நானும் என் ஈழத்து முருங்கையும்

2
0 minutes, 2 seconds Read
This entry is part 10 of 18 in the series 18 அக்டோபர் 2015

சற்று நேரத்தில் இரையாகப் போகிறோம் என்பதுகூட தெரியாமல் ஒரு பருந்தின் கால்களுக்குள் சிக்கிக் கதறி, தன் தாயையும், கூடப்பிறந்தவர்களையும், தான் ஓடி விளையாடிய மண்ணையும் ஏக்கத்தோடு பார்க்கும் ஒரு கோழிக்குஞ்சுவின் தவிப்பிற்கும், தான் வாழ்ந்த மண்ணை, மரத்தை, மனிதர்களை விட்டு நிரந்தரமாய் பிரிந்து, அன்னிய நாட்டிற்கு நிரந்தர அகதிகளாய் செல்பவர்களின் உயிர் வலிக்கும் பெரிதாய் வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. இப்படி தன் மண்ணைவிட்டு வரும்போது, தன் கொள்ளைப்புறத்தில் பல வருடங்களாய் பாசத்தோடு பார்த்து பார்த்து  வளர்த்த, அந்த முருங்கை மரத்தை மட்டும் விட்டுவர மனம் வருமா என்ன? போரின் உச்சத்தில் உணவுப் பண்டங்கள் வாங்கக் கூட வெளியில் செல்ல இயலாத நாட்களில் தாயாய் தன் குடும்பத்துக்கே உணவளித்தது அந்த முருங்கை உறவுதானே! தன் சொந்த மண்ணைப் பிரிகையில் கண்ணீர் மல்க இரண்டே இரண்டு முருங்கைக் கிளைகளை மட்டும் வெட்டி தன்னோடு சேர்த்தணைத்துக்கொண்டு தமிழகம் வந்து சேர்ந்த நம் தொப்புள் கொடி உறவுத் தாயோடு, அந்த முருங்கைக் கிளைகளும் அகதிகளோடு அகதிகளாய் தமிழகம் வந்து சேர்ந்தன.

மண்ணைப் பிரிந்து கடல் கடந்து தப்பி வந்த தம் மக்களோடு மக்களாய், கனத்த மனத்துடன் தானிருக்கும் இராமேஸ்வரம்-மண்டபம் முகாமில் வலியறிந்து, குறிப்பறிந்து, தாயாய் சேவை செய்த செவிலி ஒருத்திக்கு ஒரு முருங்கை உறவை தத்துக்கொடுக்கிறாள் அந்த ஈழத்துத்தாய். அன்போடு பெற்றுக்கொண்ட செவிலித்தாய் அந்தக் கிளையை எப்படியாவது வளர்த்துவிட வேண்டும் என்கிற வைராக்கியம் இருந்தபோதிலும், தம்மால் இயலுமோ இயலாதோ? என்ற ஐயத்தில் “அண்ணன் கை…. ராசி, அவன் கையில் கொடுத்தால் அவன் எப்படியும் ஆளாக்கி/மரமாக்கி விடுவான்” என்ற தன்னம்பிக்கையில் தன் அண்ணனிடம் அன்போடு தருகிறாள். அண்ணன் ஆசை ஆசையாய் அள்ளி அணைத்து அந்த ஈழத்து உறவை நம் மண்ணில் நிரந்தரமாக்குகிறான்.

அபார வளர்ச்சி, அற்புதமான சுவை…. முழுமையாய் வளர்ந்து அந்த அண்ணனை மகிழ்விக்குமுன் அவன் அமெரிக்கா சென்று விடுகிறான். சில வருடங்கள் கழித்து ஒரு கோடையில் வந்தவன் கண்களில்… குளிரூட்டியது. ஓங்கி வளர்ந்து, மென்மையான வாசத்துடன், பூக்களும், காய்களுமாய் நிறைந்து கம்பீரமாய் காட்சியளித்தது அந்த முருங்கை உறவு. அண்ணன் கண்களில் “ஈழம் தந்துவிட்ட அந்த அண்ணன்” கண்களின் ஆனந்தக் கண்ணீர்”. கண்கள், மனம், வயிறு எல்லாம் நிறைந்து போனது. சில மாதங்கள் கழித்து உச்சியில் தொங்கிக்கொண்டிருந்த அந்த முருங்கை நெத்து (முதிர்ந்த நெற்று) அண்ணனை பார்த்து கைசைத்துக்கொண்டே சலசலவென்ற சத்தத்துடன் காலடியில் வந்து விழுந்தது. அள்ளி அணைத்து முத்தமிட, அந்த நெத்து தந்த சத்தம் ‘அம்மா எப்படியிருக்கிறாள், அண்ணன் எங்கிருக்கிறார்’ என்று கேட்பதாய் கேட்டது.

அண்ணன் திரும்பவும் அமெரிக்க பயணத்திற்கு ஆயத்தமாகிறான். கூடவே, அந்த முருங்கை நெத்தையும் எடுத்துச் செல்ல முடிவு செய்கிறான். சட்ட விரோதம் என்பது பற்றியெல்லாம் சற்றும் அவன் சிந்திக்கவில்லை. ஈழத்து முருங்கை இறங்கிய வேகத்தில் அழகான தொட்டிக்குள் அமொிக்க மண்ணோடு ஐக்கியமானது. சிறு வயதில் தன் கொள்ளுத்தாத்தா கையாண்ட உத்தியைப் பயன்படுத்தி அந்த நெத்தை முழுவதுமாக தொட்டிக்குள் புதைத்தான். தனித்தனி விதையை நட்டு வைக்காமல் முழு நெத்தையும் அப்படியே ஆழத்தில் நட்டு வைத்தால் அனைத்தும் சேர்ந்து மொத்தமாக, செழிப்பாக வளரும் என்ற தன் தாத்தாவின் உத்திதான் அது. அந்த முருங்கை நெத்தை அண்ணன் அமெரிக்காவின் தன் கொள்ளைப்புறத்தில் நட்டு வைக்க ஆசைதான். ஆனால், அமெரிக்க தட்பவெப்பநிலையில் முருங்கை வளராதென்பதால் தொட்டிக்குள் கட்டாயமாக்கப்பட்டது.

திரும்பவும் தாயகப் பயணம். ஓர் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு அதிகாலை எழுந்ததும் கைப்பேசியை திறக்கையில் கண் கொள்ளாக்காட்சி. மனைவி அனுப்பியிருந்த புகைப்படத்தில் அந்த முருங்கைக் கன்று அவன் கைபேசியில் கண்ணைப் பனி(றி)த்தது. அப்பப்பா…. அந்த சந்தோசத்திற்கு இணையேது. தன் முதல் மகள் பிறந்த தினம் நினைவுக்கு வந்து போனது. இப்படியாக குளிர்காலங்களில் குழந்தைகளோடு குழந்தையாக வீட்டுக்குள்ளும், கோடை காலங்களில் மரங்களோடு மரமாக கொள்ளைப்புறத்தில் மளமளவென்று வளர்ந்தது. ஈழ மண்ணில் பிறந்து இந்திய வம்சாவழியாய் இப்போது அமெரிக்க மண்ணில் எங்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினராய் மாறிப்போன என் முருங்கை உறவை காணும்போதெல்லாம் என் கண்ணில் ஈழம் மலர்ந்துவிட்ட மகிழ்ச்சி. இந்த என் முருங்கை வித்து, நெத்து தரும் அந்த தருணத்திற்குள்ளாவது ஈழம் மலர்ந்து விடுமா? என்ற ஏக்கத்தை எனக்குள்ளிருந்து எடுக்க இயலவில்லைதான்.

கடந்த முறை நான் செல்லும்போது முருங்கைக்கீரையை முழுவதுமாய் பறித்து சுவைத்துவிட எத்தனிக்கையில் மனதுக்குள் எங்கோ ஓர் மூலையில் வலிக்கத்தான் செய்தது. என் மனைவி பறிக்கவே கூடாது என்று தடுத்தும், அவன் வளர்ச்சிக்காக அதை செய்யாமலிருக்க முடியவில்லை. மொத்தமாக குடும்பத்தோடு நின்றுகொண்டு காம்புக்குக்கூட காயம் பட்டுவிடக் கூடாதென்ற கவனத்தில் பக்குவமாய் பறித்தெடுத்த நிமிடங்கள் இன்றும் என் கண்முன் நிழலாடுகிறது.

அந்த முருங்கைக்கீரை மொத்தமாய் எங்களது இரத்தத்தில் சங்கமித்தது. மீண்டும் நான் அமெரிக்கா செல்லும்வரை அந்த முருங்கை உறவை அன்போடு கவனிக்க தாயாய் என் மனைவி, தமக்கையராய் என் மகள்கள்….

ஒவ்வொரு முறை அலைபேசும்போதும் மறக்காமல் நலம் விசாரிக்கிறேன். வாரமொரு முறையேனும் வலை முகநேரம்/நேரடி காணொளி செய்கிறேன் (Face Time / Web cam). காத்திரு……

இதோ இரண்டே மாதங்களில் வந்து விடுகிறேன் என் ஈழத்து உறவே…..

ஏக்கத்தோடு உன் அண்ணன்

Series Navigationதொடுவானம் 90. அன்பு தரும் துன்பம்புலி ஆடு புல்லுக்கட்டு
author

நவநீ

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    ” நானும் என் ஈழத்து முருங்கையும் ” மிக உருக்கமாய் இருந்தது. அதன் வரிகளில் சோகம் இழையோடுகிறது. இழந்துபோன தாயக மண்ணை மீண்டும் காண வேண்டும் என்ற ஏக்கம் உள்ளது. வாழ்த்துகள் நவநீ…….. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *