பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று
இவ்வளவு மாதங்களுக்குப் பிறகு போன வருடம் டிஸம்பர் மாதத்திலிருந்து நடந்த நிகழ்வுகளை அவற்றின் தொடர்ச்சியில் சொல்லாம் தான். ஆனால் இவற்றின் தொடக்கம் எங்கு எப்போதிலிருந்து என்பதெல்லாம் எனக்கு தெரியாத காரணத்தால் சொல்வது கடினம். ஒருவாறாக யூகிக்கலாம். அது தவறாகவும் இருக்கலாம்.
சரி இப்படித்தான் தொடங்குகிறது. அம்ருத வர்ஷினி என்ற பங்களூரிலிருந்து செயல்படும் ஒரு ஸ்தாபனத்திலிருந்து கே.எஸ்.எல் ஸ்வாமி என்பவர் கையெழுத்திட்டு 5.12.2012 தேதியிட்ட கடிதம் இரண்டு நாட்களுக்குப் பிறகு எனக்கு வந்தது. அந்த ஸ்தாபனம் 22.12.2012 அன்று டாக்டர் பி.பி. ஸ்ரீனிவாஸ் என்னும் பிரபல சினிமா பின்னணி பாடகருக்கு 82 வயது பூர்த்தி யாகிறது (பி. 22.9.1931) அன்று அவரது ஸ்ஹஸ்ர சந்திர தர்ஸனமும் பூர்த்தி ஆவதால் அந்த வைபவத்தைக் கொண்டாடவும் அவரை கௌரவிக்கவும் ஒரு பெரும் விழா ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம், அந்த சந்தர்ப்பத்தில் பி.பி ஸ்ரீனிவாஸ் கன்னட சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி சினிமா படங்களிலும் ஆயிரக்கணக்கான பாட்டுக்கள் பாடி இரண்டு தலைமுறை ரசிகர்களை மகிழ்வித்துள்ளவர். இந்த அனைத்து மொழிகள் தவிர, ஆங்கிலம், உருது சமஸ்கிருதம் மொழிகளிலும் அவர் வல்லுனராக இருந்தவர். எனவே, 22.12.2012 அன்று அவரைக் கௌரவிக்கும் போது இந்த அனைத்து மொழிகளிலும் தம் பங்களிப்பைத் தந்துள்ள, பி.பி ஸ்ரீனிவாஸ் போல 80 வயது நிறைந்த, அறிஞர்களையும் கௌரவிக்கத் திட்டமிட்டுள்ள்தாகவும், அவ்வகையில் தமிழ் மொழிக்குத் தாங்கள் செய்துள்ள பாராட்டத்தக்க சேவையைக் கருத்தில் கொண்டு பி..பி.ஸ்ரீனிவாஸை கௌரவிக்கும் அதே மேடையில் தங்களையும் கௌரவிக்க விரும்புகிறோம். இது பி.பி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கும் மகிழ்ச்சி தரும். எனவே இந்த கௌரவத்தை ஏற்க, தங்கள் ஒப்புதலை உடன் தெரிவிக்க வேண்டுகிறோம், என்று கண்டிருந்தது.
ஆச்சரியமாக இருந்தது. தனித்து விடப்பட்டதால் எஞ்சிய காலத்தைக் கழிக்க மகனுடன் வாழ வந்த இடத்தில் இப்படி ஒரு ஏற்பும் கௌரவமுமா? ”தோட்டத்துப் பச்சிலைக்கு உள்ளூரிலே என்னிக்குங்க மதிப்பு இருந்துச்சி?” என்று எளிய கிராமத்து வாசி கூட கேலி செய்வான். இங்கு அதுவும் தமிழ் நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்று கூச்சலிடும் கர்நாடகத்தில், ”உங்களை கௌரவிக்கிறோம்” என்றா குரல் எழும்? எப்படி இது நேர்கிறது?. அதையெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் சரி என்று உடனே மறு நாளே பதில் போட்டுவிட்டு சாவகாசமாக யோசிக்கத் தொடங்கினேன். அபூர்வமாக வந்தது கைவிட்டுப் போய்விட்டால்? இடையில் தடுத்தாட்கொள்பவர்கள் நிறைய எங்கும் இருப்பார்கள் என்பது ஒரு புறம் இருக்க, அம்ருத வர்ஷிணிக்காரர்களே கூட “ஸொல்ப க்ஷமா மாட்ரி, எத்தனையோ சாமிநாதன், அட்ரஸ் தப்பாப் போயிடுத்து. அது வேற சாமிநாதன்” என்று சொல்ல எத்தனை நேரம் ஆகும்? எதுவும் நடக்கலாம் தானே.
உடனே அவர்கள் கௌரவத்தை ஏற்றுக்கொள்ள சம்மதித்து கடிதம் எழுதினேன். அதே வேகத்தில், ஏற்றதற்கு நன்றி சொல்லிக் கடிதமும் வந்துவிட்டது. 27.12. அன்று 4.00 மணிக்கு என்னை பாலஸ் க்ரௌண்ட்ஸ்க்கு அழைத்துச் செல்ல கார் வரும் என்றும் சொன்னார்கள். சந்தோஷம். கமுக்கமாக இருக்கவேண்டும். யாரிடமும் சொல்லக் கூடாது என்று மனசில் நினைத்துக்கொண்டேன். அதெல்லாம் சரி. இன்னொரு குடைச்சல்.
இவர்களுக்கு என்னை எப்படித் தெரியும்? இப்படி ஒரு ஆள் இங்கே இருக்கான்யா? என்று கூட ஒருத்தனும் சொல்ல மாட்டானே நம்மூர் ஆள்? நம்மூர்லேயே கவனிக்க ஆள் இல்லை. இங்கே.? 80 வயது நிறைந்திருக்க வேண்டும் என்ற ஒரு தகுதி எனக்கு இருக்கிறது. கேட்டால் பள்ளிக்கூட சர்ட்டிபிகேட் இருக்கிறது. காட்டலாம். ஆனால் இது கலைஞர் கருணாநிதிக்கும் இருக்கிறது. பேராசிரியர் க. அன்பழகனுக்கும் இருக்கிறதே. சொல்லப் போனால் அவர்கள் 80 ப்ளஸ் over qualified. அது போக, தமிழ் உலகம் அறிந்தவர்களாயிற்றே. சக்தி வாய்ந்தவர் களாயிற்றே. அவர்களை ஏன் தேடிப்போகவில்லை? ஒரு வேளை சென்னையிலிருந்து அழைத்து வர செலவு அதிகமாகும் என்றா? அவர்களோடு ஒரு பெரிய கூட்டமே வருமே, என்றா? அல்லது பத்தோடு பதினொன்றாகச் சேர அவர்கள் மறுப்பார்கள்? தனி மரியாதை கேட்பார்கள்? பி.பிஸ்ரீனிவாஸ் பின்னுக்குப் போய் அவர்கள் மேல் தான் ஸ்பாட்லைட் விழும்? இப்படி எல்லாம் நிறைய யோசித்திருப்பார்கள். இது அவ்வளவும் எனக்கு சாதகமான points ஆச்சே! இந்த வம்பெல்லாம் சாமிநாதனிடம் இல்லையே. சல்லிஸாக காரியம் முடியும். சரி. மற்றது?
Shashwathi Nanjanagudu Tirumalamba Award winners 2011
(அமர்ந்திருப்பவர்களில் இடது பக்கம் இருப்பது உமா மகேஸ்வரி அடுத்து இருப்பது நயனதாரா ஸெஹ்கல், இந்திரா காந்தியின் கஸின், விஜயலக்ஷமி பண்டிட்டின் மகள். தைரியமும் சுயகௌரவமும் மிக்க நல்ல எழுத்தாளர். குடும்பப் பெயரைக் கொண்டு அறுவடை செய்யாதவர். இந்திரா காந்திக்கும் நயனதாராவுக்கும் இடையே ஏழாம் பொருத்தம் தான். உமா மகேஸ்வரிக்கு பின்னால் நிற்பவர் சஷி தேஷ்பாண்டே. நான்கு பெண்களும் பரிசு பெற்றவர்கள். மற்ற எவரையும் எனக்குத் தெரியாது)
பங்களூருக்கு வந்த வருடம் எனக்கு தெரிந்த தமிழறிஞர் இங்கு பேராசிரியர் ப. கிருஷ்ணசாமி, க்ரைஸ்ட் காலேஜில் இருப்பவர். இப்போது அது க்ரைஸ்ட் யுனிவர்சிடி ஆக உயர்ந்துள்ளது. அவர் எனக்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு விடுத்தார். ஷாஷ்வதி அவார்ட்ஸ் கமிட்டி ஒவ்வொரு வருடமும் படைப்பு இலக்கியத்துக்கு பெரும் சேவை செய்துள்ள பெண் எழுத்தாளர்களை கௌரவித்து நஞ்சன்கூடு திருமலாம்பா அவார்ட் என்ற பெயரில் 40,000 ரூபாய் பரிசும் ஒரு காமதேனு விக்கிரஹமும் கொடுப்பார்களாம், ஒவ்வொரு வருடமும் ஒரு மொழி என முறை வைத்து. இந்த வருடம் தமிழுக்கு ஒரு பெண் எழுத்தாளரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு தனக்குத் தரப்பட்டுள்ள தாகவும், அதற்கு தான் தலைமை ஏற்று இன்னும் இரண்டு பேர், ஒரு பெண்ணும் உள்ளடங்கிய குழு அமைத்து தேர்வு செய்யச் சொல்லி யிருக்கிறார்கள். அந்தக் குழுவில் நீங்களும் சேர்ந்து எனக்கு தேர்வில் உதவ வேண்டும் என்று சொன்னார். சந்தோஷமாக இருந்தது. நிறைய பெண் எழுத்தாளர்களைப் படித்தோம். தேர்வும் செய்தோம். பரிசும் கௌரவமும் உமா மகேஸ்வரிக்குச் சென்றது. அந்த பரிசுக்கு என்ன பெயர் என்பது மறந்துவிட்டது. பல வருஷங்களுக்கு முன் தில்லியில் இருந்த போது கதா பரிசுக்கு உமா மகேஸ்வரியைத் தேர்ந்ததும் எனக்கு மகிழ்ச்சி தந்த ஒன்று. அது தனித்துச் செய்த தேர்வு. இது ஒரு குழுவோடு செய்த தேர்வு. அவ்வளவே.
அதற்குப் பிறகு என்னையும் ஒரு “அறிஞனாக”, இலக்கியம் பற்றித் தெரிந்தவனாக சுட்டிக்காட்ட யாரும் இருக்கவில்லை. குடத்தில் இட்ட விளக்கு என்று நான் எனக்குச் சொல்லி மனசை ஆற்றிக்கொள்ளலாம். தமிழில் தான் எல்லாத்துக்கும் சமாதானங்கள் வழி வகை சொல்ல சொல்வளம் இருக்கிறதே.
சரி. ஆனால், இது எப்படி நேர்ந்தது? 27.12.2012 அன்று நான் என்னை அழைத்துச் செல்ல அவர்கள் சொன்னபடி கார் வரும் என்று காத்திருந்தேன். மாலை 5.00, 5.30 என்று நேரம் சென்றதே ஒழிய காரும் இல்லை. யாரிடமிருந்தும் ஏதும் செய்தியும் இல்லை. அழைப்புக் கடிதத்தில் கண்டிருந்த ரவி சுப்பிரமணியம் என்பவருக்கு டெலிபோன் செய்து கேட்டேன். வேறு யாரோ பதில் சொன்னார்கள். “சாரி. அது கான்ஸல் ஆகிவிட்டது. ஸ்ரீனிவாஸ்க்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அதற்காக எல்லோரும் அலைந்து கொண்டிருக்கிறோம். உங்களுக்கு கடிதம் வரும்” என்று சொன்னார்கள்.
அதன் பிறகு சில வாரங்களோ மாதங்களோ கழித்து பங்களூர் பத்திரிகைகளில் ஸ்ரீனிவாஸை கௌரவிக்கும் விழாக்கள் ஒன்றிரண்டு நடந்ததாக செய்தி வந்தது. அதில் அம்ருதவர்ஷிணி இல்லை. பின்னர் சில நாட்கள் கழித்து பி.பிஸ்ரீனிவாஸ் மறைந்துவிட்ட (14.4.2013) செய்தியும் எல்லா பத்திரிகைகளிலும் வந்தது. என்னுடைய ஜாதகத்தின் பாதிப்பு ரொம்ப தூரம் தாக்கும் வலுவும் கொண்டது போலும் என்று நினைத்துக்கொண்டேன். பின்னர் எல்லாம் மறந்தும் விட்டது.
பி.பி ஸ்ரீனிவாஸுக்கு விழா என்று பேசி ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது அவரே இல்லையென்றால், அவரை வைத்துச் செய்யப்படும் விழா, ஸ்ஹஸ்ர சந்திர தரிசனம் கொண்டாடப்படுவதற்கு என்ன அர்த்தம் இருக்கும்? இது பற்றி எந்த நினைப்பும் இல்லாது முற்றிலும் மறந்து விட்டபோது, மே மாதம் ஒரு நாள் வாசல் மணி அடிக்க வழக்கம் போல் கதவைத் திறந்தால் முன்னால் நின்றவர் ”நான் தான் ரவி சுப்பிரமணியம், அம்ருதவர்ஷிணி யிலிருந்து, பி.பி ஸ்ரீனிவாஸ் விஷயமாக வந்தேன் என்று சொல்லிக்கொண்டு. இந்த இடத்தையும், உங்களையும் தெரிந்து அறிமுகம் செய்துகொள்ளத் தான் வந்தேன். கேஎஸ் எல் ஸ்வாமி, அவரும் ரவி தான். அவர் வந்து அழைப்பார்” என்று சொல்லிவிட்டுச் சென்றவர் மறு நாள் கே எஸ் எல் ஸ்வாமி வந்தார். அவர் தான் இந்த விழாவுக்கு முழு பொறுப்பாளர். சினிமா டைரக்டர் என்றும் பல படங்களை இயக்கியவர் என்றும் கன்னட சினிமா உலகில் தெரிந்தவர் என்றும் சொன்னார்கள். அவரிடம் நிஜமான ஒரு பெரிய மனித கம்பீரம் இருந்தது. நமஸ்காரம் என்றார். மன்னிக்க வேண்டினார். காலைத் தொட்டு வணங்கினார். எல்லாம் எனக்குப் பழக்கமில்லாததால், சங்கடமாக இருந்தது. சகஜமாக மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் மிகுந்த பண்பாளர். சொன்னார்:
”பி.பிஸ்ரீனிவாஸ் விழா நடத்த இருக்கிறோம். அவர் இருந்த போது பெரிய அளவில் நடத்த இருந்தோம். நம் துரதிர்ஷ்டம் அவர் மறைந்து விட்டார். இருந்தாலும் விழாவும் கௌரவிப்பும் இருக்கும். பெரிய அளவில் இல்லாவிட்டாலும். முடிந்த அளவில் நடத்துவோம். அது தான் தாமதமாகிவிட்டது. நடப்பது அதே பாலஸ் க்ரௌண்ட்ஸில் தான். 7.5.2013 அன்று. 4.00 மாலை காரோடு வருவேன். உங்களை அழைத்துச் செல்ல. நடந்து விட்டதற்கு மிகவும் வருந்துகிறோம். ஆனால் இதெல்லாம் இப்படி நடக்கும் என்று யார் கண்டார்கள்.?” என்று சொன்னார். அத்தோடு ஒரு அழைப்பிதழையும் கொடுத்தார். 4.5.2013 அன்றைய தேதி தான். கௌரவிக்க இருந்த மற்ற அனைவரிடமும் போய் நேரில் அழைக்க வேண்டும்.
இப்படியெல்லாம் கூட ஆச்சரியம் நிகழ்கிறது. எல்லாவற்றையும் விட அவர்களுக்கு பி.பி ஸ்ரீனிவாசிடம் இருந்த பிடிப்பும் ஈடுபாடும் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. பி.பி ஸ்ரீனிவாஸ் என்ற பெயர் கேட்டதும் என மனதில் எழும் ஒரு பிம்பம் சென்னைக்கு நான் வந்த புதிதிலிருந்து பலமுறை நன்பர்களுடன் உடுப்பி ட்ரைவ்-இன்னுக்கு போனதுண்டு. நண்பர்களுடன் தான். அப்போதெல்லாம் ஒரு மூலையில் சுற்றியுள்ள மேஜைகள் சில காலியாக இருக்க, ஸ்ரீனிவாஸ் தனித்து ஒரு இடத்தில் உட்கார்ந்திருப்பார். அவருக்கு என எப்போதும் காட்சி தரும் உடை உண்டே. ஒரு மைசூர் மகாராஜா தலைப்பாகை மாதிரி ஒன்று. கோட். பக்கத்தில் ஒரு தோள்பை நிறைய புத்தகங்களோ நோட்டோ காகிதங்களோ, என்னவோ. அவர் பாட்டுக்கு ஏதோ எழுதிக்கொண்டிருப்பார். யாரும் அவருடன் பேசியது கிடையாது. அவர் இருக்கும் மேஜைக்குப் பக்கத்து மேஜையில் கூட யாரும் சாப்பிட உட்கார்ந்து நான் பார்த்ததில்லை. ”ஒரு பெரிய மனிதர், வயதானவர் ஏதோ மும்முரமாக சிந்தித்துக்கொண்டும் இடையில் எழுதிக் கொண்டுமிருக்கிறார். அவரை யாரும் தொந்திரவு செய்யக் கூடாது, தனித்திருக்க விடுவோம்,” என்ற நாகரீகம் கூட இங்கு பார்க்கக் கிடைக்கிறதே என்று நான் வியந்து போவேன்.
அந்த மனிதருக்குத் தான், இப்போது, பத்து வருடங்கள் கழித்து ஒரு பெரும் பாராட்டு விழா கன்னட ரசிகர்களால் பங்களூரில் நடத்த ஏற்பாடு நடக்கிறது. அவர் மற்ற மொழிகளுக்கும் தன் பாடல்கள் மூலம் பங்களித்து இருக்கிறார், ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை இரண்டு தலைமுறைகளாகப் பெற்றிருக்கிறார். நமக்கு இருக்கும் தமிழ்ப் பற்றுப் போல் சொல் அளவில் வெற்றுப் பெருமை அளவில் இல்லாது வெகு தீவிரமாக வெறி என்று சொல்லக் கூடிய அளவில் பொது வாழ்வில் காட்டிக்கொள்ளும் கன்னட மக்களிடையே பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பது எனக்கு வியப்பாகவே இருந்துள்ளது.
இவ்வளவுக்கும் அவர் ஆந்திராவில் காக்கிநாடாவில் பிறந்தவர். முதலில் அவர் பாடியது ஹிந்தி படத்தில் 1952-ல் கீதா தத்தோடு. தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளில் நிறைய பாடி பின்னணிப் பாடகராக பேர் பெற்றிருந்தாலும், 1956-ல் ராஜ்குமாருக்கு குரல் கொடுத்தவர்.நிறைய சினிமா ஹீரோக்களுக்கு அவர் குரல் கொடுத்திருந்தாலும், தமிழில் ஜெமினி கணேசன், கன்னடத்தில் விஷ்ணுவர்தன், கல்யாண்குமார் போன்றோருக்கும் பாடியிருந்தாலும், கன்னட சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரே, “நான் வெறும் சரீரம் தான். என் சாரீரம் பி.பி.ஸ்ரீனிவாஸ் தான்” என்று மனம் திறந்து சொல்லும் அளவுக்கு ஈடு இணையற்ற ஒரு பாராட்டைப் பெறும் புகழ் பெற்றிருந்தவர். லதா மங்கேஷ்கர்,பானுமதி, பி.சுசீலா, ஜானகி, எல் ஆர் ஈஸ்வரி என்று ஒரு பெரிய அணிவகுப்பு அவருடன் பாடிய பாடகிகள். எனக்கு அவர் பாடிய கண்ணதாசனின் பாடல் “காலங்களில் அவள் வசந்தம்” தான் என் காதுகளில் பி. பி ஸ்ரீனிவாஸ் பெயர் சொன்னதும் ரீங்கரிக்கும். இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம், இவ்வளவு பெருமை, இவ்வளவு நீண்ட கால பின்பாட்டு வாழ்வு அவர் காலத்தில் வேறு யாருக்காவது கிட்டியுள்ளதா என்பது தெரியவில்லை. அவர் தான் உடுப்பி ட்ரைவ் இன்னில் இதோ தனித்து ஒரு ஜோல்னாப் பை நிறைய காகிதங்களைத் திணித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார், யார் பற்றியும் அவருக்கு சிந்தனை இல்லாது, சுற்றி இருக்கும் யாருக்கும் அவர் பற்றிய சிந்தனை இல்லாது கட் அவுட்டுகளே தம் பெருமையைச் சொல்வதாக மதம் கொண்ட ஒரு கடைத் தர கலாசாரம் வளர்த்துள்ள தமிழ் நாட்டில்.
பிறந்தது காக்கிநாடாவில். பாட ஆரம்பித்தது ஹிந்தியில். பாடியது எல்லா மொழிகளிலும், கன்னடத்தில் அதிகம் பாடியது என்றாலும். வாழ்வதோ, சென்னையில், சைதாப்பேட்டையா, சி.ஐ.டி. காலனியிலா? மற்ற எல்லோரையும் விட கொண்டாடப்படுவது கன்னடப் பித்து கொண்ட கன்னடியர்களால். இது என்ன இப்படி? என்ற வியப்பைத் தவிர வேறு ஏதும் தோன்றவில்லை.
இம்முறை சொன்னது போல் கார் வந்தது. தோள் கொடுக்க என் பையன் கணேஷையும் அழைத்துக்கொண்டேன். பாலஸ் மைதானத்தில் உள்ளே நுழைந்தால் ஒரு பெரிய கொட்டகை திறந்த மைதானத்தில் எழுப்பப் பட்டிருந்தது. வழக்கமாக அங்கு இருக்கும் தாற்காலிக கடைகளை அகற்றி எழுப்பபட்ட கொட்டகை என்றார்கள். மேடையும் மிகப் பெரியது. மேடை முழுதும் வாத்தியங்கள் அடைத்திருந்தன. பி.பிஸ்ரீனிவாஸின் உருவம் பிரம்மாண்டமாக மேடைக்குப் பின் இருந்த திரையில். பி.பி. ஸ்ரீனிவாஸின் உருவம் மிக பெரிய அளவில் தீட்டப்பட்டிருந்தது.
இடையில் அவசரத்துக்கு வெளியே போய் வர நேரிட்டால் என்ன செய்வது என்று அரங்கத்தின் முதல் வரிசை இருக்கைகளின் வலது கோடியை தேர்ந்தெடுத்து அமர்ந்தோம் நானும் கணேஷும். முதல் வரிசையின் நடு இருக்கைகளில் கௌரவிக்கப்பட இருந்த பல பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர். நான் என் இருக்கையில் அமர்ந்ததும் ரவி என்னை அணுகி ”வாருங்கள், வெங்கட சுப்பையாவும் மற்றவர்களும் வந்திருக்கிறார்கள். அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்” என்று அழைத்துச் சென்றார். வெங்கட சுப்பையா 100 வயது நிரம்பியவர் என்றார்கள். கன்னட நிகண்டு ஒன்று அவரது மகத்தான காரியம் என்று சொன்னார்கள்.
(ரவி, விழா பொறுப்பாளர் என்னை கௌரவிக்கப்படுபவரில் ஒருவருக்கு அறிமுகப்படுத்துகிறார். (அனேகமாக இவர் தான் வெங்கடசுப்பையாவோ என்னவோ)
மு.ச. க்ரிஷ்ணமூர்த்தி, ஹிந்தி நாவலாசிரியர், டாக்டர் கே.டி. பாண்டுரங்கி என்னும் ஒரு சமஸ்க்ரித பண்டிதர், வி.கே. ரங்காராவ் என்னும் சங்கீத விற்பன்னர் ஹஸ்ரத் நயீம் இக்பால் என்னும் ஹிந்தி, உருது எழுத்தாளர், பேராசிரியர் சேஷகிரி ராவ் என்னும் ஆங்கில நாவலாசிரியர், ஹோ. ஸ்ரீனிவாஸய்யா என்னும் காந்தியானாவில் அறிஞர். கானகலா பூஷண் டாக்டர் ஆர். கே. பத்மனாபா என்னும் இன்னொரு சங்கீத விற்பன்னர், இப்படி ஒரு பன்னிரண்டு பேர் என்னையும் சேர்த்து கௌரவிக்கப் படுவோராக இருந்தனர்.
பின்னர் சற்று நேரம் கழித்து (கலைஞர் சொற்களில், கன்னடத்து பைங்கிளி) சரோஜா தேவியும், உடன் வந்தவர் ஜெயந்தி என்று சொன்னார்கள், அவரோடு வந்து காலியாக இருந்த என் பக்கத்து இருக்கைகளில் உட்கார்ந்து கொண்டார்கள். அவர்கள் வந்ததும் ரசிகர், ரசிகைகள் கூட்டம் அவரைச் சுற்றியும் வரிசையில் நின்று அவரை தரிசித்து குசலம் விசாரிக்கத் தொடங்கினர். பிறகு அவர்களையெல்லாம் விரட்ட வேண்டி வந்தது. தரிசனத்துக்கு எவ்வளவு நேரம் வேண்டும்?.
(அரங்கம். முதல் வரிசையில் இடது கோடியிலிருந்து, கணேஷ், நான், ஜெயந்தி, சரோஜா தேவி)
கிட்டத் தட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, ஒரு பெரிய பின்னணி பாடகர் நக்ஷத்திரக் கூட்டம் வந்தது. அவர்களை ரவி வரவேற்று அழைத்து வந்தார்.. ஜேஸுதாஸ், எஸ் பி பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம், இன்னும் எத்தனையோ பேர் எனக்கு தெரியாத பேர்கள். எல்லோரும் மேடையின் கீழே பி.பி. ஸ்ரீனிவாஸின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நானும் கணேஷும் அங்கு இருந்தது இரண்டரை அல்லது மூன்று மணி நேரம் இருக்கும். மேடை முழுதும் வாத்தியங்கள் பெரிய ஆர்க்கெஸ்ட்ரா ஸ்ரீனிவாஸ் பாடிய பாட்டுக்கள் தொடர்ந்து பாடப்பட்டன. பி.பி ஸ்ரீனிவாஸின் பதிவு செய்யப்பட்ட கன்னட பேச்சும் பாட்டும் இடையில் ஒலித்தன. வி எஸ் எல் ஸ்வாமி என்றும் ரவி என்றும் அறியப்பட்டவர் தான் நிகழ்ச்சிகளை நடத்தினார். வெகு அழகாக கன்னடத்தில் பேசினார்.
( பி.பி.ஸ்ரீனிவாஸின் குமாரர்கள் இருவர் கௌரவிக்கப்படுகிறார்கள்.)
மிக உற்சாகத்துடனும் பெருமிதத்துடனும் அவர் ஸ்ரீனிவாஸ் தொடங்கி அவருடைய அங்கு பாடப்பட்ட ஒவ்வொரு பாட்டைப் பற்றியும், அங்கு வந்திருந்த ஒவ்வொருவர் பற்றியும் பேசியது சந்தோஷமாக இருந்தது. அவர் உணர்ந்த பெருமிதம் தான் அவர் வார்த்தைகளில் இருந்ததே தவிர வெற்று அலங்காரங்கள் அல்ல. ஜேஸு தாஸ், வாணி ஜெயராம், பாலசுப்பிரமணியம் இன்னும் மற்றவர்கள் இடைவிட்டு இடைவிட்டு அடிக்கடி வந்து பாடினார்கள். ஒரு சில பாட்டுககளுக்குப் பிறகு, கௌரவிக்கப்பட இருந்தவர்கள் மேடைக்கு அழைத்து வரப்பட்டு நக்ஷத்திர பாடகர்கள், சரோஜா தேவி, ஜெயந்தி, ரவி உட்பட எல்லோரும் புடை சூழ ஒவ்வொருவரும் கௌரவிக்கப்படுபவரை கால் தொட்டு வணங்கி, சால்வையோ, மாலையோ, பணமுடிப்போ, ஷீல்டோ கொடுத்தனர்.
(எஸ்.பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம், சரோஜா தேவி, ஜேசுதாஸ், நீல நிற அங்கியில் இருப்பவர் ரவி.)
என் முறை ஆறாவதோ ஏழாவதோவாக இருந்ததால்,. அது வரை நான் கண்டதிலிருந்து ஒவ்வொருவருக்கும் அந்த மரியாதை நடந்ததைப் ;பார்த்தேன். கௌரவிக்கப்பட இருந்த அத்தனை பேருக்கும் இந்த மரியாதை நடந்திருக்கும்.. கௌரவிக்கப்பட்டவர் யார் யார் என்று ஒரு சிலருக்கே தெரிந்திருக்கும். ஆனால் பரிசுப் பொருட்களைக் கால்தொட்டு வணங்கிகொடுத்தவர்கள் பெரும் புகழ் பெற்றவர்கள். உலகத்தையே தம் ரசிகர்களாகக் கொண்டவர்கள். பி.பி. ஸ்ரீனிவாஸைக் கௌரவிக்க வந்தவர்கள். ஜேசுதாஸ், பாலசுப்பிரமணியம் எல்லாம் ஒரு நிகழ்ச்சிக்கு வர ஒரு லக்ஷம் பெறுபவர்கள். இந்த நிகழ்ச்சிக்கு அவர்கள் ஒரு ரூபாய் கூட கேட்கவில்லை. பெறவில்லை என்று.
நாங்கள் அங்கு இருந்தது அதிகம் மூன்று மணிநேரம் தான். என் கௌரவிப்பு நடந்ததும் காருக்கு ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் போகலாம். கடைசி வரை இருக்க வேண்டிய அவசியமில்லை என்று ரவி எனக்கு அனுமதி தந்தார். இரவு வெகு நேரம் பன்னிரண்டு மணி வரை நிகழ்ச்சிகள் நீளும் பின்னர் எல்லோரையும் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று என்னை அழைத்துச் சென்ற ட்ரைவர் தந்த தகவல்.
பி.பி ஸ்ரீனிவாஸைக் கௌரவிக்க வந்த, எந்தப் பொருளும் பெற்றுக்கொள்ளாத அவ்வளவு பின்னணிப் பாடகர் பாடகிகளும் நடிகைகளும் அந்த ஐந்து மணி நேரமும் மேடையில் பாடவேண்டும், கௌரவிக்க வேண்டும். அவர்களுக்குத் தான் காக்கிநாடாவில் பிறந்து, சினிமாவில் பலருக்கும் பின்னணி பாடி, சென்னையில் வாழும் பி.பி.ஸ்ரீனிவாஸிடம் எவ்வளவு விஸ்வாசமும், பாசமும்? அதைக் காட்ட ஒரு சந்தர்ப்பம் வரும்போது என்னவெல்லாம் செய்கிறார்கள்! கன்னட ரசிகர்களும் ஸ்ரீனிவாஸை எப்படியெல்லாம் நினைவு கொண்டு கௌரவிக்கிறார்கள் எனறு எனக்கு ஒரு கோடி காட்டியது அன்றைய நிகழ்ச்சி.
(நஸீம் இக்பால் கௌரவிக்கப் படுகிறார்)
உடுப்பி ட்ரைவ் இன்னில் தன்னை மறந்து, தன்னைச் சுற்றிய அந்த உடுப்பி சூழலையும் மறந்து அமைதியோடு, அடக்கத்தோடும், தன்னில் ஆழ்ந்திருந்த ஸ்ரீனிவாசையும் நினைத்துக்கொண்டேன். மனதை நெகிழ்விக்கும் கணங்கள் அவை.
(ஒன்று சொல்ல வேண்டும். பரிசுப் பணமும் ஒரு பட்டு சுருக்குப் பையில் இருந்தது. அதில் ஒன்பது ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள். பின் ஆயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்கள். 15 பேருக்கோ என்னவோ ஒவ்வொருவருக்கும் இப்படிக் கொடுக்க பத்து ரூபாய் நாணயங்களை எங்குதான் எத்தனை பாங்குகளுக்குச் சென்று சேகரித்தார்களோ. அந்த மைசூர் ராஜா தலைப்பாகையைத் தான் என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை).
விழா நடந்து சில நாட்களுக்குப் பிறகு ரவிக்கு நான் டெலிபோன் செய்து கேட்டேன்.”எனக்கு அந்த விழாவில் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றைத் தர ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று. ரொம்ப சந்தோஷத்துடன் ”எல்லாம் முடிந்தவுடன், நானே வருகிறேன். உங்களுக்குத் தேவையானதைத் தருகிறேன்” என்றார். இப்படி ஒரு சில தடவைகள் கேட்டு அதே பதில் தான் வந்தது. ஓரிரு தடவைகள், அவரே என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “இன்று ZEE kannada வில். அந்த விழா நிகழ்ச்சிகள் ஒளி பரப்புவார்கள். பாருங்கள்” என்றார். வீட்டில் எல்லோரும் பார்த்தார்கள். அன்று பஙகளூர் வந்திருந்த சம்பந்திகளும் தான். அன்று என் பெருமையை சாட்சி பூதமாக ஸ்தாபிக்க முடிந்தது. ஆனால், முழுதுமாக எல்லாமே பாட்டுக்கள் தான். கௌரவிப்பு ஒவ்வொன்றும் இரண்டு நிமிடங்களுக்கு சுருக்கப்பட்டிருந்தது.. அதுவே 4 மணி நேரமாக நீண்டது. பின்னும் ஒரு நாள் வஸந்த் டிவியில் பாருங்கள். என்றார். அதுவும் பி.பி. ஸ்ரீனிவாஸ் நினைவு விழா தான் என்றாலும், பெங்களூர் நிகழ்ச்சி அல்ல. புதிது. வேறானது. அரங்கில் முதல் வரிசை இருக்கையில் ரவி இருந்தார். வஸந்த் டிவி வஸந்தும் இருந்தார். பின்னர் இருமுறை, அந்த விழாவிற்கு வந்து கௌரவிக்க முடியாத முதுமையிலோ நோய்வாய்ப்பட்டோ இருந்தவர்களை கர்நாடகாவின் ஏதோ ஒரு கிராமத்து மூலையில், பின்னர் ஹைதராபாது போய் தாம் சென்று கௌரவித்து வந்ததாகச் சொன்னார். இப்படி பல காரணங்களால் தாமதம்.
கடைசியில் ஒரு நாள் ரவி சுப்பிரமணியம் தன்னுடன் ஒரு உதவியாளரை அழைத்துக்கொண்டு வந்து தன் லேப் டாப்பில் பதிவாகியிருந்த பங்களூர் பாலஸ் மைதான விழாவின் 500க்கும் மேற்பட்ட படங்களைக் காட்டி, “ எது வேண்டுமோ சொல்லுங்கள். இப்பொதே ஒரு CD யில் பதிவு செய்து தருகிறேன்,” என்றார். 35 படங்களோ என்னவோ பதிவு செய்து கொடுத்தார்.
(அவற்றில் சில படங்கள் தான் மேலே உள்ளவை. விழா நிகழ்ச்சியின் படங்கள் சில இத்துடன், என் வார்த்தைகளை சாட்சியப்படுத்தும்).
. இனி கடைசியாக சொல்ல விரும்பியதைச் சொல்லி விடுகிறேன்.
இந்த விழா என்னைமிகவும் பாதித்த ஒன்று. தம் வாழ்வையும் மற்ற விஷயங்களையும் பொருத்த விஷயங்களில் மிக தீவிரமாக இருப்பவர்கள், ஒரு அநியாய எல்லைக்கு இட்டுச் செல்பவர்கள் கன்னடியர்கள் என்பது என் எண்ணம். தமிழர்களோ தம் சுய நலத்துக்காக தமிழ் நாட்டையே விற்றுக் கொள்முதல் செய்துவிடும் அரசியல் தலைவர்களைக் கொண்டது தமிழ் நாடு. இருந்தாலும் இதற்கு நேர் எதிராக தம் தமிழ்ப் பற்றைப் பற்றி வெற்று தகர டப்பா சத்தம் எழுப்பும் அரசியல் வாதிகள் நம்மவர்கள். இந்த நேர் எதிர்நிலை கொண்ட குணங்களைச் சொல்ல இது ஒரு சந்தர்ப்பம் எனக்கு.
ஸ்ரீனிவாஸ் தெலுங்கர். பின்னணிப் பாடகர். எல்லா மொழிகளிலும் பாடியவர்.இருப்பினும் தீவிர கன்னடப் பற்றுக்கொண்டவர்கள் அவரைக் கொண்டாடினர். இம்மாதிரி ஒரு பின்னணிப் பாடகர் என்ன, எவரையாவது தமிழ் நாடு கொண்டாடியுள்ளதா? என்று சற்று எண்ணிப் பார்த்தல் நல்லது. ஒரு பெரிய விழா ஒன்று கொண்டாடப்பட்டது. கருணாநிதியின் காலத்தில். பக்கத்து மாநில நடிகைகள், தமிழ் சினிமாவில் நடித்தவர்கள் எல்லாம் ஒரு பெரியகூட்டத்தில் உட்காரவைக்கப்பட்டனர். அவர்களில் ஒரே ஒருவரைத் தான் மு.கருணாநிதி “கன்னடத்துப் பைங்கிளி” யும் வந்திருக்கிறார்” என்றார். வேறு யாரையும் அவர் குறிப்பிடவில்லை. என் நினைவு சரியெனில் டி.எம். எஸ்ஸும் அங்கிருந்தார். அவருக்கு ஒரு வருத்தம். தான் அங்கிருந்தும், தான் பாட அழைக்கப் படவில்லை. மற்ற எத்தனையோ பேருக்கு வாய்ப்பு கொடுக்கப் பட்டது என்று அவருக்கு வருத்தம். டி.எம்.எஸ் மு.க. அழகிரிக்கு மிக பிடித்தமான பாடகர் என்றும். எப்போதும் டி.எம்.எஸ் பாட்டுக்களையே காரில் போகும் போதும் கேட்டுக்கொண்டிருப்பார் என்றும் செய்திகள் படித்திருக்கிறேன்.
நடத்தப்பட்ட விழாவைப் பற்றிய ஒரு சித்திரம் புகைப்படங்களைப் பார்த்தவர்களுக்கு கிடைத்திருக்கும். “ஸ்ரீனிவாஸுக்கு பெரிய அளவில் பாராட்டு நடத்த நினைத்திருந்தோம். ஆனால் அவர் மறைந்துவிட்ட பிறகு ஒரு சிறிய அளவிலாவது நடத்த தீர்மானித்துள்ளோம்,” என்று விழா ஏற்பாடு செய்த ரவி சொன்னார். இது சிறிய அளவு என்கிறார் அவர். ஒவ்வொரு முறை பாடப்போகும் பாட்டு பற்றியும் ஸ்ரீனிவாஸ் பற்றியும் நான் அங்கிருந்த இரண்டரை அல்லது மூன்று மணி நேரமும் அவர் எவ்வளவு பரவசத்துடன் லயிப்புடன் பேசினார் நான் உணர்ந்தேன்.
அங்கு வந்து ஸ்ரீனிவாஸுக்கு தம் நன்றிக்கடனைச் செலுத்த வந்த பின்னணி பாடக நக்ஷத்திரங்கள் எவரும் பணம் வாங்கிக் கொள்ளவில்லை. ஸ்ரீனிவாஸுக்கு சரி. ஆனால் அவர் பெயரில் கௌரவிக்கப்பட்ட ஸ்ரீனிவாஸின் குமாரர்களுக்கும், மற்ற மொழிக்காரர்களுக்கும் (மொத்தம் பதினைந்து பேர்) அவ்வளவு பேருக்கும் ஒவ்வொருத்தரையும் பாதம் தொட்டு வணங்கி ஆளுக்கொன்று என பரிசுப் பொருள் கொடுத்து வணங்குவது என்பது கௌரவிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் அலல, இது ஸ்ரீனிவாஸுக்குச் செய்யும் மரியாதை என்று ஜேசுதாஸிலிருந்து சரோஜா தேவி வரை அத்தனை பேரும் செய்தது, ஒரு உயரிய கலைப் பண்பாடு, நாகரீகம் என்று எனக்குப் பட்டது. கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் அவர்கள் மேடையில் இருந்திருக்கிறார்கள். இந்த மாதிரி ஒரு நிகழ்வை தமிழ் நாட்டில் எதிர்பார்த்திருக்க முடியுமா?, இந்த பண்பு நம்மிடம் உள்ளதா? என்று நாம் சற்று நினைத்துப் பார்க்கலாம்.
எனக்கு பரிசு பெற்ற மற்றவர் யார் என்று தெரியாது. அங்கு சொல்லப்பட்ட பெயரும் செய்தியும் தவிர. அது போல என்னையும் அவர்களுக்குத் தெரியாது. ஏன்? (நம்மூரிலேயே தெரியாது என்னை. தெரிந்த வர்களும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளமாட்டார்கள் என்பது ஒரு கூடுதல் தகவல்) நான் இதையெல்லாம் சொல்லக் காரணம் நான் விளம்பரம் பெற்றேன் என்பதல்ல. ஸ்ரீனிவாஸ் பெயரைச் சொல்லி என்னையும் சேர்த்து ஒரு பதினைந்து பேர் அன்று ஒரு சில மணிநேர விளம்பரத்தை எங்களுக்குள் பகிர்ந்து கொண்டோம் அவ்வளவே.
இங்கு கவனிக்க வேண்டியது காக்கிநாடாவிலிருந்து வந்து தம் சினிமாவுக்கு தன் பங்களிப்பு செய்த ஒருவரை, சென்னையில் வாழும் ஒருவரை, கன்னட சினிமாக் காரர்கள் எப்படி கௌரவிக்கிறார்கள், மதித்து மரியாதை செய்கிறார்கள் எவ்வளவு உயர்வான இடத்தில் வைத்துள்ளார்கள் என்பதைச் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு விஷயத்திலும் விழா ஏற்பாட்டாளர்கள் எவ்வளவு சிரத்தை எடுத்துக்கொண்டார்கள். என்பதைக் கவனிக்கவேண்டும். ரூ 10,000 -க்கு ஒரு காசோலையைக் கொடுத்து விடுவது எவ்வளவு சுலபம்? ஒவ்வொருவருக்கும் குறைந்தது ஆயிரம் ரூபாய்க்காவது நாணயமாகக் கொடுக்கவேண்டும் என்று 12,000 ஆயிரமோ 15,000 ஆயிரமோ நாணயங்கள் சேர்த்து ஒரு பணமுடிப்பாகக் கொடுக்க வேண்டும் என்று என்ன அக்கறை? ஒவ்வொருவராக வீடு சென்று அழைப்பிதழ் கொடுத்து கால்தொட்டு வணங்கிச் செய்வது தான் பண்பு என்று ஒரு சினிமா டைரக்டருக்கு தோன்றியிருக்கிறது. நாம் சினிமா என்றால் விளம்பரம், ரசிகர், பாலாபிஷேகம், பணம் என்று தான் நமக்கு காட்சி தருகிறதே தவிர பண்பும் நாகரீகமும் கொண்டதாக நினைக்கிறோமோ.
என் பெயர் ஸ்ரீனிவாஸின் கௌரவிப்பின் பிரதிபலிப்பில் கவனிக்கப்பட்டது. இதில்பெருமைப் பட வேண்டியது இப்படி ஒரு சந்தர்ப்பம் நேரும்போது, என் பெயரை நினைத்துச் சொன்ன ஒருவர் இங்கிருந்திருக்கிறார் என்பது தான் எனக்கு மகிழ்ச்சி தந்த விஷயம். அதற்கும் மேல் எனக்கு இதில் சிறப்பு ஏதும் இல்லை.
என் கருத்துக்கள் கவனிக்கப்படுகின்றனவா, அதனால் சூழல் மாற்றம் பெற்றுள்ளதா, , தமிழ் கலைகளில், அறிவார்த்த சூழலில் மாற்றம் என் கருத்துக்களால் விளைந்துள்ளதா என்பது தான் என் அக்கறை. அது நிகழ இல்லை என்பது தெளிவு.
ஒரு எளிய உதாரணம். ஞானபீட பரிசு அகிலனுக்கும் ஜெயகாந்தனுக்கும் கிடைத்துள்ளது. சரி. அதன் விளைவுகள் என்ன? தமிழ் எழுத்துலகில்? அவர்கள் பணமும் விளம்பரமும் பெற்றார்கள். அகிலன் தான் கட்டிக்கொண்டிருந்த வீட்டின் கடனை அடைத்தார் என்பது அவர் சொல்லித் தெரிந்தது. ஒரு பரிசின் பாதிப்பைப் பெருமையைச் சொன்னேன். அவரவர்க்குள்ள நிறையோ குறையோ அப்படியேதான் இருந்து கொண்டிருக்கிறது
இதற்கு நேர் எதிராக, அருந்ததி ராய்க்கு புக்கர் பரிசு கிடைத்த பிறகு, அந்தப் பரிசின் பாதிப்பைப் பார்க்கலாம். அவர் எது பற்றியும் என்ன சொல்கிறார் என்று இந்தியா முழுதும் எல்லா பத்திரிக்கைகளும் ஊடகங்களும் வாய்பிளந்து காத்திருக்கின்றன. அந்தக் கருத்துக்கள் பற்றிய நம் கருத்து வேறு விஷயம்.
கடைசியாக, இந்த கௌரவிப்பு பற்றி – நான் சொல்லித்தானே ஐயா உங்களுக்குத் தெரிந்தது? – நான் சொன்னது, கன்னடியர்கள் ஸ்ரீனிவாஸை இப்படியெல்லாம் பெருமைப்படுத்துகிறார்கள், நாம் என்ன செய்கிறோம், நம்மைப் பெருமைப் படுத்தியவர்களை, நாம் எப்படி கௌரவிக்கிறோம் என்று சிந்திக்கத் தூண்டத்தான் நான் இவ்வளவும் எழுதியது. ஆனால் கடைசியில் நான் என் கருத்தில் தோல்விதான் அடைந்துள்ளேன். என் பெருமையை நான் அடைந்த கௌரவத்தைச் சொல்லிக்கொண்டதாகத்தான் கதை முடிந்துள்ளது.
டி.எம்.ஏஸ் -ஐ தனக்குப் பெருமை சேர்க்க அழைத்து ஆயிரம் பேருடன் ஒருவராக நாற்காலியில் உட்கார வைத்து அவரை வருத்தத் துடன் “ எனக்குப் பாட ஒரு சான்ஸ் கொடுக்கலையே” என்று வீடு திரும்ப வைத்துள்ளது நாம். நம் குணம். அவருக்குள்ள பெருமை அவருக்கு. ஆனால், அவரைச் சிறுமைப் படுத்திய சிறுமை நமது தான்
ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். எது மிக முக்கியமோ அது மறந்து போகிறது.
ஏதோ எங்களால் முடிந்த சிறிய அளவிலாவது என்று ரவி சொன்னது தான் நீங்கள் பார்க்கும் சிறிய அளவு. ஸ்ரீனிவாஸ் உயிருடன் இருந்திருந்தால் அவரகள் திட்டமிட்ட பெரிய அளவு என்ன என்பது நம் கற்பனைக்கு விடப்படவேண்டியது.
இத்தனையும் ஸ்ரீனிவாஸின் ரசிகர்களால்,தனி மனிதர்களால், தனிமனிதர்களின் ஸ்தாபனங்களால் நடத்தப்பட்ட விழா. இதில் அரசின் தலையீடோ பண உதவியோ, அரசியல் கட்சிகளின், அரசியல் தலைவர்களின் ஆதரவோ, பிரசன்னமோ கொஞ்சம் கூட கிடையாது. அரசியல் வாதிகளின், அரசின், அதன் பகட்டின், டாம்பீகத்தின் வாடை நாம் அரங்கத்தின் உள்ளே நுழைவதற்கு முன்னேயே நம் மூக்கைத் துளைக்கத் தொடங்கிவிடும். அது அறவே இல்லாத ஒரு விழா. கன்னட சமூகத்தின் ரசனையின் வெளிப்பாடு இது முழுக்க முழுக்க.
- டௌரி தராத கௌரி கல்யாணம் ……16
- மருத்துவக் கட்டுரை மன உளைச்சல்
- நேர்முகத் தேர்வு
- நீங்காத நினைவுகள் 15
- பிரேதத்தை அலங்கரிப்பவள்
- ஜீவி கவிதைகள்
- சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 34
- புகழ் பெற்ற ஏழைகள் 21
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -38 என்னைப் பற்றிய பாடல் – 31 (Song of Myself)
- அயோத்தியின் பெருமை
- தாகூரின் கீதப் பாமாலை – 79 கவித்துவ உள்ளெழுச்சி .. !
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 24
- தோரணங்கள் ஆடிக்கொண்டிருக்கட்டும்.
- பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று
- கூடு
- பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!
- தொல்காப்பியம், ஆந்திர சப்த சிந்தாமணியில் – வினையடிகள்
- தூங்காத கண்ணொன்று……
- சாகச நாயகன் – 4. ஷீ தாவ் – ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளராக
- முக்கோணக் கிளிகள் [2]
- நாவற் பழம்
- திட்டமிட்டு ஒரு கொலை
- பிரபஞ்சத்தை உருவாக்கும் பிண்டம், கரும் பிண்டம், எதிர்ப் பிண்டம் [Matter, Dark Matter, Anti-Matter]
- காவ்யா வெளியிட்டு விழா – திலகபாமா கவிதைகள் வெளியீட்டு விழா
- எங்கள் தோட்டக்காடு