புகழ் பெற்ற ஏழைகள்
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை)
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
29.இந்தியாவை அடிமையாக்கிய ஏழை
என்னங்க பேசாம உம்முன்னு முகத்தை வச்சிக்கிட்டு வர்ரீங்க…அட பதில் சொல்லுங்க…என்னது…நீங்க பாட்டுக்கு வரும்போது யாரோ சிலபேரு வழியில ஒங்கள மறிச்சு பணத்தைத் தர்ரீங்களா…இல்லையான்னு கேட்டாங்களா….?அட அப்பறம் நீங்க என்ன செஞ்சீங்க…என்னது நீங்களும் ஒங்ககூட வந்த நண்பரும் அவங்கள அடிச்சு விரட்டிட்டு வந்தீங்களா…காலம் கலிகாலம் ஆகிப் போச்சுங்க…என்ன செய்யறது….இன்னக்கி நேத்தா இதுமாதிரி நடக்குது…மனிதனிடம் எப்போ வஞ்சனை உள்ளத்துக்குள்ள புகுந்துச்சோ அன்றைக்கே எல்லா கெட்ட குணங்களும் வந்துருச்சு…
மனிதன் உழைச்சுச் சாப்பிடணும்னு நெனச்சான்னா இந்தமாதிரி வழிப்பறியில எல்லாம் ஈடுபடமாட்டான்… பதுக்குற நோக்கம்…கெடுக்கிற நோக்கம்…ஒதுக்குற நோக்கம் இதெல்லாம் மனசுக்குள்ளாற வரவே வராது… நேர்வழியிலதான் நடப்பான்….,நம்ம ஊர்ல மட்டுமா இப்படியெல்லாம் நடக்குதுங்குறீங்க.. ஒலக முழுக்கவும் தான் இது நடக்குது…போனவாரம் ஒங்ககிட்ட ஒரு கேள்வி கேட்டேனே ஒங்களுக்கு ஞாபகம் இருக்கா…? இருக்கு ஆனா பதில் தெரியலையா..? ஒங்களுக்கு இன்றைக்கு ஏற்பட்ட அனுபவத்திற்கும் அந்தக் கேள்விக்கான பதிலுக்கும் ஒரு தொடர்பு இருக்கு… என்னதுங்குறீங்களா…? ஆமாங்க இந்தியாவின் ஆட்சியாளரா மாறி இந்தியாவை அடிமைப்படுத்திய ஏழை இராபர்ட் கிளைவ்தான் அவரு…
ஆமாங்க இராபர்ட் கிளைவ் தன்னுடைய இளம் வயதில் லண்டன் கடைக்காரர்களை அச்சுறுத்தி மிரட்டி மாமூல் வாங்கும் ரௌடியாக இருந்தார். ஒங்கள ரெண்டு பேரு வழிமறிச்சி மிரட்டுனாங்கன்னு சொன்னீங்கள்ள அதுமாதிரிதான் இராபர்ட் கிளைவ்வும் செய்தார்.. வேலையில்லாத நிலை; வறுமை: பசி இவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாத கிளைவ் இந்த மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்தார். மூணு தடவை தற்கொலைக்கு முயன்றார். ஆனா அது நிறைவேறலை.. அவற்றிலிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பித்தார்… ஆனாலும் அவர் கடுமையா முயற்சி செய்வார். தன்னோட குறிக்கோள் நிறைவேற எதவேணும்னாலும் செய்வார். இராபர்ட் கிளைவ்வ பற்றி நிறைய செய்திகள் இருக்கு…சொல்றேன் கேளுங்க.
இராபர்ட் கிளைவ் 1725-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ஆம் நாள் இங்கிலாந்திலுள்ள ஷ்ரோப்ஷையர் என்ற இடத்தில் பிறந்தார். குடும்பத்தில் வளமையில்லை. குடும்பத்திற்கு அடங்கி நடக்காதவராக கிளைவ் இருந்தார். பள்ளியிலும் முரட்டுத்தனமாக இருந்தார். குடும்பத்தில் வறுமை இருந்ததாலும் இவருடைய முரட்டுத்தனத்தாலும் பல்வேறு இழி செயல்களைச் செய்தார். லண்டனுக்கு வந்த கிளைவ் தனது நண்பர்களுடன் கடைக்காரர்களை மிரட்டி அவர்களிடம் பணம்பறித்து வாழ்ந்தார். அவருக்கு அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்குச் சென்றால் பெரும் செல்வந்தராகலாம் என்று கருதிய கிளைவ் இந்தியாவிற்குப் புறப்பட்ட கப்பலில் ஏறினார்.
கப்பலில் வறுமை வாட்டியது. அங்கு பல வேலைகளைச் செய்து பசியைப் போக்கினார். ஒரு கட்டத்தில் விரக்தியினால் கப்பலின் அறையில் இருந்த துப்பாக்கியை எடுத்துத் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். ஆனால் அது வெடிக்கவில்லை. கிளைவ் தன்னைத்தானே நொந்து கொண்டார். பின்னர் அங்கிருந்த கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளிடம் விசுவாசமாக நடந்து கொண்டு அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார்.
எழுத்தர் வேலையும் பிரெஞ்சு முற்றுகையும்
கிழக்கிந்திய நிறுவனம் தென்னிந்தியாவில் வணிகம் செய்வதற்காக 17 – ஆம் நூற்றாண்டின் மத்தியில் முகலாய சக்ரவர்த்தியின் அனுமதியை பெற்றிருந்தது. அப்போது ஆங்கிலேயர்கள் சென்னையில் வணிகத்திற்காக நிறுவியதுதான் தற்போதுள்ள புனித ஜார்ஜ் கோட்டை. இந்த கோட்டையை அடிப்படையாகக் கொண்டு இப்போது சென்னை என்றழைக்கப்படும் நகரம் வளர்ச்சியடைந்தது. ஏறக்குறைய இந்த கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் மேல்மட்டத்தினர்உலாவும் பகுதியாகவே இருந்தது. இந்த கோட்டையில்தான் இங்கிலாந்திலிருந்து வந்த இராபர்ட் கிளைவ் சாதாரண எழுத்தராக 1743 – ஆம் ஆண்டு வேலைக்குச் சேர்தார். அப்போது அவருடைய ஆண்டு ஊதியம் 15 பவுண்டுகளே ஆகும்.
இருப்பினும் இராபர்ட் கிளைவ்விற்கு இப்பணியில் மன நிறைவு ஏற்படவில்லை. இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற அவர் விரும்பினார். ஆனால் அவருக்கு வாய்ப்புக் கிட்டவில்லை. இந்நிலையில் பிரெஞ்சுக் காரர்கள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டத் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தனர். கடுமையாக நடந்த போரில் பிரெஞ்சுப் படையினரின் கை ஓங்கியது. பிரெஞ்சுக்காரர்கள் புனித ஜார்ஜ்கோட்டையை வளைத்துக் கொண்டனர்.
கோட்டையில் இருந்த அனைத்து ஆங்கிலேயர்களையும் பிரெஞ்சுப் படையினர் கைது செய்து அழித்தொழிக்க நினைத்தனர். கோட்டைக்குள் இருந்த ஆங்கிலேயர்கள் தந்திரமாகத் தப்பிச் சென்றனர். கோட்டைக்குள் மாட்டிக் கொண்ட இராபர்ட் கிளைவ் தப்பிச் செல்ல முயற்சித்தார். நள்ளிரவில் தன்உடல் மீது கரியைப் பூசிக்கொண்டு இந்தியரைப் போன்று வேடமிட்டுக் கொண்டு பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார். பிரெஞ்சுக்காரர்கள் சென்னையைப் பிடித்தபோது புனிதஜார்ஜ் கோட்டையில் குமாஸ்தாவாக இருந்த இராபர்ட் கிளைவ் முஸ்லீம் போன்று வேடமிட்டுக் கொண்டு தப்பித்து ஓடினார் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் இந்நிகழ்வைப் பற்றிக் குறிப்பிடுகின்றனர்.
இராணுவத்தில் சேர்தல்
சென்னையிலிருந்து தப்பி ஓடிவந்த கிளைவ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுநர்களைச் சந்தித்து இராணுவத்தில் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு வேணடினார். ஆனால் கிழக்கிந்திய அதிகாரிகளோ அவருக்கு இராணுவத்தினருக்கு உணவு தயாரிக்கும் பணியைக் கொடுத்தனர். அதிலும் உணவு தயாரிப்பதற்கான விறகுகளைக் கொண்டு வரும் பணியே கிளைவ்விற்குக் கிடைத்தது. மனம் நொந்துபோன கிளைவ் எப்படியாவது இராணுவத்தில் ஒரு சாதாரண சிப்பாயாகவாவது சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
பெருமுயற்சிக்குப் பின்னர் இராணுவத்தில் சேர்ந்தார். அவ்வாறு சேர்ந்த இராபர்ட்கிளைவ் தனக்குக் கீழாக சிறு குழுவை உருவாக்கினார். இவரிடம் இருந்த ராணுவ பலம் என்பது வெகு சொற்பமே. மேலும் இவருடன் இருந்தமுக்கால்வாசிப் பேர்கள் பொறுக்கிகளும், காலிகள், சமூகக் கழிசடைகள் போன்றவர்களும் தான் இருந்தனர். இராபர்ட் கிளைவ் தன்னுடைய தந்திரத்தாலும் முயற்சியாலும் இராணுவத்தின் படைப்பிரிவு ஒன்றிற்குத் தளபதியானார்.
இரண்டாம் கர்நாடகப் போர்
1749-54 ஆண்டு காலகட்டத்தில் இரண்டாம் கர்நாடகப் போர் நடைபெற்றது. இதற்கு இரு வாரிசுரிமைப் பூசல்கள் காரணமாக அமைந்தன. 1748 –ஆம் ஆண்டில் ஹைதராபாத் நிசாம் நிசாம்-உல்-முல்க் இறந்தார். அவரது மகன் நசீர்ஜங்கும் பேரன் முசாஃபர் ஜங்கும் அடுத்த நிசாமாகப் போட்டியிட்டனர். அதே வேளை சந்தா சாகிப் ஆற்காடு நவாபாக முயன்றார். முசாஃபர் ஜங்கும் சந்தா சாகிப்பும் பிரெஞ்சு ஆதரவைப் பெற்றிருந்தனர். நசீர் ஜங்கும் ஆற்காடு நவாப்அன்வாருதீனும் பிரிட்டனின் ஆதரவைப் பெற்றிருந்தனர். இருதரப்பினருக்கும் வாரிசுரிமைப் போர் ஏற்பட்டது. இது இரண்டாவது கர்நாடகப் போர் என்று வழங்கப்பட்டது, இப்போரின் தொடக்கத்தில் பிரெஞ்சு தரப்புக்குத் தொடர்வெற்றிகள் கிட்டின. அன்வாருதீன் 1749-ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார். சந்தா சாகிபும் முசாஃபர் ஜங்கும் முறையே கர்நாடக நவாபாகவும் ஆற்காடு நவாபாகவும் பதவியேற்றனர். ஆனால் 1751 –ஆம் ஆண்டில் இராபர்ட் கிளைவ் ஆங்கிலப் படைகளுக்குத் தலைமை தாங்கினார்.
இராபர்ட் கிளைவ் தனது இரக்கமற்ற தந்திர புத்தியால், ஆங்கிலேயத் தளபதியாகி இந்தியாவையே ஆட்டிப் படைத்தார். இராபர்ட் கிளைவ் தலைமையிலான பிரிட்டனின் படைகள் ஆற்காட்டைக் கைப்பற்றின. இராபர்ட் கிளைவ்வின் மதிப்பு உயர்ந்தது. 1754 –ஆம் ஆண்டில் கையெழுத்தான பாண்டிச்சேரி ஒப்பந்தத்தின் மூலம் அமைதி திரும்பியது. முகமது அலி கான் வாலாஜா ஆற்காடு நவாபானார். இப்போரின் பலனாக பிரெஞ்சு தரப்பு பலவீனமடைந்து பிரிட்டனின்கிழக்கிந்திய நிறுவனத்தின் நிலை பலப்பட்டது. கிழக்கிந்திய நிறுவனம் தென்னிந்தியாவில் பலம் பொருந்திய சக்தியாக உருப்பெற்றது. இராபர்ட் கிளைவ் தன்னிடமுள்ள படைகளைக் கொண்டும், இந்தியர்களிடம் காணப்பட்ட உட்பகையைப் பயன்படுத்தியும் அவர்களை வஞ்சித்தும் பிரிட்டனின் ஆட்சியதிகாரத்தை நிலைநாட்டினார்.
பிளாசிப் போரும் (Battle of Plassey) கிளைவின் உயர்வும்
1757 –ஆம் ஆண்டில் பிரிட்டானிய கிழக்கிந்திய நிறுவனத்தற்கும் வங்காளத்தின் நவாப் சிராஜ் உத்-தவுலா விற்கும் இடையே போர் நடைபெற்றது. இதில் கிழக்கிந்திய நிறுவனம் வெற்றி பெற்று வங்காளத்தைக் கைப்பற்றியது.இவ்வெற்றியே இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி தோன்றியதன் முதல் படியாகக் கருதப்படுகிறது.
பிளாசிப் போரானது ஐரோப்பாவில் நடைபெற்ற ஏழாண்டுப் போரின் ஒரு பகுதியாகும். ஆற்காடு நவாப் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆதரவைப் பெற்றிருந்தார். பிரிட்டனின் கோட்டையாக விளங்கிய கல்கத்தாவைத்தாக்கிப் பல ஆங்கிலேயர்களைக் கொன்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் ஆங்கிலேயப் படைகள் வங்காளத்தைத் தாக்கின. பிளாசி என்ற இடத்தில் இரு தரப்பின் படைகளுக்கும் இடையே இறுதிகட்ட மோதல் ஏற்பட்டது. இப்போரில் இராபர்ட் கிளைவ் தலைமையிலான கம்பெனிப் படைகளைக் காட்டிலும் நவாபின் படைகள் பன்மடங்கு எண்ணிக்கையில் அதிகமிருந்தன. இதனைக் கண்ட கிளைவ் ஒரு தந்திரம் செய்தார்.
வஞ்சக எண்ணத்துடன் இராபர்ட் கிளைவ் நவாபின் தளபதி மீர் ஜாஃபருடன் சேர்ந்து கொண்டு ஒரு சதித்திட்டம் தீட்டினார். ஜாஃபருக்கு நவாப் பதவி தருவதாக ஆசை காட்டினார். நாவப்பிற்குத் துரோகம் இழைக்கத் தூண்டினார், இராபர்ட் கிளைவ்வின் இச்சதியின் விளைவாக ஜாஃபரின் கட்டுப்பாட்டிலிருந்த படைப்பிரிவுகள் போரின்போது கம்பனிப் படைகளைத் தாக்காமல் ஒதுங்கிக் கொண்டன. ஜாஃபரின் அணிமாற்றத்தால், கிளைவ் எளிதில் வெற்றிபெற்றார். இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி நிலைநாட்டப்பட்டது. இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியைப் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து இராபர்ட் கிளைவ் ஏற்படுத்தி அதன் முதல் கவர்னர் ஜெனரலாகவும் அதிகாரத்தில் அமர்ந்தார்.
வங்களத்தில் பிளாசிப் போரில் வென்ற கிளைவ் ஆற்காட்டு நாவாப் முகம்மது அலிக்கு,
“முர்ஷிதாபாத்தை அதன் ஏராளமான வளங்களோடு நான் கைப்பற்றியதை எதனாலும் தடுக்கமுடியவில்லை. நான் இந்நாட்டை அழிக்க வரவில்லை. இந்த நகரத்தை ஆளுவதற்கு ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அதன் பெரிய மனிதர்களிடம் விட்டுச்செல்கிறேன். அவர்கள் தைரியமான நல்ல மனிதர் ஜாபர் அலிகானைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். இந்த மாகாணங்களில் சந்தோஷம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் மூலம் கம்பெனிக்கு பல அனுகூலங்கள் கிடைப்பதோடு – இங்கு ஒரு இடத்தில் கூடபிரெஞ்சுக்காரன் காலூன்ற முடியவில்லை என்பது ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது. இங்கு உள்ள பெரிய மனிதர்கள் தங்கள் நன்றியை எனக்குத் தெரிவிப்பதுடன் வெகுமதியும் கிடைக்க அரசவைக்குப் பரிந்துரைத்துள்ளார்கள்.
இந்த வெற்றியின் சந்தோஷத்தை நீ கொண்டாடுவதை நான் பார்க்க வேண்டும். உனக்காகப் போரிட்டு உண்மையான நட்பின் அடையாளங்களை நான் உனக்குக் காண்பித்ததைப் போன்ற சந்தோஷம் வேறு எதுவும் எனக்கு இந்த உலகில் இல்லை”. என்று அதனைமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கடிதம் எழுதினார்.
முகலாயர்களின் வழிவந்த நிலப்பிரபுத்துவ அரசர்கள் தமக்குள் இடைவிடாது போரிட்டுக் கொண்டிருந்தார்கள். இராபர்ட் கிளைவ் தன்னிடம் இருந்த தனக்கு விசுவாசமான குற்றவாளிகளின் துணை கொண்டு, தந்திரத்தாலும்,வஞ்சகம், சூழ்ச்சிகளாலும் இந்தியர்களை வீழ்த்திப் படிப்படிபயாக இந்தியாவை அடிமைப்படுத்திப் பிரிட்டனின் அதிகாரத்தை நிலைநாட்டி, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவாக்கினார்.
இரக்கமற்ற இராபர்ட் கிளைவ்
இந்தியாவின் முதல் தலைமுறை பிரிட்டிஷ் ஆட்சியாளராகப் பொறுப்பேற்ற கிளைவ், லஞ்சம், ஊழல், பொறாமை, பேராசை, காட்டுமிராண்டித்தனம், எது குறித்தும் அஞ்சாமை போன்றவற்றை குணாதிசியமாகக் கொண்டவராகத் திகழ்ந்தார். இந்தியாவை முடிந்தவரைக்கும் சூறையாடினர்.
இராபட் கிளைவ் கவர்னராக இருந்த போது இந்தியர்களின் முதுகெலும்பாக விளங்கிய இரண்டு துறைகளைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இந்தியாவின் கல்வி முறையையும், விவசாய முறையையும் நீண்டஆராய்ச்சியாக எடுத்துக் கொண்டார். முடிவாகக் கல்வியை மெக்காலே என்பவரிடத்தில் ஒப்படைத்து அதில் சீர்திருத்தம் கொண்டு வருமாறும் பிரிட்டனுக்கு ஆதரவாகக் கல்வியில் மாறுதல்களைச் செய்யுமாறும் பணித்தார். இராபர்ட் கிளைவ் இந்தியாவின் இதயமாக விளங்கிய விவசாயத்தில் கை வைத்தார்.
கால்நடைகள் இந்திய விவசாயத்திற்கு அடிப்படையாக இருப்பதை அறிந்து, அவற்றை அழிக்க வேண்டுமென்று கருத்தில் கொண்டு 1760 – ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதல் பசுவதைக்கூடத்தை நிறுவி, நாள்தோறும்கறிக்காக என்ற நோக்கில் 50,000 கால்நடைகளைக் கொல்லும் புனிதப் பணியைத் தொடங்கினார். ஓராண்டில் மட்டும் கொல்லப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை ஒரு கோடியாகும். அதிர்ச்சியான தகவலா இருக்கு பாத்துக்குங்க… இந்தியாவை காலங்காலமா பிரிட்டனின் காலனியாதிக்கத்தில் வைத்திருக்க வேண்டிய நடவடிக்கைகள்ல இக்கால்நடை அழிப்பு என்பது முக்கிய இடத்தை வகிக்கின்றது.
இதுக்குக் காரணம் அப்போது இந்தியாவில் இருந்த விவசாயம் நம்முடைய கால்நடைகளின் சாணம், மூத்திரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே நடைபெற்று வந்தது. இந்திய விவசாயிகள் ஓர் ஏக்கரின் மூலம் 54குவிண்டால் அரிசியை உற்பத்தி செய்து கொண்டிருந்தனர். 1910 – ஆம் ஆண்டு வரைக்கும் இரவு பகலாக இந்த பசுவதைக் கூடம் இயங்கிக் கொண்டேயிருந்தது. இராபர்ட் கிளைவ் தொடங்கிய இவ்வழிப்புத் தொழில் தடையின்றி இன்றுவரைக்கும் நவீனமாக்கப்பட்டு தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதன் பலன் இன்று கோடிக்கணக்கான பணத்தை இரசாயன உரத்திற்காகச் செலவிட வேண்டிய கட்டாயத்தில் நம்நாடு உள்ளது. மண்ணும் மலடாகிக் கொண்டே வருகின்றது. நாம எல்லோரும் இதை யோசிச்சுப் பார்க்கணும்.. இப்ப இருப்பவர்கள் யாரு இதெல்லாம் யோசிக்கிறா… பழங்கதை என்று சொல்லி அதையெல்லாம் கைவிட்டுட்டு வர்ராங்க…என்னத்தச் சொல்றது….
நமது விவசாயத்தில் இருந்த ஏராளமான சாத்தியக்கூறுகள் இன்று இருந்த சுவடே தெரியாத அளவிற்கு காணாமல் போய்விட்டது. இதற்கெல்லாம் அடிதளமாக இருந்தவர் இரக்கமற்ற இந்த இராபர்ட் கிளைவ் ஆவார். இந்தியாவைப் படுகுழிக்கு அழைத்துச் செல்லும் அழிவுப் பாதையைத் திறந்துவிட்டவர் இராபர்ட் கிளைவ் ஆவார். இந்தியாவைச் சுரண்டி அங்கிருந்த செல்வத்தை எல்லாம் அவர் பிரிட்டனுக்கு அனுப்பி வைத்தார்.
இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்குச் சென்று கொண்டிருந்த அளவற்ற செல்வம் பிரிட்டனின் தொழிற்துறையை விரைவில் முன்னேற்ற உதவியது. இந்தியாவுடன் வணிகம் செய்து கொண்டிருந்த பிரிட்டனின் தொழிலதிபர்களுக்குகிடைத்த அளப்பரிய லாபத்தைப் போலுள்ள இது போன்ற உதாரணத்தை உலகப் பொருளாதார உறவுகளின் வரலாற்றிலேயே வேறெங்கிலும் பார்க்க முடியாது. உலகத்தின் தொழிற்சாலையாக பிரிட்டன் மாறுவதற்கு இராபட் கிளைவ் பேருதவி புரிந்தார். இராபர்ட் கிளைவ்வால் இந்தியா மேலும் மேலும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டது.
அத்துடன் இராபர்ட் கிளைவ் தனக்காகச் சேர்த்த சொத்துக்களும் கணக்கில் அடங்காது. நகையாக, பணமாக, பண்ணை வீடுகளாக என்று சொத்துக்களைச் சேர்த்துக் குவித்தார். இவ்வாறு தான் இந்தியாவைச் சுரண்டிக் கொழுத்தனைப் பெருமையாகக் கூறினார், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் “இந்தியர்கள் தங்களுடைய பாதாள அறைகளிலிருந்த தங்கத்தையும் மாணிக்கங்களையும் எனக்கு முன்னால் குவியலாகக் கொட்ட, நான் அந்த குவியல்களுக்கிடையேஉலாவுவதுண்டு ” என்று ஆணவமாகப் பேசினார். இதை நேரு,
“அது பகற்கொள்ளையே. அவர்கள், “பண மரத்தை” ஆட்டினார்கள். பயங்கரமான பஞ்சங்கள் வங்காளத்தை அழிக்கும் வரை அந்த மரத்தைத் திரும்பத் திரும்ப ஆட்டினார்கள்.” என்று குறிப்பிட்டார்.
இரக்கமற்றவரின் மரணம்
தன்னாட்சிக்கு எதிராக யார் பொங்கி எழுந்தாலும் அவர்களை ஈவிரக்கமின்றி கிளைவ் தண்டித்தார். பல ஆண்டுகள் பாரததேசம் அடிமைத் தளையில் சிக்குண்டு தவிப்பதற்கு அடித்தளமிட்ட இராபர்ட் கிளைவ் இந்தியாவில் கீழ்த்தரமான அரசியலை நடத்தினார். இத்தகைய இரக்கமற்ற குரூர உள்ளம் படைத்த கிளைவ் 1774-ஆம் ஆண்டு லண்டனில் நவம்பர் மாதம் 22-ஆம் நாள் மரணித்தார். “பாவத்தின் சம்பளம் மரணம்தானே!”
வறுமையிலிருந்து வந்த கிளைவ் ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போது தன்நிலையை உணர்ந்து நடக்கவில்லை. இராபர்ட் கிளைவ் ஏற்படுத்திய குரூரமான வடுக்கள் இந்தியாவில் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. எப்படியோ வறுமையில் வாடி நாடோடியாக வாழ்க்கையை நகர்த்தி, நாடாளும் நிலைக்கு உயர்ந்த கிளைவ்வின் முயற்சி நினைத்துப் பார்க்கக் கூடியதாகவே உள்ளது. பிரிட்டனின் வரலாற்றில் இராபர்ட் கிளைவ் இன்றும் அந்நாட்டு வரலாற்றாசிரியர்களால் மதிநுட்பம் வாய்ந்தவர் என்றே குறிப்பிடப்படுகின்றார்.
சரி…சரி இராபர்ட்கிளைவ் பற்றி தெரிஞ்சுகிட்டீங்கள்ள துன்பப்பட்டு நாம நல்ல நிலைமைக்கு வந்தாலும் நல்ல உள்ளத்தோடு நடந்துக்கணும்…தான் வந்த பாதையை மறந்துவிட்டு நடக்கக் கூடாது… அப்படி நடந்துக்கிட்டோம்னா பலரோட சாபத்துக்கு ஆளாகணும்..நல்ல எண்ணத்தோடு நல்ல குறிக்கோளை நோக்கி நடைபோடுங்க..அப்பறம் பாருங்க வெற்றி நமக்குத்தான்….
எது கொடிது? வறுமை கொடிது…அதனினும் கொடிது எது…? இளமையில் வறுமை… அந்த இளமையில் வறுமைவாய்ப்பட்டு மிகவும் துன்பப்பட்டவர் ஒருத்தர் இருந்தாரு..அவரு தந்தை இறந்தார்….பத்து வயதிலேயே பள்ளிக்குப் போகாம கூலிவேலைக்குப் போகத் தொடங்கினார்…பல துன்பங்கள்…துயரங்கள்… அதிகம்… பாட்டாளி வர்க்கத்திற்காகப் பாடுபட்டார்… உலகமே அவரைப் புகழ்ந்தூ. பெரிய எழுத்தாளராகப் பரிணமித்தார்… பாட்டாளி வர்க்கஇலக்கியத்தின் பிதாமகன் என்று உலகத்தாரால் பாராட்டப்பட்டார்…அவரு யாரு தெரியுங்களா….? அடுத்தவாரம் வரைக்கும் காத்திருங்க அவரைப் பத்திச் சொல்றேன்……(தொடரும்……….30)
- மெல்ல மெல்ல…
- அகமுகம்
- விவேகானந்தர் 150 -ஆம் ஆண்டுப் பிறந்த நாள் விழாவும் பேராசிரியர் பெஞ்சமின் லெபோவுக்குப் பாராட்டு விழாவும்.
- மருத்துவக் கட்டுரை – குருதி நச்சூட்டு
- ஆழ் கடல்
- உலகெலாம்
- சிறுகவிதைகள்
- நய்யாண்டி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 45 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சுதந்திரமாய் நீயும் நானும் .. !
- ஆணோ பெண்ணோ உயிரே பெரிது
- கண்ணீர் அஞ்சலிகளின் கதை
- பிரயாணம்
- லீலாதிலகத்தில் வேற்றுமைக் கோட்பாடுகள்
- பாவடி
- ஜாக்கி சான். 12 ஆஸ்திரேலிய மண்ணில்
- புகழ் பெற்ற ஏழைகள் 29.இந்தியாவை அடிமையாக்கிய ஏழை
- என்ன இது மாற்றமோ ..?
- திண்ணையின் இலக்கியத் தடம் -5
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 32 (இறுதிப்பகுதி)
- சீதாயணம் [3] (இரண்டாம் காட்சி)
- “காமன்சென்ஸ்” இல்லாத “காமன்வெல்த்” நாடுகள்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-6 பகுதி-2 மதுராவிலிருந்து துவாரகை நோக்கி கம்ச வதம்
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ‘கலை இலக்கியம் 2013’
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பால்வீதி மையப் பூதக் கருந்துளை நோக்கிப் பேரசுர அகில வாயு முகில் விரைகிறது.
- நெடுநல் மாயன்.
- Writing Competition on Tamil History, Arts and Culture (Organized by Ilankai Thamil Sangam) on Saturday November 2nd
- க்ளோஸ்-அப்
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 23
- வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர்
- பார்வையற்றோர் நலப் பணி நினவு கூர்தல்