முனைவர் மு.பழனியப்பன்
இணைப்பேராசிரியர்
அரசு தலை மற்றும் அறிவியல் கல்லூரி
தேவகோட்டை
பதிற்றுப் பத்து, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை போன்ற சங்க இலக்கியப் பனுவல்களில் பாடினி, விறலி பாத்திரம் மிக முக்கியமான பாத்திரமாக இடம்பெற்றிருக்கும். இப்பாத்திரம் கேசம் முதல் பாதம் வரை வருணனை செய்யப்பட்டுள்ள திறம் படிப்பவர் மனதில் விறலி பற்றிய அழகான சித்திரத்தை படியச்செய்யும். இவ்வருணனை பிற்காலத்தில் ஒரு சிற்றிலக்கிய வகையாகத் தோற்றம் பெற்றது. சங்க இலக்கியத்தின் அடிப்படையில் தமிழ் இலக்கிய வகைமையில் தோற்றம் பெற்ற சிற்றிலக்கியமாக கேசாதிபாதம், பாதாதிகேசம் ஆகியற்றைக் குறிப்பிடலாம்..
கேசாதி பாத வருணனை
பொருநர் ஆற்றுப்படையில் அமைந்துள்ள
‘‘அறல் போல் கூந்தல், பிறை போல் திரு நுதல்,
கொலை வில் புருவத்து, கொழுங் கடை மழைக் கண்,
இலவு இதழ் புரையும் இன் மொழித் துவர் வாய்,
பல உறு முத்தின் பழி தீர் வெண் பல்,
மயிர் குறை கருவி மாண் கடை அன்ன
பூங் குழை ஊசற் பொறை சால் காதின்,
நாண் அடச் சாய்ந்த நலம் கிளர் எருத்தின்,
ஆடு அமைப் பணைத் தோள், அரி மயிர் முன்கை,
நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல்,
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர்,
அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து,
ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை,
நீர்ப் பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ்,
உண்டு என உணரா உயவும் நடுவின்,
வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல்,
இரும் பிடித் தடக் கையின் செறிந்து திரள் குறங்கின்,
பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப
வருந்து நாய் நாவின், பெருந் தகு சீறடி,
அரக்கு உருக்கு அன்ன செந் நிலன் ஒதுங்கலின்,
பரல் பகை உழந்த நோயொடு சிவணி,
மரல் பழுத்தன்ன மறுகு நீர் மொக்குள்
நன் பகல் அந்தி நடை இடை விலங்கலின்,
பெடை மயில் உருவின், பெருந் தகு பாடினி’’( பொருநர் ஆற்றுப்படை, 25-47) என்று முடியும் பாடினினியின் வருணனையும், சிறுபாணாற்றுப்படையில்
‘‘ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு, அருளி,
நெய் கனிந்து இருளிய கதுப்பின்; கதுப்பு என,
மணிவயின் கலாபம், பரப்பி, பல உடன் 15
மயில், மயிற் குளிக்கும் சாயல்; சாஅய்
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ,
வயங்கு இழை உலறிய அடியின்; அடி தொடர்ந்து,
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடித் தடக் கையின்,
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின், குறங்கு என, 20
மால் வரை ஒழுகிய வாழை: வாழைப்
பூ எனப் பொலிந்த ஓதி; ஓதி,
நளிச் சினை வேங்கை நாள்மலர் நச்சி,
களிச் சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து,
யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளி,
பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை; முலை என,
வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின்
இன் சேறு இகுதரும் எயிற்றின்; எயிறு என,
குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின்; மெல் இயல்;
மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர்
நடை மெலிந்து அசைஇய நல் மென் சீறடி
கல்லா இளையர் மெல்லத் தைவர,(சிறுபாணாற்றுப்படை,13-32)
என்ற விறலியின் வருணனையும் கேசாதி பாத, பாதாதி கேச – சிற்றிலக்கிய வகையின் தோற்றப்புள்ளிகள் ஆகும்.
‘இருள்வணர் ஒளிவளர் புரிஅவிழ் ஐம்பால் ஏந்துகோட்டு அல்குல் முகிழ்நகை, மடவரல் கூந்தல் விறலியர் ’’ (பதிற்றுப்பத்து, 18) என்ற பாடலில் இடம்பெற்றுள்ள விறலி வருணனையும் இச்சிற்றிலக்கியத் தோற்றத்திற்கு வழி வகுத்தனவாகும்.
கேசாதி பாதம், பாதாதிகேசம் –இலக்கண வளர்ச்சி
பாட்டியல் நூல்கள் கேசாதி பாதம், பாதாதி கேசம் ஆகிய சிற்றிலக்கிய வகைகளைப் பெரிதும் வளர்த்தெடுத்துள்ளன.
‘‘பாதாதிகேசம், கேசாதிபாதம், அங்கமாலை
கடிதல் இல்லாக் கலிவெண்பா பகரும் அவயவங்கள்
முடிவது கேசம் அக்கேசம் முதலடி ஈறும் வந்தால்
படி திகழ் பாதாதி கேசமும் கேசாதி பாதமும் ஆம்
மடிதல் இல் வெண்பா விருத்தம் பல அங்கமாலை என்னே’[1]’
என்று நவநீதப்பாட்டியல் இரு சிற்றிலக்கியங்களுக்கும் இலக்கணத்தை வகுக்கின்றது.
அடிமுதல் முடிஅளவு ஆக இன்சொல்
படர்வுறு கலிவெண் பாவால் கூறல்
பாதாதி கேசம் கேசாதி பாதம்
ஓதின்அப் பெயரான் உரைக்கப் படுமே.[2]
என்று இலக்கணவிளக்கம் மேற்கண்ட சிற்றிலக்கியங்களுக்கு விளக்கம் அ்ளிக்கின்றது. வெண்பாப் பாட்டியல், சிதம்பரப்பாட்டியல், பிரபந்ததீபிகை போன்ற பல இலக்கண நூல்களில் இச்சிற்றிலக்கியங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. நவநீதப்பாட்டியல் எவ்வெவ் உறுப்புகளைப் பற்றிப் பாடவேண்டும் என்ற குறிப்பினைத் தருகின்றது.
‘‘‘அகங்கால் உகிர்விரல் மீக்கால்பரடு அங்கணை முழந்தாள்
மிகுங்கால் துடைஇடை அல்குல் கொப்பூழ்வயின் வெம்முலையாய்
நகம்சார்விரல் அங்கைமுன்கை தோள்கண்டம் முகம்நகைவாய்
தரும்காது இதழ்மூக்கு கண்புருவம் நெற்றி தாழ்குழலே.’[3]
என்று பாதாதிகேசத்திற்கு உரிய பகுதிகளை எடுத்துரைக்கின்றது. இதேநிலையில் பன்னிருபாட்டியலும் அங்கங்களை வருணிக்கும் படிமுறையை எடுத்துக்காட்டுகின்றது.(நூற்பா.332). இவ்வளவில் இலக்கணநூல்களால் சங்க இலக்கியத்தில் காட்டப்பெற்ற கேசாதிபாதம் வளர்ந்துவந்துள்ளது. இவ்விலக்கண நூல்கள் பாததிகேச வருணனையைத் தெய்வத்திற்கு உரியது , கேசாதி பாத வருணனையை மானிடர்க்கு உரியது என்றும் குறிக்கின்றன.
சிற்றிலக்கிய வகை வளர்ச்சி
பிற்காலத்தில் சங்க இலக்கியங்கள் காட்டிய நெறியிலும் பிற்கால இலக்கண நூல்கள் காட்டிய நிலையிலும் கேசாதிபாதம், பாதாதி கேசம் சிற்றிலக்கியமாக வளரத்தொடங்கியது.
திருவாலியமுதனார்
திருவாலியமுதனார் பாடிய ஒன்பதாந்திருமுறையின் முதல்பதிகம், அதாவது மையல் மாதொரு கூறன் என்ற தொடக்கத்தை உடைய பதிகம் பாதாதி கேச பதிகம் எனப்படுகின்றது. இதில் உள்ள பதினோரு பாடல்களில் பத்துப்பாடல்கள் இறைவனி உருவை பாதாதிகேசமாக வருணித்துப் பாடப்பெற்றுள்ளன. பாதம், கழல், தொடை, கச்சு, உந்தி, உதரபந்தனம், மார்பு, காதுகள், முகம், நெற்றி, விழிகள், சென்னி ஆகியன இப்பாடலுள் வருணனை செய்யப்பெற்றுள்ளன.
திருவகுப்பு
அருணகிரிநாதரின் திருப்புகழ் தொகுப்பில் உள்ள திருவகுப்பு என்ற பகுதியில் அமைந்திருக்கும் கொலுவகுப்பு என்ற கிளைப்பிரிவின் நிறைநிலை அடிகள் கேசாதி பாத வருணனைப் பகுதியாக அமைத்துப் பாடப்பெற்றுள்ளன.
அறுகதி ரவரென அறுமணி மவுலிகள்
அடர்ந்து வெயிலே படர்ந்த தொருபால்
அறுமதி எனஅறு திருமுக சததள
அலர்ந்த மலரே மலர்ந்த தொருபால்
மறுவறு கடலென மருவுப னிருவிழி
வழிந்த அருளே பொழிந்த தொருபால்
வனைதரு மகரமு மணியணி பணிகளும்
வயங்கு குழையே தயங்க ஒருபால்
இறுகுபொன் மலையொடும் இடறுப னிருபுயம்
இசைந்து நெடுவான் அசைந்த தொருபால்
எழிலியை அனையப னிருகையில் அயில்முதல்
இலங்கு படையே துலங்க ஒருபால்
உறுவரை யருவியை நிகர்தரும் உரமிசை
யுடன்கொள் புரிநூல் கிடந்த தொருபால் .
உருமென இகலிமுன் எதிர்பொரும் அவுணருள்
உடைந்த உடைவாள் சிறந்த தொருபால்
அநவர தமுமறை முறையிடு பரிபுரம்
அலங்கும் இருதாள் குலுங்க ஒருபால் ’’
என்ற இந்தப் பகுதி முருகனின் கேசாதி பாத அழகைப் பாடுகின்றது. திருமுடிகள், ஆறு முகங்கள், கண்களின் திருவருள், மகரக்குண்டலம், தோள், திருக்கரம், உறைவாள், சிலம்பு, பாதங்கள் என்று கேசாதி பாத வருணனை இங்கு அருணகிரிநாதரால் பாடப்பெற்றுள்ளது.
இவை பாதாதி கேச சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு உதவிய இலக்கியங்கள் ஆகும்.
சிற்றிலக்கியங்கள்
தரும சம்வர்த்தினி அம்மன் பாதாதி கேச அந்தாதி மாலை என்ற சிற்றிலக்கியத்தை பொன்னுச்சாமிச் செட்டியார் என்பவர் இயற்றியுள்ளார். இதுபோன்ற பல சிற்றிலக்கிய படைப்புகள் தோன்ற சங்க இலக்கியங்கள் காரணமாக அமைந்துள்ளன.
பண்பாட்டு நோக்கும் பாதாதி கேச, கேசாதி பாதச் சிற்றிலக்கியங்கள்
உலகப் பண்பாடுகளில் தமிழ்ப்பண்பாடு தனித்த இடம்பெறுவதாகும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற நடைமுறையில் இல்லறத்தை அமைத்து நல்லறமாகப் பிறன் பழிப்பின்றி வாழும் சமுதாயம் தமிழ்ச்சமுதாயம் ஆகும். ‘பண்பாடு என்பது மக்கள் கற்றுணர்ந்த நடத்தை முறையின் தொகுப்பு’’[4] என்கிறார் பக்தவத்சலபாரதி. பண்பாடும் அதனை வெளிப்படுத்தும் இலக்கியம், இலக்கியத்தைப் படைக்கும் படைப்பாளன், அப்படைப்பாளன் பயன்படுத்தும் மொழி ஆகிய எல்லாவற்றிலும் பண்பாடு ஊடாடுகின்றது. பண்பாட என்பது அறிதிறன் அல்லது அறிதல் சார்ந்தது என்பது தெளிவு. இப்பண்பாட்டு அறிதிறன் பற்றிய பின்வரும் ஆய்வாளர் கருத்து இத்தெளிவிற்கு மேலும் உறுதி சேர்க்கும்.
‘‘ பண்பாட்டின் ஒவ்வொரு கூறும் மக்களின் அறிதிறனால் விளைந்ததாகும். எனவே பண்பாட்டுக் கூறுகள் மக்ளின் அறிதிறன் கோலத்தை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளன. எடுத்துக்காட்டாக மொழியானது மக்களின் அறிதிறனை வெளிப்படுத்தும் ஒரு பண்பாட்டுக் கூறாகும். மக்கள் கையாளும் மொழி (சொற்கள்) அப்பண்பாட்டினரின் எண்ணங்களையும் சிந்தனைகளையும் வடிவமைக்கின்றது. கண் முன்னுள்ள இயற்கையை அலலது ஒரு நிகழ்வை விவரிப்பதில் ஒவ்வொரு மொழியினரும் வேறுபடுகின்றனர். இவ்வாறு வேறுபாட்டிற்கு அம்மொழியின் இலக்கணமும் சொற்கோவையும் காரணமாகின்றன. இதனடிப்படையிலேயே மக்களின் அறிதிறனும் வேறுபடுகின்றது’’[5] என்ற இக்கருத்து மொழி, படைப்பு, படைப்பாளன் ஆகிய நிலைகளில் பண்பாடு கலந்திருப்பதைக் காட்டுகின்றது.
இவ்வடிப்படையில் பண்பாட்டு நோக்கில் கேசாதி பாத, பாதாதி கேச சிற்றிலக்கிய வளர்ச்சியை ஆராய்கின்றபோது இச்சிற்றிலக்கியத்தின் ஒவ்வொரு வளர்ச்சிக் காலத்திலும் பண்பாட்டு ஊடாடியிருப்பதை உணரமுடிகின்றது.
சங்ககாலத்தில் விறலி, பாடினி ஆகியோர் கலை மரபில் வந்தவர்கள். அவர்களின் கலைக்கு அவர்களின் உடலழகு மிக இன்றியமையாதது. பாணன் பாட பாடினி ஆடினால் பொற்பூ கிடைக்கும். இந்நிலையில் தன் உடல் அழகைப் பேணுபவளாகப் பாடினி, விறலி இருந்திருக்கிறாள். சங்க இலக்கியப் படைப்பாளர்களும் சிறுபாண் ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை ஆகியவற்றைப் பாடியவர்களும் ஏறக்குறைய விறலியின் நிலையினரே. அவர்களும் பாடினால் பரிசு பெறுவர். அவர்கள் பாடலில் கவர்ச்சிதன்மை ஏற்படுத்த விறலியின் வருணனையை முகப்பில் அமைக்கவேண்டியவர்களானார்கள். அவளின் மார்பகத்தை இடைப்பகுதியைச் சிறப்பித்துப் பாட அவர்கள் முன்வந்தனர். சங்கப் பண்பாடு அதற்கு இடம் தந்தது.
தொடர்ந்து வந்த இலக்கண நூல்களும் பெண்ணின் மார்பிற்கும், இடைப்பகுதிக்கும் இடம் தந்தன. இந்நிலையில் பெருத்த மாற்றம் பக்தி இலக்கியப் பனுவல்களில் காணப்படுகிறது. கேசாதி பாதமாகப் பெண்களைப் பாடிய நடைமுறை ஆண் கடவுளர்களைப் பாடும் முறையாக எதிர் நிலை மாற்றம் பெற்றது. பெண்ணின்பம் சிற்றின்பம், அவளின் அழகு. அவளின் உறவு பேரின்பத்திற்கான தடை என்ற சமய பரப்புதல் இலக்கியப் படைப்புகளுக்குள் வினைபுரிந்து, ஆண்களுக்கு ஆன அழகைப் பாடுவதாக மாறியது. இத்தலைகீழ் மாற்றமே பாதாதி கேசம் என்ற தலைகீழ் வருணனை உருவாகக் காரணமாகியது. ஆண்டவனின் பாதங்கள் பாவம் போக்கவன என்பதால் அவற்றிற்கு முதலிடம் தந்து இச்சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு அடிகோலின பக்தி இலக்கியங்கள்.
ஆணழகைப் பாடுகையில் வெளிப்படத் தெரியும் உறுப்புகளே வருணிக்கப்பெற்றுள்ளன. வெளிப்படத் தெரியாத உறுப்புகளைப் பற்றியே பேச்சே இல்லை.
இதனைத்தொடர்ந்து இச்சிற்றிலக்கியம் நூறு பாடல்கள் கொண்ட இலக்கியமாக ஆகும்போது தெய்வத்தைப்பாடுவது என்ற நிலையில் ஆண் தெய்வங்களையும் பெண் தெய்வங்களையும் பாதாதி கேசமாகப் பாடும் நடைமுறை ஏற்பட்டது. கேசாதிபாத வருணனை அருகத் தொடங்கி அச்சிற்றிலக்கியத்திற்கு வாய்ப்பே அற்றுப் போய்விட்டது.
தொகுப்புரை
சங்க இலக்கியங்களில் இடம்பெறும் விறலி, பாடினி போன்றோரின் கேசாதி பாத வருணனை தனித்தச் சிற்றிலக்கிய வகையாகப் பிற்காலத்தில் எழ ஆரம்பித்தது.
கலிவெண்பாவில் நூறு பாடல்கள் என்ற அளவில் பாடப்பெறும் இச்சிற்றிலக்கிய நடைமுறை, தெய்வங்களாயின் பாதாதி கேசமாகவும், மனிதர்களாயின் கேசாதி பாதமாகவும் வருணிக்கும் நிலையில் இருவகைப்பட்டதாக இலக்கண நூல்களால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.
பாட்டியல் நூல்கள் பாதாதிகேச, கேசாதிபாத சிற்றிலக்கியங்களுக்கு இலக்கண வரையறை கற்பித்துள்ளன. நவநீதப்பாட்டியல், சிதம்பரப்பாட்டியல், பன்னிருபாட்டியல்.. இலக்கண விளக்கம் ஆகிய இலக்கண நூல்கள் பாதாதி கேச, கேசாதி பாதச் சிற்றிலக்கியங்கள் தோன்ற வழி வகுத்தன.
திருவாலி அமுதனார், அருணகிரிநாதர் ஆகியோர் பாடிய கோயில் திருப்பதிகம், திருவகுப்பு போன்ற இலக்கியங்கள் பாதாதி கேச கேசாதிபாதச் சிற்றிலக்கியங்கள் வளர வழி வகை செய்தன.
பத்தொன்பதாம் நூற்றாண்டளவில் சிற்றிலக்கியம் பெரிதும் வளர்ச்சியடைந்த போது பல புலவர்கள் பாதாதி கேச, கேசாதிபாதச் சிற்றிலக்கியங்களைப் படைக்க முன்வந்தனர்.
பண்பாட்டு நோக்கில் காணுகையில் சங்க காலத்தில் விறலி, பாடினி ஆகியோரைப் பாடுகையில் அவள் அழகின் வடிவம் என்பதால் அவளை வெளிப்பட பாடும் நிலை இருந்தது. புலவர்களும் ஏறக்குறைய கலைஞர்கள் என்பதால் அவர்களும் பொன் பொருள் பெறுவதில் ஈடுபாடு காட்டுவதால், தங்கள் பாடல்களில் பெண்கலைஞர்களை வருணித்துப்பாடும் போக்கினைக் கையாண்டுள்ளார்.
இலக்கண ஆசியர்கள் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் வகுத்தலின் கேசாதி பாத வருணனையை மனிதருக்கு ஆக்கினர். இலக்கண நூல்களும் பெண்களின் உருவ அழகைப்பாடவே கோசதி பாத சிற்றிலக்கியத்தை வடிவமைத்தனர்.
பக்தி இலக்கியக் காலத்தில் காமத்திற்கும் கடவுளுக்குமான தூரம் அதிகரித்தது. இறைவனைக் காதலனாகக் காணும் போக்கு, காதலியாகக் காணும் போக்கு உருவானது. இதன் காரணமாக இறைவனை அவன் உருவத்தை வருணிப்பது என்பதான நடைமுறையாக தலைகீழ் மாற்றத்தை இச்சிற்றிலக்கியம் கண்டு பாதாதிகேசமாக ஆகியது. பெண்களைப் பாடும் முறை ஆண்களுக்கானது. தலையிலிருந்துப் பாடும்முறை காலிலிருந்துப் பாடும் முறையாக மாற்றம் பெற்றது.
சிற்றிலக்கிய வளரச்சிக் காலத்தில் ஆண், பெண் தெய்வங்களைப் பாடும் இலக்கியமாக இது நிறைநிலைபெற்றது. என்றாலும் உருவ நலன் என்பது தெய்வீக அழகாக மாறியது என்பது கருதத்தக்கது.
[1] நவநீதப்பாட்டியல்,நூற்பா.எண்.46
[2] இலக்கண விளக்கம்,நூற்பா எண்.871
[3] நவநீதப்பாட்டியல், நூற்பா எண்.43
[4] பக்தவத்சல பாரதி, பாண்பாட்டு மானிடவியல், ப.228
[5] மேலது, மேற்கோள்.ப.229
- பண்பாட்டு நோக்கில் பாதாதி கேசம், கேசாதி பாதம் ஆகிய சிற்றிலக்கியங்களின் வளர்ச்சி
- பராமரிப்பின்றி காணப்படும் மன்னர் கால தேர்கள்-அழியும் தமிழனின் சிற்பக்கலை
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் முதன்முறை மூன்று சூரியன்கள் தோன்றும் அற்புதக் காட்சிப் படமெடுப்பு
- அனேகன் – திரைப்பட விமர்சனம்
- உதிராதபூக்கள் – அத்தியாயம் 2
- காதலர் நாள்தன்னை வாழ்த்துவோம் வா
- ஆம் ஆத்மி கெஜ்ரிவால்
- என்னை அறிந்தால் – திரைப்பட விமர்சனம்
- ஆத்ம கீதங்கள் –16 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. ! என் ஆன்மாவின் முறிவு
- Caught in the crossfire – Publication
- நேரம்
- தொடுவானம் 55. உறவும் பிரிவும்
- மணமுறிவைச் சந்திக்கும் ஒரு பெண்ணின் அவஸ்தை -ஆத்மதாகம்- இடைமருதூர் கி.மஞ்சுளா நாவல்
- வைரமணிக் கதைகள் – 3 அப்போது கூட இந்தக் கதவு மூடியிருக்கலாம்…
- மிதிலாவிலாஸ்-2
- உங்களின் ஒருநாள்….
- வலி மிகுந்த ஓர் இரவு
- இலக்கிய வட்ட உரைகள்: 14 நாற்றுகள் தொட்டிச் செடிகள் குரோட்டன்கள்
- மரபு மரணம் மரபணு மாற்றம் – இரண்டாம் மற்றும் இறுதி பாகம்
- சமூக வரைபடம்
- “ கவிதைத் திருவிழா “-
- ஓர் எழுத்தாளனின் வாசலில்… “யதார்த்தமாய்….பதார்த்தமாய்…”
- இலக்கியப்பார்வையில் திருநங்கைள்