தொடுவானம் 76. படிப்பும் விடுப்பும்

This entry is part 2 of 17 in the series 12 ஜூலை 2015

டாக்டர் ஜி. ஜான்சன்
76. படிப்பும் விடுப்பும்

Henchard ஆங்கில வகுப்பில் தாமஸ் ஹார்டியின் ” த மேயர் ஆப் கேஸ்ட்டர்பிரிட்ஜ் ” நாவல் அருமையாக முன்னேறியது. பாதி பேர்கள் நன்றாகத் தூங்கினாலும், அது வழக்கமானதுதான் என்பதை நன்கு அறிந்திருந்த குண்டர்ஸ் கண்டும் காணாமல் பாடத்தை நடத்திக்கொண்டிருந்தார். நடத்திக்கொண்டிருந்தார் என்பதைவிட ஒருவரை படிக்கச் சொல்லிவிட்டு கேட்டுக்கொண்டிருந்தார் என்றே கூறலாம். அவ்வாறு அவருடைய இருக்கையில் அமர்ந்து அதே வரிகளை கடந்த சில வருடங்களாகக் கேட்டுப் பழகிப்போன அவருக்குக்கூட உறக்கம் வருவதை விழித்திருக்கும் எங்களில் சிலர் ..கண்டுகொள்வதில்லை.
அங்கில வகுப்பு அவ்வாறு தூங்கும் வகுப்பாக மாறியதற்கு மதிய உணவுக்குப் பின் நடந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அதோடு இன்னொரு காரணமும் உள்ளது. மருத்துவம் பயில வந்துள்ள மாணவ மாணவிகளை இலக்கியம் பயிலச் சொன்னால் அவர்கள் எப்படி அதில் கவனம் செலுத்துவார்கள்? ஆனால் முதலாம் ஆண்டு தேர்வுக்காக அதை கட்டாயம் படித்தேயாகவேண்டும்.
Jane and Elizabeth விருந்து நடந்த ” கிங்க்ஸ் ஆர்ம் ” ஹோட்டலின் வெளியில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த பாமர மக்கள் மத்தியில் அப்போது ஆணழகன் என்று கூறத்தக்க ஓர் இளைஞர் வந்து சேர்கிறான். மக்கள் தரமற்ற கோதுமையைப் பற்றிப் பெசிக்கொண்டிருப்பதையும், அதுபற்றி அரங்கத்தினுள்ளே மேயர் ஹென்சார்ட் கருத்து கூறியதையும் செவிமடுக்கிறான். அவன் அவசரமாக ஒரு குறிப்பு எழுதி அதை மேயரிடம் தருமாறு வாயில் காவலனிடம் கூறுகிறான். அவனிடமே அங்கு இரவு தங்குவதற்கு குறைந்த வாடகையில் வேறு தங்கும் விடுதி கிடைக்குமா என்றும் கேட்டு தெரிந்துகொண்டு ” த்ரீ மேரினர்ஸ் இன் ” நோக்கிச் செல்கிறான்.
அந்த வாலிபனையும் அவனுடைய செயல்களையும் உற்று கவனித்த எலிசபெத் ஜேன் சூசனிடம் அவர்களும் தங்க அதே ஹோட்டலுக்குப் போகலாம் என்று கூறுகிறாள். இருவரும் அங்கு செல்கின்றனர்.
அந்த குறிப்பைப் படித்த ஹென்சார்ட் உடன் அதைத் தந்தவனைக் காண விரும்பி வெளியேறுகிறான்.மற்றவர் அனைவரும் குடி போதையில் உள்ளதால் விருந்தும் முடிவுக்கு வருகிறது. அவன் காவலன் கூறியதைக் கேட்டு ” த்ரீ மேரினர்ஸ் இன் ” நோக்கிச் செல்கிறான்.
அந்த தங்கும் விடுதி மிகவும் எளிமையானது. அங்கு மதுபானம் பறிமாறும் பகுதியில் அன்றே பகுதிநேர வேலையில் சேர்ந்துகொள்கிறாள் ஜேன். அந்த புதிய வாலிபனின் அறைக்கு இரவு உணவு கொண்டு சென்றபோது அவனைக் கவனிக்கிறாள். அவனுடைய அழகை இரசிக்கிறாள். அதோடு அவனின் அறை தங்களுடைய அறையின் பக்கத்தில் உள்ளதும் தெரியவருகிறது. இரவு வேலையை முடித்துவிட்டு தங்களின் உணவைக் கொண்டுவந்தபோது அவளுடைய தாய் அவளை பேசவேண்டாம் என்று சைகை காட்டுகிறாள்.
பக்கத்துக்கு அறையில் ஹென்சார்ட் அந்த ஸ்காட்டிஸ் இளைஞனிடம் பேசிக்கொண்டிருப்பது நன்றாகக் கேட்கிறது. அந்த இளைஞனின் பெயர் டோனால்ட் பார்ப்ரே என்பதையும் தெரிந்துகொள்கின்றனர். அவன் அனுப்பிய அந்த குறிப்பில் தன்னால் தரமான கோதுமையைத் தர முடியும் என்று அவன் எழுதியிருந்ததால் ஹென்சார்ட் அவனைத் தேடி வந்துள்ளான். அவன் உடன் அது பற்றி விளக்கி ஹென்சார்டைக் கவர்கின்றான். தன்னுடைய விளம்பரம் பார்த்து வந்தவன் என்று ஹென்சார்ட் எண்ணியபோது அதை அவன் மறுக்கிறான். அவன் பிரிஸ்டல் சென்று அமேரிக்காவுக்கு கப்பல் ஏறப்போவதாக்க் கூறுகிறான். அவனுக்கு உடனடியாக மானேஜர் பதவியுடன் கமிஷனும் தருவதாக ஹென்சார்ட் கூறுகிறான். ஆனால் அவனோ அதை மறுத்துவிடுகிறான்.ஏமாற்றம் அடைந்த ஹென்சார்டுக்கு மது தருகிறான் டொனால்ட் . அதை வாங்க மறுத்துவிட்ட ஹென்சார்ட் தான் மதுவை நிறைய குடித்ததால் நடந்துவிட்ட ஓர் அசம்பாவிதத்தை சாகும்வரை மறக்கமுடியாது என்றும், அதனால் இனி மதுவைத் தொடுவதில்லை என்று வைராக்கியம் கொண்டுள்ளதாகக் கூறுகிறான்.
Girls ஜேன் உணவுப் பாத்திரங்களை எடுக்க டொனால்ட் அறைக்குச் செல்கிறாள். அவன் செய்துள்ள சத்தியம் பற்றி ஹென்சார்ட் கூறியது கேட்ட சூசனின் முகம் பெருமிதத்தில் ஆழ்ந்துள்ளது. அவன் கீழே இதர வாடிக்கையாளர்களிடம் பேசி மகிழ்ந்து ஸ்காட்டிஷ் கேளிக்கைப் பாடல்கள் பாடி மகிழ்கிறான்.அவன் படுக்க மாடிப்படிகளில் ஏறியபோது, அவனுக்கு படுக்கை விரித்துவிட்டு கீழே திரும்பிய ஜேனைப் பார்க்கிறான். அவளைக் கிண்டல் செய்து ஒரு பாடல் பாடிக்கொண்டு செல்கிறான். அறைக்குத் திரும்பிய ஜேன் அவனைப்பற்றி தாயிடம் கூறுகிறாள். அவனுடைய நேர்மையான குணம் அவளைக் கவர்கிறது.
மானேஜர் பதவி வேண்டாம் என்று மறுத்துவிட்ட டோனால்ட் பற்றிய சிந்தனையிலும் ஏமாற்றத்திலும் அந்த விடுதியின் வெளியே ஹென்சார்ட் குறுக்கும் நெருக்குமாக நடந்துகொண்டிருக்கிறான்.
இங்கு ஜேனுக்கும் டோனால்டுக்கும் நெருக்கம் உண்டாகுமா என்ற சந்தேகத்தை நாவலாசிரியர் பட்டும் பாடாமல் தொட்டுச் செல்கிறார்.
அருமையான கதையம்சத்துடன் மனதைத் தொடும் மறக்கமுடியாத வர்ணனைகள் தனிச் சிறப்பானவை. அதனால்தான் காலத்தால் அழியாத நாவலாக அது இன்னும் உலகளாவிய நிலையில் பேசப்படுகிறது.
Boys மற்ற பாடங்கள் வழக்கமான பாணியில் நடந்துகொண்டிருந்தன. இயந்திரம்போன்று காலச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. அடுத்த விடுமுறையில் எங்கு செல்லலாம் என்று யோசித்தேன்.தொடர்ந்து விடுதியில் தங்கி படிக்கும்போது இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக விருப்பம்போல் கழிக்கும் நாட்கள் நீண்ட விடுமுறைகள். இந்த விடுமுறையில் தாம்பரம் சென்று அத்தை வீட்டில் இரண்டு நாட்களாவது தங்கி வர முடிவு செய்தேன். வேரோனிக்காவுக்கு முன்கூட்டியே கடிதம் எழுதினேன். அதன்பின் தெம்மூர் சென்று கொஞ்ச நாட்கள் தங்கிவிட்டு தரங்கம்பாடி செல்ல முடிவு செய்தேன், அங்கு அண்ணனுக்கும் அண்ணிக்கும் வேலை கிடைத்துவிட்டதால் அங்கு குடியேறிவிட்டனர். தரங்கம்பாடி சரித்திரப் புகழ்மிக்க கடற்கரைப் பட்டிணம் என்பதால் அங்கு செல்ல அதிக ஆவல் கொண்டேன். அங்கு சென்றால் நாகூர், வேளாங்கண்ணி ஆகிய புண்ணிய ஸ்தலங்களையும் பார்த்து வரலாம். காரைக்கால்கூட அங்குதான் உள்ளது. அது பாண்டிச்சேரியைச் சேர்ந்த பகுதி.
தெம்மூரில் மோசஸ் சித்தப்பா குடும்பத்துடன் சிங்கப்பூரிலிருந்து திரும்பி குடியேறிவிட்டார். மூத்த மகன் ஹென்றி கோயம்புத்தூரில் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்துள்ளான். தங்கைகள் நேசமும் மதுரமும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளனர். ஊர் சென்றால் அவர்களையும் பார்த்துவிடலாம்.
பெரியப்பாவும் கூடிய விரைவில் குடும்பத்துடன் ஊர் திரும்ப ஏற்பாடுகள் செய்து வருகிறார்,
சித்தப்பா சிங்கப்பூரில் பிரிட்டிஷ் ஆயதக் கிடங்கில் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். அவர் சுபாஷ் சந்திரபோஸ் சிங்கப்பூரில் அமைத்த இந்திய தேசியப் படையில் பணிபுரிந்தவர்.
பெரியப்பா ஜோகூர் லாபிஸ் எஸ்டேட்டில் இருந்த அனைத்து தமிழ்ப் பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர்கள் இருவரும் நினைத்திருந்தால் அங்கேயே தங்கி நன்றாகவே வசதியுடன் வாழலாம். பிள்ளைகளையும் அங்கேயே படிக்கவைத்து நல்ல வேலையில் அமர்த்தியிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் பிறந்த மண்ணுக்கே திரும்பவேண்டும் என்ற வைராக்கியத்தில் திரும்பியுள்ளனர்.அவர்கள் பிறந்து வளர்ந்த ஊரை மறக்காமல் முதிர் வயதில் அங்கேயே கழிக்கவேண்டும் என்ற ஆவலில் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் மாற்றி அமைத்துவிட்டனர். அவர்கள் செய்தது எவ்வளவு தூரம் சரியானது என்பது போகப் போகத்தான் தெரியும்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationமிதிலாவிலாஸ்-25என்னுள் விழுந்த [ க ] விதை !
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *