இந்திரா

This entry is part 7 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013


எஸ். சிவகுமார்.

கல்யாணம் முடிந்து கிளம்பும்போது அம்மா இப்படிச் சொல்வாள் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை; அதிர்ந்து போனேன். எல்லாவற்றுக்கும் காரணம் இந்திராதான்.

இந்திராவை நான் முதன்முதலில் பார்த்தது எட்டு வருடம் முன்பு, அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையத்தில். கோடை விடுமுறை முடிந்து அன்றுதான் பள்ளி திறந்த முதல் நாள். என்னுடைய வீடு அம்பத்தூரில் இருந்தாலும், பள்ளிக்கு நேரடியான பேருந்து இல்லாததனால் பள்ளிக்குச் செல்வதற்காக நான் அங்குக் காத்திருந்தபோது மூச்சிறைக்க ஓடிவந்தவள், “43 A போயிடிச்சா ?” என்றாள்.

“நானும் அதுக்காகத்தான் வெய்ட் பண்றேன். நீ எங்க போகணும்?” என்று கேட்டேன். சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “விவேக் வித்யாலயா ஸ்கூல். இந்திரா பிரியதர்ஷினி” என்று தன் பெயரைச் சொல்லிக் கைகுலுக்கினாள்.

நான் படிக்கும் அதே பள்ளி! எங்கள் பள்ளிச் சீருடையை அவள் அணிந்திருக்கவில்லை. இந்த வருடம்தான் புதிதாகச் சேர்ந்திருக்க வேண்டும். என்னுடைய வகுப்பாயிருந்தால் எல்லா வகையிலும் சௌகரியமாயிருக்கும் என்ற எண்ணத்தில், “ஓ, ந்யூ என்ட்ரண்டா? என்ன கிளாஸ் ? உன் வீடு எங்கே?” என்று ஆர்வமாகக் கைநீட்டி, “அயேம் மாலா” என்று கைகுலுக்கினேன். “ப்ளஸ் ஒன் இந்த வருஷம்தான் சேர்ந்திருக்கேன். எங்க வீடு அம்பத்தூர் ராக்கி தியேட்டர் கிட்ட” என்று அவள் சொன்னதும், என் எதிர்பார்ப்பு எல்லாம் தரைமட்டமானது.

நான் ஒன்பதாவது படிக்கிறேன். என்னுடைய உயரமும், என்னைவிட மெலிதான தேகமும் கொண்டவளாய் அவள் இருந்ததால் தப்புக் கணக்கு போட்டுவிட்டேன். அவள் என்னைவிட இரண்டு வகுப்பு மேல். சேர்ந்து படிக்க வீட்டுக்கருகில் ஒரு நல்ல தோழி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற என் எண்ணத்தில் மண்விழுந்தது.

“ஸாரிக்கா! நீங்க சீனியர்னு தெரியாம ஒருமையில பேசிட்டேன். நான் நெய்ந்த் ஸ்டாண்டர்ட் ஸி செக்க்ஷன்” என்றேன் சோகமாக. “புல்ஷிட்! சீனியராவது, ஜூனியராவது? கால் மீ இந்த்ரா” என்றாள் இயல்பாக.

அவளின் இந்த அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்தது. பேருந்து வந்ததும் ஏறினோம். ஒரு இருக்கை மட்டும் காலியாக இருந்தது. வற்புறுத்தி அவளை அதில் உட்காரச் சொல்லி, நான் நின்றுகொண்டே சென்றேன். பேருந்தில் கூட்டம் சேர்ந்ததால் எதுவும் மேற்கொண்டு பேசமுடியவில்லை. மதிய உணவு இடைவேளையின்போது மறுபடி சந்தித்துக் கொண்டோம். எங்கள் குடும்பம் பற்றிய விவரங்களைப் பரிமாறிக் கொண்டோம்.

எங்கள் குடும்பம் சிறியது. அம்மா, அண்ணன், நான் மூன்று பேர் மட்டும். சென்ற வருடம் அப்பா காலமாகிவிட்டார். அப்பா வேலை செய்துவந்த துணிக்கடை முதலாளி ஏதோ கொஞ்சம் பணம் கொடுத்தார், அவ்வளவுதான். அதை வைத்துக்கொண்டுக் குடும்பம் நடத்துவது என்பது இயலாத காரியம். அண்ணனும் அப்போதுதான் பட்டப்படிப்பு முதல் வருடத்தில் இருந்தான்.

நாங்கள் இருந்த வீடு அம்பத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பிரதான சாலையில் எங்கள் தாத்தாவின் வீடு. அப்பா இறந்தபிறகு அது எங்கள் மூவருக்கு மட்டுமே உரிமையானது. அப்பாவின் நண்பர் ஒருவர் நல்ல யோசனை சொன்னார். அதன்படி அடுக்குமாடி கட்டுபவர் ஒருவருடன் ஒப்பந்தம் செய்துகொண்டோம். அந்த இடம் முழுவதும் அவருக்குக் கொடுக்கவேண்டும். பதிலுக்கு, எங்களுக்கு இரண்டு வீடும், பத்து லக்ஷம் பணமும் கொடுக்கவேண்டும். வீடு கட்டி முடிக்கும் வரை எங்களுக்குக் குடியிருக்க வீட்டு வாடகை தரவேண்டும்.

அதன்படியே செய்து இப்போது வாடகை வீட்டில் குடியிருக்கிறோம். வங்கி தரும் வட்டிப் பணம் எங்கள் செலவுகளுக்குச் சரியாக இருக்கிறது. இன்னும் ஒரு வருடத்தில் புது வீடு தயாராகிவிடும். அண்ணனும் படிப்பு முடிந்து வேலைக்குப் போய்விடுவான். அதன் பிறகு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரே மூச்சில் இந்திராவிடம் எல்லா விஷயங்களையும் கொட்டினேன். என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், நான் பேசி முடிக்கும்வரை எதுவுமே பேசவில்லை.

அவள் குடும்பத்தைப் பற்றி மிகச் சுருக்கமாகச் சொன்னாள். அவள் குடும்பத்தில் அவளும், அவளின் அம்மாவும் மட்டும்தான். அம்மா அரசுப்பள்ளி தமிழ் ஆசிரியை. அப்பா இறந்ததால் அம்மாவுக்குக் குடும்ப ஓய்வூதியமும் கிடைக்கிறது. எங்கள் வீட்டுக்கருகில் உள்ள வேறு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஓரறை வீட்டில் வசிக்கிறார்கள்.

எங்கள் இருவருக்கும் இருந்த பொதுவான விஷயங்கள் எங்கள் நெருக்கத்தை அதிகரித்தன. அவளிடம் இருந்த இரண்டு விஷயங்கள் மட்டும் என்னிடம் இல்லை. ஓன்று அவளின் அறிவுக்கூர்மை. மற்றது அவளின் துணிச்சல். அதனால் சிறிது காலத்தில் எல்லா விஷயங்களுக்கும் அவளின் அறிவுரையைக் கேட்பதும், பயந்த நேரங்களில் அவள் துணையை நாடி எனக்காக அவளை வாதிட அழைப்பதும் வாடிக்கையானது. கொஞ்சம் கொஞ்சமாக அவளைப் பூஜிக்கத் தொடங்கிவிட்டேன்.

அடுத்த வருடம் எங்கள் இருவருக்குமே பொதுத் தேர்வு. படிப்பில் மும்முரமானோம். என் அண்ணனும் பட்டப் படிப்பு இறுதியாண்டு. அனைத்தும் முடிந்து தேர்வு முடிவுகள் வந்தன. என் அண்ணன் அதிக மதிப்பெண்கள் பெற்றுக் கல்லூரியிலேயே முதல் மாணவனாக வந்தான். இந்திராவும் பள்ளியில் முதல் மாணவியாக மதிப்பெண் பெற்றாள். என் மதிப்பெண்கள் மோசமில்லை என்றாலும், பதினோராம் வகுப்பில் விஞ்ஞானப் பிரிவு எதிலும் இடம் கிடைக்கவில்லை. பொருளாதாரம் படிக்கத் தொடங்கினேன். இந்திரா கணினிப் பட்டப் படிப்பு சேர்ந்தாள்.

அண்ணனுக்கு அம்பத்தூர் எஸ்டேட்டிலேயே ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் உடனே வேலை கிடைத்தது. நாங்கள் புது வீட்டுக்குக் குடிபோனோம். இன்னொரு வீட்டை வாடகைக்கு விட்டோம். புதுவீட்டுக்குப் போனபிறகு, இந்திராவைச் சந்திப்பது குறைந்து போனது. என் அண்ணன் ஞாயிற்றுக் கிழமையானால் காலையிலேயே வெளியில் கிளம்பி விடுவான். நாள் முழுக்க கிரிக்கெட். மதியம் சாப்பிடக் கூட வரமாட்டான். இந்திரா ஞாயிற்றுக் கிழமை மட்டும் எங்கள் வீட்டுக்கு வருவாள். அந்த வாரத்து விஷயங்களை எல்லாம் பேசித் தீர்ப்போம். எங்கள் நட்பு தொடர்ந்தது.

நான் +2 முடித்ததும், இந்திரா படிக்கும் கல்லூரியிலேயே பொருளாதாரம் முதலாண்டு சேர்ந்தேன். அந்த வருடம் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரே கல்லூரி என்பதால், எப்பொழுதெல்லாம் இருவருக்கும் நேரமிருக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சந்தித்துப் பேசினோம். சில முக்கியமான நேரங்களில் வகுப்புகளைப் புறக்கணித்தும் சந்தித்துப் பேசினோம். அந்த வருடம் வெகு வேகமாகப் பறந்தோடியது. இந்திரா படித்து முடித்தவுடனேயே வேலை காத்திருந்தது. அவளுடைய அலுவலகம் பழைய மகாபலிபுரம் பெருஞ்சாலையில் இருந்ததால், அம்பத்தூரிலிருந்து இடம் பெயர்ந்தாள். அதன்பிறகு அவளைச் சந்திப்பது அரிதானது.

நான் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது, அண்ணனுக்குப் பெண் பார்க்க அம்மா ஆசைப்பட்டாள். அம்மா பேச்சைத் தொடங்கியதும்தான் ஒரு பெரிய உண்மை தெரியவந்தது. இந்திராவைக் காதலிப்பதாகத் தயங்கித் தயங்கிச் சொன்னான் அண்ணன். ‘இந்திரா’ என்பது சந்தோஷமாக இருந்தாலும், இத்தனை நாள் எங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்ததை நினைத்துக் கோபம் வந்தது. எப்படி, எப்போது என்றுத் துருவித் தருவிக் கேட்டதில், அவளின் கல்லூரிப் படிப்பின்போது, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து எல்லா நாட்களும் சந்தித்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. மூன்று வருடங்களாகப் பழகியிருக்கிறார்கள்! இரு குடும்பங்களும் பேசி நல்ல நாள் பார்த்து அடுத்த தை மாதம் திருமணம் நடந்தது. இந்திரா என்று அழைப்பதா, அண்ணி என்று அழைப்பதா என்று புரியவில்லை. முதல் சந்திப்பில் அவள் கூறியது நினைவு வந்தது. ‘இந்திரா’ என்று கூப்பிடுவதையே அவள் விரும்புவாள் என்று முடிவு செய்து கொண்டேன்.

திருமணம் முடிந்து வீட்டுக்குள் நுழையும்போது, நானும் என் அத்தையும் ஆரத்தி எடுத்தோம். அத்தை இந்திரா நெற்றியில் போட்டு வைத்தாள். “வலது காலை எடுத்து வச்சு உள்ளே வா, இந்திரா!” என்று சொன்னேன். இந்திராவின் முகம் மாறியது. என்னை விசித்திரமாகப் பார்த்துவிட்டு உள்ளே நடந்தாள். அன்று மாலை அண்ணன் என்னைத் தனியே கூப்பிட்டு “அவளை ‘அண்ணி’ என்று கூப்பிடு; பெயர் சொல்லிக் கூப்பிடுவது அவளுக்குப் பிடிக்கவில்லையாம்” என்று சொன்னான். எனக்குக் கோபம் வந்தது. ஆனாலும் அண்ணனை நினைத்துப் பொறுத்துக் கொண்டேன்.

திருமணமாகி மூன்று மாதத்துக்குள் அண்ணன் தான் வேலை பார்க்கும் நிறுவனத்திலேயே இந்திராவுக்கும் வேலை வாங்கிக் கொடுத்துவிட்டான். வேறு உறவினர்கள் யாருமில்லாததால் இந்திராவின் அம்மாவும் எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டார்.

தினமும் காலையில் என் அண்ணன், இந்திரா, அவள் அம்மா மூவரும் காலை எட்டு மணிக்கே வேலைக்குக் கிளம்பி விடுவார்கள். நானும் அரைமணி கழித்துப் புறப்படுவேன். அம்மா சமையல் வேலை செய்ய, நானும் இந்திராவும் உதவி செய்வோம். மே மாதம் வரை எல்லாம் நன்றாகவே இருந்தது. அனைவரும் சகஜமாக இருந்தோம். என் பட்டப் படிப்பு முடிந்ததும் இந்திரா ஒரு ஆலோசனையை முன்வைத்தாள். எனக்கு வேலை ஏதேனும் கிடைக்கும் வரை, காலையில் சமையல் எல்லோருக்கும் அவசரமாக செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், வெளியே செல்லும் மூவருக்கு மட்டும் இந்திராவே சமையல் செய்வதாகவும், எனக்கும் அம்மாவுக்கும் பொறுத்து மெதுவாகச் செய்து கொள்ளலாம் என்பதே அது. இந்திராவைத் தனியாக சமையலறையில் விடுவதற்கு அம்மாவுக்கு விருப்பம் இல்லை. ஆனால் அண்ணனும், இந்திராவின் அம்மாவும் அந்த யோசனைக்கு வக்காலத்து வாங்கி எங்களைச் சம்மதிக்க வைத்துவிட்டார்கள்.

அம்மாவுக்கும், எனக்கும் வேலை அதிகமானது. காலையில் இந்திரா சமையலை முடித்துச் சாப்பிட்டுவிட்டு பாத்திரங்களை எல்லாம் அப்படியே போட்டுவிட்டுச் சென்றுவிடுவாள். அதனால் அந்தப் பாத்திரங்களை எல்லாம் சுத்தம் செய்துவிட்டுதான் எங்கள் இருவருக்கும் சமைக்க வேண்டும். பெரும்பாலான நாட்களில் தேவையான பொருளோ, காய்களோ இருக்காது. இருப்பதை வைத்துக் கொண்டு செய்யவேண்டும். மாலையில் அவர்கள் திரும்பிவர ஏழு மணிக்கு மேல் ஆகிவிடும். அதனால் அவர்கள் வருவதற்குள் இரவு உணவைத் தயார் செய்யும் வேலையும் செய்ய வேண்டியிருந்தது. இந்திராவின் அம்மா சீக்கிரமாக பள்ளியிலிருந்துத் திரும்பினாலும், ஏதேனும் உதவி செய்யட்டுமா என்று தப்பித்தவறி கூடக் கேட்டதில்லை. எப்போதும் ஏதாவது பேப்பர் கட்டு வைத்துக்கொண்டு திருத்தம் செய்துகொண்டிருப்பார்; புத்தகம் படித்துக் கொண்டிருப்பார்; அல்லது தொலைக்காட்சி !

நாட்கள் செல்லச் செல்ல என்னுடனும், அம்மாவுடனும் பேசுவதுகூடக் குறைந்தது. காலையில் சமையல் வேலை மும்முரம். இரவில் சாப்பிட்டவுடன் இந்திராவும், அவள் அம்மாவும் அண்ணன் அறைக்குச் சென்றுவிடுவார்கள். அண்ணன் தொலைகாட்சியில் ஏதேனும் கிரிக்கெட் போட்டி பார்த்துக் கொண்டிருப்பான். அம்மாவோ, நானோ வலியச் சென்று பேசினாலும் ஒற்றைச் சொல்லில் பதில் சொல்வான். அண்ணன் படுக்கச் சென்றதும், இந்திராவின் அம்மா எங்கள் அறையில் அவருக்காக இருந்த கட்டிலில் படுதுறங்கச் சென்றுவிடுவார்.

விடுமுறை நாட்களிலோ இன்னும் மோசம. இந்திராவும், அண்ணனும் காலையிலேயே வெளியில் சென்றுவிடுவார்கள். சினிமா, கடற்கரை, நண்பர்கள் வீடு இத்யாதி ! இந்திராவின் அம்மாவும் அவர்களுடனோ தனியாகவோ செல்வார். நானும் அம்மாவும் அன்னியர்களாக உணரத் தொடங்கினோம். எங்கு முயன்றும் எனக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை. பொழுது போக பொம்மை செய்வது, படம் வரைவது போன்றவற்றைக் கற்கத் தொடங்கினேன். கொஞ்ச நாட்களில் என் அறையில் இருந்த உயரக் கண்ணாடி பதித்த ட்ரெஸ்ஸிங் டேபிள் அண்ணனின் அறைக்கு மாறியது. நான் எங்கும் வெளியில் செல்லாததால் அது எனக்குத் தேவைப் படாது என்றும், இந்திராவுக்குப் புதிதாக வாங்குவது வீண்செலவு என்றும் காரணம் சொல்லப்பட்டது. வெகுநாட்கள் கழித்து அப்பாவை நினைத்து மீண்டும் அழுதேன்.

சுதந்திர தினம் முடிந்ததும் திடீரென்று இந்திராவுக்கு என்மேல் பாசம் பொங்கியது. அண்ணனிடமும், அம்மாவிடமும் என் திருமணத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள். அவளுக்குத் தெரிந்த நல்ல குடும்பம். அப்பா, அம்மா, மகன், இரண்டு மகள்கள் என ஐந்துபேர் மட்டும். என்னைப் பற்றி அவர்களிடம் பேசியதில் எங்கள் வீட்டில்தான் பெண் எடுக்கவேண்டும் என்று ஒற்றைக்காலில் அவர்கள் நிற்பதாகச் சொன்னாள். அவளின் திடீர் அக்கறை, இதில் ஏதேனும் வில்லங்கம் இருக்குமோ என்று சந்தேகத்தை எழுப்பியது. யோசிக்கக் கொஞ்ச நேரம் கேட்டுக் கொண்டேன். என் நண்பர்கள் வாயிலாகத் தகவல்கள் சேகரித்தேன். அந்தக் குடும்பம் நல்ல குடும்பம்தான் என்றும், அந்தப் பையன் மிகவும் சாது என்றும் சொன்னார்கள். பெண்பார்க்கும் படலம் நடந்தது. ஜாதகப் பொருத்தம் ஏதும் பார்க்கவில்லை. இருவருக்கும் பிடித்திருந்தால் போதும் என்றார்கள். மாப்பிள்ளை புகைப்படத்தில் பார்த்ததைவிட நேரில் இன்னும் அழகாகவே இருந்தான் ( மன்னிக்கவும்! இருந்தார் ).

அப்புறமென்ன? நேற்று ஐப்பசி மாதம் முதல் முஹூர்த்தம். எனக்கும், அவருக்கும் (கணவர் பெயரை சொல்லக்கூடாதாம்!) காலையில் கல்யாணம். மாலையில் வரவேற்பு. இன்று காலையில் அவர்கள் வீட்டுக்குக் கிளம்புகிறோம். அம்மாவின் கண்ணில் கண்ணீர். எனக்கும் அழுகை வரும்போல இருந்தது. இருந்தாலும், சமாளித்துக் கொண்டு அம்மாவைத் தனியிடம் அழைத்துச் சென்றுக் கண்களைத் துடைத்தேன். புகுந்த வீட்டில் எல்லோரையும் அனுசரித்து, அன்பு காட்டி நல்லபடி நடந்து நல்ல பெயர் வாங்குவேன் என்றும், இந்திரா போல் ஒருபோதும் நடந்துகொள்ள மாட்டேன்; அதனால் கவலைப்பட வேண்டாம் என்றும் ஆறுதல் கூறினேன்.

வேகமாக அம்மா சொன்னாள் : “அப்படி ஏதாவது செஞ்சுத் தொலைக்காதே. மாப்பிள்ளையை எப்படியாவது கைக்குள்ள போட்டுக்கோ. சிக்கலில்லாமல் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தனிக்குடித்தனம் போகப் பாரு. அப்பிடியே என்னையும் கூட்டிண்டு போயிடு” என்று மறுபடி அழத் தொடங்கினாள்.

Series Navigationஉனக்காக ஒரு முறைஉழவு
author

எஸ். சிவகுமார்

Similar Posts

6 Comments

  1. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் திரு சிவக்குமார்,

    ஆரம்பம் முதல் முடிவுவரை தொய்வில்லாமல் மிகச் சுவையாகச் செல்கிறது கதை. இனிமையான நடை. யதார்த்தம்!
    வாழ்த்துகள்.

    அன்புடன்
    பவள சங்கரி

    1. Avatar
      எஸ். சிவகுமார் says:

      அன்பின் பவள சங்கரிக்கு அன்பு கலந்த நன்றிகள் பல.

    2. Avatar
      புனைப்பெயரில் says:

      எழுதும் வித்தகம் தாண்டி கருத்தே ஒரு கதையின் தரத்தை சொல்கிறது. வியாபாரக் குப்பை எழுத்துக்களுக்குத் தான் தொய்வில்லாமலும் சுவையாக சொல்வது இனிமையான நடையும் முக்கியம். இந்தக் கதை அதிரும் உண்மை உணர்வை அற்புதமாக வெளி கொண்டு வருகிறது – படிப்பவர் மனதில். இதை குப்பைக் கதை அளவு கோலில் அடக்காதீர்கள், இவர் எழுத்து வியாபாரி மாதிரி தெரியவில்லை. மனதை அசைத்த அற்புத கதை.

      1. Avatar
        எஸ். சிவகுமார் says:

        புனைப்பெயரில் எழுதினாலும் என் எழுத்தைப் புரிந்து கொண்டு எழுதியுள்ளீர்கள். நன்றிகள் பல. என் மனதைத் தொட்ட விஷயங்களை மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன் கதையின் வாயிலாக. மீண்டும் அன்பு கலந்த நன்றி.

  2. Avatar
    Dr.G.Johnson says:

    எல்லா பெண்களும் ஒருநாள் திருமணம் புரிந்து இன்னொரு வீடுதான் செல்கின்றனர்.கணவரை ” கைக்குள் போட்டுக்கொள்ளதான் ” நினைகின்றனர். அது அன்புதான். வீட்டில் உள்ள மற்றவருக்கு அது வித்தியாசமாகத்தான் தெரியும். இந்தக் கதையில் தாயே மகளுக்கு அந்த ” மந்திரத்தை ” சொல்லி அனுப்புவது அருமை. மிக அழகாக சளரமான நடையில் எழுதப்பட்டுள்ளது. பாராட்டுகள் திரு எஸ். சிவகுமார்.

    1. Avatar
      எஸ். சிவகுமார் says:

      டாக்டர் ஜான்சன் அவர்களுக்கு வணக்கங்கள் பல. தங்களைப் போன்றவர்களின் பாராட்டுதல்கள் எனக்குக் கிடைத்ததைப் பெருமையாக நினைக்கிறேன். நன்றிகள் பல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *