நூல் மதிப்புரை – சாந்தாதத் அவர்களின் “வாழ்க்கைக் காடு”

This entry is part 11 of 14 in the series 5 ஏப்ரல் 2015

2015-04-04 14.08.18தெலுங்கிலிருந்து தமிழுக்குப் பல கவிதைகள் மற்றும் கதைகளை மொழிபெயர்த்து நமக்கு தெலுங்கு இலக்கியத்தின் பரிச்சயம் சாந்தாதத் அவர்களின் எழுத்தில் கிடைத்திருக்கிறது. “திசை எட்டும்” இதழில் இவரது பங்களிப்புக் குறிப்பிடத்தக்கது. கவிதைகளை மொழியாக்கம் செய்வது கடினம். எனவே அவரது உழைப்பும் மொழிபெயர்ப்பும் கவனம் பெறுபவை.

மொழிபெயர்ப்பாளர்கள் புனை கதை எழுதுவது குறைவே. “வாழ்க்கைக் காடு” என்னும் சிறுகதைத் தொகுதி அவரின் புனைகதைகளின் புதிய தொகுதி. புனைவு மொழிபெயர்ப்பு என இரு தளத்தில் இயங்கும் பெண் படைப்பாளியான அவர் ஹைதராபாத் நகரை மையப் படுத்தியே தமது கதைகள் பலவற்றைப் புனைந்திருக்கிறார்.

இந்தத் தொகுதியில் உள்ள 20 கதைகளில் தெலுங்கானா உருவாகும் வரையிலான போராட்டத்தை மையப்படுத்தி “நகர்வு”, “ஏரிக்கரை மேலே”, “அவன்”, “எக்கரையும் பச்சையில்லை” ஆகிய நான்கு கதைகள் அண்டை மாநிலத்தில் நடந்த “வாழ்வா சாவா” என்னும் ஒரு போராட்டத்தை நமக்கு வெளிச்சப் படுத்துகின்றன. “எக்கரையும் பச்சையில்லை” கதையில் ஒரு பிஞ்சு மனம் காவிரி நீர் விவகாரம், தெலுங்கானாப் பிரிவினையை எதிர்கொள்ளும் அவலத்தை வருத்தத்துடன் பதிவு செய்கிறார்.

தமது மொழிபெயர்ப்பில் “தெலுங்கான சொல்லும் கதைகள்” என்னும் நூலையும் தந்திருக்கிறார். செகந்திராபாத் ஹைதராபாத் ஆகியவற்றை அசோகமித்திரனின் இளமைக்காலம் மற்றும் சுப்ரபாரதி மணியனின் நடுவயது இவற்றை வைத்து நாம் வாசித்தோம். சமகால வரலாறை அதன் கொந்தளிப்பை இவரது கதைகளின் வாயிலாக அறிகிறோம்.

தெலுங்கானா போராட்டத்தின் பின்னணியில் உள்ள வரலாற்றுக்காலப் பின்னணி, பண்பாடு, பூகோளம் மற்றும் பொருளாதாரக் காரணங்கள் சரியாக நம்மால் புரிந்துகொள்ளப் படவில்லை. நிறைய இலக்கியங்களுக்கு அது களனாகும். வாரப் பத்திரிக்கைகள் மற்றும் வெகுஜனப் பத்திரிக்கைகள் பல்சுவை இதழ்களில் இவரது கதைகள் பிரசுரிக்கப் படும் போது சமகால வலியைப் பதிவு செய்த இவரது தேர்வு மிகவும் பாராட்டப் பட வேண்டியது.

“தீபாவலி” என்னும் கதையில் நாதஸ்வரக் கலைஞர்களுக்கு தமிழ் நாட்டில் குறைந்து வரும் அங்கீகரிப்பு பதிவாகி இருக்கிறது. கொண்டாட்டங்களும் பண்டிகைகளும் தொலைக்காட்சிகளால் கடத்தப் பட்டுவிட்ட கால கட்டம் இது.

வாசகர்களை மனதில் வைத்தே கதை சொல்ல வேண்டும் என்னும் கட்டுப்பாட்டை ஒரு எழுத்தாளர் தானே எடுத்துக் கொள்ளுவது காலைக் கட்டிப் போட்டுக் கொண்டு நீச்சலடிப்பதாகிவிடும். இதைத் தாண்டி அவர் செல்லும் போது இன்னும் கூர்மையாக அவரது படைப்புகள் வெளிப்படும்.

பெண் எழுத்தாளர்கள் வாசகிகளுக்காகத் தேர்ந்தெடுக்கும் கதைகளும் இந்தத் தொகுதியில் இருக்கின்றன. பெண் எழுத்தாளர்கள் தொடாதவையும். ஆண்களுக்கு முற்றிலும் அன்னியமானது பெண்மனம் காணும் உலகம். பெண் எழுத்தாளர்கள் எல்லோருக்குமே அதைப் பதிவு செய்யும் வசதி , சாத்தியம் ஆண் எழுத்தாளர்களை விட மிக அதிகம். அந்த எதிர்பார்ப்புடன் இந்த நூல் மதிப்புரை அவரை வாழ்த்துகிறது.

Series Navigationவெட்டிப்பயபடிக்கலாம் வாங்க… “ வகுப்பறை வாழ்விற்கானப் பந்தயமா..” ஆயிஷா நடராசனின் “ இது யாருடைய வகுப்பறை “ : நூல்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *