மிதிலாவிலாஸ்-14

This entry is part 11 of 23 in the series 4 அக்டோபர் 2015

 (மிதிலா விலாஸ் தொடரின் அத்தியாயங்கள் 14லிருந்து 18 வரை பதிவு பெறாமல் விடுபட்டு விட்டது. தவறுக்கு வருந்துகிறோம். வாசகர்களும், ஆசிரியரும் மன்னிக்க வேண்டுகிறோம். விடுபட்ட அத்தியாயங்கள் இரு வாரங்களில் வெளியாகும். – ஆசிரியர் குழு.)

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி

தமிழில்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

மைதிலி சித்தார்த்தை வீட்டுக்கு அழைத்து வரும்போது அந்தி மயங்கும் நேரமாகிக் கொண்டிருந்தது. சாலைகளில், வீடுகளில் மின்விளக்குகள் எரியத் தொடங்கின. மழை வரும் அறிகுறி இல்லாமல் வானம் தெளிவாக இருந்தது. மைதிலியின் காரைப் பார்த்ததும் கண்ணாயிரம் கையில் இருந்த வேலையை போட்டுவிட்டு ஓட்டமாக ஓடி வந்தார்.

மைதிலி காரை நிறுத்தியதும் கதவைத் திறந்துகொண்டே “நீங்களே வந்து விட்டீங்களா அம்மா. நான் அழைத்துக் கொண்டு வருவதாக போன் செய்த போது அய்யா கொண்டு விடப் போவதாக சித்தூ சொன்னான்” என்றார்.

“வேலை இருந்ததால் அவரால் வர முடியவில்லை.” என்றாள்.

அதற்கு சித்தார்த் காரை விட்டு இறங்கிவிட்டான். கண்ணாயிரம் “எப்படி இருக்கிறாய் சித்தூ?” என்று விசாரித்தபடி கண்ணாயிரம் அவனைத் தோளைப் பற்றி உள்ளே அழைத்து வந்தார். அவர்களுக்குப் பின்னால் மைதிலி மருந்துகள், பழங்கள், பிரெட் பாக்கெட் கொண்ட கூடையை சுமந்தபடி வந்து கொண்டிருந்தாள்.

“பெரியம்மா! எங்கே இருக்கீங்க? பேரன் வந்து விட்டான்.” கண்ணாயிரம் குரல் கொடுத்தார், கொல்லையிலிருந்து வாளியில் தண்ணியைக் கொண்டு வந்து கொண்டிருந்த அந்தம்மாள் அதை அங்கேயே வைத்துவிட்டு ஓட்டமாக வந்து சித்தார்த்தைப் பிடித்துக் கொண்டுவிட்டாள்.

“எங்கே போய் விட்டாய்? இந்தக் கிழவியின் மேல் என்ன கோபம் உனக்கு? ஆஸ்பத்திரிக்கு வருவதாகச் சொன்னால் வேண்டாம் என்று சொல்லிவிட்டாய். இந்தப் பாட்டி செத்துப்போய் விட்டாள் என்று நினைத்தாயா? துரும்பாக இளைத்துவிட்டாய்.” அவள் சித்துவின் கன்னங்களை வருடிக் கொண்டே சொன்னாள். தலைமுடி கலைந்து, பொக்கை வாயுடன் அன்னம்மா அப்படி பெரிய குரலில் கத்தும் போது குழந்தைகளை தூக்கிக் கொண்டு போகும் சூனியக்காரி போல் அவள் நிழல் சுவற்றில் விழுந்து கொண்டிருந்தது.

சித்தூ பொறுமையற்றவனாய் அந்தம்மாளின் கைகளை விடுவித்துக் கொண்டு தன்னுடைய அறையை நோக்கிப் போனான். அந்தப் பாட்டி மைதிலியைப் பார்த்ததும் வணக்கம் தெரிவித்தாள். “கண்ணாயிரம் சொன்னார் அம்மா. நீங்கள்தான் சித்துவுக்கு ஆதரவாய் இருந்தீங்களாம்” என்றவள் உடனே பின்னால் திரும்பி ‘டேய் சித்தூ! சித்த இரு. படுக்கையைத் தட்டிப் போடுகிறேன்” என்று உள்ளே போனாள்.

கண்ணாயிரத்தின் மகன் வந்து அப்பாவுக்காக யாரோ வந்திருப்பதாகத் தெரிவித்தான். “இப்போதே வந்து விடுகிறேன் அம்மா” என்று கிளம்பிப் போனார்.

மைதிலி தனியாக நின்று விட்டாள். யாரும் அவளை உள்ளே வரச் சொல்லி அழைக்கவில்லை. திரும்பிப் போய் விடுவதா அல்லது இருப்பதா என்று தெரியவில்லை. கையில் மருந்துகள், பழங்கள் இருந்த கூடை நினைவுக்கு வந்தது. உரிமையுடன் சித்தார்த்தின் அறையை நோக்கிப் போனாள்.

கிழவி வாய் ஓயாமல் எதையோ சொல்லிக் கொண்டிருந்த போது “பாட்டீ! என்னை தொந்தரவு செய்யாதீங்க” என்று சலித்துக் கொண்டான்.

அந்தம்மாள் பழைய ரஜாய் ஒன்றை கிழே விரித்து அதன் மீது கிழிசல் புடவைவை பரத்திக் கொண்டிருந்தாள். அந்த அறையில் வெளிச்சம் அதிகம் வராததோடு மழைகாலத்தில் சுவரில் ஈரம தங்கி ஐஸ் பெட்டியைப் போல் சில்லென்று இருந்தது. குளிர் தாங்க முடியாமல் சித்தார்த் முடங்கிய நிலையில் இருந்தான்.

“உனக்காக தர்மி எத்தனை முறை வந்தான் தெரியுமா?” பாட்டி சொன்னாள்.

அந்த வார்த்தையைக் கேட்டதும் சித்தார்த்தின் முகம் மலர்ந்தது, “தர்மியைக் கூப்பிடுங்க” என்றான். அப்போதுதான் அறை வாசலில் வந்து நின்ற மைதிலியைக் கவனித்தான். அவளைப் பார்த்ததும் ஜன்னலில் உட்கார்ந்தவன் சட்டென்று இறங்கி நின்றான்.

“கூப்பிடுகிறேன். என்ன அவசரம்?” என்று பாட்டி சொல்லிக் கொண்டிருந்தாள்.

மைதிலி ஒரு நிமிடம் சில்லென்று ஐஸ் கட்டியைப் போல் இருந்த அந்த அறையை, கீழே விரிக்கப் பட்ட பழைய ரஜாயை, அதன் மீது போர்த்திய அழுக்குப் புடவையை கண்ணிமைக்காமல் பார்த்தாள். சித்தார்த் இங்கே படுத்துக் கொண்டால் திரும்பவும் ஜுரம் வந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

மைதிலி அறைக்குள் வந்து “பெரியம்மா! நீங்க சித்தூவை அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வாங்க. எங்களுடன் நான்கு நாட்கள் இருந்து விட்டு வரலாம்” என்றாள். தன் வாயிலிருந்து சித்தூ என்று ரொம்ப சகஜமாக வந்துவிட்டதைக் கவனித்து அவளே வியப்படைந்தாள்.

என்ன பதில் சொல்வது என்று புரியாமல் பாட்டி பேரன் பக்கம் பார்த்தாள்.

“வேண்டாம். இங்கேதான் நன்றாக இருக்கும் எனக்கு” என்றான் சித்தார்த்.

அதற்குள் கண்ணாயிரம் அங்கே வந்தார். சித்தூ வரமாட்டான் என்று மைதிலிக்குத் தெரியும். கண்ணாயிரத்துடன் வெளியே வந்தாள். “நீங்க கொஞ்சம் என்னுடன் வர வேண்டும்” என்றாள்.

“எங்கே அம்மா?” விய்ப்படைந்தவராய் கேட்டார்.

“சொல்கிறேன். வாங்க.” மள மளவென்று போய் கார் பின் கதவைத் திறந்தாள். கண்ணாயிரம் ஏறிக் கொண்டதும் சாத்திவிட்டு டிரைவிங் இருக்கையில் உட்கார்ந்து ஸ்டார்ட் செய்தாள்.

ஒரு மணி நேரம் கழித்து அந்தக் கார் மறுபடியும் அந்த வீட்டின் முன்னால் வந்து நின்றது. கண்ணாயிரம் காரிலிருந்து மெத்தை, தலையணை எல்லாம் சுமந்து கொண்டு மைதிலியின் பின்னால் வந்தார்.

“இவை எல்லாம் என்ன?” கிழவி ஆர்வம் தாங்க முடியாமல் பெரிய குரலில் கேட்டாள். கண்ணாயிரம் பேச வேண்டாம் என்பது போல் மைதிலியின் பின்னாலிருந்து கிழவிக்கு ஜாடை காட்டினார். மைதிலி அறைக்குள் வந்து கண்ணாயிரம் கொண்டு வந்த ஜமக்காளத்தை விரித்து அதன் மீது மெத்தையைப் போட்டு புதிய விரிப்பை போட்டு, தலையணைக்கு உறையை மாட்டினாள்.

ஏற்கனவே பழைய ரஜாய் மீது படுத்துக் கொண்டு டவலைப் போர்த்தியபடி படுத்திருந்த சித்தார்த் கண்களைத் திறந்து மைதிலியைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்தான். அவன் முகம் சோர்ந்து இருந்தது.

“சித்தார்த்! வா.. இங்கே படுத்துக் கொள்” என்றாள் மைதிலி படுக்கையைக் காண்பித்துக் கொண்டே.

“இங்கே நன்றாகத்தான் இருக்கு.”

மைதிலி அவன் அருகில் வந்தாள். “எழுந்துகொள். வந்து படுக்கையின் மீது படுத்துக்கொள்” என்றாள். அவள் குரலில் தொனித்த அதிகாரத்தை கண்ணாயிரம்யும், கிழவியும் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தார்கள்.

சித்தூ அவர்களைப் பார்த்தான். பிறகு என்ன நினைத்துக் கொண்டானோ என்னவோ. மறுபேச்சு பேசாமல் எழுந்து வந்து புது மெத்தையில் படுத்துக் கொண்டான். மைதிலி போர்வையை எடுத்துப் போர்த்திவிட்டாள். மணியை பார்த்துக் கொண்டாள்.

“கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் வேண்டும் பாட்டியம்மா?” என்றாள்.

கிழவி உள்ளே போனாள். மைதிலி மருந்து பாக்கெட்லிருந்து மாத்திரைகளை எடுத்தாள்.

“குடிதண்ணீர் தினமும் எங்கே வருகிறது எங்களுக்கு? இது நேற்று முன் தினம் பிடித்து வைத்தது. ஒவ்வொரு மடக்காக குடித்துக் கொண்டிருக்கிறோம்” என்று டம்பளரை நீட்டினாள்.

மைதிலி சித்தார்த்திடம் மாத்திரைகளைக் கொடுத்தாள். அவன் போட்டுக் கொண்டான்.

“கொஞ்சம் ஜவ்வரிசி கஞ்சி போட்டுத் தருகிறேன் சித்தூ” என்றாள் கிழவி. அவன் தலையை அசைத்தான்.

“நான் போய் வருகிறேன் அம்மா. வீட்டில் உறவினர் வந்திருக்கிறார்கள். சித்தூவைப் பற்றி நீங்க கவலைப் படாதீங்க. என் மகள் ஜெயா நாளைக்கு ஊரிலிருந்து வந்து விடுவாள். அவள் வந்து விட்டால் அவனைப் பொறுப்பாக பார்த்துக் கொள்வாள்” என்று கண்ணாயிரம் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்.

மைதிலி பிரட்டையும் பிஸ்கெட்டையும் சித்தார்த்திடம் கொடுத்தாள். அவன் மறுப்பு எதுவும் சொல்லாமல் தலை குனிந்தபடி சாப்பிட்டு விட்டான். மைதிலி திரும்பவும் அவன் போட்டுக் கொள்ள வேண்டிய மருந்துகளைக் கொடுத்தாள். கிழவி ஜவ்வரிசி கஞ்சியைக் கொண்டு வந்தாள். சித்தார்த் கொஞ்சம் குடித்து மீதம் வைத்து விட்டான். அவனுக்கு தூக்கம் கண்களைச் சுழற்றியது. உட்கார்ந்து கொள்ள முடியவில்லை.

“படுத்துக்கொள் “ என்றாள் மைதிலி.

சித்தார்த் படுத்துக்கொண்டான். ஐந்து நிமிடங்கள் கழித்து திடுக்கிட்டாற்போல் கண்களைத் திறந்தான். மைதிலி அவனுக்கு சற்று தொலைவில் சுவற்றில் சாய்ந்தபடி புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாள். அவன் கண்களைத் திறந்து பார்த்ததும் அவனையே பார்த்துக் கொண்டிருந்த மைதிலி முறுவலித்தாள். அவன் கண்களை மூடிக் கொண்டான். இரண்டு நிமிடங்கள் கழித்து அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல் மூச்சு சீராக வந்து கொண்டிருந்தது.

அவன் உறங்கிவிட்டான் என்ற நம்பிக்கை வந்த பிறகு மைதிலி எழுந்துக்கொண்டாள். அங்கே இருந்த பிரெட், பிஸ்கட், பழங்கள் எல்லாம் ஒரு கூடையில் வைத்தாள். “பெரியம்மா! இவற்றை பத்திரப்படுத்துங்கள். காலையில் சித்தூ இவற்றை சாப்பிட்டுவிட்டு மருந்துகள் போட்டுக் கொள்ளணும்” என்று ஒப்படைத்தாள்.

“வீட்டில் எலி தொல்லை தாங்க முடியவில்லை. வெளியில் வைத்தால் மிச்சம் வைக்குமா? துணிமணி, புத்தகங்ககள் எதையுமே விட்டு வைக்காது. அவன் பெட்டியில் வைத்து விடும்மா. நிறைய காசு போட்டு வாங்கியிருக்கிறாய் போலிருக்கு” என்றாள்.

“பெட்டி எங்கே?” என்று கேட்டாள்.

“அதோ… அந்த மூலையில் பழைய புத்தகங்களுக்குக் கீழே இருக்கு” என்று சொல்லிவிட்டு அவள் உள்ளே போனாள்.

மைதிலி மூலையில் இருக்கும் புத்தகங்களின் கட்டை எடுத்தாள். வேடிக்கை என்னவென்றால் அவை எல்லாமே பேஷன் டிசைன் சம்பந்தப்பட்ட பத்திரிகைகள். பிளாட்பாரத்தில் செகண்ட் ஹான்ட் கடையில் வாங்கியவை. கசங்கியும், ஓரங்கள் கிழிந்தும் இருந்தன. மைதிலி அவற்றை கவனமாக எடுத்து பக்கத்தில் வைத்தாள். அடியில் வண்ணம் வெளுத்துப்போன, துருப் பிடித்த டர்ங்க் பெட்டி இருந்தது. மைதிலி அதனுடைய மூடியைத் திறக்க முயன்ற போது நாய்க்குட்டியைப் போல் குய் என்று முனகியது. மைதிலி திடுக்கிட்டவளாய் சித்தார்த்துக்கு எங்கே விழிப்பு வந்து விடுமோ என்று தலையைத் திருப்பிப் பார்த்தாள். அவன் கதகதப்பான போர்வைக்கு அடியில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அந்த பெட்டியில் நான்கு புத்தகங்கள், ஒரு நோட்டுப் புத்தகம், பழைய பேனா, பழைய மூக்குக்குக் கண்ணாடி ஒன்று இருந்தன. மற்றபடி பெட்டி முழுவதும் காலியாக இருந்தது.

மைதிலி பெட்டிக்குள் மருந்துகள், பிரெட், பழங்கள் இருந்த பாக்கெட்டை வைத்துவிட்டு பெட்டியை மூடப் போனாள். மூட முடியவில்லை. எலி உள்ளே போகும் அளவுக்கு இடுக்கு இருந்தது. மைதிலி பெட்டியில் இருந்தவற்றை ஒழுங்கு படுத்துவதற்காக உள்ளேயிருந்து சில புத்தகங்களை வெளியே எடுத்தாள். பாக்கெட்டுகளை உள்ளே வைத்து விட்டு திரும்பவும் புத்தகங்களை உள்ளே வைக்கப் போன போது நோட்டுப் புத்தகத்திலிருந்து சில காகிதங்கள் நழுவி கேழே விழுந்தன. அவற்றை எடுத்து வைக்கும் போது போட்டோ ஒன்று கையில் தட்டுப்பட்டது. நோட்டுப் புத்தகத்தில் திரும்பும் வைக்கப் போனவள் யதேச்சையாக போட்டோவைப் பார்த்தாள். அதில் இருந்த நபரைப் பார்த்ததும் பாம்பு தீண்டியது போல் அப்படியே இருந்துவிட்டாள். அது இளைஞன் ஒருவனின் போட்டோ. அதன் மீது குறுக்காக ‘என் இதயத்தில் குடி கொண்டிருக்கும் இனியவளுக்கு அன்புடன் அரவிந்த்’ என்று கையெழுத்திட்டு இருந்தது.

மைதிலி உலகத்தையே மறந்து விட்டவள் போல் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். இருபத்தைந்து அல்லது முப்பது வயது வரும் போது சித்தார்த் போட்டோவில் இருக்கும் நபரைப் போல் இருப்பானோ என்னவோ. அச்சு வார்த்தது போல் இருவருக்கும் ஜாடை அப்படியே இருந்தது. மைதிலி போட்டோவில் இருந்த அரவிந்தை, மெத்தையில் ஆழமாக உறங்கிக் கொண்டிருந்த சித்தார்த்தை மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் இதழ்களில் தொடங்கிய சிறிய நடுக்கம் மெள்ள மேள்ளமாக கைவிரல்களை பரவி உடல் முழுவதும் வியாபித்தது. தளிர் இலையைப் போல் நடுங்கிக் கொண்டிருந்தாள். இது சாத்தியம்தானா? ஆனால் எப்படி? சித்தார்த் அரவிந்துக்கு என்னவாகணும்? அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் படகை எடுத்து ஆடும் பாம்புகள் போல் நெளிந்து கொண்டிருந்தன. மை காட்! இது சாத்தியமா?

“மைதிலி!” அபிஜித்தின் குரல் அறைக்கு வெளியில் கேட்டது.

“வாங்கய்யா.. வாங்க. அம்மாவும், நீங்களும் ரொம்ப உதவி செய்துகொண்டு இருக்கீங்க.” கிழவி சொல்லிக் கொண்டு இருந்தாள்.

“சித்தார்த் எங்கே?” அபிஜித் கேட்டான்.

“அறையில் தூங்கிக்கிட்டு இருக்கிறான். அம்மாவும் அங்கேதான் இருக்காங்க.”

மைதிலி சட்டென்று போட்டோவை தன் பேக்கில் வைத்துக் கொண்டு ஜிப்பை மூடிவிட்டாள். பெட்டியை மூடிவிட்டு எழுந்து நின்று கொண்டாள்.

அபிஜித் உள்ளே வந்தான். வந்ததுமே நேராக சித்தார்த்திடம் சென்று முழங்காலிட்டு நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். ஜுரம் இருக்கவில்லை.

“சித்தூ!” கிழவி தட்டி எழுப்ப முயன்றபோது தடுத்து விட்டான். “நன்றாக தூங்குகிறான். வேண்டாம்” என்றான். மைதிலி சுவர் அருகில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.

“மைதிலி! கிளம்புவோமா?” எழுந்து கொண்டே கேட்டான்.

மைதிலி தலையை அசைத்தாள். அவன் வழக்கம்போல் கையை நீட்டினான். அவள் இயந்திரகதியில் நடந்து வந்தாள்.

அவன் தோளைச் சுற்றிலும் கையைப் போட்டான். “என் ஊகம் பலித்துவிட்டது. போன் செய்தால் நீ வீட்டில் இல்லை என்று ராஜம்மா சொன்னாள். இங்கேதான் இருப்பாய் என்று வந்து விட்டேன்” என்றான் முறுவலுடன்.

மைதிலி பதில் பேசவில்லை. தலையைக் குனிந்துகொண்டாள்.

“வருகிறோம் அம்மா! உங்கள் பேரன் மீது உங்களுக்கு மட்டுமே இல்லை. எங்களுக்கும் பாத்தியதை இருக்கிறது. நாங்கள் அடிக்கடி இது போல் வந்து உங்களுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டு இருப்போம்” என்றான்.

“என்ன வார்த்தை சொல்லிட்டீங்க? நீங்க வருவது எங்களுடைய அதிர்ஷ்டம்” என்றாள் அந்தம்மாள் மலர்ந்த முகத்துடன்.

மைதிலியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான். கார் சாவியைக் கேட்டு வாங்கிக் கொண்டான். அவன் டிரைவிங் சீட்டில் உட்கார்ந்ததும் மைதிலி பக்கத்தில் அமர்ந்துகொண்டாள். அவன் டிரைவ் செய்துகொண்டே நடுவில் ஓரிருமுறை தலையைத் திருப்பி நிசப்தமாக இருந்த மைதிலியின் பக்கம் பார்த்தான்.

மைதிலி பார்வை சூனியத்தில் நிலைத்திருந்தது. அவள் எண்ணங்கள் எங்கேயோ சிக்கிக்கொண்டு விட்டன.

“என்ன மேடம்? உங்க நினைவு எங்கே இருக்கு?” கை விரல்களை முகத்திற்கு முன்னால் ஆட்டிக் கொண்டே கேட்டான்.

“என்ன?” திடுக்கிட்டவளாய் சொன்னாள்.

“என்ன ஆச்சு உனக்கு?”

“நான் எப்படி இங்கே வந்தேன் என்று கூட கேட்கமாட்டாயா?”

“எப்படி வந்தாய்?”

“அங்கேயே தாமதமாகி விட்டது. நம் மாருதியில் டாக்ரை வீட்டில் ட்ராப்செய்துவிட்டு என்னை இங்கே இறக்கிவிட்டு பிறகு ரங்கராஜனை கொண்டுவிடச் சொல்லி டிரைவரிடம் சொன்னேன்.”

“அப்படியா.”

“என்ன ஆச்சும்மா? எப்படியோ இருக்கிறாயே ஏன்?” அவன் அவளை அருகில் இழுத்துக் கொண்டான்.

“நான் எப்போதும் போல் தானே இருக்கிறேன்!”

“மைதிலி! குட் ந்யூஸ்! நம் பேக்டரியில் தயாரிக்கப் படும் ஜூட் கிளாத்க்கு பெரிய அளவில் ஆர்டர் கிடைத்திருக்கிறது. இந்த ஆர்டர் கட்டாயம் கிடைக்கும் என்று நீ ஜோசியம் சொல்லிவிட்டு என்ன கேட்டாய் தெரியுமா?”

“என்ன கேட்டேன்?”

“என்ன ஆச்சு உனக்கு? இந்த அழகான மூளையில் ப்யூஸ் போய்விட்டது போல் இருக்கு. சிங்கப்பூருக்கு அழைத்துப் போகணும் என்று சொன்னாய். நினைவு இருக்கிறதா?”

மைதிலி தலையை அசைத்தாள்.

“அடுத்தவாரம் நாம் போகிறோம். ஓ.கே.? நாம் ஹாலிடே ட்ரிப் போய் விளையாட்டுப் போல் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது” என்றான்.

மைதிலி மௌனமாக இருந்துவிட்டாள். அவள் மௌனத்தை அவன் கவனித்தாலும் எந்த வியாக்கியானமும் செய்யவில்லை.

 

Series Navigationதிரிஷா இல்லன்னா நயன்தாரா – திரைப்பட விமர்சனம்மிதிலாவிலாஸ்-15
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *