சென்னைப் பல்கலைக் கழக மண்டபத்தில் சுமார் இரண்டு மணி நேரம் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் நுழைவுத் தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக ஆவலுடன் காத்திருந்தேன். சுமார் ஐநூறு கேள்விகளுக்கு பதில் எழுதியிருந்தேன்.
அகில இந்திய ரீதியில் நடை பெறும் இத் தேர்வில் தமிழகத்திலிருந்து மட்டும் சுமார் 1000 பேர்கள் வந்திருந்தனர். இதுபோன்று புது டெல்லி உட்பட வேறு பல இடங்களிலும் இத் தேர்வு நடை பெற்றது. சிங்கபூரிலும் இது நடந்தது .
நான் எதிர்ப்பார்த்திருந்த தபால் வந்ததும் பரபரப்புடன் பிரித்துப் படித்தேன். என்ன ஆச்சரியம்! என்னை தேர்வு செய்து விட்டனர் !
அடுத்த கட்டமாக நான் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.
அண்ணனுடன் நான் வேலூர் புறப்பட்டேன். உடன் பெட்டி படுக்கையுடன் வரச் சொல்லி இருந்தனர்.
அப்படி ஒரு வேளை அதிலும் தேர்வு செய்யப்பட்டால் மறு நாளே வகுப்புகள் துவங்கி விடுமாம். தேர்வு ஆகவில்லை எனில் வீடு திரும்ப வேண்டும். இது வினோதமான நேர்காணல் போன்று தோன்றியது.
ஆண்கள் விடுதியில் ஆர்தர் செல்வராஜ் என்ற தூரத்து உறவுப் பையன் அறையில் தங்கினோம். அவர் மூலமாக சில தகவல்கள் தெரிந்து கொண்டேன். மொத்தம் 120 பேர்கள் அழைக்கப் பட்டுள்ளனர். இவர்களில் பாதி பேர்கள்தான் தேர்வு செய்யப் படுவார். பாதி பேர்கள் வீடு திரும்புவர். தேர்வு மூன்று நாட்கள் நடைபெறும்.
தேர்வு பெறும் 60 பேர்களில் 35 ஆண்களும் 25 பெண்களும் இருப்பர் . அந்த 35 ஆண்களில் நான் ஒருவனாக இருந்தாக வேண்டும். 70 ஆண்களிலிருந்து 35 பேர்கள் தேர்வாவர். மிகவும் கடுமையான போட்டிதான் இது.
ஆர்தர் செல்வராஜ் சில வழி முறைகள் கூறினார் . அந்த மூன்று நாட்கள் எனது நடத்தை முழுதுமாக கண்காணிக்கப்படும் என்றார்.
நேர்முகத் தேர்வின் முதல் நாள் காலை!
நூற்று இருபது பேர்களும் 12 குழுவாக பிரிக்கப் பட்டிருந்தனர். ஒவ்வொரு குழுவிலும் பத்து பேர்கள் அடங்கினர் . இந்த பத்து பேரில் ஐவர் தேர்வு செய்யப்படுவர்.
ஒவ்வொரு குழுவுக்கும் இரண்டு குழு பார்வையாளர்கள் ( group observers ) உள்ளனர். என்னுடைய குழுவுக்கு டாக்டர் கோஷி , டாக்டர் ஜேக்கப் ஜான் ஆகிய இருவர் இருந்தனர்.இருவரும் மலையாளிகள்.
அன்று காலை நாங்கள் விடுதி உணவகத்தில் கூடினோம். அப்போதிலிருந்து மதிப்பெண்கள் வழங்கப்படும். நடை, உடை ,பாவனை, எப்படி பேசுகிறோம், எப்படி பழ்குகிறோம் என்பதற்கும் மதிப்பெண்கள் கிடைக்கும். எதை வைத்து அவர்கள் இருவரும் நமது தரத்தை மதிப்பிடுகின்றனர் என்பது நமக்குத் தெரியாது. இத்தகைய சிக்கலான சூழலில் அந்தக் குழுவில் ஒருவனாக பசியாறினேன்.
அப்போது மேசை மரியாதை ( table manners ) முக்கியமாக கவனிக்கப்படுமாம். அதனால் நான் மிகுந்த மரியாதையுடையவனாக நடந்து கொண்டேன்.
அடுத்து ஓர் அறையில் கூடினோம். அங்கு நாட்டு நடப்பு பற்றிய ஒரு கலந்துரையாடலில் ஈடுபடவேண்டும். நல்ல வேளையாக நான் அன்றாடம் இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் ( Indian Express ) பத்திரிகை படித்து வந்தேன். ஒருவாறு சமாளித்தேன்.
அதைத் தொடர்ந்து தனித் தனியாக விரும்பும் பொருள் பற்றி மேடைப் பேச்சு போல் சொற்பொழிவு ஆற்றவேண்டும். நான் வியட்நாம் போர் பற்றி பேசி அசத்தினேன்..
முதல் நாள் முழுதும் நாங்கள் பத்து பேர்களும் நன்றாக பழகி விட்டதால் மறு நாள் காலை புது உற்சாகத்துடன் உணவகத்தில் சந்தித்தோம். பார்வையாளர்களும் நண்பர்கள்போல் பழகினர்.
இரண்டாம் நாள் காலையில் எங்களுக்கு ஒரு நாடகக் காட்சி தரப்பட்டது. அது ஒரு இந்து திருமணம். அதை நாங்கள் தயாரித்து நடிக்கவேண்டும். அதை நாங்கள் எவ்வாறு தயார் செய்கிறோம் என்பதை பார்வையாளர்கள் கவனிப்பார்கள்.
ஒருவர் காட்சியை விவரிக்க வேண்டும். ஒருவர் இயக்குனர். ஒருவர் புரோகிதர் . ஒரு மாப்பிள்ளை ,ஒரு மணப்பெண் . பெற்றோர் நால்வர். மீதம் இருவர் உறவினர் . இதை எப்படி திட்டமிட்டு செயல்படுத்துகிறோம் என்பதற்கு மதிப்பெண்கள் கிடைக்கும்.
இதில் முக்கியமானது நடிப்பு கிடையாது. தலைமைத்துவம் ( leadership ), பங்களிப்பு ( participation ), ஒத்துழைப்பு ( co – operation ) போன்றவைக்கு மதிப்பெண்கள் தரப்படும். சுயநலப்போக்கு ( selfishness ) , அதிகப் பிரசங்கித்தனம் ( trying to be too clever ) போன்றவற்றுக்கு மதிப்பெண்கள் கழிக்கப்படும்! ஆகவே மிகுந்த கவனத்துடன்தான் இதில் அளவோடு செயல்படவேண்டும்.
அன்று மதியம் துரித சோதனை நடந்தது. இதில் ஊசியுள் நூல் நுழைப்பது, ஒரு பிடி அரிசியை எண்ணுவது போன்றவை நடந்தது. இதில் பார்வையாளர் இருவரும் கடிகாரத்தில் நேரம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். எவ்வளவு வேகமாக செய்து முடிக்கிறோமோ ஆதற்கெட்ப மதிப்பெண்கள் கிடைக்கும். சிலர் ஒவ்வொரு அரிசியாக எண்ணினர். அது நேரம் பிடிக்கும். பத்து பத்தாக பிரித்து எண்ணுவது சரியான முறை!
அதன்பின் நுண்ணறிவு சோதனை ( intelligence test ) நடந்தது. ஒரு பிரச்னை கூறுவார்கள். பரிகாரத்தை உடன் சொல்லிவிட வேண்டும். கூறும் நேரத்தை கடிகாரத்தில் அளவிடுவார்கள். யோசித்துக் கொண்டிருந்தால் அவ்வளவுதான்!
என்னிடம் கேட்கப்பட்டது இதுதான் :
மூன்று நண்பர்கள் மலை ஏறச் செல்கிறீர்கள். ஒருவர் கால் தவறி 20 அடி குழியில் விழுந்து மயங்கி கிடக்கிறார். என்ன செய்வீர்கள்?
பதட்டமான நிலையில் பதிலை உடன் சொல்லிவிட வேண்டும்.
என் பதில் இதுதான்!
கொண்டு வந்துள்ள கயிற்றைப் பயன்படுத்தி நான் கீழே இறங்கி முதலுதவி செய்வேன். அடுத்தவன் ஓடி உதவி தேடுவது. நண்பனின் மயக்கம் தெளிந்து விட்டால் கயிற்றின் உதவியுடன் மேலே ஏறிவிடுவது.
இத்தகைய நேர்முகத் தேர்வில் நம்முடன் உடன் இருந்து நமது குணாதியங்களை அறிந்து கொள்கின்றனர். குறிப்பாக நாம் மற்றவருடன் எவ்வாறு பழகுகிறோம் ( interaction ) என்பதையும் கவனிக்கிறார்கள். ஒரு மாணவனின் தோற்றம், நடத்தை, குணாதிசயம், திறமை , நுண்ணறிவு போன்ற முழுமையான பண்பு நலன்களை தெரிய முயல்கின்றனர்.
மூன்றாம் நாள்.
இந்த குறுகிய காலத்தில் எங்கள் குழுவின் பத்து பேர்களும் நல்ல நண்பர்களாகி விட்டோம். எங்களுக்குள் போட்டி உள்ளபோதும் அதை ஆரோக்கியமான நிலையில் ஏற்றுக்கொண்டோம்.
இறுதியாக எங்களிடம் ஒரு தாள் தரப்பட்டது . எங்கள் குழுவில் யார் சிறந்த டாக்டராக முடியும் , அதற்கான காரணங்கள் என்ன என்பதையும் எழுத வேண்டும்.
அதுபோல் யார் மோசமான டாக்டர் ஆவார் , அது ஏன் என்பதையும் எழுத வேண்டும்.
இது மிகவும் சிக்கலான சோதனை !
அநேகமாக அனைவருமே தடுமாறினோம். ஆனால் கட்டாயம் எழுத வேண்டும் என்ற நிர்ப்பந்தம் .எழுதிவிட்டோம்.
அதன் பின்பு எதனால் டாக்டராக விருப்பம் என்பது பற்றி ஒரு கட்டுரையும் எழுதினோம்.
நேர்முகத் தேர்வு முடிவுக்கு வந்தது.
மதிய உணவுக்குப் பின் விடை பெற்றோம். அறையில் நன்றாக தூங்கிவிட்டு மாலையில் அண்ணனுடன் கல்லூரி அலுவலகம் சென்றேன்
அங்கு மாணவர்கள் , பெற்றோர் , உறவினர் என நிறைய பேர்கள் கூடிவிட்டனர். இன்னும் சில நிமிடங்களில் முடிவு அறிவிக்கப்படும். யார் யார் தேர்வு பெற்றனர் என்பதை அறியும் ஆவல் அனைவர் முகங்களிலும் பிரதி பலித்தது. போட்டி போட்டுள்ள எங்களின் முகங்களில் பயமும், பீதியும், ஆவலும் கலந்திருந்தன! தேர்வு பெற்றால் மருத்துவப் பதிப்பு , இல்லையேல் வீடு என்ற நிலையில் இருந்தோம்.
சரியாக மாலை ஆறு மணிக்கு ஒலிபெருக்கி ஒலித்தது! அகர வரிசைப்படி பெயர்கள் அறிவிக்கப்பட்டன! என் நெஞ்சு படபடத்தது! ஆனால் அது சொற்ப நேரமே! அதற்குள் என் பெயர் ஒலிபெருக்கியில் ஒலித்தது!
ஆம்! நான் தேர்வு செய்யப்பட்டுவிட்டேன்! இனி நான் ஒரு மருத்துவ மாணவன்! இன்னும் ஐந்து ஆண்டுகளில் நான் ஒரு மருத்துவன்! நான் அடைந்த உவகைக்கு அளவேயில்லை. அருகில் நின்ற அண்ணன் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்! எனக்கு அப்போது ஆனந்தக் கண்ணீர் !
ஆனால் அந்த ஆனந்தமும் நீண்ட நேரம் நீடிக்க வில்லை !
அறுபது பெயர்களும் அறிவிக்கப்பட்ட மறு நிமிடமே எங்களை தேடி வந்து ” கைப்பற்றினர் ” கல்லூரியின் சீனியர் மாணவ மாணவிகள்! என்னை சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துச் சென்றனர்! காலணிகளை கழற்றி அவற்றின் கயிறுகளால் ஒன்று சேர்த்து கழுத்தில் மாட்டிக்கொண்டு நிற்க வைத்தனர். இவ்வாறு அனைத்து முப்பத்தைந்து மாணவர்களையும் ஒன்று திரட்டியபின் எங்களை வரிசையாக நிற்க வைத்தபின் ” லெஃப்ட் ரைட் :” என்று கத்திக்கொண்டு ஆண்கள் விடுதி நோக்கி அணிவகுத்துச் செல்ல வைத்தனர்.
ஆம்! ராகிங் ஆரம்பம்!
அடுத்த மூன்று நாட்களுக்கு எங்களுக்கு இன்னொரு கட்டாயத் தேர்வு ஆரம்பித்து விட்டது!
( முடிந்தது ))
- டௌரி தராத கௌரி கல்யாணம் ……16
- மருத்துவக் கட்டுரை மன உளைச்சல்
- நேர்முகத் தேர்வு
- நீங்காத நினைவுகள் 15
- பிரேதத்தை அலங்கரிப்பவள்
- ஜீவி கவிதைகள்
- சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 34
- புகழ் பெற்ற ஏழைகள் 21
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -38 என்னைப் பற்றிய பாடல் – 31 (Song of Myself)
- அயோத்தியின் பெருமை
- தாகூரின் கீதப் பாமாலை – 79 கவித்துவ உள்ளெழுச்சி .. !
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 24
- தோரணங்கள் ஆடிக்கொண்டிருக்கட்டும்.
- பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று
- கூடு
- பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!
- தொல்காப்பியம், ஆந்திர சப்த சிந்தாமணியில் – வினையடிகள்
- தூங்காத கண்ணொன்று……
- சாகச நாயகன் – 4. ஷீ தாவ் – ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளராக
- முக்கோணக் கிளிகள் [2]
- நாவற் பழம்
- திட்டமிட்டு ஒரு கொலை
- பிரபஞ்சத்தை உருவாக்கும் பிண்டம், கரும் பிண்டம், எதிர்ப் பிண்டம் [Matter, Dark Matter, Anti-Matter]
- காவ்யா வெளியிட்டு விழா – திலகபாமா கவிதைகள் வெளியீட்டு விழா
- எங்கள் தோட்டக்காடு