விழித்தது விழித்தபடியே கட்டிலில் படுத்திருந்தார் சுகவனம். அவர் அங்கே கிடத்தப் பட்டிருந்தார். மூக்கில் ஒரு ட்யூப். அது வளைந்து நெளிந்து கூடத்தில் எதற்கோ காத்திருப்பது போல் உட்கார்ந்திருந்த உறவினர் நண்பர்கள் மத்தியில் ஓடி மூலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜன் சிலிண்டரில் முடிந்தது.
கூடத்தில் ஐம்பது பேர் உட்காரலாம். பெரிய கூடம். ஆனால் இருபது பேர்தான் உட்கார்ந்தி ருந்தனர். எல்லோரும் கூட்டமாக தியானம் செய்வது மாதிரி அங்கே ஒரு நிசப்தம் நிலவிற்று. இடையிடையே சிலர் எழுந்து போவது வேறு சிலர் வந்து உட்காருவது இந்த உடல் அவயவங்களின் சந்தடி தவிர வேறு ஓசை இல்லை. அங்கே பெண்கள் குழந்தைகள் கூட இருந்தார்கள். அனைவருக்கும் ‘அங்கே நிலவிய நிசப்தம் தங்களால் பங்கம் அடையக் கூடாது’ என்ற கவலை இருந்தது.
சுகவனத்தின் சுவாச ஒலி, சுழலும் மின்விசிறியின் கிசுகிசுப்பு இவற்றைத் தெளிவாக அங்கே நடப்பது என்னவென்று அறியாததால் கேட்கவிட்டன. அப்போது கொஞ்சம் மெத்தனமாக வெளியே சைக்கிள் மணி அடித்தது, தெருவாசலில். இரண்டு மூன்று தரம் யாரும் போக வில்லை. சைக்கிள் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தப்பட்டது.
அந்தப் பகுதியின் போஸ்ட்மேன் நீளமான தெரு நடையைக் கடந்து உள்ளே வந்தார். அவர் கையில் ஓர் இன்லண்ட் கவர் இருந்தது. இருபது முகங்களும் அவரைத் திரும்பிப் பார்த்தன. அங்கே நிலவிய நிசப்தம்தான் சைக்கிள் மணி அடித்ததைக் குறித்து அவரைத் திடுக்குற வைத்தது. அங்கேயே நின்றார்.
கூடத்தில் மௌனமாக உட்கார்ந்திருந்தவர்களும் மஞ்சள் சில்க் ஷர்ட்டும் தங்க பிரேம் வைத்த மூக்குக் கண்ணாடியும் போட்டவர் எழுந்து என்னவென்று சைகையாலேயே கேட்டார். பதிலுக்கு போஸ்ட்மேன் இன்லண்ட் லெட்டரை உயர்த்திக் காட்டினார்.
ஆக்ஸிஜன் ட்யூபை மிதித்துவிடப் போகிறோமே என்ற பயத்தில் அதை ஓர் அகழி தாண்டுவது மாதிரி அனாவசியமாக அதிக தூரம் கால் வைத்துத் தாண்டி வந்தார்.
போஸ்ட்மேனை நெருங்கி வந்து “லெட்டர் யாருக்கு?” என்று கிசுகிசுவென்று கேட்டார்.
“ஒங்க மாமனாருக்குத்தான்.”
கடிதத்தைக் கொடுத்ததும் போஸ்ட்மேன் நகரவில்லை. இன்லண்டின் பின்பக்கத்தைத் திருப்பி அனுப்பியது யாரென்று பார்த்துக் கொண்டிருந்தவரை இன்னும் கொஞ்ச நெருங்கி, “முத்து… எப்ப நர்ஸிங் ஹோமிலே இருந்து கூட்டினு வந்தீங்க?” என்று விசாரித்தார், கிசுகிசுப்பாக.
முத்து ஒருதரம் கட்டிலில் எந்த வருகையையோ எதிர்பார்த்து, கண்களை கூடச் சிமிட்டாமல் விழித்தபடி கிடந்த மாமனாரைத் திரும்பிப் பார்த்தார். தன் கேள்வி அலட்சியப் படுத்தப்பட்டது மாதிரி போஸ்ட்மேனுக்குக் கொஞ்சம் ஆதங்கம் ஏற்பட்டது.
முத்து மீண்டும் போஸ்ட்மேன் பக்கம் திரும்பினார். அவர் தன் முகத்தைப் பார்த்ததும் பதில் சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்தார் போஸ்ட்மேன்.
“உங்கிட்டே தீப்பெட்டி இருக்கா?” மேலும் மெதுவாக கேட்டார் முத்து.
“இருக்கு.”
“வா, வெளியே போவோம்”
இருவரும் வெளியே வந்தனர். முத்து தன் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்தார். விளக்குக் கம்பத்தின் ஓரமாக, அடுத்த வீட்டின் கார்ஷெட் ரோலிங் ஷட்டரை இழுத்து மூடி யிருந்தார்கள். போஸ்ட்மேன் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு அங்கே நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு விட்டுத் தீப்பெட்டியோடு முத்துவை நெருங்கினார்.
முத்து ஒரு சிகரெட்டை எடுத்துக் கொண்டு பாக்கெட்டைப் போஸ்ட்மேனிடம் நீட்டினார். அவர் மறுத்து விடவே தீப்பெட்டியை வாங்கி சிகரெட்டைப் பற்ற வைத்து கொண்டார். ஓர் இழுப்பு இழுத்ததும் முத்துவின் முகம் தெளிவடைந்தது.
“நேத்து மத்தியானம் கொண்டாந்துட்டோம்” என்று போஸ்ட்மேனின் கேள்விக்குத் தாமத மாகப் பதிலளித்தார்.
“நான் அஞ்சு நாள் லீவ் போட்டுட்டு கோவா டூர் போயிட்டிருந்தேன். காலையிலேதான் டூட்டியிலே ஜாயின் ஆனேன். வீட்டிலே கூடச் சொல்லவே இல்லியே ‘கோமா’வா?”
“அப்படிச் சொல்ல முடியாது. டாக்டருங்க அவ்வளவுதான், வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போயிடுங்கன்னுட்டாங்க.”
“இப்படியேதான் இருக்காரா?”
“ஆமா… நேத்து முழுக்க இப்படித்தான் இருந்தாரு. காலையிலேருந்தும் இப்படித்தான்.”
“ஆளை அடையாளம் தெரியறதா?”
“கிட்டே போய் மொகத்து எதிரே நின்னா கண்ணை உருட்டிப் பார்க்கிறாரு. ஏதாவது சத்தம் கேட்டா கண்ணை திருப்பறாரு.”
“பேச்சு?”
“ம்ஹூம்.”
முத்து சிகரெட்டை வேகமாக உறிஞ்சினார். இடது கையில் அந்த இன்லண்ட் இருந்தது அதன் ஃப்ரம் அட்ரஸை இன்னொரு தரம் பார்த்துவிட்டு அந்த இன்லண்டை மடித்துச் சட்டைப் பையில் போடப் போனார்.
“லெட்டர் எங்கேயிருந்து? யாரு போட்டிருக்கிறது?”
போஸ்ட்மேன் இயல்பாகக் கேட்டார். அந்த வீடு, சுகவனம், அவர் பிள்ளைகள், மருமக்கள் என்று அந்தக் குடும்பமே அவருக்குத் தெரியும். ஏழெட்டு வருடமாய்த் தபால் கொடுத்தே அவருக்கு ஓர் உறவு வாய்த்துவிட்டது.
“வேலூர் ஜெயில்லேயிருந்து விநாயகம் போட்டிருக்கான்.”
“யாரு… விநாயகமா?” போஸ்ட் மேனுக்கு விநாயகத்தையும் தெரியும். அவனும் அவருடைய வீட்டில்தான் இருந்தான். அதுமட்டுமல்ல. விநாயகத்துக்கும் சுகவனத்துக்கும் இடையே இருந்த சகல விவகாரங்களும் அவருக்குத் தெரியும். ஊருக்கே மேலெழுந்தவாரியாக அது தெரிந்த விவரம்தான்.
போஸ்ட்மேனுக்கு முழுக்கவே தெரியும். போன எம்.எல்.ஏ. தேர்தலில் சுகவனத்தை எதிர்த்து நின்று விநாயகம் டெபாஸிட் இழந்திருந்தான். விவசாயச் சங்க தலைவன். அவரது சொந்த நிலங்களில் குத்தகைக்கு வைத்திருந்த விவசாயிகளை அவர் கிளப்ப முடியாதபடி கோர்ட் களில் தீர்ப்பு வாங்கியவன். அவர் வைத்திருந்த பூட்டு மார்க் பீடி பாக்டரியில் பீடித் தொழிலாளர் சங்கத்தலைவன். சுருக்கமாக சுகவனம் ஹார்ட் பேஷண்ட் ஆனதற்கு முக்கிய மான காரணகர்த்தா. சிறைக்குப் போய் இரண்டு மாதமாகிறது.
“கிழிச்சுப் படிச்சுப் பாரேன் முத்து” தீப்பெட்டியை சட்டைப் பையில் போட்டுக் கொண்டே சொன்னார் போஸ்ட்மேன். என்ன எழுதியிருக்கிறான் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் இருவருக்கும் மேலிட்டது.
சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டு முத்து இன்லண்ட் லெட்டரைக் கிழித்தார். புகை கண்ணை உறுத்திற்று. மறுபடியும் சிகரெட்டை வலது கையால் அகற்றி விட்டுப் படிக்கத் தொடங்கினார். அவர் கண்கள் இடமும் வலமும் ஓடுவதை நிதானமாகப் பார்த்தவாறே நின்றார் போஸ்ட்மேன்.
“ம்… இப்பவாவது தெரிஞ்சுகிட்டயே” என்று முத்து கடிதத்தை மடித்துப் பையில் போட்டவாறு நேரடியாக அதை எழுதிய விநாயகத்திடம் பேசுவது போல் கூறிக் கொண்டார்.
“என்னவாம்?”
“ஒண்ணுமில்லே மாமா நெலத்தையெல்லாம் பாலிடெக்னிக் கட்ட கவர்மெண்டுக்குத் தானம் பண்ணியிருக்காரில்ல! அதுக்கு ரொம்ப மனப்பூர்வமா பாராட்டுத் தெரிவிச்சு எழுதி யிருக்கான்.”
“மாமா படுத்த படுக்கையா இருக்கார்ன்னு ஒருவேளை தெரிஞ்சுகிட்டிருப்பானோ?”
“அப்படித் தெரியலே! தெரிஞ்சிருக்காதுன்னு நினைக்கிறேன். பத்திரிகையிலே நியூஸ் வந்ததில்லே? அதைப் பார்த்து விட்டு எழுதியிருக்கான். செய்தி படித்தேன்னு ஒரு வரி இருக்கு.”
போஸ்ட்மேன் யோசனையோடு முத்துவைப் பார்த்தார்.
“முத்து எனக்கு ஒரு யோசனை தோணுது.”
“என்ன?”
“இந்த லெட்டரை அவருக்குப் படிச்சுக் காட்டணும்.”
“சேச்சே… இந்த நேரத்திலேயா?”
“இந்த நேரத்தில்தான் படிச்சுக் காட்டணும். அவருக்கு நேர் எதிரி எழுதியிருக்கான். ஒரு நல்ல விஷயத்தைப் பாராட்டி… அவனுக்கு இவர்கிட்டே ஆகப் போகிறது ஒண்ணுமில்லே. மனசு தொறந்து அவரை மனுஷன்னு நிரூபிச்சுப் பாராட்டி இருக்கானே! எப்படியாவது படிச்சுக் காட்டிடு. உசிர் போற நேரத்திலே அவர் மனசுக்கு ஒரு சாந்தி.”
போஸ்ட்மேன் சொன்னது முத்துவின் மனத்தில் பாய்ந்தது.
“இருந்தாலும்கூட இப்போப் போய் எப்படி?”
“சத்தம் கேட்டா திரும்பறாரு இல்லியா?”
“திரும்பறாரு…”
“அப்ப லெட்டரைக் கொண்டா.”
போஸ்ட்மேன் கடிதத்தை வாங்கிக் கொண்டு மறுபடியும் சைக்கிள் ஸ்டாண்டைத் தள்ளி சுகவனம் வீட்டு வாசலில் நிறுத்தி நேரே உள்ளே போனார். முத்துவும் பின்னால் வந்தார்.
போஸ்ட்மேன் அந்தக் கூடத்தில் நிலவிய நிசப்தத்தின் ஊடே, தனக்கு ஏதோ ஒரு விசேஷ உரிமை இருப்பது போல் நிலைநாட்டிக் கொண்டு கட்டில் அருகில் போனார்.
“தலைவரே, போஸ்ட்மேன் வந்திருக்கேன்.”
“ஷ்ஷ்… ஷ்ஷ்… ஷ்ஷ்…” என்று நாலா பக்கமும் சில குரல்கள் ஓசையின்றி அதட்டின.
பின்னால் வந்த முத்து போஸ்ட்மேன் பேசட்டும், தடுக்க வேண்டாம் என்று சைகை காட்டினார்.
சுகவனத்தின் கண்கள் மெல்ல மெல்ல உருண்டன. போஸ்ட்மேனைப் பார்த்தன. அவரது கையெடுத்துக் கும்பிட்ட வணக்கத்தை ஏற்றுக் கொண்டது மாதிரி கண்கள் ஒருதரம் மூடித் திறந்தன.
போஸ்ட்மேன் கட்டிலுக்கு நெருக்கமாக உட்கார்ந்தார் சுகவனத்தின் பார்வை அவர் மீது தாழ்ந்தது.
“ஒங்க எதிரி… தொழிற்சங்கத் தலைவன் ஜெயில்லேயிருந்து எழுதியிருக்கான். படிக்கவா?”
கூடத்தில் நிலவிய நிசப்தம் குலையவில்லை.
“அன்புள்ள சுகவனம் அவர்களுக்கு வணக்கம். தாங்கள் தங்கள் நிலங்களில் இருபது ஏக்கரை நமது நகரத்தில் பாலிடெக்னிக் கட்டுவதற்காக அரசாங்கத்திற்கு இலவசமாக அளித்திருப்ப தாக இன்று செய்தி படித்தேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. தங்கள் வாழ்க்கையில் மிகச் சிறப்பானதொரு செயலை, நமது நகர மக்களின் நலன் கருதி மிகவும் மனமுவந்து செய்திருப்பது எனக்குத் தங்கள் பாலுள்ள நன்மதிப்பைப் பல மடங்கு உயர்த்தி விட்டது. நகரக் குடிமகன் என்ற சார்பிலும் எனது மனப்பூர்வமான பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் அன்புள்ள ஏ.வி. விநாயகம்” போஸ்ட்மேன் படித்து முடித்தார்.
சுகவனத்தின் கண்களில் எல்லாம் புரிந்தது போல் ஓர் ஒளி. அவை பளபளப்பதாக போஸ்ட் மேன் நினைத்தார். அவர் உதடு எதையோ சொல்ல முயல்வது போல் அசைந்தது. அதற்குள் தலை வலப்புறமாகப் பளிச்சென்று சரிந்தது.
++++++++++++++
- தொடுவானம் 60. கடவுளின் அழைப்பு
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் மிகப் பெரிய துணைக்கோளில் அடித்தளப் பெருங்கடல் கண்டுபிடிப்பு
- கம்பன் திருநாள் – 4-4-2015
- பாட்டி வீட்டுக்கு போறோம் ( To Grandmother’s House we go )
- ஞாழல் பத்து
- எழுத்துப்பிழை திருத்தி
- சான்றோனாக்கும் சால்புநூல்கள்
- என்னைப்போல
- மிதிலாவிலாஸ்-7
- குளத்துமீனாக விரும்புமா பாத்திரத்து மீன்?
- மருத்துவக் கட்டுரை – இதயக் குருதிக் குறைவுநோய்
- நிழல் தந்த மரம்
- கருவூலம்
- வையவன் & ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நடத்தும் “இதயத்துடிப்பு” பணிப் பயிற்சி
- ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச் 2015 மாத இதழ்
- யாமினி கிருஷ்ணமூர்த்தி – (7)
- ஆத்ம கீதங்கள் –21 ஆடவனுக்கு வேண்டியவை
- உளவும் தொழிலும்
- வைரமணிக் கதைகள் -8 எதிரி
- சீஅன் நகரம் -5 மதில் மேல் சவாரி
- ஒட்டுண்ணிகள்
- தினம் என் பயணங்கள் – 43 பட்ட காயமும் சுட்ட வேலையும்.. !
- English rendering of Thirukkural
- ஷாப்புக் கடை
- தொல்காப்பிய அகத்திணையியலில் இளம்பூரணர் உரைவழி தமிழர் அகம்சார் சிந்தனைகள்
- உலகம் வாழ ஊசல் ஆடுக
- உதிராதபூக்கள் – அத்தியாயம் 6
- செல்மா கவிதைகள்—-ஓர் அறிமுகம்