பி.கே. சிவகுமார்
(ஜூலை 2, 2015 அன்று, நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கம் – சிந்தனை வட்டம் கூட்டத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் உரையாற்றுவதற்கு முன் அவரை அறிமுகப்படுத்தும்விதமாக, நேரம் கருதி இவ்வுரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் மட்டும் வாசிக்கப்பட்டன. பிற பகுதிகள் இணைந்த இந்த முழு-உரையின் பிரதி ஜெயமோகனிடம் கொடுக்கப்பட்டது.)
அனைவருக்கும் வணக்கம்!
எழுத்தாளர் ஜெயமோகனை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை வழங்கிய நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்க நிர்வாகிகள், ஜெயமோகன் வாசகர் வட்ட நண்பர்கள் பாஸ்டன் பாலாஜி, பழனி, கார்த்தி உள்ளிட்ட நண்பர்களுக்கு நன்றி.
”விலகும்போது தழுவலையும், தழுவும்போது விலகலையும் அறிந்த” என்ற ஜெயமோகனின் உவமை போல அல்லது “எரிதழல் காற்றை உணர்வதுபோல” என்ற ஜெயமோகனின் உவமை போல, அவர் எழுத்துகளை உள்ளும் புறமும் அறிந்த வாசகர்கள் இடையே, ஜெயமோகன் எழுத்துகளை அறிமுகப்படுத்துவது அதிகப்பிரசங்கித்தனமான வேலை. ஜெயமோகனும் அவர் எழுத்தும் என்னுள் உண்டாக்குகிற சில மனப்பதிவுகளை குறிப்புகளாக இவ்வாய்ப்பில் தொகுத்துக் கொள்ள முயல்கிறேன்.
”மண்ணை விலக்கி முளைத்தெழும் வாழைக்கன்றுபோல” – இந்த உவமையும் ஜெயமோகனுடையதுதான் – அவர் வாழ்வு தரும் அசௌகரியங்களைப் பொருட்படுத்தாது, எழுத்தையே மனமாகக் கொண்டு செயலாற்றிக் கொண்டிருக்கிறார். ”அறம் என்ற சொல்லை அறியாத எவருமில்லை. அறமென்றால் எதுவென்று முழுதறிந்தவரும் இல்லை.” என்று வெண்முரசு தொடரில் எழுதிய ஜெயமோகனின் எழுத்தின் நோக்கம், அறமென்றால் என்னவென்று முழுதாக அறிவதுதானோ என்று தோன்றும். அந்த அறம் ஒற்றைப் பரிமாணமுடையதல்ல என்று உணர்ந்து இருப்பதால்தான், அந்த அறத்தின் பல்வேறு வண்ணங்களை அவர் இழைத்துக் கொண்டேயிருக்கிறார். அவர் வெண்முரசில் காட்டிய அம்பையைப் படித்தவர்கள், பீஷ்மரை அந்தக் கொஞ்ச நேரத்துக்காவது வெறுத்திருப்பார்கள் அல்லவா? அந்த அம்பை காலகாலத்துக்கும் தமிழ் இலக்கியத்தில் – வாசகர் மனதில் – பீஷ்மருக்கு இணையாக ஜீவித்திருக்கப் போகிற அம்பை அல்லவா? காலத்தால் இப்படி நிலைத்திருக்கப் போகும் பெண் பாத்திரங்களைப் படைப்பவர் எப்படிப் பெண்களுக்கு எதிரானவராக இருக்க முடியும்? விசித்ர வீரியனை வாசக மனதில் இவ்வளவு ஞாபகம் வைக்கப்படப்போகும் படைப்பாக மாற்ற வேறு யாரால் முடியும்?
எந்நிலையிலும் எழுதிக் கொண்டிருப்பதே தன் வலிமை என்பதை ஜெயமோகன் மனம் தத்தளிப்பில் இருந்த காலங்களில் அவரின் தந்தையை ஒத்தவரும் ஆசானுமாகிய நண்பர் சுந்தர ராமசாமி, “எழுதுங்கள். அது ஒன்றே உங்களை ஆற்றுப்படுத்தும்” என்று சொன்ன நேரத்தில் இருந்து கற்றுக் கொண்டார். இந்த நேரத்தில் “என்னை நம்பி ஏன் வந்தாய், உன்னை நம்பி வா” என்று ஜெயகாந்தன் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டு இசையில் ஒளிவிட்டுப் பிரகாசித்த இளையராஜா நினைவுக்கு வருகிறார். ஓர் எழுத்தாளனின் எத்தனை வாசகர்கள் எழுத்தாளர் சொல்வதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு வாழ்ந்து காட்டுவார்கள் என்ற கேள்விக்கு பெரிதளவில் ஆதாரபூர்வமான விடைகள் இல்லை. ஆனாலும், அப்படி வாழ்ந்து காட்டுகிற சரியான ஒருவர் போதும் என்று நான் நினைத்துக் கொள்வேன். அப்படிப் பார்ப்போமேயானால், சுந்தர ராமசாமி சொன்ன, எழுதுங்கள், தொடர்ந்து எழுதுங்கள் என்ற அறிவுரையை ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கடைபிடிப்பதுடன் மட்டுமல்லாமல், படைப்பூக்கமும் செயற்திறனும் எதன் பொருட்டும் அறுபடாமல் பார்த்துக் கொண்டு, தமிழின் உக்கிரமான படைப்புகளைத் தந்துவருகிற ஜெயமோகன், என்னைப் பொருத்தவரை சுந்தர ராமசாமியின் மிகச் சிறந்த படைப்பாகும்.
சுந்தர ராமசாமியுடனான தன்னுடைய உறவைப் பற்றி, ஜெயமோகன் விரிவாக “நினைவின் நதியில்” என்ற நூலில் எழுதியிருக்கிறார். என்னைப் பொருத்தவரை அந்நூல் சு.ரா.வுக்குச் செய்யப்பட்ட மிகச் சிறந்த அஞ்சலி ஆகும். அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தவுடன் படித்து முடித்த பின்னரே என்னால் நிறுத்த முடிந்தது. அந்தப் புத்தகம் சு.ரா.வை எதிர்மறையாகக் காட்டுவதாகவும், அப்புத்தகத்தில் கூறப்படுகிற சம்பவங்கள் சில நடக்கவில்லை என்றும் விமர்சனங்கள் சில சு.ரா. அன்பர்களால் வைக்கப்பட்டன. சு.ரா. அமெரிக்கா வந்தபோது அவரைச் சிலமுறைகள் சந்தித்த வேளைகளில் நான் உணர்ந்த அவரின் பெருந்தன்மை, எல்லாக் கருத்துகளையும் செவிமடுத்துக் கேட்கும் தன்மை, தன்னிலும் மிக இளையோரையும் கூட சரிசமமாகவும் மரியாதையுடனும் நடத்தும் பண்பு, துடுக்காகவும் வெளிப்படையாகவும் என்னைப் போன்றோர் விவாதித்தாலும் கூட நிதானம் இழக்காமல் எடுத்துக் கொண்ட குணம், அவர் கருத்துகளில் அவருக்கு இருந்த நேர்மை, அவர் எழுத்துகள் மீதான விமர்சனத்தை எடுத்துக் கொண்ட ஆரோக்கியமான விதம், தன்னுடைய சில தனிப்பட்ட குறைகள் என தான் நினைப்பவற்றை வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட முதிர்ச்சி ஆகியவற்றை எல்லாம் ஜெயமோகனின் நினைவின் நதியில் புத்தகம் இன்னும் உணர்வுபூர்வமாகவும் விரிவாகவும் சொல்வதாகவே நான் உணர்ந்தேன்.
நண்பர்கள் மன்னிக்க வேண்டும். ஜெயமோகனைப் பற்றிப் பேசவந்துவிட்டு சுந்தர ராமசாமியைப் பற்றிப் பேசுகிறேனே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், சுந்தர ராமசாமியைப் பற்றிச் சொல்லாமல், ஜெயமோகனைப் பற்றி எப்படிப் பேச முடியும்?
தன் அம்மா வழியாக சிறுவயதிலிருந்தே வாசிப்பில் ஆர்வமும் எழுத்தில் ஊக்கமும் கொண்டவராக ஜெயமோகன் இருந்தார். பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் ரத்னபாலா, குமுதம், விகடன், கல்கி பத்திரிகைகளில் வெகுஜன பாணி கதைகளை எழுதியிருக்கிறார். ஆனாலும், அவரைக் கைப்பிடித்து இலக்கியத்துக்குள் அழைத்துவந்து ஆற்றுப்படுத்தியவர் ஜெயமோகனே சொல்வதுபோல, சுந்தர ராமசாமிதான். சு.ரா.விடம் உரையாடி உரையாடித்தான் ஜெயமோகன் நவீன இலக்கியத்தின் கச்சிதத் தன்மையையும் நவீன விமர்சனத்தின் கறார்த்தன்மையையும் கற்றுக் கொண்டார். சு.ரா.வின் கைபிடித்து நடந்தபடி, இலக்கியத்துள் காலடி எடுத்து வைத்த குழந்தை விரைவில், ஆற்றூர் ரவிவர்மா, எம். கோவிந்தன், கோசாம்பி என்ற பிற ஆசிரியர்களையும் கண்டு கொண்டது. இவர்களிடமிருந்து ஜெயமோகன் மார்க்சியம், வரலாற்றுப் பார்வை, முரணியக்கம் ஆகியவற்றில் தெளிவு பெற்றார். கார்ல் மார்க்ஸின் மிகப்பெரிய கொடை, தத்துவ மற்றும் வரலாற்று விவாதங்களுக்கு முரணியக்கப் பார்வையை முன்வைத்தது என்று ஜெயமோகன் எழுதுவது குறிப்பிடத்தக்கது.
இந்த முரணியக்கப் பார்வை இந்திய ஞான மரபின் தொன்மையான தரிசனங்களில் இயல்பாகவே இருந்திருக்கிறது என்பதையும் ஜெயமோகன் – இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள் நூலில் விளக்குகிறார். இந்த நூலுக்கு முன்னுரை எழுதிய மார்க்சியர் சோதிப் பிரகாசம், இந்து ஞான மரபில் என்று சொல்வதைவிட, இந்திய ஞான மரபில் என்று எழுதுவது சரியானது என்பது எனக்கு ஏற்புடையதாக இருக்கிறது. நவீனப் பிரச்னைகளுக்கு இந்திய வேர்கள் மூலம் தீர்வு சொல்வதையும், இந்திய லட்சியவாத அழகியலையும் ஜெயமோகன் ஜெயகாந்தனிடம் இருந்து கற்றுக் கொண்டார். இந்திய ஆன்மீகத்தையும் நாராயண குருவின் பாதையையும் நித்ய சைதன்ய யதியிடம் கற்றுக் கொண்டார். தமிழின் மரபான இலக்கியங்கள் மற்றும் அவற்றின் செழுமை குறித்த ஞானத்தை பேராசிரியர் யேசுதாசன், வேதசகாய குமார், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஆகியோருடனான உறவின் மூலம் வளர்த்துக் கொண்டார். நாட்டாரியல் குறித்த ஆர்வத்தைப் பேராசிரியர் அ.கா. பெருமாள் அவர்களுடனான தொடர்பு பெருக்கியது. நுண்மைக்குள் பொறிக்கப்பட்ட விரிவாக இலக்கியம் இருக்கவேண்டுமென்பதை அசோகமித்திரனிடம் கற்றுக் கொண்டார். நீரின் துளியில் நதியின் ஆழம் காட்டியவர் என்று அசோகமித்திரனின் எழுத்து குறித்து ஜெயமோகனின் அவதானிப்பு முக்கியமானது. சாதாரணத்துவத்தின் கலை என்றும் அவர் அசோகமித்திரன் எழுத்துகள் குறித்துப் பாராட்டுகிறார். படிப்பவர் மனதில் ஆழப் பதிந்துபோகும் இப்படிப்பட்ட சொற்றொடர்களை இவர் எங்கிருந்து பெறுகிறார் என்று நான் யோசிப்பதுண்டு. இப்படி ஜெயமோகனைப் பார்க்கும்போதெல்லாம் நமக்குக் கற்றுக் கொள்ளத் தோன்றுகிற விஷயம் – அவருக்கு ஆர்வம் இருக்கிற துறைகளின் சிறந்த குருக்களை அவர் தானாகத் தேடிச் சென்று கண்டடைந்திருக்கிறார். அவர்களிடமிருந்து கற்றதையும் பெற்றதையும் இன்றுவரை நன்றியுடன் நினைவு கூறுகிறார் என்பதே.
கறார்த்தன்மையுடனான விமர்சனத்தின் அவசியத்தை சுந்தர ராமசாமி மூலமும், அவர் மூலமாக க.நா.சு, வெங்கட் சாமிநாதன் ஆகியோர் வழியாக உணர்ந்த ஜெயமோகன், தமிழின் முக்கியமான படைப்பாளிகளைக் குறித்த விரிவான விமர்சனம் இல்லையென்பதையும், தமிழில் இலக்கிய விமர்சனம் ஒரு துறையாக உருவாக்கம் பெறவில்லையென்பதையும் உணர்ந்து தன்னுடைய முன்னோடி எழுத்தாளர் ஏழுபேரைக் குறித்து எழுதிய விமர்சன புத்தக வரிசை தமிழில் அப்போது புதுமையானது. ஜெயமோகன் வைக்கிற விமர்சனங்களில் ஒருவருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், தன் கருத்துகளை முன்வைப்பதில் அவர் காட்டுகிற முனைப்பும், உழைப்பும், அதன் பின் வைக்கிற தர்க்கங்களும் நிச்சயம் பாராட்டத்தக்கவை. உதாரணமாக, இலக்கிய முன்னோடிகள் வரிசையில் அவர் மௌனியைப் பற்றி எழுதுவதற்கு முன்வரை, மௌனியின் எழுத்தைப் பற்றிய விரிவான விமர்சனம் என்றால் அது எழுத்தாளர் திலீப்குமார் எழுதிய “மௌனியுடன் கொஞ்ச தூரம்” என்ற கட்டுரைதான். இப்போது ஒவ்வொரு வருடமும் விஷ்ணுபுரம் விருது வழங்கும்போது, விருதுபெறும் எழுத்தாளரைப் பற்றிய விரிவான விமர்சனப் புத்தகமும் எழுதி வெளியிடுகிற செயல் விருதுக்கு இணையானது.
இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். சுந்தர ராமசாமிக்குப் பல சீடர்கள் உண்டு. அல்லது அவரைக் குருவாக நினைத்துக் கொள்கிற பலர் உண்டு. சு.ரா. அவர்கள் அனைவருக்கும் தன் ஆலோசனைகள் சொல்லுவார், அவர்கள் படைப்பு குறித்த கருத்துகளைக் கறாராகக் பகிர்ந்து கொள்ளுவார் – தொடர்ந்து எழுதும்படி ஊக்கப்படுத்துவார். ஆனால், யாரையும் அவர் பேட்ரனைஸ் செய்தது – முன்னிறுத்தியது இல்லை. யாரையும் முன்னிறுத்துவது ஓர் எழுத்தாளனின் வேலை இல்லை என்று எங்களுடனான நேர்ப்பேச்சில் ஒருமுறை சுந்தர ராமசாமி சொன்னார். ஜெயமோகனும் விமர்சனங்களில் அவ்வழியையே பின்பற்றுவதாக நான் நினைக்கிறேன். ஜெயமோகனும் கறாராக விமர்சிக்கிறார். நல்லவற்றைப் பாராட்டுகிறார். யாரையும் முன்னிறுத்துவதில்லை. சிலநேரங்களில் எழுத்தின் போக்கில் உணர்வு வேகத்தில் வந்து விழுகிற மொழியின் கடுமையைக் குறைப்பதில் மட்டுமே ஜெயமோகன் கவனம் காட்ட வேண்டியிருக்கிறது.
என்னுடைய வாசிப்பில் யாருடைய எழுத்தாவது நன்றாக இருப்பதாகத் தோன்றினால், ஜெயமோகன் அந்த எழுத்தாளரைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று சரிபார்த்துக் கொள்ள நான் முயல்வேன். தமிழில் தற்போது எழுதுகிற மிகச்சிறந்த புனைவு எழுத்தாளர்களில் ஒருவர் என்று ஷோபா சக்தியை நான் என் வாசிப்பளவில் மதிப்பிடுகிறேன். ஜெயமோகனும் ஷோபாசக்தி தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்று எழுதியிருந்ததைப் பார்த்ததும் –ஆங்கிலத்தில் ’வேலிடேடட்’ என்று சொல்வார்களே, அப்படி நம்முடைய உணர்வு சரிதான் என்ற எண்ணம் தோன்றியது. ஜெயமோகனே சொல்லிவருவதுபோல அவருடைய எழுத்தாளர்கள் பற்றிய விமர்சன வரிசையை நீட்டித்து, அவர் நினைத்திருக்கிற இந்திரா பார்த்தசாரதி, ஆதவன் எழுத்துகள் பற்றிய விமர்சனங்களோடு, ஷோபா சக்தி, கோவை ஞானி உள்ளிட்ட பிறரின் எழுத்துகள் குறித்தும் ஜெயமோகன் எதிர்காலத்தில் எழுதுவார் என்று நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
ஏறக்குறைய 40 புத்தகங்களுக்கு மேல் மார்க்ஸியம், மற்றும் மார்க்சிய அழகியல் குறித்து கோவை ஞானி எழுதியிருக்கிறார். ஜெயமோகனின் படுகை சிறுகதை கோவை ஞானி நடத்திய நிகழ் இதழில் வெளிவந்தது. அதன் பின்னரே அக்கதையைக் குறிப்பிட்டு சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி போன்றொர் எழுதினார்கள். வறட்டுத் தத்துவவாதியான மார்க்ஸியராக அல்லாமல், நமது மதம், மரபு, தொன்மம், நாட்டாரியல் ஆகியவற்றின் ஆக்கபூர்வமான பங்களிப்பையும் செழுமையையும் அங்கீகரிக்கிறவராக கோவை ஞானி இருந்திருக்கிறார். மார்க்ஸியத்தில் இருந்து தமிழ் தேசியம் என்று அவர் இன்றைக்கு மாறிவிட்டாரோ என்ற கேள்வி எழலாம். ஜெயமோகன் கோவை ஞானியைத் தன்னுடைய ஆசிரியராக பல இடங்களில் சொல்லியிருக்கிறார். ஆகையால், ஜெயமோகன் பார்வையில் கோவை ஞானி குறித்த ஒரு விமர்சனப் புத்தகத்தைப் படிப்பது, கோவை ஞானி போன்றோரின் முக்கியத்துவத்தை எதிர்கால சந்ததி அறிய உதவும் என்பது என் ஆசை.
தமிழில் வழங்கப்படும் விருதுகள் யாருக்கு வழங்கப்படுகின்றன அவற்றின் தேர்வுமுறை என்ன என்பது பற்றிய கேள்விகள் கொண்டிருந்த ஜெயமோகன், ஒரு நிலையில் கேள்வி கேட்பதைவிட, நாமே ஒரு நல்ல இலக்கிய விருது உண்டாக்கினால் என்ன என்று தோன்ற, நண்பர்களுடன் – அவரின் வாசகர்களுடன் – அவர் சேர்ந்து ஆரம்பித்த விஷ்ணுபுரம் விருது இன்றைக்குத் தமிழுக்கு வாழ்நாள் சாதனை செய்த ஆனால் சரியாகக் கவனம் பெறாத எழுத்தாளர்களைத் தேடிப் பரிசளித்துக் கௌரவிக்கிறது. பொருளாதார உதவி தேவைப்படும் எழுத்தாளர்களுக்கு நண்பர்கள் மூலம் நிதி திரட்டி உதவுவதிலும் ஜெயமோகன் தொடர்ந்து ஆர்வம் காட்டுகிறார். ஓர் எழுத்தாளரின் வேலை சமூக அக்கறையும் அதற்கான முஸ்தீபுகளும்கூட என்பதை இவை காட்டுகின்றன.
தமிழில் புதியதாக எழுதுகிறவர்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தியும் அவர்களின் புத்தகங்களுக்கு விமர்சனம் எழுதியும் வருகிறவர்களில் ஜெயமோகனும் பாவண்ணனும் முக்கியமானவர்கள். பல நேரங்களில் நான் மற்றும் நண்பர்கள் இவர்கள் இருவரின் விமர்சனங்களைப் படித்துவிட்டுத் தொடர்புடைய அப்புத்தகங்களை வாங்கியிருக்கிறோம். என்னுடைய கட்டுரை தொகுதி வெளிவந்தபோது கேட்டவுடன் ஒத்துக் கொண்டு பெருந்தன்மையுடன் அதற்கு ஜெயமோகன் அணிந்துரையும் வழங்கினார். என்னுடைய கட்டுரை தொகுதியின் சிறப்பு, ஜெயகாந்தன், ஜெயமோகன் இருவரும் சேர்ந்து அணிந்துரை எழுதிய ஒரே புத்தகம் என்ற நுட்பமான அவதானிப்பை ஜெயமோகன் சொல்லியே நான் தெரிந்து கொண்டேன். இப்போது ஜெயமோகன், அவர் இணையதளம் மூலமாகப் புதியதாக எழுத வருகிறவர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்துப் பிரசுரிக்கிறார். இதனால் எல்லாம் ஜெயமோகனுக்கு ஆதாயம், புகழ் என்று பெரிதாக எதுவும் இல்லை. ஒரு புத்தக விமர்சனம் எழுதுகிற நேரத்திலோ அல்லது கதையைத் தேர்ந்தெடுக்கிற நேரத்திலோ அவருக்கு பணம் வரக்கூடிய சினிமா வசனத்தையோ திரைக்கதையையோ அவர் எழுத முடியும். நான் உட்படப் பலர் வாழ்வின் சிக்கல்களாலும், நெருக்கடிகளாலும், கடமைகளாலும், ஆசைப்படுகிற பலவற்றைச் செய்ய முடிவதில்லை. ஆனாலும், ஜெயமோகன் எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் பணம் ஈட்டக் கூடிய வழியில் அந்த நேரத்தைச் செலவிட முடியும் என்றாலும் அதைச் செய்யாமல், புத்தக விமர்சனங்கள், புதிய எழுத்தாளர் அறிமுகங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
நான் ஒரு சிறுகதை எழுதியபோது அதை ஜெயமோகனின் தனிப்பட்ட பார்வைக்கு அனுப்பியபோது, அதைப் படித்து கருத்து சொன்னதுடன் மட்டுமல்லாமல், அவர் சிங்கப்பூரில் நடத்திய சிறுகதை பட்டறையில் கொடுத்த சிறுகதை எழுதுவது குறித்த நுட்பமான தகவல்களை, எனக்கு உதவும்வகையில் மின்னஞ்சலில் பகிர்ந்து கொண்டார். எழுத்தாளர் பா. ராகவன் நாவல் எழுத முயன்றபோது, அதன் முதல் வடிவத்தை ஜெயமோகனுக்கு அனுப்பி வைக்க, ஜெயமோகன் அதை வாசித்து, நாவலை மேம்படுத்த சொன்ன கருத்துகள் குறித்து நன்றியுடன் பா. ராகவன் எழுதியிருக்கிறார். இப்படி, ஜெயமோகன் கறாரான விமர்சனத்துடன் ஆக்கபூர்வமான உற்சாகங்களையும் தொடர்ந்து தந்துகொண்டேதான் இருக்கிறார் என்பது முக்கியமானது. ஜெயமோகனின் விமர்சனங்களால் வருத்தமடைகிற பலர் இதை மறந்துவிடுகிறார்கள்.
”தன் எழுத்தின் நிராகரிப்பின் வலியை உணர்ந்தவர்களே நல்ல எழுத்தாளராக வளர முடியும்” என்ற ஜெயமோகனின் கருத்தில் உண்மை இருக்கிறது. அதனால், ஜெயமோகன் புதிய எழுத்தாளர்கள் குறித்து வைக்கிற கறாரான மற்றும் சில நேரங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்நோக்கம் இருக்கிறது என்று சிலர் சொல்வது எனக்கு நம்பத்தகுந்ததாக இல்லை.. ஆனாலும், ஜெயமோகன் மீதான விமர்சனங்களைப் புதிய எழுத்தாளர்கள் வைக்கும்போது அவற்றை எதிர்கொள்வதில் ஜெயமோகன் இன்னும் கொஞ்சம் நிதானம் காட்டலாம் என்பது என் தனிப்பட்ட எண்ணம். அந்த மாதிரியான பதிலடிகளை ஜெயமோகனிடமிருந்து படிக்கும்போது, நித்ய சைதன்ய யதியுடனும், சுந்தர ராமசாமியுடனும் விவாதித்து விவாதித்து வளர்ந்த ஜெயமோகனா இப்படி எழுதியிருக்கிறார் என்று எனக்குத் தோன்றியிருக்கிறது. பின்னர் ஜெயமோகன் அவ்வரிகளை மாற்றியோ நீக்கியோவிட்டாலும்கூட, சிலருக்கு மனம் ஆற மாட்டேன் என்கிறது. புதிய எழுத்தாளர்கள் ஜெயமோகனிடம் கற்றுக் கொண்ட அஸ்திரங்களை அவரிடமே கூர்பார்க்க முயன்றாலும் அது இயல்பானதுதானே என்று நினைத்திருக்கிறேன். ஆனாலும், சமீப காலமாக ஜெயமோகன் இவ்விஷயத்தில் மிகவும் பெருந்தன்மையாளராக மாறிவருகிறார் என்று பார்க்கிறேன்., எல்லாரிடமும் அவரால் அப்படி நடந்து கொள்வது சாத்தியம் என்றே நான் நம்புகிறேன்..
இதை நான் இங்கே சொல்வதற்கு இன்னொரு காரணம் – கவிஞர் சுகுமாரன் கவிதைகள் எனக்கு ஜெயமோகனால்தான் அறிமுகமாயின. ஜெயமோகனுக்குக் கவிஞர் சுகுமாரன் கவிதைகள் மீது இருக்கிற நல்ல அபிப்ராயத்தை ஜெயமோகனே பலமுறை எழுதியிருக்கிறார். ஆனால், ஒரு நேர்காணல் குறித்த விவாதத்தில் சுகுமாரன் குறித்து ஜெயமோகன் பயன்படுத்திய ஒரு சொற்பிரயோகம் சுகுமாரனை மிகவும் காயப்படுத்திவிட்டதை சுகுமாரனின் எதிர்வினையில் உணர்ந்தேன். ஜெயமோகன் அதைத் தவிர்த்திருக்கலாம் என நான் நினைத்தேன். ஜெயமோகன் போன்ற தேர்ந்த எழுத்தாளருக்கும் கூட ஏன் ஒரு ஒரு எடிட்டர் தேவை என்று நான் நினைத்துக் கொள்வது இந்த மாதிரியான நேரங்களில்தான்.
ஜெயமோகன் எந்தெந்த ஆளுமைகளிடமிருந்து எவற்றையெல்லாம் கற்றார் என்று பார்த்தோம். இலக்கிய அக்கப்போர்களையும் இலக்கியச் சண்டைகளையும் இணையத் தமிழர்களிடமிருந்து கற்றுக் கொண்டார் என்று நான் நகைச்சுவையாகச் சொல்வது வழக்கம். தமிழில் இணையத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் சுஜாதாவுக்கு இணையாக ஆரம்பம் முதலே ஆர்வம் காண்பித்து வருபவர் ஜெயமோகன். சுஜாதாவாவது அவர் பணியாற்றுகிற அல்லது ஊதியம் தருகிற இணைய இதழ்களில்தான் ஆரம்பம் முதல் எழுதினார். ஆனால், மின்னிதழ்கள் வர ஆரம்பித்தவுடன், திண்ணை.காம் இணைய இதழ், ஃபோரம்ஹப் கலந்துரையாடல் தளம் உள்ளிட்ட பலவற்றில் எந்த ஊதியமும் எதிர்பாராமல் பங்களித்தவர் ஜெயமோகன். இன்றைக்கும் அத்தளங்களின் பழைய பக்கங்களில் ஜெயமோகன் எழுதியிருப்பதையும், கேள்விகளுக்குப் பதில் அளித்திருப்பதையும், விவாதங்களில் கலந்துகொண்டு பதிலளித்திருப்பதையும் காணலாம். சொல்லப் போனால், திண்ணை.காம் இணைய தளம் வழியாகவே ஜெயமோகன் எழுத்துகள் எனக்கு அறிமுகமாயின. பின்னரே, அவர் நடத்திய அச்சு இதழான சொல் புதிது, இணைய இதழான மருதம் ஆகியவற்றை அறியும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் மரத்தடி இணையக் குழுமத்தில் “எழுத்தாளரைக் கேளுங்கள்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியுமா என்று நான் அவரை அணுகியபோது உடனடியாக ஒத்துக் கொண்டு, குழும உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விரிவாக பதில் அளித்தார். பாஸ்டன் பாலாஜி, ஹரன் பிரசன்னா உள்ளிட்ட பல இலக்கிய அன்பர்கள் ஜெயமோகனை தனிப்பட்ட முறையில் அறியவும் பழகவும் அந்நிகழ்ச்சி உதவியது. ஜெயமோகனால் கற்றதிலும் பெற்றதிலும் நண்பர்களும் எனக்கு உண்டு. என்னுடைய நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான இயக்குநர் சுகாவை முதலில் ஜெயமோகனுடனான ஒரு சென்னை சந்திப்பில்தான் ஜெயமோகன் அறிமுகப்படுத்த சந்தித்தேன் என்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்..
நண்பர்கள் கோபால் ராஜாராம், துக்காராம், பாரி பூபாலன் ஆகியோருடன் இணைந்து நான் எனி இந்தியன் பதிப்பகமும் வார்த்தை மாத இதழும் நடத்தியபோது ஜெயமோகன் உதவியால், அவருடைய அறிவியல் சிறுகதை தொகுப்பு, நேர்காணல்கள் உள்ளிட்ட நல்ல புத்தகங்களை எங்களால் பதிப்பிக்க முடிந்தது. அவருடைய கட்டுரைகள், அவர் இணையதளத்தில் இருந்து மொழிபெயர்ப்புக் கவிதைகள் ஆகியவற்றை வார்த்தை இதழில் பிரசுரிக்க கேட்டவுடன் அனுமதி வழங்கினார். இந்த நேரங்களில் அவருக்கும் எனக்கு சில கருத்து முரண்பாடுகள் இருந்தன. ஆனால் அவற்றையெல்லாம் மனதில் கொள்ளாமல் எங்களின் நல்ல நோக்கத்தைப் புரிந்து கொண்டு ஆதரவு தந்தார். ஜெயமோகனுடன் என்னைப் போன்ற வாசகர்களுக்கு முரண்பாடுகள் உண்டு, பிணக்குகள் உண்டு, ஆனால் பரஸ்பர கசப்புகள் இல்லை. இதற்கு ஜெயமோகன் எழுத்தின் மீது எங்களுக்கு இருக்கிற ப்ரியமும் மரியாதையும் முதல் காரணம். மேலும், அவருடன் உண்டாகிற பிணக்குகளைக் கூட அவர் மீது வழக்கு தொடுக்கிற எவரோ அல்லது அவரை அநியாயத்துக்கு எதிர்க்கிற பிறரோ, மறக்கச் செய்து விடுகிறார்கள். அல்லது, அவருடனான நம்முடைய முரண்பாடு மறந்துபோகிற அளவுக்கு ஒரு நல்ல படைப்பை உடனடியாக எழுதிவிடுவார். ஜெயமோகன் இணையதளத்தைத் தொடர்ந்து படிப்பவர்கள் கவனித்திருக்கலாம். அவர் சம்பந்தப்படுகிற சர்ச்சைகள், சலசலப்புகள் நடந்து முடியும் முன்னரே, சிறுகதைகளையோ நாவலையோ எழுதி அவர் முன்சென்று விடுவதை. ஜெயமோகனே எழுதியதுபோல அவருடனான பிறரின் முரண்பாடுகள் அனைத்தும் சம்பந்தப்பட்டவரை ஜெயமோகன் நேரில் பார்த்து கைகுலுக்கியோ அல்லது தோள் தொட்டோ நலம் விசாரிக்கும்வரைதான்..
ஜெயமோகனே சொல்வதுபோல, அவர் தன்னுடைய புத்தகங்களை ஒரு பதிப்பகத்துக்கே தராமல், பல நண்பர்களின் பதிப்பகங்களுக்கும் தந்து பலருக்கும் உதவுகிற குணம் பாராட்டத்தக்கது. தமிழினி, கவிதா, உயிர்மை, எனி இந்தியன், வம்சி, கிழக்கு, நற்றிணை, எழுத்து என்று நீளும் ஜெயமோகனின் பல பதிப்பக அணுகுமுறை ஜனநாயகத்தன்மை வாய்ந்தது, ஒரு நிறுவன ஆதிக்கத்தை (monopoly) தடுக்க அவரளவிலான முயற்சியுமென்று நினைக்கிறேன்.
நான் ஒரு ஹிந்து. நானறிந்த மிகச்சிறந்த ஹிந்து மகாத்மா காந்தி. ஒரு பெரும்பான்மை சமூகம் (community) பெருந்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் விட்டுக் கொடுத்தும் நடந்துகொள்ள வேண்டும் என்ற மகாத்மாவின் கருத்தை நம்புகிற ஹிந்து நான். ஹிந்து மதத்தின் குறைகளை உணர்ந்து, உள்ளிருந்தபடியே அதைச் சீராக்க முடியுமென்று மகாத்மா நம்பினார். உதாரணமாக, தீண்டாமைக்கு எதிரான மகாத்மாவின் போராட்டம் அத்தகையதுதான். இந்து மதத்தின் கறைபடிந்த பீடங்களில் நின்றபடிதான் அதன் பெருமையைப் பேசுவதாக மகாத்மா சொன்னார். அதேநேரத்தில், வன்முறை சித்தாத்தங்களுக்கும், அடிப்படைவாதம் தன் மதத்தின் பெயராலேயே வந்தாலும் அதற்கு காந்தியைப் பயின்றவர்கள் எதிரி. ஜெயமோகனைப் படிக்க படிக்க ஜெயமோகனுக்கும் இவ்விஷயங்களில் இதே மாதிரியான கருத்துகள் தானென்று ஒருவர் அறியமுடியும். மஹாத்மா காந்தியைப் பற்றி ஜெயமோகன் எழுதியவற்றுக்கு மஹாத்மா காந்தியைச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள் என்றைக்கும் கடமைப்பட்டிருக்கிறார்கள். காந்தியின் மீதான எல்லா விமர்சனங்களுக்கும் ஜெயமோகனின் காந்தி பற்றிய எழுத்துகளில் தீர்க்கமான பதில் இருக்கிறது. கண்டுணர்ந்த காந்தி என்று ஓர் இணைய இதழில் நான் சில அத்தியாயங்கள் எழுதியபோது அதைத் தொடரும்படி ஜெயமோகன் அந்தக் காலத்தில் என்னை ஊக்குவித்தார். என்னால் அதைத் தொடர இயலாமல் போனது. ஆனால், ஆசைக்கு எப்போதோ எழுதுகிற நான் அல்ல, வேறெந்த தேர்ந்த வரலாற்றாய்வாளரும் எழுத்தாளரும்கூட எழுதக்குடிய சாத்தியம் குறைவான புத்தகம், காந்தியைப் பற்றிய ஜெயமோகனின் புத்தகம். காந்தியைப் புரிந்து கொள்ள முயல்கிறவர்கள் அதை நிச்சயம் வாசிக்க வேண்டும்.
ஆனாலும் மகாத்மா காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் இல்லை இன்னொரு அமைப்பு, ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளில் காந்தி புகழப்படுகிறார் என்று பின்னர் ஜெயமோகன் எழுதிய கட்டுரையைப் படிக்க எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் வருத்தமாக இருந்தது.. கம்யூனிசத்தை விமர்சிக்கும்போது நாம் சோவியத் கம்யூனிசமா, சீன கம்யூனிசமா, வெனிசூலா கம்யூனிசமா, கியூபா கம்யூனிசமா என்று பார்ப்பதில்லை. மார்க்ஸியமா, லெனினிசமா, ஸ்டாலினிசமா, மாவோயிசமா என்று பார்ப்பதில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை விமர்சிக்கும்போது நாம் தாலிபானா, வஹாபிஸமா, ஐ.எஸ்.ஐ.எஸ்.ஆ அல்லது காஷ்மீரிய பயங்கரவாத இயக்கங்களா என்று பார்ப்பதில்லை. திராவிட இயக்கச் சித்தாந்தத்தின் குறுகிய அரசியல் பார்வையை விமர்சிக்கும்போது திராவிடர் கழகமா, திராவிட முன்னேற்றக் கழகமா அல்லது அம்மா திராவிட முன்னேற்றக் கழகமா என்று பார்ப்பதில்லை. ஒரு ஆபத்தான சித்தாந்தம் அல்லது அடிப்படைவாத சித்தாந்தம் எந்த மாதிரியான அரிதாரம் பூசிக்கொண்டு வந்தாலும் சரியாகக் கண்டுபிடிக்கிற ஜெயமோகன், ஆர்.எஸ்.எஸ் பற்றி மட்டும் ஏன் அப்படி எழுதினார் என்று எனக்குப் புரியவில்லை.
மேலும், கிறித்துவரான பேராசிரியர் யேசுதாசன் கம்பனைப் பற்றிப் பேசும்போது உணர்வெழுச்சியுடன் நெகிழ்ந்து கண்ணீர் சிந்துகிற காட்சியை ஜெயமோகன் நமக்குக் காட்டும்போது, இலக்கியம் என்பது வித்தியாசங்கள் கடக்க வைக்கும் மானுட நேயம் சார்ந்தது என்பதை நாமும் உணர்ந்து நெகிழ்கிறோம். அதே கம்பராமாயணத்தின் சிறப்புகளை இந்துத்துவ அடிப்படைவாதத்தில் நம்பிக்கை கொண்ட ஒருவர் சொல்லும்போதும், ஜெயமோகன் அதற்கு அதே அளவு இடமளிக்கிறார் என்னும்போது அதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு இன்னும் வரவில்லை என்றே நினைக்கிறேன்.. கம்பனைச் சரியாகப் புரிந்து கொண்ட எவரும் எந்த அடிப்படைவாதத்தையேனும் ஆதரிக்க முடியுமா? காந்தியைச் சரியாகப் புகழ்கிற எவரும் எந்த மதம் சார்ந்த அடிப்படைவாதத்தையும் ஆதரிக்க முடியுமா? என்ற கேள்விகள் எனக்குண்டு. அடிப்படைவாதிகளிடம் இக்கேள்விகளைக் கேட்க ஜெயமோகனைவிட சரியான ஆளுமை எது? இதன்பொருள் வாசகருக்குப் பிடிக்கிற கேள்விகளை எழுத்தாளர் பிறரிடம் கேட்க வேண்டும் என்பதில்லை. இதைச் செய் என்று எந்த எழுத்தாளரையும் யாரும் கட்டாயப்படுத்த இயலாது என்று ஜெயகாந்தன் பெரியாருக்குச் சொன்ன பதிலைப் படித்த நாளாய் உணர்ந்திருக்கிறேன். பின் இவையெல்லாம் என்ன? என் ஏக்கங்கள் மட்டும்தான்.
ஓர் இந்து அடிப்படைவாத இயக்கம் தன்னுடைய நிகழ்ச்சிகளில் மஹாத்மா காந்தியைப் புகழ்வதாலேயே அது இந்து அடிப்படைவாத நோக்கம் கொண்ட இயக்கம் இல்லை என்று ஆகிவிடாது. எல்லா இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களும் அல்லாவைப் புகழ்ந்தபடிதான் கொடுஞ்செயல்கள் புரிகின்றன. எப்படி அந்த இயக்கங்களுக்கும் இஸ்லாமுக்கும் அல்லாவுக்கும் ஒரு தொடர்பும் இல்லையோ அப்படித்தான் இந்துமத அடிப்படைவாத இயக்கங்களுக்கும் இந்து மதத்துக்கும் மஹாத்மா காந்திக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதும்.
இன்றைக்கு இந்தியாவில் வலுபெற்றுவரும் இந்துமத அடிப்படைவாதத்துக்கு எதிராக – காந்தி செய்திருக்கக் கூடிய வகையில் – ஜெயமோகன் இயலும்போதெல்லாம் குரல் எழுப்பிக் கொண்டே இருப்பது ஒரு காந்திய சேவையாக இருக்கும். இந்து மதத்தை ஒரு பெருமதமாகவும் நிறுவனமாகவும் கட்டியமைக்கும் போக்கினை எதிர்த்து, மாடன் மோட்சம் என்ற அற்புதமான சிறுகதையை எழுதிய ஜெயமோகனிடம், அக்கதையால் ஆகர்ஷிக்கப்பட்டவர்கள், இதை எதிர்பார்ப்பது இயல்புதானே.
பின் தொடரும் நிழலின் குரல் நாவலை ஜெயமோகன் எழுதினார் என்பதற்காக தமிழக இடதுசாரிகள் அவரிடம் கொண்ட கோபம் இன்னும் தீரவில்லை. தமிழக இடதுசாரிகளை இவ்விஷயத்தில் ஒதுக்கிவிடலாம். அவர்கள் கோபம் கொண்ட பட்டியலில் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, கி.ரா என்று பல கலைஞர்கள் இருந்தார்கள். அவர்களின் வரிசையில் ஜெயமோகனும் ஒரு தவிர்க்கவே இயலாத கலைஞர். முதலாவதாக, பொதுவுடைமை தத்துவம் ஓர் ஆழமான தத்துவம். மேம்போக்கான அரசியல் தத்துவம் அல்ல. அது உண்டாக்குகிற அரசியல் மற்றும் கலாசார மாற்றங்கள் குறித்த விமர்சனங்கள் வைக்கிற இலக்கியப் படைப்பை காலப்போக்கில் ஜெயமோகன் எழுதாவிட்டால் வேறு யாரேனும் எழுதி இருப்பார்கள். இதை இடதுசாரி நண்பர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஒப்பீட்டுக்காக, திராவிட இயக்கத்தை எடுத்துக் கொள்வோம். அது மேம்போக்கான அரசியல் மாற்றங்களை உருவாக்கிய இயக்கமாக இருந்ததே ஒழிய கலாசார மாற்றங்களை பெரிதாக உருவாக்கவில்லை. இன்றுவரை திராவிட இயக்கங்களால் உருவான பெரிய கலாசார பாதிப்பை பேசுகிற ஒரு நல்ல நாவல் அந்தக் காரணத்தாலும் தமிழில் வரவில்லை. இதை இடதுசாரி நண்பர்கள் உணர்ந்திருந்தால், கலாசார மாற்றத்தை உருவாக்கும் எந்த ஆழமான சித்தாந்தம் குறித்தும் புனைவுகள் – எதிர்மறையாகப் பேசும் புனைவுகள்கூட – வெளிவருவது இயற்கை என்று உணர்ந்திருப்பார்கள். மேலும் இங்கே திராவிட மற்றும் இடதுசாரி எதிர்ப்பு என்பது ஒரு மேடைப் பேச்சாக ஆழமற்றதாக இருந்து வந்தது. இடதுசாரிகள் மட்டுமே அறிவுஜீவிகளாகப் பார்க்கப்பட்டனர். அதனால்தான், இடதுசாரிகள் திராவிட இயக்கத்தை விமர்சிப்பதும் கூட ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த இடதுசாரி இயக்கங்கள் மீதே ஜெயமோகன் விமர்சனம் வைத்தால், அவர்களுக்குக் கோபம் வரத்தானே செய்யும்? ஜெயமோகன் அவ்வியக்கங்கள் மீது கட்டுரைகள் மூலம்வைத்த விமர்சனம் மேம்போக்கான மேடைப் பேச்சு அல்ல, அது ஒரு கருத்து ரீதியான தர்க்கம். பின் தொடரும் நிழலின் குரல் ஓர் இலக்கியப் பிரதி. இதற்கு எதிர்வினையாக ஜெயமோகன் பெற்றவை வெறும் வசைகளும் மேம்போக்கான பதில்களுமே.
இரண்டாவதாக, இவர்கள்- ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, கி.ரா. அனைவரும் ஜெயமோகன் உட்பட, சமூகப் பிரச்னைகள், மனிதாபிமானம் ஆகியவற்றில் எடுக்கிற முடிவுகள் இடதுசாரிகளையே ஒத்திருக்கிறது. உலக மயமாக்கம், பன்னாட்டு நிறுவனங்கள். மருத்துவம் வணிகமயமான விதம், தொழிற்சங்கப் பிரச்னைகள் ஆகியவற்றில் ஜெயமோகன் கொண்டிருக்கிற கருத்துகள் இடதுசாரிகளின் சிந்தனையைப் பிரதிபலிப்பன. கோவை ஞானி, கந்தர்வன், சோதிப் பிரகாசம் உள்ளிட்ட இடதுசாரிகளிடம் ஜெயமோகனுக்கு மதிப்பும் மரியாதையும் தொடர்ந்து வந்திருக்கிறது. அவர்களிடம் அவர் தொடர்ந்து தொடர்பில் இருந்திருக்கிறார். ஜெயமோகனுக்கு இந்திய ஞான மரபில் இருக்கிற புலமையையும் நம்பிக்கையையும் பார்த்து அவரை இந்துத்துவராகத் தனிமைப்படுத்த முயலும் இடதுசாரி நண்பர்கள், சற்று சாதுரியம் மிக்கவர்களாக இருந்தால், ஜெயமோகனை மேற்சொன்ன பல காரணங்களுக்காக தம் தோழராக அடையாளம் கண்டுகொள்ளவும் முடியும். கம்யூனிசம் குறித்த ஜெயமோகன் கருத்துகள் மூலம் தங்கள் சித்தாந்தத்தை சுய விமர்சனம் செய்துகொள்ள முடியும். நமக்குக் கார்ல் மார்க்ஸ் வேண்டுமா வள்ளலார் வேண்டுமா என்றால் வள்ளலார் போதுமென்பேன் என்று ஜெயகாந்தன் சொன்னதை இடதுசாரிகளால் புரிந்து கொள்ள முடிகிறது. அப்படியெனில், ஜெயமோகனையும் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். இது ஒரு நிறைவேறுகிற எதிர்பார்ப்பா என்று தெரியவில்லை. ஆனாலும், கனவுகளின் மீதான நம்பிக்கைதானே வாழ்க்கை.
ஜெயமோகனின் இன்னொரு சிறப்பு – படைப்புக்கேற்ற மொழியை அவர் உருவாக்கிக் கொள்கிறார். அ. முத்துலிங்கம் உள்ளிட்ட பலர் இதைச் சிலாகித்து எழுதியிருக்கிறார்கள். அவருடைய ஒவ்வொரு படைப்பும் ஒருவிதமான மொழிநடையைக் கொண்டிருக்கும். அவருடைய கட்டுரைகளின் நடைகூட, 1990-களில் இருந்த – சிறுபத்திரிகை நடையைவிட்டு விட்டு – நேரடியாகப் பேசுகிற நடையாக தொடர்ந்து வளர்ந்து வந்திருக்கிறது. ஒருமுறை வட்டார வழக்கைப்பற்றி எழுதும்போது, நாகர்கோவில் வட்டார வழக்கில் அப்படியே எழுதினால் நாகர்கோவிலைத் தாண்டியவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அதனால் அந்த வட்டார வழக்கில் சிறு மாற்றங்கள் செய்து, தன் எழுத்துக்குரிய வட்டார வழக்குக்கான மொழியைத் தான் உருவாக்கிக் கொண்டதாக எழுதியிருந்தார். இந்தப் புதுமையான படைப்பூக்கம் பாராட்டத்தக்கது. ஆனால், ஆண்டுகள் கழித்து ஜெயமோகனின் அந்த வட்டார வழக்கைப் படிக்கப் போகிற வாசகர் இதுதான் அப்பகுதி மக்களின் மொழியோ என்று நினைத்துவிடுகிற வாய்ப்பு இருக்கிறதே என்று தோன்றியது. இது சரியா தவறா என்று சொல்கிற அளவுக்கு இதில் எனக்கு அறிவு இல்லை. ஆனால், இலக்கியம் சமூக வரலாற்று ஆவணமாகப் பயன்படுத்தப்படும்போது இத்தகைய தவறான புரிதல் உண்டாக்கக்கூடிய விஷயங்களைச் செய்யலாமா என்று ஜெயமோகன் உள்ளிட்ட அறிஞர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.
ஜெயமோகனுக்குத் துறவின் மீது ஆசையிருந்திருக்கிறது. கொஞ்ச காலம் துறவியாக அலைந்திருக்கிறார். அவர் துறவியாகத் தொடராமல் அவரைக் காதலால் ஆட்கொண்டு இல்லறவாசியாக்கின திருமதி அருண்மொழிக்கு அவர் வாசகர்கள் நன்றி சொல்ல வேண்டும். இல்லையென்றால் தமிழிலக்கியம் அதற்கு அணி செய்கிற தன் புதல்வர்களில் ஒருவரை இழந்திருக்கும். ஜெயமோகனுக்குக் காட்டின் மீது ஆசை இருக்கிறது. காடு என்ற தலைப்பில் ஒரு நாவலே எழுதியிருக்கிறார். யானை மீது ஆசை இருக்கிறது. யானை பற்றிய நுட்பமான விவரணைகளை அவர் எழுத்துகளில் பார்க்க முடியும். உரையாடல்கள் மீது தீராத ஆசை கொண்டவர். வலியை வெல்ல அதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்று சொல்பவர். காலையில் எழுந்தவுடன் ஒரு கவிதையைப் படிப்பதை வழக்கமாக கொண்டவர். குரானைக் காலையில் படிப்பது பற்றி அதன் கவிதைதன்மை ஒருமுறை எழுதியிருந்த ஞாபகம். இணையம் சார்ந்த ஃபேஸ்புக் தமிழர்களின் ஆக்கபூர்வமற்ற அக்கப்போர் குறித்து அடிக்கடி எரிச்சல்பட்டு எழுதுபவர். ஆழமற்ற இணைய விமர்சனங்களைத் தான் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை என்பவர். ஆனாலும், அவருக்குக் கடந்த பதினைந்து ஆண்டுகளில் கிடைத்திருக்கிற மிகச் சிறந்த வாசகர்கள் பலரும் இணையம் வழியாகவே அவரைக் கண்டடைந்தவர்கள் என்பதையும் அறிந்திருப்பவர். இணையத்தின் வீச்சையும் தாக்கத்தையும் நன்கு உணர்ந்தவர். இன்றைக்கு ஜெயமோகனின் முக்கிய படைப்புகள் முதலில் இணையம் வழியாகவே வெளிவருகின்றன.
காமத்தை, அதன் பரிமாணங்களை, பிரச்னைகளை, காமத்தின் உளவியலைச் சித்தரிப்பதில் ஜெயமோகன் காட்டுகிற கலைநயத்தை – கரணம் தப்பினால் போர்னோவாகிவிடும் ஆபத்துகளை லாவகமாகத் தாண்டிச் செல்கிற விவேகத்தை, காமத்தை எழுதுகிறோம் என்று கிளம்புகிற பின்நவீனவாதிகள் ஜெயமோகனிடம் கற்றுக் கொள்ள வேண்டும். அடிப்படையில் எழுத்தாளர் என்றாலும், தமிழில் துறைசார்ந்த கலைச்சொல்லாக்கத்தில் ஜெயமோகனின் பங்களிப்பு அபரிதமானது. எனக்கு ஆங்கிலக் கலைச்சொற்களை எப்படித் தமிழ்ப்படுத்துவது என்ற கேள்வி எழும்போது, முதலில் ஜெயமோகன் அவற்றுக்கு என்ன தமிழ் வார்த்தை பயன்படுத்தியிருக்கிறார் என்று அறிந்து கொள்ள முயல்வேன். அவர் உருவாக்கிய கலைச்சொற்களின் தொகுதி அவற்றின் ஆங்கில மற்றும் தமிழ் வார்த்தைகளோடு, அவர் இணையதளத்தில் சுலபமான அடையாளம் காணக்கூடிய இணைப்பாக தரப்பட்டால் பலருக்கும் உதவியாக இருக்கும்.
ஜெயமோகனை விமர்சிக்கிறவர்கள் அவரை சர்ச்சை விரும்பி என்கிறார்கள். இது ஒரு குறை என்று எப்படிச் சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது நண்பர் கோபால் ராஜாராம் சொன்னார். எழுபதுகளிலும் என்பதுகளிலும் தமிழில் இல்லாத இலக்கியச் சண்டைகளா? அவற்றையெல்லாம் மீறி சர்ச்சையில் ஈடுபட்டவர்கள் உட்பட தமிழிலக்கியத்தை முன்னகர்த்தித்தான் சென்றார்கள் என்றார். இப்போது– ஒரு துறை உறுப்பினர்களிடையே – டீம் இடையே – தேவையான அளவு முரண்பாடு – கான்ப்லிக்ட் – இருப்பது ஆரோக்கியமானது என்று மேலாண்மைத் துறை அறிவியல் சொல்கிறது. ஆகையால் ஜெயமோகன் சொல்கிற கருத்துகள் ஆரோக்கியமான சர்ச்சையை உண்டாக்கினால்தான் என்ன என்று தோன்றுகிற்து. ஜெயமோகன் சொல்கிற சில கருத்துகள் பலருக்கும் உடன்பாடில்லை – உதாரணமாக, பாரதியார் மகாகவி இல்லை என்று ஜெயமோகன் சொல்வது எனக்கு உடன்பாடில்லை – என்றாலும் அந்த விவாதம் பொருட்செறிந்ததாக நடக்கும்வரை வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதே என்று நினைக்கிறேன். அவ்விஷயத்தில் இணையத்தின் ஆரம்ப நாட்களின் விவாதத்தில் இருந்து ஜெயமோகன் தான் கற்றுக் கொண்டதாகச் சொல்லும் பாடத்தை தொடர்ந்து பயன்படுத்துகிறார். அது பரஸ்பர மரியாதையும் மதிப்பும் இல்லாத இடத்தில் விவாதிப்பதில் பயனில்லை என்பது. ஜெயகாந்தனைத் தொடர்ந்து, ஜெயமோகனின் கருத்துகளே தமிழ் மக்களிடம் சிந்தனையைத் தூண்டும் விவாதங்களை எழுப்புகின்றன. அந்த விதத்திலும் அவர் ஜெயகாந்தனின் வாரிசு எனலாம்.
குரு மரபு நமக்கு உண்டு. நம்முடைய குருக்கள் அனைவரிடமும் குறைகள் உண்டு. ஆனாலும் அவர்கள் குருக்களே. கற்க வந்தவர்களுக்கு கற்பதுதான் வேலை, குருவிடம் குறை காண்பதும் அவரை மதிப்பிடுவதும் சீடனின் வேலையல்ல. ஆனாலும், ஜெயமோகனை வாசித்தே அவரிடம் முரண்படும் அளவுக்கு நான் வளர்ந்திருக்கிறேன். 1997-க்கு அப்பாலான என்னுடைய இலக்கியப் பார்வையைச் செம்மைப்படுத்தியதில் கோபால் ராஜாராம், ஜெயமோகன் இருவருக்கும் பெரிய பங்குண்டு. கோபால் ராஜாராமுடன் பேசிப் பேசி என் சிந்தனையை வளர்த்துக் கொண்டேன். ஜெயமோகனைப் படித்துப் படித்து என் சிந்தனையை வளர்த்துக் கொண்டேன். பள்ளிக் கல்லூரி காலங்களில் பேச்சுப் போட்டிகளில் சொல்ல வந்ததைச் சொல்லும் திறம் படைத்திருந்த போதும், உரைகளை எழுதி வைத்துக் கொண்டு வாசிப்பதன்மூலம் பேசுகிற பொருளை விட்டு விலகாமல் பேச இயலும் என்பதையும் ஜெயமோகனிடம் இருந்துதான் நான் கற்றுக் கொண்டேன். நான் நடத்திய எழுத்தும் எண்ணமும் என்ற நண்பர்கள் குழுமத்தில் ஆர்வமுடன் பங்கேற்று ஜெயமோகன் எழுதியவை, அவருடன் அங்கு நடத்திய உரையாடல்கள் ஆகியன நினைவில் நிற்கும் நாட்கள். அக்குழுமத்தில்தான் அவரின் புகழ்பெற்ற நகைச்சுவைக் கட்டுரைகள் முதலில் எழுதப்பட்டன. கீதையை மதநூலாகப் பார்க்காமல் தத்துவநூலாகப் பார்க்கிற அவரின் கட்டுரைகள் பிறந்தன. நான் உட்பட நண்பர்கள் வைத்த வேண்டுகோளுக்கிணங்கி அவர் அங்கே எழுதிய கட்டுரைகள் பல சிறப்பானவை. காந்தியைப் பற்றிய எழுதுவதற்கான உந்துதல் அக்குழும விவாதமொன்றில் அவருக்குப் பிறந்தது. அதற்கெல்லாம் அவருக்கு நண்பர்களும் நானும் நன்றி சொல்வது வெறும் சம்பிரதாயமாகவே இருக்கும்.
திரைப்படம் எடுப்பது ஒரு கூட்டு முயற்சி என்பதையும், அதில் ஒரு திரைக்கதையாசிரியரின் அல்லது வசனகர்த்தாவின் பங்கு என்ன, அவர் எந்த அளவுக்கு முடிவுகளில் செல்வாக்கு செலுத்த இயலும் என்பதையும் ஜெயமோகன் நன்கு புரிந்து வைத்திருப்பதும், திரைத்துறை கேட்கிற வேகத்துக்கு அவரால் படைப்புகளைக் கொடுக்க முடிவதும் திரைத்துறையில் ஜெயமோகன் தொடர்ந்து வளர்ந்துவருவதற்கு முக்கிய காரணங்கள். ஜெயமோகனே சொல்லிய மாதிரி, திரைத்துறை கொணரும் பொருளாதார வசதிகளுக்காக அவர் அதில் இருக்கிறார். அதில் இலக்கியம் படைப்பதான ஜல்லிகளை அவர் அடிப்பதில்லை. ஆனாலும் பல வெற்றிப்படங்களின் வெற்றிக்கு ஜெயமோகனின் பங்களிப்பும் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் நோபல் பரிசு வாங்கக் கூடிய தகுதியுடைய எழுத்தாளர் ஜெயமோகன் என்று அ. முத்துலிங்கம் சொல்லுவார். இது நோபல் பரிசின் தரத்தின் மீது ஒருவர் கொண்டிருக்கிற நம்பிக்கையைச் சொல்கிறது. எந்தப் பரிசும் யாருக்கு வழங்கப்படுகிறதோ அவர்களாலேயே சிறப்படைகிறது. அவ்விதத்தில் ஜெயமோகனால் சிறப்படையப் போகும் இன்னும் பல விருதுகளும் பரிசுகளும் அவருக்கு நிச்சயம் வந்து சேரும். பெரிதினும் பெரிது தேடித் தொடரும் அவர் எழுத்துப் பயணம் அவர் அடைய விரும்பும் எழுத்தின் இலக்குகளுக்கு அவரைத் தொடர்ந்து இட்டுச் செல்ல வாழ்த்துகிறேன்.
இன்றைக்கு நியூ ஜெர்ஸி தமிழ்சங்கமும் சிந்தனை வட்டமும் ஜெயமோகன் வருகையால் சிறப்படைந்திருக்கின்றன. அந்த வாய்ப்பை வழங்கிய ஜெயமோகனுக்கு நன்றிகள்.
- தெருக்கூத்து (2)
- மனச்சோர்வு ( Depression )
- ஜெயமோகன் – என் குறிப்புகள்.
- தொடுவானம் 75. காதலிக்க காலமுண்டு
- ஆம்பளை வாசனை
- வெசயம்
- சஹானாவின் மூக்குத்தி
- வலையில் மீன்கள்
- தொன்மம்
- இரத்தின தீபம் விருது விழா
- அல் இமாறா நூல் வெளியீடும் விருது வழங்கும் விழாவும் – 2015
- ஒரு கேள்வி
- தேவதைகள் தூவும் மழை – சித்திரங்களாலான கூடு
- பச்சைக்கிளிகள் – பாவண்ணன் சிறுகதைத் தொகுப்பு -ஒரு வாசகன் பார்வையில்
- கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,000 பரிசு
- இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க…..
- சிலந்தி வலை
- பூகோள நாள் சுழற்சி மணி நேரம் அணுத்துவ வடிவப் புரோட்டீனில் உயிரியல் குறிப்பதிவு ஆகியுள்ளது
- தொழில் தர்மம்