வெறும் புத்தகப் புழுவாகவே இருந்து பழக்கப் பட்டுவிட்டவன் நான். படிப்பில் மட்டுமே சிறந்து விளங்கிய நான் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள முடியவில்லையே என்ற மனக் குறை என்னுள் இருந்தது. ஓட்டப் பந்தயங்களில் ஓடி பரிசுகள் பெற வேண்டும் என்ற ஆவல் எனக்கு நிறையவே இருந்தது.ஆனால் வெட்கமும் அச்சமும் அதைத் தடுத்தது.
தேர்வு எழுதுவது யாருக்கும் தெரியாமல் செய்வதாகும். அது எளிது. ஆனால் பந்தயத்தில் ஓடுவதை பலர் பார்ப்பார்கள். அதில் வெற்றி பெறுவதும் தோல்வியுறுவதும் பலர் மத்தியில் நிகழ்வதாகும். அங்கு தோல்வியுற்றால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் தேவை. ஒருவேளை அதனால் பயந்தேனோ என்பது தெரியவில்லை. ஆனால் அப்பாவும் அதனால் படிப்பு கெடும் என்று நிச்சயம் தடுத்திருப்பார் என்பதும் எனக்குத் தெரியும்.
உயர்நிலைப் பள்ளியில் முகமது நூர் என்ற மலாய் பையன் எனக்கு தோழனானான். அவன் நன்றாக ஓடுபவன். பல பரிசுகள் வென்றவன். அவனிடம் என் பிரச்னையைக் கூறினேன்.
” நீ வெட்கப்படாமல் தினமும் மாலையில் நம்முடைய பள்ளித் திடலில் ஓடி பயிற்சி செய். உனக்கு நீண்ட கால்கள் உள்ளன. நிச்சயமாக நீ சிறந்த ஓட்டக்காரனாக வர முடியும். நான் அப்படிதான் இன்னும் பயிற்சி செய்கிறேன். நீயும் என்னோடு சேர்ந்து கொள். ” அவன் ஊக்குவித்தான்.
மாலையில் பயிற்சி என்றால் மீண்டும் பள்ளி வரவேண்டும். அதற்கு அப்பா சம்மதிக்கணும். மீண்டும் பேருந்துக்கு காசு தரமாட்டார். அதற்கு வேண்டுமானால் கோவிந்தசாமியின் சைக்கிளைப் பயன்படுத்தலாம்.
மலையில் உடற்பயிற்சிக்கு கட்டாயம் வரவேண்டும் என்று உடற்பயிற்சி ஆசிரியர் சொன்னதாக அப்பாவிடம் கூறினேன். அவர் தயங்கியபடி சம்மதித்தார்.
உடற்பயிற்சி ஆசிரியரின் பெயர் பெஸ்த்தானா. அவர் ஓர் ஆங்கிலேயர். என்னை திடலில் பார்த்த அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தினமும் மாலையில் முறையான பயிற்சி அளித்தார். அந்தத் திடலில் நானூறு மீட்டர் ஓடும் பாதை இருந்தது. அன்றாடம் அதில் பத்து சுற்றுகள் ஓடுவேன். வேறு விதமான பயிற்சிகளும் கற்றுத் தந்தார்
நான ஓடுவதைப் பார்த்த அவர் என்னை நெடுந்தொலைவு .ஓட்டங்களில் கவனம் செலுத்துமாறு கூறினார். நானும் அவரின் மேற்பார்வையில் நாளுக்கு நாள் நன்றாக ஓட்டத்தில் முன்னேற்றம் கண்டேன்.
அந்த வருடம் மூன்று மைல் ஓட்டப்பந்தயம் ஏற்பாடாகியிருந்தது. அதற்கு ” ஊர் குறுக்கே ஓடும் பந்தயம் ” ( Cross Country Race ) என்று பெயர். அது விளயாட்டுத் திடலில் நடைபெறாது.
சிங்கப்பூரின் பெரிய நீர்த் தேக்கத்தில் நடைபெற்றது. மேக்ரிட்சி நீர்த் தேக்கம் அழகான இயற்கை வளங்களுடன் காட்டுப் பகுதியில் உள்ளது. மலைகள், ஆழ்ந்த பள்ளத்தாக்குகள், சிறு கால்வாய்கள் ,சேற்றுக் குட்டைகள் ஆகிய அனைத்தையும் கடந்து அந்த காட்டுப் பாதையில் மூன்று மைல்கள் ஓடவேண்டும்.
மொத்தம் இருநூறு பேர்கள் இப் போட்டியில் கலந்து கொண்டோம். நான் ஐந்தாவதாக ஓடி முடித்தேன்! எனக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
முதல் இருபது பேர்கள் பள்ளியின் சார்பாக மாவட்ட அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டோம். அதில் நான் ஏழாவதாக வென்றேன்! எனக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.இது பெரிய சாதனையாகும்.
மாவட்டப் போட்டியில் வென்ற முதல் முப்பது பேர்களை அகில சிங்கப்பூர் பந்தயத்திற்கு அனுப்பினர். அதில் நான் எட்டாவதாக வென்றேன்! இது அதைவிட பெரிய சாதனை! வட்டார சின்னம் பொறிக்கப்பட்ட பனியனை அணிந்துகொண்டு பலர் மத்தியில் ஓடி வெள்ளிக் கிண்ணம் பரிசு பெற்றது இன்பமான அனுபவம்!
அவ்வருட பள்ளி ஒட்டப்பந்தயத்தில் நான் நானூறு மீட்டர், எண்ணூறு மீட்டர், ஆயிரத்து ஐநூறு மீட்டர், ஐயாயிரம் மீட்டர் பந்தயங்களில் ஓடி வெற்றி வாகைச் சூடி முதல் பரிசுகள் வென்றேன்.
சிறந்த ஓட்டப் பந்தய வீரன் என்ற தலைப்புடன் என்னுடைய புகைப் படம் ‘ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் ‘ ( Straits Times ) ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்தது!
பரிசுக் கிண்ணங்களை லதாவிடம் காட்டி மகிழ்ந்தேன்.
அப்பாவோ அவற்றைப் பார்த்து மகிழ்வதாகக் காட்டிக் கொண்டாலும், முதல் மாணவனாக வர இவையெல்லாம் தடையாகும் என்றுதான் கூறினார்.
மாலையில்தானே ஓடி பயிற்சி செய்கிறேன், அதனால் படிப்பு கெடாது என்று நான் சமாதானம் சொன்னேன்.
இவ்வாறு உடற்பயிற்சியில் ஈடுபடுவது பரிசுகளைப் பெறுவதோடு உடல் உறுதிக்கும் நல்லது என்பதை அவர் ஏற்க மறுத்தார்.
அதே வேளையில் நான் மாலைகளில் பள்ளி சென்று விடுவது அவருக்கு வேறு விதத்தில் நிம்மதி தந்திருக்கலாம். நான் லதாவைப் பார்க்க முடியாது என்ற தைரியம் அவருக்கு!
அவருடைய எண்ணமெல்லாம் வகுப்பில் நான் முதல் மாணவனாகத் திகழ வேண்டும் என்பதே. அது எனக்குத் தெரியாமல் இல்லை. என்னுடைய விருப்பப்படி படிக்க விட்டால் என்னால் முடியும் என்று நம்பினேன்,
புத்தகப் புழுவாக மட்டும் இருந்த நான் ஓட்டப் பந்தயங்களில் புகழ் பெற முடிந்தது கடின உழைப்பேதான் என்பது அப்போது தெரிந்தது.
அவ்வாறு எந்தத் துறையிலும் ஆர்வம் கொண்டாலும் கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி உண்டு என்பதை அப்போதே நான் தெரிந்து கொண்டேன்.
உயர்நிலைப் பள்ளி பருவத்திலேயே பல துறைகளில் சாதனைகள் புரிய வேண்டும் என்றும் சபதம் கொண்டேன்.
ராபிள்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் வகுப்புக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
தமிழ் ஆசிரியரின் பெயர் ஏ. ஜே. டேவிட். பள்ளியிலேயே மிகவும் வயதான ஆசிரியர் அவர்தான். ஆரம்பப் பள்ளிபோல் இங்கும் நானே தமிழில் சிறந்து விளங்கினேன்.
மார்ச் மாதத்தில் அகில சிங்கப்பூர் ரீதியில் ஒரு கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டது. அது ஆங்கிலம், மலாய், சீனம், தமிழ் என நான்கு மொழிகளிலும் நடைபெற்றது. சீன கிறிஸ்துவ இளைஞர் சங்கத்தால் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளியும் இரண்டு மாணவர்களை அனுப்பவேண்டும். மூத்தவர் பிரிவில் சாத்தப்பனையும் இளையவர் பிரிவில் என்னையும் தேர்ந்தெடுத்தார் ஆசிரியர் டேவிட்.
போட்டியில் பங்கு பெறுபவர்கள் அனைவரும் விக்டோரியா உயர்நிலைப் பள்ளியில் கூடினோம். வகுப்பறையில் அமர்ந்த பின்புதான் தலைப்பு தரப்பட்டது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியே தலைப்புகள் தரப்பட்டன.
எனக்குக் கிடைத்த தலைப்பு, ” நன் மாணாக்கன் எனப் பேர் எடுப்பது எப்படி? ” என்பது.
மாணவர்களின் கடமைகளையும், அவர்கள் படிப்பில் செலுத்த வேண்டிய கவனத்தையும், கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளையும் மையமாக வைத்து நான்கு பக்கங்கள் எழுதினேன். இந்தப் போட்டி ஒரு தேர்வு எழுதுவது போன்றுதான் இருந்தது.
25. 5. 1960 ஆம் தேதியன்று ‘ தமிழ் முரசு ‘ நாளேட்டை நான் புரட்டிக் கொண்டிருந்தபோது ஒரு பக்கத்தில், ” நான்கு மொழிக் கட்டுரைப் போட்டி: தமிழ்ப் பகுதியில் வெற்றி பெற்றோர் ” என்ற தலைப்பு கண்டு கண்களைச் செலுத்தினேன். எனக்கு இரண்டாவது பரிசு என்பதை அறிந்து எல்லையில்லா இன்பம் கொண்டேன். மூத்தவர் பிரிவில் சாத்தப்பனுக்கு முதல் பரிசு கிடைத்திருந்தது.
மொத்தத்தில் நாற்பத்தியிரண்டு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றிரண்டு மாணவர்கள் கலந்து கொண்ட போட்டி. இதில் வெற்றி பெற்றது பெரும் சாதனையே!
பள்ளியின் வாராந்திரப் பொதுக் கூட்டத்தில் எங்கள் இருவரின் பெயர்கள் வாசிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.
பரிசளிப்பு விழா, சீன கிறிஸ்துவ இளைஞர் சங்கத்தில் நடைபெற்றது. விருந்துக்குப்பின் பரிசுகள் வழங்கினர். புகைப்படங்கள் எடுத்தனர்.
எங்கள் கட்டுரைகளைப் படித்து தேர்வு செய்தவர் திரு. வை. திருநாவுக்கரசு, தமிழ் முரசின் துணை ஆசிரியர்.
எங்கள் இருவரின் கட்டுரைகளும் தரமானவை என்றும், ஆங்கிலப் பள்ளியில் பயின்றாலும் தமிழ் மாணவர்களின் கைத்திறனைக் கண்டு தான் வியந்ததாகக் கூறினார்.
கலைகளில் சிறந்தது எழுத்துக் கலை என்றும், எங்களை இதுபோன்று தொடர்ந்து தரமானவற்றை எழுதி தமிழ் முரசுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.
( தொடுவானம் தொடரும் )
- தாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவு
- பெரியவன் என்பவன்
- தினம் என் பயணங்கள் – 8
- திண்ணையின் இலக்கியத்தடம் – 25
- தொடுவானம் – 6 வெற்றி மீது வெற்றி
- சீதாயணம் நாடகப் படக்கதை – 23
- மருத்துவக் கட்டுரை – தொண்டைச் சதை வீக்கம் ( Tonsillitis )
- கவிதையில் இருண்மை
- வழக்குரை காதை
- மனத்துக்கினியான்
- ஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3
- பிச்சை எடுத்ததுண்டா?
- ‘காசிக்குத்தான்போனாலென்ன’
- வலி
- மாலோனுபவம் – நான் அனுபவித்த சிறு அனுபவம்
- எழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது
- இயக்கமும் மயக்கமும்
- மருமகளின் மர்மம் – 19
- ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு
- நீங்காத நினைவுகள் – 37
- செயலற்றவன்
- செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-25 கர்ணனின் வீழ்ச்சி