விஸ்வரூபம் படத்துக்கு திரைப்பட விமர்சனம் எழுதலாம். அல்லது அந்த திரைப்படத்தில் பேசப்பட்ட அரசியலுக்கு விமர்சனம் எழுதலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த விமர்சகர்கள், விஸ்வரூபம் படத்தின் கலை நுணுக்கத்தையும் பார்க்கவில்லை. அதன் அரசியலையும் பார்க்கவில்லை. வஹாபி பார்வையுடைய இஸ்லாமிய அமைப்புகள் இந்த படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது, இந்த அமைப்புகளை ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் பிரதிநிதிகளாக கருதிகொண்டு, அதன் காரணம் தொட்டு கமலஹாசனை விமர்சிப்பதையே முக்கியமாக செய்தார்கள்.
முதலில் விஸ்வரூபம் படத்தின் அடிப்படை அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை பார்க்கும் ஒவ்வொருவரும் உடனே உணர்ந்துகொள்ளமுடியும். அதற்கு எந்த விதமான திரைப்பட விமர்சன பட்டப்படிப்பும் தேவையில்லை.
அமைதிப்புறாவான இஸ்லாமின் காலில் அணுகுண்டை கட்டிகொண்டிருக்கிறார்கள் என்று தீவிரவாத இஸ்லாமியர்களை சாடுவதுதான் இந்த திரைப்படத்தின் உள்ளீடு.
இதே நிலைப்பாட்டைத்தானே இந்த வஹாபிய அமைப்புக்கள் தங்களது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் சொல்லிவருகிறார்கள்? இஸ்லாம் என்பது அமைதிமார்க்கம். அதில் இருக்கும் ஒரு சில தீவிரவாதிகளை வைத்து இஸ்லாமை தீவிரவாத மதம் என்று பார்க்கக்கூடாது. இஸ்லாமில் மட்டுமல்ல எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். இஸ்லாமில் இருக்கும் தீவிரவாதிகள் இஸ்லாமை தவறாக புரிந்துகொண்டவர்கள். இதுதானே இஸ்லாமிய பேச்சாளர்கள் கூறுவது?
இதனைத்தானே விஸ்வரூபமும் கூறுகிறது?
இஸ்லாமை சேர்ந்தவர்கள் ஒரு நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தால், அந்த நாட்டுக்கு விசுவாசமானவர்கள்தானே தவிர, இஸ்லாமியர் என்பதற்காக இன்னொரு நாட்டுக்கு விசுவாசமானவர்கள் அல்ல. இந்திய முஸ்லீம்கள் இந்தியாவுக்குத்தான் விசுவாசமானவர்கள். பாகிஸ்தானுக்கோ ஆப்கானிஸ்தானுக்கோ விசுவாசமானவர்கள் அல்ல. இதுதானே இஸ்லாமிய பேச்சாளர்கள் பேசுவது?
இதனைத்தானே விஸ்வரூபமும் கூறுகிறது?
அப்பாவிகளை கொல்பவர்கள் முஸ்லீம்கள் அல்ல. அப்பாவிகளை கொல்வதை எதிர்ப்பவர்களே முஸ்லீம்கள். போரில் அப்பாவி பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதை முகம்மது நபி தடை செய்திருக்கிறார் என்றுதானே இஸ்லாமிய பேச்சாளர்கள் கூறுகிறார்கள்.
அதனைத்தானே விஸ்வரூபமும் கூறுகிறது?
ஆனால், இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் செய்யும் பயங்கரவாதங்களை ஒவ்வொரு முஸ்லீமும் செய்வதாக மற்ற மதத்து மக்கள் கருதிவிடுவார்கள் என்று கூறுகிறார்கள். அவ்வளவு மடையர்களா மற்ற மதத்து மக்கள்?
ஆனால், அந்த அமைப்புகள் சொன்னதை அப்படியே ஒப்புகொண்டுதான் இந்த அறிவுஜீவி விமர்சனங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
உதாரணத்துக்கு இரண்டு அறிவுஜீவி பத்திரிக்கைகள் எழுதிய விமர்சனங்களை பார்க்கலாம்.
ஒரு சிக்கலை எப்படி அணுகக் கூடாது? விஸ்வரூபத்தை முன்வைத்துச் சில பாடங்கள்
அரவிந்தன்
http://www.kalachuvadu.com/issue-159/page21.asp
“புறாக்களின் சிறகடிப்போடு மென்மையாகத் தொடங்கும் படம் திடீரென்று வன்மைக்கு மாறுவது விஸ்வரூபம் படத்தின் தன்மையை உணர்த்தும் குறியீடு என்று சொல்லலாம். பெண்மையின் சாயலுடனும் வசீகரமான நளினத்துடனும் தோற்றம் தரும் நாயகன் ஆக்ரோஷமான ஆண் மகனாக உருமாறுவதும் அதே வகையிலான குறியீடுதான். மென்மையும் நளினமும் பெண்மையும் ரசிக்கவும் போற்றவும் ஆராதிக்கவும் உரியவை; ஆனால் வீறு கொள்ளும் ‘ஆண்மை’யும் வன்மையும்தான் இந்த உலகை எதிர்கொள்வதற்கு ஏற்ற வழி என்று விஸ்வரூபம் சொல்ல முயல்கிறது என்று இந்தப் படிமங்களைக் கட்டுடைக்கலாம். ”
படத்தின் மிக முக்கியமான குறியீட்டை – மற்றவர்கள் பலரும் தவற விட்டதை – அரவிந்தன் நுணுகி ஆய்ந்து குறிப்பிட்டிருப்பது நம்பிக்கை தரும் விஷயம். ஆனால் பெண்மையிளிருந்து ஆண்மைக்குத் தாவிச்செல்வதாக இந்தக் குறியீடு இடம் பெறவில்லை. மாறாக “எல்லோருக்குமே இதில் இரட்டை வேடம் தான் என்னும் போது , இந்த இரட்டையின் ஓர் அங்கமாக பெண்தன்மை இடம் பெறுகிறது. சாமானிய மக்களின் மீது விஷம் ஏற்றும் தத்துவம் பற்றிய விமர்சனமாக வருகிறது. இந்த படம் பெண்களை பற்றி பேசுவதை இந்த கட்டுரையில் இன்னும் சில பத்திகள் தாண்டி பேசுகிறேன்
இவர் எழுதுகிறார்.
//முஸ்லிம்கள் பற்றி அமெரிக்க ஏகாதிபத்தியப் பார்வை கட்டமைக்கும் பிம்பத்துக்கு வலுச் சேர்க்கிறது. மாறுபட்ட வடிவில் வெளிப்படும் அமெரிக்கப் பயங்கரவாதத்தைப் பற்றி மௌனம் சாதிக்கிறது. இந்த அணுகுமுறை முஸ்லிம்களை அவதூறு செய்பவர்களுக்கு உகந்த அணுகுமுறை.//
முஸ்லீம்கள் பற்றிய அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ன பிம்பத்தை கட்டமைக்கிறது அல்லது கட்டமைக்க முயல்கிறது என்று ஆதாரத்துடன் எழுதினால் பேசலாம். இன்றைக்கு முஸ்லீம்கள் பலதரப்பட்ட அதிகார மையங்களில் அமெரிக்காவில் பங்கெடுக்கிறார்கள். சொல்லப்போனால், பயங்கரவாதத்துக்கு எதிராக உள்ள சி.ஐ.ஏ உப அமைப்பின் தலைவரே மதம் மாறிய ஒரு முஸ்லீம். zero dark thirty என்ற படத்தில் அவர் தனது அறையிலேயே நமாஸ் செய்வதை காட்டுவார்கள். அது பொய்யில்லை.
ஜீரோ டார்க் தர்ட்டி பற்றிய ஸ்லேட் குறிப்பு
அப்படியிருக்கும் ”அமெரிக்க ஏகாதிபத்தியம்” எப்படி முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கமுனைகிறது?
அமெரிக்க பயங்கரவாதம் என்று ஒன்று இருக்கிறதா? அது பார்வையிலிருந்து வேறுபடும். அமெரிக்கா என்பது இன்றைய வல்லரசு. வல்லரசுக்கான அனைத்து குணங்களும் கொண்ட ஒரு அமைப்பு. அதன் தலையாய கடமையாக கருதுவது தனது குடிமக்களை பாதுகாத்துகொள்வது. ஆனால், ஒமருக்கு அந்த தெளிவு இல்லை. எது போர்வீரன், எவன் குடிமகன் என்ற பிரித்து பார்க்கும் நிலைப்பாடு இல்லை.
//விஸ்வரூபத்திலோ ஒற்றைக் குரல் மட்டுமே கேட்கிறது. விவாதத்துக்கு இடம் தராத பாரபட்சமான முடிவுகளையும் கற்பிதங்களையும் படம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. பிரச்சினையின் பன்முகப் பரிமாணங்களைப் பார்க்க மறுக்கிறது. இது சிக்கலான பிரச்சினையைக் கையாள்வதற்கான நெறிமுறைகளை மீறும் செயல்.//
என்ன விதமாக இவர் படம் பார்த்தார் என்று எனக்கே புரியவில்லை. விஸ்வரூபம் பலதரப்பட்ட முஸ்லீம்களை பற்றி பேசுகிறது. முஸ்லீம்களுக்குள்ளாகவே இதற்கு எதிரான கருத்துக்களை பற்றி பேசுகிறது. முஸ்லீம் பெண்களை பற்றி பேசுகிறது. முஸ்லீம்கள் அமெரிக்கரின் கழுத்தை அறுக்கும்போது தங்கள் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு பழிவாங்குவதாகவே பேசுகிறார்கள் என்பதை அரவிந்தன் பார்க்கவில்லை. ஆனால் உண்மையில், இஸ்லாமுக்கு எதிரான போராக பிரச்சாரம் செய்வதன் மூலமே அனைத்து முஸ்லீம்களையும் தங்கள் பக்கம் நிறுத்தமுடியும் என்று கருதித்தான் தாலிபான்களும், தீவிரவாதிகளும் தெளிவாக இஸ்லாமை முன்னிருத்துகிறார்கள். இதனை பேசாமல் ஒரு படம் எடுக்கமுடியாது.
இது ஒரு சரித்திரப்படமல்ல . ஆனால் சரித்திரத்தை முழுக்க நிராகரித்த படமும் அல்ல. அமெரிக்கா மீது எந்த விமர்சனமும் இல்லாத படமும் அல்ல.
அரவிந்தன் மீண்டும் சொல்கிறார்.
//நவீன அம்சங்களை முற்றாக மறுதலிக்கும் அல்கொய்தா அமைப்பினரின் வாழ்க்கை முறை, சிறுவர்களை மனித வெடிகுண்டாக மாற்றும் போர் முறை, துரோகிகளைத் தண்டிப்பதில் உள்ள ஈவிரக்கமற்ற தன்மை, போரை மதக் கடமையாக நினைத்துச் செய்யும் நம்பிக்கை ஆகியவற்றைக் காட்டும் படம், ரஷ்யாவின் மீதான பகைமையை முன்னிட்டு ஆப் கானிஸ்தானில் ஆயுதம் தாங்கிய போராளிக் குழுக்களை ஊட்டி வளர்த்த அமெரிக்காவின் விபரீத அதிகாரப் போட்டியைப் பற்றிச் சொல்லவில்லை. //
சரித்திரம் இதில் இல்லை என்று சொன்னவர் சரியான சரித்திரத்தையும் சொல்லவில்லை. அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்ததில் பல நோக்கங்கள் உண்டு. ஆனால் தாலிபான் மூலம், தீவிர இஸ்லாமியப் படைகளை உருவாக்குவதன் மூலம் சோவியத் யூனியனை எதிர் கொள்ளலாம் என்ற உத்தி பாகிஸ்தான் சர்வாதிகாரி ஜியா உல் ஹக்கினால் உருவாக்கப் பட்டது. இவரது தீவிரவாத மூளையில் உதித்த இந்தத் திட்டத்தின் செயல்பாடு தான் தாலிபான் முதல் இன்று பம்பாய் தாக்குதல் வரை பரிணமித்துள்ளது. “சோவியத் யூனியன் ஆக்கிரமித்தால் இந்த அமெரிக்காக்காரனுக்கு என்ன வந்தது? ஹங்கேரி, போலந்து, கிழக்கு ஜெர்மனி போல ஆப்கானிஸ்தானமும் மார்க்சிய, சோஷலிசப் புரட்சி மலர்ந்து சோவியத் யூனியனில் ஐக்கியமாகி உய்வு அடையத் தடையாக அமெரிக்கா இருந்தது ஏன்?” என்ற மார்க்சிய அலசலுக்கு பதில் என்னிடம் இல்லை. பூகோள ரீதியாய்ச் செல்வாக்கு மண்டலங்களை உருவாக்குவதில் சோவியத் யூனியனும், அமெரிக்காவும் போட்டி போட்டுக் கொண்டு முயன்ற பனிப்போரின் தொடர்ச்சி என்று மட்டும் சொல்ல முடியும்.
தாலிபான் வென்று சோவியத் யூனியன் விரட்டப் பட்ட பின்பு, அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டுச் சென்றது தவறு என்று பல விமர்சனங்களும் உண்டு.
“நாட்டோ படைகள் குழந்தைகளையும் பெண்களையும் கொல்வதில்லை என்று அவர்களது நன்னடத்தைக்குச் சான்றிதழும் வழங்குகிறது. ” என்பதில் காட்சியைக் காண அரவிந்தன் தவறிவிட்டார். இந்த வசன சொல்லி வாய் மூடுவதன் முன்பே அமெரிக்கா தாக்குதல் நடக்கிறது. அதன் பின்பு உமார் வருத்தப் படும்போது விசாம் “உன் கேள்வியிலேயே பதிலும் அடங்கியிருக்கிறது. போர் என்றால் மரணமும் தான். ” என்று பதில் சொல்வதும் திரைப் படத்தில் உள்ளது.
“அமெரிக்காவைக் காப்பாற்ற இந்தப் படத்தின் நாயகனான முஸ்லிம் எடுக்கும் முயற்சிகள் முஸ்லிம்களை மகிழ்விக்கும். இந்த நாயகனைப் போன்ற முஸ்லிம்கள்தான் உலகில் முஸ்லிம்கள் மீதுள்ள அவப் பெயரைப் போக்குவார்கள். எனவே இந்த நாயகனை (அதாவது கமலின் பார்வையில்‘நல்ல’முஸ்லிம்) முஸ்லிம்கள் முன்னுதாரணமாகக்கொள்ள வேண்டும். அதுவே தேசபக்த முஸ்லிம்களின் கடமை. இதுதான் கமல் விடுக்கும் செய்தி. ” என்கிறார் அரவிந்தன்.
விஸாமின் முயற்சிகள் அமெரிக்காவைக் காப்பாற்ற அல்ல. இஸ்லாமிய சமூகத்தைக் காப்பாற்ற. வன்முறையின் மூலம் அமெரிக்காவை வென்றெடுத்துவிடலாம் என்ற அறியாமையிலிருந்து இஸ்லாமிய சமூகத்தைக் காப்பாற்ற. எதிரி அமெரிக்கா அல்ல, உன்னையே நீபார் என்று சொல். “கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது.”
ஆப்கானிஸ்தான் போரில் ஒத்துழைப்புத் தராவிட்டால், பாகிஸ்தானைக் கற்கால நாடாக ஆக்கிவிடுவோம் என்று அச்சுறுத்தல் நடந்ததாய் பாகிஸ்தான் சர்வாதிகாரி முஷாரப் தெரிவித்தது உண்டு. அப்படிப் பட்ட அச்சுறுத்தல் இல்லாமலே அமெரிக்காவிற்கு தொண்டு செய்ய பாகிஸ்தான் காத்திருக்கிறது என்பது வேறு விஷயம். இந்தப் போரில் அமெரிக்காவை வன்முறையினால் வென்றெடுக்க முடியும் என்ற தாலிபானின் நப்பாசை எபப்டி நம் இடதுசாரிகளையும், இஸ்லாமிஸ்டுகளையும் ஆக்கிரமித்துள்ளது என்பது தான் புரியாத புதிர். ஆப்கானிஸ்தானின் உள்னாட்டு வன்முறை ஒழிந்து ஜனநாயகமும், அடிப்படை மனித உரிமைகளும் மலர்ந்தாலே அமெரிக்காவின் சிறகுகள் தானே முறியும்.
விஸ்வரூபம் தொடர்பான தமிழ்நாட்டின் நாடகக் காட்சிகளைப் பற்றிய அரவிந்தனின் எழுத்துக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை. அது படத்தின் விமர்சனத்திற்குத் தொடர்பானதும் அல்ல.
****
http://www.kalachuvadu.com/issue-159/page12.asp
சிறுத்துப்போன பேருருக்கள் – க. திருநாவுக்கரசு
//அதே நேரத்தில் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விஷயங்கள், இஸ்லாமியத் தீவிரவாதிகள் குறித்த உண்மைக்குப் புறம்பான விஷயங்கள் என்று எவையும் படத்தில் இல்லை.//
அப்பாடா!
//ஆப்கன் போரில் அமெரிக்காவின் நோக்கம், கைக்கொள்ளும் போர் முறைகள், அப்பாவி ஆப்கன் மக்கள் மீது போர் ஏற்படுத்தும் பெரும் நாசங்கள், அல் கொய்தாவுடனான அதன் முந்தைய கால உறவு பற்றியெல்லாம் எதுவுமே இப்படத்தில் பேசப்படவில்லை என்பதிலிருந்தே தீவிரவாதத்திற்கெதிரான போர் குறித்த கமல் ஹாஸனின் புரிதல் நமக்குப் புரிகிறது.//
முதலில் இந்த படம் ஆவணப்படம் அல்ல. ஆகையால் இதில் 1980 ஆரம்பித்து 2013வரைக்கும் உள்ள எல்லா விஷயங்களையும் பேசமுடியாது. ஆனால், கமலஹாசன் என்ற கலைஞனுக்கு எது முக்கியமோ அது மட்டும் தவறாமல் பேசப்படுகிறது. ஒரு கிழவியின் வாயிலிருந்து அது வருகிறது. “முதலில் ரஷியா வந்தான், பிறகு அமெரிக்கா வந்தான், தாலிபான் வந்தான், இப்ப நீ வந்திருக்கிற” இந்த திரைப்படம் முழுவதும் ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து பார்க்கப்படுவதை ஒரு சாதாரண பார்வையாளன் உடனே புரிந்துகொண்டுவிடுவான். அந்தப் பெண்மணி இப்படி வரிசைப் படுத்தும்போது, தாலிபனும் இந்த மண்ணிற்குச் சொந்தமில்லாத அன்னியர்கள் என்ற தொனியையும் கொண்டு வருவதன் மூலம் தாலிபான் பிராண்ட் இஸ்லாம் பற்றியும் ஒரு தீவிர விமர்சனத்தை வைக்கிறாள்.
படம் பெண்களின் பார்வையில்தான் துவங்குகிறது. இன்னும் பெயர் சொல்லப்பட்டும் சொல்லப்படாமலும் ஏராளமான பெண்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். எதிரி நண்பன் என்று எதுவும் பார்க்காமல் சிகிச்சை செய்பவளும் பெண்ணே. ஆப்கானிஸ்தானின் ஒரே வண்ணமாக இருப்பதும், நீலநிற அங்கி போர்த்திய பெண்களே. அவர்களே கடுமையாக ஆண்வர்க்கத்தை விமர்சனமும் செய்கிறார்கள். இறுதியில் பெண்ணே நியூயார்க் மாநகரத்தையும் காப்பாற்றுகிறாள். அப்படி காப்பாற்றக்கூடும் என்பதைக்கூட விஸாம் ஏற்றுகொள்வதில் தயக்கம் காட்டுகிறான்.
ஆப்கானிஸ்தானின் பெண்கள் இருப்பும், மறைவும், மறைவில் இருப்பும் என்று மூன்று நிலைகளையும் விஸ்வரூபம் பேசுகிறது. தன் மகனை மருத்துவர் ஆக்க வேண்டும் என்று விருப்பப்படும் ஆப்கான் பெண்மணி, தவறாகக் குற்றம் சாட்டப் பட்டு முச்சந்தியில் எல்லோரின் முன்பும் தூக்கிலிடப்படும் ஆணுக்காகக் கதறியழும் பெண்மணி, உதவி செய்ய வந்த மருத்துவப் பெண்மணி , அறைகளுக்குள் முடங்கிக் கிடந்து மூடிய முகங்களை முன்னிறுத்திய அடையாளம் அழிக்கப் பட்ட பெண்மணிகள் என்று படம் பேசுகிறது. மருத்துவராய் வரும் வெளிநாட்டுப் பெண்மணியையும் கூட “எதிரியாக”ப பார்க்கும் ஒரு மனநிலையினை படம் பேசுகிறது. தன்னையும் தன்னுடன் இணக்கம் கொண்ட ஒரு சிலரையும் தவிர அனைவரையும் எதிரிகளாய்ப் பாவிக்கும் நோய்க் கூறான மனநிலையின் இனவாதம் பற்றிப் பேசுகிறது.
தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளையும், பெண்களையும் இந்த படம் பேசுகிறது. அது வரலாற்று கதை சொல்லவில்லை. ஒரு கலைஞனுக்கு எது முக்கியமோ அதுவே அவன் சொல்லவிரும்பும் விஷயம். மக்களுக்கு சரித்திர பாடம் சொல்வது அவன் வேலையல்ல.
“ஒரு கதை சொல்லியின், இயக்குநரின் மேதைமையை வெளிப்படுத்தும் விஷயங்கள் என்று எவையுமே இந்தப் படத்தில் இல்லை.” என்கிறார் திருநாவுக்கரசு.,. அவர் திரைப்பட விமர்சனம் இதற்கு முன்பு ஏதும் எழுதியதாகத் தெரியவில்லை. படத்தை எந்த அளவு ஊன்றிப் பார்த்தார் என்றும் புரியவில்லை. படத்தின் கருத்துகள் பற்றியும் வரலாறு பற்றியும் எழுதிய இவர் இதன் கலை அம்சங்கள் எப்படி பொருந்தாமல் உள்ளன என்று ஒரு வரி கூட எழுதாமல், படத்தை துவம்சம் செய்திருக்கிறார். எனவே இதை விமர்சனம் என்று சொல்வதே தவறு.
(பின் குறிப்பு : “கமலஹாசனுக்கே தெரியாத புது புது அர்த்தங்களைக் கண்டுபிடித்து எழுதி இருக்கும் ஆசிரியரின் கற்பனை வளம் பாராட்டுக்கு உரியது.” என்ற களிமிகு கணபதியின் கருத்துக்கு மட்டும் ஒரு சிறு பதில் தர உத்தேசம். திரைப்படம் என்பது தற்செயல்களால் உருவான கலை வடிவம் அல்ல. இயக்குனர், எடிட்டர், கதை வசனகர்த்தா, நடிக நடிகையர் என்று பெரும் படையே ஈடுபடும் ஒரு தொடர்செயல். கிட்டத்தட்ட நாம் பார்க்கும் படத்திற்கு பத்து மடங்கு சுடப் பட்டு மீண்டும் மீண்டும் தெரிவு செய்யப் பட்டு இறுதி வடிவம் பெறும் படைப்பு. படத்தின் சலனத் திரைவடிவத்தின் ஒட்டு மொத்த செல்வாக்கினை வெறுமே தான் தோன்றித் தனமாக உருவாக்கி விட முடியாது.)
- பொன்விழா காணும் தமிழ்ச் சீன வானொலி
- கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு
- மாணவ நெஞ்சில் நஞ்சு கலக்கும் கிராதகர்கள்
- சின்னஞ்சிறு கிளியே
- காலத்தின் கொலைகாரன்
- அமெரிக்க அனுபவங்கள் – ஒரு சமூகவியல் பார்வை – புத்தக மதிப்புரை ஆசிரியர் – நாகேஸ்வரி அண்ணாமலை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -18 என்னைப் பற்றிய பாடல் – 11
- சங்க இலக்கிய மகளிர்: விறலியர்
- தங்கமே தங்கம்
- விண்மீனை தேடிய வானம்
- தாகூரின் கீதப் பாமாலை – 59 காதல் தரும் நித்தியப் புத்துணர்ச்சி !
- வெல்லோல வேங்கம்மா
- கனிகரம்
- பணிவிடை
- 40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன்
- செயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி [Revised]
- அகல்விளக்கு புதினத்தில் வாழ்வியல் விழுமியங்கள்
- எம்.வி.வெங்கட்ராமின் “வேள்வித் தீ” புதினம் காட்டும் சௌராஷ்டிரர்களின் வாழ்வும் பண்பாடும்
- வெற்றிக் கோப்பை
- புரிந்துணர்வின் மென்னிழைகளால் தன்னுலகை உருவாக்கும் எஸ். கிருஷ்ணமூர்த்தி
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 15
- புகழ் பெற்ற ஏழைகள் – சார்லி சாப்ளின்
- நம்பி கவிதைகள் இரண்டு
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 5
- அக்னிப்பிரவேசம்-29
- நன்றியுடன் என் பாட்டு…….அத்தியாயம் – 3
- முத்தம்
- விஸ்வரூபம் – விமர்சனங்களின் அரசியல்
- புகழ் பெற்ற சமூகவிரோதி – ஷேக்ஸ்பியர்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -4 மூன்று அங்க நாடகம்
- தமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத் பற்றிய குறும்படம்