ஜெயந்தி சங்கரின் நாவல் “திரிந்தலையும் திணைகள்”

This entry is part 20 of 24 in the series 1 நவம்பர் 2015

 

அகத்திணை, புறத்திணை என்பது அகநானூறு புறநானூறு போல காதல் மற்றும் சமூகம் (அரசியல் உட்பட) என்றே பொருள் படும். இவை திரிந்தலைகின்றன. நாவல் தலைப்பை நிறுவுவதில் பின்னப்பட்டிருக்கிறதா? நாவல் எதைப்பற்றியது?

 

எந்த ஒரு பிரதியும் அது நம் மீது ஏற்படுத்தும் தாக்கம் அதாவது அதை வாசித்த பின் நம் மனதுள் ஆழப்பதியும் அதன் மையப் பொருளை வைத்தே முடிவு செய்யப்பட வேண்டும். ஜெயந்தியின் நாவல் நம்முள் எதுவாக ஆழப்பதிகிறது?

 

சிங்கப்பூரில், இந்தியாவில் புனே, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் விரியும் கதை இரண்டு பள்ளித் தோழிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது ஒருத்தி பத்மா. மற்றொருத்தி ரேணு. பத்மாவின் வாழ்க்கை சாதாரண இந்தியப் பெண் ஒருத்தியின் திருமண வாழ்க்கை. ரேணுவின் வாழ்க்கை போராட்டமும் துயருமானது. மனோவிகாரம் நோயாக மனைவியை வன்முறையாகவும் ஆபாசமாகவும் சித்திரவதை செய்யும் கணவனிடம் போராடுகிறாள். அவனது குழந்தையைக் கலைக்க இருந்தவள் பெற்றோர் மற்றும் மருத்துவர் ஆலோசனையை ஏற்று அந்தக் கருவை விட்டு விடுகிறாள். குழந்தை (மகன்) பிறந்த பிறகு தான் மருத்துவரிடம் சென்றதாகவும் திருந்தியதாகவும் தொடர்ந்து மருத்துவம் செய்து கொள்வேன் என்றும் அவன் கூற மீண்டும் அவனுடன் ஒரு வாழ்க்கைக்கு முயன்று தோற்கிறாள். இம்முறை அவன் குழந்தையையும் சித்திரவதை செய்கிறான். எனவே நிரந்தரமாகப் பிரிந்து போராடி விவாகரத்து பெறுகிறாள். உடன் பணிபுரியும் மருத்துவர் விடாப்பிடியாக அவள் வீட்டினரை அணுகி அவளது மகனுடனும் குலாவி அவளை மிகவும் வற்புறுத்தி மணம் செய்து கொள்கிறான். ஒரு வருடத்துக்கு உள்ளே அவனுக்குத் தன் குழந்தையை அவள் பெற்றுத் தருவாளா அதே அன்பு தருவாளா என்றெல்லாம் சந்தேகம் வருகிறது. அதை மாற்றிக் கொள்ள முயன்று தோற்கிறான். விளைவு ? பிரிகிறார்கள். ஆனால் அது அவளைத் தீராத மன அழுத்தத்துக்குள் தள்ளி விடுகிறது. அவன் மறு மணம் செய்து கொள்கிறான். ரேணுவின் மகன் காலப் போக்கில் எதிர்மறைக் குணங்களும் தீயபழக்கங்களும் மிகுந்து கல்லூரி செல்லும் வயதில் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு குடும்பத்தை விட்டும் நீங்கி விடுகிறான்.

 

நாவலின் மைய நீரோட்டக் கதையாக இதைக் கொள்ளலாம். ஆனால் இணையாக மீனா என்னும் பெண் விருப்பமில்லா மணத்துக்கு ஆட்பட்டு புது வாழ்க்கையில் நிலைக்கும் முன் மீண்டும் பழைய காதலனால் நெருக்கடி செய்யப்பட்டு தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்கிறாள். பெற்றோர் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று மணம் புரிந்தவள் அவர்கள் மானத்துக்குப் பயந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

 

ரேணு மீனா இவர்கள் இருவரைத் தவிர்த்து மூன்றாவதாக ஒரு பாத்திரம் அவள் ரேணுவின் தங்கை ரேவதி. அவள் திருமணமே வேண்டாம் என முடிவெடுக்கிறாள். பத்மா மைய கதாபாத்திரமாக இந்த முக்கியக் கதாபாத்திரங்கள் வழி நமக்கு கதையை உணர்த்துகிறாள். பத்மா தன் கணவன் சம்பந்தப்பட்ட மிகப் பெரிய ரகசியம் ஒன்றை குடும்ப நன்மைக்காக அவனுக்கே தெரியாது காப்பாற்றுகிறாள். அவளுடைய மகள் அர்ச்சனா அம்மாவைப் போலல்லாமல் நவநாகரீகமானவளாய் வளர்கிறாள். நான்காவதான​ கதாபாத்திரம் கவிதா. பத்மா ஒரு சராசரிப் பெண்ணாக, குடும்பத்தினரின் கையில் கயிறு எப்போதும் இருக்கும் பொம்மலாட்ட​ பொம்மை என்றால் கவிதா தன்னம்பிக்கையும் தனது தொழிலில் வெல்லும் ஆற்றலும் அது குறித்த​ பெருமிதமும் உள்ளவள். ஆனால் திருமணம் அவளது ஆளுமையின் வலிமைகளை நீர்க்கடித்து விடுகிறது.

 

இரண்டு தலைமுறைக் கதையை நாவலாக வடித்தபின் அந்த நாவல் ஒரு பெண் எழுத்தாளரின் நாவல் என்னும் கோணத்தில் ஒரு ஆணுக்கு அன்னியமான எந்த அவதானிப்பை எந்த தரிசனத்தை முன் வைக்கிறார் என்பதே முக்கியமானது.

 

ஆண் பெண் இருவர் வெவ்வேறு உலகம் என்று நான் கிளிப்பிள்ளை போலக் கூறிவருபவன். ஆனால் ஜெயந்தி அப்படி நினைக்கவில்லை. அவர் ஆணும் பெண்ணுமான உலகில் பெண் ஆணை அணுகுவதும் ஆண் அவளை அணுகுவதும் இரு துருவமாயிருப்பதை ;மையப்படுத்துகிறார். ஆண் பெண்ணின் பயன்பாட்டின் அடிப்படையில் அவளுக்கு ஒரு இடத்தைத் தருகிறான். பயன்பாட்டைத் தாண்டி அவனுக்கு ஆர்வமெதுவுமில்லை. பெண் அவனை தன் வாழ்வை நிறைவு செய்யும் பகுதியாகக் காண்கிறாள். அந்த நிறைவு என்பது என்ன? அவனும் அவளும் இணைந்த குடும்பமாவது.

 

அதாவது குடும்பம் என்னும் நிறைவு மிகுந்த அமைப்பை அவள் மிகவும் புனிதமாக எண்ணுகிறாள். அதைக் காப்பதற்காக அவள் பல விலைகளைத் தருகிறாள். ரேணு இரண்டாம் முறை கொடுமைக்கு ஆளாகிறாள். மீனா உயிரையே தருகிறாள். ரேவதி திருமணமே செய்து கொள்ளாமல் தாய் தந்தை என்னும் குடும்பத்தை தனது மையமாக்கிக் கொள்கிறாள். பத்மா முன்னுதாரணமான குடும்பத் தலைவியாக குடும்ப வாழ்க்கை நடத்துகிறாள்.

 

குடும்பம் என்னும் அமைப்பின் மீது பெண்கள் வைத்திருக்கும் அர்ப்பணிப்பு மிகுந்த பிணைப்பே ஆணை ஒரு எதிரியாக்காமல் அந்த அமைப்புக்குள் இருவரும் ஒன்றாயிருக்கும் எதாவது ஒரு வழி தேடும் நிராயுதபாணிகளாகப் பெண்களை இயக்குகிறது.

 

இதை கண்டிப்பாக ஒரு சிறுகதையில் கூற முடியாது. நாவல் வடிவம் மட்டுமே இதன் விரிவைத் தர இயலும். சீன முதியவர், இலங்கைத் தாய் ரேணுவின் கணவனின் நண்பன் என பல கதாபாத்திரங்களை பிசிரின்றி சேர்த்திருக்கிறார்.

 

பத்மா மூலமாகவே முக்கியமான பகுதிகள் கூறப்படுகின்றன. உளச்சிக்கல், மன அழுத்தம் சார்ந்த பதிவுகள் அந்த அந்தக் கதாபாத்திரத்தின் மூலமாகவே கூறப்பட்டிருந்தால் இன்னும் அழுத்தமாக வந்திருக்கும். சிங்கப்பூரின் கோயிலைப்பற்றிய வர்ணனையோ அல்லது குழந்தை முதல்நாள் பள்ளிக்குச் செல்லும் ரகளையோ பெண்கள் கவனத்தை ஈர்க்கும் பதிவுகள் இயல்பாகவே நாவல் முழுதும் காணப் படுகின்றன.

 

தொடங்கிய​ கேள்விக்கு மீண்டும் வருகிறேன். திரிந்தலையும் திணைகள்- அகத்திணை இல்லாமலே போய் விட்டதா? இல்லை திருமணத்துக்குள் இல்லாமல் போய்விட்டதா? காலத்தால் பின்னப்பட்டு விகாரப்பட்டு விட்டதா? அகத்திணை என்பது திருமணம் என்னும் சதுரத்துக்குள் ஆனதா? இந்தத் துணைக் கேள்விகளுடன் வேறு ஒரு நாவல் கண்டிப்பாக​ வரவேண்டும்.

 

எனது பார்வையில் இது பெண் ஆணுடன் குடும்பம் என்னும் அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்ளும் அர்ப்பணிப்பை மையப்படுத்தும் நாவல். அதில் ஜெயந்தி வெற்றி கண்டிருக்கிறார்.

 

சமகாலத்தில் பெண் எழுத்தாளர்கள் அருகி வரும் இனமாக ஆகி விட்ட நிலையில் செறிவான ஒரு நாவலுடன் நம்பிக்கை தருகிறார் ஜெயந்தி. வாழ்த்துக்கள்.

 

சத்யானந்தன்

 

 

Series Navigationகல்லடி
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *