தொடுவானம் 55. உறவும் பிரிவும்

This entry is part 12 of 23 in the series 15 பெப்ருவரி 2015
 collegemadras christian college Campus - 1937

நாட்கள்தான் எவ்வளவு வேகமாக ஓடுகின்றன! இறுதித் தேர்வுகளும் நெருங்கின. பாடங்களில் கவனம் செலுத்தினேன். இடையிடையே சில சிறுகதைகளும் எழுதி தமிழ் நேசனுக்கு அனுப்பினேன். அவை மலேசியாவில் பிரசுரம் ஆனது. கல்லூரியின் இன்னொரு அரையாண்டு மலரில், ” மயிலோ மங்கையோ ” என்ற தலைப்பில்  இலக்கியச் சிறுகதை எழுதினேன். அது பேகன் ஒரு மயிலுக்கு சால்வைப் போர்த்தினான் எனும் புறநானூற்றுப் பாடலை வைத்து எழுதப்பட்டது. அதற்கும் நிறைய பாராட்டுகள் பெற்றேன்.

அன்றன்று பாடங்களை அறையில் அமர்ந்து ஆழ்ந்து படித்ததால் நிச்சயமாக சிறந்த வகையில் தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது.

தேர்வுகள் ஒரு வாரம் நடந்தன. அனைத்து கேள்விகளும் எனக்கு எளிமையாகவே இருந்தன. எனக்கு படிப்பதற்கா சொல்லித் தர வேண்டும்.அதுதான் எனக்கு கை வந்த கலையாயிற்றே!

உற்சாகமாக தேர்வுகள் எழுதி முடித்தாலும், மனதில் புது கவலை குடி கொண்டது. இனி விடுதியில் ஒரு வாரம்தான் தங்கலாம். அனைவரும் அறையை காலி செய்துவிட்டு ஊர் திரும்ப வேண்டும். ஒரு வருடம் நெருங்கிப் பழகிய நண்பர்களைப் பிரிந்து செல்ல வேண்டும். இனிமேல் மீண்டும் சந்திப்போமா என்ற கவலை எழுந்தது. சோகத்துடன்தான் விடை பெற்றாக வேண்டும். முகவரிகளை பரிமாறிக்கொண்டோம். அனால் எப்போது மீண்டும்  பார்க்கப் போகிறோம் என்பது பெரும் கேள்விக் குறியே!

நண்பர்கள் மட்டுமா? வெரோனிக்காவும்தான்! அவளையும்தான் பிரிந்து செல்ல வேண்டும். அவளுடன் ஓய்வு நாள் பள்ளிக்கு ஞாயிறுதோறும் சைக்கிளில் சென்றது, மாலையில் வீடு வரை துணையாக நடந்து சென்றது , பழகிய இனிமையான நேரங்கள் அனைத்துமே சோகத்தை உண்டு பண்ணின.இனிமேல் அவளை எப்படி வந்து பார்ப்பது. அப்படியே பார்க்க வந்தாலும் தாம்பரத்தில் எத்தனை நாட்கள் தங்குவது. பாவம் அவள். மனதில் என் மீது மாறாத அன்பை வளர்த்துக் கொண்டாள். எதிர்பார்த்தபடியே இப்போது பிரிவையும் நம்பிக்கையற்ற சூழலையும் எதிர்கொள்கிறாள்.  நிச்சயமாக அவள் நிறையவே அழுவாள்! தனிமையில் கதறிக்கூட அழலாம். அவளுக்கு நான் என்ன ஆறுதல் சொல்வது. அதை எப்படிச் சொல்வது?

நான் வெரோனிக்கவை காதலித்தேனா? அது எனக்கே தெரியவில்லை. ஆனால் இந்த ஒரு வருடமாக ஒரு நல்ல நெருங்கிய தோழியாக அவள் பழகினாள். அவளும் என்னிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியதில்லை. ஒருவேளை அது எனக்குத் தெரியும் என்று எண்ணிக்கொண்டாளா  என்பதும் எனக்குத் தெரியாது. இவ்வளவு நெருங்கிப் பழகிவிட்டு பிரியும் வேளையில் அது வெறும் நட்புதான் என்று சொன்னால் யாரும் நம்பமட்டார்கள்தான். அப்படியெனில் அவளைத் தொட்டு பேசவில்லையா என்ற கேள்வி எழத்தான் செய்யும். இல்லை என்று கூறவில்லை. தொட்டுதான் பேசிக்கொண்டோம். தோள்  மீது கை போட்டுக்கொண்டுதான் சைக்கிளில் சவாரி செய்தாள். கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்வோம். எங்களைப் பார்த்த கல்லூரி மாணவர்கள் அப்படித்தான் நினைத்தார்கள். காதலித்தால்தான் அப்படியெல்லாம் நெருக்கமாக பழக முடியுமா. காதலிக்காமலேயே அவளை நல்ல தோழியாக ஏற்றுக்கொண்டு பழகினால் அது தப்பா? வயதுக்கு வந்த பெண்ணிடம் கூச்சமில்லாமல் தொட்டுப் பேசினால் அது காதலாகி விடுமா? காதலிக்காமலேயே ஒரு பெண்ணிடம் நெருங்கிய நட்பு பாராட்ட முடியும் என்பதை நான் அவளிடம் கண்டேன். ஆம். வெரோனிக்கா எனக்கு நல்ல தோழியாக கடந்த ஒரு வருடம் இருந்துள்ளாள். ஒருவேளை இந்த நட்பு காதலாக மாறுமா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

அதற்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பதும் கிடைக்காததும் முக்கிய காரணமாகலாம். மருத்துவக் கல்லூரி கிடைத்துவிட்டால் எங்களுடைய நட்பு தடை.பட  வாய்ப்புகள் நிறைய உள்ளன. ஆனால் கிடைக்காவிடில் நான் நிச்சயமாக தமிழ் இலக்கியம் பயில  இங்கேயே சேர்ந்தபின்பு எங்களுடைய நட்பும் தங்கு தடையின்றி காதலாகவும் மாறலாம்.

அப்போது சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டேன்லி .மருத்துவக்  கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆகியவை தமிழக அரசின்கீழ் இயங்கின.பாண்டிச்சேரியில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியும்,வேலூரில் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியும் இயங்கின. அரசாங்க மருத்துவமனைகளில் சலுகை அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும் தமிழக மாணவர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும்.

எனக்கு சாதி மீது நம்பிக்கை கிடையாது. அதை நான் முட்டாள்தனமாகவே கருதினேன். அதோடு நான் சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளேன்.வெளி நாட்டு மாணவர்களுக்காக ஒதுக்கப்படும் ஒரு சில இடத்துக்குதான் நான் போட்டி போடவேண்டும்.

மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாகும். நிறைய இடைத் தரகர்கள் இருந்தனர். நன்கொடை என்ற பெயரில் நிறைய லஞ்சம் தரவேண்டும். ஓர் இடம் வாங்க பல லட்சங்கள் செலவாகும். பணம் உள்ளவர்களுக்கு இடம் நிச்சயம் என்ற நிலை.

இதை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்தேன்.அப்பா அவ்வளவு பணம் தருவாரா என்பதும் சந்தேகமே. இந்த இக்கட்டான சூழ்நிலையில் விடுதியில் தங்கியிருந்த அந்த கடைசி வாரத்தில்தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது!

என்னுடன் ராஜ்குமார் என்ற மாணவன் புகுமுக வகுப்பில் பயின்றான். அவன் கிறிஸ்துவன். அவ்வப்போது விடுதிக்கு வருவான். அவன் தாம்பரத்தில் வசிப்பதால் விடுதியில் தங்கவில்லை. அதனால் அவனுடன் எனக்கு அதிகம் நெருக்கமில்லை. அந்த கடைசி வாரத்தில் ஒரு நாள் விடுதிக்கு சில நண்பர்களை வழியனுப்ப வந்திருந்தான். அவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ” மேற்கொண்டு என்ன செய்யப்போகிறாய்? ” என்று அவனிடம் கேட்டேன்.

” நான் வேலூர் சி.எம்.சி. யில் சேர்ந்து மெடிக்கல் படிக்கப் போகிறேன். ” என்றான்.

” இப்போதுதானே பரீட்சையே எழுதியுள்ளோம். அதற்குள் எப்படி இவ்வளவு நிச்சயமாக சொல்கிறாய்? ” என்று சாதரணமாகத்தான் கேட்டேன்.

” எனக்கு நிச்சயம் அங்கு இடம் கிடைத்துவிடும். என்னுடைய அப்பாதான் டி.இ.எல்.சி. யின் செயலாளர். எங்களுடைய பிஷப் என்னை ரெக்கமெண்ட் செய்வார். எங்களுடைய சர்ச்சுக்கு அங்கு ஒரு சீட் உள்ளது. இந்த வருஷம் அது எனக்குதான். ” என்றான் பெருமிதத்துடன்.

டி. இ.எல்.சி. என்பது தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை. அதுதான் எங்களுக்கும் பூர்வீகச் சபை. நானும் அந்த சபையைச் சேர்ந்தவன்தான். தாம்பரத்தில் அந்த சபையின் ஆலயம் இருந்தது. ஆனால் நான் அங்கு ஓரிரு முறைதான் சென்றிருப்பேன். நான்தான் அப்போது கடவுள் மீது பற்று இல்லாதவனாக இருந்தேனே! ஓய்வு நாள் பள்ளிக்கு வெரோனிக்காவுடன் சைக்கிளில் செல்லவேண்டும் என்ற ஆர்வத்திலும், பிள்ளைகளுக்கு வேதாகமக் கதைகள் சொல்லவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தினாலும் அன்றாடம் வேதாகமத்தில் ஒரு அதிகாரம் தொடர்ந்து படித்து வருகிறேன். நான் இன்னும் முழு கிறிஸ்துவனாக மாறவில்லை. பெரியாரின் நாத்திக கொள்கைகளின் தாக்கமும், திராவிடர் இயக்கத்தின் மீது கொண்டிருந்த தீராத பற்றுதலும் அப்படி! அனால் வேதாகமத்தைப் படிக்கும்போது என்னையுமறியாமல் அதன்மீது ஒருவித ஈர்ப்பு உண்டானது.ஆதாம் ஏவாளில் தோன்றிய மனித வரலாறு மிகவும் அழகாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. இனி விடுதியை விட்டு ஊர் திரும்பினாலும் தொடர்ந்து விடாமல் படிக்கத்தான் போகிறேன். வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளவைகள் கட்டுக் கதைகள் போன்று இல்லாமல் சரித்திரப் பதிவு போன்று ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்வது நம்பும்படியாகத்தான் உள்ளது. பழைய ஏற்பாடு ஒரு நீண்ட வரலாற்றுத் தொடர் போன்றே எனக்குத் தோன்றியது. அதை எவ்வாறு அவ்வளவு நுணுக்கமாக எழுதி பல நூற்றாண்டுகளாக பாதுகாத்து வந்தனர் என்பதை எண்ணியும் வியந்துபோனேன். ஒரு வகையில் அது யூத மக்களின் வரலாறுதான். அவர்களை கடவுள் எப்படி வழி நடத்திச் செல்கிறார் என்பதை அறிய முடிகிறது.அனால் அந்த மக்கள் திரும்பத் திரும்ப கடவுளை மறந்தவர்களாக வழி தவறிச்  செல்கின்றனர். அப்போது கடவுள் அவர்களைத் தண்டிப்பதோடு, அவர்களை நல்வழிப்படுத்த தீர்க்கதரிசிகளை அனுப்புகிறார். அவர்களும் போதனைகளாலும் எச்சரிக்கைகளாளும் அம் மக்களை நல்வழிப் படுத்துகின்றனர். அவர்களில் பல தீர்க்கதரிசிகள் இயேசுவின் வருகையைக் குறித்து தீர்க்கதரிசனம் கூறுகின்றனர். அவர்கள் கூறியபடியே பின்னாளில் இயேசு எருசலேமில் பெத்லேகம் எனும் சிற்றூரில் ஒரு யூதக் குழந்தையாகவே பிறக்கிறார். அவர்தான் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்ற வந்த தேவனின்  மைந்தன் என்றும் மனுக்குலத்தை பாவத்திலிருந்து இரட்சிக்க வந்த உலகின் இரட்சகர் என்றும்  கிறிஸ்துவர்கள் நம்பி வழிபடுகின்றனர்.
ஆனால் அவர் தன்னை தேவனின் குமாரன் என்று கூறிக்கொண்டதால் அது தேவ நிந்தனை என்று தீர்ப்பளித்த யூதர்களின் மத குருக்கள், ரோமர்களின் ஆணையுடன் அவரை சிலுவையில் அறைகின்றனர். அந்த யூதர்கள் இன்றுவரை இயேசுவை கிறிஸ்துவர்களைப்போல் தேவனின் குமாரனாக ஏற்றுக்கொள்ளவில்லை.

சி.எம்.சி. என்பது கிறிஸ்துவ மெடிக்கல் காலேஜ். அது வேலூரில் உள்ளது. உலகப் புகழ் பெற்றது. அங்கு படித்து வெளிவந்த மருத்துவர்கள் உலகின் பல நாடுகளில் பணியாற்றுகின்றனர்.

இந்தியாவிலுள்ள எல்லா பெரிய திருச்சபைகளும் ஒன்றிணைந்து நிதியுதவி வழங்கி அக் கல்லூரியை நடத்துகின்றன. அந்த திருச்சபைகளும் மிஷன் மருத்துவமனைகள் நடத்துகின்றன. அவை தேர்ந்தெடுக்கும் மாணவ மாணவிகளை வேலூருக்கு பரிந்துரை செய்கின்றன. அவர்களில் திறமையானவர்கள்தான் மருத்துவம் பயில தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மருத்துவப் படிப்பு முடிந்த பின்பு அவர்களை அனுப்பிய திருச்சபை மருத்துவமனைகளில் பணியாற்றுவார்கள்.

இந்த வருடம் எங்கள் திருச்சபையின் சார்பாக ராஜ்குமார் அனுப்பப்படுவான் என்பதைத் தெரிந்துகொண்டேன். அவன் ஒழுங்காக ஆலயம் செல்லும் கிறிஸ்த்துவன். நானோ ஆலயம் செல்லாத கிறிஸ்துவன். இருந்தாலும் என்ன? முயன்று பார்ப்பதில் தவறில்லையே? எனக்கு அரசாங்க மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பது சிரமம். வெளிநாட்டு மாணவனாகவே கருதப்படுவேன். நானும் வேலூருக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று முடிவு செய்தேன். நானும் இங்குதானே தெம்மூரில் பிறந்தவன். அதோடு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையைச் சேர்ந்தவன்தான். அவர்கள் வேண்டுமானால் என்னையும் பரிந்துரை செய்யலாமே. ஒரு சபை எத்தனை மாணவர்களை வேண்டுமானாலும் பரிந்துரை செய்யலாம். அவர்களில் சிறந்த ஒருவனைத்தான் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அப்படி செய்தால் வேலூரில் எங்களில் சிறந்த ஒருவனை அவர்கள் தேர்ந்தெடுக்கலாமே.

உடனடியாக வேலூருக்கு மனு பாரம் கேட்டு கடிதம் எழுதினேன். அதில் தெம்மூர் முகவரி தந்திருந்தேன்.

அந்த ஒரு வாரமும் வேகமாக  ஓடிவிட்டது. நான் இலக்கியம் படிக்க வந்தாலொழிய வெரோனிக்காவைப் பார்க்க முடியாது. பெரும் இக்கட்டான சூழல்தான். நண்பர்களை விட்டுப் பிரியும் கவலையைவிட அவளைப் பற்றிய கவலையே அதிகமானது.

யாரையும் அதிகம் விரும்பக் கூடாது போலும். விரும்பிவிட்டால் பிரிவின் சோகம்  அதிகமாகிறது. எந்தவொரு உறவிலும் நிச்சயமாக ஒரு நாள் பிரிவு வரவே செய்கிறது. அதிலும் பெண்ணின் மீது கொள்ளும் காதல் உறவு பெரும் பயங்கமானது. அது மனதை உருகச் செய்துவிடுகிறது.

முன்பு லதாவைப் பிரிந்தேன். இப்போது வெரோனிக்காவைப் பிரிகிறேன். அது பத்தாண்டுகள் காதல்.இது ஓராண்டு உறவு. அவள் காதலி. இவள் காதலி போன்ற தோழி!

அவள் அழுத கண்ணீரோடு விடை தந்தாள். முகவரி தந்து கடிதம் எழுதச் சொன்னாள். சென்னை வந்தால் கட்டாயம் வந்து அவளைப் பார்க்கச் சொன்னாள். மருத்துவம் கிடைக்காவிட்டால் திரும்பி வந்து தமிழ் இலக்கியம் பயிலச் சொன்னாள். நான் வேலூருக்கு கடிதம் அனுப்பியுள்ளதைக் கூறினேன். அதற்கு நுழைவுத் தேர்வு எழுத சென்னை வருவேன் என்றேன். அப்போது அவளைப் பார்க்க வருவேன் என்றேன். அவள் ஓரளவு சமாதானம் அனாள்.

” நான் எங்கிருந்தாலும் உன்னை மறக்கமாட்டேன். ” என்று அவளுடைய கரம் பற்றிக் கூறிவிட்டு விடை பெற்றேன்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationநேரம்மணமுறிவைச் சந்திக்கும் ஒரு பெண்ணின் அவஸ்தை -ஆத்மதாகம்- இடைமருதூர் கி.மஞ்சுளா நாவல்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *