வைரமணிக் கதைகள் – 3 அப்போது கூட இந்தக் கதவு மூடியிருக்கலாம்…

This entry is part 14 of 23 in the series 15 பெப்ருவரி 2015

 

கதவு திறக்கவில்லை. நவநீதன் ஐந்து நிமிஷமாகத் தட்டிக் கொண்டிருந்தான். ஒழிவின்றியல்ல; விட்டுவிட்டு. பக்கத்தில் தான் ரயில்வே ஸ்டேஷன். ஒரு மின்சார ரயில் அவன் தட்டத் தொடங்கியதிலிருந்து இதற்குள் வந்து நின்று, போய்விட்டது.

நவநீதன் கதவைத் தட்டிக் கொண்டு நிற்பதை ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் ஓரிருவர் திரும்பிக் கவனித்தனர். பிளாட்பாரக் கோடிக்கும் பத்தடி தாழ்விலிருந்த அந்த வீதிக்கும் மத்தியில் இரும்புக் கம்பி வேலி நின்றது. அந்தப் பக்கம் பிளாட்பார விளக்கு. இந்தப் பக்கம் தெரு விளக்கு.

அவன் வீட்டுக் கதவைத் தட்டுவதைத் தெருவிலும் திண்ணையிலும் நின்ற நிலையில் நாலைந்து பேர் வேடிக்கை பார்த்தனர். வேடிக்கைதானே, பார்த்துக் கொள்ளட்டும் என்று தளராமல் தட்டினான் நவநீதன்.

சைக்கிளில் போன எவனோ ஒருவன் கிண்டலாக மணியடித்து விட்டுப் போனான், கொஞ்ச தூரம் தள்ளி அவன் விசிலடித்ததாகக் கூடத் தோன்றியது.

சரக் சரக்கென்று செருப்பைத் தேய்த்துக் கொண்டு நடந்து வந்த ஒரு பெரியவர் நின்றார்.“ரொம்ப நேரமாத் தட்றீங்க போல! தூங்கிட்டு இருப்பாங்க” என்று சொல்லிவிட்டு மீண்டும் நடக்கத் தொடங்கினார்.

அது தூங்கும் நேரம்தான். இரவு பத்தை நெருங்கிற்று. ஆனால் நிச்சயம் பிரேமா தூங்கியிருக்க மாட்டாள்.

நவநீதன் சொல்லிக் கொள்ள வருவான் என்று அவளுக்குத் தெரியும். நவநீதனுக்கும் அது தெரியும் என்று அவளுக்குத் தெரியும். பிரேமா பிடிவாதமாக மௌனம் சாதிக்கிறாள், கதவைத் திறக்க விரும்பவில்லை என்று காட்டுவதற்காக.

திறக்க விரும்பாத கதவைத் தட்டிக் கொண்டு அவனைச் சுற்றிய ஒரு வேடிக்கை பார்க்கும் வட்டத்தில் நிற்பதில் ஒரு செல்லாக்காசான சுயமதிப்பு வீழ்ச்சி நவநீதனுக்குள் லேசாக எழுந்தது.

திரும்பி டலாமா என்று நினைத்தான்.

ஆனால்-

தண்டையார்ப் பேட்டையில் ஒரு பஸ். அப்புறம் பீச் ஸ்டேஷனிலிருந்து எலெக்ட்ரிக் ட்ரெயின் என்று ஊரெல்லாம் அலைந்துவிட்டு ஒரு மனிதப் பார்சல் போல் உள்ளே வந்து விழும்போது முறுக்கியிருக்கும் வெறுப்பை, சுமந்து வருகின்ற கசப்பை, விரக்தியை அந்தக் கதவு ஏற்று அவனை மீண்டும் மனிதனாக்கி வெளியே அனுப்பியிருக்கிறது. இப்போது திரும்பி விடுவது நியாயமல்ல.

‘பிரேமா’ என்று நவநீதன் அழைத்தான்.

உள்ளே தூரத்தில் எங்கோ ‘லொக்’ கென்று ஓர் ஒற்றை இருமல்; புரைக்கு ஏறி விட்டாற் போல்!

அவள் வரக்கூடும் என்று எதிர்பார்த்தான் நவநீதன்.

அந்தக் கதவின் இருபுறத்திலும் வாசற்படியிலிருந்து  அரையடி அகலத்தில் சிறு திண்ணை. சௌகர்யமாக உட்கார முடியாது. கால் வலித்தால் இடுப்பை அமர்த்தலாம். அப்படி அமர்த்திக் கொண்டு உட்கார்ந்தான் நவநீதன்; காத்திருந்தான்.

அவள் வரவில்லை.

இன்னும் ஒரு தடவை முயற்சி செய்யலாம், அதுவும் இப்போதல்ல, சற்று கழித்து என்ற முடிவுடன் காத்திருந்தான்.

அவனுக்கு மார்பு வலிப்பது போன்ற உணர்வு.

நான் ஒரு குற்றமும் பண்ணலியே என்று நினைத்தான்.

கலியாணத்திற்காக வீட்டில் பெண் பார்க்கிறார்களே என்று மட்டும்தான் முதலில் சொன்னான்.

‘பார்த்தாச்சா… பார்த்துகிட்டிருக்காங்களா?’

‘பார்த்தாச்சுன்னுதான் லெட்டர் போட்டிருக்காங்க!’

‘பொண்ணு அயலா? சொந்தமா?’

‘சொந்தம்… ஒண்ணுவிட்ட மாமா பொண்ணு.’

‘அழகா இருப்பாளா?’

‘சுமாரா இருப்பா.’

‘ரொம்பப் படிச்சவளோ?’

‘இல்லே… பத்தாவது படிச்சவ.’

‘வசதியான வீடோ?’

‘அப்படி வசதி ஒண்ணும் இல்லே. ஒரே ஒரு சின்னக் கூரை வீடு. அதான் சொத்து. மாமா காலமாகி ஆறு வருஷமாச்சு.’

‘கூடப் பிறந்தவங்க?’

‘ரெண்டு தம்பி. ஒரு தங்கை.’

பிரேமாவின் பெருமூச்சுக் காற்று அவன் மேல் தாக்கிற்று.

‘நீ போகணுமோ!’

‘வரச் சொல்லித்தான் அப்பா எழுதியிருக்கார்… நான் போகப் போறதில்லே. வர முடியாதுன்னு எழுதிட்டேன்.’

‘ஏன்?’

‘ஏன்னா?’ அவன் கேள்வியிலேயே ஒரு பதில் சொன்னான். கதவு அப்போது மூடியிருக்கலாம்.

ஹைகோர்ட்டுக்கு எதிரில் சாஸரில் வாங்கிய சமோசாவை, ஒரு சாயங்காலத்தில் கடித்துக் கொண்டிருக்கும் போது கருங்கல் சுவரில் சாய்ந்து பிரேமா கேட்டாள்.

‘நீ ஏன் என்னையே சுத்திக்கிட்டிருக்கே  நவூ?’

‘உங்கூட இருந்தா எனக்குப் பாதுகாப்பா இருக்கு.’

‘இல்லேண்ணா?’

‘நானே எனக்கு காணாமப் போயிடறேன்!’

‘புத்திசாலித்தனமாப் பேசறே! எப்படா கேப்பாள்னு யோசிச்சு வச்சாப்லே இருக்கு.’

‘ஆமா… நீ பெரிய இவ! எப்ப கேப்பேன்னு யோசிச்சு யோசிச்சுப் பதில் தயாரிச்சு வச்சிருப்பேன்!’

‘பெரிய எவ?’

‘சொல்ல மாட்டேன் போ!’

‘நான் ஒரு டைப்பிஸ்ட், ஜஸ்ட் ஒரு டைப்பிஸ்ட், விதவை அப்படி ஆனப்பறம்…’

‘ஆனப்பறம்?’

‘ஒனக்கே தெரியும்!’

‘எது?’

‘எல்லாம்!’

‘ம்ஹ்ம்.’

‘நீதான் மொதல் இல்லே.’

‘ஸ்டாப் இட்! அதெல்லாம் எதுக்கு இப்ப?’

‘பெரிய இவன்னியே.’

‘கோச்சுக்கிட்டே போலேருக்கு.’

‘நீ கூஸ். ஒன் மேலே கோவம் வந்தா நான் ஒரு கூஸ்! நான் கோச்சுக்கலே. நெனைச்சுப் பார்க்கிறேன். என்னை ஒனக்குப் பெரிய இவளாக்க என்ன காரணம்! இந்தக் கலரா… இந்த உடம்பா?’

‘பிரேமா… சமயத்திலே ஒனக்கு ஒரு சர்ஜரி புத்தி வந்துடறது. இது சைனா பஜார்லே சமோசா சாப்பிட்டுக்கிட்டுப் பேசற பேச்சே இல்லே.’

‘நவூ… ஒத்தையா ஒரு பொண்ணா, சம்பாதிக்கிற விதவையா, இந்த வண்டி, அந்த வண்டின்னு ஏறி ஏறி ஜாக்கிரதையா சௌகர்யமா வசதியாப் போக நெனைச்சவங்களால இறக்கித் தள்ளப்பட்ட ஒரு சுமையா…’

‘இன்னிக்கு என்ன ஒரே தன்னிரக்கம்?’

‘சில சமயம் அப்படித்தான்.’

‘நான் இருக்கேனே!’

‘நீ இல்லேண்ணு சொல்லலியே நானும்!’

‘அடுத்த மாசம் பாக்டரிலே போனஸ் வரும்!’

‘என்ன செய்யலாம்… ஒரு டூர் ? தீர்மானி.’

‘எதுக்கு?’

‘நம்ம கல்யாணத்துக்கு!’

‘திருப்பிச் சொல்லு.’

‘நம்ம கல்யாணத்துக்கு!’

‘ஓஹ்! பெரிய தியாகி. விதவைக்கு வாழ்வளிக்கும் வள்ளல். அரசாங்கத்திலே தங்கப்பதக்கம் கெடைக்கும். முட்டாள்.”

‘பிரேமா!’

‘சாஸர் பத்திரம். மூணு ரூபா வாங்கிடுவான். போவோமா… டீ சாப்பிடணுமா?’

‘இன்னுக்கு நீ சகிக்க முடியாத மாதிரி குத்தறே! நான் சொன்னது நிச்சயம்.’

‘……’

“இது எங்கேயோ முடியும்னு உனக்கு ஒரு பயம் வந்துட்டாப்ல இருக்கு! சட்டுப்புட்டுனு ஒருத்தரை ஒருத்தர் கைது பண்ணிக்கிட்டாத் தேவலாம்ங்கிற கிலி. அப்புறமா கல்யாணம் பண்ணிட்ட பிறகு மாட்டிக்கிட்டோ மேன்னு எரிச்சல் வாப்ப…?”

‘பிரேமா?’

‘அந்தச் சமூகச் சடங்கு இல்லேன்னா நம் மேல நம்பிக்கையா நாம நாமா இருக்க முடியாதோ?’

‘ரொம்ப ஸாரி பிரேமா… ஒம் மனசுலே இருக்கற காயங்களுக்கு எல்லாம் நான் பொறுப்பு இல்லே; ஆனா நான் கௌறிட்டேன். கல்யாணம் வேணாம்னா வேணாம். விட்டுடுவோம் வாஸ்தவமாச் சொன்னா எனக்கு ஒன்னைப் புரிஞ்சுக்கவே முடியலே… நான் ரொம்ப சராசரி. ஆஃப்டர் ஆல்… ஒரு பாக்டரி  தொழிலாளி. டூல் அண்ட் டை மேக்கர்.’

‘டீ சாப்பிடுவோம்.’

கதவு அப்போது கூட மூடியிருக்கலாம்.

அடையாறுக்கு ஒரு நாள் பிரேமா அவனை அழைத்துப் போனாள்,  தியோஸாபிகல் சொஸைடி ஆலமரத்துக்கு.

‘மெட்ராஸ்லே எத்தனை வருஷமா இருக்கே?’

‘எட்டு வருஷமாச்சு வந்து!’

 

‘அடையாறு ஆலமரம் பார்த்திருக்கியா?’

 

‘இல்லே.’

 

‘என்ன மனுஷன் நீ? தண்டையார்ப் பேட்டை… சைதாப் பேட்டை, இப்படியே எட்டு வருஷமா?’

 

‘இல்லே… நடுவிலே சிந்தாதிரிப் பேட்டை, கொருக்குப் பேட்டையும் உண்டு!’

 

‘சமத்து! இன்னிக்கு வா போகலாம்.’

 

பிரேமா போல் ஒரு தேவ கன்னிகை உலவ வேண்டிய கந்தர்வ லோகமாக நவநீதனுக்கு அது தோன்றியது. அன்று அப்படி ஓர் உச்சத்தில் அவள் இருந்தாள்.

 

சில்லிட்டிருந்த ஒரு மொஸைக் பெஞ்சில், தூரத்தில் ஆள் நடமாடும் தனிமையில் பிரேமா ஒரு ககன சஞ்சாரம் செய்யும் உல்லாசத்தோடு அமர்ந்து பாடினாள்.

 

காப மகரீஸாஸா நிரி ஸநிதா நித

தா தநிஸ ஸாரிநி ஸா ஸநிதா

ஸரிகாப மகரீஸாஸா நிரிஸநிதா நித

தா தநிஸ ரீகக மகமா

 

‘அந்தக் குரல் ஒரு விமானமாகி அவனை ஏற்றிக் கொண்டு விண்வெளி யாத்திரை செய்தது. நவநீதன் என்ற டூல்

அண்ட் டைமேக்கரை மொஸைக் பெஞ்சிலேயே உட்கார்த்தி வைத்து விட்டு மனசு அன்னப்பட்சி மாதிரி ஆகாய வலம் வந்தது.

 

‘இது என்ன பிரேமா?’

 

‘தோடி ராகம். ஆதி தாளம். குமார எட்டேந்திரர் க்ருதியிலே பல்லவி.’

 

‘எனக்கு என்னமோ போலிருக்கு.’

 

‘எப்படி?’

 

‘நான் ரொம்பச் சாமான்யனா… எதுவோ பூச்சி ஐந்தறிவு மிருகம் மாதிரி உன் முன்னாலே நிக்கறாப்பிலே.’

 

அவள் சிரித்துவிட்டாள். பிறகு சொன்னாள்.

 

‘பரவால்லே!’

 

‘எப்படி?’

 

‘எல்லாமே ஜீவராசியாச் சொன்னே பாரு. கல்லு மண்ணு மரக்கட்டைன்னு ஜடமாச் சொல்லாமே!’

 

‘நான் ஜடமா?’

 

‘கோவம் வந்துட்டுது இல்லே. நீ எப்படி ஜடமாவே?’

 

‘இன்னும் கொஞ்சம் பாடேன் பல்லவி மாதிரியே இன்னொன்னு சொல்வாங்களே.’

 

‘அனுபல்லவியா?’

 

‘ஆமாம்.’

 

‘நீ தபமா பாமா மாதப பம

கம பதநித நித தநீ ரிஸநித நித’

 

அவள் வாயையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

‘தா பதநிஸாதபமா பாமா மாதப பம

கம பதநித நித, தநீ ரிஸநிதநித’

 

‘எப்படி? எப்படி? கடைசியிலே பாடினியே அது எப்படி?’

 

அவன் வாயும் கூடவே முனகியது.

 

‘ரிஸநிதநித’

 

‘பிரேமா.’

 

‘வெளியே வந்தாக் கையைப் பிடிக்காதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்!’

 

‘ஸாரி!’

 

‘ம்ம்ம். என்ன விஷயம்? சொல்லு!’

 

‘நெஜம்மா ஒன்னைப் பார்த்தா எனக்கு இப்போ பயம்மா இருக்கு.’

 

‘ஏன்?’

 

‘ஒன்னை என்னால் அளந்துட முடியாது. உன்னுடைய இத்தனையும் அள்ளி வாரி எனக்குள்ளாற அடச்சுக்க முடியாது. எனக்கு தா தத்தனூண்டு மூளை. தா தித்தனூண்டு மனசு…’

 

“நவூ…”

 

“என்ன?”

 

“ஒன்னை எனக்கு ரொம்ப புடிக்குது.”

 

“ம்ஹூஹூம். நீ ஏதோ கன்செஷனோ ரிபேட்டோ கொடுத்துட்டுச் சொல்றே.

 

“இந்த எடத்தில், ஒன்னைத் திட்ட வேண்டாம்னு பார்க்கறேன்.”

 

“இனிமே எந்த எடத்தில் வேணும்னாலும் நீ  திட்டிக்கோ. எனக்கு கவலையில்லே.”

 

“ஈஸ்வரா…” என்று மார்பு தூக்கிப் போடும்படியாக அவள் பெருமூச்சு விட்டாள். தாழ்ந்துவிட்டது மாதிரி.

கதவு அப்போது கூடச் சாத்தப்பட்டிருக்கலாம்.

 

நேற்றிரவு ஹோவென்று தலைமுடி பறக்கும் கடற்கரைக் காற்றில் பிரேமா ஐஸ் ஹவுஸ் அருகே கடல் உறுமுவதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டுச் சொன்னாள்.

 

‘அதைக் கேட்டா ரொம்பப் பாவமா இல்லே?’

 

‘எதை?’

 

‘கடல் ஓசையை.’

 

‘எனக்கு ஒண்ணும் புரியாது.’

 

‘கவனி.’

 

கவனித்தான் நவநீதன்.

 

‘கேளு.

 

‘கர்ப்பேந்திரம் பொறுமற மாதிரி இல்லே…’

 

‘கர்ப்பேந்திரம்னா…’

 

‘டினோஸார்… பிரம்மாண்டமான ஆதிகால மிருகம், சினிமா டினோஸார்கள் அவனுக்கு ஞாபகம் வந்தன.

 

‘ஆமா.’

 

நவநீதன் கையை அவள் இருட்டில் துழாவிப் பிடித்தாள்.

 

“துக்கம்பா நவூ அது! ஆதிதுக்கம். அநாதி துக்கம்… நீ, நான் தோ தூரத்திலே கிஸ் பண்றாங்களே அவங்க… பூமி, இந்தப் பிரபஞ்சம் முழுக்கச் சொமக்கிற துக்கம்.”

 

அவன் அந்தக் கையை இறுகப் பிடித்தான். அவளுக்கு வலித்திருக்கும். ஆனால் சொல்லவில்லை.

 

“நாளைக்கு நான் ஊருக்குப் போறேன் பிரேமா.”

 

“போயி?”

 

“திங்கக்கெழம டூட்டிக்கு வந்துடுவேன். மாமா பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டு வந்தாகணும். அப்பா ரொம்ப சூடா எழுதியிருக்கார்.”

 

கடற்காற்று அவளது கனலும் மூச்சில் சிறிது வெப்பம் ஏந்திச் சென்றது.

 

“முட்டாள்!”

 

‘என்ன பிரேமா?”

 

“மாமா பொண்ணை மறுக்காதே!”

 

“நீ?”

 

“சுத்தமா ஸ்க்ரீனை இழுத்து மூடிடு. அவ்வளவுதான். ஹோல் ட்ராமா ஓவர்.”

 

“பிரேமா.”

 

“நவூ… அதான் பாதுகாப்பு.”

 

அப்போது கூட இந்தக் கதவு மூடியிருக்கலாம்.

 

– ஐந்து நிமிஷத்துக்கு மேலாகி விட்டது. திண்ணையை விட்டு நவநீதன் எழுந்தான். கடைசியாக ஒருமுறை தட்டினான். பதில் இல்லை.

 

இனிமேல் அவன் தாமதிக்க நேரமில்லை.

 

மின்சார ரயில் ஏறி அவன் தாம்பரத்தில் இறங்கி பஸ் பிடிக்க வேண்டும்.

 

நவநீதன் கதவை ஒருமுறை பார்த்தான், விடை பெற்றுக் கொள்வது போல்.

 

பின்பு இறங்கி மெதுவாக ஸ்டேஷனை நோக்கி நடந்தான். படிக்கட்டில் ஏறி பிளாட்பாரத்தில் நுழைந்து அவள் வீடு தெரிகிற பிளாட்பாரக் கோடிக்கு வந்து விளக்கடியில் நின்றான்.

 

இரவின் அமைதியில் தடக்கென்று பத்தடி கீழேயிருந்து அந்த வீட்டுக் கதவு திறக்கும் தாழ்ப்பாள் ஓசை கேட்டது. அவன் சிவுக்கென்று, ஆவல் ஒரு நாகம் போல் படம் விரிக்க கதவைப் பார்த்தான். பிரேமா வெளியே வந்து நின்று இருபுறமும் தெருவைப் பார்த்தாள்.

 

அங்கிருந்தவாறே, “பிரேமா” என்று கத்த வேண்டும் போல் தோன்றியது. ஆனால் அவன் மௌனமாகக் கவனித்தான். யதேச்சையாக நிமிர்ந்த அவள் நவநீதனைப் பார்த்துவிட்டாள். கையை உயர்த்தி “டாடா” காட்டினாள். அவனும் கையை உயர்த்தினான். ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் அதற்குள் மின்சார ரயில் வந்து விட்டது.

 

பிரேமா உருவமும் மறைந்தது !

 

+++++++++++++++++++

Series Navigationமணமுறிவைச் சந்திக்கும் ஒரு பெண்ணின் அவஸ்தை -ஆத்மதாகம்- இடைமருதூர் கி.மஞ்சுளா நாவல்மிதிலாவிலாஸ்-2
author

வையவன்

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    வைரமணிக் கதைகள் – 3 படித்து மகிழ்ந்தேன். ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் உள்ள இடைவெளி அதிகம். அவனைக் காக்க வைத்தாள் என்பதற்காகவா அப்படி? அவ்வளவு நேரம் அவனைக் காக்கவைத்துவிட்டு இறுதியில் அவன் சென்றபின் அவள் கதவைத் திறந்து கையசைத்து விடை தருவதோடு கதையை முடித்துள்ள விதம் நன்று…பாராட்டுகள் வையவன் அவர்களே…டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *