டிசம்பர் மாதம் இருபதாம் நாள் மாலை. வீட்டுத் தோட்டத்தில் மலர்களின் அழகில் மயங்கியிருந்த நேரம்.
வீட்டு வாசலில் ஒருவர் என்னைத் தேடி வந்திருந்தார். அவரை நான் அதற்குமுன் பார்த்ததில்லை. நான் அவரிடம் சென்று நின்றேன்.
அவரின் கையில் ஒரு பை இருந்தது.அவர் என் பெயரைச் சொல்லி அது நானா என்று கேட்டார் . நான் ஆம் என்றேன்.
” டாக்டர், நான் குன்றக்குடி மடத்திலிருந்து வருகிறேன். இதை அடிகளார் உங்களிடம் சேர்ப்பிக்கச் சொன்னார். ” இவ்வாறு தன்னை அறிமுகம் செய்து கொண்டவர் அந்தப் பையை என்னிடம் தந்தார். நான் நன்றி கூறியபடி அதைப் பெற்றுக்கொண்டேன்.
வீட்டினுள் நுழைந்து அதை என் மனைவியிடம் தந்து விவரத்தைக் கூறினேன்.
இருவரும் அதைத் திறந்து பார்த்தோம். அதனுள் பேண்ட் துணியும் சட்டைத் துணியும் இருந்தன. அத்துடன் ஒரு கிறிஸ்துமஸ் கார்டும் அதில் கவிதையில் வாழ்த்தும் இருந்தது! எனக்கு பெரும் வியப்பு!
அடிகளார் எவ்வளவு பெரிய மனிதர்! என்னை அவர் நேரில் கூட பார்த்து பேசியதில்லை. அப்படி இருந்தும் என்னை எவ்வாறு நினைவு கூர்ந்து அப்படி ஒரு பரிசை ஆள் மூலம் அனுப்பி வைத்தார் என்று எண்ணினேன். அவரின் பெருந்தன்மையும், பரந்த மனப்போக்கையும் எண்ணி ம்கிழ்ந்தேன்.
அவர் ஒரு புகழ்மிக்க இந்து மடாலயத் தலைவர். நாடு மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களால் பெரிதும் போற்றப்படும் தமிழ் அறிஞர்! கிறிஸ்து பிறந்த பண்டிகை கொண்டாடும் எனக்கு அப்படி வாழ்த்து சொல்ல வேண்டும் என்று அவர் எண்ணியதின் அன்பு மனம் என்னை நெகிழச் செய்தது.
அப்போதே அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
அவரின் குரல் கணீரென்று ஒலித்தது. நான் வணக்கம் கூறி நன்றியைத் தெரிவித்தேன். அவருக்கும் மகிழ்ச்சிதான். நேரம் கிடைத்தால் சந்திப்போமே என்றார். நான் ஞாயிறு காலை வரலாமா என்று கேட்டேன். அவர் அப்படியே மதிய உணவையும் முடித்துக் கொண்டு போகலாம் என்றார்.
ஆவலோடு காத்திருந்த அந்த ஞாயிறு காலையும் வந்தது.
மனைவியும் நானும் காரில் குன்றக்குடிக்கு சுமார் பத்து மணியளவில் புறப்பட்டோம். திருப்பத்தூரிலிருந்து அது பக்கம்தான்.,பிள்ளையார்பட்டி வழியாக சென்றடைந்தோம்.
நாங்கள் வந்துள்ளதை உதவியாளர் மூலம் தெரிவித்தோம். வரவேற்பு அறையில் எங்களை அமரச் சொன்னார். கொஞ்ச நேரத்தில் அடிகளார் வந்து விடுவார் என்றார்.
அது ஆர்ப்பாட்டம் அலங்காரம் இல்லாத சாதாரண அறைதான்.
அடிகளார் திடீர் என்று உள் கதவின் வழியாக அறைக்குள் நுழைந்தார். அப்போதுதான் அவரை நேரில் காண்கிறேன். அதற்குமுன் நாளிதழ்களில் புகைப் படங்களில் பார்த்ததுதான்.
பழுத்த உடலுடன், கம்பீரமாக காட்சி தந்தார். காவி வேட்டியும், தலையில் காவி நிறத் தலைப்பாகையும் தரித்து, நீண்ட நரைத்த தாடியில் .அவர் எனக்கு ஏனோ திருவள்ளுவரை நினைவூட்டினார்! அவரின் கண்களில் கூட புன்னகை தவழ்வது போன்றிருந்தது. அது அருள் நிறைந்த புன்னகை!
நாங்கள் எழுந்து நின்று மரியாதை செய்தோம். அவர் வணக்கம் கூறி யவண்ணம் எங்களை அமரச் சொன்னார்.
அவருடைய குரல் கணீர் என்று ஒலித்தது. அப்போது அவரிடம் நான் பேசியது தமிழுடன் பேசுவது போன்றதோர் உணர்வு உண்டானது! அது ஏன் என்று தெரியவில்லை. அவரின் அழுத்தமான அழகான தமிழ் உச்சரிப்பு அப்படி இருந்தது!
” திருப்பத்தூரில் சேவை நோக்கத்துடன் கிறிஸ்துவ இறைத் தூதர்களால் உருவாக்கப்பட்ட சுவீடிஷ மிஷன் மருத்துவமனை இன்று புதுப்புது கருவிகளுடன் சிறப்பாக இயங்குவது குறித்து மகிழ்ச்சி. அறிவியல் வேகமாக வளர்ந்து வருகிறது. அதை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி அறியாமையில் மூழ்கியுள்ள நமது சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் டாக்டர். ” இவ்வாறு அவர் உரையாடலை ஆரம்பித்தார்.
” அதே அறிவியலைப் பயன்படுத்தி இந்த குன்றக்குடியை ஒரு மாதிரிக் கிராமமாக உருவாக்கியுள்ள ஐயாவின் முயற்சியை தமிழக அரசும், இந்திய அரசும் பாராட்டியுள்ளதை நானறிவேன். தங்களை நேரில் பார்க்கும் இந்த அபூர்வமான வாய்ப்பைப் பெற நான் பெரும் பாக்கியம் பெற்றதாகக் கருதுகிறேன். ” பதில் தந்தேன்.
அவர் புன்னகைப் பூத்த்தவண்ணம் என்னையே ஊடுருவும் வண்ணம் உற்று நோக்கினார்.நான் எதைப் பற்றி அவரிடம் பயனுள்ள வகையில் பேசலாம் என்று எண்ணியபோது தமிழ்ச்சமயம் பற்றி பேச முடிவு செய்தேன்.
: ” ..அய்யா நான் உலகைப் படைத்தது ஒரு கடவுள்தான் என்பதை நம்புகிறேன்,. அதனால் இயற்கையின் அழகில் கடவுளைக் காண்கிறேன். ஒவ்வொரு மதமும் போதிக்கும் கடவுளும் இறுதியில் அந்த ஒரு கடவுளாகத்தானே இருக்க முடியும்? அப்படி இருக்கும்போது மதங்களுக்குள் ஏன் இத்தனை வேற்றுமைகள்? ” என் நீண்ட நாள் சந்தேகத்தை தகுந்த ஒருவரிடம் கேட்டதில் திருப்தியுற்றேன்.
” மதம் மக்களுக்கு அபின்! ஆன்மா அற்ற உலகின் ஆன்மா என்று சொல்லவில்லையா கார்ல் மார்க்ஸ்! பிரபஞ்சத்தில் நிலவும் புதிர்களை முற்றாக ஆராய்ந்து தீர்க்க முடியாது! காரணம் கடவுள் புதிர்களில் வாழ்கிறார்! நீங்கள் எதையோ கேட்க வந்து தயங்குவது எனக்கு நன்றாகவே தெரிகிறது. தயங்காமல் கேளுங்கள் டாக்டர். ” என்னை உற்சாகமூட்டினார் அடிகளார்.
” அய்யா! தமிழகத்துத் துறவிகளில் தாங்கள் தனித் தன்மையுடன் தமிழ்ச் சமைய நெறி பற்றி போதித்து அதன் மூலமாக சமநிலைச் சமுதாயம் உருவாக்க முயல்வதை நான் அறிவேன்.அது பற்றி அறிய விரும்புகிறேன். ” பணிவுடன் அவரிடம் கேட்டேன்.
” டாக்டர் அவர்களே. தாங்கள் தமிழ்ச் சமய நெறி குறித்து அறிய விரும்புவது பாராட்டுதற்குரியது .தாங்கள் இயற்கையின் அழகில் இறைவனைக் காண்கிறேன் என்றீர்களே. அதுதான் தமிழ்ச் சமயம்! ” என்று கூறியவர் என்னைப் பார்த்து சிரித்தார்.
நான் புரியாமல் விழித்தேன்.
அவர் தொடர்ந்தார், ” தமிழ்ச் சமயம் இயற்கையோடிசைந்தது. அது இல்லற வாழ்க்கைதான் உயர்ந்தது என்றோ, துறவற வாழ்க்கைதான் உயர்ந்தது என்றோ பறைசாற்றுவதில்லை. எந்த வாழ்க்கையாயினும் நெறிமுறைகளில் சிறந்து வாழ்வாராயின் இன்புறுவார் என்பதே தமிழ்ச் சமயக் கொள்கை . ”
அப்போது இல்லறம், துறவறம் கூறும் வள்ளுவரே என்னிடம் நேரில் பேசுவது போன்ற உணர்வு உண்டானது.
அவர் தொடர்ந்து பேசியதைக் கவனமாகக் கேட்டபோது குறிப்புகளும் எடுத்துக்கொண்டேன். பின்னாளில் அவரைப் பற்றி எழுதும் போது அது உதவும் என்றும் நம்பினேன்.
” உயிர் அறிவுப் பொருள். ஆயினும் உயிர் முற்றாக அறிந்த அறிவுப் பொருளுமன்று. உயிர் ஒரு அறிவுப் பொருள் , ஆயினும் அறியாமையில் இணைந்து இருக்கிறது. உயிர் அறியாமையை நீக்கிக் கொண்டு அறிவைப் பெறுவதற்கே பேரறிவாக்கிய கடவுளை நாடுகிறது. எனவே உலகுயிர்கள் அனைத்தையும் தழுவி நின்று மெல்ல அவற்றின் அறியாமையிலிருந்து நீக்கி அறிவில் பூத்துக் குலுங்கச் செய்தலும் அறிவில் இன்புற்றமரச் செய்தலும் இறைவனின் குறிக்கோள். இதுவே தமிழ்ச் சமயத்தின் சாரம். ”
புரிகிறதா என்று கேட்பதுபோல் என்னைப் பார்த்தார்.
நான் ஓரளவு புரிந்தது என்று கூறுவது போல் தலை அசைத்தேன்.
இது போன்று சமயம், சமுதாயம், தொண்டூழியம் போன்றவை பற்றி முதல் சந்திப்பிலேயே நிறைய பேசினோம்.
மதிய உணவு தயார் என்று உதவியாளர் வந்து தெரிவிக்கும் வரை நிறைய பேசினோம்.
சுவையான சைவ உணவு. மடத்தில் தயாரிக்கப்பட்டது. சாம்பார், ரசம் , அப்பளம் , தயிர், வடை போன்றவை பரிமாறப்பட்டது. பேசிக்கொண்டே உணவு உண்டோம். அதன் பிறகு அடிகளாரே ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை வெட்டி எங்களுக்குத் தந்தார்.
அவர்து விருந்தோம்பலும் உபசரிப்பும் எங்களை வியப்பில் ஆழ்த்தியது!
மீண்டும் அறைக்கு வந்தபோது அடிகாளாரின் கையில் ஒரு நூல் வைத்திருந்தார். அதை என்னிடம் தந்துவிட்டு என்னிடம் கூறியது என் வியப்பை மேலும் அதிகமாக்கியது.
” டாக்டர். இதை திருமுருக கிருபானந்த வாரியார் எனக்குத் தந்தது. இதை இப்போது உங்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறேன். இதைப் படித்துப் பாருங்கள். ” என்றார். நான் நன்றியுடன் அதைப் பெற்றுக் கொண்டேன்.
அதன் அட்டையில் இராமனும் சீதையும் அமர்ந்திருந்தனர். அவர்களிப் பார்த்து அனுமன் வணங்கிக் கொண்டிருந்தான். இராமனின் கழுத்தில் மாலையும் இடது கையில் வில்லும் இருந்தது.
நூலின் தலைப்பு, ” கம்பன் கவிநயம் “. எழுதியவர் கிருபானந்தவாரி என்றிருந்தது.
அட்டையைப் புரட்டினேன்.
” முருகா.
உளம் வசமானால்
உலகம் வசமாகும் .
கிருபானந்தவாரி
6. 10 . 90 . ” என்று பச்சை நிற மையினால் எழுதி கையெழுத்திட்டிருந்தார் வாரியார்.
” இதை நிச்சயமாகப் ப்டித்து முடிப்பேன் அய்யா . ” என்று உறுதி கூறினேன். அவர் புன்னகைத்து கைகூப்பி விடை தந்தார். இனிமையான நினைவுகளுடன் நாங்கள் திரும்பினோம்.
மறு வாரமே குன்றக்குடியின் அருகிலுள்ள நேமம் என்ற கிராமத்தில் அடிகளார் அமைத்துள்ள ” பழ முதிர்ச் சோலை ” பார்க்க அழைத்திருந்தார். உண்மையில் அது ஒரு மறக்க முடியாத அனுபவமே.
கரிசல் நிலமாகக் கிடந்த பல ஏக்கர் நிலப்பரப்பைப் பண் செய்து, ஆழ் கிணறுகள் தோண்டி, நீர் பாய்ச்சி செம் மண்ணில் மாமரங்களையும் , பலா, கொய்யா , விளாம்பழ , எலுமிச்சை என பலவகையான பழ மரங்களை வளர்த்து பெயருக்கேற்ப அந்த நிலப் பரப்பை பசுமை பூத்துக் குலுங்கும் ஒரு பழ முதிர்ச் சோலையாகவே மாற்றியிருந்தார். அங்கு குளிர் தென்றல் கூட நறுமணத்துடன் தவழ்ந்து !
தோட்ட முழுதும் சுற்றிப் பார்த்தோம். ஆண்களும் பெண்களுமாக ஏராளமான கிராம மக்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர் .
இதன் மூலமாக பல குடும்பங்கள் நல்வாழ்வு பெரும் வாய்ப்பு உண்டானது. இது அடிகாளாரின் ” மாதிரிக் கிராமத் திட்டத்த்தின் ” ஒரு பிரிவு.
குன்றக்குடியில் முசுக் கட்டை இலைச் செடிகள் ( Mulberry )
பயிரிட்டு பட்டு நூல் தயாரிப்பது குடிசைத் தொழிலாக பல வீடுகளில் அறிமுகம் செய்திருந்தார். இதன் மூலமாக மேலும் பல குடும்பங்கள் பயனடைந்தன.
நிறைவான மனத்துடன் கூடைகளில் நிறைய பழங்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினோம்.
இந்த இரு சந்திப்புகளுக்குப் பின்பு அடிகளாருக்கும் எனக்கும் நல்ல நட்பு மலர்ந்தது. அடிக்கடி தொலைபேசியிலும் நேரிலும் தொடர்பு கொண்டோம்.
பல இலவச தோழுநோய், மருத்துவ, கண் சிகிச்சை முகாம்கள் நாங்கள் இருவரும் இணைந்து நடத்தினோம்.அடிகளார் வருகை புரிகிறார் என்றால் கிராம மக்கள் நிறைய பேர்கள் கூடி வந்து பயன் பெற்றனர். நாங்கள் இணைந்து ஒரு கிராம சுகாதார நிலையம் அமைத்தோம்.
அடிகளாரின் இன்னொரு சிறப்பு அவரின் இலக்கியப் பணி. அவர் சிறந்த சொற்பொழிவாளர். அதிலும் பட்டிமன்றம் என்றால் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்வார். தமிழகத்தின் எந்தப் பகுதியாக இருந்தாலும் சிரமம் பாராது காரில் பறந்து செல்வார். நடுவராக அவர் கூறும் தீர்ப்பு கேட்போரைக் கிறங்கச் செய்துவிடும்! அவ்வளவு சொல் வளமும், கருத்து ஆழமும் கொண்ட தீர்ப்பாக அது அமைந்துவிடும்.
நான் திருப்பத்தூர் ஸ்வீடிஷ மிஷன் மருத்துவமனை வளாகத்தில் ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு செய்து அடிகளாரைத் தலைமை தாங்க அழைத்திருந்தேன்.
ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியின் பேராசிரியர் திரு நமச்சிவாயம் அவர்களையும் , நாகப்பா மருததாப்பா உயர்நிலைப்பள்ளி ஆசிரியை திருமதி மரகதம் அவர்களையும் பேச்சாளர்களாகவும் அழைத்திருந்தேன். நானும் ஒரு அணித் தலைவராகப் பேசினேன் . போது மக்கள் ஏராளமாக வந்து சிறப்பித்தனர்.
இவ்வாறு பொதுத் தொண்டு, இலக்கியப் பணி என்று நாங்கள் சந்தித்துக் கொண்ட போது மருத்துவம் பற்றியும் பொதுவாகப் பேசிக்கொள்வோம். அவருக்கு உடல் ரீதியான குறைபாடு உண்டானாலும் என்னிடம் கேட்பார்.
ஒரு நாள் இரவில் என்னை அழைத்தார். இடது கையை இடித்துக் கொண்டதாகவும், அது வீங்கி வலிக்கிறது என்றார். நான் உடன் புறப்பட்டு போய் அவரைப் பார்த்தேன
அப்போதுதான் நான் அவருடைய படுக்கை அறையைப் பார்த்தேன். மிகவும் எளிமையான முறையில் அது அமைந்திருந்தது. மெத்தை இல்லாத வெறும் மரக் கட்டிலில்தான் படுப்பார் என்பதை அன்று தெரிந்து கொண்டேன்.
நான் அவருடைய கையை பார்த்துவிட்டு மருந்துகளும் வலி குறைக்கும் களிம்பும் தந்துவிட்டு சிரித்து நேரம் அவருடன் பேசிவிட்டு திரும்பினேன்.
சில நாட்கள் கழித்து இடது தோள் பட்டையும் கையும் வலிக்குது என்றார். நான் அது இருதய தொடர்பு உள்ள வலியாகக்கூட இருக்கலாம் என்று கூறி திருப்பத்தூர் வரச் சொன்னேன். அங்கு அவருக்கு இரத்தம், ஈ.சீ.ஜீ. பிரிசோதனைகள் செய்து கொள்ளலாம் என்றேன். சற்று தயக்கத்துடன் சம்மதித்தார்.
நான் மருத்துவமனையில் உள்ள பிரமுகர்கள் தங்கும் தனிக் கட்டிடத்தை அவருக்காக தயார் செய்தேன். அதில் படுக்கை, கூடம், குளியல் சமையல் அறைகள் போன்ற வசதிகள் உள்ளன.
குறிப்பிட்ட நாளின் முதல் நாள் இரவு அவர் அவசரமாக சென்னை செல்ல வேண்டும் என்று கிளம்பி விட்டார். அங்காவது ஏதாவது மருத்துவமனை சென்று பார்க்கவும் என்று கூறினேன். மீண்டும் தயக்கத்துடன் சரி என்றார்.
சென்னையிலிருந்து திரும்பி வந்தபின் வருமாறு மீண்டும் அழைத்தேன். நாட்குறிப்பைப் பார்த்துவிட்டு வரிசையாக பட்டிமன்றங்கள் உள்ளதே என்று தயங்கினார்.
அதன்பின்பு அதுபோன்ற வலி இல்லை என்று பரிசோதனை செய்துகொள்வதைத் தள்ளிப் போட்டார்.
ஆனால் அந்த வலி அதன்பின் இல்லை என்றுதான் கூறினார்.
1994 ஆம் ஆண்டில் நான் மலேசியாவில் குடியேறினேன்.
1995 ஆண்டில் என்னுடைய இனிய நண்பர் தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் மரணமுற்ற செய்து கேட்டு அதிர்ந்து போனேன்! அவரின் மரணத்தை ஏற்க மனம் மறுத்தது!
அடிகளார் அவர்களை புரட்சித் துறவி, சிந்தனையாளர், நூலாசிரியர், சொற்பொழிவாளர் , நிறுவனர் என்று புகழாரம் சூட்டிப் போற்றலாம்.
வள்ளுவ நெறி, தந்தை பெரியாரின் தன்மானக் கொள்கை, கார்ல் மார்க்சின் பொருளாதாரச் சிந்தனை ஆகியவற்றின் கலவையாகத் திகழ்ந்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். அவரது வாழ்க்கை நிகழ்வுகளை பக்கம் பக்கமாக எழுதலாம். அவர் பெற்ற சிறப்புகளில் சில –
* 1966 – தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது.
* 1989 – அவர் எழுதிய ” ஆலயங்கள் சமுதாய மையங்கள் ” என்னும் நூல் தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்றது .
* அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் ( D. Litt ) பட்டம் வழங்கியது.
* 1991 – இந்திய அரசின் அறிவியல் செய்தி பரப்பும் தேசியக் குழு தேசிய விருது வழங்கியது.
* 1993 – மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ” தமிழ்ப் பேரவைச் செம்மல் ” விருது வழங்கியது.
( முடிந்தது )
பின் குறிப்பு : இந்த எழுத்தோவியத்தை நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த எனது இனிய நண்பர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.
- எதிரி காஷ்மீர் சிறுகதை
- உணவு நச்சூட்டம்
- நட்பு
- புகழ் பெற்ற ஏழைகள் – 24
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி
- ஜாக்கி சான் 7. வாலுப் பையனாக வளர்ந்த கதை
- டௌரி தராத கௌரி கல்யாணம் ……19
- தனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர் – பி.என். ஸ்ரீனிவாசன்
- ஐம்பது வருடங்களின் வளர்ச்சியும் மாற்றங்களும் – (3)
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 27
- நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சமீபத்திய சனிக்கோளின் பூதப்புயல் ஆழ்தள நீரைக் கலக்கி வெளியேற்றி உள்ளதைக் காட்டியுள்ளது.
- தாகூரின் கீதப் பாமாலை – 81 காதலர் பிரிவுத் துயர் .. !
- கம்பராமாயணக் கருத்தரங்கம்
- மனுஷ்ய புத்திரன் கவிதைகள் ‘அருந்தப் படாத கோப்பை’ தொகுப்பை முன் வைத்து…
- முக்கோணக் கிளிகள் [5]
- ஞாநீ
- ஆமென்
- துகில்
- அப்பா என்கிற ஆம்பிளை
- சரித்திர நாவல் “போதி மரம்” இறுதி அத்தியாயம் – 36
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34 (Song of Myself) கடந்த காலம், நிகழ் காலம்.. !
- தமிழ்த் திரைப்படத்தில் இலக்கியத்தின் தாக்கம் என்ற பொருளில் சாகித்ய அகாதமி இருநாள் கருத்தரங்கு