தொடுவானம் 30. மறந்து போன மண் வாசனை

This entry is part 1 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

டாக்டர் ஜி. ஜான்சன் 

          தாம்பரம் புகைவண்டி நிலையம் சென்னை நகருக்கு நுழைவாயில் எனலாம். தெற்கிலிருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் அனைத்து புகைவண்டிகளும் இங்கே நிற்கும். தாம்பரத்திலிருந்து சென்னை வரை செல்ல மின்சார இரயில் வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
          அத்தை மதிய உணவும் இரவு உணவும் மிகவும் சுவையாக தயார் செய்திருந்தார். வீட்டில் வளர்க்கும் கோழியைப் பிடித்து அறுத்து குழம்பு வைத்திருந்தார்.
          பத்து வருடங்களாக சிங்கப்பூரில் பெரும்பாலும் கடைகளில் சாப்பிட்டுப் பழக்கப்பட்டுவிட்ட எனக்கு அத்தை வீட்டு உணவு மிகவும்  பிடித்தது.
அத்தை மகள் நேசமணி ஆசை பொங்க பரிமாறினாள்.
          நள்ளிரவு நேரத்தில் ” போட் மெயில் ” என்ற பெயர் கொண்ட துரித இரயில் வண்டியில் ஏறினோம். அது இராமேஸ்வரம் செல்லும் வண்டி. நாங்கள் முன்பதிவு செய்யாத மூன்றாம் வகுப்பு பெட்டியில் ஏறினோம். பிரயாணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். ஒவ்வொரு பெட்டியிலும் ஆண்களும் பெண்களும் நிரம்பி காணப்பட்டனர்.
          நல்ல வேளையாக எனக்கு மட்டும் ஓர் இடம் கிடைத்து விட்டது.அண்ணன் இடம் பற்றி கவலைப் படவில்லை.சாமன்கள் வைக்கும் பகுதியில் ஏறி படுத்துவிட்டார். வண்டி ஓடும் வேகத்தில் நன்றாக தூக்கம் வரும்.   சிதம்பரம் சென்று சேரும்போது விடிந்துவிடும்.
          எனக்கோ கொஞ்சமும் தூக்கம் வரவில்லை. நேற்று இரவு வங்கக் கடலின் மேலே வானில்! சிங்கப்பூர் பற்றிய நினைவுகள்! இப்போது பிறந்த மண்ணில் பிரயாணம்! மறந்துபோன மண் வாசனையில் மூழ்கினேன்!
          நான் கிராமத்தை கடைசியாகப் பார்த்து பத்து வருடங்கள் ஆகின்றான. நான் பிறந்து எட்டு வயது வரை வளந்தது தெம்மூர் கிராமம்..அது சிதம்பரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில்  உள்ளது. சிதம்பரத்திலிருந்து பேருந்து மூலம் சென்றால் தவர்த்தாம்பட்டு என்ற ஊரில் இறங்கி மண் சாலையில் மூன்று கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும். வசதி உள்ளவர்கள் மாட்டு வண்டிகளில் செல்வதுண்டு.
          தெம்மூர் ஆறு பிரிவுகளை கொண்ட சிற்றூர். பெரியத் தெரு, சின்னத் தெரு, பட்டித் தெரு, மணல் மேடு, பிள்ளைத் தெரு, சாவடிக் கரை என்ற அப் பகுதிகளில் குடியிருப்புகள் இருந்தன.
          நாங்கள் மணல்மேட்டுத் தெருவில் வசித்தோம்.அங்கு சுமார் ஐம்பது வீடுகள்தான் இருந்தன. ஒரேயொரு கல் வீட்டைத் தவிர மற்ற அனைத்தும் குடிசைகளே. அவை மண் சுவராலும் வைக்கோல் கூரையாலும் கட்டப்பட்டவை. எங்கள் வீடும் அப்படித்தானே.அடுப்பங்கறையைச் சேர்த்து மூன்று அறைகள் கொண்ட வீடு. திண்ணை.தரை. சுவர்  ஆகியவை மாட்டுச் சாணத்தினால்தான் மெழுகப்பட்டிருக்கும். காலையில் வாசலைக் கூட்டிய பின்பு சாணம் கரைக்கப்பட்டிருக்கும் நீரைத்தான் தெளிப்பார்கள்.
          வைக்கோலையும் சாணத்தையும் கலந்து வட்ட வட்டமாகத் தட்டி வெயிலில் காய வைத்து அடுக்கி வைப்பார்கள்.விராட்டிகள் என்ற அவற்றைத்தான் அடுப்பு எறியப் பயன் படுத்துவார்கள்.
         எங்கள் கிராமத்தில் வீட்டுக்கு வீடு நிறைய ஆடு மாடுகள் வளர்த்தனர். நிலங்களில் சாகுபடி செய்பவர்கள் கட்டாயமாக இவற்றை வளர்ப்பார்கள். இவை நடமாடும் சொத்துகள்.
          விவசாயத்தை நம்பியிருக்கும் ஆயிரமாயிரம் கிராமங்களில் தெம்மூரும் ஒன்றாகும்.
          எங்களுக்கு பத்து காணி நிலங்கள் இருந்தன. அவை கிழக்கு வெளி எனும் இடத்தில  இருந்தன. மூன்று கிலோமீட்டர் வயல் வழியாக நடந்து செல்ல வேண்டும். மாட்டு வண்டி  மூலமாகவும் களம் வரை செல்லலாம். அவை நஞ்சை நிலங்கள். நெல் அறுவடைக்குப்பின் உளுந்தும் பச்சைப் பயிரும் பயிரிடப்பட்டன. அக்காலத்தில் மழைக்கும் தண்ணீருக்கும் பஞ்சம் இல்லை. காவிரி ஆற்றின் நடுவே அணைகள் கட்டப்படாத காலம் அது.
          வீராணம் ஏரி அருகில்தான் எங்கள் ஊர். எரிப் பாய்ச்சல் இருந்ததால் வயல்களுக்கு தங்கு தடையின்றி தண்ணீர்  கிடைத்தது.அதனால் வருடந்தோறும் அமோக விளைச்சல்தான்!
            அறுவடைக்குப்பின் வாசலில் பெரிய பட்டறை போடப்பட்டிருக்கும். நெல்லின் விலை ஏறும் வரை அவ்வாறு பாதுகாக்கப்படும். பல வேலையாட்கள் எங்கள்  வீட்டில் வேலை செய்தனர். மூன்று வேளையும் எங்கள் வீட்டில்தான் அவர்களுக்கு சாப்பாடு. அவர்கள் பண்ணையாட்கள் என்று அழைக்கப்பட்டனர்.
          வயல்களுக்கு தண்ணீர்  பாய்ச்சுவது, ஏர் உழுவது, விதை விதைப்பது, நாற்று நடுவது,களை  எடுப்பது, அறுவடை, களத்தில் நெல்  அடிப்பது, மூட்டைகள் தூக்குவது, வண்டி ஓட்டுவது, ஆடு மாடுகளைப் பார்த்துக்கொள்வது போன்ற பலதரப்பட்ட வேளைகளில் அவர்கள் ஈடுபடுவர். அவர்களில் மதியழகன், சண்முகம் எனும் இரு சகோதரர்கள் பல வருடங்களாக எங்கள் வீட்டிலேயே வேலை செய்தனர்.
          வீட்டைச் சுற்றிலும் நிறைய இடம் இருந்தது. அங்கு தோட்டம் போட்டிருந்தோம். முருங்கை மரம், புளிய மரம், தென்னை மரங்கள் போன்றவற்றுடன் பறங்கிக் கொடி, அவரைக்கொடி, பீர்க்கு கொடி, பூசணிக் கொடி, வெண்டி, கத்தரி, மிளகாய்ச் செடிகள், தண்டுக் கீரைச் செடிகள் போன்றவை நிறைந்துள்ள அந்தத் தோட்டம் எப்போதும் பசுமையாக பூத்தும் காய்த்தும் குலுங்கும்.
          தோட்டத்தின் பின்புறம் ஒரு சிற்றோடையும் ஓடியது. அதிலிருந்து நீர் பாய்ச்சுவோம். ஓடையின் அருகிலேயே மனைக்கு வேலியாக மூங்கில் கன்றுகளை தாத்தா நட்டு வைத்திருந்தார். அவற்றுக்கு தினமும் நீர் ஊற்றுவதில் நான் ஆர்வமாக இருப்பேன்.
          தோட்டத்தில்தான் பெரிய மாட்டுக் கொட்டகை இருந்தது.எங்களிடம் இருபது மாடுகளும் அதே எண்ணிக்கையிலான ஆடுகளும் இருந்தன.
கறவைப் பசுக்கள் நிறைய இருந்ததால், பால், தயிர் , மோர், வெண்ணைக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. மாட்டுப் பாலுடன் ஆட்டுப் பாலும் தாராளமாகக் கிடைத்தது.
          ஆடு மாடுகளுக்கு புல் அறுக்க நானும் சண்முகத்துடன் செல்வேன். வளைந்த அரிவாளால் வயல் வரப்பில் அடர்ந்து வளர்ந்துள்ள புல்லை அறுத்து சேகரித்து கட்டாக ஆக்கி தலையில் சுமந்து வருவோம்.அந்தப் புள் கட்டின் மணம் மறக்க முடியாதது! அதைக் காணும் ஆடு மாடுகள் காட்டும் பரவசமும் மறக்க முடியாததுதான்!
          சில நாட்களில் ஆடுகளை கயிற்றால் கட்டி வரப்புக்கு கூட்டிச் செல்வோம். அங்கு முளையை சொருகிவிட்டு அதில் கயிற்றை கட்டிவிட்டால் போதுமானது. அசை தீர எட்டிய தூரம் வரை புள் மேய்ந்து  கொண்டிருக்கும். வீடு திரும்பும்போது வயிற்றின் இரு புறமும் முட்டிக்கொண்டிருக்கும்.மகிழ்ச்சியில் அவை நம்மையும் முந்திக்கொண்டு வீட்டுக்கு வழி காட்டியபடி இழுத்துக்கொண்டு ஓடும்.
          மாடுகளுக்கு வைக்கோல் போர் உயரமாக இருக்கும். அதிலிருந்து காலையிலும் மாலையிலும் வைக்கோல் போட்டாலே போதுமானது. குடிக்க பிண்ணாக்கு  ஊறவைத்த கஞ்சி தண்ணீர் தருவோம்.
          மாட்டுக் கொட்டகையில் உள்ள பெரிய சரத்தில் கயிற்றால் கட்டப்பட்ட என்னுடைய ஊஞ்சல் இருந்தது. பழைய துணிகளை மடித்து வைத்து உட்கார்ந்து ஒய்யாரமாக நான் ஊஞ்சல் ஆடுவதை ஆடுகளும் மாடுகளும் பார்த்து இரசிக்கும்.
          பால், தயிர், மோர்,வெண்ணெய், நெய் குறைவின்றி உண்டு உருண்டைக் கன்னங்களுடன் நான் கொழ கொழுவென்றிருப்பேன்! என்னை வளர்த்த தாத்தாவுக்கு நான்தான் .செல்லப் பிள்ளை. அப்போது எனக்கு வயது ஆறு!
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationபாவண்ணன் கவிதைகள்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *