டௌரி தராத கௌரி கல்யாணம் ……19

This entry is part 7 of 22 in the series 15 செப்டம்பர் 2013

 

ஜெயஸ்ரீ ஷங்கர் , புதுச்சேரி .
 
 

நாட்கள் நகர்ந்து மாதங்களாகக் தினசரி காலண்டரில் தேய்ந்து கொண்டிருந்தது.

பயத்தில் உறைந்து போயிருந்தாள் கௌரி. இன்னும் சிறிது நாட்களில் , இரண்டு குழந்தைகளை ஒரே சமயத்தில் பெற்றெடுக்க வேண்டும். ஒரு பக்கம் மகிழ்வாக இருந்தாலும், வயிற்றில் இருக்கும் இந்தச் சுமைகள் எப்படி வெளியேறும்..? இவளது பயம், இவளது படிப்பையும் புத்தியையும் கூட தள்ளி வைத்து பயம் காட்டியது. ஒருவேளை நான் செத்துப் போயிடுவேனோ….?  எப்போதும் முகம் முழுக்க குழப்பம் நிறைந்தவளாக  இரவெல்லாம் தூக்கம் வராமல் தவித்தவளாகவே இருந்தாள் .

சித்ரா அப்பப்ப சொல்கின்ற நம்பிக்கை வார்த்தைகள் கூட இவளிடம் வலுவிழந்து தோற்றுப் போனது.

அவள் பயந்த நாளும், அவளெதிரில் நட்ட நடு ராத்திரியில் வயிற்றை புரட்டிய வலியாக வந்து சேர்ந்தது.குழந்தைகள் இரண்டும் வெளியேறத் துடித்து உதைத்து மிதித்துப் புரண்டனர். வலியால் துடித்த கௌரியைத் தாங்கிக் கொண்ட சித்ரா , ‘என்னடி கௌரி இது நேரங்கெட்ட நேரத்துல இப்படி நட்ட நடு ராத்திரியில் உனக்கு வலி வந்துடுத்து..? நான் இப்ப என்ன பண்ணுவேன்.?

நீ….நல்லபடியாப் பெத்துப் பிழைக்கணம்…’நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கலங்கியவளுக்குக் காரணமும் இருந்தது.

சினிமாவில் தான் முழு மாத கர்ப்பிணியை புயலும்,இடியும் கொட்டும் மழையுமாக இருக்கும் இருட்டில் தள்ளாடித் தள்ளாடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு அலறியபடி நடக்க விடுவார்கள். அதைப் பார்க்கும் நேரத்திலெல்லாம் சித்ராவுக்குச் சிரிப்பு தான் வரும்.இந்த சினிமாக் காரன் காசைப்  பிடுங்க காதுல பெரிய பூச்செண்டை சொருகறான்…. என்றெல்லாம் கேலி பேசுவாள். அந்த நிலைமை இப்போது அவள் வீட்டுக்குள்ளும் வந்தது.

வாசலில் புயலும், இடியும், கொட்டும் மழையும்…!இருவரையும் பயமுறுத்தியது.தடுமாற வைத்தது.

திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை வருமாம்…..ஒரு ஃபோன் காலில் தெய்வங்கள் போல வந்தார்கள்,

வசந்தியும்,மாணிக்கமும், வெள்ளையம்மாவும். தொப்பலாக நனைந்து வந்தவர்கள்….

கௌரியின் கதறலைக் கேட்டுக் கலங்காத வெள்ளையம்மா, அந்த அறையை அரை நொடியில் ‘லேபர் வார்ட் ‘ ஆக மாற்றினாள்.

நீ ஒண்ணும் கவலப்படாத தாயீ …..இதோ …..இதோ….என்று சொல்லிக் கொண்டே….ராசாக் கணக்கா ரோசாப் .பூவுங்க…..! என்று வெற்றிலைக் கறை பற்கள் தெரிய சிரித்து மகிழ்ந்தாள். சாட்சாத் சரஸ்வதியைப் போலத் தெரிந்தாள் வெள்ளையம்மாள்….சித்ராவின் கண்களுக்கு.

செடியிலிருந்து மலர்களைப் பறித்துப் பிரிப்பது போல, கௌரியின் அருகில் மலர்க் குவியலாக குழந்தைகளைப் போட்டாள் …இந்தாத் தாயீ ,,,,உன் உசுருங்க…..!  லவ….குச…மாதிரி வந்து பொறந்திருக்குங்க ..! அப்பன இளுத்தாந்துருங்க ….! என்று சொல்லியபடியே கைகளைத் துடைத்துக் கொள்கிறாள்.

கௌரியோடு சேர்ந்து கதறிய வானமும் கொட்டித் தீர்த்து நிர்மலமானது.

அருகில் இருந்தவர்கள் மகிழ்வாகச் சிரிக்க, மலர்கள் கைமுறித்து அழுதன.

வெள்ளையம்மா…….உனக்கு எப்படி நன்றி சொல்லுவேன்….நீங்கள்ளாம் கௌரிக்காகவே பொறந்து வந்துருக்கேள்….அந்த பகவான் கொடுத்த ..வரம்.! என்று கண்கலங்கிப் பேசினாள் சித்ரா. என் கொழந்தையைக் காப்பாத்தி அவள் கொழந்தையையும் காப்பாத்திக் கொடுத்தியே..!

குழதைகளைப் பார்த்துப் பரவசமான கௌரி மென்மையாக இதழ் பிரியாமல் சிரித்தபடி அசதியில் நிம்மதியாக கண்களை மூடிக் கொண்டாள் .

பட்டு ரோஜாவாகக் குழந்தைகளைக் கண்ட சித்ராவுக்குத் தலை கால் புரியாத பேரானந்தம்…..கௌரி….வசந்தி.

…தங்க விக்ரகங்களா…இருக்குடி ரெண்டும்…குருவாயூரப்பனே வந்து பொறந்திருக்கான்..என்றெல்லாம் சொல்லிக்கொண்டு கைகூப்பி மகிழ்ந்தாள்.

நதிமூலம், ரிஷிமூலம் சற்றே மறந்து மகிழ்ந்த சித்ரா, அடுத்த கவலைக்குத் தாவினாள் ……அடுத்தது என்ன…? இதை ஊருக்கு எப்படிச் சொல்வது? உறவுகளுக்கு என்னவென்று சொல்வது…? இந்தக் கேள்வி விஸ்வரூபமானது.

வசந்தியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. தாய்மையின் அருமையை, அந்தப் புனிதத்தை மானசீகமாக அறிந்தவள் அவள். கௌரி தனக்கு செய்த பெரிய உபகாரத்துக்கு நன்றிக் கடன் பட்டவள், இந்த விஷயத்தில் உதவி செய்து தனது கடனைத் தீர்த்துக் கொண்டது போல நெகிழ்ந்தாள் .

அவசரத்துக்கு உதவிய தன் கணவனும் , மாமியாரும் வசந்திக்கு தெய்வம் போலவே தோன்ற ‘கெளரிம்மாவை காப்பாத்தினீங்க’ என்று கைகூப்பித் தொழுதாள் .

கௌரிக்கு உதவியதில் வசந்தியில் மனது மாணிக்கத்திற்கு வாலாட்டியது.

அவளது உடைந்த மனமும் மாணிக்கத்துடன் இதனால் ஒன்று சேர்ந்தது. பெண் மனம் இளகியது. வைராக்கியத்தைத் தளர்த்தியது.

வசந்தி….உன்னிய உசுரோட பார்க்கக் கொள்ள எனக்கு எம்புட்டு நிம்மதி தெரியுமா? உன்னிய அந்தம்மா தானே காப்பாத்தி கொடுத்தது.
கடவுள் இருக்கான்….எல்லார் கிட்டயும்….எல்லார் மாதிரியும்…அவன் இருக்கான்…! நான் நம்புறேன்….என்று அவனும் அழுதான்.

தனக்காகவே ஒரு குழந்தையை பெற்றுக் கொடுத்துவிட்டு போய் சேர்ந்த தன் தங்கையை நினைத்துக் கொண்டு முருகனை அணைத்து முத்தமிட்டவள்…. அடிக்கடி சித்ராம்மா சொல்லுவாங்களே, எந்த ஒரு காரியமும் ஒரு காரணமில்லாமல் நடக்காதுண்டு….அத்தோட அர்த்தம் இப்பத் தான் வெளங்குது. கௌரிம்மாவுக்கும் நல்ல குடும்ப வாழ்க்கை அமையணும் ஐய்யனாரே…என்று மனமுருகி வேண்டிக் கொண்டாள் .

யாருக்காகவும் காத்திருக்காத காலம், உருண்டோடியது…….அக்கம் பக்கம் இருப்பவர்களின் வித்தியாசப் பார்வைகள், உறவினர்களின் ஏச்சுப் பேச்சுக்கள் ,…..எல்லாவற்றையும் கடந்து .குழந்தைகள் இரண்டும் குப்புறக் கவிழ்ந்தது,தவழ்ந்தது,நீச்சலடிச்சது,முகம் பார்த்துச் சிரித்தது, ங்கா …ங்கா ….என்றது, மெல்ல எழுந்து நின்று விழுந்தது,தத்தக்கா பித்தக்கான்னு நடந்து தொப்பென்று அமர்ந்தது,
இரவில் ஊரைக் கூட்ட அழுதது, பகலில் உறங்கிக் கழித்தது….!

ஒன்றைத் தோளிலும் , இன்னொன்றை மடியிலும் போட்டுக் கொண்டு

“செத்தி மந்தாரம் துளசி….
பிச்சக மாலகள் சார்த்தி…
குருவாயூரப்பா..
நிண்டே  கனி காணேணம் ……”

தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தாள் சித்ரா.

இரவெல்லாம் கைவிடாமல் தூளி ஆட்டி ஓய்ந்து போனாள் கௌரி. நேரம் போதாமல் தவித்தனர் இருவரும்.வீடு அமளி துமளி பட்டது. குழந்தைகளின் பால் மணம் வீசும் வாயும், வசம்பின் வாசமும்,ஜான்சன் பேபி பெளடரின் மணமும் மயக்க , குழந்தைகளை உச்சி முகர்ந்து பரவசமானாள் கௌரி.

குழந்தைகள் ஆடி ஓடும் போது கொலுசு சத்தம் கேட்டு திருஷ்டி சுற்றிப் போட்டு மாய்ந்து போனாள் சித்ரா.

கஷுக்கு மொஷுக்குன்னு குழந்தைகள் இரண்டும் வீட்டை கோயிலாக்கினார்கள்.கௌசிக், கெளதம் என்று பெயரிட்டு வாய்க்கு வாய், மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிச் சொல்லி ஆனந்தப் பட்டுக் கொண்டாள் கௌரி.

வசந்தியும் கூடவே இருந்து குழந்தைகளை கண் போல பார்த்துக் கொண்டாள் .

நல்லவர்களுக்கு துரோகம் செய்தால் வரும் பாவம் நான்கு மடங்காகுமாம். யாரோ சொன்னது உண்மை என்று நிரூபணம் ஆனதைக் கேட்டு அதிர்ந்தாள் கௌரி. வீட்டில், அவசரத்தில் இரட்டைக் குழந்தைகளை எளிமையாகப் பிரசவித்த கௌரிக்கு ஆண்டவனின் அருள் கிடைத்தது போல, மருத்துவமனையில் பிரசவிக்கப் போன லாவண்யாவை காலனின் பாசக் கயிறு குழந்தையோடு சேர்த்து இழுத்துச் சென்றது. கார்த்திக்கின் தற்போதைய நிலை அறிந்த சித்ரா..அவனுக்கு நன்னா வேணம்…உன்னைத் துடிக்கத் துடிக்க வெச்சான் பாரு…அதான் ஆண்டவன் பதிலடி கொடுத்துட்டார் என்று நெஞ்சில் வஞ்சம் வளர்க்கப் பேசினாள் .

ஏம்மா….இப்படிச் சொல்றே? என்னை மாதிரி தானே அவளும்….! பிரசவம்ங்கறது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்பு போலத் தான்.
நான் கூட நல்லவேளை அவா ரெண்டு பேருமாவது சந்தோஷமா இருக்காளேன்னு நினைச்சேன். பாவம் கார்த்திக், இதை எப்படித் தாங்கிண்டு இருப்பானோ..? நீயும் ஒரு பொண்ணு தானே…இப்படிச் சொல்லலாமா? என்று மாய்ந்து போனாள் கௌரி.

ஏன்…? நீ தாங்கிக்கலை ….! போதும் போதும்..நீ அவனுக்காக நீலிக்கண்ணீர் வடிச்சது.இப்ப என் கவலையெல்லாம் எங்கே…அவன் உன் விஷயத்தைத் தெரிஞ்சுண்டு நம்மாத்து வாசலுக்கு வந்து நிக்காம இருக்கணமேன்னுதான். !

நானும் பொண்ணு தான்…இல்லேங்கலை….அதே சமயத்தில் நான் பாசமா பெத்து வளர்த்தவளைச் சீரழித்தானே…..தலை வலியும் திருகு வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்பா…! என் வேதனை உனக்குப் புரியாது. புரியவும் போறதில்லை.

அவன் நிச்சயமா…இங்க வர மாட்டான்ம்மா..!..கல்யாணம்ங்கறது கூட ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு சூதாட்டம் போலத் தான். வெற்றியும் தோல்வியும் ஆட்ட முடிவில் தான் தெரியும். சில சமயங்களில் இது போல பிரசவத்தில் தெரியும். இல்லையா..? என்னைப் பொருத்தவரையில் அது முடிந்து போன அத்தியாயம். அதை நினைத்து நீ பயப்படாதேம்மா. நான் நிச்சயமா அவனை நம்பி போகமாட்டேன்.

கௌரி, உனக்கு நடந்து விட்ட இந்த கொடுமை யாருக்கும் நடந்து விடக் கூடாது….! உன்னோட மன தைரியம் தான் உன்னை காப்பாத்தியது…..இதெல்லாம்  யாருக்கு வரும்…   .? சொல்லு.

இல்லைம்மா….இது எனக்கு ஆண்டவன் தந்த வரம்.எனக்காக நான் வாழறதுக்கு ஒரு பிடிப்பாகத் தான் ‘அவன்’ தந்த இந்தக் குழந்தைகள்.
இந்த அவன் அந்த கார்த்திக் இல்லை..இது அந்த ஆண்டவன்.

எந்த நேரத்திலும் மனசைத் தளர விடாமல் வாழ குழந்தைகள் …  எனக்கு இந்த கௌசிக்கும் கௌதமும் போதும். ஆனால் நீ சொன்னது போல இந்தப் பாவத்தை கண்டிப்பா கங்கையில் முழுக்குப் போட்டு கரைப்பேன்.இவாளையும் புனிதமாக்குவேன்.

அப்போ…..இந்த மாசம் உன்னோட அப்பாவோட  ஸ்ராத்தம் வரதே, அதுக்கு கயாவுக்குப் போய் பண்ணீட்டு வந்துடலாம். சித்ரா காலண்டரை எடுத்து வைத்துக் கொண்டு, கண்ணுக்கு கண்ணாடியை மாட்டிக் கொள்கிறாள் சித்ரா. வாய் முணு முணுக்கிறது…..சப்தமி….அஷ்டமி…தசமி…ஏகாதசி…!

அப்ப ….நெட்ல ஃப்ளைட் டிக்கெட்ஸ் புக் பண்ணிடட்டுமா? போனோமா வந்தோமான்னு இருக்கும். காசிக்குப் போயிட்டு வந்ததும் உடனே குழந்தைகளுக்கு ஆண்டு நிறைவும்  வெச்சுக்கலாம்.

ஓ ….நன்னாச்சு….நீ டிக்கெட்டை புக் பண்ணுங்கிட்டியா . நாளைக்கே நம்பாத்து வாத்தியார் கிட்ட சொல்லி காசி, கயா சிரார்த்த காரியங்களை பண்ண ஏற்பாடு செய்யச் சொல்றேன்…சித்ரா சுறுசுறுப்பானாள்.

“நீ செய்த பாவம் எந்த கங்கையில் குளிச்சாலும் தீராதுடி…” அன்று சித்ராவின் குரல் அசரீரியாக கௌரியின் காதுக்குள் ஒலித்தது. அதே சமயம்…இவளின்…”தீரும் ”  என்ற பதில் சொல்லும் கேட்டது.

இதோ….காசியில் அந்தப் புனித கங்கையில் தனது பாவங்களும், அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் மேல் இருக்கும் பாவக் கரைகளும் விரைவில் கங்கையில்  கரைந்து விடும்…என்ற நம்பிக்கையில் நிமிர்ந்து கணினி முன்னே அமர்கிறாள் கௌரி.

டிக்கெட் புக்கிங் செய்யும் போது …சித்ரா…., கௌரி…, என்று டைப் செய்தவள் கூடவே….!

கௌசிக், கெளதம்…என் குழந்தைகள்…..! தாய்மை  மனது தனக்குத் தானே சொல்லிப் பெருமை பட்டுக் கொண்டது.

0   0   0   0   0  0    0    0    0

(தொடரும்)

Series Navigationஜாக்கி சான் 7. வாலுப் பையனாக வளர்ந்த கதைதனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர் – பி.என். ஸ்ரீனிவாசன்
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *