மனம் போனபடி .. மரம் போனபடி

This entry is part 26 of 26 in the series 8 டிசம்பர் 2013

இரா.முருகன்

polyalthia-longifolia-trees1நெட்டிலிங்க மரம் தெரியுமா? உசரமாக, பனை மரத்தை விட உசரமாக, ஓங்கு தாங்காக வளர்ந்து நிற்கும். ஒண்ணு ரெண்டு இல்லை. வரிசையாக எட்டு நெட்டிலிங்க மரம். பள்ளிக்கூடத்தில் உள்ளே நுழைந்ததுமே அவைதான் வாவா என்று வரவேற்கிற பாவனையில் அணிவகுப்பு மரியாதை செய்தபடி நெட்டக் குத்தலாக கண்ணில் படும்.

இதெல்லாம் பூப்பூத்து காய்க்குமா?

டிராயிங் மாஸ்டரைக் கேட்டேன். அவரை ஏன் கேட்கணும்னு தெரியலை. ஆனால் வேறே யாரும் பதில் சொல்ல மாட்டார்கள்.

காய்க்குமே.

சாப்பிடலாமா?

அவர் யோசித்தார். யாரும் சாப்பிட்டுப் பார்த்ததில்லையாம்.

பழம்.

பழுக்காது.

அப்புறம் எதுக்கு சார் காய் விடணும்?

அதானே? சமாதானமா இருக்கலாம் இல்லே?

அவர் இருபத்தாறு இஞ்ச் சைக்கிளில் லாவகமாக ஏறி ராம் தியேட்டருக்குக் கிளம்பி விட்டார். சாயந்திரம் ஆனால் அங்கே டிக்கட் கிழிக்கிற உத்தியோகம்.

முதலாவதாக நின்ற நெட்டிலிங்க மரத்தைக் கேட்டேன். அதுக்குப் பேசப் பிடிக்கவில்லை. தூரத்தில் எங்கேயோ பார்த்துக் கொண்டு நின்றது. சும்மா. பேசப் பிடிக்காவிட்டால் சொல்ல வேண்டியதுதானே.

அடுத்தாற்போல் நின்ற மரம் என்ன சமாசாரம் என்று விசாரித்தது. சொன்னேன்.

அந்தப் பக்கமா, டிரில் மாஸ்டர் டொம் டொம்முனு கொட்டு கொட்டி இந்தியிலே கத்தி டிரில் வாங்கறாரே உங்க எல்லாரையும், அங்கேதான். நாலு ஒதிய மரம் நிக்குதே அங்கனக்குள்ளே. எதுக்கு நிக்கறீகன்னு விசாரிச்சுட்டு வா முதல்லே.

ஒதிய மரத்தைக் கேட்டேன். டிரில் மாஸ்டர் இல்லாத நேரம். இருந்தால் பிடித்து நிறுத்தி சாவ்தான் என்று அடித் தொண்டையில் கத்துவார். அட்டென்ஷனில் நிற்காவிட்டால் மைதானத்தைச் சுற்றி ஓட விடுவார். வடக்கில் செட்டி ஊரணியை ஒட்டி ஒரு மரம் கூட இல்லாத பாதை அது.

வீட்டுலே எதுக்கு பாட்டன் இருக்காக, எதுக்காக அப்பத்தா, அம்மாச்சி எல்லாம்? வயசாளிங்க இருந்தா வீட்டுக்கு ஒரு மதிப்பு. நானும் நெட்டுலிங்க மரமும் அப்படித்தான். பாட்டனை வாசல்லே போட்டு கூழ் ஊத்தாம பட்டினி போட்டாலும் பேசிக்கிட்டே கிடப்பாரு இல்லே. தண்ணி ஊத்தாம விட்டாலும் நாங்களும் ஓரமா நின்னு உன்னிய, ஊரை எல்லாம் எப்பதிக்கும் பார்த்துக்கிட்டே இருப்போம்.

பாவமாக இருந்தது. தாத்தாவை வெட்ட முடியாது. நெட்டிலிங்க மரத்தை, நீளமான கழியில் அரிவாளைக் கட்டி கையை வெட்டலாம். ஒவ்வொரு கிளையாக விழ, அதை எடுத்துக் காய வைத்து என்ன செய்வார்களோ தெரியாது. மரத்தை மூளியாக நிற்க வைத்தால் ஏதோ கடமை நிறைவேறின திருப்தி தோட்டக்கார வெள்ளையனுக்கு.

ஒயிட்டு, ஒதிய மரத்தை என்ன பண்ணப் போறே?

டிரில் மாஸ்டர் கேட்டபோது ஒயிட் சொல்வான்.

‘நாகராஜன் சார் வீட்டு வாசல்லே பறிச்சு நட்டுடலாமா தொரே? உசரம் சரிசமனா இருக்கும்’.

நாகராஜன் சார் நாலரை அடி. ஒதிய மரம் ஒன்பது அடி. வெள்ளையன் கணக்குக்கு நாகராஜனே சிரிப்பார். ஆனால் அவர் லயன் வீட்டில் குடியிருந்ததால் மரம் வைக்க எல்லாம் இடம் கிடையாது. நடக்கிற இடத்தில் நட்ட நடுவே மாடம் கட்டி, சிமிண்ட் தொட்டியில் வாடிப்போன துளசிச் செடி தான் வைத்திருப்பார்.

ஆனாலும் அண்ணாதுரைக்கு வாய் அதிகம். அறிஞர் அண்ணா இல்லை இது. எட்டாம் கிளாஸில் கூடப் படித்த அண்ணாதுரை. தலையில் பனங்கொட்டையைக் கிடத்திப் போட்டு ஓரத்தில் சீப்பால் வரட் வரட் என்று வாரி நாலு இழை முன்னால் இழுத்து விட்ட மாதிரி தலைமுடி. அதுக்கு ஈடாக கொஞ்சம் முன்னே தள்ளிய பல்.

ஜூனியர் தமிழய்யா நீலமேகம் புரிந்து கொள்ள முடியாத ஆசாமி. தீபாவளி லீவு முடிந்து ரெண்டு நாள் கழிந்து கசங்கின புதுச் சட்டையில் பட்டாசு வாடையோடு வகுப்பில் போய் சிரத்தையில்லாமல் உட்கார்ந்திருக்கும்போது கேட்பார் – தீவிளி கொண்டாடினீகளாக்கும்.

ஆமா என்றால் துச்சமாக ஒரு சிரிப்பு. அக்பரையும் டேவிட் ஆசீரையும் தவிர எல்லோருக்கும் இது சம விகிதத்தில் பகிர்ந்து ஈயப்படும்.

சார் நீங்க கொண்டாடினீகளா?

ஆரிய ஆதிக்கக் கும்பல் நரன்கோன் என்ற தமிழ் மன்னனை அழித்த நாள் அது. உணர்ச்சி வசப்பட வேணாமா, குறைஞ்சது வருத்தமாவது. மரம் மாதிரி நிக்கறீங்களே. நான் கருப்பு சட்டை போட்டு துக்கம் கொண்டாடினேண்டா என்பார் வாத்தியார். சந்தோஷமாக. இனிப்பு? அடி செருப்பாலே. பக்கத்து வீட்டுலே இனிப்புச் சீயன் கொடுத்து விட்டாக. வயசான கட்டுக் களுத்தி பாவம். வேணாம்னு சொல்ல வேணாமேன்னு வாங்கி வாயிலே போட்டுக்கிட்டேன்.

சார் கட்டுக் கெளுத்தின்னா என்ன?

அண்ணாதுரை அவர் வாயைப் பிடுங்கினான். களுத்தி கெளுத்தியானதை வாத்தியார் கவனிக்கவில்லை போல.

வாவரசிடா.

வாவரச மரம்னு சொல்வாங்களே.

வாத்தியார் பாய்ந்து வந்து அவன் பனங்கொட்டைத் தலையைப் பிடித்து உலுக்கி வலிக்காமல் முதுகில் அடித்தார்.

என்னத்துக்குடா நீ எல்லாம் படிக்க வந்து உயிரை வாங்கறே. நிறை மங்கலமா நிக்கற கிழவியைப் பத்தி வாயாரப் பேசறேன். நீ வாவரச மரம், பூவரச மரம்னு பேசறே. உங்கப்பன் எங்கே? என்னை வந்து பாக்கச் சொல்லு,

அவர் பாரஸ்ட் டிபார்ட்மெண்டிலே நெம்மாராவிலே இருக்கார் சார்.

வாத்தியார் தீபாவளி கொண்டாடாவிட்டாலும் வாவரசிகளை மதிப்பவர். அவர்களையும் வாவரச மரத்தையும் விட்டுவிட்டு வனத்தைச் சுற்ற ஆரம்பித்தார் அவர். கிளையில் பாம்பு தொங்க விழுது என்று குரங்கு தொட்டு விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கென்று குதித்ததுபோல் கிளைதொறும் தாவித்தாவி கீழுள்ள விழுதையெல்லாம் எல்லாம் ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி உச்சிபோய் தன் வால் பார்க்கும் கதை. பாரதிதாசன் நெம்மாரா போனாரா என்று கேட்க ஆசை.

சாயந்திரம் வீட்டுக்குப் போக சைக்கிளை எடுக்கிறபோது ஒயிட்டிடம் வாவரச மரம் பற்றிக் கேட்டேன். பதியம் போட்டு வீட்டுலே கொண்டு வந்து தரட்டா என்றான். எங்க வீட்டுலே மரம் எங்கே வளர்க்க? என்னை வளர்த்தாப் போறாதா?

நாளைக்கு கிளாஸ் கிடையாது. கல்விச் சுற்றுலா.

ரொம்ப நிம்மதியாக இருந்தது. எதையும் எழுதப் படிக்கத் தேவை இல்லை. எங்கே போகணும் என்று கூட அப்புறம்தான் கேட்டேன்.

முத்துப்பட்டிக்கு.

ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் முத்துப்பட்டியில் உலா போக என்ன இருக்கு? ஏன் இல்லாம? ஆரஞ்சு ஜூஸை கரைத்து வைத்த மாதிரி தண்ணீர் நிறைந்து அலையடிக்கிற குளம். கரையில் பெரிய, ரொம்பப் பெரிய்ய்ய ஆலமரம்.

மதியச் சாப்பாடு தூக்குச் சட்டியிலே போட்டுக் கொண்டாந்திடுங்கடா. பொழுது சாஞ்சு எஸ்.கே.சி மரத்தடியிலே. சைக்கிள் இருக்கப்பட்ட பயலுக வண்டியிலே வந்து சேருங்க. மத்தப் புள்ளைங்க பொடி நடையா பள்ளிக்கூடத்திலே இருந்து நவ்வாலு பேரா வரிசையா நடந்து போகணும். எட்டு மணிக்கு கிளம்பணும் என்ன?

ஐந்து கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் போக வீட்டில் ஸ்பெஷல் பர்மிஷன் கிடைத்து ஆலமரத்தடியில் நிறுத்தின முதல் சைக்கிள் என்னுது தான். கிரி அடுத்தபடி.

நான் குளத்தையே பார்த்துக் கொண்டு நின்றேன்.

ஃபேண்டாவை ஒடச்சுக் கொட்டின மாதிரி இருக்கு. இந்தத் தூத்தத்தைக் குடிப்பாளாடா?

தண்ணியைக் குடிப்பாங்களான்னு கேளுடா.

கிரி அவசரமாகச் சொன்னபடி ஆலமரத்தைத் திரும்பிப் பார்த்தான்.

ஆமா, வீட்டுப் பேச்சை வீட்டுலேயே விட்டுட்டு வந்துடணும் என்றது அதுவும்.

ஊர்ப் பெயர் விளையாட்டு, சினிமா பாட்டு விளையாட்டு. விடுகதை. ஆலமரம் சுவாரசியமாகப் பார்த்தது எல்லாக் கூத்தையும். சந்தோஷமாக இலை குலுக்கிச் சிரித்தது. ஜில்லுனு ஒரு காற்று பிரியமாகச் சிரித்தபடி தலையைக் கலைத்தது.

தினமும் இங்கேயே பள்ளிக்கூடம் நடத்தினாலும் ஆலமரம் வேணாம் என்று சொல்லாது. நாங்களும் தான். ரெண்டு பக்கமும் மரம் அடர்ந்த மண் ரோடு ஊடாக சைக்கிளில் தள்ளுகாற்றில் அஞ்சு கிலோமீட்டர் தினசரி போகிற சந்தோஷம் போல உலகத்தில் வேறே என்ன இருக்கு?

கெட்டீஸ்பர்க் அட்ரஸ்.

ஆசிர்வாதம் சார் மரத்தடியில் நின்று சின்னச் சுள்ளியால் காது குடைந்தபடி அறிவித்தார். சிமெண்ட் கட்டிடமான பள்ளிக்கூடத்தில் காது குடைந்தபடி இப்படி நூறு பையன்கள் முன்னால் நிற்க யோசிப்பார். மரமும், குளமும் காற்றும் எல்லா சுதந்திரத்தையும் இந்தா இந்தா என்று எல்லோருக்கும் வாரித் தருகின்றன.

வாத்தியார் பிள்ளை டேவிட் எழுந்து முன்னால் வந்தான். தாடியில்லாத ஆப்ரகாம் லிங்கனாக, அவனும் அவன் அப்பாவும் முடிவு செய்திருந்த அமெரிக்கன் இங்கிலீஷில் கவர்மெண்ட் ஆப் தி பீபிள் பை தி பீபிள் பார் தி பீபிள் என்று முழங்கியபோது ஒட்டுமொத்தமாகக் கைதட்டினோம். புரியலேன்னா கைதட்டணும்.

அப்புறம் போர்க்களத்தில் செத்துப்போய் வீட்டுக்குச் சவமாக வந்த ராணுவ வீரன் பற்றி அவன் எகிறிக் குதிக்கிற வேகத்தில் ஹோம் தே ப்ராட் ஹர் வாரியர் டெட் என்று பாட, ஆசிர்வாதம் வாத்தியார் ஒரு மவுத் ஆர்கனை வாயால் நசுக்கி கூடவே இசைக்க பெருமுயற்சி செய்தார். ஆலமரம் தலையசைத்து வேணாம் என்றது.

அது மட்டும் இல்லை. கீழேயே இழைந்து கொண்டிருந்த கட்டெறும்புகளும் தான். காலையில் நாங்கள் வந்தபோது எறும்பு கிளாஸ் எதுவும் அங்கே கூடவில்லை. மதியம் சோற்றுப் பாத்திரத்தைத் திறந்து எல்லோரும் சாப்பிட்டுத் தீர்த்ததும் மிச்ச மீதிக்கு எங்கேயிருந்தோ, வேறே எங்கேயிருந்து, மரக் கிளையில் இருந்துதான், அதெல்லாம் கறுத்த படை பட்டாளமாக இறங்கி விட்டிருந்தன.

ஒண்ணு ரெண்டாக எறும்பை நசுக்கின போது குளக்கரைப் பக்கம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அப்பத்தா, ஆத்தே, அதை ஏன் சாகடிக்கறீக. சாது சீவன். கடிக்காது. கொள்ளாது என்று உத்தரவாதம் கொடுத்து விட்டு ஆட்டை ஓட்டிப் போனாள். போகிற போக்கில் மரத்தை செல்லமாக ஒரு தட்டு.

மேலெல்லாம் ஊர்ந்தாலும் எங்களில் யாரையும் கடிக்காத நல்ல எறும்புகள். டேவிட் இங்கிலீஷ் பாட்டு பாடினது மட்டும் பிடிக்கவில்லை அதுகளுக்கு. வீட்டுப் பாட்டை வீட்டோடு வச்சுக்கணும்.

கீச்சென்று குரல் உசரத்துக்குப் போன டேவிட் நெளிந்தான். பாட்டு நிற்க, அரையில் டிரவுசர் மேல் அவசர அவசரமாகக் கையால் உரசித் தேய்த்து விட்டுக் கொண்டான். அந்த வேகத்தில் இடுப்பில் தீ பிடித்து விடும்.

என்ன ஆச்சு மை பாய்?

எறும்பு கடிச்சுடுத்து.

எங்கே? வாத்தியார் மவுத் ஆர்கனில் வழிந்த எச்சலைத் துடைத்தபடி கேட்டார்.

அவன் சொன்ன இங்கிலீஷ் வார்த்தைக்கு அதுதான் அர்த்தமாக இருக்கும் என்று ஏகமனதாகக் கருதி எல்லோரும் சிரித்தோம். மரத்திலே நாலைந்து சிட்டுக் குருவிகள் ஆமா ஆமா என்று கூவி விட்டு ஓடிப் போயின. உச்சிக் கிளையில் இருந்து ஒரு மரங்கொத்தி எப்படியும் இன்னிக்கு சாயந்திரம் நாலே முக்காலுக்குள் இந்த மரத்தை ஒண்டியாக சாய்த்து விடும் உத்தேசத்தோடு டொக் டொக் என்று மும்முரமாகக் கொத்திக் கொண்டிருந்தது.

சைலன்ஸ். கிருபாகரா, நீ பாரு.

வாத்தியார் கிளாஸ் லீடர் கிருபாகரனுக்கு உத்தரவு இட்டார். அவன் டேவிட்டை மரத்துக்குப் பின்னால் இட்டுப் போனான். கிளாஸ் லீடராக இருந்தால் இப்படி வேலை எல்லாம் பார்க்கணுமா? கிரியைக் கேட்டேன். அவன் சிரிப்பை அடக்கியபடி மரத்தைப் பார்த்தான். வீங்கிடுச்சான்னு பார்க்க வேணாமா என்றான் மெதுவாக. ஆமா ஆமா என்றது ஆல மரம். அதுவும் பார்க்கும். சரி, லீடர் எதுக்குப் பார்க்கணும்? வாத்தியாரே செய்யலாமே. போ ரைட், போ ரைட் என்றது தலையை நிமிர்ந்து பார்த்த மரங்கொத்தி. அதோட அவசரம் அதுக்கு.

எஸ் கே சி எனப்பட்ட ஸ்வீட் காரம் காப்பி மூணும் ஊரில் இருந்து ஆனந்த பவான் சைக்கிளில் வந்து சேர்ந்து வினியோகிக்கப் பட்டதால் டேவிட்டை யாரும் அப்புறம் விரை வீக்கமா என்று விசாரிக்கவில்லை. என்ன மாதிரி லட்டுருண்டை! பெரிசாக ஆளுக்கொரு கார சோமாசி. காப்பி தான் இல்லை. வெதுவெது என்று மூத்திரச் சூட்டில் எல்லோருக்கும் டீதான் கப்புக் கப்பாக கிடைத்தது.

சீப்பிக் குடிக்கலாமா?

கிரியைக் கேட்டபோது மரம் சொன்னது – வீட்டுப் பேச்சு.

சீப்பிக் குடிக்கறதுக்கு வேறே எப்படி சொல்றது? பல் படாம குடி என்றான் கிருபாகரன். அவன் தான் குவளையைக் கொடுத்தான். டேவிட்டை சோதனை போட்டதற்கு அப்புறம் கை அலம்பி இருப்பானோ?

கழுவினானே என்றது குளம். அதுக்கு சாட்சியாக ஆமா என்றது மரமும். ரெண்டும் கூட்டுக் களவாணியாப் பொய் சொன்னா?

டீயைக் குடிக்காதே. மரம் கொத்தி நிமிர்ந்து பார்க்காமலேயே சொன்னது. மிச்ச வேலை நாளைக்குத்தான். ஓவர் டைம் செய்ய முடியாது. கராறாக அறிவித்தபடி அது பறந்து போனது. உன்னை மாதிரி எம்புட்டு பாத்திருக்கேன் என்று ஆலமரம் சிரித்தபோது நான் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்திருந்தேன். கிரியும்.

அந்த வருடம் இல்லை. அதுக்கு அடுத்ததும் இல்லை. அப்புறம் தான் கல்விச் சுற்றுலா முத்துப்பட்டியைக் கடந்து பாண்டிச்சேரிக்குப் போனது.

தெருவெல்லாம் கள்ளுக் குடிச்சுட்டு ஆடிண்டு கிடப்பான். அங்கே எதுக்குடா போறீங்க?

பாரதியார் வீடு, பாரதிதாசன் வீடு, மணக்குள விநாயகர் கோவில். கடற்கரை. பாடத்தில் படித்து நினைவு வந்தவரைக்கும் அடுக்க அனுமதி கிடைத்தது.

புதுச்சேரி, புதுவை, பாண்டிச்சேரி. மூணு பெயரா ஒரு ஊருக்கு? இருந்துட்டுப் போகட்டும். நமக்கு என்ன போச்சு?

புதுவை வேதையா வாத்தியார் ஊர். சீனியர் தமிழ்ப் வித்துவான். அங்கே இருந்து எங்கள் செம்மண் பூமிக்கு தமிழ் சொல்லித்தர வந்தார்.

கான்கிரீட் கட்டிட வகுப்பும், சில நேரம் உயர்ந்தும் மற்ற நேரம் தாழ்ந்தும் பறக்கிற செம்மண் புழுதியும் அவரை என்னதுக்கோ அலுப்படைய வைத்தன. ஆனாலும் ஆரஞ்ச் கலர் தண்ணி நிரம்பிக் கிடக்கிற செட்டி ஊரணி அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. அங்கே நிற்கிற வேப்ப மரங்களும். வேப்பங்காற்று உடம்புக்கு நல்லதாம். வகுப்போடு ஊருணிக்கரைக்கு நடத்திப் போய் விட்டார்.

கரையில் அனுமார் கோவில் வாசல் படித்துறையில் உட்கார்ந்து கானல் வரி வகுப்பு. உழவர் ஓதை மதகோதை உடைநீர் ஓதை தண்பதங்கொள் விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி.

வாத்தியார் அதி அற்புதமாகப் பாடினார். படித்துறை வேப்ப மரங்கள் எங்களோடு சேர்ந்து மெய்மறந்து நின்றன. மாதவி இருந்தால் இப்படித்தான் ஒயிலோடு பாடி இருப்பாள். கோவலன் இதே கம்பீரத்தோடு கானல் வரி சொல்லிப் பிரிந்திருப்பான். வேப்ப மரம் பேசாது. ஆனால் இலையசைக்கும். வேதையா வாத்தியார் சிலப்பதிகாரம் சொல்லித் தருவது மரத்துக்கும் புரியும்.

அடுத்த மாதத்திலிருந்து அவர் காணாமல் போனார். தண்ணி வண்டின்னா சரியான தண்ணி வண்டி. சாயந்திரம் மூக்கு முட்டக் குடிச்சுட்டு கடைத்தெருவிலே உருண்டு கிடக்கார். பாண்டிக்காரன் ஆச்சே – இதெல்லாம் ஊர்க்குரல்கள்

பாண்டிக்காரரை புதுச்சேரிக்கே அனுப்பி விட்டார்கள். அவர் ஊர் இது. அவரைப் பார்க்காமல் போகலாமா? எங்கே தேட?

அவர் அப்பப்போ குயில் தோப்புக்கு போக வர இருக்கார்.

வாத்தியாரைத் தெரிந்தவர்கள் ஊரில் நிறைய இருந்தார்கள். ஆனாலும் அவருக்காகக் காத்திருக்க நேரம் இல்லை. ஸ்கூல் ரைட்டர் மருது பாண்டியன் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ள ஆசிரியர் என்று ரயில்வே பாஸில் பொய்யாக எழுதி வாங்கிக் கூடவே வந்திருந்தார். எங்கேயோ போய்த் தேடி வேதையா வாத்தியாரை அவர் குயில் தோப்புக்கு சைக்கிள் ரிக்‌ஷாவில் கொண்டு வந்து இறக்கும்போது எதிரே மாமரத்தில் நிசமாகவே குயில் பாடியது. ஒன்று இல்லை. ரெண்டு. எதிர் மரத்தில் இதுக்கு ஜோடி எசப்பாட்டு பாடிய மணியமாக இருந்தது.

வேதையா வாத்தியார் குடித்திருந்தார். அரை கப் காப்பி சாப்பிட்டுத்தான் போகணும் என்று யாரோ உபசாரம் செய்கிற தோதில் ரெண்டு கரண்டி கள்ளையோ சாராயத்தையோ புகட்டி அனுப்பியிருக்கலாம். சட்டையும் வேட்டியும் அழுக்காக இருந்தது. ஆனால் முகத்தை சுத்தமாக சவரம் செய்து சோப் போட்டு அலம்பின மாதிரி பளிச்சென்று இருக்க, கண் ரெண்டும் சிவந்து வழிந்தது.

கானல்வரி கேளுங்கடா.

அவர் மாமர நிழலில் படுத்துக் கொண்டு ராகம் இழுத்தார். வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி. இது கானல்வரி இல்லையே.

ஆமா, ஆனா சிலப்பதிகாரம் தான். ஆய்ச்சியர் குரவை.

நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே நாராயணா என்னா நாவென்ன நாவே.

வாத்தியார் கேவிக்கேவி அழுதார். போய்ட்டா அவ போய்ட்டா என்றார். அப்புறம் பசிக்குது என்றார். மாமரத்தில் மாம்பிஞ்சு எடுத்துத் தரலாமா? அதை ஏன் தொடறீங்க? என் பிள்ளைங்க அதெல்லாம் என்றது மரம். அதுக்கு சிலப்பதிகாரம் பிடிக்குமா என்று தெரியவில்லை. ஆனால், பிஞ்சு மாங்காயை எல்லாம் உதிர்க்கச் சொல்லி வற்புறுத்துவது தப்பு இல்லையா? வேதையா வாத்தியாருக்கு தெரு ஓரக் கடையில் பன்னும் டீயும் வாங்கிக் கொடுத்தார் மருது பாண்டியன்.

வாத்தியார் ரெண்டு வருஷம் கழித்துக் குயில் தோப்பில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதை விவரமாகச் சொல்லணுமா என்று தெரியவில்லை. வேண்டாம். மாம்பிஞ்சு வாசத்தோடு மட்டும் வாத்தியார் நினைவு இருக்கட்டும்.

மா வாசம் தெரிஞ்சு மலை வேம்பு வாசம் புரிபட அப்புறம் முப்பது வருஷம் காத்திருந்தேன்.

கும்பகோணம் பயணம். ஒரு கல்யாணத்துக்காக. மரம் மட்டை அபூர்வமாகக் கண்ணில் பட்ட சாலையில் வண்டி போக ஆரம்பித்ததுமே தூங்கிப் போனேன்.

ஊர் வந்திருந்தது.

மேலக் காவேரி பாணாத்துறை வடக்கு வழியாகப் போய்ச் சேர்ந்து, சாப்பிட்டு, வார்த்தை சொல்லிக் கொண்டிருந்து விட்டு, மொட்டை மாடியில் நட்சத்திரங்களுக்குக் கீழே பாய் விரித்துப் படுக்கிறேன். சுற்றித் தென்னைமரங்கள், மலை வேம்பு, மா மரங்கள், எலுமிச்சை, தேக்கு மரம், நந்தியாவட்டை. எங்கேயோ மாதுளம்பூ விரியும் வாசம்.

“ராத்திரியில் திடீர்னு மரத்துலே பட்சி எல்லாம் ஒரு தினுசாக் கத்தும். எழுந்து பார்த்தா, சில சமயம் ஒரு மரத்திலிருந்து இன்னொண்ணுக்கு பாம்பு தாவும்..”

மைத்துனன் சுவாரசியமாகச் சொல்கிறான். தென்னை மரங்களை நிமிர்ந்து பார்க்கிறேன். ஒரு சத்தமும் இல்லை.

நீட்டி நிமிர்ந்து மல்லாக்கப் படுக்க, தலைமாட்டில் யாரோ கொசுவர்த்திச் சுருள் ஏற்றி வைக்கிறார்கள். வரிசையாகப் பாய் விரித்துப் படுத்த ஆண்கள். எல்லோர் தலைமாட்டிலும் ஊதுபத்தி போல் கொசுவர்த்தி. அமானுஷ்யமான சூழல்.

பாதி ராத்திரியில் விழித்தபோது மரத்தில் ஆந்தை உட்கார்ந்து வெறித்துக் கொண்டிருப்பது கண்ணில் படுகிறது. ஒரு கூட்டம் மின்மினிப் பூச்சிகள் மாமரத்தைச் சுற்றி ஒளி வளையம் இட்டுப் பறந்து கொண்டிருக்கின்றன. குளிரக் குளிர ஒரு காற்று மெல்லக் காது மடலைச் சிலிர்க்க வைக்கிறது.

இந்த ராத்திரி இப்படியே நீண்டு போகட்டும் என்று நினைத்தபடித் திரும்பக் கண் அயர்ந்தபோது நான் இதுவரை பார்த்த எல்லா மரமும் வளர்ந்து தழைத்த காட்டில் நடந்தாய் வாழி காவேரி என்று வேதையா வாத்தியார் குரலில் பாடிக்கொண்டு போனேன். கொசு வர்த்திப் புகை சூழ்ந்த காடு. பின்னால் திரும்பிப் பார்த்தேன். அந்த மரங்கள் எல்லாம் என் பின்னால் நகர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. வாவரசியாகக் காவேரி பக்கத்தில் அமைதியாக நடந்து கொண்டிருந்தது.

Series Navigation
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *