புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 24

This entry is part 4 of 22 in the series 15 செப்டம்பர் 2013

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட​டை

E. Mail: Malar.sethu@gmail.com

24.மாடு​மேய்த்த அறிவியல் ​மே​தை

அட​டே….வாங்க….வாங்க ..என்னங்க ​சோர்ந்து ​போயி வர்ரீங்க…என்னது…​சொல்லுங்க…நல்ல நண்பர்கள்கிட்ட மனசுவிட்டுப் ​பேசுறது எல்லா மனச்சு​மை​யையும் கு​றைச்சிரும்…மனசு ​லேசாயிரும்..எ​தையும் மனசுக்குள்​ளே​யே வச்சு வச்சு மறுகக் கூடாதுங்க.. ​சொல்லுங்க.. அட அப்படியா?.. நீங்க நல்லது ​​செய்யப் ​போயி உங்கள சரியாப் புரிஞ்சுக்காம மனசு ​நோகப் ​பேசிட்டாங்களா..? இங்க பாருங்க…. இந்த உலகத்துல எந்தச் ​செய​லையும் யாரும் தாமாக​வே வந்து விரும்பிச் ​செய்ய மாட்டாங்க…ஆனா நீங்க ​செஞ்சுட்டீங்கன்னு ​வைங்க அ​தைக் கு​றைகூறுவதற்கு ​நெ​றையப் ​பேரு வருவாங்க…. காய்ச்ச மரத்துல தாங்க கல்லடி விழும்…இதுக்​கெல்லாம் ​சோர்ந்து ​போயிடக் கூடாதுங்க..​சோர்ந்துட்டா வாழ்க்​கையில எ​தையும் சாதிக்க முடியாதுங்க… நல்ல ​நோக்கத்​தோடுதா​னே நீங்க ​செஞ்சீங்க..அதனா​லே நாலு​பேருக்கு நன்​மை ​கெ​டைக்கும்னா அது​வே ​போதுங்க.. எ​தைக்கண்டும் ​சோர்ந்து ​போயிடாதீங்க..

ஆமாங்க ‘​​சோர்வுக்குஇடங்​கொ​டேல்’ அப்படீன்னு நம்ம ​பெரியவங்க ​சொல்லிருக்காங்க ​தெரியுமா? அத ​நெனச்சுக்கிட்டு ஒங்க பா​தையில நீங்க ​நேர்​மையாச் ​செயல்படுங்க…நம்மால நாலு​பேருக்கு நல்லது ​செய்ய முடியுதான்னு பாருங்க அது​போதும்.. இங்க பாருங்க ​போனவாரம் ஒங்கக் கிட்ட ​கேட்​டே​னே அவரு யாருன்னு கண்டுபிடிச்சீங்களா? ..முடியலியா…பராவாயில்​லை..நா​னே ​சொல்லிடு​றேன்… அவருதான் ​தொடர்வணடிப் பா​தையின் தந்​தை என்று அ​ழைக்கப்படும் ஜார்ஜ் ஸ்டீபன்சன்.

இவரு படிக்க​வே இல்​லைங்க…படிப்பதற்கு இவருக்கு ஆர்வம்  இருந்துச்சு. ஆனா…வசதி வாய்ப்பு இல்​லை…குடும்பத்தில வறு​மை..இருந்தாலும் ஜார்ஜ் ஸ்டீபன்சன் தன்​னோட கடு​மையான முயற்சியா​லே நீராவி இயந்திரத்​தைக் கண்டுபிடிச்சாரு… இங்கிலாந்தின் எந்திரப்  ​பொறியாளராகவும், சிறந்த கட்டுமானப் ​பொறியாளராகவும் ஜார்ஜ் ஸ்டீபன்சன் திகழ்ந்தார்…

உலகப் புகழ் ​பெற்ற ஜார்ஜ் ஸ்டீபென்சன் இங்கிலாந்திலுள்ள நார்த்தம்பர்​லேண்ட் பகுதி​யைச் ​சேர்ந்த ​வைலம் என்ற ஊரில் இராபர்ட் என்ற தந்​தைக்கும் ​மேபல் என்ற தாய்க்கும் மகனாக 1781-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் நாள் பிறந்தார். இவர் குடும்பத்தின் இரண்டாவது குழந்​தையாவார்.

வறு​மையால் மாடு​மேய்த்தல்

‘இள​மையில் கல்’ என்பார்கள் ஆனால் ஜார்ஜ் ஸ்டீபென்சனின் குடும்பத்தில் வறு​மை தாண்டவமா​டியதால் அவரால் பள்ளி ​சென்று கல்வி கற்க முடியவில்​லை.  இவருடைய தந்தை நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் கூலித் ​தொழிலாளியாகக் கு​றைந்த ஊதியத்தில் பணியாற்றி வந்தார். தந்தை குறைந்த கூலியைப் பெற்று வந்ததால் குடும்பத்தில் வறுமை​யே மிஞ்சியது. வறு​மை​ வரலாம். ஆனால் இள​மையில் வறு​மை வந்தால் அ​தைவிடக் ​கொடு​மையானது ​வேறில்​லை. இந்த வறு​மையின் ​கொடு​மை​யை கலித்​தொ​கை ஆசிரியர்,

“வறியவன் இள​மை​போல் வாடிய சி​​னையவாய்”

என்று பா​லைநிலத்தின் ​கொடு​மை​யை எடுத்து​ரைக்க உவ​மையாகக் குறிப்பிட்டிருப்பது எண்ணத்தக்கது. இப்படிப்பட்ட வறு​மையினால பள்ளி ​செல்ல ​வேண்டிய ஸ்டீபென்சனுக்கு வறு​மைய விரட்ட வழி​தேட சூழல் ஏற்பட்டது. அதனால இவரு மாடு​மேய்த்தார். ஆனாலும் இவரு​டைய மனசுல எப்படியாவது படிக்கணும்னு ஆர்வம் கனன்று ​கொண்​டே இருந்தது. பல ஆண்டுகள் ஸ்டீபென்சனின் வாழ்வு மாடு​மேய்ப்பதி​லே​யே கழிந்தது.

ஸ்டீபென்சனுக்கு பதி​னேழு வயதான​போது தனது தந்​தையுடன் ​சேர்ந்து நிலக்கரிச் சுரங்கத்திற்கு ​வே​லைக்குச் ​சென்றார். அவருக்குக் கணிசமான அளவு கூலிப்பணம் கி​டைத்தது. ஸ்டீபென்சனுக்கு கல்வி கற்பதில் ஆர்வம் இருந்ததால் தனக்குக் கி​டைத்த கூலிப்பணத்​தை ​வைத்து இரவுப் பள்ளியில் ​சேர்ந்து கல்வி பயின்றார். பசியால் வாடியவன் எவ்வாறு உண​வைக் கண்டவுடன் ஆர்வத்தில் அள்ளி அள்ளி விழுங்குவா​னோ அது​போன்று ஸ்டீபென்சனும் கல்வி என்ற உண​வை அள்ளி அள்ளி உண்டார். கல்வியில் ஸ்டீபென்சன் உயர்ந்தார். நிலக்கரிச் சுரங்கத்தில் பணி ​செய்து வந்த இவரது பணியின் தன்​மையும் உயர்ந்தது.

திருமணமும் வாழ்வில் ஏற்பட்ட துயரமும்

ஜார்ஜ் ஸ்டீபென்சன் 1802-ஆம் ஆண்டு பிரான்சஸ் ஹென்டெர்சன் என்ற ​பெண்​ணை மணந்து ​கொண்டார். மணவாழ்க்​கை மகிழ்வாகச் ​சென்றது. இந்நி​லையில் இவர் வில்லிங்டன் என்ற ஊருக்குக் குடி​பெயர ​நேர்ந்தது. அவ்வூரிலும் அவர் நிலக்கரிச் சுரங்கத்தில் ​சேர்ந்து பணிபுரிந்தார். ​வே​லை​நேரத்​தைத் தவிர மற்ற ​நேரங்களில் காலணிக​ளைத் தயாரித்தல், கடிகாரங்க​ளைச் ​செப்பனிடுவது உள்ளிட்ட பல்​வேறு ​வே​லைக​ளைச் ​செய்து ​பொருளீட்டினார், இவ்​வே​லைகள் இவரது வருமானத்​தை உயர்த்தின. வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்நி​லையில் பிரான்சஸ் ஹென்டெர்சனுக்கும் ஸ்டீ​பென்சனுக்கும் 1803-ஆம் ஆண்டு ஓர் ஆண் குழந்​தை பிறந்தது. தம்பதியர் ​பெருமகிழ்ச்சிய​டைந்தனர். ஸ்டீபென்சன் தன்னு​டைய குழந்​தைக்கு இராபர்ட் என்று ​பெயர்சூட்டி மகிழ்ந்தார்.

குடும்பச் சூழல் காரணமாக ஸ்டீபென்சன் 1804-ஆம் ஆண்டு குடும்பத்தினருடன் கில்லிங்வொர்த் என்ற பகுதியிலுள்ள வெஸ்ட்மூர் என்ற ஊரில் குடியேறி அங்கு பணியாற்றினார்.  ஸ்டீபென்சன் தம்பதியருக்கு அங்கு ஒரு ​பெண்குழந்​தை ​பிறந்தது. ஆனால் அக்குழந்​தை பிறந்த சில வாரங்களில் இறந்து ​போனது. இதனால் ஸ்டீபென்சனும் அவரது ம​னைவியாரும் ​​பெருந்துன்பத்திற்கு ஆளாயினர். ஸ்டீபென்சனின் ம​னைவியால் இவ்விழப்​பைப் ​பொறுத்துக் ​கொள்ள இயலவில்​லை. மனக்கவ​லை அவ​ரைப் பீடித்தது. கவ​லையால் ​நொந்து​போன ஸ்டீபென்சனின் ம​னைவி 1806-ஆம் ஆண்டு இறந்தார். கவ​லை அவ​ரைக் ​கொன்றது. ஸ்டீபென்சன் ​​பெரும் துன்பத்திற்கு உள்ளானார். ம​னைவியின் இழப்பும் மகளின் இழப்பும் ஸ்டீபென்ச​னை ​சொல்​​லொணாத் துயரத்திற்கு உள்ளாக்கியது. கவ​லை​யை மறக்க அவ்வூரிலிருந்து ​வே​றொரு ஊருக்குச் ​செல்லக் கருதினார். அந்நி​லையில் அவருக்கு ஸ்காட்லாந்து ​சென்று பணியாற்றுவதற்கு வாய்ப்புக் கி​டைத்தது.

மறுமணமும் ​தொடர்ந்த துன்பமும்

ஸ்காட்லாந்து ​செல்ல முடிவு ​செய்த ஸ்டீபென்சன் தனது மக​னை தனது ச​கோதரியாகிய எலினர் என்பவரிடம் வளர்ப்பதற்கு ஒப்ப​டைத்தார். பின்னர் ஸ்காட்லாந்திற்குச் ​சென்று பணியாற்றினார். ஆனாலும் அங்கு ஸ்டீபென்சனால் நிம்மதியாகப் பணியாற்ற முடியவில்​லை. ஸ்காட்லாந்திற்குச் ​சென்ற சில மாதங்களி​​லே​யே ஸ்டீபென்சனின் தந்​தையார் நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றிய​போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி கண்பார்​வை​யைப் பறி​கொடுத்தார். அதனால் ஸ்டீபென்சன் தனது தந்​தையார் இருந்த ஊருக்குச் ​​சென்றார். தந்​தைக்கு ஏற்பட்ட விபத்​தை நி​னைத்து நி​னைத்து ஸ்டீபென்சன் மிகுந்த வருத்தம் அ​டைந்தார். இது இவரது கண்டுபிடிப்பிற்கு வித்திட்டது. சுரங்கத்தில் ​வெட்டி எடுக்கப்படக் கூடிய நிலக்கரி​யை சுலபமாக இயந்திரத்தின் வாயிலாக ​வெளியில் ​கொண்டுவருவதற்கு விபத்தில்லாத எளி​மையான வழி​யைக் கண்டுபிடிக்க ​வேண்டும் என்று உறுதிபூண்டார்.

இந்நி​லையில் இவர் விவசாயி ஒருவரின் மக​ளான எலிச​பெத் ஹின்ட்மார்ஷ் என்பவ​ரை 1820-ஆம் ஆண்டு மறுமணம் ​செய்து ​கொண்டார். இவர்களது இல்லறம் குழந்​தைப் ​பேறில்லாமல் துயரத்தில் முடிவுற்றது. ஐந்தாண்டுக​ளே இவர்களது மணவாழ்க்​கை ந​டை​பெற்றது. 1825-ஆம் ஆண்டு இவரது ம​னைவி எலிச​பெத் மரணம​டைந்தார். ​தொடர்ந்த துன்பத்தால் ஸ்டீ​பென்சன் மீண்டும் துயர​டைந்தார்.

கண்டுபிடிப்புகள்

வாழ்க்​கையில் ​பேரிழப்புக​ளைச் சந்தித்த ஸ்டீ​பென்சனின் மனதில் நீராவி என்ஜி​னைக் கண்டுபிடிக்கும் எண்ண​மே முழுக்க முழுக்க நி​றைந்திருந்தது. அதற்கான முயற்சியில் ஸ்டீ​பென்சன் மும்முரமாக ஈடுபட்டார். தானாக​வே இயங்கும் நீராவி இயந்திரத்​தை வடிவ​மைக்க இவர் பல்​வேறு முயற்சிக​ளை ​மேற்​கொண்டார். ஸ்டீ​பென்சனுக்கு முன்னர் ரிச்சரட்ட்​ரெவிதிக் என்பவர் 1804-ஆம் ஆண்டு நீராவியால் ஓடும் இயந்திரத்​தை முதலில் உருவாக்கினார். ஆனால் அது மணிக்கு நான்கு ​மைல் ​வேகம் என்ற கு​றைந்த ​வேகத்தில் மரத்தண்டவாளத்தி​லே​யே ஓடியது. ஸ்டீ​பென்சன் இதிலிருந்த கு​றைபாடுக​ளைக் க​ளைந்து அத​னை ​மேம்படுத்தி புதிய திறனுடன் இரும்புத் தண்டவாளத்தில் ஓடக்கூடிய நீராவி இயந்திரத்​தைக் கண்டுபிடித்தார்.

தான் உருவாக்கிய நீராவி இயந்திரத்தின் வாயிலாக ஒரு ​தொடர் வண்டி​யை உருவாக்கி அத​னை 1825-ஆம் ஆண்டு ஸ்டாக்டன் என்ற ஊரிலிருந்து டார்லிங்டன் என்ற ஊர்​வ​ரை இரும்புத் தண்டவாளத்​தை அ​மைத்து தா​னே அவ்வண்டி​யை ஓட்டிக் காட்டினார். அதுதான் உலகப் புகழ்​பெற்ற ‘இராக்​கெட்’ என்ற ​தொடர் வண்டியாகும். இதற்கு முன்னர் ஸ்டீ​பென்சன் 1820-ஆம் ஆண்டி​லே​யே  ஹெட்டன் சுரங்கம் முதல் சுந்தர்லேண்ட் வரை 13 கி.மீ. தூரம் ​தொடர்வண்டிப் பாதை அமைத்துப் புகைவண்டியை ஓட்டினார். இது​வே உலகில் அ​மைந்த முதல் ​தொடர்வணடிப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜார்ஜ் ஸ்டீபென்சனின் புகழ் உல​கெங்கும் பரவியது. நீராவியின் மூலம் இயங்கும் இயந்திரத் ​தொடர் வணடி​யைக் கண்டுபிடித்து மிகப்​பெரிய ​தொழிற்புரட்சிக்கு ஜார்ஜ் ஸ்டீபென்சன் வித்திட்டார்.

​தொடர் வண்டிப் பா​​தை​ளை உருவாக்குதல்

இங்கிலாந்து அரசானது 1821-ஆம் ஆண்டில் பல சுரங்கங்களை இணைக்கும் வகையில் 40 கி.மீ. தூரம் ​தொடர்வண்டிப் பாதை அமைக்க முடிவு செய்ததது. ​தொடர்வண்டிப் பா​தை அ​மைக்கும்  அப்பணியை ஜார்ஜ் ஸ்டீபென்சனிட​மே இங்கிலாந்து அரசு ஒப்படைத்தது. ​தொடர் வண்டிப் பா​தை அமைக்கும் முயற்சிக்கு ஸ்டீபென்சனுக்கு அவருடைய 18 வயது நிரம்பிய மகன் இராபர்ட்டும் உதவி செய்தார்.  ​மேலும் பல்​வேறு ​தொடர்வண்டிப் பா​தைக​ளை அ​மைக்க உருவாக ‘இராபர்ட் ஸ்டீபென்சன் நிறுவனம்’  என்ற ​​பெயரில் நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதற்குத் தன்னுடைய மகன் இராபர்ட்டை நிர்வாக இயக்குநராக இருக்கச் ​செய்தார். இந்நிறுவனத்தின் வாயிலாக இங்கிலாந்து முழுவதும் பல ​தொடர்வண்டிப் பா​தைகள் அ​மைக்கப்பட்டன. ஜார்ஜ் ஸ்டீபென்சன் 1440 மி.மீ. (1.4 மீ)  அளவில் ​தொடர் வண்டிப் பா​தைக​ளை அ​மைத்தார். இந்த அள​வே தொடர்வண்டிப் பா​தை அ​மைக்கும்​போதும் பின்னாளில் உலகம் முழு​மைக்கும் ​உள்ள ​​பொது அளவாக ஏற்றுக்​கொள்ளப்பட்டு ந​டைமு​றையில் இருந்து வருவது ​நோக்கத்தக்கது.

இங்கிலாந்து முழுவதும் ​தொடர்வண்டிப் பா​தைக​ளை அ​மைத்து உலகின் முதல் பொது தொடர்வண்டிப் பாதைக்கான தண்டவாளங்களை அமைத்தவர் என்ற சிறப்​பை ஸ்டீபென்சன் ​பெற்றார். அ​தோடுமட்டுமன்றி ஸ்டீபென்சன் ​தொடர்வண்டிப் பா​தையின் தந்​தை என்றும் அ​ழைக்கப்பட்டார். இவர் அமைத்த ​தொடர் வண்டிப் பாதை இன்றும் உலக தரமான பாதையாக உள்ளது. அப்பா​தையானது  இன்று, “ஸ்டீபன்சன் பாதை”  என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

​தொடர் வண்டிகள் இயக்கவும், ​தொடர் வண்டிப் பாதைகளை உருவாக்கவும் ஜார்ஜ் ஸ்டீபென்சன் எடுத்த முயற்சிகளால் இங்கிலாந்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ​பெரும் ​​தொழிற்புரட்சி​யே ஏற்பட்டது. உற்பத்திக்குத் தேவையான பொருட்களைப் பெறவும், பிற இடங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைப் பெறவும், உற்பத்தி ​செய்யப்பட்ட ​பொருள்க​ளைச் சந்தைகளில் விற்கவும், தேவையான இடங்களுக்கு விரைந்து இடையூறின்றி உற்பத்தியான பொருட்களை அனுப்பவும் இவருடைய ​தொடர் வண்டிக் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய அளவில் உதவியாக அமைந்தன.

ஸ்டீ​பென்சன் ​பெற்ற சிறப்புகள்

ஜார்ஜ் ஸ்டீபென்சன் 1847-ல் இங்கிலாந்தில் உள்ள எந்திரப் பொறியாளர் பயிற்சி நிறுவனத்தின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரு​டைய ​பெரு​மை​யை எடுத்துக்காட்டும் விதமாக இங்கிலாந்து அரசானது டெர்பிஷைர் பகுதியில் செஸ்டர்ஃபீல்டு  என்ற ஊரில் உள்ள அருங்காட்சியகத்தில் ஸ்டீபென்சன் பயன்படுத்திய பொருள்கள் ஓர் அறையில் காட்சிக்கு வைத்துள்ளது. ​மேலும் ஜார்ஜ் ஸ்டீபென்சனு​டைய பித்தளை உருவச்சிலை ஒன்று இங்கிலாந்து அரசால் செஸ்டர்ஃபீல்டு இரயில்வே நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.  அது போலவே ஸ்டீ​பென்சன் வடிவமைத்த ‘இராக்கெட்’ என்ற இரயில் எந்திரத்தின் மாதிரி வடிவம் ஒன்றும்  அந்த ​தொடர் வண்டி நி​லையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அரசின் வங்கியானது ஸ்டீ​பென்சனு​டைய உருவப்படம் ​பொறிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு ஸ்டீ​பென்ச​னைச் சிறப்பித்துள்ளது. ​மேலும் இவரைச் சிறப்பிக்கும் வகையில் இங்கிலாந்து அரசானது அஞ்சல் தலைக​ளையும்  ​வெளியிட்டுள்ளது ​நோக்கத்தக்கது ஆகும்.

மறுமணமும் மரணமும்

நா​டே ​போற்றிய ஸ்டீ​பென்ச​ன் 1848-ஆம் ஆண்டு தனது 67-ஆவது வயதில் எ​லென் கிரி​கோரி என்ற ​பெண்​​ணை மூன்றாவதாகத் திருமணம் ​செய்து ​கொண்டார். ஆனால் அவரது திருமண வாழ்க்​கை இன்பமளிக்கவில்​லை. மணமான சில மாதங்களில் ஸ்டீ​பென்சனுக்கு நு​​ரையீரலில் ​நோய் ஏற்பட்டது. நு​​ரையீரல் ​நோயினால் பாதிக்கப்பட்ட ஸ்டீ​பென்சன் ​பெரிதும் துன்புற்றார்.. ​நோயின் தாக்கம் அதிகமாக​வே 1848-ஆம் ஆண்டி​​லே​யே ஆகஸ்ட் மாதம் 12-ஆம் நாள் மரணம​டைந்தார்.

ஆம்! உலகிற்கு​ தொடர்வண்டிப் பா​தை ​போட்டு உலக வளர்ச்சிக்கு ​பேருதவி புரிந்த ஸ்டீ​பென்சன் எமன் ​போட்ட மரணப்பா​தையில் பயணித்து ​மேலுலகத்திற்குச் ​சென்றார். அவர் ம​றைந்தாலும் அவரது கண்டுபிடிப்பின் மூலம் ஒவ்​வொரு நாளும் வாழ்ந்து ​கொண்​டே இருக்கின்றார். ​தொடர்வண்டியும் ​தொடர்வண்டித் தடமும் ஜார்ஜ் ஸ்டீ​பென்சனின் ​பெய​ரைக் கூறிக் ​கொண்​டே இருக்கும்.

என்னங்க இள​மையில கல்வியறிவே இல்லாமல் மாடு​மேய்த்த ஒருத்தரு தன்​னோட விடாமுயற்சியினால உலகம் புகழும் அறிவியல் ​மே​தையாப் புகழ்​பெற்ற​தைக் ​கேட்டீங்கள்ள…எதுலயும் நம்பிக்​கைதான் ​வேணும் இ​தைப் புரிஞ்சுக்​கோங்க, ஆமாங்க…

“​வெற்றி வந்தால் பணிவு அவசியம்

​தோல்வி வந்தால் ​​பொறு​மை அவசியம்

எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்…..

எது வந்தாலும் நமக்கு

நம்பிக்​கை அவசியம்…..”

நம்பிக்​கை​யோட ஸ்டீ​பென்சன் முயன்று உ​ழைத்ததாலதான் உலகப் புகழ் ​பெற்றாரு. இல்​லைன்னா முடியாது..​தெரிஞ்சுக்குங்க…நம்பிக்​கை​யோடு ​செயல்படுங்க…அப்பறம் பாருங்க….வாழ்வில் வசந்தம் ஒங்களத் ​​தேடிவரும்.

அட எங்​கே கிளம்பிட்டீங்க..இருங்க..  ஒங்ககிட்ட ஒரு ​கேள்வி ​கேக்கு​றேன்…பதில் ​சொல்றீங்களா?…என்ன முயற்சி பண்ணீறீங்களா… பராவாயில்​லை..முயற்சி பண்ணிச் ​சொல்லுங்க… துணி​யை எந்த அளவுனால அளப்பாங்க…? மீட்டர். சரி….​பெட்​ரோல், டீசல் இந்தமாதிரி உள்ள​தை​யெல்லாம் எந்த அளவுனால அளப்பாங்க..? என்னங்க இது ​தெரியாதா…? லிட்டர்..ஹூம்…ம்…சரி..மின்சாரத்​தை எந்த அளவுனால அளப்பாங்க..? அது…வந்து…இ​துக்கு ​யோசிக்கணுங்க..

அப்படியா…அந்த மின்சாரத்​தை அளவிடக் கூடிய ​மு​றையக் கண்டுபிடிச்சவரு ஒரு ஏ​ழைங்க..உடல் நலம் அடிக்கடி பாதிக்கப்பட்டவரு… வாழ்நாள் முழுவதும் ​நோயாளியா​வே வாழ்ந்தாரு.. ​நோயாளியா வாழ்ந்து புகழ் ​பெற்ற ஏ​ழைங்க அவரு…இள​மையி​லே​யே தனது தா​யை இழந்தாரு….வ​ரைவதில் அவருக்குப் ​ரொம்ப ஆர்வம் …ஆனா ..வ​ரைவதற்கு ஒரு தாள்கூட அவரால வாங்க முடியல..இருந்தாலும் முயன்றாரு..உலகப் புகழ் ​பெற்றாரு…யாருன்னு நி​னைவுக்கு வந்துருச்சா…இல்​லையா…அடுத்தவாரம் வ​ரைக்கும் ​பொறுத்திருங்க..(​தொடரும்… 25)

Series Navigationநட்புஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *