு தத்துவ போதகரான அவர் தன் மூக்கைப் பற்றிப் பெரிதாகக் கவலை கொள்வது தவறானது என்றும் அவருக்கு உறுத்திக் கொண்டிருந்தது. அதை விட அவருக்கு இருந்த பிரச்னை, தன் மூக்கைப் பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் .விஷயம் மற்றவர்களுக்குத் தெரிந்து விடக் கூடுமோ என்பது தான்! இன்னும் அதிகமாக பொதுவாக நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பேச்சு சுற்றி வளைந்து மூக்கு பக்கமாக திரும்பி விடக் கூடாதே என்பது அவர் பயம்.

அன்றாடம் இரண்டு பிரச்னைகளால் மூக்கின் நீட்டம் அவரைப் பாடுபடுத்திக் கொண்டிருந்தது. ஒன்று அது எப்போதும் அவர் உதடுகளை மறித்துக் கொண்டே இருந்தது. இரண்டு அவர் சாப்பிடும்போதெல்லாம் அது உணவுக்கும் வாய்க்கும் இடையில் நந்தி மாதிரி தடுத்துக் கொண்டிருந்தது. நந்தியை விலக்கிக் தூக்கி நிறுத்துவதற்காக அவர் தன் அந்தரங்க சிஷ்யன் ஒருவனை நியமித்திருந்தார். அவன் அவர் சாப்பிடும்போது எதிரே உட்கார்ந்து கொண்டு ஒரு நீளமான மெல்லிய தடியின் மூலம் அவர் மூக்கை சற்று தூக்கி நிறுத்திக் கொண்டிருப்பான்.

ஆனாலும் இது அவ்வளவு எளிதான காரியமல்ல.. ஒரு தடவை தடியைப் பிடித்துக் கொண்டிருந்த சிஷ்யன் பலமாகத் தும்மல் போட மூக்கு நகர்ந்து தடாலென்று சூடான உணவுத் தட்டில் விழுந்து விட்டது. இதைக் கூட நைய்கு எப்படியோ பொறுத்துக் கொண்டு விட்டார். ஆனால் இந்த சம்பவம் எப்படியோ வெளியே கசிந்து போய் அவருக்கு மிக அவமானத்தை உண்டு பண்ணி விட்டது.

இகி-நொ-நொவில் இருந்த மக்கள் நைகு மதகுருவாக இருப்பது அவருடைய அதிர்ஷ்டம் என்று பேசிக் கொண்டார்கள். பின்னே இந்த விசித்திர மூக்குள்ள பிறவியை எந்தப் பெண் தான் கல்யாணம் செய்துகொள்வாள்? ஆனால் அவருக்குத் தான் என்ன தான் பெரிய குருவாக இருந்தாலும் அது மூக்கு ஏற்படுத்தும் வேதனையை எள்ளளவும் குறைத்ததாக சொல்ல முடியவில்லை.. அவருக்கு மனைவி வாய்ப்பதும் வாய்க்காததும் இரண்டாம் பட்சமானது. ஏற்கனவே ஊர் மக்களுக்கு அவன் மேல் இருக்கும் மதிப்பு தேய்ந்து கொண்டு வந்து கொண்டிருந்தது.

தனிமையில் இருக்கும் போது நைய்கு முகக் கண்ணாடியைக் கையில் வைத்துக் கொண்டு மூஞ்சியை பல கோணங்களிலும் திருப்பித் திருப்பிப் பார்த்து ஏதாவது கோணத்தில் அந்த மூக்கின் நீளம் சற்றுக் குட்டையாகத் தோன்றுகிறதா என்று தீவிரமாக உற்று உற்றுப் பார்ப்பார். ஆனலும் அந்த மூக்கு சற்றும் குறையாமல் சில கோணங்களில் வழக்கத்தை விட மேலும் நீண்டு விட்டதாக பயமுறுத்தும். அப்போது நைய்கு வெறுப்படைந்து கண்ணாடியை மூலையில் எறிந்து விட்டு மீண்டும் வேத புத்தகத்தை பாராயணம் செய்யத் தொடங்குவார்.

நய்கு இன்னொரு விதமாக மூக்கைப் பற்றிய துக்கத்தை மாற்றிக் கொள்வதற்காக சுற்று புறத்தில் நடந்து போகும் மனிதர்களின் மூக்கை உற்று கவனித்துப் பார்க்க முற்பட்டார். கோயிலிலும் அதைச் சுற்றிய மைதானங்களிலும் பரவலாக உபன்னியாசங்கள் கச்சேரிகள்அன்னதானங்கள் என்று பொது நிகழ்ச்சிகள் பல நடந்தன. மேலும் துறவிகள் குடியிருப்புகள் அருகே உள்ள குளத்தில் புனிதநீராடுவதற்காக பலர் வருவார்கள். நைய்கு அந்த இடங்களிலெலாம் போய் நின்று கொண்டு ஒவ்வொருவர் மூக்கையும் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே இருப்பார். போகப் போக அவருக்கு ஜன்ங்கள் அணிந்திருந்த ஆடைகளோ வைத்திருந்த பொருள்களோ தூக்கிக் கொண்டிருந்த குழந்தைகளோ எதுவுமே பார்வையில் படவில்லை. பார்க்கப் போனால் அவர் கண்களில் பட்டது வித விதமான மூக்குகள் தான்; ஜனங்கள் அல்ல!

அப்படியும் அது ஏமாற்றமாக அவர் பார்வைக்கு எப்போதாவது சற்று நீண்டு கொக்கி போல் வளைந்த கழுகு மூக்கு தான் சிக்குமே தவிர அவருடையதைப் போல் இத்தனை விகாரமாக யாரிடமுமே காண முடியாத மூக்காக இல்லாமல் இருந்தது அவருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மற்றவர்களிடம் பேசும் போது அவர் கை விரல்களால் மூக்கின் நுனியை மறைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.

திடீரென்று அவர் இன்னொரு விதமாக தன் பிரச்னைக்கு சமாதானம் தேடிக் கொள்ள முயற்சி செய்தார். பழங்கால புராணங்கள் இதிகாஸங்கள் ஜாதகக் கதைகள் எல்லாவற்றையும் துருவித் துருவிப் படித்து அதன் பாத்திரங்கள் யாருக்காவது தன்னுடையதைப் போன்ற மூக்கு இருப்பதை அறிந்தால் தன்னையும் பழம்பெருமை வாய்ந்த இதிஹாஸ பாத்திரங்களின் சாயலாக நினைத்து மனதைத் தேற்றிக் கொள்ளலாமே என்று நினைத்தார்.

அதிலும் அவருக்கு ஏமாற்றமே பலித்தது. கடோத்கஜன் கும்பகர்ணன் போன்றவர்களின் மூக்குக் கூட அவர்களின் பூதாகாரமான முகத்தைக் கெடுக்கிற மாதிரியாக இல்லாமல் முகத்தின் அகலத்திற்கு ஏற்ற அளவுடன் பொருத்தமாக இருந்தது. பல நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட சீனக் கதை ஒன்றில் அந்நாட்டின் புகழ் பெற்ற அரசன் நீளமான காது உடையவனாக சித்தரிக்கப் பட்டிருந்தான்..” அய்யோ…..என்ன துரதிர்ஷ்டம்!

காதுக்கு பதிலாக அந்த ராஜாவுக்கு என் போல் நீளமான மூக்கு இருக்க்க் கூடாதா? அப்படி இருந்தால் எனக்கு எவ்வளவு ஆறுதலாக ஆதரவாக இருக்கும்! என்று அலுத்துக் கொண்டார

மூக்கின் அசாத்திய நீளத்தைக் குறைக்க அவர் இயற்கை வைத்தியம் மூலிகை சமாச்சாரங்களையும் கையாண்டு பார்த்தார். புடலங்காய் ரஸத்தில் மருந்துப் பொடிகளைக் கலந்து கொதிக்கக் கொதிக்க குடித்துப் பார்த்தார்.. சகிக்க முடியாத படுநாற்றமுள்ள எலி மூத்திரத்தை மூக்கின் மேலும் கீழும் தேய்த்துக் குளிப்பாட்டிப் பார்த்தார். அதன் நீளம் அப்படியே தான் இருந்தது.

ஒரு கோடை காலத்தில் அவருடைய அந்தரங்க சிஷ்யன் க்யோடோவுக்கு சென்று திரும்பி வந்த போது போன இடத்தில் ஒரு சிறந்த வைத்தியரிடமிருந்து இந்த மாதிரி நீண்டு போன மூக்கைக் குறைக்கும் வைத்தியத்தைக் கற்றுக் கொண்டு வந்ததாகத் தெரிவித்தான்.

அந்த புகழ் பெற்ற வைத்தியர் க்யோட்டோ ஆலயத்தில் தலைமை பாதிரியாக இருப்பதாகவும் தெரிவித்தான்.

இதைக் கேட்டதும் நைய்குவின் நெஞ்ச்சிலும் கொஞ்சம் சந்தோஷம் படபடத்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் சிஷ்யனின் வார்த்தைகளில் ஆர்வம் இல்லாதவன் போல் நடந்து கொண்டார். ஆனால் சிஷ்யன் இந்த நடிப்பை ஊகித்துக் கொண்டவனாக தன் குருவின் மூக்கை எப்படியாவது சரியாக்க வேண்டும் என்ற அக்கறையுடன் வைத்தியத்தை தொடங்கினான்.

அந்த சிகிச்சை ஒன்றும் அவ்வளவு சிக்கலானது அல்ல. மூக்கை கொதிக்கும் நீரில் முக்கி சூடாக்கி வைத்து ஒருவர் பாதத்தை அதன் மேல் அழுத்த வேண்டும்! அவ்வளவு தான்.

ஒரு வாளி நிறைய கொதிக்கும் நீரை வைத்து அதில் குனிந்து மூக்கை மட்டும் நனைக்க முயலும்போது முகமும் சேர்ந்து முங்கி விடக் கூடும். அப்போது முகத்தின் தோல் வெந்து போகலாம். அதனால் வென்னீர் வாளியை சுமாரான துவாரமுள்ள மூடியால் மூடி மூக்கை மட்டும் துவாரத்தில் நுழைத்துக் கொள்வது நல்ல யுக்தியாகப் பட்டது. நய்கு தன் நீண்ட மூக்கை நுழைத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்துக்கும் அதிகமாகவே அசையாமல் வாயினால் மூச்சு இழுத்துக் கொண்டு இருந்தார்.

கொதிக்கும் நீருக்குள் மிதந்த மூக்குக்கு எதுவுமே சூடாகத் தெரியவில்லை. என்பதும் இன்னொரு காரணம்

சிஷ்யன் பயந்து போனான். “ குருஜீ….இவ்வளவு நேரத்தில் அது நன்றாக வெந்து போயிருக்கலாம்..” என்றான் குரு தனக்குள் சிரித்துக் கொண்டார். “நல்ல வேளை வெளியில் இதைக் கேட்பவர்களுக்கு அது மூக்கு என்று தெரியாது” நைய்கு மெள்ளத் தலையைத் தூக்கினார். மூக்கைச் சுற்றி ஏதோ கொசுக்கள் மொய்த்த மாதிரி ஒரு விறுவிறுப்பு மட்டும் இருந்தது

சிஷ்யன் நய்குவின் செக்கச் சிவந்து உருண்டு நீண்ட மூக்கை மேசையின் மேல் பரத்தி தன் பாத விரல்களால் பலங் கொண்ட மட்டும் அழுத்தி அழுத்தி மிதித்து உருட்டினான். நய்குவின் சாய்ந்த முகத்தின் கண்கள் இரண்டும் அவன் பாதத்தின் அசைவை மேலுங் கீழுமாக தொடர்ந்து கொண்டே இருந்தன. மரியாதைக்குரிய குருவின் மூக்கை இப்படி கொஞ்சமும் தயக்கமில்லாமல் மிதித்து நசுக்குவதை எண்ணி சற்று துக்கமாகவும் பாபம் செய்வது போலவும் வருத்தியது. சிஷ்யனுக்கு

“வலிக்கிறதா ஐயா….மருத்துவர் இதை விட அதிகமா மிதிக்கச் சொன்னார்…வலிச்சா சொல்லுங்க “ என்று கேட்டுக் கொண்டிருந்தான்

சிஷ்யனின் கேள்விக்கு சௌகரியமாக பதில் சொல்ல முடியாமல் மூக்கில் சிக்கியிருந்த முகத்தை ஆட்ட முடியாமல் காலடியிலிருந்த குரு விழிகளை மட்டும் மேலே செருகிக் கொண்டு பொறுமை இழந்து “வலிக்கலேடா…..ஒண்ணும் வலிக்கலேடா…” என்று அவ்வப்போது கத்திக் கொண்டிருந்தார்.

இப்படி பயங்கர அமுக்கத்தில் மூக்கு மிதி பட்டுக் கொண்டிருந்தாலும் குருவுக்கு அது மெத்தென்று ஒத்தடம் கொடுப்பது போல் சுகமாக வருடிவிட்டது போல் இருந்தது. இந்த முறையில் சில காலம் வைத்தியம் தொடர்ந்து கொண்டிருந்த போது நைய்குவின் மூக்கில் சின்னச் சின்ன முளை விட்டது போல் உருண்டைகள் பரவலாகத்

தென்பட்டு பின்னால் அதுவே ஒரு கொத்தாகி உரித்த பறவைத் தலை போல் மாறி வந்தது. சிஷ்யனுக்கு க்யோட்டோ வைத்தியர் ஏற்கனவே சொல்லியிருந்த அறிகுறிகள் தென்பட்டு விட்டதாக தோன்றியது. அவன் ஒரு சிறிய இடுக்கியினால் அந்த உருண்டை முடிச்சுகளை ஒவ்வொன்றாக அழுத்தமாகப் பற்றிப் பிடுங்க ஆரம்பித்தான். நைய்கு கன்னத்தைத் துருத்திக் கொண்டு அவஸ்தையைப் பொறுத்துக் கொண்டு அதேசமயம் சிஷ்யனுக்கு தன்னிடம் இருக்கும் அபூர்வ பாசத்தையும் எண்ணி நெகிழ்ந்து கொண்டிருந்தார். மூக்கின் மேற்புறத்திலிருந்து அந்த சதைப் பந்துகளை இடுக்கியினால் நீள நீளமாக இழுத்து வெளியே அகற்ற வேண்டியிருந்தது..

“” குருவே….எல்லா சதைகளும் அகற்றப் பட்டு விட்டது இப்போது மீண்டும் மூக்கை வேக வைக்க வேண்டும் “

மனத்துக்குள் அலுத்துக் கொண்டாலும் மூக்கை இன்னொரு தடவையும் வேக வைக்க ஒப்புக் கொண்டார்.

இரண்டாம் கொதிக்குப் பின் நைய்குவின் மூக்கு வெகுவாக்க் குறைந்து அநேகமாக சாதாரணமாக சிலரிடம் காணப்படும் கழுகு மூக்கை விட சற்று மேலும் வளைவாக இருந்தது. இருந்தாலும் உதடுகளுக்குக் கீழ் தொங்கவில்லை. குட்டையாகி விட்ட மூக்கை மெள்ளத் தயக்கத்துடன் தடவித் தடவிக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டார் குரு. நிஜமாகவே நம்பமுடியாத அளவுக்கு அந்த மூக்கின் நீளம் குறைந்து விட்ட்து. அங்கங்கே மிதி பட்ட இடங்கள் மட்டும் சற்று ரத்தச் சிவப்பாக இருந்த்து. இனிமேல் அவர் மூக்கைப் பார்த்து யாரும் கேவலமாக சிரிக்க மாட்டார்கள். கண்ணாடியில் தெரிந்த உருவம் நைகுவை திருப்தியுடன் பார்த்து சிரித்தது

ஆனாலும் அவருக்கு மீதி நாள் முழுவதும் பயமாகவும் படபடப்பாகவும் இருந்தது. மூக்கு மீண்டும் மெள்ள வளர ஆரம்பித்து விடுமோ என்று நிமிஷத்துக்கு ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தார். வேதம் ஜபிக்கும் போதும் சாப்பிடும் போதும் அவருக்கு இதே கவலை. ஆனாலும் மூக்கு இருந்த இடத்திலேயே தான் இருந்தது. இரவு தூக்கம் தூங்கி மறுபடியும் காலையில் விழித்தவுடன் மீண்டும் தொட்டுப் பார்த்துக் கொண்டார். நிச்சயமாக மூக்கு வளராமல் குட்டையாகத் தான் இருந்த்து.

பல வருஷங்களுக்கு முன் இளம் பருவத்தில் என்றோ புதைந்து போன சந்தோஷம் மீண்டும் பீறிட்டு உடல் முழுவது பரவிற்று.

கல்லூரியில் மதக் கல்வித் தேர்வில் முதலாவதாக தேர்ந்து தங்கப்பட்டயம் வாங்கியபோது பொங்கிய மகிழ்ச்சி இப்போது மீண்டும் பொங்கி வழிந்தது.

மூன்று நாள் கழிந்தது. முதல் முறையாக இகி நொ நொ கோவிலில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு பூசாரி இவரைக் கடந்து போகும் போது மீண்டும் திரும்பி வந்து உற்றுப் பார்த்து விட்டு நகர்ந்தான். அவன் எதற்கோ சிரித்துக் கொண்டு போவதாகத் தோன்றியது. அடுத்ததாக பூஜைப் பாத்திரங்களைக் கழுவிகிற பணியாள் இவர் முகத்தை சற்று திகைப்புடன் பார்த்து விட்டு உடனே நகர்ந்து போனான். திடீரென்று பீறிட்டு வந்த சிரிப்பை அடக்க முடியாமல் இரு கைகளையும் பொத்திக் கொண்டு தூணுக்குப் பின் மறைந்து கொண்டான். ஆனாலும் அடக்கமுடியவில்லை. வயிற்றைப் பிடித்துக் கொண்டு எக்கி எக்கி சிரித்துக் கொண்டிருந்தான்.. கோவிலில் நெடுங்காலமாக பணிவிடை செய்து கொண்டிருந்த சாதுவான கிழவன் கூட முதலில் நைய்குவின் முன்னல் நின்று அவர் சொல்லும் உத்தரவுகளை பணிவுடன் கேட்டுக் கொண்டே இருக்கும்போது அவன் முகம் திடீரென்று கோணலாகி வாயில் சிரிப்பு நெளிந்து அடக்கிக் கொள்ள முடியாமல் அவசரமாகப் பொத்திக் கொண்டு அகன்று போனான்.

ஆரம்பத்தில் நைய்குவுக்கு இது பெரிய விஷயமாகத் தெரியவில்லை

திடீரென்று தன் முகத்தில் ஏற்பட்டு விட்ட மாற்றத்தை யாரும் இப்படித் தான் எதிர் கொள்வார்கள் என்று நினைத்தான். ஆனாலும் அவர்கள் இப்போது சிரித்த விதம் மூக்கு நீளமாக இருந்த பொழுதை விட சற்று மோசமாக இருந்தது. ஒரு வேளை நீளமாக இருந்ததை விட குட்டையாகி விட்ட மூக்கு மேலும் கோமாளித்தனமாக மாறி விட்டதோ என்று எண்ணிப் பார்த்துக் கலவரப்பட்டான்

முன்பெல்லாம் அவர்கள் இவ்வளவு துணிச்சலாக முகத்துக்கு எதிரே நின்று சிரித்ததில்லை. நைய்கு கூடத்தில் மாட்டியிருந்த புத்த பகவான் படத்துக்கு முன் நின்று ஜபத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். சில வாரங்களுக்கு முன்னால் நீண்ட மூக்குடன் இந்த அளவுக்கு அவமானப்படாமல் நடமாடிக் கொண்டிருந்தது அவருக்கு நினைவுக்கு வந்தது துக்கத்தை மேலும் அதிகப் படுத்திக் கொண்டிருந்தது.

மக்களுக்கு பொதுவாக இரண்டு முகங்கள் உண்டு. ஒருவன் மிகுந்த கஷ்டமான பிரச்னையில் அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் போது அவனைப் பார்த்து மிகுந்த அனுதாபப் படுவார்கள்… ஆனால் அதே மனிதன் தன் கஷ்டத்தைப் போராடி ஜெயித்து விடுவானாகில் மக்கள் அதை மனம் திறந்து பாராட்டி சந்தோஷப்படுவதில்லை. அவன் ஜெய்த்தது அவர்களுக்குள் ஏதோ ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. திரும்பவும் அவன் பழைய மாதிரி கஷ்டப்பட மாட்டானா….நாம் அவனைப் பார்த்து அனுதாபப்பட மாட்டோமா என்று கூட உள்ளுக்குள் ஒரு நினைப்பு ஓடுகிறது….இந்த வக்கிர எண்ணத்தின் மறு பக்கம் அவனை பற்றிய லேசான விரோத உணர்வு கூடத் தலை தூக்குகிறது. இதற்கும் அடிப்படையில் ஜெய்த்து விட்ட மனிதனிடம் மீண்டு விடுகிற அகந்தையைப் பொறுத்துக் கொள்ள முடியாத இயல்பும் சற்று தலை தூக்குகிறது. . பொதுவாக இப்படிப்பட்ட குயுக்தியான இயல்புகள் மதகுருமார்களிடம் சகஜமாக காணப்படுகின்றன. அதுவும் இகி நொ நொ சமுகத்தில் உள்ள பாதிரிகளிடம் இந்த விதமான குண விசேஷம் சற்று மேலாகவே இருப்பதை நைய்கு உணர்ந்தார்.

நாளுக்கு நாள் நைய்குவின் மனம் மிகவும் அல்லல் பட்டுக் கொண்டிருந்த்து. யாரிடமும் முகங் கொடுத்து பேச முடியவில்லை. இவருக்கு மூக்கு சிகிச்சை பார்த்த சிஷ்யனே இவரை உதாசீனப் படுத்திப் பேசினான். “ எங்களிடம் கடுமையாக நடந்து கொள்வதைத் தவிர இவர் என்ன பெரிய தத்துவம் உபதேசித்து விட்டார்.”

இவற்றை விட கேவலமாக இன்னொரு சிஷ்யன் நடந்து கொண்டான். அவன் ஒரு சிறு தடியை ஒரு சடை நாயின் மூக்கருகில் நீட்டி “ உம் மூக்கைத் தூக்கப் போறேன்..மூக்கை தூக்கப் போறேன் “ என்று ஜாடையாக இவரைப் பார்த்துக் கத்திக் கொண்டிருந்தான். நய்கு ஓடிப் போய் அவனிடமிருந்து தடியை ஆத்திரமாகப் பிடுங்கி அவனை மிரட்டித் துரத்தினார். அவர் முன்பெல்லாம் சாப்பிடும்போது மூக்கைத் தூக்கி நிறுத்திக் கொள்ள பயன்.படுத்தியது இதே தடி தான் என்று கண்டபோது அவர் ஆத்திரம் எல்லை மீறிப் போயிற்று

அவருக்கு இரவுகளில் அமைதியும் தூக்கமும் அற்றுப் போய் விட்டது அமைதியை வேண்டி புத்த பகவானை தினந்தோறும் பிரார்த்தனை செய்து கொண்டே உறங்கப் போனார்

ஒரு இரவின் இருட்டில் அவர் கண் கொட்டாமல் ஜன்னலைப் பார்த்துக் கொண்டிருந்த போது கோவிலைச் சுற்றி தொங்க விடப் பட்டிருந்த அநேக காண்டா மணிகள் வேகமாக அடித்த காற்றினால் பலவிதமாக ஆடி ஆடி ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தன. நய்கு புரண்டு படுத்தார். அப்போது அவர் மூக்கு பயங்கரமாக அரிப்பதை உணர்ந்து எழுந்து உட்கார்ந்து தொட்டுப் பார்த்தபோது முனை உருண்டையாக வீங்கி இருந்தது போல் தோன்றியது.

“ இந்த மூக்கைக் குட்டையாக்குவதற்கு என்ன பாடு படுத்தியிருக்கிறேன்…அதன் பக்க விளைவு கொஞ்சமாவது நேர வேண்டாமா? “ என்று நினைத்துக் கொண்டார்.

மறு நாள் சீக்கிரமே எழுந்து விட்ட நைய்குவின் கண்களுக்கு முன்னால் கோவிலின் ப்ராகாரமெங்கும் மரங்களிலிருந்து கொட்டிய செம்பூக்கள் தங்கப் பாய் விரித்திருந்திருந்தன.. இரவு முழுவதும் கொட்டிய பனிமழையால் கோபுரச் சரிவெங்கும் வெண்மையாக தந்தத் தகடு போலவும்; நடுவில் உயரமாக நின்ற கஜஸ்தம்பம் உதய சூரியனின் சாய்ந்த கிரணங்கள் பட்டு பொன்னுருகி வழிவது போலவும் இருந்தது தன்னுடைய படுக்கையறைத் தாவாரத்தின் நீண்ட ஜன்னல் வழியாக இதைப் பார்த்துக் கொண்டிருந்த நய்குவின் மனதில் இனமறியாத சந்தோஷம் துளிர்த்தது

அதே கணத்தில் தான் அவருக்குள் ஏதோ ஒரு பரிச்சயமான சிலிர்ப்பு உடலெங்கும் பரவிற்று. அவர் அவசரமாக தன் மூக்கைத் தொட்டுப் பார்த்தார். ஹா…..இதென்ன இது.? இது குட்டை மூக்கில்லை. சில நாட்களுக்கு முன் அவர் முகத்தில் நீண்டு தொங்கிக் கொண்டிருந்த அதே ஆறங்குல மூக்குத் தான். உதடுகளைத் தாண்டி முகவாயைத் தொட்டுக் கொண்டு எப்போதும் போல் ஆடிக் கொண்டிருந்தது.!! ஒரே இரவில் இப்படி ஒரு வளர்ச்சியா? நய்குவுக்கு ஏனோ அதிர்ச்சியை விட ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அஜாக்கிரதையால் அசட்டுத்தனத்தால் இழந்து விட்ட தன் பொக்கிஷம் ஒன்றை இப்போது மீண்டும் கண்டெடுத்தது போல் அவருக்கு மகிழ்ச்சி பொங்கிப் பரவியது

“ இனிமேல் என்னைப் பார்த்து யாரும் சிரிக்கமாட்டார்கள். ஏன் சிரிக்க வேண்டும்? இது என்னோடு பிறந்த மூக்கு! எனக்கே சொந்தமான மூக்கு…..சிரிக்கிறவன் பைத்தியக்காரன்.. அதனாலெ எனக்கென்ன போச்சு? “”

தனக்கே சொந்தமான மூக்கை இப்போது புதிய உற்சாகத்துடன் ஆசையுடன் தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தார் மத குரு ஸென்ச்சி நய்கு.

– Ryun osuke AkutaGawa

ஆசிரியர் பற்றி – இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் நவீன ஜப்பானிய இலக்கியப் படைப்பாளிகளில் முக்கியமானவர் அகுடாகொவா. பிறந்த ஒன்பது மாதங்களுக்குள் மனபிறழ்வுக்கு ஆளாகி விட்ட தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு வெவ்வேறு குடும்பங்களில் வளர்க்கப் பட்டவர். பலஹீனமான உடலும் தாய்ப்பாசமற்று வளர்ந்த இளம்பருவமும் இவரையும் இவருடைய வாழ்க்கை எழுத்து எல்லாவற்றையும் பாதித்தது. ஆங்கில இலக்கியங்களில் ஆழமான வாசிப்பும் அதன் பாதிப்பும் இவர் ஜப்பானியக் கதைகளை ஆக்க பூர்வமாக பாதித்தன

பரவலாக வாசிக்கப்பட்டாலும் முப்பத்தைந்தாவது வயதில் உடலும் உள்ளமும் மிகுந்த வேதனைக்கும் இனமறியாத பயத்துக்கும் உள்ளாகி வாழ்வுபற்றிய நிராசையும் போதைப் பழக்கமும் இவரைத் தற்கொலைக்கு இட்டுச் சென்றது

. இவர் விட்டுச் சென்ற படைப்புகள் அழியாத இலக்கியமாக நாளுக்கு நாள் விரிவான உலக வாசிப்பை பெற்றுக் கொண்டிருக்கின்றன. யுத்த்த்தின் முடிவில் அவதிப்படும் நிராதரவான மக்களைப் பற்றி இவர் எழுதிய சின்னக் கதை பிற்காலத்தில் “ராஷோமான் “ என்ற பிரபலமான திரைப்படமாகி அகிராகுராசொவாவை ஒரு மகா இயக்குனராக ஸ்தாபித்தது . .

Series Navigationயாதுமாகி நின்றாய்….. !தாகூரின் கீதப் பாமாலை – 56 புல்லாங்குழல் பொழியும் இனிமை !
author

வைதீஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *