தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்

This entry is part 12 of 23 in the series 14 ஜூன் 2015

 

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,

மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,), புதுக்​கோட்​டை.

E.mail: Malar.sethu@gmail.com

 

img_5047தொல்காப்பியம் காலப் பழமையும் கருத்தின் கனிவும் சாலச்சிறந்தது தமிழரின் கலைக்களஞ்சிமாகத் திகழ்வது.தொல்காப்பியம் பரந்துபட்ட ஓர் இலக்கணக்கடல். விரிந்த நூலாயினும் செறிந்த கருத்துகளைத் தன்னகத்தேகொண்டது.தமிழகத்தின் பண்டைக்கால வரலாற்றைச் சான்றுகளுடன் அறிய உதவும் பேரேடு இது எனக் கூறலாம். ஒரு மொழியில்முதலில் தோன்றியது இலக்கியம் அதனை அடியொற்றி அமைவது இலக்கணம்.

இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்’ என்ற பவணந்தியாரின் கூற்று இதனைப் புலப்படுத்தும்.தொல்காப்பியர் ஒரு பெரும் இலக்கண நூலை இயற்றி விதிகள் வகுக்க வேண்டுமெனின் தமிழ்கூறு நல்லுலகத்தில் அதற்குமுன்னரேஎண்ணற்ற தமிழ் நூல்கள் இருந்திருக்க வேண்டும். அன்றியும் அவ்விலக்கியங்கட்குப் பலர் இலக்கண நூல்கள்எழுதியிருந்தனர் என்பதைத் தொல்காப்பியர் என்ப, ​மொழிப, என்மனார், புலவர் என்பன போன்ற ​சொற்களால் சுட்டுவதுகொண்டுஅறியலாம். எல்லாவற்றிற்கும் மேலாகப் பாயிரம் எழுதிய பனம்பாரனாரே.

முந்து நூல்கண்டு மறைப்பட எண்ணிப்

புலந்தொகுத்தோன்”

என்று கூறிவிட்டதால் இது ஐயத்திற்கிடமின்றித் தெளிவாதலறியலாம். தொல்காப்பியர் மரபியலில் உயிர் மரபுக​ளைப் பற்றித் ​தெளிவாக அறிவியல் அறிஞர்களும் வியக்கும் வண்ணம் பல ​செய்திக​ளை எடுத்து​ரைத்துள்ளார்.

மரபு – விளக்கம்

த​லைமு​றை த​லைமு​றையாக (பரம்ப​ரை பரம்ப​ரையாக) வழி வழியாக வரும் மு​றை​மை பற்றிக் கூறும் பகுதி​யை எடுத்து​ரைப்ப​தே மரபியலாகும். உயர்ந்​தோர் கூறும் வழக்கால் மரபு ​தோன்றுகிறது. உயர்ந்தவர்க​ளே வழக்கத்​தைஉருவாக்குகின்றனர். அத​னைச் ​செயற்படுத்துகின்றனர். அதனால்தான் ​தொல்காப்பியர்

வழக்​கெனப் படுவது உயர்ந்​தோர் ​மேற்​றே

நிகழ்ச்சி அவர் கட்டுஆகலான”(592)

என்று குறிப்பிடுகின்றார்.

மரபியல்

ஒல்காப் புகழ்பெற்ற தொல்காப்பியத்தில் பொருள் இலக்கணத்தினை அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல்,பொருளியல், மரபியல் என ஒன்பது இயல்களாகப் பகுத்துள்ளார். ஒன்பது இயல்களுள் ஒன்றான மரபியல்உணர்த்தும் செய்திகள் தொகுத்துத்தரப்பட்டுள்ளன.

மரபு என்பது ஒவ்வொரு பொருளுக்கும் ஆன்றோர் வழங்கிய சொற்களை அவர்கள் வழங்கிய முறைப்படியே கூறுவது ஆகும். இத்தகையமரபினைப் பற்றி கிளவியாக்கத்தில் கூறப்பட்டுள்ளது. யானை மேய்ப்பவனை பாகன் என்றும், ஆடுமேய்ப்பவனை இடையன் என்றும் கூறுவதேமரபு ஆகும். இவற்றை மாற்றிக் கூறினால் அது மரபு வழுவாகக் கருதப்படுகிறது.

செய்யுளிலும் செய்யுளுக்கு உறுப்பாகக் கூறப்பட்டவற்றுள்ளும் (​செய்யுளுக்கு யாப்பியல் வ​கையால் அ​மைந்த உறுப்புகள் இருபத்தாறு. அம்​மை, அழகு, என வரும் எட்டும் ​சேர்த்து ​செய்யுளுக்கும் ​செய்யுள் ​தொகுதிகளுக்கும் உறுப்பாகும்) ஒருவகை மரபுஇவ்வியலில் கூறப்பட்டுள்ளது. ​மேலும் செய்யுள் வழக்கிற்குப் பொதுவாகிய வேறு சில மரபுகளும் மரபியலில் கூறப்பட்டுள்ளன. உயர்திணை, அஃறிணை என்னும் இருவகைத் திணைகளைச் சார்ந்த பொருள்களின் இளமை, ஆண்மை,பெண்மை ஆகியவை பற்றிய மரபும், அஃறிணைப்பொருள்களாகிய புல், மரம் ஆகியவை பற்றிய மரபும் கூறப்பட்டுள்ளன.

மரபியல் சூத்திரங்களை இளம்பூரணர் 112 ஆகவும், பேராசிரியர் 110 ஆகவும் மேற்கொண்டுள்ளனர். மக்கள் தாமேஆறறிவுயிரே (1532) எனத் தொடங்கும் நூற்பாவையடுத்து ஒருசார் விலங்கும் உளவெளன மொழிப என்ற நூற்பாஇளம்பூரணர்உரையில் காணப்படுகிறது. இந்நூற்பாவுடன் ஒத்த கருத்துடைய நூற்பா போராசிரியர் உரையில் காணப்படவில்லை.

நூற்பாவின் அடிகளைப் பிரித்தும் சேர்த்தும் பொருள் கொள்வதனால் எண்ணிக்கையில் வேறுபாடு காணப்படுகிறதேஒழியப் புது நூற்பாக்கள் உரைகளில் கிடையாது. உலகில் உள்ள உயிர்க​ளின் மரபுக​ளை அறுவ​கை உயிர்ப்பாகுபாடுகளில்உள்ளடக்கித் ​தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். தாவர இனம், விலங்கினம், மக்கள் இனம் உள்ளிட்டவற்றிற்குரிய    மரபுக​ளையும் ​தொல்காப்பியர் மரபியலில் ​தெளிவுறுத்தியுள்ளார்.

அறுவகை உயிர்ப்பாகுபாடு

தொல்காப்பியர் இளமைப் பெயரில் உயிர்பாகுபாடுப் பற்றி கூறுகையில், ஓரறிவுயிர் என்னும் உயிர்ப் பாகுபாடுஅதிகாரப்பட்டமையால் அதனொடு பொருந்த உலகத்துப் பல்லுயிர்களையும் ​ அறுவகையாக 8 நூற்பாக்களில்வகைப்படுத்திக்கூறியுள்ளார்.

மரபியலில் மெய், வாய், மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளால் பற்றப்படும் ஊறு, சுவை, நாற்றம், ஒளி, ஒலிஆகிய புலன்களுடன் மன உணர்வினையும் சேர்த்து, உயிரினங்களைத் தொல்காப்பியனார் ஆறுவகையினாற் பிரித்துள்ளார்.

அறுவ​கை உயிர்க​ளைத் ​தொல்காப்பியர்,

ஒன்ற றிவதுவே உற்ற றிவதுவே,

இரண்டறிவதுவே அதனொடு நாவே

மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறிவதுவே அவற்றோடு செவியே

ஆறறிவதுவே அவற்றொடு மனனே!

நேரிதின் உயர்ந்தோர் நெறிப்படுத்தினரே”

என்று கூறியுள்ளார்.

உடம்பால் மட்டும் அறிவன ஓரறிவு உயிர்கள் ஆகும். உடம்பாலும் நாவாலும் அறிவன இரண்டு அறிவு உயிர்கள் ஆகும். உடம்பு, நா, மூக்கு மூன்றாலும் அறிவன மூ அறிவு உயிர்கள் ஆகும். உடம்பு, நா, மூக்கு, கண் இ​வை நான்காலும் அறிவனநாலறிவு உயிர்கள் ஆகும்.

உடம்பு, நாக்கு, மூக்கு, கண், காது இ​வை ஐந்தால் அறிவன ஐந்தறிவு உயிர்கள் ஆகும். இவ்​வைந்​தோடு மனத்தாலும் அறியும் அறிவு​டையன ஆறறிவு உயிர்கள் ஆகும் என்று ​தெளிவாக அறிந்​தோர் ​நெறிமு​றையாக உணர்த்தியுள்ளனர் என்று ​தொல்காப்பியர் ​மொழிகின்றார்.

உணர்வுகள் படிப்படியே தோன்றும் வளர்ச்சி நிலை​க​ளை அடிப்ப​டையாக ​வைத்துக் ​கொண்டு உயிர்களை இவ்வாறுஆறு பிரிவுகளாகத் தொல்காப்பியர் பகுத்துள்ளார். இம்மரபியலில் உயர்தி​ ணைச் சாதிகள் நான்கனைப் பற்றியும்உத்திமுதலியன பற்றியும் கூறப்பட்டுள்ளன. இவ்வியலில் தொல்காப்பியனார் சில பெயர்களுக்கு மட்டும் மரபு வரையறைகூறியுள்ளார். தொல்காப்பியர் சுருக்கமாக வரையறுத்துக் கூறுவதற்குத் தகுந்தவாறு அமைந்த பெயர் மரபுகளைமட்டும்எடுத்துக்கூறி. விரிந்த நிலையில் வரும் மரபுடையவற்றைப் பொது விதிகளால் கொள்ள வைத்தார் என்பது தெரிகிறது.

தாவர மரபு

இறைவன் படைப்பின் விந்தையைச் சிந்திந்தால் சிந்தனைக்கோர் அளவில்லை. ஓரறிவு உடைய மரஞ்செடி கொடிகள் முதல் ஆறறிவுபடைத்த மனிதன் வரை தொல்காப்பியத் திருநூலில் உலாவரக் காண்கிறோம். ஏன்? தேவர்களும்,அசுரர்களும், இயக்கர்களும், கந்தர்வர்களுங்கூட இந்நூலில் இடம் பிடித்துள்ளனர். தேவர்களினும் மனிதனும் உயர்ந்த நிலையில் ஒளிர்வதாக ஆன்மிகச் செல்வர்கள் இயம்புவர். காரணம்தேவர்கள் நல்வினைப் பயன்களை மட்டுமே துய்ப்பவர்.அழியா நிதியாகிய வீடுபேறு மனிதப் பிறவி ஒன்றால் மட்டுமே அடையமுடியும்.இருவினை அகற்றி, மும்மலமறுத்து, நாற்பேறும் பெற்றுய்ய இடம் தருவது மானிடப்பிறவியே. தொடு உணர்ச்சி ஒன்றே கொண்ட இயற்கையின்இரகசியமாகத்தாவரங்கள் திகழ்கின்றன.

ஓரறிவு உயிர்

உடம்பால் மட்டும் அறிவன ஓர் அறிவு உயிர்கள். புல், மரம், ​செடி, ​கொடிகள், தாவர இனங்கள் அ​னைத்தும் இதில் அடங்கும். இத​னைத் ​தொல்காப்பியர்,

புல்லும்மரனும் ஓர் அறிவின​வே

பிறவும் உள​வே அக்கி​ளைப் பிறப்​பே” (1527)

என்று குறிப்பிடுகின்றார்.

புல்லும் மரமும்

புல் என்றவுடன் அறுகம்புல், கோரைப்புல் என்பன நம் மனக் கண்ணில் தோன்றும் தென்னையோ, பனையோ, மரம் என்று மயங்குவோம்.தொல்காப்பியர் கருத்துப்படி தென்னை, பனை. பாக்கு, மூங்கில், வாழை, முருங்கை போல்வன மரங்கள்ஆகா. அவை புல் இன வகையைச்சேர்ந்தனவே, புல்லுக்கும், மரத்திற்கும் வேற்றுமையை புலப்படுத்தும் தொல்காப்பியனார் கருத்துகளை சிந்திக்க வேண்டாமா?

புறக் காழனவே புல்லெனப் படுமே

அகக் காழனவே மரமெனப் படுமே”

என்பவை தொல்காப்பியர் நூற்பாக்கள்,

உள்ளே வைரம்பாய்ந்த உள்வயிர்ப்புடையவற்றையே மரம் எனக் கருதுகிறார் ஒல்காப்புமை தொல்காப்பியனார். புல்லின் தன்மையும்சற்றே விரிவாக இயம்பியுள்ளார் தொல்காப்பியனார்.

தோடே மடலே ஓலை என்றா

ஏடே இதலே பாளை என்றா”

ஈர்க்கு குலையே நேர்ந்தன பிறவும்

புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்”

தோடு, மடல், ஓ​லை, ஏடு இதழ், பாளை ஈர்க்கு, குலைகளை உடையவை புல் இனத்தில் பாற்படும் . இதனால் வாழை, தென்னை, ஈச்சை, பனைமரங்கள் மட்டுமின்றி தாமரை, கழுநீர் போன்ற நீர்வாழ் தாவரங்களும் புல் இன வகையைச் சாரும்என உணரலாம்.

புறவயிர்ப்பும், உள்வயிர்ப்பும் இல்லாதனவற்றுள் ஒரு சாரன. இவ்வகைப்பட்ட உறுப்பு பெயருடையதாகி இவையும் புல்லெனப்படும்எனப்பகர்ந்து வாழை, ஈந்து, தாமரை, கழுநீர் என்பனவற்றை எடுத்துக்காட்டாக இயம்புகிறார் இளம்பூரணர்.

மரத்தின் உறுப்புகளைத் தொல்காப்பியர் நூலின் வழிக் காண்பதும் சாலச் சிறந்தது. ​தொல்காப்பியர்,

இலையே முறிவே தளிரே தோடே

சினையே குழையே பூவே அரும்பே

நனையே உள்ளுறுத் தனையவை யெல்லாம்

மரனொடு வரூ உம் கிளவி என்ப.”

மரவ​கை உறுப்புகளாகக் குறிப்பிடுகிறார்.

இ​லை, முறி, தளிர், ​கோடு, சி​னை,கு​ழை, பூ, அரும்பு, ந​னை இ​வை ​போன்றன மரங்களின் உறுப்புகளாகும்.

புல்லுக்கும் மரத்திற்கும் ​பொதுவாக உள்ள உறுப்புக​ளை,

காயே பழமே தோலே செதிளே

வீழோ டென்றாங் கவையும் அன்ன”

என்று ​தொல்காப்பியர் எடுத்து​ரைக்கின்றார். காய், பழம், ​தோல், ​செதில், விழுது ​போன்ற​வை புல்லுக்கும், மரத்திற்கும் ​பொதுவான​வையாகும்.

இதற்கு உரையாசிரியர் தரும் சில விளக்கங்களை ஈண்டு நம் சிந்தனைக்கு கொணர்வது மிகப் ​பொருத்தமு​டையதாக இருக்கும்.

புறவயிர்ப்பும், உள்வயிர்ப்பும் இல்லாதனவற்றுள் ஒரு சாரன இவ்வுறுப்புப் பெயர் உடையதாகி மரமெனப்படும் என்று கூறி முருக்குதணக்கு என்பனவற்றை உதாரணங் காட்டுகிறார். தாழை பூ உடைத்தாகலானும், கோடுடைத் தாகலானும்,புறவயிர்ப்பின்மையானும்மரமெனப்படுமாயினும் புல் என்றல் பெரும்பான்மை என்று கூறுவதும் நம் சி\ந்தனைக்குரியது.

“புறக்காழன எனவே அவ்வழி வெளிறென்பது அறியப்படும். அவை பனையும், தெங்கும், கமுகும் முதலாயின புல் எனப்படும். இங்ஙனம்வரையறை கூறிப்பயந்த தென்னை? புறத்தும், அகத்தும் கொடி முதலாயின காழ்ப்பின்றியும், அதில் மரம்போல்வன இடையிடை பொய்பட்டும்புல்லும் மரமும் வருவன உள” என்று பேராசிரியர் பகர்கின்றார்.

திணைப் பாகுபாட்டில் தாவரங்கள்

தொல்காப்பியர் நிலம் வகுத்த பாங்கே (முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தல், பாலை) தமிழர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவாழ்வைக் காட்டுகிறது. மரம், செடி, கொடிகளால் திணைப்பெயர் வகுத்த ஆசிரியர் கருப்பொருளில் உணவு(உணா) மரம் போல்வனவற்றையும்இயம்புகிறார் பூ முதலியவற்றையு சிந்திக்கச் செய்கிறார்.

தெய்வம் உணாவே மாமரம் புட்பறை

செய்த யாழின் பகுதியோடு தொகை

அவ்வகைப் பிறவும் கருயெவன மொழிப”

புறத்திணையில்,

வெட்சி தானே குறஞ்சியது புறனே

காஞ்சி தானே பெருந்திணைப் புறனே”

வாகை தானே பாலையது புறனே

காஞ்சி தானே பெருந்திணைப் புறனே”

வெட்சி, தும்மை, வாகை, காஞ்சி போன்ற மலர்களின் சிறப்பினைச் சிந்தனையில் தேக்குகிறார்.  இவை மட்டுமா?

போரிடை மலர்கள்

மன்னர்கள் அடையாளம் கருதித் தம்முள் அறம் நிறை அரும்போர் புரிந்த வரலாற்றை இன்றைய அறிவியல் உலக அழிவுப் போரோடுஒப்பிட்டால் நெஞ்சங்குமுறும்,

வேந்திடை உறுபகை தெரிதல் வேண்டி

 ஏந்துபுகழ்ப் போந்தை வேம்பே ஆரென வரூஉம்

மாபெரும் தானையர் மலைந்த பூவும்”

என்ற நூற்பாவின் தொடரால் போந்தை, வேம்பு, ஆத்தி மலர்களின்  அரும்புகழையும், அவற்றைப் புனையும் வேந்தரையும்  புனைவதற்கான காரணத்தையும் இயம்புவது நம் சிந்தனைக்கு உரியது.

ஓரறிவு உயிர்க்கு மனம் உண்டா?

ஒன்று முதல் ஐந்து ஈறாகிய பொறியுணர்வு மனமின்றியும் பிறப்பனபோல வேறு கூறியது என்னை யெனின் ஓரறி உயிர்க்கு மனம்இன்மையின் அங்ஙனம் கூறுனார் என்பார் போராசிரியர். இக்கருத்து அறிவியறிஞர்கள் மேலும் சிந்திக்க இடம்கொடுக்கிறது. ஊனமும், செவிடும்,குருடும் என அவயவத்தான் குறைவுபட்டாரை குறைந்த வகை அறிந்து அவ்வப்பிறப்பினுள் சேர்த்துக் கொள்க, என்ற போராசிரியர் உரைஆய்வுக்கு உரியது.

அறிவியல் அறிஞர் J.C போஸ் போன்றவர்கள் ஆய்வும், சித்தர்கள் சிந்தனையும், தொட்டால் சிணுங்கி போன்ற தாவரங்களின்செயல்பாடும் சிந்தித்தால் ஒரறிவு உயிர்க்கும் மனம் உண்டென உறுதியாக நம்பலாம். தொல்காப்பியர் ஆறாம்உயிரே பிறவும் உளவேஅக்கிளைப்பிறப்பே” என்ற நூற்பா வழங்கியுள்ளது ஒன்று முதல் ஐயறிவு உடைய உயிர்களுக்கு மனம் இல்ல என்று உறுதிப்படுத்துவதாகத்தோன்றலாம்.

மனம் இருப்பது வேறு, மனம் செயல்படுவது வேறு. சிந்திக்கும் மனப்பாங்கு, நல்லது கெட்டது ஆயும் திறன், எதிர்கால விளைவை அறியும்பாங்கு மனிதர்க்கு உரியது என்று மட்டுமே கொள்ளல் தரும். ஆறாம் அறிவாகிய மன அறிவு படைத்தநாம் சிந்தித்துத் தெளிந்து உண்மைப்பொருளை உள்ளத்தால் பற்றிப்பிடித்து அதனில் கரைந்தது போதலே வாழ்வின் முழுப்பயன் என்று உணர்தல் ​வேண்டும். தொல்காப்பியத்துள்கோட்டுப் பூ, கொடிப்பூ, நிலப்பூ, நீர்ப்பூ நான்கும் இடம் பெற்றுள்ளன.

செயற்கை வாழ்வில் முற்றும் திழைத்து இயற்கையை வேர் அறுக்க முயலும் இக்காலத்தில் தொல்காப்பிய முனிவர் வாழ்ந்தபழங்காலத்தில் மக்கள் யாவரும் இயற்கை வாழ்வில் ஒன்றி நுண்மாண்நுழைபுலமும், சிந்தனைச் செல்வமும்,சீரிய வாழ்வும் கொண்டுசிறப்புற்று விளங்கினர் என்றால் மிகையாகாது.

சொல் வேறு, செயல் வேறாய் வாழும் நாம் எல்லா உயிர்க்கும் பசிப்பிணியும், உடற்பணியும் உளப்பிணியும் தீர்த்து ஆன்ம தாகத்தைத்தணிக்கும் மரம், செடி, கொடி, வகைகளைப் போற்றிப் காப்பது நமது கட​மையாகும்.

ஊர்வன, பூச்சியினங்கள்

நந்தும் முரளும் ஈர்அறிவின​வே

பிறவும் உள​வே அக்கி​ளைப் பிறப்​பே”(1528)

என்று ​தொல்காப்பியர் ஈரறிவு உயிர்க​ளைப் பற்றி குறிப்பிடுகிறார். இ​வை ஊர்வனவாகும். நத்​தைடூ முரள் என்ற மீன் வ​கை, சிப்பி, கடல்வாழ் உயிரினங்களில் சில இரண்டறிவு உயிரினங்களாகும். இ​வை கடலில் ஊர்ந்து வாழ்வன.

மூவறிவு ​கொண்ட​வை

மூவறிவு ​கொண்ட உயிரினங்க​ளை,

சிதலும் எறும்பும் மூவறிவின​வே

பிறவும் உள​வே அக்கி​ளைப் பிறப்​பே” (1529)

என்று ​தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். க​றையான், எறும்பு இ​வை ​போன்ற இனங்கள் தொடு உணர்ச்சி, நா உணர்ச்சி, மூக்குணர்ச்சிமூன்றும் கொண்டன.

நாலறிவு ​கொண்ட​வை

வண்டும் தும்பியும் நான்கறிவின​வே

பிறவும் உள​வே அக்கி​ளைப் பிறப்​பே”(1530)

என்று நாலறிவு உயிர்க​ளைப் பற்றித் ​தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். வண்டு, தும்பி, இவற்றின் இனங்கள், ​தொடு உணர்வு, நா உணர்வு, மூக்குணர்வு, இவற்றொடு கட்புலன் உணர்வும் பெற்றுத் திகழ்வன.

ஐந்தறிவு ​கொண்ட​வை

விலங்கினங்கள் அ​னைத்தும், மனிதர்களில் விலங்குளாய் இருப்​போரும் மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்தறிவு உ​டைய உயிர்களாவர். இத​னை,

மாவும் மாக்களும் ஐயறிவின​வே

பிறவும் உள​வே அக்கி​ளைப் பிறப்​பே” (1531)

என்று ​தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

மக்களினம்

“மக்கள் தாமே ஆறறிவினவே” என்று அறுதியிட்டுப் பேசும் தொல்காப்பியனார் “பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே “எனத் தேவர்,அசுரர், இயக்கர் முதலான பிறவிகளையும் தழுவிக்கொள்கிறார்.

இவர்கள் மட்டுமோ ஆறறிவு படைத்தவர்கள். மனிதனின் ஆணவத்திற்கு முற்றுப் புள்ளி ​வைக்கிறார் தொல்காப்பியனார் “ஒரு சார்விலங்கும் உளவென மொழிப,” கிளியும், குரங்கும் யானையுங் கூட ஆறறிவு கொண்டவை” என்கிறார்உரையாசிரியர். இந்தியத் திருநாட்டின்அறிவியல் அறிஞர் நோபல் பரிசு பெற்ற பெருந்தகை ​ஜெகதீஸ்சந்திர​போஸ் இத்தகு ஒரறிவு படைத்த உயிர்களை ஆராய்ந்து அவற்றின்பெருமையை உலகிற்கு உணர்த்தியவர், இசை கேட்டு உருகும் தன்மையும்கொண்டவை தாவரங்கள் என்று இன்றைய அறிவியல் உலகம்ஏற்றுக்கொண்டுள்ளது.

​                தொல்காப்பியர் குறிப்பிடும் உயிர் மரபுகள் குறித்த ​செய்திகள் இன்றுள்ள அறிவியல் அறிஞர்க​ளும் வியப்புறு வண்ணம் அ​மைந்திருப்பது ​நோக்கத்தக்கதாகும். ​தொல்காப்பியரின் மரபியல் உயிர்களின் பரிணாம வளர்ச்சி​யை எடுத்து​ரைக்கும்இயலாகவும் அ​மைந்துள்ளது. பல்லுயிரின வளர்ச்சி​யையும் அவற்​றை அழிக்காது பாதுகாக்கும் சமுதாயப் ​பொறுப்புணர்​வையும் ​தொல்காப்பியர் மரபியல் வழி நமக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Series Navigationமூன்றாம் குரங்குஎழுதவிரும்பும் குறிப்புகள் நயப்புரை, மதிப்பீடு, விமர்சனம் முதலான பதிவுகளில் வாசிப்பு அனுபவம் வழங்கும் எண்ணப்பகிர்வு
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *