நினைவில் பதிந்த காட்சிகள் – கதிர்பாரதியின் ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’

This entry is part 1 of 23 in the series 16 மார்ச் 2014

 

காலம்தோறும் கவிதையின் மொழிதல்முறை மாறிக்கொண்டே வருகிறது. அதே தருணத்தில் எளிமை, இறுக்கம், கச்சிதம் என கவிதையின் புறவடிவங்களிலும் மாற்றம் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஒரு மொழிதல்முறை பல கவிஞர்களால் மெல்லமெல்ல வளர்த்தெடுக்கப்பட்டு, அது அந்தக் காலத்துக்குரிய முறையாக உச்சம் பெற்று, கால ஓட்டத்தில் அது தேய்வழக்காக மாறிவிடும் தருணத்தில் மீண்டும் ஒரு புதிய மொழிதல்முறையோடு ஒரு புதிய தலைமுறை தோன்றுகிறது. தமிழ்க்கவிதையின் மொழிதல்முறையில் மாற்றங்கள் உருவான சமயங்களில் மிகச்சிறந்த ஆளுமைகளாக மலர்ந்தவர்கள் பாரதியார், ந.பிச்சமூர்த்தி, சி.மணி, பிருமிள், நகுலன், ஞானக்கூத்தன், தேவதேவன், தேவதச்சன், கல்யாண்ஜி, மனுஷ்யபுத்திரன் போன்ற கவிஞர்கள். சமயவேல், யூமா வாசுகி ஆகியோர் தொடர்ந்து எழுதாவிட்டாலும் முக்கியமான ஒரு கட்டத்தில் மொழிதல்முறையில் ஓர் இன்றியமையாத திருப்பத்தை ஏற்படுத்திய கவிஞர்கள்.  முகுந்த் நாகராஜ், அய்யப்ப மாதவன் என இன்று எழுதிக்கொண்டிருக்கும் பலருடைய மொழிதல்முறைகளுக்கான முன்னோடி அவர்கள். அவ்வரிசையில் எழுதிக்கொண்டிருக்கும் இளம் ஆளுமையாக கதிர்பாரதியை அடையாளப்படுத்தலாம். ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ என்னும் தொகுப்பு அதற்கான சாட்சியாக உள்ளது.

மொழிதல்முறையில் புதுமை உருவாகலாமே தவிர, அதுமட்டுமே ஒருபோதும் கவிதையாக மலர்ந்துவிடாது. கவிதைக்கே உரிய அவதானிப்பு மிக முக்கியம். அவதானிப்பும் புதுமொழிதல் முறையும் இணையும்போது மட்டுமே வசீகரமான ஆக்கங்கள் உருவாகும். கதிர்பாரதியின் பல படைப்புகளில் இந்த இணைப்பு பொருத்தமாக இடம்பெற்றிருக்கிறது. இதையே கதிர்பாரதியின் வலிமை என்று சொல்லலாம்.

‘சோழக்கடற்கரைப் பிச்சி’ என்றொரு கவிதை. கடலோரமாக மார்பில் ஓயாது அறைந்தபடியும் கண்ணீர் சிந்தியபடியும் அலைகிற ஒரு பிச்சியாகச் சுற்றிவரும் கடல்தேவதையின் சித்திரம் இக்கவிதையில் இடம்பெற்றிருக்கிறது. கண்களிலிருந்து துளித்துளிக் கடல்கள் சிந்த, அவள் விரிந்து கொந்தளித்தபடி உள்ள கடலின் முன்னால் நின்றிருக்கிறாள். அவளைக் கண்டு பயந்து உள்வாங்குகிறது அந்த நீலக்கடல். கடலில் காணப்படும் ஒரு கப்பலின் காட்சி அவளை மேலும்மேலும் சீற்றமுற வைக்கிறது. மருண்ட கடல்மீது வாய்குதப்பி வசவுகளை உமிழ்கிறாள் அவள். அலைந்து அலைந்து களைப்புற்றவளாக, கடைசியில் மணலை முந்தானையில் பொதிந்து மார்புக்கு நடுவே வைத்துப் பிடித்தபடி கரையிலேயே கண்ணயர்ந்துவிடுகிறாள். தொடுவானுக்கும் அவளுக்குமிடையே தத்தளித்த கடல், அவள் உறங்கியபிறகு, அவள் கால்களைத் தொட்டுத் தழுவித் திரும்புகிறது. அச்சமுறும் கடல் ஒருபுறம், கடலுக்கு அச்சமூட்டும் பிச்சி ஒரு புறம். பல மெளனங்களோடும் பல இடைவெளிகளோடும் கவிதை அழகான ஓர் ஓவிய அனுபவமாக மாறுகிறது.

‘கூச்சத்தைப் பூசிக்கொள்ளும் பிள்ளையார்’ என்னும் கவிதை குளக்கரை ஓரமாக வழக்கமாக உள்ள ஒரு பிள்ளையாரைப்பற்றிய சித்தரிப்புகளை முன்வைக்கிறது. முதலில் அவர் தோற்றம் பற்றிய குறிப்புகள். பிறகு அவருக்கு நிகழும் வழிபாட்டின் பெருமைபற்றிய குறிப்புகள். அங்கு வந்து செல்பவர்கள் பற்றிய குறிப்புகள். அப்புறம், அவருடைய தனிமை மற்றும் துயரம் பற்றிய குறிப்புகள். இறுதியாக, ஒரு தெருநாய், அந்த இறையுருவத்தை ஒரு சாதாரணக் கல்லாக நினைத்து ஓரமாக ஒண்டி சிறுநீர் கழித்துவிட்டுச் செல்லும் குறிப்பு. பிள்ளையாரின் சித்திரத்தை முன்வைப்பதாக கட்டமைக்கப்பட்டிருக்கும் கவிதை, இறுதிவரிக்குப் பிறகு, நம் ஒவ்வொருவரின் சித்திரத்தையும் காட்டும் ஆடியாக மாற்றமடைந்துவிடுகிறது. பெருமையும் சிறுமையும் பிள்ளையாருக்கு மட்டுமன்றி, நம் ஒவ்வொருவருக்கும் உரியதுதான் என்பது புரிய ஒரு கணம் போதும். தினந்தோறும் நம் மீதும், நம் கனவுகள் மீதும், நம் திறமைகள்மீதும், நம் பெருமைகள்மீதும் சிறுநீர் கழித்துவிட்டுச் செல்லும் ஏராளமான சிறுமதியாளர்களைச் சந்தித்தபடியே செல்லும் நமக்கு இந்தக் கவிதை மிகவும் நெருக்கமாக இருக்கிறது.

சிறுமையையும் வலியையும் ஏமாற்றத்தையும் எதிர்கொள்ள உதவும் ஆயுதங்கள் பகல்கனவும் கற்பனையும் மட்டுமே. அத்தகு பகல்கனவின் காட்சி ‘ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்’ கவிதையில் உள்ளது. அது ஓர் எளிய நிலம். அந்த நிலத்துக்கு அவன் சூட்டிய பெயர் ஆனந்தி. ஆனந்தி என்று பெயர்சூட்டிய கணத்திலிருந்து, அந்த நிலத்தில் ஆனந்தம் கரைபுரண்டோடுகிறது. இந்த மண்ணில் நிகழ்கிற எல்லாமே அந்த ஆனந்திக்காகவே நிகழ்கிறது. அந்த நிலத்தில் வீசுகிற காற்று ஆனந்திக்காக. அந்த நிலத்தில் படர்கிற வெயில் ஆனந்திக்காக. அந்த நிலத்தில் விளையும் விளைச்சல் ஆனந்திக்காக. மழைகொண்டுவரும் தட்டான்கள் அந்த நிலத்தில்   தாழ்வாகப் பறப்பதுகூட ஆனந்திக்காக. கவிதை எவ்வளவு உயர்வான வரம் ! ஒரு கனவின் வழியாக காற்றென அனைத்தையும் கடந்து மிதந்து வந்துவிட முடிகிறது.

’மகன்களும் மகன்களின் நிமித்தமும்’ என்னும் நீள்கவிதையின் பகுதிகள் முன்வைத்திருக்கும் அவதானிப்புகள் கவித்துவத்தின் உச்சமாக உள்ளன. ஒரு பகுதியில் ஐந்து விரல்களை ஐந்து ஊர்களின் அடையாளமாக மாற்றிச் சொல்லும் குழந்தைமையின் மொழி மனத்துக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. ஐந்து விரல்கள் வழியாக நகரின் சித்திரத்தையே குழந்தையின் உள்ளங்கை தாங்குகிறது. இப்படி எண்ணத் தொடங்கிய கணத்திலேயே வேறொரு காட்சியை நம் அகம் விரித்துக்கொள்கிறது. ஒற்றை விரலால் மலையைத் தூக்கி பிரளயத்திலிருந்து இந்த உலகத்தைக் காத்தருளும் தெய்வக்குழந்தையின் புராணப்படிமத்தைச் சட்டென ஒரு பிஞ்சுவிரல் தீண்டி இந்தத் தரைக்கு இழுத்து வந்துவிடுகிறது. கவிதையின் மற்றுமொரு பகுதியில் சிறுவன் உருவாக்கும் கொலுபொம்மைகளின் காட்சி இடம்பெறுகிறது. மானை முதுகில் சுமக்கும் புலி. பசுவின் நிழலில் இளைப்பாறும் சிங்கம். முகத்தோடு முகம் உரசி விளையாடும் கரடியும் குரங்கும். துப்பாக்கியை கையில் ஏந்தியபடி நிற்கும் காந்திஜி. புல்லாங்குழல் வாசிக்கும் வேட்டைக்காரன். ஓநாய்க்குட்டியை நாக்கால் தடவிக்கொடுக்கும் காட்டெருமை. இந்த உலகத்தின் வாழ்க்கைச்சூத்திரங்கள் எதையும் அறியாத குழந்தைமையின் கபடற்ற விளையாட்டை வாசிக்கும்போது புன்னகைக்கத் தோன்றும் கணத்திலேயே, இக்காட்சியைக் கட்டமைத்திருக்கும் மனத்தில் படிந்துள்ள ஆழ்ந்த ஏக்கத்தையும் புரிந்துகொள்ளமுடிகிறது. இப்படித்தானே இந்த உலகம் இருந்திருக்கவேண்டும், ஏன் இப்படி இல்லாமல் போனது என்றொரு கேள்வி எழுவதைத் தடுக்கமுடியவில்லை. அந்தக் கேள்விக்கான பதில்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளைப் புரட்டி நாம் தேடிக் கண்டடைய வேண்டும்.

தண்ணீரைத் துளைத்துத் தொங்கும் தூண்டிலில்

துடிக்கும் புழுவை

முள்ளில் மாட்டிக்கொள்ளாமல்

கவ்வி இழுப்பதுபோன்ற கனவிலிருந்த சினைமீன்

கொத்தித் தூக்கிய கொக்கின் தொண்டையில்

இடவலமென அசைகிறது முள்ளாக மாறி-

அடிமேல் அடிவைத்து

வெள்ளையாகச் சலனிக்கிறது

உறைந்திருந்த காலம்

 

என்ற கவிதையில் இருக்கும் மீனின் சித்திரம் நம் மனத்தை அசைத்துவிடுகிறது. எச்சரிக்கையாக இருப்பதற்கும் மரணத்தின் எதார்த்தத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் மரணம் நம்மைக் கடந்துபோய் விடுகிறது. மரணம் கண்ணற்றது. இரக்கமும் இல்லாதது. அதன் முன் சாதாரண மீனும் ஒன்றுதான். சினைமீனும் ஒன்றுதான். அமைதியான தண்ணீர்ப்பரப்புக்குக் கீழே ஆழ்ந்த துயரளிக்கும் மரணம். அமைதிக்கும் சாட்சியாக, மரணத்துக்கும் சாட்சியாக நகர்ந்தபடியே இருக்கிறது தண்ணீர். மீனுக்குமட்டும் நேர்வதல்ல இந்த நிலைமை. மானுடன் உட்பட இந்த உலகின் எல்லா உயிர்களுக்கும் பொதுவானதொரு கோலம் அது.

ரயில்பயணக்காட்சியொன்றை கதிர்பாரதி கவிதையாக்கியிருக்கும் விதம் எளிதில் மறக்கமுடியாதபடி உள்ளது.

முன்மாலைக்கும்

பின்மாலைக்கும் இடையே

மிதவேகத்தில் ஓடுகிற ரயில்

ஒரு புள்ளியாகி மறைகிறது அந்திக்குளத்தில்

பிள்ளைக்குப் பாலூட்டும் ஏக்கத்தில்

பயணிக்கிற

அவளின் முலைகளை

தாலாட்டி தாலாட்டி

 

பயணக்காட்சியை தாய்மையின் சித்திரமாக மாற்றிவிடுகிறது கதிர்பாரதியின் கவித்துவம். பாலூட்டும் ஏக்கத்தோடு குழந்தையை மனத்துக்குள் தாலாட்டியபடி பயணம் செய்யும் தாய் ஒருபுறம். ஏக்கமும் சிந்தனையும் கொண்ட அவளுடைய கனத்த மார்புகளை தாய்மையுணர்வோடு தாலாட்டி நகரும் ரயில் இன்னொரு புறம்.

தொகுப்பில் இடம்பெற்றுள்ள இன்னொரு ரயில்பயணக்காட்சியை முன்வைத்துள்ள கவிதை தரும் வாசிப்பு அனுபவமும் முக்கியமானது.

கண் அவிந்த

ரயில் பிச்சைக்காரன் பாடலில்

வேர்க்கடலை உமிகளை

ஊதிவிடுகிறான்

கூடப் பயணிக்கும் பிரயாணி ஒருவன்

அவை

அந்தப் பாடலுக்கு ஏற்ப

அசைந்து

சுழன்று

ஆடி

ஏந்தியிருக்கும் பிச்சைப்பாத்திரத்தில்

விழுகின்றன.

அவனது பாடல்கூட

பிரயாணியின் காதில்

அப்படித்தான் விழுகிறது.

 

கண்ணற்ற ஒருவனின் பாடல் ஒருபுறம். கண்பார்வையுள்ள ஒருவனால் ஊதிவிடப்படும் வேர்க்கடலைத்தோல் மறுபுறம். காற்றில் இரண்டுமே மிதந்தலைந்து பரவுகின்றன. வேர்க்கடலைத்தோலின் பயண அசைவுகள் கண்ணுக்குப் புலப்படுவதுபோல, பாட்டின் பயண அசைவுகள் புலப்படுவதில்லை. தோல் அசைந்து அசைந்து சென்று, பிச்சைக்காரனின் தட்டில் நாணயங்களாக விழுகின்றன. பாடல் வரிகளும் அதுபோலவே அசைந்து அசைந்து சென்று, அந்தக் குறும்புக்காரனின் காதில் விழுகின்றன.  பிச்சைக்காரனின் பாட்டுவரி எந்தப் பேதத்தையும் உணர்வதில்லை. நாணயம் போடுகின்றவன், நாணயம் போடாதவன், கிண்டல் செய்பவன், முறைத்துப் பார்ப்பவன், பாவம் பார்ப்பவன், அருவருத்து முகத்தைச் சுளிப்பவன், உமிகளை அவனைநோக்கி ஊதுபவன் என எல்லாருக்கும் பொதுவாகவே அவன் வரி ஒலிக்கிறது. எல்லோரையும் ஒரே விதமாகவே சென்றடைகிறது. ஒரு பாடலின் ஓசைக்கு இருக்கிற சீரான உணர்வு, ஒரு மனிதனுக்கு ஏன் இருப்பதில்லை என்னும் கேள்வி, நெஞ்சைக் கனக்கவைக்கிறது.

 

வீட்டை எட்டிப் பார்த்தல், கடக்க இயலாத தெரு இரண்டும் ஒரே உண்மையை வெவ்வேறு கோணங்களில் உணர்த்தும் கவிதைகள். ’தெரு ஒன்றைக் கடப்பதென்பது உண்மையில் வாழ்வு ஒன்றைக் கடப்பதாகும்போல’ என்று மிகச்சாதாரணமாகத் தொடங்குகிறது கவிதை. நேர்க்கோட்டில் சாலையில் மட்டுமே கண்களைப் பதித்து செல்பவர்களுக்கு, ஒரு பிரச்சினையுமில்லை. அவர்கள் வில்லிலிருந்து இலக்குநோக்கிச் செல்லும் அம்புகளைப் போன்றவர்கள். பார்வையை அக்கம்பக்கம் வீசியபடியும் ஒவ்வொன்றையும் நின்றுநின்று பார்த்தபடியும் செல்வதுதான் உண்மையான பயணம். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு காட்சி பார்க்கக் கிடைக்கிறது. ஒரு வாசலில் புன்னகை. இன்னொரு வாசலில் கண்ணீர்த்துளி. ஒரு வாசலில் மலர். மற்றொரு வாசலில் வெறுமை. எல்லாம் கலந்த கலவையாக உள்ளது. இடமிருந்து வலமாக, குறுக்கிருந்து நெடுக்காக, வடகிழக்கிலிருந்து தென்மேற்காக, மேலிருந்து கிழக்காக என எந்தக் கோணத்தில் கடந்தாலும் தெருமுழுக்க எண்ணற்ற காட்சிகள் நிறைந்திருக்கின்றன. மகிழ்ச்சியையும் துயரத்தையும் மாறிமாறி அளிக்கும் காட்சிகள். விட்டத்தில் தொங்கி ஊசலாடும் உடலைக்கூட ஏதோ ஒரு கட்டத்தில் பார்க்கநேர்கிறது. அக்காட்சியின் அதிர்ச்சி, அந்தத் தெருவையே கடக்கமுடியாதபடி செய்துவிடுகிறது. தெருக்காட்சிகள் வழியாக வாழ்க்கைக்காட்சிகளை உய்த்துணரவைத்து, ‘ஒரு வீட்டில் மணவிழாக்காட்சி. இன்னொரு வீட்டில் பிணம்கிடக்கும் காட்சி’ என முன்வைத்து இந்த உலகம் இயங்கும் சூத்திரத்தை அடையாளம் காட்டிய பழைய புறநானூற்றுக் கவிதையின் புள்ளிவரைக்கும் பயணம் செய்யவைக்கிறது இக்கவிதை.

துப்பாக்கிக்குள் நிரம்புகிறது சிரிப்பு, தெய்வமாக உறங்குகிறாய், அறு அறு ஆகா அப்படித்தான் அறு அறு போன்ற இன்னும் சில கவிதைகள் குறிப்பிடத்தக்கவை. வசீகரமான வாசிப்பனுவத்தை வழங்கும் கதிர்பாரதியின் தொகுப்பு ஒரு வாசகனின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதத்தில் உள்ளது.

(மெசியாவுக்கு மூன்று மச்சங்கள். கவிதைத்தொகுதி. கதிர்பாரதி. புது எழுத்து பதிப்பகம், 2/205, காவேரிப்பட்டினம். விலை. ரூ.70)

Series Navigationஇருநகரங்களின் கதை சொல்லி: சுப்ரபாரதிமணியன்இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [ நிகழ்ச்சி எண்-145 ]2015 இல் புறக்கோள் புளுடோவைத் தாண்டி பரிதி மண்டலத்துக்கு அப்பால் உளவப் போகும் நாசாவின் வேக விண்ணுளவி புதுத் தொடுவான் [New Horizon]எறும்பின் பயணம் – நிலாரசிகனின் ‘கடலில் வசிக்கும் பறவை’பங்காளிகளின் குலதெய்வ வழிபாடு
author

பாவண்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *