எப்படியெல்லாமோ என்னென்னமோ நேர்ந்து விடுகிறது. எதுவும் திட்டமிடாமலேயே. திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் தான் உருப்படுவதில்லை. தேவதாசியும் மகனும் புத்தகம் பற்றிப் படித்ததும் தற்செயலாக நேரீட்டது. வல்லமை இணைய தளத்தில் புத்தக மதிப்புரை பரிசுக்காகத் தேர்வு செய்யப் பணிக்கப்பட்டபோது கவனத்தில் பட்ட புத்தகம் இது. என்ன அழகான ஆனால் அர்த்தமும் தகுதியும் பெற்ற தலைப்பு. தேவதாசி குடும்பத்தில் பிறந்து விட்ட காரணத்தால் தேவதாசியாக அறியப்பட்டு தன் தேர்வினாலும் தளராத முனைப்பினாலும் வாழ்ந்த வாழ்க்கை மகானாக உயர்த்தியுள்ளது. புத்தக மதிப்புரையைப் படித்ததும் அது தன்னையே பரிசுக்கு உயர்த்திக்கொண்டது, பரிசும் கிடைத்தது. எல்லாம் சரி. அது படித்தாக வேண்டும். காலச்சுவடு பதிப்பித்தது தான் என்றாலும் ஏதோ சுற்று வழியில் தான் என் கவனத்திற்கு வந்து சேர்ந்தது தற்செயலாக. பின் அதைத் தவறவிடுவார்களா?
நாகரத்தினம்மா கேள்விப்பட்ட பெயர் தான். பங்களூரிலிருந்து வந்த ஒரு தேவதாசி. சங்கீதம் தெரிந்தவர். தியாகராஜரிடம் அதீத பக்தி கொண்டவர். பிருந்தாவனம் என்று சொல்லப்பட்டாலும் புல்லும் புதரும் மண்டிக்கிடக்கும் தியாகராஜர் சமாதி கண்டு வேதனைப் பட்டு இன்று நாம் அறிந்த தியாக ராஜர் விக்கிரஹமும் கோவிலும் ஆராதனை விழாக்களும் நடக்கக் காரணமானவர் என்ற அளவுக்குத் தான் எனக்கு அவர் பற்றிய விவரங்கள் தெரியும்.
தென்னிந்தியாவிலேயே மற்ற மாநிலங்களைவிட தமிழ் நாட்டில் தான் கர்நாடக சங்கீத உபாசகர்கள் அதிகம். தஞ்சை அத்தகைய வளம் கொண்டது. மற்ற மாநிலத்தவர் சென்னை வந்து தம் வித்வத்தைக் காட்டினால் தான் அங்கீகாரம் பெறுவர் என்று சொல்லப்பட்டது. அது அப்படித் தான் இருந்ததும் கூட. இருந்தும் தஞ்சையில் வாழ்ந்த ஒரு மகத்தான வாக்யேக்காரரை, அவரது சிஷ்ய பரம்பரை இங்கு தான் சுற்றியிருந்த தில்லை ஸ்தானம், உமையாள்புரம் போன்ற கிராமங்களில் வாழ்ந்திருந்தாலும் தியாகராஜருக்கு ஒரு தேவதாசி பங்களூரிலிருந்து வரவேண்டியிருந்தது அவரது நினைவுகளைப் புதுப்பிக்க, அச்சுடர் மீண்டும் கொழுந்து விட்டெரிய, இப்படித்தான் என் மனது சலனித்துக்கொண்டிருக்கும். அதிகம் ஆச்சரியப் படத் தேவையில்லை.தியாகராஜர் இறந்து கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் ஆகப் போகிறது. ஐம்பது வருஷங்களுக்கு முன் மறைந்த இன்னொரு தியாகராஜர் சமாதியை திருச்சியில் எங்கோ ஒரு இடத்தில் கேட்பாரற்று புதர் மண்டிக்கிடக்கும் புகைப்படத்தை பத்திரிகைகளில் பார்த்தேன். இந்த தியாகராஜர் வாக்யேயக்காரர் இல்லை. சினிமா பாடகர் தான். என்றாலும், குரல் கேட்டதுமே நின்று முழுதுமாகக் கேட்கத் தூண்டும் குரல், பாட்டு. மறைந்து அறுபது வருடங்களுக்கு கிட்டத்தட்ட ஆகிறது. காலம் மாறிவிட்டது. “உன்னை எவண்டி பெத்தான், பெத்தான், அவன் என் முன்னாலே வந்தா செத்தான் செத்தான்,” “கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, இல்லே ஓடிப் போய் கல்யாணம் கட்டிக்கலாமா?” வகையறா கீர்த்தனைகளும், வாக்யேயக்காரர்களும் மக்கள் மனதில் ஆட்சி செய்யும் காலத்தில். அப்படித்தான் இருக்கும். புதர் தான் மண்டிப் போகும். உ.வே.சா வாழ்ந்த இல்லம் உருத்தெரியாது பாழாகிக்கிடக்க அங்கு ”அவர் தகுதிக்கும் பெருமைக்கும் ஏற்ற ஒரு மண்டபம்” எழுப்பும் சிந்தனைகள் ஆட்சி செய்யும் காலம்.
நாகரத்தினம்மாவின் ஆரம்பங்கள் அப்படி ஒன்றும் பிரகாசமானதல்ல. அவர் நாம் இன்று கொள்ளும் அர்த்தத்தில், தேவதாசியாக புகழும் செல்வமும் பெறக்கூடியவரும் அல்லர். சிகப்புத்தான். ஆனால் குள்ளமும் பருமனுமான தேகவாகு கொண்டவர். அதெல்லாம் போக குழந்தைப் பருவத்திலிருந்து ஒரு இடத்தில் நிலைக்க விடாது விரட்டி அடிக்கப்பட்டவர். 13 வயதில் தாயையும் இழந்தவர். தனித்துவிடப்பட்ட ஒரு குள்ளமும் பருமனுமான ஒரு பெண் பெற்ற வித்வத்தையும், சாதித்த சாதனைகளையும் தனக்காக்கிக் கொள்ள முடிந்தது என்பது வியப்புதான்.
நாகரத்தினம்மா எந்தக் கோவிலுக்கும் தேவதாசியாக பொட்டுக்கட்டப்பட்டவர் இல்லை. கர்னாடகாவில் நஞ்சன் கூடு கோவிலைச் சார்ந்த தேவதாசி புட்டலக்ஷ்மிக்கு 1878-ம் வருடம் மகளாகப் பிறந்தவர் நாகரத்தினம்மா. அப்பா சுப்பண்ணா என்ற ஒரு பிராமணர். ஆனால் ஆதரித்தவர் சுப்பாராவ் என்ற வேறொருவர். அவர் புட்டலக்ஷ்மியின் சொத்தையெல்லாம் அபகரித்துக் கொண்டு விரட்டி அடித்தார் அப்போது ஆதரவளித்தவர் மைசூர் தர்பாரில் சங்கீத வித்வானாகத் திகழ்ந்த கிரிபட்ட திம்மய்யா. அவர் நாகரத்தினத்துக்கு சங்கீத சிக்ஷை மட்டுமல்லாமல் சமஸ்கிருதத்திலும் திறமை பெறச் செய்தார். 5 வயதிலேயே நாகரத்தினத்தின் தேர்ச்சி கவனத்தைக் கவர்ந்தது. சங்கீத பயிற்சி தந்தது மைசூர் யக்ஷகான கலைஞரின் மகனும் திம்மய்யாவின் சிஷ்யனுமான பிடாரம் கிருஷ்ணப்பா. இங்கும் திம்மப்பாவுக்கு நாகரத்தினத்தின் வளர்ச்சி வேகம் தனக்கு ஆபத்தாகுமோ என்ற பயத்தில் புட்டலக்ஷ்மியை ”போ, போய் எங்காவது சாணி பொறுக்கிப் பிழை” என்று விரட்டச் செய்திருக்கிறது அப்போது புட்டலக்ஷ்மி தனக்குள் சபதம் செய்துகொள்கிறாள் ” மைசூர் மகாராஜாவே அழைத்து கௌரவிக்கச் செய்கிறேன்” இனி இங்கு யாரையும் அண்டிப் பயனில்லை என் தீர்மானித்து காஞ்சீபுரத்தில் இருக்கும் தன் சினேகிதி தனகோடியைத் தஞ்சம் அடைகிறார். தனகோடியும் அவர் சகோதரி காமாட்சியும் சியாமா சாஸ்திரியின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்தவர்கள். சங்கீதத்தில் புகழ் பெற்றவர்கள். பல்லவி பாடும் பெண்மணி என்ற சிறப்பு வேறு. ஆனால் தனகோடி அப்போது மிக வறிய நிலையில் இருந்தவர். அதிக நாள் அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாமென திரும்ப மைசூருக்கே திரும்பி அங்கு வயலின் வாசிக்கும் தன் சகோதரர் வெங்கட சாமப்பாவிடம் தஞ்சம் அடைகிறார். அவர் நாகரத்தினத்துக்கு வயலின் பயிற்சி அளித்துப் பின் முனுசாமப்பா என்னும் வயலின் வித்வானிடம் அனுப்பினார். முனுசாமப்பா தியாகராஜ சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்தவர். அவரிடம் நாகரத்தினம்மா கற்றது வயலின் அல்ல. வாய்ப்பாட்டு. அங்கும் அவருக்கு முனுசாமப்பாவின் மருமகள் சந்திரவதனா சேர்ந்து பாடத்துணையானாள். புட்ட லக்ஷ்மியின் சபதம் ஒன்று உள்ளிருந்து உறுத்திக்கொண்டே இருக்கிறதே. தன் பெண்ணுக்கு தெலுங்கு, ஆங்கிலம், புராணங்கள் இதிகாசம் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறாள். மிகுந்த கண்டிப்பும் பிடிவாதமும் திடமனதும் கொண்டவர் புட்ட லக்ஷ்மி அவ்வளவும் நாகரத்தினம்மாவுக்கும் பிதிரார்ஜிதமாக வந்தடைகிறது. எந்நிலையிலும் தன்னிரக்கம் கொண்டு தன் சுயகௌரவத்தை விட்டவரில்லை.
தன் போராட்டங்களும் மன அழுத்தங்களும், தன் மகளுக்காக பட்ட கஷ்டங்களும் விலை கோரின. காசநோய் பீடித்து தன் அந்திம நாள் நெருங்கியதை உணர்ந்த புட்ட லக்ஷ்மிக்கு, தன் மகளை எல்லா கலைகளிலும் கல்வியிலும் தேர்ச்சி பெற்று தன் சபதத்தை நிறைவேற்றும் தகுதி பெற்றவளாக்கியதில் திருப்தி. முனுசாமப்பாவிடம் தன் மறைவிற்குப் பிறகு தன் சபதம் நிறைவேற உதவும்படி கேட்டுக்கொள்கிறாள். அவரும் வெங்கடஸாமப்பாவின் பிரத்யேகத் திட்டங்களை உணர்ந்தவர் போல, நாகரத்தினத்தை வீணை சேஷண்ணாவிடம் அனுப்புகிறார். வீணை தான் என்றில்லை. சகலகலா வல்லவர், ஐரோப்பிய வாத்தியங்களையும் சேர்த்து.
சேஷண்ணா தன் வீட்டிலேயே நாகரத்தினத்தின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்கிறார். அது நாகரத்தினம்மாவின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம். சேஷண்ணா மாத்திரம் அல்ல, பிடாரம் கிருஷ்ணப்பா, மைசூர் வாசுதேவாச்சாரியார், சுப்பண்ணா போன்ற பெரிய திக்கஜங்களின் பார்வையும் பாராட்டும் பெறுகிறது. மைசூர் அரண்மனையிலிருந்தும் அழைப்பு வருகிறது.
இந்த சமயத்தில் தான் கோவில்களிலும் அரண்மனையிலும் தேவதாசிகளுக்கு தரப்பட்ட ஆதரவு படிப்படியாக குறைகிறது. ஆனாலும் மைசூரில் நீதிபதியாக இருந்த நரஹரி ராவின் ஆதரவு கிடைக்கிறது. நரஹரி ராவின் மனைவிக்கும் நாகரத்தினம்மா ஆப்த சினேகிதியாகி, குடும்பத்திலேயே ஒன்றாகிறாள். நரஹரி ராவ் அவளுக்காக ஒரு தனி மாளிகையே ஒரு குன்றின் மேல் கட்டிக் கொடுக்கிறார். அந்த இடம் பல சங்கீத வினிகைகளுக்கும் பல வித்வான்கள் அவ்வப்போது கூடும் இடமாகவும் ஆகிறது. இந்த மகிழ்ச்சிகர நாட்கள் அதிகம் நீடிக்கவில்லை. 1902-ல் நரஹரி ராவ் இறந்துவிடவே அடுத்த வருடம் நாகரத்தினம்மா தன் 25- வயதில் சென்னைக்கு குடிபெயர்கிறார்.
சென்னை அப்போது பெரிய செல்வந்தர்களும் சங்கீத வித்வான்களும் தேவதாசி சமூகத்தைச் சேர்ந்த வித்வாம்சினிகளும் குழுமியிருந்த நகரம். இன்று நாம் போற்றிக் கொண்டாடும் நக்ஷத்திரங்கள், மைலாப்பூர் கௌரி அம்மாள், வீணை தனம், அடிக்கடி வந்து போகும் தனகோடி சகோதரிகள் என அந்த பட்டியல் வெகுவாக நீளும். பெரும்பாலும் ஜார்ஜ் டவுனின் அடுக்கடுக்கான நீண்ட தெருக்களில். வீணை தனத்தின் அபிமானம் பெற்று அவர் குடும்பத்தில் ஒருவராகிறார் நாகரத்தினம்மா. இருந்தாலும் இப்பெரிய ஆகிருதிகளிடையே புதிதாக வந்த இளம்பெண் நாகரத்தினம்மாவும் தன்னை ஸ்தாபித்துக் கொள்ளவேண்டுமே. நெருப்புக் குண்டத்தில் குதித்தெழுவது போல என்று சொல்கிறார் இவ்வரலாற்றை எழுதிய ஸ்ரீராம். பல வித்வான்களின் அறிமுகத்தால் நிறைய கற்றுக்கொள்ளவும் முடிகிறது. பல கச்சேரி வாய்ப்புக்களும் கிட்டுகின்றன். நடனம், பாட்டு, இரண்டும் தான் பின்னர் ஹரி கதாவும் சேரவிருக்கிறது. முன்னார் சேஷன்ணா வீட்டில் நடந்த கச்சேரியில் வாசுதேவாச்சாரியார் போன்ற பெருந்தலைகள் பாராட்டி எழுதியிருக்கின்றனர். ஆனாலும் கர்நாடக சங்கீத பரிச்சயம் இல்லாத ஹிந்துஸ்தானி பாடகர் விஷ்ணுநாராயண் பட்கண்டே ஏதோ நடக்கிறதே என்று அழையா விருந்தினராக நுழைந்து ஒர் ஒரத்தில் நின்று கேட்டவரை விரும்பிக் கேட்கச் செய்தது அதுபற்றி பாராட்டி எழுதவும் செய்தது என்றால் நாகரத்தினம்மா எத்தகைய சங்கீதத்தை தன்னுள் வளர்த்திருக்கிறார், அம்மாவின் கண்டிப்பில், அது எத்தகைய பிரகாசம் நிறைந்த எதிர்காலத்தை அவருக்கு தரும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. பட்கண்டே விரிவாகவே எழுதியிருக்கிறார். அதில் குறிப்பாக ஒரு வரி “ பம்பாய் தாசிகளைப் போல அல்லாமல் இவர் மிகவும் கண்ணியமாக இருந்ததைக் காண முடிந்தது. பாடிய பாடல்கள் எல்லாம் தெய்வஙளைப் பற்றியவை போலும்.” மற்றபடி அவரது இனிமையான குரல், பாவபூர்வமான சங்கீதம் பற்றி யெல்லாம் பாராட்டுகிறார்.
வெகு சீக்கிரம் அவர் தன்னை ஸ்தாபித்துக் கொள்கிறார். சங்கீத வாய்ப்புகள் குவிகின்றன. ஜார்ஜ் டவுனில் வீடு வாங்குகிறார். நகைகளில் ஆடையணிகளில் விருப்பம் வங்கிக் கணக்குகள் பத்திர சேமிப்பு என அவர் செல்வம் விரிகிறது. தன் உரிமைகளை விட்டுக் கொடாதவர். பிடிவாதம் கொண்டவர் என்றும் பெயர் பெறுகிறார். குறவஞ்சி நாட்டியம் கோவிலில் ஆடக்கூடாதென்றால் முற்றத்தில் ஆடுவேன் என்று காவலர் படையோடு தயாராகிறார். இப்படி எத்தனையோ வழக்காடுதலும் உரிமை நிலை நாட்டலுமாக நிறைந்த வாழ்க்கை இன்னும் பல பிரசித்த வழக்காடல் களுக்கும் இட்டுச் செல்கிறது. அவை அவர் வாழ்க்கையில் மாத்திரம் அல்ல. தென்னிந்திய கலை வரலாற்றிலும் தம் சுவடுகளை, தன் தரப்பை, மக்கள் மனதில் பதியாத இன்னொரு கோணத்தை பதிவு செய்தவை.
விஷ்ணு பட்கண்டே இந்த சமூகத்துக்கும் மொழிக்கும், சங்கீதத்துக்கும் அன்னியர். அழையா விருந்தினராக ஏதோ பாட்டு என்று கேட்க வந்தவருக்கு பம்பாய் தேவதாசிகளைப் போல் அல்லாது கண்ணியமானவர், பாட்டின் அர்த்தமும் மொழியும் ராகமும் எதுவென்று தெரியாது, பாட்டின் சப்த ரூபத்தை மாத்திரம் கொண்டே அது பாவரூபம் பெற்றது என்று உணரக் கூடுமானால் வேறு என்ன சொல்லவேண்டும். நாம் நாகரத்தினம்மாவை தேவதாசியாகத் தான் அறிவோம். நமக்குத்தெரிந்த அர்த்தத்தில்.
- திருப்பூர் அரிமா விருதுகள்
- Mahabharatha Epic Retold in 3069 rhyming couplets
- கவிதையும் நானும்
- விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் கோணங்கி
- நடு
- அரவாணியர் – பிரச்சனைகளும் தீர்வுகளும்
- தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மா
- மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவணரின் தமிழாக்கப் பணிகள்
- தொடுவானம் – 35. நடுக்கடலில் சம்பந்தம்
- பாவண்ணன் கவிதைகள்
- ஆசியாவின் முதற் சாதனையாகச் செந்நிறக் கோளைச் சுற்றிவரும் இந்திய விண்ணுளவி மங்கல்யான்
- வாழ்க்கை ஒரு வானவில் – 22
- இரண்டாவது திருமணம்
- சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள்
- தந்தையானவள் – அத்தியாயம் -2
- ஒரு மகுடத்தைச் சிறகுகள் சுமந்து செல்லாது: இன்குலாப் நேர்காணல்
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 23 முடிவுக் காட்சி
- ஆனந்த பவன் [நாடகம்] காட்சி-7
- கதை சொல்லி விருதுகள்
- ‘ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ முழுத்தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – என்சிபிஎச் விருது
- இலக்கியச் சோலை- நாள் : 5—10—2014, ஞாயிறு காலை 10 மணி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 94
- தினம் என் பயணங்கள் -35 ஒரு பயங்கரத் தோற்றம் !
- ஒரு துளி நீர் விட்டல் ராவின் நதிமூலம்
- தமிழர் நாகரிகத்தின் வெளிப்பாடு