மைசூரு தசரா எஷ்டந்து சுந்தரா!

This entry is part 15 of 27 in the series 29 செப்டம்பர் 2013
dasara1dasara2 
ஷைலஜா
ஆண்டு தோறும்  மைசூரில்  நடக்கும் தசராத்திருவிழா  உலகப்பிரசித்திபெற்றது. அதற்கான  ஏற்பாடுகளை  பலநாட்கள்  முன்னமே தொடங்கிவிடுவார்கள்.
கலை நிகழ்ச்சிகள் பாரம்பரிய நடனங்கள் இசை  நாடகம்  என மைசூர் நகரமே  களை கட்டும்!
தசராவில் முக்கிய அம்சமாய் இடம் பெறுவது ‘ஜம்போசவாரி’ எனப்படும் யானைகளின் அணிவகுப்பும் அவைகளின் சாகசங்கள் கொண்ட விளையாட்டுக்களும்.
.
தசரா வைபவத்தையொட்டி யானைகள் காட்டிலிருந்து வரவழைக்கப்படுகின்றன. அவைகளை ஒத்திகையின்போதே நகரத்தின் தார் சாலையில் ஏறத்தாழ 40கிலோமீட்டர் தினமும் நடந்து செல்ல பயிற்சி அளிக்கப்படுகிறது. காட்டின் அமைதியான சூழ்நிலையில் மிருதுவான சாலைகளில் நடந்துபழக்கப்பட்ட யானைகள் தார்சாலையின் காலடியில் கண்ணாடிச்சில்லுகள் குத்தியெடுக்க சிரமப்பட்டு நடப்பது
வேதனை. .அணிவகுப்பின்போது யானைகள், கூட்டதினரின் கூச்சலுக்கும் வானவேடிக்கை ஒலிக்கும் மிரண்டு சற்றே முரண்டு செய்தால் பாகனின் ஆயுதம் அவைகளின் உடலைப் பதம் பார்க்கும்
யானைக்குட்டிகளின் கதை இன்னமும் பரிதாபம்.
கபினி  தர்மராயா  நகுலா  என்ற மூன்று  யானைக்குட்டிகளின் கதறல் ஆகஸ்டிலேயே ஆரம்பமாகிவிட்டது. இருபதே மாதமான யானைக்குட்டிகள் தாயைப்பிரிந்தஏக்கத்திலும்,
கால்களில் கயிறுகளால்  இறுக்க மரத்தின் அடிப்பாகங்களில் கட்டப்பட்ட வேதனையிலும் அவதிப்படுகின்றன.
ஆகஸ்ட்28 புதன்கிழமை மைசூர் தசராவின் ஆரம்பகாலதயார் நிலை உருவாகும் தருணம்.
யானைப்பாகர்கள் கொடுக்கும்  சத்து மிகுந்த உணவினை(தாய்ப்பாலுக்கு பதிலாக)  உண்ன மறுக்கின்றன  .யானைகுட்டிகள்  வலுக்கட்டாயமாக தாய்யானைகளிடமிருந்து தசராத்திருவிழா காரணமாய் பிரிக்கப்பட்டுவிட்டன
.
இப்படி இயற்கைக்கு எதிராகப்பிரிக்கப்பட்ட தாய் யானைகளான  வரலஷ்மி(தர்மராயாவின் தாய்) சரளா(கபினியின் தாய்) மற்றும் அர்ஜுனா அபிமன்யூ ஆகிய யானைகள் பெரிய கம்பிகளால் கட்டப்பட்டு லாரிகளில் ஏற்றப்படும்.
நாகரஹோலே காட்டிலிருந்து மைசூருக்கு 70 கிலோமீட்டர் கஜபயணம் நடைபெறும். வழியில் ஒரு சிறுபூஜைக்காக நிறுத்துவார்கள்.யானைகள் லாரியினின்றும் இறக்கப்பட்டு மந்திரி மற்றும உயர்மட்ட கர்னாடக அரசியல் தலைவர்களும் பூஜை செய்கின்றனர்.
 பயணம் தொடர்கிறது.
மாலையில் மைசூரை அடைந்து அங்கே வந்திருக்கும் கஜேந்திரா என்ற மூத்த யானையுடன் சேர்ந்து மற்ற யானைகள் மரத்தில் கட்டப்படுகின்றன.
சரளா  வரலஷ்மி என்ற இரு யானைகளும் அதிகம் உண்பதில்லை அவைகள் சகஜ நிலைக்கு வர ஐந்திலிருந்து ஆறுநாட்களாகிறது என்று ராமன் என்னும் யானைப்பாகன் சொல்கிறார்.
ஆகஸ்ட்30வெள்ளியன்று  இன்னும் எட்டு யானைகள் வேறு இடங்களிலிருந்து தருவிக்கப்பட்டன.
யானைகள் அனைத்தும் அக்டோபர்15வரை ஜம்போ சவாரிக்காக மைசூர் அரண்மனையில் தங்கவைக்கப்படுகின்றன..

பதிமூன்று ஆண்டுகளாக  வன அதிகாரியாக இருக்கும்  நாகரா கூறுகிறார்”பூஜை முடித்து காட்டுக்குத்திரும்பவும்  வரும் யானைகள்  எடைகுறைந்து காண்ப்படும்  இதனால் சி்றப்பு உணவு கொடுக்க  இப்போதெல்லாம் ஏற்பாடு செய்கிறோம்”

750கிலோ எடை உள்ள தங்க முகப்படாமை  வெகுதொலைவிற்குத்தாங்கிச்செல்லும்  யானைகள் விஜயதசமி அன்று  உச்சக்கட்ட ஒலிகளுகளினூடே  21தடவை(பூஜைக்காக  விண் நோக்கி ) சுடப்படும்  துப்பாக்கிச்சத்தபுகைமண்டலங்களுக்கிடையில் நெருக்கும் மனிதக்கூட்டத்தின் நடுவே  முதுகில்  பல்லக்கு மனிதர்கள் வண்ணத்துணிகளின் அணிவகுப்பு இவைகளை சுமந்தபடி செல்லவேண்டி உள்ளது.ஏறக்குறைய ஒருடன்  எடையுள்ளபொருட்களை அமைதியாய்  எடுத்துச்செல்ல  யானையை தயார் செய்கிறார்கள். இந்த  ஒரு டன் எடைபளுவானது யானையின்  உடலில் பல இடங்களில் காயத்தையும் வீக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. வலியைத்தணிக்க யானைகளுக்கு  நிறைய மருந்துகள் கொடுக்கப்படும். யானைகளுக்கு சவாரி முடிந்ததும்  விஸ்கியில்  நனைக்கப்பட்ட  ரொட்டித்துண்டுகள்  வலிமறக்க என்று அளிக்கப்படும்.

யானையின் கர்ஜனையை  மக்கள்கூட்டம் விரும்புகிறது என்கிறார்  யானைப்பாகன் ஒருவர். யானையின் உடலில் தீட்டப்படும் வர்ணக்கோலங்கள்  கண்ணுக்கு விருந்து என்கிறார் இன்னொருவர்!

யானைகளைப்பற்றி கற்றறிந்த  அறிஞர்  அஜாய் தேசாய் கூறுவது அதிர்ச்சியாக உள்ளது.

‘யானையின் முதுகுத்தண்டு  இவ்வளவு எடையைத்தூக்கக்கூடியதே அல்ல இது கொடூரமான மனிதத்தன்மையற்ற செயல்’ என்று கொதிக்கிறார்.
தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்தினால் வலி இல்லாமல் போகுமா?
அதுபோலத் தான். 750கிலோ எடை உள்ள சுமையான தங்கக் கவசம் அதன் வயோதிக உடலை வேதனைப்படுத்தாமல்போகுமா?

பொன் முகப்படாமை 750கிலோவிலிருந்து 250கிலோவாக குறைக்கவேண்டும் என்று   சேர்ந்த விஞ்ஞானி ராமன் சுகுமார்   வலியுறுத்துகிறார்.

தொன்று தொட்டுவரும் கலாசார வைபவம் என்பதால்  கர்னாடக அரசு இந்த உபாயங்கள் எதையும் காதில் வாங்கிக்கொள்வதாகக்காணோம்.

‘இதில் தொன்மைக்கும்  கலாசாரத்திற்கும் எங்கே  இடமிருக்கிறதாம்?  சரித்திரப்படி அந்நாளில் மகாராஜாக்கள்  ஆபரணப்பெட்டி பல்லக்கு  யானையின் முகப்படாமுடன் ஊர்வலம் வந்தார்களாம் சரி  நாம்தான் இப்போது மகாராஜாக்களையே இல்லை என்று செய்துவிட்டோமே அப்படி இருக்க  யானைமீது ஏற்றும் எடையினைக்குறைக்க அரசு மறுக்கும் காரணம் என்ன?’ என தேசாய் மற்றும் சுகுமார்  குமுறுகிறார்கள்.

மைசூர் தசராவை  யானைகளுக்கும் அவஸ்தையற்ற ஏற்றமுள்ள திருவிழாவாக  ஆக்குவதற்கான திட்டங்களை   இவர்கள்  தெரியப்படுத்தி உள்ளார்கள்.

யானைகள்போல பல மிருகங்கள்பால் அன்புகொண்ட  பலர் இன்னும் நம்புகின்றனர் இந்த எடைக்குறைப்புத்திட்டம் நடைமுறைக்கு விரைவில் வந்துவிடுமென்று ஏனென்றால் கர்னாடக உயர்நீதிமன்றம்  அரசுக்கு நோட்டீஸ்அனுப்பி உள்ளது  உடனடியாக இந்த மாற்றத்தைஏற்றுக்கொண்டுவரவேண்டுமென.

 

சில வருடங்கள்  முன்பு தசரா கமிட்டிக்கும் Department Of Wildlife Rescue and Rehabilitation Centre (WRRC)- க்கும் சில ஆலோசனைகளை  என்றுவைத்தாயிற்று.

1. தசரா நேரத்தில் யானைகளை உபயோகிப்பதை நிறுத்தவேண்டும். 2. யானைகளுக்கு, சுமையான முகப்படாம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்

. 3, 20 அல்லது 30 கிலோ எடைக்குமேல் உள்ள மர உருளைகளை யானைகள் தூக்கக்கூடாது.

4. யானைகளின்மீது வண்ணமிட்டு அலங்கரிப்பது கூடாது.

5. வன்மையான பயிற்சிகளைத் தடை செய்யவேண்டும். 2003ஆம் வருடம்பிப்ரவரி மாதத்தில் மட்டும் யானைக் கலவரம் மூன்று முறை நடந்தது. அதில் கொச்சினில் கோயில் விழாவுக்குச் செல்லும் வழியில் பாகனைக் கொன்ற நிகழ்ச்சி மிகவும் வேதனையானது. அமைதியான மனித சஞ்சாரமற்ற காட்டின் இயற்கைச் சூழலிலிருந்து நகரத்திற்கு கொண்டுவரப்படும் விலங்குகள் வன்மையாகவும் கொடூரமாகவும் செயல்படக் காரணம் அவற்றிற்கு நகரத்தின் சந்தடியும் தங்களது தனிமை பறிபோவதாலும்தான்

 

 

இதோ மைசூரில் தசரா திருவிழா ஆரம்பமாகிவிட்டன!. ‘மைசூரு தசரா எஷ்டந்து சுந்தரா?’ (மைசுரின்தசரா, எத்தகைய அழகு?) என்று ஒலிபெருக்கியில் பாடல் வீறிடுகிறது.

 

பயிற்சி யானைகள் அணிவகுப்புப் பாதைகளில் நடக்கத் தயாராகிவிட்டன !

 

 

Series Navigationகம்பனும் கண்ணதாசனும்நீங்காத நினைவுகள் – 17
author

ஷைலஜா

Similar Posts

Comments

  1. Avatar
    N Sivakumar, New Delhi says:

    வண்ண மயமான தசராவிற்கு இப்படி ஒரு மறுபக்கமா? வேதனை… நல்ல சிந்திக்க வைக்கும் கட்டுரை, நன்றி ஷைலஜா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *