டௌரி தராத கௌரி கல்யாணம் ……16

This entry is part 1 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013
 
ஜெயஸ்ரீ ஷங்கர், புதுவை 

ம்ம்ம்..வீடு வந்தாச்சு மெல்ல இறங்கும்மா….ன்னு சொன்னபடியே தானும் மெல்லவே காரை விட்டு இறங்கிய கௌரி..வீட்டுக்குள் நுழையும் போது லேசாகத் தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

“இரட்டைக்  குழந்தைகள்” டாக்டரின் குரல் அவள் காதில் எதிரொலித்தது. . என் அம்மாவுக்குக் கூட கிடைக்காத பாக்கியம்.ஆனாலும், கண்கள் லேசாகக் கலங்கியது.மனம் கனத்தது அவளுக்கு. அப்பா மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால்…. பாவம் அப்பா…! என்னைப் பற்றி என்னெல்லாமோ கனவு கண்டிருந்தார். நானும் தானே என் லைஃப்  ரொம்ப சூபர்பா இருக்கும்னு நினைச்சேன்.இட்ஸ் ஆல் ஃபேட்….! பா…..சாரிப்பா….மானசீகமாக அப்பாவின் ஃ போட்டோவைப் பார்த்து மன்னிப்பு கேட்டுவிட்டு தன் அறைக்குள் நைட் டிரஸ் மாற்ற நுழைந்து
கொள்கிறாள்.

அதற்குள் சித்ரா தனக்கும் கெளரிக்குமாக  பசும்பாலைக் காய்ச்சி எடுத்துக் கொண்டு வந்தவள், நைட்டியில் வரும் தன் மகளைக் கண்டதும், கௌரி..நீ தான் எவ்வளவு அழகா இருக்கே…தெரியுமா ..? ஒரு கல்யாணம் காட்சின்னு ஒண்ணுமேயில்லாமல் இப்படி நீ எவனையோ நம்பி ஏமாந்து போய் வாயும் வயிறுமா நிக்கப் போறேன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கலை. பெத்த வயிறு பத்தீண்டு எரியர்து. இந்தா….இந்தப் பாலை குடிச்சுட்டு போய் படு. இந்த உடம்போடு எத்தனை தூரம் வண்டியை ஓட்டிண்டு வந்துருக்கே. ஒண்ணு செய்…நீ தெனம் ஆபீஸ் போறதுக்கு ஒரு டிரைவரை ஏற்பாடு செய்துக்கோ. இந்த டிராஃபிக்குல நீ காரை ஓட்டிண்டு போகண்டா.உனக்கு ஸெல்ஃப் டிரைவிங்கை விட அது தான் சௌகரியம்..சேஃப்டி. டாக்டர் உன்னை பத்திரமாப் பார்த்துக்கச் சொல்லி எங்கிட்டச் சொல்லியிருக்காள். வாஞ்சையோடு மகளைப் பார்க்கிறாள்.இப்ப நீ பெத்துக்கறதத் தவிர வேற வழியே இல்லையாம். நானே அதிர்ந்து போயிட்டேன்.

சரி…நாளைக்கு ஒருத்தர்ட்ட டிரைவருக்கு சொல்லி வைக்கிறேன், பாலை உறிஞ்சியபடி சொல்கிறாள் கௌரி.

இன்னிக்கித் தான் நான் சொன்னதை ஒரே வார்த்தையில் சரி ன்னு ஏத்துண்டு இருக்கே. அதிசயம் தான்.! சித்ரா கௌரியிடமிருந்து காலியான தம்ளரை வாங்கிக் கொண்டு நகர்கிறாள்.

இரவு முழுதும் உறக்கமே வராமல் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு மனத்துக்குள் தொடர்ந்து எழுந்த எண்ணங்களை ஒன்றன் பின் ஒன்றாக விரட்டிக் கொண்டே வந்தாள் கௌரி. நடப்பது நடக்கட்டும், எண்ணிக் கொண்டே தனது வயிற்றை லேசாகத் தடவிப் பார்க்கிறாள். கார்த்தி… விளையாட்டு வினையாகும்னு இதைத்தான் சொல்வாளோ  என்னமோ.  நீ என் வாழ்க்கையில்   விளையாடிய விளையாடினதோட பலனை நான் அனுபவிச்சுண்டு இருக்கேன். ஆனால் என்ன, உன் குழந்தைகளைக் கண்ணாறப் பார்த்துத் தூக்கிக் கொஞ்சும் பாக்கியம் உனக்குக் கிடைக்கப் போவதில்லை. அதே சமயம், என் குழந்தைகளுக்கும் டாடி என்ற பந்தமும் புரியாது. நான் தான் இதன் விளைவுகளை தைரியமா ஃபேஸ் பண்ணணம். புதுமையான உணர்வுகளால் தாக்கப்பட்டு அப்படியே உறங்கிப் போனாள் கௌரி.

அலுப்போடு சலிப்பும் சேர்ந்து கொள்ள படுக்கையில் விழுந்த சித்ராவின் மனம் விழித்துக் கொண்டு அவளை கேள்வி கேட்டுத் துளைத்தது. கௌரிக்கு ரெட்டைக் குழந்தைகளாம்….யாருக்கு வேணம்..? இந்த செய்தியைக் கேட்டு நான் சிரிக்கவா முடியும். இப்ப இந்த ஊரே என்னைப் பார்த்து சிரிப்பாச் சிரிக்குமே.என்ன செய்யப் போறே…?  கெட்டகேட்டுக்கு ரெட்டைக் குழந்தைகளாம். வாயிலெடுக்க வரது . எத்தனை பேர் குழந்தைகள் பொறக்கலைன்னு அழறா…அவாளை எல்லாம் விட்டுட்டு இங்க வந்து சேர்த்து கொடுத்து நாடகத்தை ஆரம்பிக்க திரையை விலக்கியிருக்கார் பகவான். நான் தானே புக்காத்தையும்  பொறந்தாத்தையும் சந்திக்கணம். நல்ல நாள்லயே நாழிப்பால். இப்போ போதாக் குறைக்கு இந்த விஷயம் வேற. வெறும் வாய்க்கு வெல்ல அவல். போறவா, வரவா எல்லாரும்  துக்கம் விசாரிக்கறாப்பலன்னா கேட்பா…! கௌரி கல்யாணத்துக்கு  டௌரி தரமாட்டேன்னு ஆரம்பிச்சார் ஈஸ்வரன். அதையும் தாண்டி நீ காதும் காதும் வெச்சாப்பல ஒரு செலவும் இல்லாமல் எப்படி, எங்கே, யாருக்கு கல்யாணம் பண்ணினேன்னு கேட்பாளே..? இது கழிஞ்சா சீமந்தம் பண்ணலையா…? எதுக்குமே கூப்பிடலையே..ன்னு கேட்கறவா கிட்ட நான் எந்த மூஞ்சியைக் காண்பிப்பேன்.

ஆயிரம் வாட்டி சொன்னேன்..ஜாக்கிரதையா இருடின்னு. கேட்டாளோ இவள். என்கிட்டே மறைச்சா. இப்போ வெட்வெளிச்சமாயாச்சு.
கொஞ்ச நாள் முன்னாடி சொல்லியிருந்தாலும் இந்தக் குழந்தையும் வேண்டாம் கோட்டானும் வேண்டாம்னுட்டு காதும் காதும் வெச்சா மாதிரி காரியத்தை முடிச்சிருக்கலாம். இப்போ தான் டாக்டரே சொல்றாளே, மூணு மாசம் முடிஞ்சாச்சு….இனிமேல் அது போல யோசித்தால் கௌரியின் உயிருக்கே ஆபத்து வரும்னு. இந்த வார்த்தையைக் கேட்டதுக்கு அப்பறம் ‘அது’ எப்படித் தோணும்..? இருந்துட்டுப் போட்டும் போ.

அவள் தான் பாவம்..!இளமைக் காலத்துல பண்ணின  தப்பை ஆயுசு பூரா சிலுவையைச் சுமக்கறாப்பல மனசுக்குள்ள சுமந்துண்டு அவஸ்தை படணம் . புதுமை புரட்சின்னு தன்னோட பூரா வாழ்க்கையையும் பணயம் வெச்சு இப்படி ஒரு விபரீத விஷயத்துக்கு விதை விதைக்காட்டா என்ன கேடு ? குழந்தைகளா வயித்துக்குள்ள இருக்கற வரைக்கும் கௌரி மட்டும் கண்ணுக்குத் தெரிவாள். பாசம் கண்ணை மறைக்கும். நாளைக்கே ரெண்டு குழந்தைகளும் வெளியே வந்தாச்சுன்னா, என்னாலத் தொட்டுக் கூடத் தூக்க முடியாது.
கண்டவனோட குழந்தைகளுக்கு  நான் என்ன அண்ணாவி.? எதுகளுக்கு நான் பாட்டி? அவளோட அவமானச் சின்னங்களுக்கு நான் எந்த விதத்திலும் உறவு கிடையாது.நேரம் வரும்போது கௌரிட்ட இதைச் சொல்லணம். தொடர்ந்த எண்ணங்களில் தனை மறந்து சித்ராவும் உறங்கிப் போனாள்.

0    0    0    0   0    0   0   0   0    0

நையி …நையி ..ண்டு எப்பப் பாரு என்ன அழுகை ? என்று மூன்று வயது குழந்தையின் கன்னத்தைக் கிள்ளுகிறான் மாணிக்கம். கிள்ளிய வலியில் இன்னும் அதிக சத்தம் போட்டு அழ ஆரம்பித்தது குழந்தை முருகன்.

ஏண்டா மாணிக்கம்….குழந்தையை இப்படிப் போட்டு அடிக்கிறே..? காப்பியை ஆற்றிக் கொண்டே சமையல் கட்டுக்குள் இருந்து வெளியே வந்த வெள்ளையம்மாள், முருகனைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொள்கிறாள்.

அரசன் அன்று கொல்வான் …தெய்வம் நின்று கொல்லும் …அது மாதிரி ஒருத்தன் மனசாட்சிக்குத் தெரிஞ்சு செய்யிற தப்புக்கும் கண்டிப்பா தண்டனை அனுபவிச்சே தீருவான். இதெல்லாம் பொய்யே கிடையாது..நான் தான் பாக்குறேனே. வசந்தி , அதும்பாட்டுக்கு அம்புட்டு வேலை செய்யும். அத்தோட சம்பாரிச்சு வேற கொண்டாரும். கொழந்தையின்னா கொள்ளைப் பிரியம் அதுக்கு. எப்பப்பாரு முருகனைத் தூக்கி வெச்சு கொஞ்சும். அத்தப் போயி நீயும், விமலாவும் அடிச்சுத் வெளியத் தொறத்தினீங்க . உங்க சந்தோசம் ஒரு மாசமாச்சும் நெலைச்சிச்சா. உம்மேலேயும் அது தங்கச்சி விமலா மேலயும் எம்புட்டு நம்பிக்கை வெச்சிருந்தா அது அப்படி ஒரு கல்யாணத்தை உனக்கு நடத்தி வெச்சிருக்கும். நான் கூடத் தான் அதைத் தப்பா நெனைச்சேன்.ஆனால் அம்புட்டு வேலையையும் செஞ்சுபோட்டு, வெளில வேற போயி சம்பாரிச்சு நாம எம்புட்டுத் திட்டினாலும் வாயைத் தெறக்காமல் கெடக்கும்.அதைப் பார்த்து நானே மனசு மாறிப் போயிட்டேண்டா மாணிக்கம். நாம அந்த ராத்திரில எந்த சொந்தமும் இல்லாதவளை அப்படி வீட்டை விட்டுத் தொறத்தி அடிச்சி அனுப்பி இருக்கக் கூடாதுடா. அதும் அந்த விமலாவோட பேச்சைக் கேட்டுக்கிட்டு. இப்ப அது எங்கிட்டுப் போயி எப்படி இருக்குதோ…உசுரோடத் தான் இருக்குதோ…இல்லைன்னா  அதும் இந்த விமலா மாதிரி செத்துப் போச்சோ என்ன எளவோ. உனக்கு வேணும்டா. உனக்கு நல்லா வேணும். எனக்கும் வேணும். இதோ இப்ப நான் தானே உங்களை வெச்சுக்கிட்டு கஷ்டப்படுறேன். ஒரு மனுசியோட அருமை அது இல்லாதப்பத் தான் தெரியும்பாக. நீ வசந்திய வெரட்டின, அந்தக் கடவுள் விமலாவை நெருப்புல கட்டி இழுத்துக்கிட்டுப் போயிட்டாரு.
இல்லாட்டி சமச்சுக்கிட்டு இருந்தவ இப்படித் தீப்புடிச்சி கருகிச் சாவாளா.? எல்லாம் விதி. ஒண்ணுக்கு ரெண்டு இருந்தென்ன…? யோக்கியதை தெரிஞ்சா ஒண்ணும் தங்காது.

அம்மா நீ …காலையிலயே வழக்கம் போல புலம்ப ஆரம்பிச்சுட்டியா.? இப்ப நொந்து என்ன செய்ய? நானும் வசந்தியத் தேடாத எடம் கெடையாது. அது என் கைக்கு அம்புடலை. அவ  தெகிரியம் பிடிச்சவ, ரோஷக்காரி… சாகமாட்டா. நீ வேணாப் பாரேன். முருகன் மேல ஆணையா சொல்றேன்…வசந்தி நம்மகிட்ட சீக்கிரம் வந்துடும். பாரேன்.

அடப் போடா புரியாத மவனே.வந்தா என்னிக்கோ வந்திருக்கோணம். அது எங்கேனாக் கடல்ல விளுந்து உசுர விட்டிருக்கும். அதற்குள் புட்டிப்பாலை குடித்து விட்டு தூளியில் தூங்கிப் போனான் முருகன். புள்ளைக்குப் பசிடா மாணிக்கம்…அதான் அந்த அளுகை அளுதிருக்கான்….என்றவள், ஆமா நான் தான் இவனப் கவனிச்சுக்கிறேன்ல நீ எங்கனயாச்சும் வேலைக்குப் போனாத் தான் என்னவாம்? பழைய கெழடிக் கதவத் தெறடின்னு அந்த டிரைவர் வேலைக்காச்சும் போறது.வாழ்நாள் முச்சூடுமா துக்கம் கொண்டாடிக்கிட்டு கெடக்கப்போறே ? அந்த துரைசாமி டிராவல்ஸ் கிட்டப் போயி எதுனா வேலை இருக்குதான்னு கேட்டுகிட்டு வாடா.

அந்தக் காலத்துல நான் இளமையா இருக்க, புள்ளத்தாச்சிக்கு பிரசவம் பார்க்க வீட்டுக்கே அளைப்பாக. இப்பத்தான் தெருவுக்கு நாலு ஆசுபத்திரி வந்து நம்ப பொளப்ப கதி கலங்க வெச்சிருச்சு. இல்லாட்டி இந்தக் கையால எம்புட்டு பிரசவம் பார்த்திருக்கேன்.”மருத்துவச்சி மல்லிகான்னா எங்கூருல தெரியாத ஆள் இருக்க மாட்டானுங்க. இன்னும் சீரியஸ் கேசுகள் எங்கனா வந்தா என்னை ஓடியாந்து இட்டுக்கினு போவாங்க. தெரியுமாடா மாணிக்கம் அம்புட்டு பேமஸ் நான்.

இந்தா இந்த  முருகன் கூட என் கையாலப் பொறந்தவன் தானே. இப்ப நான் எங்கனா வேலைக்குப் போவணும்னா இவனை யாரு பார்த்துக்குவா..? அதான் என்னால வெளிய போக முடியல. நீனாச்சும் வெளிய போயி எங்கனா வேலை தேடுறது? வேலை வேணுமின்னா நாம தான் போயி கேட்கோணம் . அவுக வந்து கையில வெத்தல பாக்கு வெச்சி அளைக்க மாட்டாக, புரிஞ்சுக்கோ.இப்படி நீ தாடியும் மீசையுமா நிண்டா நல்லாவா இருக்குது. ஆனது ஆயிருச்சி, இனி ஆகப்போறதப் பார்ப்பியா ?  குழந்தைக்குப் பால் வாங்கக் கூட கையில காசில்லைடா..வீட்டு வாடகை வேற ரெண்டு மாசம் பாக்கி. இதே வசந்தி இருந்திருந்திச்சுன்னா இப்படி ஆக விடுமா? ம்ம்ம்…யாரைச் சொல்லுறது. எல்லாம் நாம வாங்கிட்டு வந்த சாபம்.

நீ சும்மாப் புலம்பாதே…இன்னிக்குப் போறேன்…நீ புள்ளைய பத்திரமாப் பாத்துக்க, அப்ப நான் கிளம்பறேன்… என்று தன்னிடம் இருப்பதில் ஒரு நல்ல சட்டையாக எடுத்து அதை மாட்டிக் கொண்டே கிளம்பினான் மாணிக்கம்.

ஆவட்டும்…சீக்கிரமா வந்திர்ரா..என்று குரல் கொடுத்தாள். என்னிக்கு அந்த வசந்தியை வெளிய தொறத்தினமோ அன்னிக்கே இந்த வீட்டு லட்சுமியும் கிளம்பிருச்சு. மன்னிப்புக் கேட்டா சரியா வருமா? கொஞ்ச நஞ்சமா ஏசியிருக்கேன். அதுக்கெல்லாம் தான் இப்பக் கெடந்து அல்லாடுறேன். புலம்பிக் கொண்டிருந்தாள் அவள்.

வீட்டைத் தாண்டி “டடக் ..டடக் ..” என்று மாணிக்கம் சைக்கிளை மிதித்து தெருவைக் கடந்து செல்வதைப் பார்த்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். இந்த எடத்துல வேலை கெடைக்கோணம் மாணிக்கத்துக்கு. வசந்தியும் வந்து சேர்ந்துகிச்சுன்னா

அவளது நம்பிக்கை வீண்போகவில்லை.

அன்று மாலையிலிருந்தே கௌரியின் காருக்கு டிரைவராகப் பணியில் சேர்ந்து கொள்ள அவனுக்கு அழைப்பு வந்தது.

0    0    0    0    0    0   0    0    0

எப்படியோ தன் ஆபீசில் ஒருத்தரிடம் நல்ல டிரைவரா இருந்தா எனக்குச் சொல்லுங்க. என்று கேட்டுக் கொண்ட கௌரிக்கு மதியம் லஞ்ச் டைம் போதே , ஒருத்தர் மாணிக்கம்னு இருக்காராம். இப்ப எங்கியும் வேலைக்குப் போகலியாம். நம்பிக்கையான ஆள் தான். அனுப்பி வைக்கட்டுமா  என்று கேட்டு கௌரியின் சரி..அப்ப இன்னிக்கே அவரை என்னைப் பார்க்க வரச் சொல்லுங்க.விசாரிச்சுப்  பார்த்துட்டு சொல்றேன். என்கிறாள்.

தகவல் அறிந்த மாணிக்கத்துக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை…அந்த ஆபீஸ்லையா ? அந்த மேடமா…?வசந்தி அங்க தான வேலை செஞ்சிச்சி….அடிக்கடி அந்த மேடம் ரொம்ப நல்லவங்கனு சொல்லுமே..இன்னிக்கு அங்க போய் ஒருவேளை வசந்தியைப் பார்த்தால் மன்னிப்பு கேட்டு கெஞ்சிறலாம். அதற்குள் அவனது மனசாட்சி  “நீ தான் விமலா செத்துப் போன விசயம் சொல்ல வசந்தியத் தேடிக்கிட்டு ரெண்டு தபா இந்த ஆபீஸ் வாசலுக்கு வந்தியே….அங்கன இருக்குற காவலாளிங்க கூட ‘இங்க அப்படி யாருமில்லைன்னு’ உன்னிய வெரட்டி விட்டாங்களே…மறந்து போச்சா மன்னாரு…” என்றது.

இருந்தாலும் ஒரு நப்பாசையுடன் வேக வேகமாக ஷேவ் செய்து  குளித்துவிட்டு நல்ல ஷர்ட்டை போட்டுக் கொண்டவன்,தன்னையே வித்தியாசமாக கண்ணாடியில் பார்த்துக் கொண்டான். அம்மா, நான் கிளம்பறேன். நீ சொன்னாப்பல எனக்கு வேலை கெடைச்சிரும்னு நெனைக்கிறேன். என்கிறான்.

நல்லபடியா போயிட்டு, வரும்போது முருகனுக்கு ரெண்டு வாளப்பளம் வாங்கியாடா மாணிக்கம்.

சரி..சரி…..வாங்கியாறேன்….

என்றபடி கதவைச் சாத்திக் கொண்டு கிளம்பினான்.

கௌரியின்  முன்னே ரொம்ப சுத்தமாகவும் பணிவாகவும் வந்து நின்ற மாணிக்கத்தின் கண்களில் ஏகப் பட்ட சோகம் குமிந்து கிடந்தது. இவள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நிதானமாக பதில் சொன்னவன் ..கூடவே.மேடம்…இந்த வேலையை  வேற யாருக்கும் தந்திராதீங்க…ப்ளீஸ் என்று கெஞ்சியவன் …மூணு மாசமா வேலையில்லைங்க…பொண்டாட்டி தீ விபத்துல சிக்கி செத்துப் போச்சு. மவனுக்கு ரெண்டு வயசு..என் அம்மாவுக்கும் வயசாயிப் போச்சு….அவிங்களை  நான் தான் பார்த்துக்கிடறேன். பத்து வருஷமா டிராவல்ஸ் கார் ஓட்டறேன் மேடம்.

சரி என்று அவனது லைசென்ஸை வாங்கிச் சரி பார்த்தவள், அவன் கேட்ட சம்பளத்திலிருந்து பேரம் பேசி, சரி இன்னைக்கு ஈவ்னிங் என்னை வீட்டுக்கு கொண்டு விடு மாணிக்கம். அதுக்கப்பறம் வீட்ல போய் பேசிக்கலாம்..சரியா..? என்கிறாள்.

மிகுந்த மகிழ்ச்சியோடு தலையாட்டியவன் வசந்தி இங்க தான் வேலை செய்யிறதாச் சொல்லியிருக்கா…இப்ப அவ இங்க இருக்கக் கூடாதா என்று தேடும் கண்களை ஓட விட்டான் அவன். மாணிக்கத்தின் மனசு சொல்லிக் கொண்டே இருந்தது…”இன்னிக்கே நீ வசந்தியைக் கண்டுபிடிச்சிருவே…..”  அவன் அங்கிருந்த செக்யூரிட்டியிடம் மெல்ல விசாரித்து அவன் சொன்ன பதிலில் ஏமாற்றம் அடைந்து திரும்புகிறான்..மாணிக்கம்.

இந்த வீடு தான் நிறுத்திட்டு கேட்டைத் திறந்து உள்ள விட்ருங்க…..கௌரியின் குரலுக்கு பணிந்து உள்ளே நுழைந்து காரை நிறுத்தும் போது, அவன் மனத்துக்குள் ஒரு நிறைவு பரவியது.

கௌரி உள்ளே நுழைவதற்குள் வெளிப்பட்ட வசந்தி, சிரித்தபடியே கௌரியைப் பார்த்து அதுக்குள்ளார டிரைவர் கிடைச்சிட்டாரா..? கேட்டவள், கார் கதவு திறக்கப்பட்டு வெளியே வந்தவனைப் பார்த்து அதிர்ச்சியோடும் ஆனந்தத்தோடும் திகைத்தபடி கௌரியைப் பார்க்கிறாள் வசந்தி.

கெளரிம்மா, இவரு…இவரு…..என்று ..சொன்னவள்.மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் விடு விடுவென்று வீட்டுக்குள் ஓடுகிறாள்.

ஒன்றுமறியாத கௌரி, மாணிக்கத்திடமிருந்து  கார் சாவியை வாங்கிக் கொண்டவள் , என்னது? என்பது போல புருவத்தை உயர்த்தி அவனைப் பார்க்கிறாள்.

அவன், வசந்தியைப் பார்த்த மகிழ்வு ஒருபுறம் இருந்தாலும்…”பொண்டாட்டி தீ விபத்துல செத்துப் போயிருச்சு”ன்னு இவங்ககிட்ட சொன்னது பொய்யின்னு ஆயிருமே…அதனால் சொல்லத் தயங்கினான்.

எங்கே அந்தக் கடங்காரன் என்று வசந்தியோடு திமு திமு வென்று மூச்சு வாங்க வெளியே வந்த சித்ராவைத் தள்ளிக் கொண்டு ஓடிச் சென்று “என்னங்க, நான் தாங்க வசந்தி..நல்லாருக்கீங்களா , முருகன் நல்லாருக்கானா..நான் இவங்களோடத் தான் இருக்கேன்..தெய்வமா என்னைக் காப்பாத்தினாங்க..” என்றதும்.

வசந்தி….என்னை மன்னிச்சுடும்மா…என்று கண்கள் நிறைந்து வழிந்த கண்ணீரோடு வசந்தியை கட்டிக் கொள்கிறான். மன்னிச்சுடு தாயி …..எங்கள மன்னிச்சுடு…என்றவன். நீ போன பெறவு பத்தே நாள்ல விமலாவும் தீப்புடிச்சி செத்துப் போச்சு. என்று கேவுகிறான்.

வசந்தி அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்.

கௌரியின் மெமரி சிப் அவளுக்கு வேண்டிய தகவல்களைத் அதிவேகமாகத் தந்து கொண்டிருந்தது. “செஞ்ச தவறை உணர்ந்திருக்கான்”
என்றவள்..வசந்தியின் வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் வீசட்டும் என்றெண்ணியபடி நீங்க பேசிக்கோங்க என்று உள்ளே செல்கிறாள்.
அம்மா……வாயேன்….அவா பேசிக்கட்டும்..என்று சித்ராவின் கைகளைப் பற்றியபடியே.

ஒவ்வொருத்தர் வாழ்க்கையில் என்னவெல்லாம், எப்படில்லாம் நடக்கறது பாரேன்….இவன் தான் டிரைவரா  ? என்ற சித்ரா. எல்லாம் பகவான் நடத்தற நாடகம், எது எப்படியோ இந்த வசந்தி பொண்ணுக்கு அவளோட ஆம்படையான் வந்து  சேர்ந்துட்டான்  என்று சொல்லிக் கொண்டே அடுக்களைக்குள் நுழைகிறாள்.

பிரிந்த இருவரும் ஒன்று சேர்ந்த அந்த நிமிஷத்தைத் தான் கவனித்ததை கண் முன்னே கொண்டு நிறுத்திய கௌரி, “இந்த இடத்தில் கார்த்தி வந்திருந்தால் …” என்று நினைத்துப் பார்க்கிறாள்.

(தொடரும் )

Series Navigationமருத்துவக் கட்டுரை மன உளைச்சல்
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *