அந்த வார்த்தை மிக அழகாக இருந்தது.
“யாரேனும் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், நீ உனது மறு கன்னத்தைக் காட்டு”
ஒருநாள், தேவாலயத்தின் வெளியே, காம்பவுண்ட் சுவர் ஓரமாக ஒன்றுக்கு போய்க் கொண்டிருந்த அந்த சிறுவன் ஒரு நிமிடம் ஒன்றுக்கு போவதை நிறுத்திவிட்டு அந்த வாசகத்தைக் கேட்டான். மெய் மறந்த நிலையில் அந்த வார்த்தையை பற்றி யோசித்தபடியே இருந்தான்.
தேவாலயத்துக்குள் சென்ற அவன், ஞாயிற்றுக் கிழமை பிரசங்கத்தை முழுமையாக கேட்டு அறிந்து தெளிந்தான். அப்போது அவன் இவ்வாறு சத்தியம் செய்திருந்தான்.
“இன்று முதல் இந்த உடலில் உயிர் இருக்கும் வரை வன்முறையில் இறங்க மாட்டேன். அன்பு வழியை மட்டுமே பின்பற்றுவேன். யாரேனும் என்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் அவர் அறைவதற்கு வசதியாக என்னுடைய மற்றொரு கன்னத்தைக் காட்டுவேன்”
மறு கண்ணங்கள் எப்பொழுதுமே காலியாகத்தான் இருக்கின்றன. அவை எப்பொழுதுமே கண்டுகொள்ளப்படுவதே இல்லை. வன்முறையாளன் எப்பொழுதுமே குருடனாகத்தான் இருக்கின்றான். வன்முறையில் இருப்பவனின் கண்களைத் திறப்பது அவ்வளவு சுலபமில்லை. ஏசு கூட, தான் தான் ஏசு என்பதை நிரூபிக்கத் தவறினால் அவரது இரண்டாவது கண்ணம் கவனிக்கப்படாமலேயே போகக் கூடும். ஏசு என்ற இமேஜைத் தவிர இங்கு ஏசுவுக்கோ அவரது வார்த்தைகளுக்கோ பெரிதாக மரியாதை இல்லை. ஏசுவுக்கு மறு கண்ணம் கண்டுகொள்ளப்படாமல் போவதைப் பற்றி தெரியுமோ என்னவோ?….
ஆனால், அந்த சிறுவன் தன் மறு கன்னத்தைக் காட்டுவதைப் பற்றிய நிதர்சன உண்மையை, அவனுக்கு 2 பேர் புரிய வைத்தார்கள். அவன் ஒவ்வொருமுறை மறு கன்னத்தைக் காட்டிய போதும், அந்த 2 பேரும் அதை கடைசி வரை கவனிக்கவேயில்லை. கடைசி வரை என்றால் ……..ஆம் அது கடைசி வரைதான்…..கடைசிவரை அவனது முதல் கன்னத்திலேயே குறியாக இருந்து விட்டார்கள்.
அந்தச் சம்பவம் அவன் ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுது நிகழ்ந்தது. பள்ளி விடுவதற்கு இன்னமும் 5 நிமிடங்கள் பாக்கியிருந்தன. அவன் ஒரு ஓட்டப்பந்தய வீரனைப் போல புத்தக மூட்டையை முதுகில் சுமந்தவாறு தயாராக இருந்தான். மணி 3.55. இன்னும் சற்று நேரத்தில் விடுதலையாகப் போகும் சந்தோஷத்தில் கைகளில் ரோமங்கள் குத்திட்டு நின்றன. நாளை சனிக்கிழமை, நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. முழுதாக 2 நாட்கள் ஜாமீனில் வெளிவரப்போகிறோம் என்கிற பூரிப்பில் உணர்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான். இன்னும் சற்று நேரத்தில் மணியடிக்கப் போகும் அந்த இனிய காணம் காதினில் இன்பத் தேனாக வந்து பாயப்போகிறது. இன்னும் 5 நிமிடங்கள்தான் பாக்கி. தனக்கு மட்டும் சக்தியிருந்தால் மணியடிப்பவனின் கைகளுக்கு தங்கமோதிரம் செய்து போடலாம் என நினைத்துக் கொண்டான். ஐம்புலன்களையும் ஒற்றை ஆடி மூலம் குவிக்கப்பட்ட சூரிய ஒளியாய் கருத்தில் கொண்டு வந்து நிறுத்தி, அந்தமணியோசையை எதிர்பார்த்து காத்திருந்தான்.
ஆச்சரியம் என்றால் இதுதான் ஆச்சரியம், வரலாற்றில் நிகழாத ஆச்சரியம். அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய ஆச்சரியம். 5 நிமிடங்களை முழுதாக முழுங்கிவிட்டு 5 நிமிடங்களுக்கு முன்னதாகவே மணியோசை கேட்டுவிட்டது. அவனது கண்கள் அகல விரிந்தன. காதுகள் விடைத்தன. கால்நரம்புகள் முறுக்கேறின. முதன்முறையாக உசேன்போல்ட் தோற்றார். அப்படியொரு ஓட்டம். 50 மீட்டர் தூரத்தை 5 வினாடிகளில் கடந்து சாதனை படைத்த பின்னர்தான் அவன் உணர்ந்தான், தனது சக போட்டியாளர்கள் யாரும் தன்னை பின்பற்ற வில்லை என்று. ஏன்??? யாரும் வகுப்பறையைவிட்டு வெளிவரவில்லை. அனைவருக்கும் என்ன ஆயிற்று என நூறு கேள்விகள் அவனை துளைத்து எடுத்தன. அக்கேள்விகளுக்கு பதில் தேடியபடி திரும்பிய அவன் முன் திடீரென ஒரு கோட்டைச் சுவர் முளைத்தது. அந்த கோட்டைச் சுவர் சுமார் 6 அடி 5 அங்குலம் உயரம் இருந்தது. நிமிர்ந்து, கண்களைக் குறுக்கி சூரிய ஒளியை மறைத்து தனக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருந்த அந்த கோட்டைச் சுவரை அண்ணாந்து பார்த்தான் அவன். அந்தக் கோட்டைச் சுவரின் பெயர் கணேசன் ட்ரில் வாத்தியார். அவர் ஒரு வன்முறையாளர்.
குத்துச்சண்டை வீரர் முகம்மது அலியின் காலத்தில் தான் ஏன் பிறக்கவில்லை என அவர் பல நாட்களாக பார்ப்பவர்களை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்.
திரு. கணேசன் தனது பயிற்சிக்கான நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்து, தனது வலது தோல்பட்டையை குலுக்கிக் கொண்டு தயாரானார். திசைவேகம் மணிக்கு சுமார் 90 கிலோமீட்டர்கள் இருக்கலாம் அவர் தனது கையை வீசியபோது. அச்சிறுவனின் இடது புறமாக நடைபெற்ற தாக்குதலால் இடது கண்ணம் வீங்கியது.
ஜீசஸ் சொல்லியதற்காக மட்டுமில்லை என்றாலும், ஒரே கன்னத்தில் இன்னொரு முறை அடிவாங்கக் கூடிய சக்தி தனக்கில்லை என்கிற ஒரே காரணத்தால் அவன் இன்னொரு கன்னத்தைக் காண்பித்தான்.
ஆனால் அந்த சாத்தான். ஒரு கன்னத்திலேயே மாறி மாறி அறைந்து கொண்டிருந்தது. காரணம், அந்த சாத்தானுக்கு அன்று இடது கையில் சுளுக்காம்…..
குறைந்தபட்சம் ஜீசஸ் தனது வாசகத்தை இவ்வாறாவது திருத்திக் கொள்ள வேண்டும். அதாவது. இடது கையில் சுளுக்கு பிடித்த ஒருவனிடமாவது. உனது மறு கன்னத்தைக் காட்டாமல் தப்பித்து ஓடிவிடு” என்று குறிப்பிட்டிருந்தால். தனது இடது காது நிரந்தரமாக மந்தமாகாமல் தப்பித்திருக்கும் என நினைத்துக் கொண்டான்.
மேலும் அவன் மற்றொரு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டான். ஐஸ் வண்டிக்காரன் பெல் அடிப்பதற்கும், பள்ளிக்கூட மணி அடிப்பதற்கும் வித்தியாசத்தைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று……………………
நல்லெண்ணங்களுக்கும், சரியான சிந்தனைகளுக்கும் என்றுமே ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. எவ்வளவுதான் வாழ்க்கை நமக்கு பாடம் புகட்டிக்கொண்டே இருந்தாலும், மகாத்மா காந்தி, ஏசு போன்றவர்கள் எப்பொழுதுமே எல்லோரையும் கவர்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள். தீவிர வன்முறையாளர்கள் கூட அவர்களை முழுமூச்சாக மறுக்க முடியாமல் போய்விடுகிறது. அவர்களது முன்னிலை எந்த ஒரு சாத்தானையும் சந்தேகமில்லாமல் திணறச் செய்து விடுகிறது.
எவ்வளுவுதான் வன்முறையற்ற அன்பான வழிகளை கடைபிடிப்பது போன்ற, சரியான முயற்சிகள், அடிகளையும், உதைகளையும் பெற்றுத் தந்தாலும்,எவ்வளவுதான் உண்மையும், சத்தியமும் பயனற்ற முட்டாள்தனமான விஷயமாகத் தோன்றினாலும், மீண்டும் ஒருமுறை அவற்றினுள் இடறிவிழச் செய்யக் கூடிய சக்தி சந்தேகமில்லாமல் அந்த மனிதருக்கு (ஜீஸஸ்)உண்டு.
உலகத்திலேயே கோபத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன் உண்டென்றால் அது சாத்தான்தான். அவன் மட்டுமே கோபப்படமால் மீண்டுமொரு முறை முயற்சிக்கிறான். சாத்தான் தயாராக இருந்தான், அச்சிறுவனுக்கு எதார்த்தத்தைக் கற்றுக்கொடுக்க. உலகில் எல்லாமே சரியாக இருந்து விட முடியாது. தவறுகள் தான் அவற்றை சமன்படுத்துகின்றன என்கிற உண்மையை உணர்த்த சாத்தான் என்னும் ஆசிரியன் தயாராக இருந்தான்.
மீண்டும் ஒருமுறை இடறி விழுந்தான் அந்தச் சிறுவன். கடவுளின் கருணையின் பேரில் அவனுக்கு இன்னொரு காது மிக நன்றாக கேட்டுக் கொண்டிருந்தது.
அவன் சத்தியம் செய்தான். வன்முறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்க மாட்டேன். அன்பை வன்முறையைவிட தீவிரமாக கடைபிடிப்பேன், என்று…. எப்பொழுதுமே குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் தோற்கும்போது சாதாரன மனிதர்களை பொறுத்தவரை மனம் அது சரியா என்பது பற்றி சிந்திக்காது. தோல்வியை எப்படி வெற்றியாக்குவது, என்பது பற்றியே மனம் தீவிரம் கொள்ளும். தனது முயற்சிக்கு சவால் விடுக்கும் விஷயங்களில் போராடி வெற்றி கொள்வது எப்படி என்பது பற்றியே சிந்தனை செய்யும். மனம் கொதித்த படியே இருக்கும். மனம் தன்னிரக்கம் கொள்ளும். வென்று முடிக்க வேண்டிய பாதை சரியானதா, தவறானதா என்பது பற்றிய பார்வை மங்கிப் போயிருக்கும். மனம் இப்படி இருக்கும்போது வேறு என்ன செய்யமுடியும். முயற்சி முயற்சி என்று அதே முள்நிறைந்த பாதையில் மீண்டும் மீண்டும் இறங்கி நடக்க ஆரம்பித்து விடுவான்.
அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். தான் தான் உண்மையான தீவிரவாதி. ஒரு உண்மையான தீவிரவாதி அழிவில் மட்டுமல்லாமல், ஆக்க சக்தியிலும், உண்மையை பேசுவதிலும் தன் தீவிரத்தன்மையை வெளிப்படுத்தக் கூடிய தைரியம் படைத்திருக்க வேண்டும். இதோ இதை உலகத்திற்கு நிரூபித்துக் காட்ட இன்னொருவன் பிறந்திருக்கிறான்…..என தனக்குள் சொல்லிக் கொண்டான்.
அப்பொழுது அவன் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். மாணவர்கள் அனைவருக்கும் ரேங்க்கார்டு வழங்கப்பட்டது. அதில் அனைத்து மாணவர்களும் அவரவர் தந்தையின் கையெழுத்தை வாங்கி வர வேண்டும். ஆனால் அவனுக்கோ தந்தையை தொந்தரவு செய்வதில் கிஞ்சித்தும் உடன்பாடில்லை. அதனால், அந்த முரண்பாடான விஷயம் நடந்து விட்டது. அவன் தந்தையின் கையெழுத்து, அவன் தந்தையின் கையால் போடப்படவில்லை என்பது மட்டுமே அந்த முரண்பாடு. மற்றபடி கையெழுத்து என்னவோ அதேதான். அதில் எள்ளளவும் வித்தியாசமில்லை.
ஆனால் ஆசிரியர்கள் என்றுமே கிரிமினல் புத்தியுடையவர்கள். முழியைப் பார்த்தே கண்டுபிடித்துவிடுவார்கள். எதார்த்தமாகவும், சகஜமாகவும் அவர் ஒரு கேள்வியைக் கேட்டார்.
“அப்பாவுடைய கையெழுத்தை யார் யாரெல்லாம் தாங்களே போட்டுக் கொண்டு வந்தது. கை தூக்குங்கள் பார்க்கலாம்” என்று கூறியதவுடன்……… ஒரு உத்வேகத்தில் (உண்மையே பேச வேண்டும் என்ற சத்தியத்தை வரித்துக் கொண்டதால் என்று கூட சொல்லலாம்) அவன் கையைத் தூக்கினான். அவனோடு சேர்ந்து நான்கு பேர் உணர்ச்சிவசப்பட்டு விட்டனர்.
அந்த ஆசிரியர் எல்லோரையும் போலவே வலதுகை பழக்கம் உள்ளவர். அவர் வலது கையை மட்டுமே தாக்குதலுக்கு உபயோகப்படுத்தினார். நாம் கவனித்துப் பார்த்தோமானால் இந்த மனிதர்கள் எப்பொழுதுமே வலது கையை மட்டுமே அதிகம் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் அளிக்கக் கூடிய விஷயமாக இருக்கும். ஏன் அவர்கள் இடது கையை பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை. சொல்லி வைத்தாற்போல் இடது கையை புறக்கணிக்கிறார்கள். ஒரு குழந்தை பிறக்கும் பொழுது வலது கையைத்தான் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு பிறப்பதில்லையே. பின் எப்படி இந்த பழக்கம் மனித இனத்திடம் தொற்றிக் கொண்டது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
ஜீஸஸ் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். அந்த வார்த்தையைக் கூறுவதற்கு முன்பு, வலது கை பழக்கமுடைய மனித இனம் கண்டிப்பாக அல்லது அதிகபட்சமாக இடது கையை பயன்படுத்தாது என்பதை உணர்ந்து “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு” என்ற வாக்கியத்தை சற்று மறுபரிசீலனை செய்திருக்க வேண்டும்.
அன்று அந்த ஆசிரியர் காது, மூக்கு, தொண்டை மருத்துவர்களுக்கு நோயாளிகளை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏற்கெனவே 50 சதவீதம் மந்தமாகியிருந்த அவனது இடது காது அன்று அந்த ஆசிரியரின் கைவண்ணத்தால் நூறு சதவீதத்தை எட்டி சாதனை படைத்தது. அவன் நினைத்தான் நமது ஆசிரியரை ஏன் பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்கு போர் செய்ய அனுப்பக்கூடாது….. மிக நன்றாக சண்டை போடுகிறாரே என்று வியந்தான். எப்பொழுதுமே திறமைசாலிகளை இந்த நாடு அங்கீகரிப்பதில்லை என்று அவன் அங்கலாய்த்துக் கொண்டான்.
மற்ற நால்வரில் ஒருவனுக்கு சில்லுமூக்கு உடைந்து ரத்தம் பெருக்கெடுத்தது. அடுத்த முறை ராக்கி படம் பார்க்கும் போது கைத்தட்டி ஆரவரிக்கக் கூடாது என்று அவன் நினைத்துக் கொண்டான் …. “அப்பா என்ன குத்து…..ராக்கியே வந்தாலும் தோற்றுவிடுவார் போல” என்று நினைத்துக் கொண்டான். ஒழுகிய ரத்தத்தை துடைத்தபடியே அருகில் இருந்த நண்பர்களிடம் அவன் கூறினான்….“சில்லு மூக்கு உடைந்தால் உடம்புக்கு நல்லது” என்று. கெட்ட ரத்தம் எல்லாம் வெளியேறிவிடுமாம். அவன் ஆசிரியருக்கு தனது நெஞ்சார்ந்த நன்றிகளைக் கூறி நன்றாக அவமானப்படுத்தினான்.
மற்ற மூவர் கன்னத்திலும் ஆசிரியர் தனது ரேகையைப் பதிவு செய்தார். காவல்துறையினரிடம் புகார் கொடுக்கும் பட்சத்தில், அவர்கள் ஆதாரத்திற்காக அலைய வேண்டிய அவசியமே இல்லை. சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே அவர்களால் ஆதாரத்தை துல்லியமாக திரட்ட முடியும்.
வன்முறை என்ற வரைமுறைக்குள் வரவேண்டும் என்றால் கன்னத்தில் அறைய வேண்டியிருக்கிறது. ஒரு கணவன், ஒரு மனைவியின் கன்னத்தில் அறைய வேண்டியிருக்கிறது. ஒரு ரவுடி ஒருகாவல்துறை அதிகாரியை தாக்க வேண்டியிருக்கிறது.
ஆனால் ஆசிரியரின் தாக்குதல்கள் எல்லாம் வன்முறை என்ற வட்டத்துக்குள வராது. அவர் மாணவர்களை திருத்துவதற்காகவே அடிக்கிறார். அமெரிக்கா அணுகுண்டுகளை தயாரிப்பதன் மூலம், உலக அமைதியை பாதுகாப்பதுபோல.
உலகம் என்றுமே ஒருவமனை மதிப்பதில்லை. தொடர்ந்து உதாசீனப்படுத்திக் கொண்டே இருக்கிறது. நிராசைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. இவற்றையெல்லாம் பழிவாங்குவதன் மூலமாகவே மறக்க முயல்கிறான். இந்த சமூகம், தான் இயலாதவனாக இருந்தபோது எப்படி பழிவாங்கியதோ, அதேபோல் தானும் இயலாதவர்களை பழிவாங்கி தன்னுடையநிராசைகளை போக்கிக் கொள்ள முயல்கிறான்.
இனப்பெருக்கத்தில் ஈடுபடும்நாயை கல்லெறியத் தூண்டுவது. பொதுவெளியில் காதலர்களின் நெருக்கம் ஏற்படுத்தும் எரிச்சல். பள்ளி மாணவன் பிறப்பெடுத்ததே தன்னிடம் அடிபட்டு ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளத்தான் என நினைப்பது.
நானே, பொத்திக்கொண்டு ஒரே ஜாதியில் பெண்ணெடுத்து துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேஙன். நீ மட்டும் வேற ஜாதி பெண்ணை காதாலிச்சு கல்யாணம் செய்து கொள்வாயோ என அறிவாளைத் தூக்கிக் கொண்டு துரத்துவது…..
புதிதாக கதையோ, கவிதையோ எழுத ஆரம்பித்தவுடன் சமுதாயத்துக்கு அறிவுரை கூறி திருத்த நினைப்பது….
ஆசிரியர், அப்பா, அம்மா, சினிமா, பட்டிமன்றம் என சுற்றிவளைத்து அறிவுரையாகக் கூறி என்னை மட்டும் கொலையாக கொன்றீர்கள் அல்லவா, இப்பொழுது நான் அறிவுரை கூறுகிறேன் பார் என சமுதாயத்துக்கு மெஸேஜ் இல்லாமல் எந்த ஒரு படைப்பையும் படைக்காமல் இருப்பது….
அடுத்தவனுக்கு அறிவுரை கூறி திருத்துவது தான் தனது தொழில் அதன் மூலம் மற்றவர்களை கேட்பவர்களாகவும், தன்னை, அறிவுரை சொல்பவனாகவும், உருவகப்படுத்தி விட நரித்னமாக (கன்னிங்நெஸ்) முயல்வது.
இதுபோன்ற எண்ணங்களுக்கெல்லாம் ஒரு உள்ளார்ந்த நரித்தனம் உள்ளது. மகாபாரதத்தில் வரும் சகுனியைப் போன்று ஒரு உள்ளார்ந்த பழிவாங்கும் தன்மையே, இயல்பான குணமாக உருவெடுத்து, ஒருவனின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுகிறது.
அதனால்தான், உயரதிகாரிகளாலும், ஆசிரியர்களாலும், ஆட்சியில் இருப்பவர்களாலும், நம்மைவிட ஏதோ ஒருவகையில் மேல்மட்டத்தில் இருப்பவர்களால் நாம் காரணமே இல்லாமல் புண்படுத்தப்படுகிறோம்.
உள்ளார்ந்த பழிவாங்கும் நரித்தனத்தை பண்பாக….குணமாக அமையப்பெற்ற ஒருவரிடம் மறு கன்னத்தை காட்டச் சொல்வதன் முரண்பாட்டை ஜீஸஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை.
- தாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவு
- பெரியவன் என்பவன்
- தினம் என் பயணங்கள் – 8
- திண்ணையின் இலக்கியத்தடம் – 25
- தொடுவானம் – 6 வெற்றி மீது வெற்றி
- சீதாயணம் நாடகப் படக்கதை – 23
- மருத்துவக் கட்டுரை – தொண்டைச் சதை வீக்கம் ( Tonsillitis )
- கவிதையில் இருண்மை
- வழக்குரை காதை
- மனத்துக்கினியான்
- ஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3
- பிச்சை எடுத்ததுண்டா?
- ‘காசிக்குத்தான்போனாலென்ன’
- வலி
- மாலோனுபவம் – நான் அனுபவித்த சிறு அனுபவம்
- எழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது
- இயக்கமும் மயக்கமும்
- மருமகளின் மர்மம் – 19
- ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு
- நீங்காத நினைவுகள் – 37
- செயலற்றவன்
- செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-25 கர்ணனின் வீழ்ச்சி