இன்று நான் ஒரு புதிய ஆங்கில வார்த்தைக் கற்றுக்கொண்டேன். Fantasy –[மனப்புனைவு] கற்பனை என்பது தான் அது. இந்த வார்த்தையைக் கூகுள் தான் எனக்கு கற்றுக் கொடுத்தது. ஆனால் ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் எண்ணம் என்னுள் எழுந்ததினால் மட்டுமே இது நிகழ்ந்தது.
அனுதினமும் புதிய விடயங்களைக் கற்றுக் கொண்டால் புத்துணர்ச்சியோடு இருப்போம் என்று என் நண்பர் சொல்வார். இதை நான் உணர்ந்ததும் உண்டு நாம் கற்றுக் கொள்ளத் தலைப்படும் போது நம் கவலைகளுக்காக கவலைப்பட நேரம் இருக்காது. மனதைச் சமநிலையில் வைத்துக்கொள்ள இதுவும் ஒரு வழி என்று தோன்றியது எனக்கு.
அலுவலகத்தில் அமர்ந்து, வந்து நிற்கும் ஒவ்வொரு பொது மாந்தருக்கும் பதில் சொல்லும் போது தோன்றியது ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு புத்தகம் என்று. சக மனிதர்களைக் கவனித்தலிலும் கற்றுக்கொள்ள முடியும் என்று தோன்றும் எனக்கு.
என் மகள் என்னிடம் ஒரு முறை சொன்னாள், உனக்குப் பிடித்த பாடலை முணுமுணுத்துக் கொள்; கவலை நிச்சயமாக உன்னை அண்டவே அண்டாது என்று. அதுவும் கூட நல்ல விடயமாக இருக்கிறதே என்று எண்ணினேன். பிறகு அலுவலகப் பயணத்தின் போது சிறுவர்களைச் சாலையில் காணும் படி நேரிட்டது. அவர்கள் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி ஒரு கால் மாற்றி மாற்றித் துள்ளலோடு நடந்து சென்றார்கள். இந்த செயல் குழந்தைத் தனமானது என்று சிரித்துக் கொண்டேன். குழந்தைகளைக் காணும்போதே மனம் இலகு தன்மை அடைவது ஆச்சர்யம் தான்.
பயணிக்கும் போது சில ஆச்சரியங்கள் தோணுவது உண்டு; அவ்வாறான ஆச்சரியங்களில் ஒருவன் தான் டீக்கடை பாலு…வெகு நாட்களாக அவன் பெயரே தெரியாது எனக்கு. என் மூன்று சக்கர வாகனத்தின் வேகம் குறையப் போகிறது. என்கைகள் சோர்கின்றன என்று எப்படித் தெரியுமோ அவனுக்கு, கேன் ஐ ஹெல்ப் யூ என்றபடி பதிலை எதிர்பார்க்காமல் வாகனத்தைத் தள்ளி வருவான். “உங்க ஓனர் திட்டப் போறார், நீ போடா,” என்று சொன்னாலும் சிரிப்பு மட்டும் தான் பதிலாக இருக்கும். அவனிடத்தில். அந்த சிரிப்பு என் இதழ்களிலும் நிரந்தரமாக வேண்டும் என்று நான் ஆசிப்பேன். அவனைக் காணும் போதெல்லாம் உற்சாகம் என்னையும் தொற்றிக் கொள்வதை உணர்ந்திருக்கிறேன். ஒரு போட்டோ எடுத்துக்குறேன் டா என்றால் மட்டும் முகம் மறைத்து ஓடிவிடுவான்.
குழந்தைப் பருவம் எப்போதும் மகிழ்ச்சியை அள்ளித் தெளிக்கும் போலும்… என் குழந்தைப் பருவத்தில் மகிழ்ச்சி என்பது வறண்ட பாலைவனம்.
“பேண்டசி” என்ற வார்த்தைக்குக் கூகுளில் படங்களைத் தேடினேன். சில இதமாக வருடியது. பல பயமுறுத்தியது. வருடிய ஓவியப் படங்களில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
[Fantacy Images]
மாலை மயங்கும் நேரம், அலுவலகத்தை விட்டு வெளி வந்த போது பட்சிகளின் கீச் கீச் கீச் கீச் கீச் குரல்தான் என்னை வரவேற்றது. என் மனநிலையைப் பொறுத்து அந்த ஓசை உற்சாகச் கூச்சலாகவும், ஒப்பாரியின் சோகமாகவும் இசைக்கும்.
சில சைக்கிள்களைக் கடந்து, ஒரு மிதி வண்டியில் லேசாய் உரசப் போய் நின்று நிதானித்து, மிதி வண்டிக்காரரை நகர வேண்டி, அலுவலக முகப்பு வாசல் கடந்து, சாலையின் மறுபுறம் கடக்க வேண்டிக் காத்திருப்புத் தருணத்தில் என் கைபேசி அலறும். அதைச் சமாதானப் படுத்தும் மனநிலை எனக்கு இருப்ப தில்லை. என் கவனம் சாலையில் தான் இருக்கும். சற்று நான் தாமதித் தாலோ…காகத்தின் எச்சம் என் தலைமேலோ அல்லது தோளிலோ பொத்தென்று விழுந்து வெள்ளையாய் வழியும்.
சமயத்தைப் பொறுத்துச் சில பேருந்துக்களோ அல்லது கார்களோ கடந்து செல்லக் காத்திருந்தால் நிச்சயம் காகத்தின் எச்ச அபிஷேகம் தான் அன்று. சற்று அசட்டு தைரியத்தில் குறுக்காகப் புகுந்து கடந்தால் இருபக்க வாகனங்களும் ஸ்தம்பிக்கும். சில நேரங்களில் இராட்சதக் கண்டெனர் களையோ, சுமை ஏற்றப்பட்ட லாரிகளையோ சந்திக்க நேரிடும். அருகாமை யில் அவை வீறிடும் போது மனம் திடும் என்று அதிர்ந்து பிறகு அசுவாசப் படும். இத்தனையிலும் நான் மதியம் உணவருந்தத் தவறினால் உடலின் சோர்வு, உள்ளத்தை ஊடுருவி இறுக்கமாக உட்கார்ந்து கொல்லும்.
முக்கூட்டு ரோட்டில் வீட்டுச்சாலையின் திசை திரும்பும் போதே…அத்தை என்று கத்திக்கொண்டு வருவாள் ஐந்து வயது குட்டி தேவதை திவ்யா. கொஞ்சம் கொஞ்சி சில முத்தங்கள் வழங்கிய பின் கேட்கப்படும் முதல் கேள்வி “க்ரீம் பிஸ்கேட்டு” என்பது தான். பொறுப்பாக வாங்கிச் சென்று விட்டேன் என்றால் தப்பித்தேன். கவனக்குறைவாகச் சென்றிருந்தேன் என்றால் அவள் அழுகை பொறுக்கும் படியாக இருக்காது. அவளுக்கு மட்டுமே வாங்கிச் சென்று விட்டு மேலும் இருக்கும் இரண்டு வாண்டுகளிடம் மாட்டினேன் என்றால் செத்தேன் என்று வைத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் இந்த அவஸ்தைகளுக்குப் பயந்தே நான் அவர்களுக்கானதை வாங்கிச் செல்ல மறப்பதில்லை. இவர்களோடு போட்டி போடும் என் டீனேஜ் மகளைப் பார்க்கும் போது இந்த பருவம் இப்படியே நின்று விடாதா என்று தோன்றும். இளமை கடந்து முதுமை வரும், உடன் தனிமையும் இயலாமையும் ஒட்டிக் கொள்ளும் என்று எண்ணும் போது வரும் கசப்புணர்வைக் கலைந்து முதுமையை எப்படி எதிர்கொள்வது, என் வசதிக் கேற்றார் போல் வீடு, உதவிக்கு ஆட்கள், விரிந்து வருடும் எழுத்து என்று கற்பனை நீண்டு விடும்.
இளமைத் துணிச்சலில் தனித்து இருப்பது சாத்தியப்படும் தான். முதுமையில் தான் துணை அத்தியாவசியமாகிறது. காமம் கரைந்து போய் தூய அன்பிற் காக ஏங்கும் மீண்டும் வருகிற மழலைப் பருவம் முதுமை.
சில மாதங்களுக்கு முன்பாக ஒரு நண்பரோடு உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது எனக்கு. அவர் தன்னை மனநல மருத்துவர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். அவரின் எழுத்துக்கள் என்னை கவர்ந்திருந்தது. அவரோடு பேசியதில் சில விடயங்களை கற்றுக்கொள்ளவும் முடிந்தது.
ஆனால் அவர் என்னிடத்தில் கேட்ட சில அருவருப்புக் கேள்விகளுக்கு, நான் பதில் தர விரும்ப வில்லை. அதில் ஒன்று உங்கள் காமத்தை எப்படி தீர்த்துக் கொள்கிறீர்கள் என்பது தான். நான் சொன்னேன் இந்த விடயத்தை உங்களிடம் பகிர வேண்டிய அவசியமில்லை. ஒரு நண்பனிடம் பகிரக்கூடிய விடயம் இதுவுமில்லை என்று.
அதன் பிறகு அவர் அவருடைய தளமும் என்னுடைய தளமும் வெவ்வே றானது என்றும், எங்கள் இருவரால் நட்பாக இருக்க முடியாது என்றும் கூறி விலகி விட்டார்.
இது போன்ற சில நிகழ்ச்சிகள் என்னைப் புண்படுத்திப் பண்படுத்தியது. நான் ஒரு பெண், பெண்ணுக்குரிய இயல்புக் குணங்களை மறந்து சந்தித்த முதல் நாளில் அந்த கேள்வியைக் கேட்க துணிந்தார் என்று எனக்கு தெரியவில்லை. அதை நான் ஏன் அவரிடம் பகிர வேண்டும். காமம் என்பது ஆதீத விருப்பம். அதை ஏன் உடலுறவோடு தொடர்புப் படுத்துகிறார்கள் எனக்கு தெரிய வில்லை.
பெண்ணை அனுபவிக்கும் போகப் பொருளாகவே பார்ப்பதை விடுத்து, ஏன் சக உயிரினமாக பார்க்க ஆடவர் தவறுகிறார்கள் என்று தான் தெரியவில்லை.
என் உடலுறவு ஆசைகள் என் கணவரோடு மட்டுமே பகிர்ந்துக் கொள்ள வேண்டியவைகள். அப்படி ஒரு உறவு இல்லாத பட்சத்தில் அதை வேறு ஓர் ஆணிடம் பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை. உடலுறவு எனக்கு முக்கியமான, அத்தியாவசிய தேவையாகத் தோன்றியதில்லை. இயற்கை ஓர் உயிரைப் படைக்க எல்லா உயிரினங்களிலும் அந்த உந்துதலை ஏற்படுத்தி விடுகிறது.
அது இயற்கை. அதிலும் நியதி உண்டல்லாவா…?
அலுவலகத்தி்ல் சகப் பெண்களிடமே இந்த கேள்வி என்னிடம் கேட்கப் படுகிறது. உன்னால் எப்படி இருக்க முடிகிறது. அல்லது உனக்கு கஷ்டமாக இருக்குமே என்ன செய்வாய்…? பாவம் நீ என்று விதத்தில் ஒன்றாக…இன்னும் சற்று அதிகமாக போய் நீ மரக்கட்டையா….என்ற வினவல் உயிரோட்டத்தின் அடி ஆழத்தை அதட்டிப் பார்க்கும் !
நான் மரக்கட்டை அல்ல, உயிரோட்டம் நிறைந்தவள் என்பது சில வேளை களில் எனக்குப் புரியவே செய்தது. பெண்ணாக ஒரு ஆண் துணை தேவைப் பட்ட எனக்கு ஒரு தாயாக ஆணைத் தள்ளி நிறுத்தவே தோன்றியது. அந்தரங்க நெருக்கமாக எந்த ஆணையும் ஏற்றல் என்பது என் மன நிலையின் ஆழத்திற்கு ஒவ்வாத காரியம் என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன் என்பது தான் உண்மை.
அடுத்து அந்த மனநல மருத்துவர் என்னிடம் கேட்ட கேள்வி சுய இன்பம் பற்றியதானது. சுய இன்பத்தை பற்றியதான அறிவு எனக்கு இருக்கவில்லை. அவர் அவ்வண்ணம் கேட்ட பிறகு நெட்டில் தேடி தெரிந்துக் கொண்டேன். இதுவும் ஒன்றுமில்லை என்று தான் எனக்கு தோன்றியது. அப்படியாகத் தீர்த்துக் கொள்ள வேண்டிய எந்த உந்துதலும் எனக்கு ஏற்பட்டதில்லை.
அதிக வேலைப் பளுவும் ஓயாத செயல்பாடுகளும் உடலுறவு எண்ணங்களை முடக்கி போட்டது என்பது தான் உண்மை. சிந்திக்கவும் செயல்படவும் அதிக காரியங்கள் உண்டு என்னிடத்தில்.
சமீபத்தில் எயிட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்ள நேரிட்டது. எல்லா குடும்பச் சச்சரவுகளுக்கும் உடலுறவுதான் மையக்காரணம் என்று கூறினார் சகோதரர் செல்வராஜ் அவர்கள். கணவன் மனைவியை ஒரு தனியறையில் பூட்டி வைத்தால் சில மணிநேரங்களில் எல்லா பிரச்சனை களும் தீர்ந்துவிடும் என்று. ஆனால் அதுவும் கூட சச்சரவுகள் தீரக் காரண மாக இருக்க முடியாது என்று தோன்றியது எனக்கு.
பேஸ்புக்கிலும் கூட, செல்லம், அம்மு, என்று கொஞ்சிக் கொஞ்சி சில செய்திகள் வருவதுண்டு. மிகவும் குழந்தைத்தனமாக, ஒரு தம்பி இப்படி குறுஞ்செய்தி அனுப்புகிறார். “ஏய் எருமை எனக்கு மெசெஜ் பண்ணாம அங்க என்ன பண்ற ?“ அதற்குத் திட்டவோ அல்லது பதில் தரவோ எனக்கு நேர மில்லை. அவர்களாகவே புரிந்துக்கொள்வார்கள்; அனுபவத்தின் பாதையில். எது தவறு, எது சரி என்று தீர்ப்பிடலுக்கு முன்பாக நடுநிலை வகிப்போம் என்றால் …………………………
வார்த்தைகளற்று மௌனித்து நிசப்தமே பதிலாகிறது.
[மீண்டும் வருவேன்]
- தாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவு
- பெரியவன் என்பவன்
- தினம் என் பயணங்கள் – 8
- திண்ணையின் இலக்கியத்தடம் – 25
- தொடுவானம் – 6 வெற்றி மீது வெற்றி
- சீதாயணம் நாடகப் படக்கதை – 23
- மருத்துவக் கட்டுரை – தொண்டைச் சதை வீக்கம் ( Tonsillitis )
- கவிதையில் இருண்மை
- வழக்குரை காதை
- மனத்துக்கினியான்
- ஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3
- பிச்சை எடுத்ததுண்டா?
- ‘காசிக்குத்தான்போனாலென்ன’
- வலி
- மாலோனுபவம் – நான் அனுபவித்த சிறு அனுபவம்
- எழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது
- இயக்கமும் மயக்கமும்
- மருமகளின் மர்மம் – 19
- ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு
- நீங்காத நினைவுகள் – 37
- செயலற்றவன்
- செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-25 கர்ணனின் வீழ்ச்சி