ஆம்பளை வாசனை

This entry is part 5 of 19 in the series 5 ஜூலை 2015

சிறகு இரவிச்சந்திரன்
0

என்னுடைய மனைவிக்கு அவர்கள் தூரத்துச் சொந்தம். அத்தை முறை என்று சொல்வாள். சிறு வயதில் எப்போதாவது அவளுடைய அம்மா அங்கே கூட்டிப் போவதுண்டாம். அப்போதெல்லாம் அந்த அத்தைகள் பெரிய படிப்பு படித்து பெரிய பதவியில் இருந்தார்கள். இவர்கள் இருக்கும் ஒரு மணி நேரத்திலே ரொம்பவும் நாசுக்காக ரெண்டொரு வார்த்தைதான் பேசுவார்களாம். ஆங்கிலக் கலப்பில்லாமல் அவர்களுக்குப் பேசத்தெரியாது. இன்னும் கூட நினைவிருக்கிறது என்பாள் என் மனைவி. குழந்தையாக இருக்கும்போது இவளைத் துடைக்க பயன்படுத்திய துண்டை அவர்கள் தனியே எடுத்து வைத்து சலவைக்குப் போட்டார்களாம். சுத்தம் பற்றி ஒரு உரையே நிகழ்த்துவார்களாம். இருவரும் திருமணம் செய்து கொள்ளாததற்கு அதுவும் ஒரு காரணம் என்பாள் என் மனைவி. ஆண் என்பவனே அசுத்தம் என்பது மாதிரியான ஒரு எண்ணம் அவர்கள் மனதில் இருந்தது அது அவர்கள் பேச்சில் அடிக்கடி வெளிப்படுமாம்.
எனக்கு இப்போது ஐம்பதைக் கடந்த வயது. பிள்ளைகள் பெரியவர்களாகிவிட்டார்கள். அதனால் கிடைக்கும் நேரத்தில் நானும் என் மனைவியும் அட்டவணை போட்டுக்கொண்டு எங்காவது கோயில் குளம் என்று சுற்றத் தொடங்கிவிடுவோம். திருவான்மியூரில் ஒரு கோயிலுக்குப் போகலாம் என்று அன்று கிளம்பினோம்.
பழைய கோயில். பெரிய குளம். ஆனால் தண்ணீர்தான் இல்லை.
” என்னங்க இப்படி இருக்கு ”
” பேப்பர் படிக்கலியா. குளத்தைச் சுற்றி இருக்கிற கோயில் நிலங்கள ஆக்கிரமிப்பு செஞ்சுட்டாங்களாம்.
குளத்துக்கு தண்ணி வர வழியெல்லாம் அடைஞ்சு போச்சு. அதான் இப்படி கிடக்கு. ”
பெரிய கோயில். சிவன் கோயில். மேற்கு பார்த்த லிங்கம். பல கோயில்களில் பார்த்திருக்கிறேன். லிங்கம் மேற்கு பார்த்துத் தான் இருக்கிறது. ஏன் அப்படி என்று அவளிடம் கேட்டேன். அவள்தான் பல ஆன்மீக பத்திரிக்கைகளை விடாமல் படிப்பவள். ஏதாவது ஆகம சாஸ்திர விதியாயிருக்கும் என்றாள்.
மேற்கு பார்த்த சன்னதிக்கு தெற்கு வாசல். கூட்டம் அதிகமில்லை. திரை போட்டிருந்தார்கள். நைவேத்தியம் என்றாள் மனைவி. எங்களுக்கு முன்னே ஒரு குடும்பம் காத்திருந்தது. அர்ச்சனைத்தட்டோடு நின்றிருந்தார்கள்.
அர்ச்சகர் வந்து, திரை விலக்கப்பட்டு, தரிசனம் முடிந்த பின் வெளியே வந்தோம். மணி ஆறுகூட ஆகியிருக்கவில்லை.
” என்னங்க இங்கேதான் எங்க அத்தைங்க வீடு. போயிட்டுப் போலாமா ”
” யாரு லாண்டிரிக்காரவுங்களா ? ”
” இந்தக் கிண்டல்தானே வேணாங்கறது. புரொபஸருங்க. அவங்களைப் போயி லாண்டிரி அதுஇதுன்னு கிட்டு. ”
” சரி சரி நா வெளியவே நிக்கறேன். நீ போயிட்டு வா. அவங்களுக்குத்தான் ஆம்பள வாசனையே பிடிக்காதே? ”
” அதெல்லாம் அப்பங்க. இப்ப அவங்களுக்கு எழுவது வயசாவது ஆயிருக்கும். இன்னுமா அதெல்லாம் பாக்கப்போறாங்க ”
” பாக்கத்தானே போறே ”
” இந்த குத்தல் பேச்சுதானே வேணாங்கறது ” என்று என் கையை பிடித்து இழுத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு தெருவிற்குள் நுழைந்தாள்.
கீழே கடைகள். பக்கவாட்டில் குறுகலான படிகள். மேலே விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
” இருக்காங்க போலிருக்குது. வாங்க போலாம். ”
தயக்கத்துடன் படிகள் ஏறினேன். படிகளில் ஒரு ஜீரோ வாட் பல்பு எரிந்து கொண்டிருந்தது. அழைப்பு மணி இருக்கிற இடம் தெரியவில்லை. பக்கத்தில் உள்ள சுவரில் கையால் தடவிய போது ஏதோ ஸ்விட்ச் போன்று ஒன்று தட்டுப்பட்டது. மெல்ல அழுத்திவிட்டு அவள் பின்னால் நகர்ந்து கொண்டேன்.
” யாரு ” என்ற குரலுடன் ஒரு மூதாட்டி கதவருகே வந்தாள். உள்ளே ஏதோ விசையை அழுத்தியிருக்க வேண்டும். வாசல் கதவுக்கு மேலிருந்து ஒளிவெள்ளம் எங்கள் முகங்களின் மேல் பாய்ந்தது.
” யாரு “.
” நாந்தேன் அத்தை காமாட்சி ”
” காமாட்சியா ? எந்த … ? ”
” சுலோசனா பொண்ணு காமாட்சி ”
” அட காமாட்சியா? அடையாளமே தெரியலை ” பார்வை என் பக்கம் திரும்பியது. கேள்விக்குறியே முகமாக மாறியது.
” எங்க வூட்டுக்காரரு ”
” வணக்கம் ”
கதவு திறக்கப்பட்டு நாங்கள் உள்ளே செல்வோமா என்றாகிவிட்டது. விசாரணைகள் வாசல்படியிலேயே முடிந்து வெளியேற்றப்படுவோம் என்பது போன்ற ஒரு எண்ணம் என் மனதில் துளிர்விட ஆரம்பித்த போதுதான் இடுப்பிலிருந்து சாவிக்கொத்தை எடுத்து கதவைத் திறந்தார்கள் அந்த ‘ அத்தை ‘
எழுபது வயதிருக்கும் அவர்களுக்கு. உள்ளேயிருந்து இன்னொரு மூதாட்டி வந்தார்கள். ஏறக்குறைய இரண்டு பேரும் ஒரே அச்சில் வார்த்தது போலிருந்தார்கள்.
” காமாட்சி வந்திருக்கா ”
” காமாட்சியா ? ”
” அதான் சுலோசனா பொண்ணு ”
” சுலோசனாவா ”
” ரங்கம் பாட்டியோட பொண்ணு ”
‘ ரங்கம் பாட்டியா ‘ என்று கேட்கப்போகிறார்கள் என்று நான் நினைப்பதற்குள் அத்தை முந்திக்கொண்டார்கள்.
” மேலப்பாளையம். ரங்கம் போய் சேந்துட்டா இல்லை? ”
” இல்லை அத்தை, தம்பி கூட இருக்காங்க ”
” சுலோசனா ? ”
” என்கூட இருக்காங்க ”
” நீ ”
” என் கூட இருக்காங்க ” என்றேன் நான்.
காமாட்சி முறைத்தாள்.
” என் வூட்டுக்காரரு. தமாஷா பேசுவாரு ”
இதெல்லாம் இந்தக் கதைக்கு முக்கியமான விசயங்களில்லை. இரவு உணவு முடித்துவிட்டுத்தான் போக போகவேண்டும் என்று இரண்டு அத்தைமார்களும் அடம் பிடித்ததும், ஒரு ரசம் ஒரு பொரியல் என்று சாப்பாடு சுடச்சுட வாழை இலையில் பறிமாறியதும் என்னை திகைக்க வைத்த விசயங்கள்.
எல்லாம் முடிந்த பின் வெற்றிலை பாக்குத்தட்டில் ரவிக்கைத் துண்டு நூறு ரூபாய் நோட்டு என்று ஏக தடபுடல்.
படியிறங்கும்போது பார்த்தேன். சலவைத்துணிகளுக்கான மூங்கில் கூடையில் நான் கை துடைத்துக்கொண்ட துண்டு.
எதுவும் மாறவில்லை.

0

Series Navigationதொடுவானம் 75. காதலிக்க காலமுண்டுவெசயம்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *