சில மாதங்களுக்கு முன் அருண், மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தைப் பற்றி நான் பேசாமொழிக்கு எழுதவேண்டும் என்று சொன்னார். அது மகேந்திரனின் முதல் படம் என்றும் தகவல் ஒன்று சொன்னார். எனக்கு சந்தோஷம் தான். ஆனால் முள்ளும் மலரும் நான் பார்த்தில்லை. தில்லியை விட்டு சென்னைக்கு மாறிக் குடி வந்த போது இங்கு முதன் முதலாக பொதிகை தொலைக்காட்சியில் மாறுதலாக பழைய தமிழ்ப் படங்களும் சில வித்தியாசமான தமிழ்ப் படங்களையும் பார்க்க முடிந்திருந்தது. விளம்பர வருமானத்தையே குறியாகக் கொள்ளாமல் மாறுபட்ட நடைமுறைகளை பொதிகை கைக்கொள்ள முடிந்திருக்கிறது காரணம், அது மத்திய அரசின் பொறுப்பில் இருந்தது தான். இப்படித்தான் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் படம் பார்த்து, ‘பரவாயில்லையே, இப்படியும் தமிழ்ல படங்கள் வருகின்றனவே” என்று சந்தோஷப்பட்டேன். அதை நான் பொதிகையில் பார்த்தேனா, இல்லை லோக்சபா தொலைக்காட்சியிலும் க்ளாஸிக்ஸ் என்று சொல்லி அனேக சிறப்பான படங்களையும் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்களே, அதிலா? நினைவில்லை. ஒரு வேளை லோக் சபா தொலைக் காட்சியிலும் பார்த்திருக்கக் கூடும். எதானால் என்ன, விளம்பர வருமானத்தையே நம்பியிருக்காத, அதையே குறியாகக் கொள்ளாத ஒரு தொலைக்காட்சி ஸ்தாபனத்தில் தான் இவற்றைப் பார்த்திருக்க முடியும். பார்த்தேன். இடையிடையே பழைய விஜயகாந்தின் பழைய படத்தையும் க்ளாஸிக்ஸ் என்று சொல்லிக் காட்டுவார்கள் லோக்சபா சானலில். பழசானால் க்ளாஸிக்ஸ் தானாமே.
அது பத்து பன்னிரண்டு வருஷங்களுக்கு முன். அதில் ஒரு நல்ல அபிப்ராயத்தை என்னில் உருவாக்கிய மகேந்திரனின் முதல் படம் என்றால் அதைப் பார்க்க வரும் வாய்ப்பை இழக்க விரும்பவில்லை. நான் அந்தப் படத்தை பார்த்ததில்லை. என்று சொன்னதும் அருண் அதன் குறுந்தகடை அனுப்பி வைத்திருந்தார் ஆனல் மிகுந்த ஆர்வத்தோடு அதைப் பார்த்த எனக்கு, முள்ளும் மலரும் மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. அதில் குத்துப் பாட்டும், வீர வசனமும் இல்லை என்பதைத் தவிர பார்முலா கதை அமைப்பின் ஆதிக்கம் மிகக் குறைவு என்பதைத் தவிர வேறு குணங்கள் எதையும் நான் காணவில்லை. இருப்பினும், தமிழ்ப் படங்களின் அபத்தங்களிலிருந்து மெதுவாக மீளும் ஆரம்ப முயற்சி என்ற அளவில் அதை வரவேற்கலாமே தவிர சினிமா என்ற ஊடகத்தின் பரிச்சயத் தடங்களை நான் அதில் காணவில்லை. ஆனால், பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் சென்னை வந்த புதிதில் பார்த்த உதிரிப் பூக்கள் படத்தின் நினைவுகள் பாதித்தன. ஏன் இப்படி? முள்ளும் மலரும் படத்தின் தடுமாற்றங்கள் எப்படி உதிரிப் பூக்களின் முதிர்ச்சிக்குக் கொண்டுவந்தன என்று யோசிக்க வைத்தது. அதைப் பற்றிக் கூட நான் முள்ளும் மலரும் பற்றி எழுதிய கட்டுரையின் கடைசியில் குறிப்பிட்டிருந்தேன். எப்படியோ, தொடர்ந்து ஒரு ஆபாச அபத்த வரலாற்றையே மிகுந்த கர்வத்துடன் உருவாக்கி வரும் தமிழ் சினிமாவை வேறு பாதைக்கு இட்டுச் செல்லும் முயற்சியில் தட்டுத் தடுமாறியாவது ஈடுபடுவோரைப் பற்றி இப்படி எழுத நேருகிறதே என்று எனக்கு வருத்தமாகத் தான் இருந்தது.
இருந்த போதிலும் என் மனத்துக்கும் ரசனைக்கும் உணர்வுகளுக்கும் ஒவ்வாத பாராட்டை எழுதவும் விருப்பமில்லை எனக்கு. தமிழ் சினிமாவில் என் பிழைப்பும் இல்லை, அதில் வாழ்ந்து பிரபலம் பெறும் ஆசையும் இல்லை. அதில் அவ்வப்போது வேண்டியவரைப் புகழ்ந்து பாராட்டி எழுதி அதில் நுழையவும் விருப்பம் இல்லை. யாரையும் “சார்” சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. முன் தலைமுறையின் :அண்ணே” இப்போது “சார்” ஆகிவிட்டது.
இப்போது மறுபடியும் தொலை பேசியில். ”உங்களுக்குள் நல்ல எண்ணத்தைத் தந்த அந்த உதிரிப்பூக்களைப் பற்றியே எழுதித் தாருங்கள்,” என்று அருண். மறுபடியும் என்னிடமிருந்து அதே வேண்டுகோள்: “ எழுதக் கிடைக்கும் வாய்ப்பு பற்றி சந்தோஷம் தான். ஆனால் எப்போதோ பார்த்தது. மங்கலான நினைவுகளை வைத்துக்கொண்டு எழுதமுடியாது”. என்று சொன்னதும், எப்போதும் போல படத்தின் குறுந்தகடும் அனுப்பி வைத்தார். தொடர்ந்து அதன் யூ ட்யூப் இணைப்பையும் தந்து உதவினார்.
இப்போது அருணனின் உதவியால் உதிரிப்பூக்கள் படத்தை மறுபடியும் பார்த்தாயிற்று. பழைய நினைவுகளைப் புதுப்பித்துக்கொண்டது மட்டுமல்லாமல், இந்தப் படத்தைப் பற்றி முன்னர் எப்படி அவ்வளவு உயர்வாக நான் நினைத்தேன் என்றும் தெரியாத ஒரு தவிப்பு. இருப்பினும் மகேந்திரன் அனேக நல்ல படங்களையும் சினிமா பற்றி அறிந்த இயக்குனர்களையும் பார்த்து ரசித்து மதிக்கத் தெரிந்தவர், இந்திய அளவில் மாத்திரமல்ல, உலகத்துச் சிறந்த இயக்குனர்களையும் அவர் ரசித்துப் போற்றுகிறார் என்று அவரே சொல்ல படித்திருந்த காரணத்தாலும் உதிரிப் பூக்கள் படத்தையும் ஒரு ஆரம்ப தடுமாற்றமாக எடுத்துக்கொண்டு பேச வேண்டும். முள்ளும் மலரும் பார்த்து சில மாதங்களுக்கு முன் எழுதிய போது இந்த புள்ளியிலிருந்து உதிரிப் பூக்கள் புள்ளிக்கு அவர் எப்படி வந்து சேர முடிந்தது என்று எழுதியிருந்தேன். இவை இரண்டுக்கும் இடையில் அதிக கால இடைவெளி இல்லை என்று இப்போது தெரிகிறது. முள்ளும் மலரும் படத்துக்கும் உதிரிப் பூக்கள் படத்துக்கும் இடையே ஒன்றோ இரண்டோ வருடங்கள் தான் இடைவெளி. இரண்டும் 1977-1979 காலகட்டத்தில் வந்தவை,ஏறத்தாழ. ஆக, ஏதும் புரட்சிகர மாற்றங்கள் ஏன் என்று கேள்வி எழுப்பிக்கொண்டு தவிக்கவேண்டியதில்லை.
முள்ளும் மலரும் எடுத்த அதே மகேந்திரன் தான் உதிரிப் பூக்களையும் தந்திருக்கிறார். இரண்டிலும் வரவேற்கத்தக்க குணங்கள் பளிச்சென முதன் முதலாக கிராமத்தில் கதை நிகழ்வதால் கிராமத்திலேயே படப்பிடிப்புக் களனாகக் கொண்டது. கிராமத்து செட் அமைக்காது. கிராமத்து மனிதர்கள் போலவே பாத்திரங்கள் காட்சியளித்தது. வசனங்கள் வெகுவாக குறைக்கப்பட்டது, எல்லாம் முயன்று செய்தது. ஆனால் பாட்டுக்கள் திணிக்கப்பட்டன. தமிழ் சினிமா என்றால் பாட்டு இருக்கத்தானே வேண்டும்? இது தானே சம்பிரதாயம்? கலைகள் யாவையும் போற்றி வளர்க்கும் தமிழ் நாடு ஆச்சே. நாள் முழுதும் உழைத்துக் களைத்த தமிழனுக்கு எண்டர்டெய்மெண்ட் வேண்டாமா? சினிமாவே அதுக்குத் தானே இருக்கு?
உதிரிப்பூக்களில் முதலில் வரும் பாட்டாவது பின்னணியில் வருவது” அழகிய கண்ணே, உறவுகள் நீயே”…. குழந்தைகள் குளிக்கும் கொம்மாளத்தில். ஆனால் இரண்டாவது பாட்டை சண்பகம் ஆற்றங்கரையில் ஒழுங்காக குளித்தோமா, வீடு திரும்பினோமா என்று இராமல் தண்ணீரில் உட்கார்ந்து பாட அவள் தோழிகளில் ஒருத்தி உட்கார்ந்து தன் தொடைகளைத் தட்டித் தாளம் போட இன்னொருத்தி கைகளை ஆட்டி பாவனையில் வயலின் வாசிக்கிறாள். எல்லாம் பாவனைதான். பாவனையோ என்னவோ முதல் ரக பைத்தியக்காரத்தனம். இன்னொரு பாட்டு கடைசியில் வருவது கிராமத்து கல்யாணத்தில் சேர்ந்த ஒரு பெண்கள் கூட்டம். அதன் நடுவில் ஒரு கிழவி.
“போடா போடா பொக்கை, எள்ளுக்காட்டுக்குத் தெக்கே…….. சாமந்திப் பூப்போலே நான் சமைஞ்சிருந்த வேளே,
என்று பாட்டுப் பாட, பின் எழுந்து குத்தாட்டம் போட அங்கிருக்கும் பெண்கள் எல்லாமே அவளோடு எழுந்திருந்து சேர்ந்து ஆட்டம் போடுகிறார்கள். தமிழ் மரபுப் படி பாட்டும் கூத்தும் சேர்ந்த கலைச் சேவையும் செய்தாயிற்று. அதோடு எனக்கு ஒரு சந்தேகம். இன்றைய நக்ஷத்திர நடிகரான, சிம்பு வின் பாட்டும் ஆட்டமும் கொண்ட ஒன்று, “உன்னை எவண்டி பெத்தான், பெத்தான், பெத்தான், அவன் என் முன்னாலே வந்தா செத்தான் செத்தான், செத்தான் என்ற ஆட்டமும் பாட்டும், உதிரிப்பூக்கள் கிழவியின் போடா போடா பொக்கே” பாட்டுக்கு ஆதர்சமும் வாரிசுமா, இல்லை போடா போடா பொக்கே கிழவி தான் ”உன்னை எவண்டி பெத்தான், பெத்தான் “சிம்புவுக்கு முன்னோடியும் வழிகாட்டியுமா? என்பது எனக்கு இன்னம் நிச்சயமாக வில்லை.
இதை தமிழ் சினிமா என்ற சந்தர்ப்பத்தில் அல்லாமல் இப்போது நாம் பேசும் சினிமா என்ற புதிய கலை ஊடகம் என்ற சந்தர்ப்பத்தில் பேசும்போது இந்தக் கிழவி பாட்டையும் ஆட்டத்தையும் ஆபாசம் என்று தான் சொல்லவேண்டும். முதல் பின்னணிப் பாட்டு பழக்கத்தின் தொடர்ச்சி என்றும் இரண்டாவது ஆற்றங்கரை சங்கீத கச்சேரியை பாமர சினிமாவோடு சமரசம் என்றும் சொல்ல வேண்டும்.
இது புதுமைப் பித்தனின் சிற்றன்னை என்ற குறு நாவலைப் படித்ததன் ஆதர்சத்திலோ, அல்லது அதை அடிப்படையாகக் கொண்டு சினிமாவுக்கு ஏற்ற மாற்றங்கள் செய்யப்பட்டது என்றொ சொல்லப்படுகிறது. அதைச் சொல்லாவிட்டாலும் யாரும் இதை புதுமைப் பித்தனின் காபி என்று சொல்லப் போவதில்லை சொல்லாமல் இருந்திருந்தால், புதுமைப் பித்தனின் பெயரைக் களங்கப்படுத்தாத காரியமாகியிருக்கும். அவ்வளவு அபத்த சினிமா திருப்பங்கள், பாத்திரங்கள் இதில் சேர்க்கப் பட்டிருக்கின்றன். புதுமைப் பித்தனின் நாவல் ஒரு பாசமுள்ள தந்தையின் கதை. இறந்து விட்ட முதல் மனைவியின் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றவே கல்யாணம் செய்து கொண்ட இரண்டாம் மனைவி தான் கதையின் மையம். அவள் குழந்தைகளை வெறுப்பவள் அல்ல. இதற்கும் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் கதைக்கும் ஏதும் சம்பந்தமில்லை. சுந்தர வடிவேலு என்ற பெயர் ஒன்று தான் பொதுவானது. மகேந்திரனின் சுந்தர வடிவேலு ஒரு வில்லன். தமிழ் சினிமா வில்லன் இல்லை. அமைதியான, முகத்தோடும் குரல் எழுப்பாத பேச்சோடும் சிறிதளவு பாசமோ சினேகமோ அற்ற கொடூரத்தைக் காட்டுபவன். அவன் பி. எஸ். வீரப்பா வசனம் பேசுவதில்லை. மீசையை முறுக்குவதில்லை. பயங்கர சத்தம் போடுவதில்லை. கண்களை உருட்டி மிரட்டுவதில்லை அமைதித் தோற்றம் தரும் வில்லன், தமிழ் சினிமாவின் முதல் ப்ளஸ் பாயிண்ட் இது. இதற்காக மகேந்திரனைப் பாராட்டலாம். ஆனால் வீட்டுக்கு வந்த பெண்ணை “இது உனக்கு என் ஆசீர்வாதம்” என்று சொல்லிக் கற்பழிக்கிறானே, அந்த வசனமும், அவள் கற்பழிப்பு சீன் ஒன்று வேண்டும் என்பதற்காகவே மகேந்திரன் அவளை அவன் வீட்டுக்கு அனுப்புவதும், அவள் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறவன் அவள் போய்வரட்டும் என்று கிராமத்து வயல் வெளியில் உட்கார்ந்து கொள்வதும், எல்லாம் தமிழ் சினிமா அபத்தம். ஒரு கற்பழிப்பு நடக்க வேண்டும் என்பதற்காகவே எல்லாம் அர்த்தமற்று உருவாக்கப்பட்டவை. இம்மாதிரி நிறைய பாத்திரங்கள் கதையில் மகேந்திரன் விரும்பும் திருப்பங்களுக்காகவே உருவாக்கப்பட்டவை. ஏதோ காட்சி ரூப ஊடகத்துக்காக புதுமைப் பித்தனின் கதையை மாற்றியமைத்தேன் என்று சொல்வது மகா பாபம். தமிழன் ரசிக்கும் சினிமாவுக்காகத்தான் இந்த திருப்பங்கள். அதுவும் நீரில் மூழ்கி சாகப் போகும் தந்தையைப் பார்ப்பதற்க்காக் குழந்தைகள் இரண்டும் வயல் வெளியிடையே ஒடி வந்து தந்தையிடம் முத்தம் பெற்று அவர் சாவதைப் பார்க்கும் கூட்டத்தோடு சேர்வது இருக்கே, அது சகிக்கமுடியாத காட்சித் திணிப்பு.
கிராமத்து மனிதர்கள் எல்லாம் நம்பத்தகுந்த சாதாரண மனிதர்கள் தான். சாரு ஹாஸன், இந்தப் படத்தில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் எந்தப் படத்தில் வந்தாலும் அவர் ஒரு நம்பகமான நாம் எங்கும் பார்க்கும் ஒரு சாதாரண மனிதரை உருவாக்கிவிடுகிறார். உலகநாயகனுக்கு அண்ணன் ஆகும் ஆசையெலாம் அவருக்கு இல்லை. அவர் நடிப்பைப் பற்றி உலக நாயகன் எங்காவது ஏதாவது ஒரு வரியாவது சொல்லியிருக்கிறாரா என்பது தெரியாது. ”இதைப் படிச்சு சொல்லுங்க” என்று ஒரு கடிதத்தை வைத்துக்கொண்டு, பார்க்கிறவர்களையெல்லாம் கேட்கும் ஆளும், சண்பகத்தைக் காதலிக்க ஒரு ஆள் வேண்டாமா என்று உருவாக்கப்பட்ட பள்ளி வாத்தியாரும் அவர் சண்பகத்தைச் சந்திப்பதும் அதுவும் அவள் தோழிகளோடு, பின் நெருங்கிப் பேச்சுக் கொடுப்பதும், கிராமத்தில் நடக்காத விஷயங்கள் அல்லது தமிழ் சினிமா ரசிகர்களுக்காக மிகவாக மிகைப்படுத்தப்பட்ட விஷயங்கள்.. கிராமத்தில் நடக்கும் தோரணையே வேறாகத்தான் இருக்கும். அதில் தமிழ் சினிமா கடைப்பிடிக்கும் வழிகளில் அது இராது. கடைசிக் காட்சி “உனக்கு ஆசீர்வாதம் இது. உன் புருஷனோடு இருக்கும் நேரத்தில் எல்லாம் இது உனக்கு நினைவுக்கு வரவேண்டும்” என்று பேசும் கடைசி வசனம் ஒன்று தான் தமிழ் சினிமா வசனம். அதைத் தவிர சுந்தர வடிவேலு நம்பகமான ஒரு கிராமத்து பெரிய மனுஷ வேடம் தாங்கிய வில்லன். தமிழ் சினிமாவில் அதிசயம். அதே போல் சுந்தர வடிவேலுவின் முதல் மனைவியாக நடிப்பவரும் மிக அமைதியான, தன் துக்கங்களை வசனம் பேசாமல், வெளிப்படுத்தும் நடிப்பு தமிழ் சினிமாவின் இன்னொரு அதிசயம். கிராமத்து சூழல், மனிதர்கள், இந்த இரண்டு அதிசயங்கள் தான் உதிரிப்பூக்களைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தை என் மனதிற்குத் தந்திருக்க வேண்டும். இரண்டு பைத்தியக்காரப் பாட்டுக்கள் திணிக்கப்பட்டுள்ளதை நான் எப்படி மறந்தேனோ தெரியவில்லை. இன்னொரு டிபிகல் தமிழ் சினிமா பாத்திரத்தையும் மறந்துவிட்டேன். சுந்தர வடிவேலின் அம்மாவாக, சரியான சமயத்தில் வந்து தன் மகனுக்குப் பெண் தேட வந்து தமிழ் சினிமா கலக வேலை செய்யும் அதற்கென்றே வரும் சி.டி ராஜகாந்தம். இப்போதெல்லாம் அம்மா பாத்திரம் என்றால் “சரண்யாவைப் போட்டுடலாம்ங்க” என்று டயலாக் வருவது போல, அன்று சி.டி ராஜகாந்தத்துக்கு ஒரு ரோல் பத்திரப் படுத்தி வைக்கப் பட்டிருந்தது. மகேந்திரன் இயக்குனராக திரைக் காவியங்கள் படைக்கத் தொடங்கும் முன் நிறைய தமிழ்ப் படங்களுக்கு கதை எழுதியும் திரைக்கதை வசனம் எழுதியும் வந்திருக்கிறார் என்று தெரிகிறது.
நிச்சயம் அந்த அனுபவத்தின் சாயைகளை அவரது இந்த இரண்டு படங்களிலும் பார்க்கலாம் என்றாலும், அதை அவரால் முற்றாகத் தவிர்க்க முடியவில்லையா அல்லது தவிர்க்க விரும்பவில்லையா என்பது தெரியவில்லை. ஆனால் அதிலிருந்து வெளிவர முயலும் தடங்களை இந்த இரண்டு படங்களிலும் நிச்சயமாகப் பார்க்கலாம்.
வெளிவர முடியவில்லையா, அல்லது தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுதி தமிழ் சினிமாவின் ஒரு அங்கமாகி விட்டதால், அதிலேயே தொடர்வதால் தான், சினிமாவில் தம் வாழ்க்கையைத் தொடர்கிறவரகள் எல்லாம் தமிழ் சினிமா தெய்வங்களையெல்லாம் எப்படி அர்ச்சிக்க வேண்டுமோ அதே மந்திரங்களாலே தான் மகேந்திரனும் எல்லா தெய்வங்களையும் ”போற்றி போற்றி” நாமாவளி பாடியிருக்கிறார். ஒரு இழை பிசகவில்லை. ஒரு மந்திரம் கூட தப்பாகச் சொல்லிவிடவில்லை.(மகேந்திரனின் “சினிமாவும் நானும்”)
இரண்டு நல்ல தொடக்கங்களை முயற்சித்த மகேந்திரனைப் பற்றி இவ்வாறெல்லாம் எழுதுவது எனக்கு இஷ்டமில்லை தான். ஆனால் நான் பார்க்காத நல்லது எதையும் பாராட்டி எழுதமுடிவதில்லை. முகம் சுழிக்க வைப்பதையும் எழுதாது இருக்க முடியவில்லை.
சினிமா என்ற கலை வடிவத்தைச் சற்றும் புரிந்து கொள்ளாத பிரபலங்களை யெல்லாம் பற்றிப் பரவசப்பட்டுப் பேசுகிறார். நடிகர் திலகம் ஒரு உலக அற்புதம் என்கிறார். ஸ்ரீதரா? அந்த பெரிய்ய புகழ் படைத்த என் மானசீக ஹீரோ, எதற்காக என்னைத் தேடி வருகிறார்? என்று வெலவெலத்துப் போகிறார். அவருக்கு கையும் காலும் ஓடவில்லை என்கிறார். எந்தத் தமிழ்ப் படத்தைப் பற்றிப் பேசினாலும் நடிகர், இயக்குனர் பற்றிப் பேசினாலும் அது பற்றி மகேந்திரன் சொல்லும் ஒரே பாராட்டு “வெற்றிப் படம்” அது இதைத் தவிர வேறு எதுவும் அவர் ரசித்த தமிழ்ப் படங்கள் பற்றிச் சொல்வதில்லை. தமிழில் வெற்றிப்படங்கள் என்றால் என்ன அர்த்தம்? தேவரின் ஹாத்தி மேரே சாத்தியும் அவருக்கு வெற்றிப் படம் தான். ஸ்ரீதரின் கல்யாணப் பரிசு, சிவாஜியின் பராசக்தி எல்லாம் வெற்றிப் படம் தான். கிருஷ்ணன் பஞ்சுவோ திரை உலக ஜாம்பவான். ஒரு இலக்கியம் படமாக்கப் படும்போது அது சினிமாவுக்கு ஏற்ப மாற்றப் படவேண்டும். அகிலனின் “பாவை விளக்கு”, கல்கியின் பார்த்திபன் கனவு, கள்வனின் காதலி” எல்லாம் தோல்வி அடையக்காரணம் சினிமாவுக்கு ஏற்ப மாற்றப்படாத காரணம் தான். ஆனால் தில்லானா மோகனாம்பாள், மலைக்கள்ளன், எல்லாம் ஹிமாலய வெற்றிப்படங்கள். காரணம் “இந்த இலக்கியங்கள்” சினிமாவுக்கு ஏற்ப திரைக்கதை எழுதப்பட்டது தானாம். மகேந்திரன் சொல்கிறார்.. என்ன சொல்வது? புதுமைப் பித்தனின் சிற்றன்னையும் உதிரிப்பூக்கள் ஆனது சினிமாவுக்கு ஏற்ப காட்சி ஊடகமாயிற்றே, மகேந்திரன் மாற்றியிருக்கிறதால் அது வெற்றிப்படமாகியுள்ளது. சரிதானா? காட்சி அனுபவம் தரத்தான், புதுமைப் பித்தன் சேர்க்காத கிழவி பாத்திரத்தையும் அவள் ”போடா போடா பொக்கே..” பாடி ஆடுவதையும் சேர்த்து அதை வெற்றிப் படமாக்கி யிருக்கிறாரா?.
இதையெல்லாம் நான் மகேந்திரனின் எழுத்தும் பேட்டிகளும் அடங்கிய “சினிமாவும் நானும்” என்னும் புத்தகத்திலிருந்து எடுத்துக்கொண்டுள்ளேன். இந்தப் புத்தகத்தில் ஒரு இடத்தில் கூட 1930 களிலிருந்து 2000 வரை வெளிவந்துள்ள எந்த தமிழ்ப் படம் பற்றியும், எந்த இயக்குனர் பற்றியும் எந்த நடிகர் பற்றியும் விமர்சன பூர்வமாக ஒரு கருத்து அவர் சொல்லவில்லை. எல்லாம் திரைக் காவியம் தான். வெற்றிப் படங்கள் தான். நடிப்புலகச் சக்கரவர்த்தி தான். நடிப்புலக மேதை தான். “நாமெல்லாம் புண்ணியாத்மாக்கள். அவர் வாழ்ந்த கால கட்டத்தில் நாம் பிறந்திருக்கிறோம்” தான். போதுமா?
வேடிககையும் வேதனையும் என்னவென்றால், இதே புத்தகத்தில் மகேந்திரன் ரே என்ன, ஷ்யாம் பெனெகல் என்ன, ஃப்ரான்ஸ்வா ட்ரூஃபோ என்ன, இரானிய படங்கள் என்ன என்று உலகத்து கலைச்சிகரங்களையும் அதேமூச்சில் பாராட்டி வியக்கிறார். இது எப்படி சாத்தியம்? ஒரு வேளை சாத்தியம் போலும். முள்ளும் மலரும் படத்திலிருந்து காட்டுப் பூக்கள் வரை 14 படங்களை இவர் இயக்கியிருக்கிறார். அதற்கு முன் 26 தமிழ்ப் படங்களுக்கு கதையோ, திரைக்கதையும் வசனமுமோ இவர் எழுதியிருக்கிறார்.
இப்போது 10.4.2013 ஆனந்த விகடனில் அவர் பேட்டி ஒன்று பிரசுரமாகி யுள்ளது. அதிலிருந்து சில வரிகள்:
1955-லேயே “பதேர் பஞ்சலி” படம் எடுத்துட்டார் சத்யஜித் ரே. அந்தக் காலத்தில் தான் அதீதநடிப்பு, அளவில்லாத பாடல்கள் வெச்சு ஹரிதாஸ்,அசோக் குமார் படங்கள் எடுத்துட்டு இருந்தோம் பராசக்தி, மனோஹரா படங்களில் ரசிகர்களுக்கே வாய் வலிக்கிற அளவுக்கு வசனம் பேசுவாங்க. பல படங்கள் அழுவாச்சிக் காவியங்களா இருந்தன… இண்ணைக்கும் ரஜனி மகா நடிகன் தான்.அதுல சந்தேகம் வேண்டாம். ரஜனி இப்படித்தான் இருக்கணும் நடிக்கணும்னு பண்ணீட்டாங்க
நல்ல சினிமாவுக்குப் பெரிய பட்ஜெட், பெரிய ஆர்டிஸ்ட் தேவை இல்லை மனசு தான் தேவை. பல இரானிய, மராட்டி, கொரிய படங்கள் தென்னிந்திய ரசிகர்களின் பார்வைக்கே வரதில்லை… தமிழ், மலயாளம், தெலுங்கு இந்தி, ஹாலிவுட் படங்களை மட்டும் தான் திரையிடறாங்க. டி.வி.டி. திரைப்பட விழாக்கள்னு எங்கேயும் அப்படியான யதார்த்த சினிமாக்களைப் பார்க்க வாய்ப்பு இல்லாத சாமான்ய ரசிகனுக்கு நாம் காட்டுறதான் சினிமா, பாட்டு, டான்ஸ், ஃபைட் இருக்கும் மசாலாப் படம் பார்த்துட்டு இதுக்கு மேலே சினிமான்னு ஒண்ணு கிடையாதுன்னு நினைப்பாங்க…..
(ஒரு சின்ன தகவல் பி்ழை. ஹரிதாஸ், அஷோக் குமார் எல்லாம் பாதேர் பஞ்சலி படத்துக்கு கிட்டத்தட்ட 10 வருஷங்கள் முந்தியவை. அதெல்லாம் போகட்டும். 1955- வந்த பாதேர் பஞ்சலிக்கு ஈடாக அல்ல, கிட்டத்தட்ட ஒரு பத்து மைல் தூரத்திலாவது நிறக்ககூடிய ஒரு தமிழ் படம் இன்று (2013) வரை இல்லை. இனியும் வரும் வாய்ப்பு குறைவு. நாம் சிம்புக்களையும் சந்தானங்களையும் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம்.
ஆக, திரும்ப விஷயத்துக்கு வரலாம். சினிமாவும் நானும் மகேந்திரன் வேறே மகேந்திரன். உதிரிப் பூக்கள் மகேந்திரனோ, நாமெல்லாம் புண்ணியாத்மாககள் அவர் காலகட்டத்திலே பிறந்திருக்கோம்” என்று நடிப்புலகச் சக்கரவர்த்தியைப் பாராட்டி மகிழும் மகேந்திரன் வேறே தான்.
வருத்தமாகத் தான் இருக்கிறது.
வெங்கட் சாமிநாதன்/3.11.2013
- புதிய கோடாங்கிச் சிற்றிதழ்களில் சமூக மாற்றுச் சிந்தனைகள்
- மருமகளின் மர்மம் – 4
- வெள்ளையானை நாவல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்
- திண்ணையின் இலக்கியத்தடம் -10
- மாத்தளை சோமுவின் கதைகளில் செவ்வியல் இலக்கியத் தாக்கம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 50 ஆதாமின் பிள்ளைகள் – 3
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் – 10 சுபத்ராவின் ஹரணம்
- எப்படி முடிந்தது அவளால் ?
- டௌரி தராத கௌரி கல்யாணம்….! -26
- காசேதான் கடவுளடா
- துளைகளிடப்பட்ட இதயங்களோடு தேர்தலை நோக்கிப் பயணிக்கும் வடக்கு
- United Nations : URGENT APPEAL: RENOWNED TAMIL POET ARRESTED AND DETAINED
- நாஞ்சில் நாடனின் “கம்பனின் அம்பறாத்தூணி”
- மரணம்
- ஜூனோ (அமெரிக்கா, இயக்குநர் – ஜேசன் ரைட்மன்) மற்றும் ஆதலால் காதல் செய்வீர் (தமிழ்நாடு, இயக்குநர் – சுசீந்திரன்) இரண்டு கலாச்சாரங்களும் ஒரு நிகழ்வும்
- நீங்காத நினைவுகள் – 24
- ஜாக்கி சான் 17. குருவின் இளவல்
- தாகூரின் கீதப் பாமாலை – 90 தென்றல் நாட்டியங்கள் .. !
- கரிக்கட்டை
- புகழ் பெற்ற ஏழைகள் – 34
- சீதாயணம் நாடகம் -8 படக்கதை -8
- பாரதியின் பெண்ணுரிமைக் குரல்;
- மகேந்திரனின் உதிரிப்பூக்கள் – ஒரு மறுபார்வை
- நாசா விண்ணுளவி காணாமல் போன பூர்வ பூமியின் இரண்டாம் நிலவைப் பற்றித் தெளிவாய் வெளிப்படுத்தும்