பாவ் தந்தையின் நேரடிப் பார்வையில் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டான்.
தந்தையுடன் அதிகாலையில் செய்யும் கஷ்டமான உடற்பயிற்சிகள் உடல் வலியைத் தரும். இருந்தாலும், இருந்த இடத்தின் வனப்பும், காலைச் சூரியனின் மிதமான சூடும், தகதகக்கும் கடலின் எழிலும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது.
அந்த நேரங்களையே தன்னுடைய சந்தோஷமான நாட்களாக இன்றும் ஜாக்கி சான் நினைவு கூர்கிறார்.
அதே வீட்டிலேயே, தாய்க்கு உதவி செய்து கொண்டும் தந்தை காய்கறியை வெட்டிக் கொண்டே திட்டுவதைக் கேட்டுக் கொண்டும் தோழியான தூதுவரின் மகளுக்கு தனக்குத் தெரிந்த உலகத்தைப் பற்றி விவரித்துக் கொண்டும் மீத வாழ்நாளை கழித்திருந்தால் நிச்சயம் நன்றாகவே இருந்திருக்கும் என்று எண்ணிய நேரங்களுமுண்டு.
“பாவ்.. சீக்கிரம்.. சீக்கிரம்..”
பாவ்வின் தாய் பள்ளிக்குச் செல்லத் தயாராகும்படி சொல்லிய வண்ணம் இருப்பார்.
“பள்ளிக்கா?” என்று கோபமாக, காலைத் தரையில் தட்டி, “நான் போக மாட்டேன்” என்று கூறி, பள்ளி செல்ல விருப்பம் இல்லாததை அடிக்கடி பாவ் காட்டுவான்.
“பள்ளிக்குப் போனால் தான் படித்துப் பெரிய ஆளாகலாம்” என்பார் லீ லீ.
ஆனால் அதற்கு பாவ், “போம்மா.. பள்ளிக்கு போக எனக்கு பிடிக்கல்ல..” என்பான்.
குழந்தைகள் பள்ளிக்குச் சென்று நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று அப்போது பாவ் எண்ணினான். சீருடையை அணிந்து, பல மணி நேரங்கள் வகுப்பறையில் அமர்ந்து கொண்டு, எதற்கும் உதவாதவற்றைக் கற்க வேண்டும். வீட்டில் இருந்தால், பள்ளியில் சொல்லிக் கொடுப்பதற்கு மேலாகவே பலவற்றை கற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தான்.
பாவ் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் எனப் பலமுறை சொல்லியும் பலனளிக்கவில்லை. அவனது தந்தை அவனைப் பள்ளியில் சேர்த்தார்.
அந்தப் பள்ளி சாதாரண பள்ளியில்லை. அங்கு வந்து படிக்கும் குழந்தைகள் பலரும் வசதியான குடும்பத்திலிருந்து வந்தனர். நல்ல சூழலில், சிறப்பான முறையில் நடத்தப்பட்ட பள்ளி. வகுப்பறை மிகவும் அகன்றதாக இருந்தது. வெளிச்சமும் காற்றோட்டமும் கொண்டிருந்தது.
அங்கு இருந்த ஆசிரியர்கள் மிகவும் வல்லவர்களாக இருந்தனர். குழந்தைகளை பொறுமையுடன் பராமரிப்பவர்களாக இருந்தனர்.
பள்ளியில் சேரும் நாளும் வந்தது. சானை வலுக்கட்டாயமாக பள்ளிக்கு அழைத்துச் சென்றார் தந்தை. பள்ளிக்கூட வாயிலை கடந்து சென்றார்கள். அந்த நொடியிலிருந்தே அந்த இடத்தை வெறுக்க ஆரம்பித்துவிட்டான் நம் நாயகன்.
தினமும் பள்ளிக்குச் செல்லும் கட்டாயம். பிடிக்காத இடத்திற்கு தினம் செல்வது கஷ்டமாகத் தானே இருக்கும். உணவு நேரம், உடற்பயிற்சி வகுப்பு நேரம் தவிர மற்ற ஒவ்வொரு நொடியையும் வெறுத்தான். ஆசிரியரின் குரலையும், அவர் பேசும் வார்த்தைகளையும் கேட்டு கேட்டு சலிப்படைந்து, வகுப்பறையில் அடைந்து கிடப்பது அவனுக்கு அறவே பிடிக்கவில்லை.
இந்த மூளை வேலையை விட, காலை உடற்பயிற்சிகளைச் செய்து வரும் கை,கால்,உடம்பு வலி, எவ்வளவோ நல்லதாக தோன்றியது. எரிச்சலில் என்ன செய்வது என்பது தெரியாமல் தன்னை உற்சாகப்படுத்திக் கொள்ளும் வகையில், மற்ற குழந்தைகளைப் பார்த்து முக சேஷ்டைகளையும் கோணாங்கிச் செயல்களையும் செய்து பொழுதைக் கழிப்பான். மேஜையில் விரல்களையும், கைகளையும் கொண்டு இசை மெட்டுக்களை உருவாக்கி மகிழ்வான். சும்மாவே மறுபடி மறுபடி நாற்காலியிருந்து கீழே விழுந்து சேட்டைகள் செய்த வண்ணம் இருப்பான்.
ஆசிரியர் அவன் செய்யும் செய்கைகளைக் கண்டும் காணாமலும் விட்டு விடுவார். சில சமயங்களில் அது எல்லை மீறும் போது, பொறுமையற்று, அவனை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்து விடுவார்.
“நீ உருப்படவே மாட்டாய். போ!” என்று கோபத்துடன் கத்தும் நிலைக்கு சானின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்தது. ஆசிரியரின் கோபமான முகம் சானுக்கு வேடிக்கையாக இருக்கும்.
இன்றைய சூழலில் ஹாங்காங்கில் குழந்தைகளை ஆசிரியர்கள் திட்டவோ அடிக்கவோ அனுமதி கிடையாது. குழந்தைகளை தண்டிப்பது சட்டப்படி குற்றம்.
ஆனால் சானின் காலத்தில் அப்படி இல்லை.
ஆசிரியர்கள் மாணவர்களை எப்படி வேண்டுமானாலும் தண்டிக்கலாம். வித விதமான தண்டனைகள் தரப்பட்டன.
மிகவும் சேட்டை செய்பவர்களின் கழுத்தில் “உபயோகமற்றமன்” “பண்பற்றவன்”இ “கெட்ட மாணவன்”இ “சத்தம் செய்பவன்” என்று எழுதிய அட்டைகளைக் கழுத்தில் தொங்க விட்டு, வகுப்பின் வாயில் நிற்க வைப்பது ஒரு விதமான தண்டனை.
மேசையைத் தலையில் தாங்கிக் கொண்டு வகுப்பிலோ வெளியிலோ நிற்பது இன்னொரு விதமான தண்டை.
இது போன்ற தண்டனைகளை சான் பல முறை பெற்றான். வகுப்பிற்குள் உட்காருவதை விட, வகுப்பிற்கு வெளியே நிற்பது மிகவும் சுவாரசியமாக இருந்தது. அமைதியைத் தருவதாக இருந்தது.
யாரும் பார்க்காத போது மேசையைக் கீழே வைத்து விட்டு, சுவரில் சாய்ந்து கொண்டு ஓய்வு எடுப்பது நன்றாக இருந்தது. பள்ளி சென்றதில், நின்று கொண்டே தூங்குவதை மட்டும் மிகவும் நன்றாக கற்றுக் கொண்டேன் என்று சான் நினைவு கூர்கின்றார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு தான், உண்மையிலேயே தான் பள்ளிக் கல்வியைப் பெறாமல் தவற விட்டதற்காக வருந்தினார் ஜாக்கி சான்.
பள்ளிக்கு மறுபடி சென்று கணிதம், வரலாறு, ஆங்கிலம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. சில சமயங்களில் சினிமா தொழிலுக்கு வராமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று யோசிக்கும் போது, இந்த வாழ்க்கைப் போல் இல்லாமல் பள்ளி, கல்லூரி என்று கல்வி கற்று வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்திருக்கலாம். இல்லை சட்டம் படித்து வழக்கறிஞராகவோ, மருத்துவம் பயின்று மருத்துவராகவே ஆகி இருக்கலாம். சான் உலகப் புகழ்பெற்ற நோயாளியாக ஆவதற்கு பதிலாக, உலகப் பிரசித்தி பெற்ற மருத்துவராக ஆகி இருக்கலாம்.
பள்ளி மாணவனாக அவனால் என்றுமே நடந்து கொள்ள முடியவில்லை.
பள்ளிக்கும் வீட்டிற்கும் வெகு தூரம்.
குழந்தை அவ்வளவு தூரம் நடக்க வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில் அவனுடைய தாய் பேருந்தில் சென்று வர காலையிலேயே பணத்தைக் கொடுத்து அனுப்புவார்.
சான் அந்தப் பணத்தை பயணத்திற்காக செலவு செய்ய விரும்பாமல், கடைகளில் நொறுக்குத் தீனி வாங்கிக் கொள்வான். அதை ரசித்து ருசித்து சாப்பிடுவதில் இருக்கும் இன்பம் வேறெதிலும் கிடையாது என்ற எண்ணம் ஏற்படும். ஆனால் பள்ளி விட்டு வரும் நேரம் தான் பேருத்திற்கான பணம் இல்லை என்ற எண்ணம் வருத்ததைத் தரும்.
வீடு போய்ச் சேர என்ன வழி?
சில சமயம் வழியில் வருவோர் போவோரிடம் கேட்டு ஓசி கார் பயணம் செய்வான். சில சமயம் நடந்தே வீடு செல்வான். சான் மிகவும் சாதாரணத் தோற்றம் கொண்டவன் தான். இருந்தாலும் பள்ளிச் சீருடை அணிந்து கொண்டு, பயணம் செய்ய அனுமதி கேட்பது, பலரை உதவத் தூண்டியது. தனக்கு இப்படிப்பட்ட வாய்ப்பு கிட்டியது ஆச்சரியமே என்று சான் இன்றும் அதை எண்ணிப்பார்ப்பதுண்டு.
என்றாவது கார் பயணம் செல்ல வாய்ப்புக் கிட்டவில்லையென்றால், அவன் பல மணி நேரம் நடக்க வேண்டியிருக்கும். நேரத்தை மீதப்படுத்தவும், பெற்றோரிடமிருந்து திட்டு வாங்காமல் தப்பிக்கவும், குறுக்கு வழியில் சென்று, செங்குத்தான பாதையில் தாவி ஏறி வீட்டின் பின்பக்கத்தை அடைவான். அதிர்ஷ்டம் இருந்தால் தந்தை பார்ப்பதற்கு முன்பே, வீட்டை அடைந்து தாயை சந்தித்து விடுவான்.
அதிர்ஷ்டம் இல்லையென்றால், மலை முகட்டின் உச்சியை அடையும் தருணத்தில், தந்தையின் பாதணிகள் தான் முதலில் தென்படும்.
தலையைத் தூக்கிப் பார்த்தால், தந்தையின் இருகிய முகம் தென்படும். எந்த வார்த்தைகளையும் பேசாது, மிகவும் அமைதியாக, சானின் கைகளைப் பிடித்து, தரதரவென்று வீட்டிற்குள் இழுத்துச் சென்று, குப்பை அறைக்குள் விட்டு விடுவார். பள்ளிச்சீருடையை மாற்றவும் நேரம் தரமாட்டார். இது பலமுறை நடந்திருக்கிறது.
சானுக்கு வீடு திரும்பும் வழியில் இடைஞ்சாலாக இருந்தது தந்தை மட்டுமல்ல. மலை முகட்டில் கஷ்டப்பட்டு, தம் பிடித்து வேர்க்க விறுவிறுக்க ஏறி வரும் போது “கெக்கக் கெக்கே” என்று சிரிப்பொலி கேட்கும்.
“ஏய், ஏய், அங்கேப் பாரு! மலையில் குரங்கு!“ என்று யாரோ எழுப்பும் ஒலி கேட்கும்.
சானின் தோழியை எப்போதும் வெறுப்பேத்தும் சிறுவன், மற்றும் அவர்கள் வீட்டிற்கு அக்கம் பக்கத்தில் வசிக்கும் சிறுவர்கள் அனைவருமே எப்போதும் காரில்தான் பள்ளிக்குச் செல்வார்கள். அதனால் வீட்டிற்கும் விரைவில் வந்து விடுவார்கள். அதனால் சான் படும் பாட்டைக் காண அனைவரும் ஆரவாரத்துடன் காத்துக் கொண்டு இருப்பார்கள்.
“என்னடா….பணத்தைத் தொலைத்து விட்டானா?”
“பள்ளிக்குச் போய் வர கூட காசு இல்லாத ஏழையா?”
“இருக்கலாம். அவர்கள் சாதாரண வீட்டு வேலை செய்யும் ஆட்கள் தானே?” இப்படியெல்லாம் பேச்சுக்கள் அடிபடும்.
முதலில் அவர்கள் பேசும் போது மிகுந்த சோர்வின் காரணமாக பேசாமல் இருப்பான். ஆனால் சில நிமிடங்களே அப்படி இருப்பான். பிறகு, அதிகமாக பேசுபவனை கவனித்து, அவனுடன் சண்டைப் போட தயாராகி விடுவான்.
சிறுவர்கள் இடையே சண்டை எப்படி இருக்கும்?
கீழே உருண்டு பிரண்டு, உடைகளை அழுக்காக்கிக் கொள்வார்கள். தந்தையின் தண்டைனை பற்றிய எண்ணம் ஒரு பக்கம். சிறுவர்களின் கேலிப் பேச்சு மறுபக்கம். வேகத்துடன் சண்டை செய்வதோடு சரி. அவன் சண்டையில் எப்போதுமே வென்றதில்லை. உடைகளை அழுக்காக்கிக் கொள்வதே சாதாரணமாக நடக்கும்.
சான் அப்படிப்பட்ட சண்டைகளில் ஒரு சண்டையினை இன்றும் நினைவு கூர்வார்.
ஒரு முறை சண்டையின் போது, ஒரு பணக்கார வீட்டுச் சிறுவன், சானின் காலைப் பிடித்து, அவனை அப்படியே நிலை குலைய வைத்து கீழே தள்ளி விட்டான். சான் கீழே விழ, எதிரி அவன் மேல் வேகமாக விழுந்தான். சான் கீழே விழும் போது சானின் தலையோ அங்கிருந்த பாறையில் மோதியது. அவ்வளவு தான் சானுக்கு உலகமே இருண்டது. அப்படியே மயங்கி விழுந்தான்.
அதற்குப் பிறகு என்ன நடந்தது?
—-
- திண்ணையின் இலக்கியத் தடம் – 2
- ”தவிக்கும் இடைவெளிகள்”—-சிறுகதைத் தொகுப்பு—–ஆசிரியர்—உஷாதீபன்
- ஜாக்கி சான் -9. பள்ளி அனுபவம்
- வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி
- கு சின்னப்ப பாரதி அறக்கட்டளை
- கலித்தொகையில் தொல்காப்பிய மெய்ப்பாடுகள்
- உயிர்த் தீண்டல்
- கடல் என் குழந்தை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -42 ஆதாமின் பிள்ளைகள் – 2 வையகப் பூங்கா (Children of Adam)
- படிக்கலாம் வாங்க..
- தாகூரின் கீதப் பாமாலை – 83 என் இறுதிப் பரிசு .. !
- மருத்துவக் கட்டுரை அல்ஜைமர் நோய்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 29
- கம்பனும் கண்ணதாசனும்
- மைசூரு தசரா எஷ்டந்து சுந்தரா!
- நீங்காத நினைவுகள் – 17
- மதிப்பெண்ணின் மறுப்பக்கம்
- மயிரிழையில்…
- கடவுளும் வெங்கடேசனும்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம்-3 பால கிருஷ்ணன்
- முக்கோணக் கிளிகள் [7] [நெடுங்கதை]
- புகழ் பெற்ற ஏழைகள் 26
- கிம்பர்லிகளைக் காணவில்லை
- கதிரியக்கம் இல்லாத அணுப்பிணைவு மின்சக்தி அதிவிரைவில் விளக்கேற்றும்.
- எண்பதுகளில் தமிழ் இலக்கியம்
- புத்தா ! என்னோடு வாசம் செய்.
- குட்டி மேஜிக்