ஜாக்கி சான். 12 ஆஸ்திரேலிய மண்ணில்

This entry is part 15 of 31 in the series 20 அக்டோபர் 2013

Jackie-Chan-jackie-chan-5468506-553-800ஆஸ்திரேலிய மண்ணைத் தொட்ட பின் தான் வாழ்க்கை என்ன என்பதை உணர முடிந்தது.  விமான நிலையத்தில் பையை வைத்துக் கொண்டு பெற்றோரைத் தேடி அலைந்தான்.  அவர்கள் சொன்னஎந்தக் குறியீடுகளும் அங்கு இருக்கவில்லை.  கூட்டம் அதிகமாக இருந்தது.  சீன மொழி பேசுவோர் ஒருவரும் இருக்கவில்லை.  சின்ன சீட்டில் வீட்டு முகவரியை வைத்துக் கொண்டு அலைந்தான். அங்கிருக்கும் மனிதர்களிடம் கேட்கலாம் என்றால், நீண்ட முடியும், ஆசிய உருவமும் சாதாரண உடையும் அவர்களை ஓட வைத்தன.  அங்கே தனித்துவிடப் பட்டான்.  அதுவும் அன்னிய நிலத்தில்.

 

இறுதியில் ஒரு விமான பணிப்பெண், சீன மொழி  தெரிந்திருந்ததால், அவனிடம் வந்து பேசினாள்.

 

“எங்கே போக வேண்டும்?”

 

“நான் இந்த முகவரிக்குப் போக வேண்டும்” என்று கூறிவிட்டு, சீட்டைக் கொடுத்தான்.

 

அவள் அதை வாங்கிப் பார்த்தாள்.

 

“இந்த இடம் சிட்னி.  இந்த முகவரி கான்பராவில் இருக்கிறது” என்று சொன்னதும் அதிர்ந்து போனான்.  தவறான இடத்திற்கு வந்து விட்டோமோ .. இனி என்ன செய்வது? என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே,

 

“நீங்கள் இன்னொரு விமானத்தில் அங்கு போக வேண்டும்” என்று கூறினாள்.  அதைக் கேட்டதும், “அது எங்கே இருக்கும்?” என்று உடனே கேட்டான்.

 

விமானப் பணிப்பெண் அவன் செல்ல வேண்டிய விமானம் நிற்கும் இடத்தைக் காட்டி விட்டுச் சென்றாள்.

 

பயந்து கொண்டே சென்றான். இன்னும் என்னவெல்லாம் பட வேண்டுமோ?  ஆங்கிலம் தெரியாமல் திண்டாட வேண்டியிருக்கிறதே என்று வருந்தினான்.

 

கான்பரா சென்று சேர்ந்ததும், அங்கும் தன் பெற்றோரைத் தேடினான்.  அரைமணி நேரம் தேடினான். அவர்களைக் காணவில்லை.  தான் வந்த இடம் சரிதானா என்ற ஐயம் ஏற்பட்டது. இனி தன் கதிஅதோ கதி தான் என்று எண்ணி, மிகச் சோர்வுடன், வெறுத்துப் போய் ஒரு நாற்காலியில் தன் பையை தொப்பென்று போட்டு விட்டு, முகத்தை மூடிக் கொண்டு என்ன செய்வதென்று யோசிக்கத்தொடங்கினான்.  ஹாங்காங் தான் மோசம் என்றால், இங்கு அதை விடவும் மோசமல்லவா?  யார் என்னைப் புரிந்து கொள்வார்கள்?  பெற்றோரிடம் கொண்டு சேர்ப்பார்கள்?

 

அப்போது யாரோ தோளைத் தொட்டது போல் தோன்றியது.

 

நிமிர்ந்து பார்த்தான்.

 

அதீத மகிழ்ச்சி.

 

நின்றிருந்தது அவனது தாய்.

 

“அம்மா..” அப்படியே மகிழ்ச்சியில் கத்தினான்.

 

தாய்க்குப் பின்னால் அவனது தந்தை நின்றிருந்தார்.

 

சான் தன் தந்தையைப் பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறான்.

அவர் சற்று தளர்ந்து காணப்பட்டார். தலைமுடி முழுவதுமாக நரைத்திருந்தது.

 

“அம்மா.. எங்கே போனீங்க?” என்று கோபத்துடன் கேட்டான்.

 

“நாங்கள் இங்கே தான் இருந்தோம்”

 

“அப்போ ஏன் என்னிடம் வரல்லை..”

 

“நீ ஆளே மாறிட்டே போ.. உன்னை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் நாங்களும் உன்னை தேடிக் கொண்டிருந்தோம்.  கடைசியில் நீ இங்கே வந்து உட்கார்ந்ததும் தான் உன்னைத் தெரிந்துகொண்டு இங்கே வந்தோம்..” என்றார் தாய்.

 

பத்து வருடங்கள் அவனைப் பெரிதும் மாற்றியிருந்தது என்பது உண்மை. குண்டாக இருந்தது மாறி ஒல்லியாகி விட்டருந்தான்.  உயரமும் கூடியிருந்தது.  ஆள் அடையாளம் தெரியாமல்உருமாறியிருந்தது உண்மை தான்.

 

தந்தைக்கு அவன் அங்கு வந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது.  ஏனென்றால் பத்தொன்பது வயதில் அங்கு குடியுரிமைப் பெறுவது மிகவும் எளிது.

 

ஹாங்காங்கை 1997லில் சீனாவிற்கு கொடுத்த பின்னர் என்ன நடக்குமோ என்பது தெரிந்திராத நிலையில் ஹாங்காங்வாசிகள் இன்னொரு நாட்டின் குடியுரிமையை வாங்கி வைத்துக் கொள்வதைநல்லது என்று எண்ணியிருந்த காலம் அது.  அதையே சானின் தந்தையும் எண்ணினார்.

 

கான்பராவில் தந்தை பணி செய்து கொண்டிருந்த அமெரிக்க தூதுவர் அலுவலக குடியிருப்புப் பகுதியில் சான், தன் பெற்றோருடன் தங்கினான்.

 

சான் அங்கேயே சிறிது காலம் தங்கியிருந்து குடியுரிமையைப் பெற்றான்.  அதைப் பெற்ற பின், அவனுக்கு தான் மேலும் அன்னியமாகிப் போனதைப் போல் தோன்றியது.

 

பிறந்து வளர்ந்த ஹாங்காங்கிலேயே தன்னால் சாதிக்க முடியாத போது, இந்த அன்னிய மண்ணிலா சாதிக்கப் போகிறோம் என்ற வெறுப்பு தொற்றிக் கொண்டது.

பெற்றோருடன் எந்த வேலையும் செய்யாமல் அவர்களது வருமானத்திலேயே பல மாதங்கள் தங்கிய பின், சானுக்கு மொழிப் பிரச்சினை, கலாசாரம், உணவு என்று எதுவும் பிடிக்காமல் போனது.  வேறுஏதாவது செய்தேயாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.

 

தன் தந்தையிடம் அதைப் பற்றி பேச எண்ணினான்.  அவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில், அவரருகே சென்று “அப்பா..” என்று அழைத்தான்.

 

“வா.. கொங் சாங்.. ஏதாவது சொல்லணுமா?” என்று கேட்டார்.

 

தலையை ஆட்டி விட்டு, “நான் ஹாங்காங்கில் இருப்பவரிடம் பேசினேன்.  என்னைத் திரும்ப வரச் சொல்றாங்க.  எனக்காக ஒரு ஒப்பந்தம் பாத்திருக்கிறது” என்றான் கையில் பாஸ்ப்போர்ட்டைவைத்துக் கொண்டே.

 

அவனை அமைதியாகப் பார்த்தார் தந்தை.  பொய் சொல்கிறான் என்று தெரிந்தது போலும்.  இருந்தாலும் சான் அங்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது தந்தைக்கு புரிந்திருந்தது.

 

“அப்படினா சரி.  வேறே நீயும் இங்கே இருந்து என்ன செய்யப் போறே.  ஒப்பந்தம்ன்ன ஒப்பந்தம். அதுப் படி நடந்துதானேயாகணும்..” என்றார்.

 

கைகளை நீட்டி சானின் கைகளைப் பற்றிக் கொண்டு,  “ஆனா மகனே.. எப்போதும் மறந்துடாதே. இங்க நீ எப்போ வேணுனாலும் வரலாம்” என்று ஆறுதலாகக் கூறினார்.

 

ஆஸ்திரேலியாவை விட்டு கிளம்பினான்.  விமானத்தில் பயணிக்கும் போது, தான் செய்தது தவறா சரியா என்று புரியாமல் தவித்தான்.

 

பொய் சொல்லி விட்டு கிளம்பியாகி விட்டது.  ஹாங்காங் சென்று என்ன செய்வது என்ற பலதரப்பட்ட எண்ணத்துடனேயே பயணம் செய்தான்.

 

—-

Series Navigationபாவடிபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 29.இந்தியா​வை அடி​மையாக்கிய ஏ​ழை
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *