ஜி. ஜே. தமிழ்ச்செல்வி
பகுதி : 1
திடீரென்று ஒரு நாள் அவளை நான் சாலையில் சந்தித்தேன். அது முற்றிலும் எதிர்பாராத சந்திப்பு. என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டாள். அவள் கண்கள் என் கன்னங்களில் ஏதோ ஆறுதல் வேண்டி ஓய்வெடுத்தது போல் பதிந்தன. அவற்றிலிருந்து கண்ணீரின் ஈரம் என் கன்னத்தில் பட்டு நான் அவள் முகத்தை நிமிர்த்தினேன். என் கண்களைச் சந்திக்கக் கூச்சப்பட்டு அவளது இமைகள் தாழ்ந்தன. என் கவிதை உள்ளம் கண்ணிமைகளின் நுனியில் கோர்த்து நின்ற கண்ணீர்த் துளிகளைக் கண்டு மூங்கிலை மேலே தூங்கும் பனி நீரே என்று தாலாட்டத் தொடங்கியது.
ச்சே! தோழி அழுகிறாள். இந்த நேரத்தில் என்ன கவிதை என்று என் மண்டையில் ஒரு அடி விழுந்தது. சாலை என்பதையும் மறந்து கட்டிக்கொண்டு அழுதவளைத் தேற்ற வழியின்றித் தவித்தேன்.
அவள் குடும்பப்பாங்கான பெண். நல்லவள். மாநிறம். நீண்ட கூந்தல். எனக்கு மிகவும் பிடித்தது அவளது அழகிய நீண்ட கூந்தல் பெண்ணுக்குப் பெண்ணே கண்டு பொறாமைப்படும் கூந்தல் அது.. பேச்சிலேயே ஒரு மரியாதையும் கண்ணியமும் தெரியும். பிறருக்கு எப்போதும் உதவும் மனப்பாங்கு உடையவள். தற்போது பொதுப்பணித்துறையில் பணியாற்றி வருகிறாள்.
அவள் கதையை நான் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தேன். அழுவதாக இருந்தால் அவள் என்னிடம் வந்து தான் அழுவாள். சிரிப்பதும் அப்படியே. என்னிடம் தான்.
அவளைக் காதலிப்பதாகக் கூறியவர் பட்டியலை வரிசையைக் கூறி விட்டு என்னிடம் சொல்லிச் சொல்லிச் சிரிப்பாள்.
“இதுலே எவனையாவது பிக்கப் பண்ணிக்கிறது தானேடி!” என்றேன் ஒருமுறை” .
“பெத்துப் பாடுபட்டு வளர்த்து நல்ல வரன் பார்க்கணும்னு ஜோசியர் களையும் கல்யாணப் புரோக்கர்களையும் தேடி அலையிற என் அப்பா அம்மா நெஞ்சிலே இடி விழட்டுங்கிறியா ?”
அந்த லாஜிக் என் மனசைத் தொட்டுவிட்டது. இந்தக் காலத்தில் இப்படி ஒருத்தியா? வியந்தேன் மனசிற்குள்.
பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையையே திருமணம் செய்வேன் என்ற அவள் உறுதி நிலைத்தது. பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை ஏற்பாடு செய்தனர். மாப்பிள்ளை ஆசிரியர் உத்தியோத்திற்கு படித்திருந்தார். விரைவில் வேலை வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் பெண் தர ஒப்புக்கொண்டார்கள்.
இந்த மாப்பிள்ளையை என் சிநேகிதிக்கு ஏனோ பிடிக்கவில்லை. வேறு இடம் பார்க்கலாம் என்று வாய்விட்டு சொல்லி விலக்கப் பார்த்தாள். அவளுக்கு அடுத்தொரு தங்கை. அவளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று காரணத்தைச் சொல்லி திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தனர்.
திருமணமும் வெகு ஆடம்பரமாக அதிகச் செலவுகளோடு நடந்து முடிந்தது. மாப்பிள்ளை வீட்டில் கேட்ட அத்தனை சீர்களும் கொடுத்தார்கள். தங்கள் பெண் எந்த குறையும் இன்றி அந்த வீட்டில் வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்.
முதலிரவு அன்று அருகில் வந்து நின்ற மணமகன் அவள் தோளைத் தொட்டு தான் வேறு பெண்ணை காதலிப்பதாகவும், குடும்ப நிர்ப்பந்தத்திற்காக அவளை மணந்து கொண்டதாகவும் கூறி இருக்கிறான். மனைவி என்ற அந்தஸ்த்தை தவிர வேறு எந்த சுகமும் உனக்கு கிடைக்காது என்றும் கூறியிருக்கிறான்.
செய்வதறியாது திகைத்த அவள் தங்கையின் திருமணத்தை மனதில் வைத்துக் கொண்டு உடனே வெளியேறி விடாமல் அங்கே இருக்க முடிவெடுத் திருக்கிறாள். ஆனால் அவள் எதிரில் செல்போனில் தன் காதலியோடு பேசுவதும், போனில் அந்தக் காதலிக்கு முத்தம் கொடுப்பதுமாக, கணவன் இருந்திருக் கிறான். தங்கையின் திருமணம் முடிந்தது.
மேலும் மன உளைச்சல் தாங்காமல் அவள் அவனை விட்டு வந்து விட்டாள்.
“அவனை விட்டு வந்துவிட்டாயே! விவாக ரத்து பெற்றாயா?”
” வாங்கிக் கொண்டேன்!”
“அப்புறம் என்ன? வேறு பொருத்தமான ஒருவனைத் திருமணம் செய்துகொள் ”
” அப்படி எவனும் கிடைக்கவில்லை. வருகிறவன் எல்லாம் இரண்டு பிள்ளை மூன்று பிள்ளை கேஸ்கள். நான் கன்னி கழியாதவள் என்று நம்பத் தயாராய் இல்லாதவர்கள். எந்தப் பெற்றோருக்காக நான் காதல் கூடாது என்று கட்டுப் பாடாக இருந்தேனோ அவர்களே இரண்டாந் தாரமாக எப்படியோ வீட்டை விட்டு தொலைந்து தங்கள் சுமை தீர்ந்தால் சரி என்ற மனப்போக்கில் சலித்துக் கொள்கிறார்கள்!” என்றாள்.
மேலும் ஒரு பெருமூச்சு எனக்குள் புதைந்தது.
எனக்கு ராகவன் ஞாபகம் வந்தது. கருச்சிதைவினால் மனைவி இறந்து விட்டாள். ஒரு பெண்ணோடு வாழ்ந்து அந்தப் பாசத்திற்கு அடிமையாகிப் பட்ட பாடே போதும் என்று திடமாக இருப்பவன்.
நான் சொன்னால் கேட்பான்.
“ஒருவன் இருக்கிறான். இரண்டாம் தாரம் தான். மனைவியை உயிருக்கு உயிராக நேசித்து அவள் இறந்ததால் மனமுடைந்து போனவன். உனக்குச் சரியென்றால் உடனே முயற்சி செய்கிறேன்!” என்று நான் சொன்னேன்
“அவர் என்னை நம்பவேண்டுமே!|”
“நம்ப வை நீ. நம்புவான்”
நம்பினாள். நம்பவைத்தாள் .
அடுத்த சந்திப்பில் அவள் முகத்தில் ஒரு புன்னகை. நாணப் புன்னகை.
“என்னடீ?” என்று கேட்டேன்.
“,மூன்று மாதம் முழுகாமே இருக்கேன்”
எனக்குள் ஒரு சிறு பூரிப்பு. என்னால் கூட ஒரு நல்ல காரியம் செய்ய முடிந்திருப்பதில்.
வாழ்க்கை ஒரேயடியாகப் புலம்பலில் முடிந்து விடுவதில்லை.
++++++++++++++++++++++++++
பகுதி : 2
அன்று மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போது கண்ட காட்சி இது
அந்தச் சாலையின் கறுப்பு மேனியில் சிதறிக்கிடந்ததன அரிசிப் பரல்கள். அதை திகைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த கறுப்பு தேகத்துக்கும் பரட்டைத் தலைக்கும் சொந்தக்காரி. அந்த அரிசியைச் சுமந்து வந்த பை சாலை ஓரம் தன் பயணம் இல்லாமையை வெளிக்காட்டுவது போல கைப்பிடிகள் விரிந்து விழுந்து கிடந்தது . அதைச் சுமந்து வந்தவன் அந்தப் பை விரிந்து கிடப்பதைப் போலவே கை விரித்து சாலையின் மற்றோர் ஓரத்தில் விழுந்து கிடந்தான்.
நன்றாகக் குடித்துவிட்டு தரையிடம் சரண்புகுந்திருந்தான் .
அவன்.மாதக்கணக்கில் குளிக்காதவன் போல ஒரு பரிதாபத் தோற்றம் . அழுக்கேறிய உடை. எண்ணெய் காணாத தலை.
அவன் அருகே யப்பா எய்ந்திரிப்பா” என்று அவனை உலுக்கி எழுப்பிக் கொண்டிருந்தது வற்றலும் தொற்றலுமாய் ஒரு பெண் குழந்தை.
வீட்டிற்கு அரிசி வாங்க வந்தவன் டாஸ்மாக் ராட்சசியின், மாயா ஜாலத்தில் மயங்கி, கையிலிருந்த சொற்பக்காசையும் அவளுக்குத் தாரை வார்த்திருந்தான் .
அந்த காட்சி என்னை வெகுவாக பாதித்தது
இன்று அவர்கள் வீட்டில் எப்படி அடுப்பு எரியும்? எப்படி அந்தச் சிறுமியின் பசித்தீ தணியும்?
டாஸ்மாக் கடையில் மது விற்பவன் அவனை அலட்சியமாகப் பார்த்துவிட்டு ஏளனப் புன்னகை புரிந்தபடி யாரிடமோ சொன்னான்.
‘லெவல் தெரியாமே இவனுங்களை யார் குடிக்கச் சொன்னது? யார் இப்படி விழுந்து கெடக்கச் சொன்னது? ட்ராப்பிக் நியூசென்ஸ் ”
மற்றொருவன் அவனுக்குப் பதில் சொன்னான்.
“அரசாங்கம் ப்ரீயா அரிசி கொடுத்துடுது. அதை வாங்க வேண்டிய காசை நீ பிடுங்கிக் கொண்டு தண்ணி ஊத்திடறே! அங்கே சலுகை! இங்கே வசூல். மேட்டர் ஓவர். ”
அவன் விற்பனையாளன்.
அதற்கு உரிமம் எடுத்தவன் வேறொருவன்.
அவனும் கண்ணாடித்திரையின் பின்னால் குடித்துக்கொண்டிருந்தான். உயர்ந்த ரகமாக இருக்கும் அவர்களை விற்க அனுமதித்தவர்களுக்கு வரிப்பணம் கரெக்டாகச் சேர்ந்து கொண்டிருக்கும்.
ஏழைகளின் வயிற்றரிசியும் திருடிக்கொள்ளும் அந்த டாஸ்மாக் முன்பு. . அவர்கள் பன்னியாண்டி சாதியைச் சேர்ந்தவர்கள். . பன்றி மேய்ப்பது தான் அவர்களது தொழில். இப்போது அவன் அருகே ஒரு பன்றி அவனை முகர்ந்து கொண்டிருந்தது. அவன் தன் எஜமான் தானா?
இதே இனத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தியை இரு தினங்களுக்கு முன்பு சந்தித்தேன். வெயிலில் கண்கள் சுருங்க எங்கள் வட்டார அலுவலகத்தின் முன் நின்றிருந்தாள். என்ன என்று விசாரிக்க, பன்னியாண்டிஎன்று சாதி சான்றிதழ் வேண்டுமாம். பன்னி யாண்டி எஸ்.சி. [S.C.] பிரிவு அடையாளம் வேண்டுமாம்.
அவர்கள் அந்தப் பிரிவு தானா? என்னால் உறுதி செய்ய முடியவில்லை
இதில் மற்றொரு பிரச்சினை கல் உடைக்கும் ஒட்டர்களும், பன்றி மேய்த்துக் கொண்டு எஸ்.சி.[S.C.] சான்றிதழ் கேட்பதால் அரசாங்கத்திற்கு தலைச்சுத்தல். ஒரு பக்கம் இலவசம், மறுபக்கம் உழைக்குற காசை பிடுங்க ஒரு வழி, மறு பக்கம் அனல் தெரிக்கும் மேடைப் பேச்சு! உள்ளம் மட்டுமே அறிந்த மற்றும் ஒரு பேச்சு.
ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நடிகன் ஒளிந்துக்கொண்டிருக்கிறான் போலும். தன் தேவையைப் பூர்த்தி செய்ய என்னவெல்லாம் பொய்மை மேல் மெய் மூலாம் பூச வேண்டியிருக்கிறது.
தொடரும்
- தினம் என் பயணங்கள் -33 என்னால் ஒரு நல்ல காரியம்
- பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பா, பூமியைப் போன்று நில நடுக்க அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonics] உள்ளது.
- உல்லாசக்கப்பல் பயணம் (ஆசிரியர் கிருத்திகா)
- பெண் எழுத்தாளர்களுக்கான திருப்பூர் அரிமா மு.ஜீவானந்தம் இலக்கியப் போட்டியில் ஜெயந்தி சங்கருக்கு 2 பரிசுகள்
- “கையறு நிலை…!”
- கடவுளும் வெங்கடேசனும்
- ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் நூலுக்கு கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 21
- ஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி-5
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 92
- கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு 2014
- “மூட்டை முடிச்சுடன்….”
- நினைவிருக்கும் வரை நிலைத்திருக்கும் பெயர் – சு.கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி
- வீரனுக்கு வீரன்
- எல்லை
- புறநானூற்றின் வழி அறியலாகும் ஆள்வோருக்கான அறிவுரைகள்
- எஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற்ற “அரேபிய இரவுகளும் பகல்களும்” புத்தகம் பற்றிய கலந்துரையாடல்
- தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்
- ‘மேதகு வேலுப்போடி’
- கோடி சிறுகதை தொகுப்பில் மன உணர்வு – பண்பாடும் மன உணர்வும்
- பாவண்ணன் கவிதைகள்
- கபுசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நடுக்கம்
- வாழ்க்கை ஒரு வானவில் – 20
- தொடுவானம் 33. அகர முதல எழுத்தெல்லாம்
- நொண்டி வாத்தியார்