மருத்துவக் கட்டுரை இளம்பிள்ளை வாதம்

This entry is part 4 of 26 in the series 22 செப்டம்பர் 2013

 

                                                       டாக்டர் ஜி. ஜான்சன்
          இளம் பிள்ளை வாதத்தை போலியோ ( POLIO ) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.இது ஒரு கொடிய வைரஸ் வியாதி. இந்த வைரஸ் குழந்தைகளை வெகுவாகத் தாக்குகிறது. அதை போலியோ வைரஸ் ( Polio virus )என்று அழைக்கிறோம். அவை போலியோ வைரஸ் ரகம் 1 ,2 , 3 என்று மூன்று ரகங்கள் உள்ளன           இந்த வைரஸ் வகைகள் குறிப்பாக மூளையையும் நரம்பு மண்டலத்தையும் தாக்கும் தன்மை மிக்கவை. முதுகுத் தண்டு நரம்புகளையும் ( spinal cord ) தலை நரம்புகளையும் அதிகமாக தாக்குகின்றன. இதனால் தசைகளை இயங்கச் செய்யும் செயல் நரம்புகள் ( motor neurones ) செயல் இழந்து போகின்றன. குறிப்பாக கை கால்கள் பாதிக்கப்பட்டால் அவை சூம்பிப்போகின்றன. அதனால் அவர்களால் நடக்க முடியாமல் போய்விடுகிறது.உலக முழுதும் போலியோ வியாதி காணப்பட்டாலும், அது தோன்றும் அளவு ( incidence ) தற்போது குறைந்துள்ளது இதற்குக் காரணம் மக்களிடையே உண்டான சுகாதார விழிப்புணர்வு, முறையான கழிவறைகள், பரவலான தடுப்பு மருந்துகள் பயன்படுத்துவது போன்றவை எனலாம்.

இந்த வைரஸ் மலம் – வாய் வழியாக ( faecal – oral route ) பரவுகிறது. மலத்தில் இந்த வைரஸ் வெளியேறும்.அதனால் அந்த மலம் கலந்த நீரைக் குடிப்பதால் வைரஸ் தொற்று உண்டாகிறது. இதனால்தான் பாதுகாப்பான குடிநீர் வலியுறுத்தப்படுகின்றது . அதோடு உணவகங்களில் பணிபுரிவோரின் கைகள் எப்போது சுத்தமாக இருக்க வேண்டும்.

இளம்பிள்ளை வாத நோயின் அறிகுறிகள்

வைரஸ் தொற்று உண்டான பின் நோயின் அறிகுறி தோன்ற 7 முதல் 14 நாட்கள் ஆகும் . இதை உறங்கும் காலம் ( incubation period ) என்பர். அதன் பின்பு வைரஸ் தன்மைக்கு ஏற்ப அறிகூறிகள் மாறும்.

* வெளியில் தோன்றாத தொற்று வகை – inapparent infection

வைரஸ் தொற்று உண்டான 95 சத விகிதத்தினருக்கு இந்த வகை இருக்கும். இதில் அறிகுறிகள் ஏதும் இருக்காது.

* வெளியில் தோன்றும் தொற்று வகை ( abortive poliomyelitis)

இந்த வகை 4 முதல் 5 சத விகிதத்தினருக்கு உண்டாகலாம். இதில் காய்ச்சல், தொண்டை வலி, தசைகள் வலி போன்றவை தோன்றி சில நாட்களில் தானாக குணமாகும்.

* முடக்குவாதம் இல்லாத இளம்பிள்ளை வாதம் ( non – paralytic poliomyelitis )

இதில் வெளியில் தோன்றும் வகைக்கான அறிகுறிகள் தோன்றுவதோடு மூளைச் சவ்வு தொடர்புடைய தொந்தரவுகள் ( meningeal irritation ) உண்டாகும். ஆனால் நோய் தானாக முற்றிலும் குணமாகிவிடும்.

* முடக்குவாத இளம்பிள்ளை வாதம் ( paralytic poliomyelitis )

இந்த வகைதான் ஆபத்தானது . போலியோ வைரஸ் கிருமியால் தாக்கப்படும் பிள்ளைகளில் ௦.1 சத விகிதத்தினர் இந்த கொடிய வகையால் பாதிக்கப்படுகின்றனர். வாதம் உண்டாவதை துரிதப்படுத்துபவை வருமாறு:

* ஆண் பிள்ளைகள்

* காயம், அறுவை சிகிச்சை, ஊசி போட்டுக் கொள்ளுதல்

* சமீபத்திய தொண்டை சதை அறுவை சிகிச்சை.

இந்த வகையில் காய்ச்சல், தொண்டை வலி, தசை வலி உண்டாகி 4 முதல் 5 நாட்களில் சரியாகும். ஆனால் அதன்பின் நோய் மீண்டும் கடுமையாகத் தோன்றும். மூளை சவ்வு பிரச்னை அதிகமாகும். அதோடு கழுத்து, இடுப்புப் பகுதி தசைகள் கடுமையாக வலிக்கும். இவை ஒருசில நாட்கள் தொடர்ந்தபின் வாதம் உண்டாகும். பாதிக்கப்பட்ட காலில் தசைகள் செயலிழந்து போய்விடும். ஆனால் தொடு உணர்ச்சி குன்றாமல் நிலைத்திருக்கும்.

5 வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு கால்கள் மட்டும் வாதத்தால் பாதிக்கப்படுவர். அதைவிட பெரிய பிள்ளைகளுக்கு கைகளில் வாதம் உண்டாகும். பெரியவர்கள் பாதிக்கப்பட்டால் இரண்டு கால்களும் ( paraplegia ) அல்லது கால்களுடன் இரண்டு கைகளும்கூட ஒரே நேரத்தில் ( quadriplegia ) செயல் இழக்கலாம்.

* முருள வாதம் ( bulbar paralysis )

இதில் தலை நரம்புகள் ( cranial nerves ) மற்றும் சுவாச தசைகளின் நரம்புகள் பாதிக்கப்பட்டு ( respiatory muscle paralysis ) செயல் இழந்து போகலாம். இதுபோல் உதடு, நாக்கு, தொண்டை ஆகிய பகுதிகளிலும் வாதம் உண்டாகும். இந்த பாதிப்பால் இயல்பான காப்பு நரம்பியக்கங்களை நோயாளி இழந்துவிடுகிறார். அதனால் மூச்சடைப்பு, சுவாசச் சீதசன்னி போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது.

இளம்பிள்ளை வாத நோய்க்கான சிகிச்சை முறைகள்

நோய் வந்தபின் இதற்கு அதிகமான சிகிச்சைகள் இல்லை.

துவக்கக் காலத்தில் நல்ல ஓய்வு தேவை.

அதிலிருந்து விடுபட்டு வாதம் உண்டானால் உடற்பயிற்சி மருத்துவம் ( physiotherapy ) , தொழில் முறை மருத்துவம் ( occupational therapy ) போன்றவை தரப்பட்டு உடலுக்கும் உள்ளத்துக்கும் பலம் சேர்க்கலாம். உடல் ஊனமுற்றிருந்தாலும் மனோதிடத்துடன் தான் கற்ற தொழில் செய்யலாம். கால் நடக்க முடியாதவர்கள் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு கிடுக்கிமானி ( calipers ) உதவியுடன் நடக்கலாம்.

இளம்பிள்ளை வாத நோய்த் தடுப்பு

உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ள தடுப்பு மருந்து பயன்படுத்தியதால் இன்று உலகளாவிய நிலையில் இந் நோய் கட்டுப்பாட்டில் உள்ளது நல்ல செய்தி.

இந்த சொட்டு மருந்து பிறந்த குழந்தைகளுக்கு இரண்டாம், மூன்றாம், ஐந்தாம் மாதங்களில் வாய் வழியாக தந்தாலே போதுமானது.

எப்போதுமே பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீரையே பருக வேண்டும் என்பதும் மிக முக்கியமானது.

( முடிந்தது )

Series Navigationஆகஸ்டு-15. நாவல். குமரி.எஸ்.நீலகண்டன் – எளிமையும் இலட்சியமும்குகப்பிரியானந்தா – சித்த வித்தியானந்தா..
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *