தினம் என் பயணங்கள் – 8 (மேல் செங்கத்தில் மான் வேட்டை)

This entry is part 1 of 23 in the series 16 மார்ச் 2014

மனம் வின்னென்று ஒரு வலியைப் பரப்பிச் சென்றது. நேற்று இரவு சன் தொலைக்காட்சியின் ஏழுமணிச் செய்தியைக் கேட்டபோது. மேல்செங்கம் வனப்பகுதியில் 5 மான்களைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தைப் பற்றி அந்த செய்தி பின்வருமாறு அறிவித்தது.

 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்திற்கு உட்பட்டதான மேல்செங்கம் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய முன்னாள் துணைக் கமிஷனர்  உள்பட நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர்.

 

வேலியே பயிரை மேய்ந்த கதை இதுதான் போலும். சமூகப் பொறுப்பில் உள்ளவர்கள்தான் அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்தகிறார்கள். (முன்னாள் துணைக் கமிஷனர் என்ற போதும் கூட மனசாட்சி உறுத்த வில்லையா அந்த மனிதருக்கு).

 

சேலம் மாவட்ட ஓய்வு பெற்ற துணைக் கமிஷனர் வீரமணி இத்தீயச் செயலுக்குக் தலைமையாம். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்த மோகன், சேலம் அழகப்பனூரைச் சேர்ந்த பிரபாகரன், மகேந்திரன் ஆகிய கூட்டுக் களவாணிகள் சேர்ந்து ஏதுமறியா ஐந்து உயிரைக் கொலை செய்திருக்கிறார்கள். மரித்த மான்கள் கெட்டுபோய்விடக் கூடாது என்பதற்காக அதன் குடலை அகற்றியிருக்கிறார்கள். இதனை இண்டிகா காரில் கடத்தியும் இருக்கிறார்கள். இதன் பிறகு வனத்துறை அதிகாரிகளால் பிடிப்பட்டார்கள், ஜட்டியோடு உட்கார்ந்தபடி போஸ் கொடுக்கிறார்கள் என்பதல்ல சங்கதி (அதையும் ஏன் விட்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை.) (முன்னாள் அதிகாரி என்பதால் கழட்டாமல் விட்டுவிட்டார்கள் போலும் உடுப்பு – மரியாதை கெட்ட செயலுக்கு மரியாதையாம்) .

 

இதே மேல்செங்கம் பகுதியில் தான் சில நாட்களுக்கு முன்பு ஆனைக்கூட்டம் வந்து ரோந்து போனது. சும்மா கிடந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி. அந்த கதையாக தன் பாட்டுக்கு போய்ட்டிருந்த ஆனைகுட்டி மேல் கல்லை விட்டெறிஞ்சு செத்து ஒழிஞ்ச ஒன்னு ரெண்டு மனுஷங்களோட குடும்பம் பழிபோடுதறது என்னமோ ஆனை மேல தான். மனுஷன் எதுவுமே பண்ணாம யானை வந்து மிதிச்சுருச்சாம் !!!  (என்ன கொடுமை ஸார் இது ?).

 

ஒரு மாதத்தி்ற்கு முன்பு சாத்தனூர் அணைக்கு அருகாமைக் கிராமமான சொர்ப்பனந்தல் கிராமத்தில் மான் குட்டி ஒன்று தண்ணீர் தேடி வந்துவிட, வனத்துறையினரிடம் கிராம மக்களால் ஒப்படைக்கப்பட்டது.

 

காட்டை அழிக்கிறது மனிதன். விலங்குகளின் இருப்பிடத்தைக் கொள்ளை அடித்துக் கொண்டது மனிதன். காயம் அடைந்தால், பழி போடுவது மட்டும் விலங்கினத்தின் மேல். 


கடந்துபோன விவசாயக் குறைதீர்வுக் கூட்டங்களில் பேசப்படுகிற கருத்துக்கள் என்ன வென்றால், என் வீட்டருகே பன்றி குட்டையிருக்கிறது அதை அகற்ற வேண்டும். (அதிகாரி சொன்னார் பன்றி வந்து என்வீடருகே மனிதன் தொல்லை தருகிறான் என்று கம்ளைண்ட் பண்ண என்ன பண்றது…? நியாயமாக யோசிக்க வேண்டிய விடயம். பன்றியின் இடத்தை மனிதன் ஆக்கிரமித்துக்கொண்டு குரல் உயர்த்தி கூப்பாடு போடுகிறான். பன்றிகளை அகற்ற வேண்டும் என்று.

 

வீதிகளில் மாடுகள் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. மாடு ஒரு ஒரத்தில நின்னா, அது பின்னாடி நின்னுகிட்டு காது கிழியறது போல ஹாரன் அடிக்கிறது. நடுரோட்டுல தள்ளு வண்டியில தக்காளிய வச்சிட்டு மாடு திங்க வந்த தடியை எடுத்து தலைமேல ஒரே போடு, மாட்டோட மேய்ச்சல் நிலங்களான மந்தவெளி புறம்போக்கத்தை அபகரிச்சு கட்டிடமா….காற்று வராம பொட்டி பொட்டியா அடைச்சுக் கட்டிட்டு, உள்ள ஏசி போட்டு உட்கார்ந்துக்கிட்டா…? இடைஞ்சல் மாடா மனிதனா…?

 

ஒரு பொறையோ….துளி தேநீரோ சிந்தாதா…என்று ஏக்கமாக பார்க்கும் நாயின் மீது கொதிக்கும் நீரை ஊற்றும் இரக்கம் கெட்ட இழிவு ஜென்மம் மனிதன்.

சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன். அதில் சிங்கம் ஒன்று மானின் அருகாமையில் இருந்த போதும் கூட அதற்கு பசி என்று வரும் வரையில் அந்த மானை ஏதும் செய்யவில்லை.

 

ஆனால் மனிதன் பணம் என்ற காகிதக் குப்பையைக் குறிக்கோளாக் கொண்டு மனிதநேயத்தை கொன்று புதைக்கிறான்.  இச்செயல்களை அசைபோடும் பட்சத்தில் மனிதனைப் போன்று ஓர் இழிவுப் பிறவியை இதற்குமேல் இந்த பிரபஞ்சம் தோற்றுவிக்காது என்றே எனக்கு தோன்றுகிறது.

 

மீண்டும்

பிரபஞ்சம் எழுதத்தூண்டும் ஏதோ ஒன்றோடு

 

++++++++++++++++++++

Series Navigationஇருநகரங்களின் கதை சொல்லி: சுப்ரபாரதிமணியன்இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [ நிகழ்ச்சி எண்-145 ]2015 இல் புறக்கோள் புளுடோவைத் தாண்டி பரிதி மண்டலத்துக்கு அப்பால் உளவப் போகும் நாசாவின் வேக விண்ணுளவி புதுத் தொடுவான் [New Horizon]எறும்பின் பயணம் – நிலாரசிகனின் ‘கடலில் வசிக்கும் பறவை’பங்காளிகளின் குலதெய்வ வழிபாடு
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *