கவிதையும் நானும்

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

pichi_elango

 

கவிதையெனில் அது மரபுக்கவிதைதான் என எண்ணியிருந்தேன். அப்படித்தான் கவிதை அறிமுகமானது.

பள்ளிப்பாடத்திலிருந்தும் பிறவழியிலும் அது அறிமுகமானது.

பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் வழி அது நெருக்கமானது.

இவர்களின் கவிதைவாயிலாய் உணர்வுரீதியாக உணரப்பட்டும் உணர்ந்தும் தொடர்கிற காலவெளியில்தான் எனக்கு வானம்பாடி இயக்கம் அறிமுகமானது. கவிதையை இப்படி எழுதலாமா? என்ற கேள்வியும் அப்படியென்றால் இதற்கு பெயெரென்ன? என்ற கேள்வியும் கூடவே பிறந்தது.

அதற்குப்பெயர் புதுக்கவிதை என்றார்கள்.

புதுக்கவிதையின் நுட்பம் என்ன என அறிய படிக்கத்தொடங்கினேன்.

பலரும் அறிமுகமானார்கள்.

கவிஞர் மு.மேத்தா, கங்கைகொண்டான் முதலில் அறிமுகமானவர்கள்.

அமரர் கங்கைகொண்டான் கோவை வேளாண்மைப்பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் வேளாண்மை படித்தபோது அவர் மூன்றாம் ஆண்டு மாணவர். நான் முதலாம் ஆண்டு மாணவர். பல்கலைக்கழகத்தில் அவர்தான் அப்போது கவிஞர்.

நான்காம் ஆண்டு நான் படித்தபோது அந்தப்பெயர் எனக்கு வந்தது.

கவிதைக்காக முதல்பரிசை வாங்கினேன்.

என்னைப் பல்கலைக்கழக பாரதிதாசன் என்றவர்கள் உண்டு.

கங்கைகொண்டான் வானம்பாடி இயக்கத்தில் ஒருவர்.

தொடங்கியவர்களுள் ஒருவர்.

கவிஞர் மேத்தா கோவை அரசு கல்லூரியில் பேராசிரியர்.

பின்பு பல்கலைக்கழகத்தில் நடந்த முத்தமிழ்விழாவில் கவிஞர் அப்துல்ரகுமான்,சிற்பி, அபி, மேத்தா, பாலா கலந்துகொண்ட கவியரங்கம் என்னைப் பாதித்தது.

ஆனாலும் மரபின்மீது பிரியமும் மயக்கமும் இருந்தே வந்தது.

குறிப்பாக காவடிச்சிந்து மீது தனிக்காதல் அலாதிபிரியம் இருந்தது.

ஒருநாள் நள்ளிரவில் சித்ராபவுர்ணமியில் அதாவது சித்திரை நிறைநிலாவெளியில் திராட்சைதோட்டத்திற்கு சென்றுவந்தோம்.

நண்பர்கள் படுக்கைக்குச்சென்றார்கள்.

என்னால் படுக்க முடியவில்லை.

ஒரு வெள்ளைத்தாளை எடுத்து எழுதத்தொடங்கிவிட்டேன்.

மரபும் தெரியாது புதுக்கவிதையும் தெரியாது.

எப்படி எழுதினேன்? எந்த அடிப்படையிலெழுதினேன்?

உணர்வின் எழுச்சியில் இனம்தெரியா மனத்துள்ளலில் மொழியின் நட்பு குறைவாக இருந்தவேளையில் எழுதிவிட்டேன்.

மரபின் சாயல் அதில் இருந்தது.

மரபுக்குக்குத்தேவையான கற்பனை, ஓசை, ஓட்டம், உணர்வு, மொழி எல்லாம் கலந்திருந்தது.

ஆனால் அது முழுமையான இலக்கண சுத்தமான மரபுக்கவிதை அல்ல.

புதுக்கவிதையும் அல்ல.

ஆனால் அதுதான் என் கவிதை.

அதிலிருந்து நான் தெரிந்துகொண்டது அதில் மரபின் இலக்கணம் இல்லை.

ஆனால் என் இதயம், மனம், எண்ணம்,கலப்படமற்ற சிந்தனை, உணர்வு, எழுச்சி எல்லாம் இருந்தது.

என்னைப்பொறுத்தவரை அதுதான்கவிதை.

வானம்பாடிகளின் வெளியீடுகள் கல்லூரிக்குள்ளே கிடைக்கத்தொடங்கின.

அடிக்கடி மேத்தா வருவார்.

படிப்பும் பாதிப்பும் நிகழ்ந்தன.

என்னிடமிருந்தும் புதுக்கவிதைகள் வெளிவரத்தொடங்கின.

புதுக்கவிதை என்பது சிந்தனையில் விளைவது என்பதைப்புரிந்துகொண்டேன்.

ஒரு புதிய கருத்தும் சொல்லும்முறையும் தனித்தும் தனித்துவமாகவும் இருக்கவேண்டும் என்பதை நான் என்னளவில் உணர்ந்துகொண்டு எழுதத்தொடங்கினேன்.

சொற்களை அடுக்குவதால் அது புதுக்கவிதையாகிவிடாது என்பதையும் உணர்ந்து வைத்திருந்தேன்.

சொற்களை அடுக்குவது அல்ல கவிதை.

அதனால் அது எனக்கு வசப்பட்டது.

பல்வேறு சிந்தனைகளை வித்தியாசமாக பதிவுசெய்துகொண்டிருந்தேன்.

புதுக்கவிதைகளின் எண்ணிக்கைக்கூடின.

நா.காமராசனின் கறுப்புமலர்கள், சகாராவைத்தாண்டாத ஒட்டகங்கள் கைக்குகிடைத்தன.

உடனே ‘வராண்டா ராஜ்ஜியத்தின் வாரிசுகள்’ என்று சென்னையில் இரவில் சாலையின் ஓரத்தில் தூங்கும் மனிதர்களைப்பார்த்ததும் எழுதினேன்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் இருந்த வந்தனா என்ற சில்க் எம்போரியத்தில் வெளியில் இருக்கும் ‘showcase’ பொம்மைகளைப்பார்த்து சிந்தனைவந்தது.

“shaow பொம்மைகளுக்கு

நித்தமும் புதிய ஆடை

இந்த நாட்டின்

சோக கேஸ்களுக்கு

ஏது போர்த்த ஆடை”

என்று சிந்தனைகளைப்பதிவுசெய்யத்தொடங்கினேன்.

பின்பு கங்கைகொண்டானின் கவிதைத்தொகுப்பான ‘கூட்டுப்புழுக்கள்’ பல்கலைக்கழகத்திலேயே கிடைத்தது. அது மிக நவீனமான கவிதைத்தொகுப்பு.

கவிதைவகையின் பெயர் புதுக்கவிதை.

ஆனால், அது சொல்லும் முறையில், கற்பனையில், உத்தியில், சொற்களின் தேர்ச்சியில், சிக்கனத்தில், நவீனக்கவிதையென்று சொல்லமாட்டேன்.

அதை மிக நவீன அல்லது அதிநவீன கவிதை என்றுதான் சொல்லுவேன்.

அப்படியென்றால் புதுக்கவிதையோடு நவீனக்கவிதைவந்துவிட்டது.

பாரதியே நவீனம் என்ற சொல்லை எனக்குத்தெரிந்து முதலில் பயன்படுத்துகிறான் என்றால் இப்போது வருவது நவீனக்கவிதை என்று எப்படிச்சொல்லமுடியும்.

மரபுதெரிந்த பாரதிக்கு நவீனமும் தெரிந்திருக்கிறது என்றால் மரபின்வழியாகவும் நவீனமாகப்பாடலாம்.

ஆக எந்தவடிவத்திலும் நவீனமாகப்பாடலாம் என்பது உறுதியாகிறது.

காலந்தோறும் நவீனம் உண்டு என்பது கருத்து.

‘நைலான் கனவுகள்’ இதுவும் அமரர் கங்கைகொண்டானின் கவிதைத்தொகுப்பு.

இது 1974-75 காலகட்டம்.

இந்தத்தலைப்பே நவீனம்.

மரபிலிருந்து விடுதலையானபின்பு வடிவத்தைவைத்து நவீனம் என்றுசொல்லவில்லை.

சொல்லும் பொருளிலே,சொல்லும்முறையிலே,சொல்லும்மொழியிலே,சொல்லும் சொல்லிலே இருக்கும் புதுமை அல்லது இருண்மையை சாதகமாக்கிக்கொண்டு நவீனம் என்கிறார்கள்.

இந்தப்புதுமையைத்தான் மரபுகாலம்தொட்டு அல்லது பாரதிகாலம்தொட்டு நவீனம் என்கிறோம்.

இதைத்தான் மீண்டும் காலந்தோறும் நவீனம் உண்டு என்கிறேன் நான்.

நவீனம் என்பது போக்கு, முறை, உத்தி,பார்வை. வடிவமல்ல.

நவீனத்திற்கென்று வடிவமிலை. ஆனால் சொல்லும் முறையில், பார்வையில் அது நவீனமாகப்படுகிறது.

அல்லது அப்படி அழைத்துக்கொள்கிறோம்.

சேலம் தமிழ்நாடன் பல்வேறு உத்திகளைக் கையாண்டவர். அவையெல்லாம் அதிநவீன வகையைச்சேர்ந்தவை என்றால் நவீனம் எப்போது தோன்றியது?

அது சிந்திக்கத்தெரிந்த காலத்திலேயே தொடங்கிவிட்டது.

‘சொல்புதிது பொருள் புதிது’ என பாரதி ஏன் பாடினான்?

அதற்குப்பெயர் என்ன?

மீண்டும் சொல்கிறேன் நவீனம் என்பது வடிவம் அல்ல.

உலகத்தின் கவிதைகளின் வடிவந்களை நாம் கையாண்டு வருகிறோம்.

தமிழ்க்கவிஞன்தான்

எல்லா வடிவங்களையும் கையாள்கிறவன்.

ஆங்கிலக்கவிஞர்களுக்கோ, ஜப்பான் கவிஞர்களுக்கோ அந்த நிலை இல்லை. வெண்பாவை முயற்சிசெய்த ஆங்கிலக்கவிஞனோ ஜப்பான் கவிஞனோ உண்டா?

ஆனால் தமிழைப்படித்து தமிழ்க்கவிஞர்கள் ஆனவர்கள் உண்டு.

இது தமிழுக்குப்பெருமை. தமிழ்க்கவிஞர்களுக்கும் பெருமை.

 

மரபைவிட்டு விலகியபிறகு கவிதையின் வடிவம் அவரவர் விருப்பம்போல் வெளிப்படத்தொடங்கிவிட்டது.

அதே வேளையில் மரபுக்கவிதையின்மீதும் எனக்குப்பிரியமும் ஈர்ப்பும் இருந்து வந்தது.

மரபின் ஓசையில், ஓசை நயத்தில், சொல்லாடலில் இயல்பாக ஓர் இணக்கம் இருந்தது.

இந்நிலையில் நான் கவியரங்கங்களில் பங்கேற்கத்தொடங்கினேன்.

உவமைக்கவிஞர் சுரதா அவர்களோடும் பழகிக்கொண்டிருந்தேன்.

கவிக்கோஅப்துல்ரகுமான், கவிஞர் பாலா கவிஞர், சிற்பி, ஆகியோரின் அறிமுகமும் கிடைத்தது.

பல்வேறு கவிஞர்களின், முன்னோடிக்கவிஞர்களின் தலைமையில் பாடினேன்.

தலைமைத்தாங்கிய கவிஞர்கள் மரபுக்கவிஞர்களாகவும் புதுக்கவிதைக்காரர்களாகவும் இருந்தார்கள்.

கவிஞர் சுரதா சுட்டியதற்குப்பின்புதான் ‘வியர்வைதாவரங்கள்’ என்ற கவிதைத்தொகுப்பைக்கொண்டுவந்தேன்.

வானொலியில் பணியாற்றியதால் அடுத்தடுத்து தொகுப்புகளைக்கொண்டுவரமுடியவில்லை.

முதல் தொகுப்பு ‘ 1989 இல் வெளிவந்தது. சிங்கப்பூர் ஒலிபரப்புக்கழகத்தில் ஒலிவழி நான்கில் அதாவது ஒலிக்களஞ்சியத்தில் அதாவதுஒலி96.8 இல் பணியாற்ற 1990இல் சிங்கப்பூர் வந்ததால் அந்த இடைவெளி நீண்டுகொண்டே போனது.

அங்கிருந்து வெளியாகி மீண்டும் வேகமாக எழுதத்தொடங்கினேன்.

ஆனாலும் 1999-ல் மீண்டும் ‘வியரவைத்தாவரங்கள்’ இரண்டாம் பதிப்பைக்கொண்டுவந்தேன். கவிஞர் வைரமுத்து வெளியிட்டார்.

சிங்கப்பூரில் மூத்த கவிஞர்கள் மரபுப் பற்றோடு விலங்கினார்கள்.

நான் புதுக்கவிதை எழுதிவந்தேன்.

மரபு எழுதத்தெரியவில்லை என்று என்னைத் தாக்கினார்கள்.

அதன் விளைவுதான் ‘முதல் ஓசை’ என்னும் மரபுக்கவிதைத்தொகுப்பு.

மரபின் எல்லாவகை பாவினங்களையும் கையாண்டிருக்கிறேன்.

அதன்பின் என்மீது எந்தக்கணையையும் தொடுக்கமுடியவில்லை.

அதற்கொரு முற்றுப்புள்ளிவைத்தேன்.

1999லிருந்து இதுவரை பத்துக் கவிதை நூல்கள்.

வீரமும் ஈரமும் என்கிற கவிதைநாடகம் ஒன்று. கவிதைப்புதினம் ஒன்று.

அதாவது கவிதையில் பன்னிரண்டு நூல்கள்.

நவீனக்கவிதைகள் அடங்கிய தொகுப்புகள் அவை.

ஒரே சொல்லில் எழுதுகோலை அதாவது பேனாவை ‘கைநா’ என்று சொல்லியிருக்கிறேன்.

பேராசிரியர் டாக்டர் தே.ஞானசுந்தரம் மேடைதோறும் சென்ற இடமெல்லாம் பாராட்டிச்சொல்லிவருவதை நான் அறிவேன்.

மரபும் மரபுஅல்லாத வடிவங்களிலும் எழுதிவருகிறேன்.

நான் கவிதைகளை உணர்த்துவதற்காகவும் உணர்வதற்காகவும் எழுதுகிறேன்.

உணர்த்தவேண்டியதை எந்தச்சிக்கலும் வாசிப்பவர்களுக்குக்கொடுக்காமல் புரிந்துகொள்ளும்வகையில் மொழிநயத்தோடு எழுதுகிறேன்.

உணரவேண்டிய கவிதைகளை நவீனமாகவும் பூடகமாகவும் இருண்மையோடும்

எழுதுகிறேன்.

ஆழ்ந்து படிக்க தூண்டுகிறேன்.

புதிய சொற்களை உருவாக்கியிருக்கிறேன்.

அரிய சொற்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.

நோக்கம் கருதியே எழுதும்மொழியை , முறையை, வடிவத்தை முடிவுசெய்கிறேன்.

வடிவத்திற்கு எதிரானவர்கள் மொழிக்கும் எதிரானவர்கள் என்பது என்னுடைய அழுத்தமான கருத்து.

எனக்குக் கவலை வடிவத்தின்மீது அல்ல கவிதையின் மீதுதான்.

பலநேரங்களில் பாடு பொருளே வடிவத்தை முடிவுசெய்துவிடுகிறது,

நான் கவிதைகளின் வடிவத்திற்கு எதிரானவனல்லன்..கவிதையின் எல்லா கட்சியிலும் உறுப்பினன்.

தொகுதி நிலவரமறிந்து,வெற்றிவாய்ப்புக்கருதி கவிதைக்கட்சிக்கு வந்தவனில்லை நான்.

கொதித்துக்கொண்டிருந்த உணர்வுகளும் குதித்துக்கொண்டிருந்த எண்ணங்களும்

உசுப்பிவிட்டதால் கவிஞனானவன் நான்.

கவிதையில் அழகை இழந்துவிட்டு எதையும் பெற எனக்கு உடன்பாடில்லை.

மொழி அழகாய் இருப்பது கவிதையில்தான் என்பது என் கருத்து.

மொழியை அழகாய் வைத்திருப்பது கவிதைதான்.

கவிதை எனக்கு ஆயுதம்.

கவிதை எனக்குக் காதலியும்தான்.

அது எனக்கு வாகனமாகவும் இருக்கிறது.

என் முகவரியாகவும் விளங்குகிறது.

கவிதையின்றி நானில்லை.

கவிதையும் நானு வேறில்லை.

 

( 1.09.2014 இரவு 11,50க்கு எழுதிமு

Series Navigation
author

பிச்சினிக்காடு இளங்கோ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *