மிகப்பெரிய சமுதாயங்கள் வீழ்ச்சியடைகின்றன. சுமார் 9000 வருடங்கள் செழித்திருந்த சிந்து சமவெளி நாகரிகம் என்ன சொன்னது என்று கூட புரியமுடியாமல் வெற்று கலாச்சார எலும்புகளாக கரைந்து போனது. மாபெரும் fertile cresent என்று நாகரிகமும் பண்பாடும் செழித்தோங்கிய ஈராக்கிய பிரதேசம், இஷ்டார் என்ற பெண் தெய்வம் காத்த நிலம், இன்று இடிபாடுகளுக்கு இடையே விழிபிதுங்கி ஓடுகிறது. அங்கோர் வாட் என்னும் நகரமே மரம் செடி கொடிகளுக்கு இடையே காணாமல் போயிருந்தது. அந்த பிரதேசங்களில்தான் போல்போட் என்னும் கம்யூனிஸ்ட் நாகரிகத்தையே ஒழித்துவிடுகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்து, மனிதர்களை மிருகங்கள் நிலைக்கு கொண்டுசென்றால்தான் கம்யூனிஸம் மலரும் என்று நாட்டில் பாதிக்கும் மேல் கொன்றொழித்து மீதிப்பேரை மிருகங்களாக்கினான்.
அழிவு உடனே வந்துவிடுவதில்லை. அது கட்டியம் கூறுகிறது. இதோ வருகிறேன் என்று அடையாளம் காட்டுகிறது. புரிந்துகொள் என்று கோடிடுகிறது.
அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை இந்த வாரம் பார்த்தேன். 18 வருட காலம் நடந்த ஒரு வழக்கின் தீர்ப்பு ஒரு வழியாக வந்தது. கால தாமதமானாலும் தீர்ப்பு நல்லதே என்று நல்லதை பார்த்தார்கள் பல யுதிஷ்டிரர்கள். நானோ அங்கே, நகுலன் போல, வரப்போகும் அழிவின் அடையாளத்தை பார்த்தேன்.
ஒரு மாநிலமே அச்சத்தை உண்டு, அச்சத்தை உமிழ்ந்து, அச்சத்தில் ஆழ்ந்து வீடுகளுக்குள் ஒடுங்கி கிடந்தது.
அந்த மாநில மக்களின் சொத்துகள்தான் சுரண்டப்பட்டன. அந்த மாநில மக்களின் வரிப்பணமே ஒரு தனி மனிதரின் சொத்தாக மாற்றப்பட்டது. அந்த மாநில மக்கள் கொடுத்த அதிகாரமே துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. ஆனால், அதே மக்களே அந்த தனி நபருக்கு பெருவாரியான வாக்களித்து தேர்ந்தெடுக்கவும் செய்திருந்தார்கள் சில மாதங்களுக்கு முன்னால். அந்த தனிநபரின் வரலாற்றில் நடந்த கொலைகளும், அச்சுருத்தல்களும், ஆட்டோக்களும், கொள்ளைகளும், அந்த தனி நபரின் கீழ் இருந்த கட்சி என்ற பெயரில் இருந்த மாபியாவும் நடத்திய அனைத்தையும் எழுத பக்கங்கள் போதாது. அந்த மக்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டதற்காக 18 வருடம் விசாரணை செய்து, பல தரப்பு வாதங்களை கேட்டு, நீதிமன்றம் அந்த தனிநபருக்கு தண்டனை அளித்தற்கு இந்த அச்சம்.
இரண்டு சமூகங்கள் அடித்துகொள்ளும்போது இரண்டு சமூக மக்களுமே வீட்டுக்குள் அடங்குவது எதிர்பார்க்கக்கூடிய அச்சம். ஆனால், இது அதுவல்ல. எந்த அரசாங்கம் பொதுமக்களை காப்பாற்றவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் உறுதி மொழி எடுத்திருக்கிறதோ அந்த அரசாங்கத்தை கண்டே அச்சம். அந்த அரசாங்கத்தின் தூண்களையும், அந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் மாபியா கும்பலையும் கண்டு அச்சம்.
தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு பெரிய கட்சிகளுமே மாபியாக்கள்தான். அதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். மாபியாவின் அனைத்து குணங்களும், அனைத்து வக்கிரங்களும் இந்த இரண்டு கட்சிகளிடமும் உண்டு. இங்கே ஆளும் கட்சி மாபியாவுக்கு ஹஃப்தா வெட்டாமல் ஒரு காரியமும் தமிழ்நாட்டில் நடக்காது. நடக்கவும் விட மாட்டார்கள். வீடு கட்ட வேண்டுமா? வீடு வாங்க வேண்டுமா? நிலம் வாங்க வேண்டுமா? கடை ஆரம்பிக்க வேண்டுமா? எல்லாவற்றுக்கும் ஹஃப்தா. இது அரசாங்க அதிகாரிகளுக்கு கொடுக்கும் லஞ்சம் அல்ல. அங்கிருக்கும் ஒரு அதிமுக, அல்லது திமுக வட்டசெயலாளருக்கும், உதிரி அரசியல் ரவுடிகளுக்கும் கொடுக்கும் ஹஃப்தா. ரோடு போடவேண்டுமென்றாலும் சரி, அல்லது ரோட்டில் போக வேண்டுமென்றாலும் சரி ஹஃப்தா.
அந்த மாபியா கட்சியாக உலாவருகிறது. என்றாலும் அது மாபியாதான். இந்த மாபியாவில் இருப்பதும், காட்டப்படுவதும் தலைமைக்கு விசுவாசம். எது மிகவும் முதுகு வளைந்து தரையை தொட்டு, விசுவாசத்தை காட்டுகிறதோ அது அங்கீகரிக்கப்படும். அதற்கு காசுகளும் பதவிகளும் செல்வாக்கும் தூக்கி எறியப்படும். அதனை விசுவாசிகள் காலில் விழுந்து நக்கி எடுத்துகொள்வார்கள்.
அதனால்தான், அலங்காரமாக உடை உடுத்தி பட்டுப்புடவை அணிந்து, அழுக்கில்லாத வேட்டி அணிந்து காரை உடைக்கிறார்கள் இந்த விசுவாசிகள். ஒரு சமூக விரோத செயலை, தனக்கு சொந்தமில்லாத ஒரு காரை உடைக்கும் செயலை செய்யும்போது, ஒரு சமூக விரோதிக்கு இருக்கும் முகமற்ற தன்மையை விரும்பும் முகமூடி அணிந்துகொள்ளும் ஒரு குணமில்லாது, தான் உடைப்பதை புகைப்பட காரர் படமெடுக்கவேண்டும் அது எப்படியோ தன் தலைமைக்கு சென்று தான் தகுந்த வெகுமதி அளிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி விசுவாசத்தை காட்ட முனைகிறார்கள். புதியதலைமுறை தொலைக்காட்சி போன்றவற்றில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் முகத்தை மறைக்க விரும்பாததை பாருங்கள்.
இது போன்று நடக்கும் என்று எல்லா தமிழக மக்களுக்கும் தெரிந்திருக்கிறது. அதனால்தான் அனைவரும் தங்கள் உடைமைகளை பாதுகாத்துகொண்டு, உயிரை பாதுகாத்துகொண்டு வீட்டில் அடைந்து கிடக்கிறார்கள். இந்த கட்சியில் உள்ளவர்கள், இந்த கட்சிக்கு ஓட்டு போட்டவர்கள், எதிர்கட்சியினர், கடசி சாராதவர்கள் என்று அனைவருக்குமே அது தெரிந்திருக்கிறது.
அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று ஒரு விசுவாசி கூறலாம். அப்படித்தான் சில விசுவாசிகள் எழுதுகிறார்கள். ஆனால், அவர்களும் அப்படி ஒன்று நடக்கலாம் என்று தாங்களும் கருதினோம் என்பதை மறுக்கமாட்டார்கள். அப்படி ஒன்று நடந்தால் எதிர்கட்சி மீது பழி சொல்லலாம் என்றும் அவர்கள் விரும்பியிருப்பார்கள்.
இது ஜெயலலிதாவின் கட்சி என்று மட்டுமல்ல, நாளை கருணாநிதிக்கு இதே போல நான்கு ஆண்டுகள் சிறைவாசம் என்று தீர்ப்பு வந்தாலும் அதே போல மக்கள் நிச்சயம் வீடுகளுக்குள் முடங்கியிருப்பார்கள். அதுதான் உண்மை. அதுதான் இந்த சமூகத்தின் அழிவின் ஆரம்ப அடையாளம்.
லல்லு பிரசாத் யாதவ் சிறைக்கு சென்றபோது பிகார் கொந்தளிக்கும் என்று கருதி பிகார் மக்கள் முடங்கவில்லை. அன்றைய முதல்வராக இருந்த அந்துலே பதவி விலகியபோது மகாராஷ்டிரம் பயந்து போய் முடங்கவில்லை. ராமகிருஷ்ண ஹெக்டே பதவி விலகியபோது கர்னாடகம் கலவரத்தில் ஈடுபடும் என்று அஞ்சி மக்கள் வீட்டில் முடங்கவில்லை.
ஆனால், பல்லாயிரம் ஆண்டு காவியங்கள், கவிதைகள், காப்பியங்கள் என்றும், கருத்து சுதந்திரத்துக்கு கொடிபிடிக்குமாறு கடவுளர்களையே கிண்டல் செய்யும் கவிதைகள் எழுதிய வரலாறு கொண்டதும், நுண்கலைகளின் உச்சங்களையும், உரத்த சிந்தனையின் தீப்பொறிகளையும் கொண்ட கவிதைகளையும் காப்பியங்களையும் வடித்து போற்றி வந்த தமிழகத்தின் இன்றைய நிலை, ஒரு அரசியல் கட்சியின் தலைவர் 18 ஆண்டு நடந்த ஒரு நீதி விசாரணையின் முடிவில் தண்டிக்கப்பட்டபோது, அந்த மாபியாவின் எதிர்வினை அஞ்சி, அந்த மாபியாவின் கையில் இருக்கும் அரசு இயந்திரத்தின் கோபவெறிக்கும், அதன் பாரபட்ச நடைமுறைக்கும் அஞ்சி வீட்டில் முடங்குகிறது. இதுதான் அந்த அழிவை நோக்கி போகும் பாதையில் நாம் பார்க்கும் ஒரு மைல்கல்.
நான் முன்னரே ஒரு முறை எழுதியிருந்ததுபோல, திராவிட இயக்கத்தின் விளைவை மட்டுப்படுத்தியிருப்பது காந்தியும், நேருவும் இங்கே விதைத்துள்ள ஜனநாயக உணர்வும், இந்தியாவின் ஒரு அங்கமாக கலாச்சார வரலாற்று ரீதியிலும் மனத்தளவிலும் இணைந்திருப்பது மட்டுமே. இன்று, ஒரு கட்சி ஆட்சியிலிருந்தால், மற்றொரு கட்சியினர் மீது கஞ்சா வழக்கும், அவதூறு வழக்குமே போட முடிகிறது. தமிழ்நாடு தனிநாடாக இருந்திருந்தாலோ, அல்லது மாநில சுயாட்சி கொண்ட மாநிலமாக இருந்திருந்தாலோ, இங்கே நடந்திருக்கக்கூடியது ஒரு உள்நாட்டு கலவரமே. தெருவுக்குத் தெரு குண்டு வெடிப்புகளையும் துப்பாக்கிச் சூடுகளையுமே பார்த்திருப்போம்.
- திருப்பூர் அரிமா விருதுகள்
- Mahabharatha Epic Retold in 3069 rhyming couplets
- கவிதையும் நானும்
- விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் கோணங்கி
- நடு
- அரவாணியர் – பிரச்சனைகளும் தீர்வுகளும்
- தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மா
- மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவணரின் தமிழாக்கப் பணிகள்
- தொடுவானம் – 35. நடுக்கடலில் சம்பந்தம்
- பாவண்ணன் கவிதைகள்
- ஆசியாவின் முதற் சாதனையாகச் செந்நிறக் கோளைச் சுற்றிவரும் இந்திய விண்ணுளவி மங்கல்யான்
- வாழ்க்கை ஒரு வானவில் – 22
- இரண்டாவது திருமணம்
- சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள்
- தந்தையானவள் – அத்தியாயம் -2
- ஒரு மகுடத்தைச் சிறகுகள் சுமந்து செல்லாது: இன்குலாப் நேர்காணல்
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 23 முடிவுக் காட்சி
- ஆனந்த பவன் [நாடகம்] காட்சி-7
- கதை சொல்லி விருதுகள்
- ‘ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ முழுத்தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – என்சிபிஎச் விருது
- இலக்கியச் சோலை- நாள் : 5—10—2014, ஞாயிறு காலை 10 மணி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 94
- தினம் என் பயணங்கள் -35 ஒரு பயங்கரத் தோற்றம் !
- ஒரு துளி நீர் விட்டல் ராவின் நதிமூலம்
- தமிழர் நாகரிகத்தின் வெளிப்பாடு