மருத்துவக் கட்டுரை – இதயக் குருதிக் குறைவுநோய்

This entry is part 11 of 28 in the series 22 மார்ச் 2015
Diseased HeartNormal Heart
                                                                                              

    ( Ischaemic  Heart  Disease  )

இதயக் குருதிக் குறைவு நோய் என்பதை ஆங்கிலத்தில் Ischaemic Heart Disease என்று அழைப்பதுண்டு. இதயத் தசைகளுக்கு போதிய அளவு இரத்தம் செல்லாதிருத்தல் காரணமாக உண்டாகும் இதயநோய் இது எனலாம். இதுவே முற்றிலும் இரத்த ஓட்டம் இல்லாமல் அடைப்பு உண்டானால் மாரடைப்பு என்கிறோம். ஆகவே இதை மாரடைப்பின் முன்னோடி எனலாம். மாரடைப்பு வரலாம் என்ற எச்சரிப்பு என்றுகூடக் கூறலாம். இதுபோன்ற இருதய நோயால்தான் உலகில் அதிகமானோர் இறக்கின்றனர்.

          இதயம் அல்லது இருதயம் உடலின் மிக மிக முக்கிய உறுப்பு என்பதை நாம் அறிவோம். நாம் உயிர் வாழ்வதற்கு அது தொடர்ந்து துடித்துக்கொண்டே இருக்கவேண்டும். துடிப்பது நின்றுவிட்டால் உயிர் போய்விடும். இன்று நம் இன மக்கள் பலர் மாரடைப்பு என்று அகால மரணம் அடைகின்றனர்.அதலால் இதயத்தின் செயல்பாடு பற்றி நாம் அனைவரும் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
          இருதயம் இவ்வாறு பிறப்பிலிருந்து இறப்பு வரை ஓய்வின்றி துடிக்கும் ஓர் உறுப்பாகும். அது நான்கு அறைகள் கொண்ட பை. அது துடிக்கும்போது அதன் சுவர்கள் சுருங்கியும் விரிவதுமாக செயல்படும். அந்த சுவர்கள் தசைகளால் ஆனவை. அதை இயக்க ( துடிக்க வைக்க ) இரத்த ஓட்டம் தேவை. அந்த இரத்தத்தில் பிராண வாயு என்ற ” உயிர் காற்று ” உள்ளது. இருதய தசைகளுக்கு இதைக்  கொண்டு செல்பவை ” காரோனரி தமனிகள் ” என்று பெயர் கொண்ட நுண்ணிய இரத்தக் குழாய்கள். இந்தக் குழாய்களில் அடைப்பு உண்டானால் இருதயத்தின் தசைகளுக்கு இரத்தவோட்டம் குறைவுபடும். அதைத்தான்  ” இதயக் குருதிக் குறைநோய் ” என்கிறோம்.
          இந்த நுண்ணிய இரத்தக் குழாய்களில் எப்படி அடைப்பு உண்டாகிறது என்பதைப் பார்ப்போம்.
           முதலாவதாக காரோனரி தமனிகளில்  அத்தீரோமா  ( Coronary Atheroma  ) என்ற நோய் காரணமாக சுருக்கம் உண்டாகி இரத்த ஓட்டத்தைத்  தடை பண்ணுகிறது.
          இரண்டாவதாக இந்தத் தமனிகளில் தடிப்பு உண்டாகி ( Coronary Artery Thrombosis ) அடைப்பை உண்டுபண்ணுகிறது.
          மூன்றாவதாக காரோனரி தமனிகளில் அழற்சி காரணமாக வீக்கம் ஏற்பட்டு அடைப்பு உண்டாகிறது.
          நான்காவதாக இருதய தசைகளுக்கு அதிகமான பிராண வாயு தேவைப்படும்போது இரத்தப் பற்றாக்குறை உண்டாகிறது. உதாரணமாக தைராய்டு சுரப்பியின் அதிகமான செயல்பாடு, உயர் இரத்த அழுத்தம், இருதய வீக்கம் போன்றவையின்போது அதிகமான இரத்தம்  இருதயத்திலிருந்து வெளியேற்றப்படுவதால் அதன் வேலைப் பளு அதிகமாகிறது.
        இவற்றில் முதலாவது காரணமான காரோனரி தமனி அத்தீரோமா என்பதுதான் அதிகமானோருக்கு ஏற்படுவதால் இது பற்றி தெரிந்து கொள்வதும் முக்கியனானது. பொதுவாக இரத்தக்குழாய்களின் உட்சுவர்கள் வழவழப்பாக இருந்தால்தான் இரத்தம் அதன் வழியாக எளிதில் விரைவாக ஓட முடியும். ஆனால் அத்தீரோமா என்பதில் இந்த வழவழப்பு இழந்து சுரசுரப்பாக மாறுகிறது. இதை உண்டுபண்ணுவது கொழுப்பு, வெள்ளை இரத்த செல்கள், தசை செல்கள் கலந்த ஒருவகையான கலவை எனலாம்.இத்தகையக் கலவை இரத்தக் குழாய்க்குள் படிவதால் அதன் குறுக்களவு குறைந்துபோய் இரத்த ஓட்டத்தை தடை பண்ணிவிடுகிறது. இது போன்ற மாற்றத்தை விளைவிக்கக்கூடியவை வருமாறு:
                                                                                    தவிர்க்க இயலாத காரணிகள்
           *. வயது – இது இளம் வயதினரை பாதிப்பதில்லை. வயது அக ஆக இது உண்டாகும் வாய்ப்பும் அதிகமாகும்.
          * பால் – இது ஆண்களிடையே அதிகம் காணலாம்.
          * பரம்பரை – சில குடும்பங்களில் இத்தகைய நோய் அதிகமானோருக்கு உண்டாகலாம்.
                                                                                    தவிக்கக்கூடிய  காரணிகள்
          * இரத்தத்தில் அதிகமான கொழுப்பு – இரத்தத்தில் எவ்வளவு அதிகமான கொலஸ்ட்ரால் கொழுப்பு அளவு உள்ளதோ அதற்கேற்ப இருதய தமனி அடைப்பின் ஆபத்தும் அதிகமாகிறது. இதை உணவுக் கட்டுப்பாட்டின்வழியும் மருந்துகள் வழியுமாகக் குறைக்கலாம்.
          * புகைத்தல் – ஆண்களிடம் இந்த நோய் அதிகம் உள்ளதற்கு புகைப்பதும் ஒரு முக்கிய காரணம்.ஆகவே புகைப்பதை நிறுத்திவிட்டால் இந்த இருதய நோய் உண்டாகும் அபாயமும் குறைந்துவிடும்.
          * உயர் இரத்த அழுத்தம் –  உயர் இரத்த அழுத்தம் இருதய தமனி அடைப்பு நோயுடன் நேரடித் தொடர்புடையது. ஆதலால் உணவுக் கட்டுப்பாடு,
   உடற்பயிற்சி, மருந்துகள் மூலமாக இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ளவேண்டும்.
          * நீரிழிவு நோய் – இது நம் இன மக்களிடையே பரவலாகக் காணப்படுகிறது. இதனால் தமனிச் சுவர்களில் கொழுப்பு படிவதால் அது எளிதில் அடைப்புக்கு உள்ளாகிறது.
          *. உடல் பருமன் – அதிகமான உடல் பருமனும் இதனுடன் நேரடித் தொடர்புடையது.
          * உணவு – அதிக கொழுப்பு மிக்க உணவுவகைகள் உண்பதாலும், குறைவான காய்கறிகள் பழங்கள் உட்கொள்வதாலும் தமனியில் அடைப்பு உண்டாகிறது.
           * உடற்பயிற்சி – குறைவான உடற்பயிற்சி கொழுப்பு படிவதை அதிகரித்து அடைப்பை உண்டுபண்ணுகிறது. ஆகவே போதுமான உடற்பயிற்சி தேவை
          * மது – அதிகமான மது அருந்தினால்கூட கொழுப்பு படிவதை அதிகரிக்கும். அளவோடு அருந்தினால் குருதிக் குறைநோயைக் குறைக்கும். கூடுமானால் மது அருந்தும் பழக்கத்தை விட்டுவிடுவதே நல்லது.
          * மனச் சோர்வும் மன அழுத்தமும் — இவைகூட இதயத் துடிப்பை அதிகரித்து பாதிப்பை உண்டுபண்ணவல்லவை.
          ஆதலால் மேலே குறிப்பிட்டுள்ள தவிர்க்கவல்ல காரணிகளை தவிர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதோடு நெஞ்சு வலி அல்லது களைப்பு, மூச்சுத்திணறல் போன்ற இருதயம் தொடர்புடைய அறிகுறிகள் தென்பட்டால் உடன் மருத்துவரின் உதவியை நாடுவதே நல்லது.
         ( முடிந்தது )
Series Navigationகுளத்துமீனாக விரும்புமா பாத்திரத்து மீன்?நிழல் தந்த மரம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *