திரையுலகில் அரசியல் புகுந்ததும், அரசியலில் திரையுலகம் புகுந்ததும் இரண்டு துறைகளுக்கும் கெடுதலாக முடிந்துவிட்டது. இரண்டுதுறைகளும் விவாகரத்து செய்துகொள்வது அரசியலுக்கும், கலைக்கும் நல்லது. அப்படி ஒரு விவாகரத்து ஏன் அவசியம் என்பதையும், அத்தகைய விவாகரத்து நடைபெறவேண்டிய முறையையும் இக்கட்டுரையில் ஆராய்வோம்.
திரைப்படங்களின் வலிமையை உணர்ந்த முதல் இந்திய அரசு என காலனிய ப்ரிட்டிஷ் அரசை சொல்லலாம். தம் அரசுக்கு எதிராக திரைப்படங்கள் கருத்து கூறுவதை தடுக்க தணிக்கை முறையை அறிமுகபடுத்தினார்கள். இத்தணிக்கை முறை நடிகர்களை அரசியல்வாதிகள், முதல்வர்கள் ஆகியோரை சார்ந்திருக்க தூண்டியது. இரண்டாவது உலக யுத்த சமயத்தில் இந்தியர்களின் கடும் எதிர்ப்பை மீறி இந்தியாவை உலகபோரில் ப்ரிட்டிஷ் அரசு ஈடுபடுத்தியது. அந்த சூழலில் அன்றைய தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் எம்கே தியாகராஜ பாகவதர் அன்றைய சென்னை கவர்னரின் உத்தரவுக்கிணங்க உலகயுத்தத்திற்காக பாடல், நாடக நிகழ்ச்சிகள் நிகழ்த்தி நிதி திரட்டி கொடுத்தார்.
இதனால் மனம் மகிழ்ந்த கவர்னர் பாகவதருக்கு திவான் பகதூர் பட்டத்தை அளிக்க முன்வந்தார். ஆனால் பாகவதர் அதை மறுத்துவிட்டார். ஆக பாகவதர் இதை மனமொப்பி தான் செய்தார் என கருத இடமில்லை. ஆள்வோரை பகைத்துகொள்ள கூடாது எனும் நோக்கு அவரை இச்செயலுக்கு தூண்டியது. இதை இன்றைய திரையுலகம் இன்றைய, அன்றைய முதல்வர்களுக்கு எடுக்கும் பாராட்டு விழாக்கள், சூடும் புகழ்மாலைகள் மூலம் இன்றும் தொடர்கிறது.
திரைப்படதுறையை கட்டுக்குள் வைக்கும் இத்தகைய சென்சார் எனும் அங்குசத்தை அரசியல்வாதிகள் சுதந்திரத்துக்கு பின்னும் கைவிட விரும்பவில்லை. விளைவு யுடியூப் உலகில் அரசு கமிட்டி ஒன்று திரைப்படங்களை தணிக்கை செய்யும் கோமாளித்தனம் நம் நாட்டில் இன்னும் நடைபெற காணலாம். முதிர்ந்த ஜனநாயக நாடுகள் பலவற்றிலும் (உதா: கனடா, அமெரிக்கா, ப்ரிட்டன்) தணிக்கை முறை கிடையாது. 100 கோடி மக்கள் எவ்வகை காட்சிகளை காணலாம், எவற்றை காணகூடாது என ஐந்து பேர் கொண்ட அரசு கமிட்டிகள் முடிவு செய்வது இல்லை.
திரைப்படதுறை மூலம் ஆட்சியை எப்படி பிடிக்கலாம் என்பதை இந்தியாவில் முதல்முறையாக திராவிட இயக்கம் செய்து காட்டியது. கருணாநிதி, அண்ணாதுரை, எம்ஜிஆர், எஸ்,எஸ் ராஜேந்திரன், போன்ற திராவிட இயக்க பிரமுகர்கள் திரைப்படங்களில் செய்த வலுவான பிரச்சாரம் ஆட்சிமாற்றத்துக்கு மட்டும் வழிகோலவில்லை. மக்களிடையே திராவிட சித்தாந்தத்தையும் விதைத்தது. அதன் விளைவாக இன்று மாறி, மாறி இரு திராவிட கட்சிகள் மட்டுமே ஆட்சிக்கு வர முடிகிறது.
அரசியல்வாதிகள் சினிமா நட்சத்திரங்களை ஓட்டுக்கும், பிரச்சாரத்துக்கும் மட்டுமே பயன்படுத்தி கொள்ள விரும்புவார்கள். நடிகர்கள் தலைமைக்கும், பதவிக்கும் ஆசைபட்டால் என்ன ஆகும் என்பதை 1970களில் திராவிட இயக்கத்தில் நிகழ்ந்த பிளவு காட்டியது. உலகம் சுற்றும் வாலிபன் பட ரிலீசுக்கு தடைகள் வந்தன. ஆனால் அன்று எம்ஜிஆர் மக்கள் மனதில் மிக வலுவான இடத்தை பிடித்திருந்தார். இன்று இருப்பது போல் அன்று டிவி, யுடியூப், இணையம் எதுவும் இல்லை. சினிமா ஒன்றே பொழுதுபோக்கு. அதன் அசைக்கமுடியாத சக்தி எம்ஜிஆர். இன்று ரஜினியின் பாபா ரிலிசை பாட்டாளி மக்கள் கட்சி எனும் ஆட்சியில் இல்லாத கட்சியால் தடுத்து நிறுத்த முடிகிறது. கமலின் விருமாண்டியை ஒற்றை எம்.எல்.ஏ இல்லாத மருத்துவர் கிருஷ்ணசாமியின் கட்சியால் தடுத்து நிறுத்த முடிகிறது. ஆனால் அன்றைய திரைப்படதுறையின் சக்திக்கு முன் ஆளும்கட்சியாலேயே எதுவும் செய்ய முடியவில்லை என்பதை உலகம் அன்று கண்டது.
எம்ஜிஆர் ஆட்சியில் ரஜினியும், கமலும் ஆட்சிக்கு வரும் விருப்பத்திலும் இல்லை, அத்தனை சக்தியும் அன்று அவர்களுக்கு இல்லை. ஆக திரைப்படதுறை 80களில் ஒரு சில விதிவிலக்குகள் தவிர்த்து அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தது. இந்த காலகட்டத்தில் விருதுகள், மானியங்கள், வரிசலுகைகள் மூலம் திரைப்படதுறையை அரசு மகிழ்ச்சியாக வைத்து இருந்தது.இந்த சூழலில் 60களில் செய்தது போல இன்னொரு மிகப்பெரும் சக்தியை கையில் எடுத்து மீண்டும் 1996ல் ஆட்சிக்கு வந்தது திமுக. அதன் பெயர் டிவி. அன்று புதிதாக உருவான கேபிள் தொலைகாட்சி துறையில் சன் டிவி செலுத்திய ஆதிக்கம் திமுகவுக்கு மிகபெரும் பிரச்சார பலத்தை அளித்தது.
அன்றைய அரசியல் உலகில் சக்தியாக உருவெடுத்து வந்த வைகோ தலைஎடுக்க முடியாமல் போனதற்கு ஒரு முக்கிய காரணம் அன்று அவரிடம் டிவி இல்லாததும், மற்ற கட்சிகளின் டிவியில் அவர் காட்டபடாததுமே. டிவியில் செய்யும் விமர்சனங்கள் சினிமாக்களின் வெற்றி தோல்வியை பாதிக்கும் எனும் நிலை வந்ததும் சினிமா துறை அரசியலிடம் முழுக்க சரணடைந்தது. 80களில் அரசியல் மாற்றத்துக்கு காரணமாக இருந்தது இந்தியன் எக்ஸ்பிரஸ். போபர்ஸ் விவகாரத்தில் காங்கிரசை அத்தனை கடுமையாக எதிர்த்தது எக்ஸ்பிரஸ். அதேபோல் அன்று எம்ஜிஆரை எதிர்த்து ஒரு கார்ட்டூன் விவகாரத்துக்கு சிறை சென்றார் விகடன் ஆசிரியர்.
இப்படி சுதந்திரமாக இயங்கிய இந்த ஊடகங்களை அன்றைய அரசியல்வாதிகளால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் பின்னாட்களில் குங்குமம், சன்டிவி, ஜெயாடிவி, தினகரன் என அரசியல்வாதிகளின் ஊடகங்கள் பழைய ஊடகங்களை தூக்கி விழுங்கும் புதிய ஊடகங்களாக மாறின. மக்களின் மனபான்மையும் சேர்ந்து மாறியது. 80களில் அரசின் அடக்குமுறையை கண்டித்து ஆவேசமாக மக்கள் போரிடுவது போல படங்கள் வரும். திரைப்படங்களில் வரும் போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் தவறு செய்யும் முதல்வர்களை பிடித்து ஜெயிலில் போடுவார்கள், மந்திரிகளின் அராஜகங்களை எதிர்த்து போராடுவார்கள். இன்று லஞ்சம் வாங்குவது குற்றம் அல்ல எனும் மனபான்மைக்கு மக்களும் வந்துவிட்டார்கள். திரைப்படங்களும் முதல்வர்களை பிடித்து ஜெயிலில் போடும் வகையில் காட்சிகளை அமைப்பதில்லை.
புதியவகை ஊடகங்களின் ஆதிக்கத்தால் திரைப்ப்டதுறையின் வலு மிக குறைந்துவிட்டது. திரையரங்க உரிமையாளர்களும் டி.டி.எஸ், டிஜிட்டல் என மிக செலவு செய்து அரங்கங்களை அமைத்திருப்பதால் சின்ன அளவில் வன்முறை செய்வதாக பயமுறுத்தும் கட்சிகளுக்கு அஞ்சியே சர்ச்சைகுரிய திரைப்படங்களை திரையிட மறுத்துவிடுகிறார்கள். திரைப்ப்டங்களின் டிவி ரைட்ஸ் பல கோடிகள் விலை போவதால் ஆளும் கட்சி, எதிர்கட்சி இரண்டையும் எந்த நடிகரும் பகைத்துகொள்ள முடியாத நிலை. ரிடையர் ஆன நடிகர், நடிகைகள் அரசியல் கட்சிகளில் காண்டிராக்ட் அடிப்படையில் தேர்தல் சமயத்தில் பிரச்சாரம் செய்து வருமானம் சம்பாதித்துகொள்வது தான் வழக்கம் என ஆகிவிட்டது. எம்ஜிஆரும், எஸ்.எஸ்.ஆரும் கொள்கை அடிப்படையில் கட்சிபணி செய்தது போல் இன்று யாரும் செய்ய காணோம். திரைப்படதுறையின் சரிந்த செல்வாக்கை உணராத விஜயகாந்த், சரத்குமார், ராஜேந்தர் கட்சிகள் தள்ளாடி, தடுமாறி நிற்கின்றன.
ஆக இப்படி திரைப்ப்டதுறையை முழுமையாக கட்டுபாட்டில் கொன்டுவரும் முயற்சிகளில் அரசியல்வாதிகள் முழு வெற்றி அடைந்துவிட்டார்கள். ப்ரிட்டிஷாருக்கு இந்த அளவு சாமர்த்தியம் இருந்திருந்தால் அவர்கள் பாகவதரையும், சின்னப்பாவையும் வைத்து காங்கிரஸ் எதிர்ப்பு படங்கள் எடுத்து இன்னமும் ஆட்சியில் தொடர்ந்திருக்க முடியும்.
- தொடுவானம் 30. மறந்து போன மண் வாசனை
- பாவண்ணன் கவிதைகள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 89
- சின்ன சமாச்சாரம்
- வாழ்க்கை ஒரு வானவில் – 17
- பிஏகிருஷ்ணனின் ”மேற்கத்தியஓவியங்கள்”- புத்தகமதிப்புரை
- he Story of Jesus Christ Retold in Rhymes
- பூத வாயுக்கோள் வியாழனில் விந்தையான பெருங் காந்த மண்டலம் எப்படி உண்டானது ?
- க.நா.சு.வின் ”அவரவர்பாடு” நாவல் வாசிப்பனுபவம்
- தினம் என் பயணங்கள் -30 ஒரு முடிவுக்கு வந்தாயிற்று.
- மொழிவது சுகம் ஆகஸ்டு 24 2014
- ஆறில் ஒரு பங்கு – நிறைவுப் பகுதி
- கூத்தர் பாணர் விறலி பொருநர் யார்?
- மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 6- செங்கோட்டை ஆவுடையக்காள்
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 18
- மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்
- நாயினும் கடையேன்நான்…
- நீர் வழிப்பாதை
- காலம் தோறும் இசைக்கும் தமிழ் மற்றும் தொன்ம வளங்களும்
- ஸ்ரீஆண்டாள்பிள்ளைத்தமிழ்
- சகவுயிர்
- ஒரு கல்யாணத்தில் நான்
- ஆனந்த பவன் நாடகம் – காட்சி-2
- சிங்கப்பூரில் 34 ஆம் ஆண்டுத் திருமுறை மாநாடு -2014 – பங்கேற்பாளரின் அனுபவக் குறிப்புகள்
- சிம்மாசனங்களும், துரோகங்களும்- வெ. இறையன்புவின் இரு நூல்கள்
- தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 25-ம் நாள்
- இராஜபாளையம் மணிமேகலை மன்றம் இலக்கிய விருது 2014
- பேசாமொழி 20வது இதழ்
- திரைதுறையும், அரசியலும்
- வடுக்கள், வேதனைகள், அவலங்கள் ஒரு வரலாறாகி தார்மீகக் கோபத்துடன் நிற்கின்றன முருகபூபதியின் ” சொல்ல மறந்த கதைகள் ”