தொடுவானம் 41. அவர்தான் உன் அப்பா

This entry is part 1 of 14 in the series 9 நவம்பர் 2014
 Singapore River
                                                                                          
 
          ரஜூலா கப்பல் சிங்கப்பூர் துறைமுகம் வந்துவிட்ட போதிலும் சற்று தொலைவில்தான் நின்றது. கொஞ்ச நேரத்தில் கரையிலிருந்து பல இயந்திரப் படகுகள் கப்பலை நோக்கி விரைந்தன. கப்பலிலிருந்து ஏணிப் படிகள் இறக்கப்பட்டன. படகுகளிலிருந்து சில போர்டர்கள் கப்பலுக்குள் புகுந்தனர். அவர்கள் எங்களுடைய சாமான்களைத் தூக்கிக்கொண்டு பின்தொடரச் சொன்னார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
         ” நாம் புற மலைக்குப் போகிறோம். ” என்று பக்கத்தில் இருந்த பெரியவர் கூறினார்.
          ” அது என்ன புற மலை? சிங்கப்பூருக்குப் போகலையா? அப்பாவை இன்று பார்க்க முடியாதா? ” பெரும் ஏமாற்றத்துடன் அவரிடம் கேட்டேன்.
          “இல்லை தம்பி. நம்ப கப்பலில் வந்த யாருக்கோ அம்மை போட்டுவிட்டதாம். அதனால் நமக்கும் அம்மை இருக்கும் என்ற சந்தேகத்தில் புற மலை என்ற தீவில் நம்மை முதலில் இறக்குவார்கள். யாருக்கும் அம்மை இல்லையென்றால் சில நாளில் சிங்கப்பூருக்குள் கொண்டு போவார்கள். அப்போது நீ அப்பாவைப் பார்க்கலாம்.” என்ற விளக்கத்துடன் சமாதானம் கூறினார்.
        அப்பாவைப் பார்க்கலாம் என்று இரவெல்லாம்  விழித்திருந்த  ஆசைகளெல்லாம் தவிடு பொடியாயின! பெருத்த ஏமாற்றம்! வேண்டா வெறுப்பாக சாமான்களை எடுத்துக்கொண்டேன். அம்மாவின் முகமும் வாடிப்போய்தான் இருந்தது.
          பலரும் முணுமுணுத்துக்கொண்டுதான் படகுகளில் ஏறினர். ஒரு படகில் சுமார் இருபது பேர்கள்தான் ஏறலாம் . படகில் ஏறியதும்தான் அருகில் நின்ற ரஜூலா கப்பலின் பிரம்மாண்டம் தெரிந்தது  அவ்வளவு பெரிய ராட்சச  கப்பல் அது!
          சுமார் அரை மணி  நேரத்தில் புற மலை வந்துவிட்டோம். சற்று தொலைவிலேயே அது பச்சைப் பசேலென்று மலைகளும் , குன்றுகளும்  மரம் செடி கொடிகளும்,மணல் பரவிய நீண்ட கரையும் கொண்டு மிகவும் அழகான இயற்கைச் சூழலுடன் காட்சி தந்தது.
          படகு ஒதுங்கும் சிறிய துறைமுகமும் இருந்தது.
          அங்கு சற்று தூரத்தில் வரிசை வரிசையாக நீண்ட வீடுகள் இருந்தன. அவற்றில் நாங்கள் தற்காலிகமாகக் குடிபுகுந்தோம். குளிக்க பொதுவான இடங்கள் இருந்தன. சமைக்கத் தேவையில்லை. இலவசமாக  உணவு வழங்கப்பட்டது.
          அங்கு வந்த முதல் நாளிலேயே எங்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்தார்கள். அவர்களில் பலர் தமிழ் மருத்துவர்கள். மற்ற பணியாளர்களில் சீனர்கள் அதிகம் இருந்தனர். மருத்துவர்கள் எங்களை தினமும் பரிசோதனை செய்தனர். குறிப்பாக அம்மை உள்ளதா என்றுதான் பார்த்தனர்.
          அந்த தீவின் மேலாளர் ஆங்கிலேயர். பல ஆங்கிலேயே காவலர்களும் இருந்தனர். புற மலை என்று அழைக்கப்பட்ட அந்த தீவின் பெயர் செயின்ட் ஜான் தீவு  தமிழர்கள் அதை புற மலை என்றே அழைத்து வந்துள்ளனர்.( தற்போது அந்த தீவு செந்தோசா என்று அழைக்கப்படுகிறது. உலகப் புகழ்மிக்க கேசினோக்கள் கொண்ட சுற்றுலாத் தளமாகவும் மாறியுள்ளது. )
          அப்பாவை உடன் பார்க்க முடியவில்லையே என்ற ஏமாற்றம் இருந்தாலும் எங்களின் சிறு பிள்ளைகளின் கூட்டம் அந்த தீவின் நீண்ட மணல் பரப்பில் தினமும் நன்றாக ஆட்டம் போட்டோம். கடலில் நாங்கள் இறங்கவில்லை.கடல் ஆழம் என்றும் இறங்கினால் மூழ்கி விடுவோம் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. கடற்கரை ஓரத்தில் வளர்ந்திருந்த மரங்களில் ஏறி குதித்து விளையாடினோம்.
      மூன்று நாட்கள்தான் அந்தத் தீவில் தங்கினோம். அடுத்த நாள் காலையிலேயே படகுகள் வந்துவிட்டன. பசியாறிய பின்பு எங்கள் சாமான்களுடன் படகில் ஏறிக்கொண்டோம். படகு சிங்கப்பூர் துறைமுகம் நோக்கிப் புறப்பட்டது.இன்னும் அரை மணி நேரம்தான்! அப்பாவைப் பார்த்து விடுவேன்! கரையை நெருங்க நெருங்க நெஞ்சு படபடத்தது. இத்தனை வருடமாக அப்பா தெரியாமல் வாழ்ந்தேன்.இனி எனக்கும் ஒரு அப்பா இருப்பார். இனிமேல் அப்பாவுடன்தான் வாழ்வேன். எனக்கு வேண்டியதையெல்லாம் அப்பாவிடம் கேட்டு வாங்கிக்கொள்வேன்! மனதில் எல்லையில்லா மகிழ்ச்சிப் பெருக்குடன் துறைமுகத்தையே வைத்த விழி வாங்காமல் எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தேன்.
          கரையில் நிற்பவர்கள தெரிந்தார்கள். நிறைய பேர்கள்தான் நின்றார்கள்.அவர்கள் எங்களை கூட்டிச் செல்ல வந்துள்ளவர்கள்  அவர்களில் யார் அப்பா என்று ஆவலுடன் பார்த்தேன். எனக்கு எப்படி அடையாளம் தெரியும்? நான்தான் அவரைப் பார்த்ததில்லையே. அவருடைய படத்தைக் கூட பார்த்ததில்லையே?
          அம்மா கையைக்  காட்டி , :”  அதோ உன் அப்பா . ” என்றார் ! அந்த கூட்டத்தில் எப்படியோ அவர் கண்டு பிடித்துவிட்டார்! ஆச்சரியம்தான்! நான் அந்த திசையில் பார்த்தேன். நல்ல நிறத்தில், உயரமாக , திடகாத்திரமான உருவத்துடன், முழுக்கை, முழுச் சிலுவார், ஷூ அணிந்த ஒருவர் படகைப் பார்த்து கையசைத்துக் கொண்டிருந்தார்! அவர்தான் என்னுடைய அப்பா!
          நான் படகிலிருந்து இறங்கியதும் நேராக அவரிடம் ஓடி நின்றேன். அவர் என்னை அப்படியே அலக்காக தூக்கிக்கொண்டார். என்னை மாறி மாறிப் பார்த்தார். எனக்கு கூச்சமாக இருந்தது. அவருடன் இன்னும் இருவர் வந்திருந்தனர். ஒருவர் மோசஸ் சித்தப்பா. இன்னொருவர் செல்லப்பெருமாள் மாமா.
          சாமான்களை ஏற்றிக்கொண்டு வாடகைக் காரில் புறப்பட்டோம்.
          சிங்கப்பூர் எனக்கு சிங்காரபுரியாகவே தோன்றியது. வீதிகளின் இருபுறமும் ஒழுங்காகக் கட்டப்பட்டுள்ள உயர்ந்த  கட்டிடங்களும், வீதியோரப்  பூங்காக்களும், குழிகளும் குப்பைகளும் இல்லாத வீதிகளும் புதுமையாக இருந்தன. கிராமத்தில் மண் வீதிகளையும் குடிசைகளையும் பார்த்துப் பழகிப்போன எனக்கு சிங்கப்பூர் சொர்க்கலோகமாகவே தோன்றியது.
          வாடகைக் காரை ஓட்டியவர் ஒரு சீனர். அவரிடம் அப்பா வேறு ஒரு மொழியில் பேசினார். அது மலாய் மொழியாம். அரை மணி நேர பிரயாணத்தில் ஒரு மலையின் அடிவாரத்தில் கார் நின்றது. அங்கு நிறைய வீடுகள் இருந்தன.அவை அனைத்தும் மண் வீடுகளோ அல்லது கல் வீடுகளோ இல்லை.  அவற்றுக்கு  மரப்  பலகைகளால் சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒருவிதமான ஓலைகளால் கூரைகள் போடப்பட்டிருந்தன. அதை “அத்தாப்பு ”  என்றனர். தரையில் சிமண்ட் போடப்பட்டிருந்தது. அறைக்குள் லினோலியம் விரிப்பு போடப்பட்டிருந்தது. அதில் பல வண்ணங்களில் கட்டங்கள் போடப்பட்டிருந்தன.
          படுக்கை அறையில் பெரிய கட்டில் இருந்தது. அறைகளில் சுழலும் மின்சார காற்றாடிகள் இருந்தன.ஜில்லென்று காற்று வீசியது.சமையல் அறையில் எனக்காக பிஸ்கட், மிட்டாய், பழங்களை அப்பா வாங்கி வைத்திருந்தார். சமையலுக்கான அனைத்து பொருட்களும் அங்கு இருந்தான. அம்மா உடன் சமையலில் இறங்கிவிட்டார். அந்த முதல் நாளன்றே நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! அவ்வளவு ஆனந்தம்!
          நாங்கள் இருந்த அடுத்த வீட்டில் சாலமோன் தாத்தாவின் குடும்பம் இருந்தது. அவர் உமறுப் புலவர் தமிழ்ப் பள்ளியின் ஆசிரியர்.அவர்களும் தேம்மூரைச் சேர்ந்தவர்கள்தான். அது அம்மாவுக்குத் துணையாக இருந்தது.அவருடைய மகன் சார்லஸ். அவன் என்னைவிட சிறுவனாக இருந்தான். ( அவன்தான் பத்து வருடங்களுக்குப்பின் என்னுடைய நாடகத்தில் டாக்டராக நடித்தவன். அதன்பின்பு அவன் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பாடி சிங்கப்பூர் ஏ. எம். ராஜா என்று பெயர் பெற்றவன் . தற்போது அவன் உயிருடன் இல்லை. )
          அந்தப் பகுதியில் இரவுச் சந்தைக்கு அப்பா கூட்டிச் சென்றார். அது அந்த வீதியின் இருபுறமும் நீண்டிருந்தது. அங்கு வித விதமான விளையாட்டுச் சாமான்கள்  விற்றன.எனக்கு நிறைய சட்டைகளும் சிலுவார்களும், ஷூவும் சாக்ஸ்களும் வாங்கினார்.
          நான் ஒரு சிவப்பு நிறத்தில் இயந்திரக் கார் வாங்கிக் கொண்டேன்.அதன் சக்கரங்களை பின்பக்கம் இழுத்து விட்டு ஓடவிட்டால் முன் பக்கமாக வேகமாக ஓடும். அதை வைத்துக்கொண்டு வெகு நாட்களாக விளையாடிய பின்புதான் அதைப் பிரித்து பார்த்து தனித் தனியாகக் கழற்றிப் போட்டேன்.
          அப்பா வேலை செய்த பாரதிதாசன் தமிழ்ப் பள்ளி அந்த ஹெண்டர்சன் மலையில் இருந்தது.  வீட்டின் பக்கம்தான். அதுவும் பலகைகளாலும் அத்தாப்பு கூரையாலும் கட்டப்பட்டிருந்தது. அப்பா என்னை பள்ளிக்குக் கூட்டிச் செல்வார். கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வீட்டுக்கு ஓடி வந்து விடுவேன்  அந்தப் பள்ளியில் காலை பத்து மணிக்கு பால் ரொட்டி வேன் வரும். எல்லா பிள்ளைகளுக்கும் பன் ரொட்டி, பால், பழம் தருவார்கள். சமூக நலத்துறையினர் அதை தினமும் வழங்கினர். சிங்கப்பூரை ஆங்கிலேயர் ஆட்சி  புரிந்த  காலம் அது.
          மோசஸ் சித்தப்பாவுக்கு மலை மீது சொந்தமான வீடு இருந்தது. அப்போது ஜெயபாலன், மேரி, மதுரம், அண்ணாதுரை ஆகியோர் சிறு பிள்ளைகளாக இருந்தனர். அந்த வீட்டில் மூன்று பகுதிகள் இருந்தன. ஒரு பகுதியில் சித்தப்பா குடும்பத்தினர் வசித்தனர். மற்ற இரண்டு பகுதிகளையும் வாடகைக்கு விட்டிருந்தார். அதில் ஒன்றில்தான் செல்லப்பெருமாள் மாமாவும், இரத்தினசாமி மாமாவும் குடியிருந்தனர். சித்தப்பாவுக்கு அரசாங்க மூன்றடுக்கு மாடி வீடு சொந்தமாகக் கிடைத்ததும் அங்கு குடி பெயர்ந்தார்கள். உடன் நாங்கள் அவர்கள் இருந்த வீட்டில் வாடகைக்கு  குடியேறினோம்.அதில் கூரை அத்தாப்பு கீற்றால் இல்லாமல் தகரத்தால் ஆனது. ஹென்டர்சன் மலையின் மிகவும் உயர்த்த பகுதி அதுதான். அங்கிருந்து பாதி தூரம் இறங்கினால் அப்பாவின் பள்ளி. மோசஸ் சித்தப்பா அப்பாவின் சின்னம்மா தேவகிருபையின் மகன்தான். அவர் என்னுடைய பாட்டி ஏசடியாளின் உடன் பிறந்த தங்கை.
          அந்த வீட்டின முன்புறம் பெரிய வாசல் இருந்தது. அதையடுத்து தார் வீதியும் அதற்கு அப்பால் நகரசபைக் குடியிருப்புகளும் இருந்தன.
          பக்கத்து வீடு அருகில் இருந்தாலும் அவர்களுடைய வாசல் மிகவும் பெரிதானது. இரண்டு வீடுகளுக்கும் நடுவில் மரம் செடிகள் வைத்து வேலி கட்டியிருந்தனர். அதுதான் லதாவின் வீடு.  அந்த சிறுமிக்கு என்  வயதுதான். நான் விளையாட லதா வீட்டுக்கு ஓடிவிடுவேன்.
          ( தொடுவானம்  தொடரும் )
Series Navigationகிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015வாழ்க்கை ஒரு வானவில் – 28எல்லா நதியிலும் பூக்கள்தூய்மையான பாரதம்ஆத்ம கீதங்கள் -4 சின்னஞ் சிறுவர் கூக்குரல் .. ! [கவிதை -2]” ஆலமரம் “ 1000 பக்க நாவல் விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் நாவல்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *