ஜாக்கி சான் 22. புது வாழ்வு – நியூ பிஸ்ட் ஆப் புயூரி

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

1033219

ஹாங்காங் கை தாக் விமான நிலையத்தில் வந்திறங்கினான்.  அவனை அழைத்துச் செல்ல வில்லி சான் வந்திருந்தார். வழியெல்லாம் சான் நடிக்கப் போகும் புதிய படத்தைப் பற்றியும், புரூஸ் லீயை விட நன்றாக நடிக்க முடியாவிட்டாலும் அவன் பேரில் இருக்கும் நம்பிக்கையின் காரணமாகவே, அவனைக் கதாநாயகனாகப் போட உள்ளதாகவும் சொல்லிக் கொண்டே வந்தார்.

 

மூன்று வாரத்திற்கு முன்பு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அந்த லோ வெய் நிறுவனத்திற்கு, சானை வில்லி அழைத்துச் சென்றார். லோ வெய்யிடம் சானை அறிமுகப்படுத்தினார்.

இயக்குநர் லோ வெய் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு, “ஏற்றவனாத்தான் தெரியறான்.. நல்ல பேசுவானா?” என்று கேட்டார்.

 

“என்னால் பேச முடியும். பாடுவது, சண்டைப் போடுவது, வித்தைகள் செய்வது என்று எல்லாத்திலேயும் நான் சீன ஒபரா பயிற்சி பெற்றிருக்கிறேன்.  நான் ஹாங்காங்கின் சிறந்த ஸ்டண்ட் கலைஞர்களில் ஒருவன்.  வாய்ப்புக் கிடைத்தால் என்னால் சிறந்த நடிகனாகவும் ஆக முடியும்” என்றான் உறுதியுடன்.

 

அவன் சொல்வதைக் கேட்டு, தோள்களை உலுக்கிக் கொண்டு, “ஒபரா பயிற்சி பெற்ற நிறைய ஸ்டண்ட் கலைஞர்கள் தெருக் கோடியில் வேலை கிடைக்குமா என்று காத்திருக்கிறார்கள்.  ஒபரா செத்து விட்டது.  இது திரைப்படம்”  என்று சானின் சொற்களை ஏளனம் செய்யும் வகையில் பேசினார் லோ வெய்.

சானுக்கு கோபமே வந்தாலும், பேசாமல் நின்றிருந்தான்.

அவரே மேலும், “கமெராவிற்கு நீ எவ்வளவு பயிற்சி பெற்றிருக்கிறாய் என்று தெரியாது. கமெராவிற்கு நீ எவ்வளவு கஷ்டப்பட்டு விழுகிறாய் என்று தெரியாது.  எப்படி கரணம் அடிக்கிறாய் என்று தெரியாது.  அதற்கு உன்னை பிடித்தால் உண்டு. இல்லாவிட்டால்  வெறுத்து விடும்.  உனக்கு ஏன் என்ற காரணம் தெரியாது.  கமெரா உன்னை விரும்பினால் நீ ஸ_ப்பர் ஸ்டார் ஆகலாம். உன்னை வெறுத்தால், ஒன்றுமில்லாமலும் ஆகி விடலாம்.  புரிந்ததா?” என்று கேட்டார்.

 

சான் அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டு நின்றான்.  அவர் சொல்வதில் இருந்த உண்மையை ஏற்றுக் கொண்டான்.

 

இயக்குநர் மேலும் புகை பிடித்துக் கொண்டே, “நான் தவறுகள் செய்து ஹாங்காங்கின் பெரிய இயக்குநராக ஆகவில்லை.  நீ உண்மையில் நன்றாக விலை போவாய் என்று வில்லி நம்புவதால், ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று எண்ணுகிறேன்.  ஆனால் கவனமாக கேட்டுக் கொள்.  நான் தான் இயக்குநர்.  என்னுடைய செட். என்னுடைய படம்.  மறந்தால், நீயும் மற்றவர்களைப் போல் தெருவிற்குப் போக வேண்டியது மான்” என்று அச்சுறுத்திச் சொன்னார்.

 

இதைக் கேட்ட சான் மிகவும் அமைதியாகத் தலையை ஆட்டினான்.  வில்லி  அவன் தோள்களைத் தட்டிக் கொடுத்து, “ஜாக்கி .. வேலையைப் பற்றிக் கவலைப் படாதே. அவர் அதிகமாக குரைப்பாரேயொழிய, கடிக்க மாட்டார்.  உன்னை நாங்கள் நிச்சயம் நட்சத்திரமாக ஆக்குவோம்.  எனக்கு உன் மேல் முழு நம்பிக்கை இருக்கிறது” என்றார் உறுதியுடன்.

 

மறுநாளே சானை நட்சத்திரமாக்கும் காரியம் ஆரம்பிக்கப்பட்டது.  அன்று மதியம் வில்லி அவனுக்கு ஹாங்காங் திரும்பியதற்காக விருந்து கொடுத்து, நிறுவனத்தின் திட்டங்களைப் பற்றி எடுத்துக் கூறினார்.

 

“நியூ பிஸ்ட் ஆப் புயூரி மறுபடியும் எடுக்கப் போவது தெரிந்ததே.  பழைய படத்தின் நட்சத்திரங்களே இதிலும் நடிக்கப் போகிறார்கள்.  ஆனால் அதன் கதை புதிது.  பழைய படத்தின் தொடர் போல் இருக்கும்” என்று கூற ஆரம்பித்தார்.

 

சான் உணவை உண்டு கொண்டே அதைக் கேட்டுக் கொண்டு இருந்தான்.

“மற்ற காரியங்களை ஆரம்பிக்கும் முன்னே, நாம் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அது நிறுவனத்தின் சட்டம்” என்றார்.

 

வில்லி சொன்னதற்கெல்லாம்  தலையை ஆட்டி விட்டு, நிறுவனத்திற்குச் சென்று முதன் முதலாக நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டான். அந்தக் காலத்தில் ஒப்பந்தம் என்றால், அது எட்டு வருடத்திற்கு தான் இருக்கும்.  லோவின் நிறுவனத்தில் மாதம் நானூறு அமெரிக்க வெள்ளி கொடுக்கப்படும். லோ சொல்லும் படங்களிளெல்லாம் நடிக்க வேண்டும். சானின் வாழ்க்கையில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்துமே லோ சம்மதித்தால் மட்டுமே செய்யப்பட வேண்டும், திருமணம் உட்பட.

 

அன்றையச் சூழலில் இத்தகைய ஒப்பந்தங்கள் மிகச் சாதாரணமானவை.  நடிகர்கள் ஒப்பந்தத்தின் படி செயல்பட்டு, உணவு, உறக்கமின்றி வேலை செய்வதும் சர்வ சாதாரணம்.

 

லோ, ஒப்பந்தம் கையெழுத்தானதும், நிறுவனத்தின் மற்ற பணியாளர்களுக்குச் சானை அறிமுகப்படுத்தினார்.  எல்லோரும் அன்புடன் வரவேற்றனர்.  அவர்களில் சானுக்கு மிகவும் பிடித்தவர் லோவின் துணைவியார்.  பத்து வயதே மூத்தவரென்றாலும், அவரது மகனைப் போன்று நடத்தியது, சானைக் கவர்ந்தது.

 

சில  வருடங்களுக்குப் பிறகு லோவின் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, குழந்தைகள் பெற முடியாத நிலை ஏற்பட்டது.  அப்போது வில்லியுடன் சான் அவரைக் காணச் சென்ற போது, அவர் வருத்தத்துடன் அழுவதைக் காண நேரிட்டது.  அப்போது சான், “கவலப்படாதீங்க.. நான் உங்கள் மகனாக இருப்பேன்” என்று அவரைத் தன் தாயாக ஏற்றதை சான் நினைவு கூர்வார்.  அன்று முதல் அவரை “அம்மா” என்றே அழைக்கவும் ஆரம்பித்தாராம்.

 

லோ வெய்யின் அறிமுகங்கள் முடிந்த பின், “ஒப்பந்தத்தில் நான் பிறகு கையெழுத்திடுகிறேன்.  அதற்கு முன், இப்போது நாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலை, இந்தச் சிறுவனை நட்சத்திரமாக்க என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய வேண்டும்” என்றார்.

 

அவர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, சானை நிற்கும்படி சைகையால் காட்டினார்.

 

“ஜாக்கி.. சட்டையைக் கழற்று..” என்றார்.

 

சான் குழப்பத்துடன் “என்ன?” என்றான்.

 

லோ பொறுமையின்றி புருவத்தைத் தடவிக் கொண்டே, “முட்டாளே.. நான் என்ன செய்யச் சொல்கிறேனோ.. அதைச் செய். படத்தில் மக்கள் உன்னுடைய முகத்தை பாக்கறாங்கன்னா நினக்கிறே?” என்று கேட்டார்.

 

அவர் சொன்னதைப் புரிந்து கொண்டு, சான் சட்டையைக் கழற்றினான்.

 

“மோசமில்லை.. புரூஸ் லீ போல் இல்லை.  நீ உன்னிடம் இருப்பதைக் கொண்டு வேலை செய்.  புரூஸ் லீயிடமும் ஆரம்பத்தில் ஒன்றுமில்லை.  எலும்பும் தோலுமாக இருந்தான்.  ஆனால் என்னுடைய கைகளில்..”

 

சான் பக்கத்திலிருந்த லோவின் மனைவியையும் வில்லியையும் நோக்கினான். லோ புரூஸ் லீ பற்றி சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லி விட்டு, “உடம்பு சரியாக இருக்கிறது.  எங்கே சிரி பார்க்கலாம்..” என்றார்.

 

சான் இளித்தான்.  லோ உடனே, “வில்லி.. அவன் பற்களைச் சரி செய்ய வேண்டும்.  குறித்துக் கொள்.. சானுக்கு ரொம்ப சின்ன கண்கள். அதனால கண்களையும் எதாவது செய்ய வேண்டும்.  பாக்கறவங்களுக்கு பெரிய கண்கள்  தான் பிடிக்கும். அதுக்கு ஒரு அறுவை சிகிச்சை செஞ்சிடலாம்.  வில்லி இதையும் குறிச்சிக்கோ..”

 

வில்லி அதைத் தலையாட்டி ஏற்றுக் கொண்டதைக் கண்டு பதறிப் போய், “என்ன.. அறுவை சிகிச்சையா?” என்று கேட்டான்.

 

“சான்.. நீ என்னை முழுசா நம்பணும்னு சொன்னேயில்லையா.. அத்தோட பணத்துக்காக உயிரைப் பணயம் வைத்து கட்டடத்திலிருந்து குதிப்பவனுக்கு அறுவை சிகிச்சை பெரிசா என்ன?” என்று கேட்டார்.

 

அவர் சொன்னதும் உண்மை தான்.  சரியான வார்த்தை.  சான் ஒப்புக் கொண்டான்.

“இப்போ.. இன்னொரு முக்கியமான விசயம்.. உன்னோட பெயர்.  என்ன பெயர்?”

 

“என் பெயர் ஜாக்கி”

 

“அதில்ல.. உன் சீனப் பெயர்?” என்று கர்ஜித்தார்.

 

எதைச் சொல்வதென்று புரியவில்லை சானுக்கு.

 

“கொங் சாங்ன்னு நினக்கிறேன்..”

 

கையை ஆட்டி, “கொங் சாங்? நட்சத்திரத்திற்கு இப்படிப் பெயரா? வில்லி..”

 

உடனே வில்லி, “அவன் இது வரை யூன் லொங் என்கிற பெயரைத் தான் பயன்படுத்திறான்..” என்றார்.

 

“யூன் லொங்.. அது மோசமில்லை..  ஆனா.. அது எனக்குப் போதாது.  சினிமாவுக்கு பெயர் வைக்கும் போது, அதுல்ல ஒரு பஞ்ச் இருக்கணும்” என்றார் இயக்குநர் லோ.

 

லோவின் மனைவி, “யூன் கொங்.. எப்படி.  அது யூன் லொங் போல.. அழகான மேக டிராகன்..” என்று ஆலோசனை கூறினார்.

 

பொறுமையற்று கைகளை ஆட்டி மறுத்து விட்டு, “அழகாக இருக்க வேண்டியதில்லை பெயர். மேகத்தில் இருக்கும் டிராகனைப் பார்க்க முடியாது.

 

அது நாயகனுக்கு வெற்றியைத் தராது” என்றார்.

 

“அப்போ ஜி லொங்.. டிராகனின் குழந்தை” சான் ஆலோசனை கூறினான்.

 

“மறந்துடு.  நீ நாயகன்.  குழந்தையல்ல. மக்கள் ஒரு நாள் நீ வளர்ந்து டிராகன் ஆவாய் என்று எண்ணக் கூடாது.  மக்கள் அதோ ஏற்கனவே டிராகன் என்று சொல்ல வேண்டும்” என்றார்.

 

கடைசியாக வில்லி, “சிங் லொங்.. எப்படி?” என்று தன் பங்கிற்கு ஒரு பெயரைக் கூறினார்.

 

அதற்கு “ஏற்கனவே டிராகன்” என்று பொருள்.

 

அந்தப் பெயர் வேண்டாம் என்று சொல்ல வேறு காரணம் ஏதும் தோன்றாதலால், லோ, சில நிமிடங்கள் யோசித்து விட்டு, அந்தப் பெயரையே ஏற்றுக் கொண்டார்.

 

அப்படித் தான் சான் “ஜாக்கி சான் சிங் லொங்” என்ற பெயரைப் பெற்றான்.

 

புதுப் பரம்பரையின் புதிய டிராகன் தோன்றினான்.

 

இனி நாமும் நம் நாயகனை ஜாக்கி என்று அழைக்க ஆரம்பிக்கலாமா?

 

நியூ பிஸ்ட் ஆப் புயூரியும் பழைய படத்தைப் போன்று சீனர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும் இடையே ஏற்படும் பகையைப் பற்றியதே.  ஜாப்பானியர்கள் ஆக்கிரமித்து இருந்த தைவானில் நாயகன் ஒரு திருடனாக வாழ்ந்து வரும் நேரத்தில் அவனை ஜப்பானிய வர்மக் கலை பள்ளியின் மாணவன் அவமதிப்பான்.  அப்போது அதைக் கண்டு கொள்ளாத ஜாக்கி, சீன வர்மக் கலை பள்ளிக்கூடத்தை ஜப்பானியர்கள் மூட முயலும் போது, அந்தப் பள்ளியின் தலைமை குருவின் பேத்தியின் வேண்டுகோளின் படி, பழி தீர்க்கக் கிளம்புகிறான் நாயகன்.  பள்ளியைத் திறக்க மக்களிடம் வேண்டி, அந்தப் பள்ளியிலேயே கடினமாக உழைத்து குங்பூ பயின்று சண்டைக்காரனாக மாறுகிறான்.  தன்னுடைய புதிய திறனால் முக்கியமான ஜப்பானிய எதிராளியை தோற்கடிக்கிறான்.  கதையில் சீனர்களின் வெற்றியைக் காட்டுவதற்கு மாறாக, பட நாயகனையும், சீன வர்மக் கலைப் பள்ளியின் மாணவர்களையும் ஜப்பானிய கொலையாளிகள் கொல்வதைப் போன்று முடித்தனர்.

 

முதல் நாள் படப்பிடிப்பு.  ஜாக்கிக்கு கட்டுக்கடங்காத மகிழ்ச்சி.  அதிகாலையில் எழுந்து, காலை உணவு உண்டு விட்டு படப்பிடிப்புத் தளத்திற்கு ஓடிச் சென்றான்.

 

வில்லி அங்கு முன்பே இருந்தார்.  ஒளிப்பதிவு இயக்குநரிடம் காரசாரமான விவாதத்தில் இருந்தார்.  வில்லி சற்றே பதட்டத்துடனும் காணப்பட்டார்.

 

“வணக்கம் வில்லி.. என்ன நடக்கிறது” என்று அன்புடன் கேட்டான் ஜாக்கி.

 

“வணக்கம் ஜாக்கி.. அதொன்றுமில்லை.  இந்தப் படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளருக்கு விபத்து ஏற்பட்டு விட்டது.  அவரால் இன்று வர முடியாது.  அடுத்த ஆளைப் பிடிக்கும் வரை படப்பிடிப்பை ஒத்தி வைக்க நாங்க யாரும் விரும்பல.. அதனால என்ன செய்யலாம்ன்னு பேசிக்கிட்டு இருக்கோம்..” என்றார் வில்லி.

 

ஜாக்கி வரும் வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன், கண்ணைச் சிமிட்டிக் கொண்டே, “ஊரின் சிறந்த ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளர் இங்கே நின்னுக்கிட்டு இருக்கும் போது.. வேற ஆள ஏன் தேடறீங்க..” என்றான்.

 

வில்லி ஆச்சியத்துடன், தலையை ஆட்டிக் கொண்டே, “ஆமாயில்ல.. சரியாச் சொன்னேப்பா.. நடிக்கறதோட ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளராவும் இருக்கச் சம்மதமா?” என்று கேட்டார்.

 

உண்மையாக ஜாக்கிக்கு நடிப்பதை விடவும், சண்டைக் காட்சிகளைச் செய்வதில் அதிக தன்னம்பிக்கை இருந்ததால், “அதிக பணம் கிடைக்குமா?” என்று கேட்டான்.

வில்லி மேலே பார்த்து கணக்கிட்டுக் கொண்டே, “ஊம்.. ஒன்பதாயிரம் ஹாங்காங் வெள்ளி..” என்றார்.

 

“ஒன்பதாயிரமா.. நடிப்பதை விடவும் மூன்று மடங்கு தருவீங்களா?” என்றான் அதிர்ச்சியுடன்.

 

“ஆமாம்.. உனக்கு அனுபவம் இருக்கு. நடிப்பதில் அனுபவம் இல்லை.. இல்லையா?” என்றார்.

 

தோளில் தட்டிக் கொடுத்து, “புத்திசாலி ஜாக்கி.. திறமை உனக்கு இருக்கு..” என்று பாராட்டினார்.

 

வாயடைத்துப் போன ஜாக்கி, சுதாரித்துக் கொண்டு, காட்சிக்குத் தயாரானான்.

 

நாயகி நோரா மியவ்.  புரூஸ் லீயுடன் நடித்த அதே அனுபவம் மிக்க நடிகை.  அழகாகவும் இளகிய மனம் கொண்டவராகவும் இருந்தார்.  ஜாக்கி முன்பே பிரபலமான நடிகைகளுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும், ஜோடியாக நடிப்பது இதுவே முதல் முறை.  வசனங்களில் பிரச்சினைகள் ஏற்படும் போது, அன்புடன் உதவி செய்தார்.  ஸ்டண்ட் காட்சிகளிலும் அவர் மிகவும் சிறப்பாகச் செய்து காட்டினார்.

ஜாக்கிக்கோ நடிக்க வரவில்லை.  காரணம் மிகக் கோபமாக கத்திக் கொண்டே இருக்கும் கடினமான பாத்திரதாக இருந்ததே காரணம்.

 

லோ வெய் அவனைப் புதிய புரூஸ் லீயாக மாற்ற விரும்பினார். அது ஜாக்கியின் தன்மைக்கு நேர் மாறாக இருந்தது.  அது ஜாக்கியை மிகவும் வருந்தச் செய்தது.  சிறப்பாகச் செய்ய முடியவில்லை.

அத்தனை கஷ்டங்களையும் சகித்துக் கொண்டு, படத்தில் நடித்து முடித்தான்.  படம் வெளியானது. பாக்ஸ் ஆபிஸ் முடிவுகளுக்காக காத்திருந்தனர்.  லோ புகைப்பிடித்துக் கொண்டு இருந்த போது, ஜாக்கி அறையைக் கூட்டிக் கொண்டு இருந்தான்.

 

அது தன் வேலை இல்லாத போதும், பழக்க தோஷம்.  நாடகப் பயிற்சி காலத்தில் செய்தது, பல வருடங்களுக்குப் பிறகும் மாற்ற முடியாத ஒன்றாக இருந்தது.  யாரும் இல்லாத போது, இன்றும் ஜாக்கி சமயத்தில் தனது நிறுவனத்தில் தன் அறையைச் சுத்தம் செய்வதுண்டாம்.

 

அதைக் காணும் போதெல்லாம் வில்லி, “யாராவது இப்போது வந்தால் என்ன நினைப்பார்கள்” என்று அதட்டுவாராம்.  அதைப் பற்றி என்றும் ஜாக்கி கவலைப்பட்டதில்லை.  தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள இடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்வது தவறல்லவே.

 

சுத்தம் செய்து முடித்து குப்பையை கூடையில் போட்டுக் கொண்டிருந்த போது, வில்லி அறைக்குள் வந்தார்.

 

லோ ஆவலுடன் வில்லியின் வருகையை எதிர் நோக்கியிருந்தார்.

 

படம் வெற்றி பெற்றதா? இல்லையா?

 

—-

 

Series Navigationமருமகளின் மர்மம் 9சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 13கண்ணீர் விட்டோம் வளர்த்தோம்பெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’இடையனின் கால்நடை
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

3 Comments

  1. Avatar
    புனைப்பெயரில் says:

    நன்றி. விறுவிறுப்பாக படிக்கத் தோன்றுகிறது. ஆனால், அந்தக் காலத்தில் தொடரில் இறுதி வரிகளில் இருக்கும் கேள்விகள் … இப்போதய நிலை? உடனே கூகுள் செய்து, அப்படம் தோல்வியுற்றதும் அது தொடர்பான சம்பவங்களையும் படிக்க முடிகிறது. காலம் முழுதாய் மாறிப்போய் விட்டது. காத்திருத்தல் என்பதன் அர்த்தமே புதிதாய். ஏன், கடைசி வரிகள், “எதிர்பார்ப்புகளை தகர்த்து அந்த படம் தோல்வியானது… ஜாக்கி தொடர்ந்து சந்தித்தது….. “ என்றிருந்த்ருக்கலாமோ..? எப்படியாயினும் உங்கள் தொடரும், திரு.டாக்டர்.ஜான்சன் தொடரும் உடனே படித்த்டுவேன். நன்றி.

  2. Avatar
    Chitra Sivakumar says:

    தங்களது கருத்திற்கு நன்றி. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. கூகுளிற்குச் சென்று பார்க்க விரும்புவோர், அதில் சென்று விவரத்தை அறிந்து கொள்ளலாம்.

  3. Avatar
    ஷாலி says:

     Chitra Sivakumar says:
    January 7, 2014 at 2:11 pm
    //தங்களது கருத்திற்கு நன்றி. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. கூகுளிற்குச் சென்று பார்க்க விரும்புவோர்……//

    சித்ரா சிவகுமார் அவர்களே! புனல்வழி செல்லும் மரக்கட்டை ஆங்காங்கு முட்டி மோதி பயணம் செய்யும்.எங்கே முட்டும் எதிலே மோதும் என்று எவருக்கும் தெரியாது.தற்போது புனல் உங்கள் ஆத்தில் பயணம் செய்கிறது. எதற்கும் கொஞ்சம் க..வ..ன…..ம்..ம். நான் சொல்றதை சொல்லிப்புட்டேன்.அம்புடுத்தேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *