There are three things, after all, that a poem must reach: the eye, the ear, and what we may call the heart or mind. It is most important of all to reach the heart of the reader
Robert Frost
இயக்குனர், கவிஞர் என்.லிங்குசாமி எழுதி வெளிவந்திருக்கும் ’லிங்கூ’ கவிதைத் தொகுப்பினை வாசிக்கிற வாய்ப்புக் கிட்டியது. முதல் வாசிப்பிலேயே பல கவிதைகள் சிலாகிப்பையும், சிலிர்ப்பையும் உருவாக்கின. ஆயினும் மேலதிகமாக, லிங்கூ தொகுப்பில் உள்ள கவிதைகளில் இயங்கும் காலம் மற்றும் வெளி, இன்னபிற தடங்களில் பயணிக்க கவிதைகள் கோரியதன் விளைவாக, அப்பயணச் சுவடுகளை எளிய பதிவாக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
இவர் தனது கல்லூரி நாட்களில் எழுதியதாக குறிப்பிடும் இருவரிக் கவிதையில் இருந்தே தொடங்கலாம்.
இஸ்திரி போடும் தொழிலாளியின்
வயிற்றில் சுருக்கம்
முதல் வாசிப்பிலேயே முரண்தொடை நம்மை ஈர்த்துவிடுகிறது. துணியில் கூட சுருக்கமின்றி இஸ்திரி போடுகிற-தனது துணிக்களுக்கல்ல- வசதிவாய்ந்த கனவான்களின் துணிகளுக்கு இஸ்திரி போடுகிற தொழிலாளியின் வயிற்றில் சுருக்கம் என்னும் முரண் தொடை. இதை ரசிக்க ’கோனார்’ தேவையில்லை தான்.
ஆனால் இந்த இரண்டு வரிகளில் பொதிந்திருப்பது இந்த முரண்தொடை அழகும், முதல் வாசிப்பு சிலிர்ப்பும் மட்டும் தானா..?
எந்த ஒரு பொருளும் காலத்திற்கும்(TIME) வெளிக்கும்(SPACE) அப்பால் நிலவ, இயங்க முடியாது என்கிற இயற்பியல் உண்மை, கலைக்கும் பொருந்தும்;கவிதைக்கு மிகப் பொருந்தும்.
ஒரு படைப்பாளி அக்காலத்தையும் வெளியையும் தன் படைப்பில் எவ்விதம் இயக்கம் கொள்ளச் செய்கிறான் அல்லது இயங்கும் சாத்தியத்தை அதனுள் உருவாக்குகிறான் என்பதை நுட்பமாக கவனிக்க வேண்டியுள்ளது. அந்த இயக்கம் தான் முதல்வாசிப்புச் சிலாகிப்பை முன்மொழிகிறது. தேர்ந்த வாசகன் மெல்ல உள்நகர்கிறான்.
சரி. இக்கவிதையில் இயங்கும் காலமும் வெளியும் தான் என்ன?
காலம் என்பதே மாயம் என்னும் தத்துவார்த்த பார்வைக்கும் அப்பால், நம் தொல்காப்பியம் காலத்தை பெரும்பொழுது, சிறுபொழுது என வகைமைப் படுத்தியுள்ளது. எந்த நிகழ்வாயினும் இந்தப் பொழுதுகளில் தான் இயங்கியாக வேண்டும் அல்லவா?
ஆனால், இக்கவிதையில், புதிய காலத்தை கவிஞன் கண்டடைகிறான்.
இஸ்திரி போடும் தொழிலாளியின்
வயிற்றில் சுருக்கம்
’வயிற்றில் சுருக்கம்’ என்னும் சொற்கள், தொல்காப்பியம் காட்டும் பெரும்பொழுது சிறுபொழுது இவற்றைக் கடந்து ‘பசிப்பொழுது’ என்ற ஒன்றை கண்டடைகிறது. கவிதை இயங்கும் வெளி பிரபஞ்சத்தின் வெளிகளை யல்லாமல், தொழிலாளியின் சுருக்கம் கொண்ட வயிற்றில் ‘உடல் வெளியாக’ புதுமை கொள்கிறது. இத்தனை நுட்பங்களை உள்ளே கொண்டிருப்பதால் தான் இக்கவிதை வாசித்தவுடனேயே வாசகனை ‘அட..’ எனச் சொல்லி சிலாகிக்க வைக்கும் வசீகரத்தைப் பெற்றுள்ளது.
**** ********* ********** ****
வயல் முழுக்க வண்ணத்துப் பூச்சிகள்
என்ன செய்ய
களை பறிக்க வேண்டும்
’காக்கைக் குருவி எங்கள் சாதி’, என்பான் பாரதி. இவர் வண்ணத்துப் பூச்சிகளையும் அவ்வகையில் இணைக்கிறார்.
என்ன செய்ய
களை பறிக்க வேண்டும்
இந்த ஆதங்கம் தான், கவிஞனை அடையாளம் காட்டுவது.
’உயிர்களிடத்தில் அன்பு வேணும்’, என பாரதியும், ‘ஆருயிர்கட்கெல்லாம் அன்பு செயல் வேண்டும்’, என வள்ளலாரும் பாடினார்கள்.
வள்ளலாரின் வார்த்தைகள் தான் வண்ணத்துப் பூச்சிகளாய் வடிவம் கொள்கின்றன. நான் என் பால்ய பருவத்தில், பட்டாம் பூச்சிகளைப் பார்த்துப் பரவசப்பட்டிருக்கிறேன். ஒருபோதும் பிடித்ததில்லை; பயமில்லை. ஆனால், பட்டாம்பூச்சிகளின் இறக்கையிலிருந்து, விரல்களில் ஒட்டும் வண்ணத்தை, வெறும் வண்ணமாக எண்ண முடிவதில்லை. உயிரின் ஒரு பகுதியாக எண்ணும் உபாதை. கவிஞனின் உள்ளத்தில் எழும் இத்தகைய உணர்வெழுச்சி தான், ’என்ன செய்ய ‘ என்னும் ஆதங்கத்தையும், ஆற்றாமையையும் வெளிப்படுத்துகிறது.
இன்று நான் காக்கைக்கு விசிறிய அரிசி
பாரதி விதைத்தது
என்ற கவிதை அதனை ஊர்ஜிதப் படுத்துகிறது.
**** ********** ******* ****
அந்த
அடுக்குமாடிக் குடியிருப்பில்
நீ எந்த வீட்டில் இருக்கிறாய் என்பதை
கூப்பிட்டுச் சொன்னது
உன் கத்திரிப்பூ துப்பட்டா
அழகான காதல் உணர்வைப் பேசும் கவிதை.
இந்தக்கவிதை சில காலம் முன்பு ஆனந்த விகடனில் பிரசுரம் கண்ட்தாய் ஞாபகம். அப்பொழுதே மனத்தில் தங்கிய கவிதை.
நாயகன், நாயகி எந்த வீட்டில் இருக்கிறாள் என்பது தெரியாமல், ப்ரியா..ஓ..ப்ரியா.. என உரக்கப் பாடியவாறு சாலையில் அலைந்து திரிவதாக அமைந்த ஒரு திரைப்படக்காட்சி நினைவில் தட்டுகிறது.
அடுக்குமாடிக் குடியிருப்பில், ’அட்ரஸ்’ தெரியாமல் கண்டுபிடிப்பது அத்தனை எளிதான காரியமா என்ன?
அந்தக் கஷ்டம் கவிஞனுக்கில்லை. அப்படிச் சொல்வதைக் காட்டிலும், அந்தக் கஷ்டத்தை நாயகி கொடுக்கவில்லை. துப்பட்டாவை வைத்து, அவளின் வீட்டை இவர் கண்டுபிடிக்க வில்லை.
கூப்பிட்டுச் சொன்னது
உன் கத்திரிப்பூ துப்பட்டா
கத்திரிப்பூ துப்பட்டா இவரைக்கூப்பிட்டு சொல்கிறதாம். அப்புறம் இவருக்கென்ன கவலை. ‘உன்’ என்னும் சொல் மிக முக்கியமானது. அது தான் விலாசம் மாறிவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது.
துணிப்பதாகைகள் காற்றில் அசைந்து ‘வா வா’ வென வரவேற்பதும், மாறாக வரவேண்டாம் என மறுதலிப்பதுமான காட்சிகளை நம் பழந்தமிழ் இலக்கியப்பரப்பில் தரிசித்திருக்கிறோம். அந்தத் துணிப்பதாகைகளே நவீன காலத்தில் துப்பட்டாவாக பரிணாமம் கண்டிருக்கிறது.
**** ********* ********** ****
தொன்மவெளியில் இவரின் கவிதைகள் சிறப்பாக இயங்குகின்றன.
அதுஎன்ன
அந்தப்புறா
சொல்லிவைத்த மாதிரி
உன் வீட்டுக்கும் என் வீட்டுக்குமாய்ப் பறக்கிறது
புறா பறக்கிறது. எங்கே பறக்கிறது? நாயகன் வீட்டுக்கும் நாயகி வீட்டுக்குமாய்
பறக்கிறது. புறா, தகவல் பரிமாற்றத்துக்காக முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பறவை. கடிதத்தைக் காலில் கட்டி அனுப்பும் பழக்கம் இருந்திருக்கிறது. ‘சொல்லி வைத்த மாதிரி’, என்றால், யார் சொல்லி வைத்த மாதிரி என்னும் கேள்வி எழுகிறது. அங்கும் இங்குமாக புறா பறந்தாலும், சொல்லி வைத்துப் பறப்பதாய் நினைப்பதே சுகம் தான்.
காகம் கரைந்தால் யாரோ வரப்போகிறார்கள் என்பது தொன்மம்.
மயான கூரையின் மேல்
காக்கையின் சத்தம்
யார் வரப்போகிறார்கள்
விருந்தினர் வருகையை முன்னறிவித்து கரையும் காக்கை. கரையும் இடம் மாறிப்போனதால் அதிர்ச்சியை உருவாக்ககூடியதாக கவிதை மாறிவிடும் சாத்தியத்தைப் பெற்றுவிடுகிறது.
**** ********** ********** ****
அசோகர் இத்தனை மரங்களை நட்டார்
அதில் ஒன்றுகூட போதிமரம் இல்லையா
இன்றைய ஒட்டு மொத்த சமூக ,அரசியல் பார்வை கொண்ட வரிகள்.
என்ன செய்வது? புத்தர் புளிய மரங்களைத்தான் நட்டார். போதிமரங்களாய் மாற்றுவது மக்களின் கடமை. பெரிய சோகம் என்னவென்றால், அந்த புளிய மரங்களைக் கூட விட்டுவைக்காமல், வெட்டி வீழ்த்திவிட்டு நாற்கரச்சாலைகள் போட்டுவிட்டோம். புளியமரங்களுக்கே ஆபத்தான பின்பு போதி மரக் கனவு வெறும் கனவாய்ப் போய்விடுமோவெனும் அச்சம் எழுகிறது.
**** ************ ********** ****
அழகிய எளிய முரண் இவர் கவிதைகளில் மிளிர்கிறது.
பூச்சி மருந்தில் பூச்சி
உயிரோடு
என்னும் வரியிலும்,
ஆசையாய் வாங்கினேன்
புத்தர் சிலை
என்னும் வரியிலும் அதனைக்காண முடிகிறது.
சாவு வீடு
எப்போதோ பார்த்த நண்பன்
அழுவதா
சிரிப்பதா
என்னும் வரிகளில் உள்ள மனவியல் பார்வை கவனிக்கத்தக்கது.
இவரின் அழகான ஓவியங்களோடு உருவாகியிருக்கிறது இந்நூல்.
நல்ல கவிதைகள் வாசகனின் மனத்தின் ஆழத்தில் ஊடுருவிச் சென்று தங்கி விடும் ஆற்றல் மிக்கவை. அப்படி பல நல்ல கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
யாரோ தெரியவில்லை
அந்த இரவு நேரப்பேருந்தின்
கடைசி இருக்கையிலிருந்து
தொடர்ந்து
விசும்பல் சத்தம்
வந்து கொண்டேயிருக்கிறது
இன்றைய சூழலில், இரவு நேரப்பேருந்தின் கடைசி இருக்கையில் தொடர்ந்து எழும் விசும்பல் சத்தம் காதுகளில் எனக்கும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஏதும் நேர்ந்து விடுமோ என்னும் இம்சையையும், நேர்ந்து விடக் கூடாதெனும் விழைவையும் இக்கவிதை உருவாக்குகிறது.
இதிலிருந்து, நான் விடுபடுவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகலாம்.
- படைப்பு
- மொழியின் அளவுகோல்
- தனலெட்சுமி பாஸ்கரன் கவிதைகள் – ஒரு பார்வை.
- புகழ் பெற்ற ஏழைகள் – 12
- கல்யாணியும் நிலாவும்
- மருத்துவக் கட்டுரை மதுவும் கணைய அழற்சியும்
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 25
- நம்பிக்கை
- தாகூரின் கீதப் பாமாலை – 70 பிரிவுக்கு முன் செய்த முடிவுகள் .. !
- என்னைப் பற்றிய பாடல் – 23
- காரைக்குடி கம்பன் கழகம்
- மனதாலும் வாழலாம்
- கற்றுக்குட்டிக் கவிதைகள்
- லிங்கூ-வில் இயங்கும் காலமும் வெளியும் – கவிஞர் என்.லிங்குசாமி கவிதைகளை முன்வைத்து
- மாலு : சுப்ரபாரதிமணியனின் நாவல் – சமகால வாழ்வே சமகால இலக்கியம்
- ப.மதியழகன் கவிதைகள்
- பேராசிரியர் அர. வெங்கடாசலம் – திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் -ஓர் உளவியல் பார்வை – வள்ளுவ ஆன்மீகம்
- கவிதைகள்
- பிரபஞ்சத்தின் மகத்தான அணுவியல் மர்மங்கள் : மூலக்கூறில் அணுக்களின் நர்த்தனம் .. !
- வேர் மறந்த தளிர்கள் – 8,9,10
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 15
- உள்ளே ஒரு வெள்ளம்.
- ஆகஸ்ட்-15 நூலுக்கு மெய்யப்பன் அறக்கட்டளை விருது
- டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 8
- “செங்கடல்”
- இரயில் நின்ற இடம்
- என்ன ஆச்சு சுவாதிக்கு?
- நான் ஒரு பொதுமகன். And Im not a terrorist
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -7