தொடுவானம் – 92. பெண் தேடும் படலம்

This entry is part 10 of 24 in the series 1 நவம்பர் 2015

” எங்கே தேடுவேன். எங்கே தேடுவேன்?

உலகம் செழிக்க உதவும் பணத்தை

எங்கே தேடுவேன்? ”

இந்தப் பாடலை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் ” பணம் ” படத்தில் பாடுவார்.

விடுதி நாள் விழாவுக்கு விருந்தினராக ஒரு பெண்ணை எங்கே தேடுவேன் என்ற மனநிலையில்தான் அந்த இரண்டு நாட்களும் கழிந்தன.  இது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. இன்னும் துணை தேடிக்கொள்ளாமல் இருக்கும் பதினைத்து மாணவிகளிடம் ஒவ்வொருவராகக்கூட அணுகிப் பார்க்கலாம். ஆனால் தன்மானம் தடை போட்டது! கேட்டு அவள் மறுத்துவிட்டால்  என்னாவது? அவளுடன் இன்னும் நான்கு வருடமாவது ஒரே வகுப்பில் இருக்க நேரிடுமே! என்னை நிராகரித்துவிட்டு இன்னொருவனுடன் சென்றவள் என்ன எண்ணம் அவளைப் பார்க்கும்போதெல்லாம் மனதில் நெருடலை உண்டாக்குமே!

வகுப்பு மாணவிகளில் பெரும்பாலோர் அழகிகள்தான். அதிலும் கேரளத்துப் பெண்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை. அவர்களின் நிறமும் நளினமும் பழகும் விதமும் யார் மனதையும் எளிதில் கொள்ளை கொள்ளும்.தேர்வு செய்தவர்கள்  நிச்சயமாக பெண்களின் அழகுக்கும் கூடுதல் மதிப்பெண்கள் கொடுத்திருப்பார்களோ என்றுகூட நினைக்கத் தோன்றும். அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் போதுமான மலையாள மாணவர்கள் இருந்தனர். அதனால் அவர்கள் மீது ஆசையோ காதலோ கொள்வதில் பயனில்லை. இனம் இனத்தோடுதானே சேரும்!

சிங்கப்பூரிலிருந்து பிரேமா வந்திருந்தாள். மலேசியாவிலிருந்து மகாதேவி உள்ளாள். நான் சிங்கப்பூர் என்பதால் நாங்கள் உள்ளூர் பக்கத்து நாட்டவர். அனால் அவர்கள் இருவருமே கொஞ்சம் ” ரிசவ்ர்ட் ” டைப்.

கிரேஸ் நிர்மலா ஆந்திரா. நடை உடை பாவனையில்  தமிழ்ப் பெண்தான்.தமிழ்ப் பெண்ணுக்கு உள்ள நாணம் அதிகம் அவளிடம். வகுப்பில் சம்ருதியும் பிரேம் குமாரும்  ஆந்திராதான். ஆனால்  அவர்கள்  அவளிடம் உரிமை கொண்டாடுவதாகத் தெரியவில்லை. முயன்று பார்க்கலாம். என்னுடன் நன்றாகத்தான் பேசுவாள்.

எலிசபெத் நிகால் சிங். பஞ்சாப் மாநிலத்தவள்.  தங்க நிறம். அழகென்றால் கிறங்க வைக்கும் அழகு! மயிலின் சாயல் என்று சொல்வார்களே அது அவளுக்கே பொருந்தும்!

” மானென்று கூறினால் மருளுதல் மானுக்கில்லை

குயிலென்று கூறினால் ஏழிசையும் குயிலுக்கில்லை. ”  என்று ” அவனும் அவளும் ”  கவிதைத் தொடரில் இராமலிங்கம் பிள்ளை வர்ணனை செய்திருப்பார். அவளைப் பார்க்கும்போது அந்த கவிதை வரிகள் நினைவுக்கு வரும். ஆனால் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்தரும், அசோக் தயாள் சந்த்தும் உள்ளனர். பஞ்சாபிகளுடன் எதற்கு வீண் வம்பு? தமிழ் நாடு எங்கே? பஞ்சாப் எங்கே?

மாகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவள் மராட்டிய அழகு தேவதை லலிதா வைராகர். அவள் குரலிலும் பேச்சிலும் கொஞ்சல் மேலோங்கும். ” கொஞ்சு மொழி பெண்களுக்கு அஞ்சா நெஞ்சம் வேண்டுமடி ” எனும் திரைப்பாடல் நினைவுக்கு வரும். அவள் பேசும்போது தலையை ஆட்டி ஆட்டி பாவனையுடன் பேசுவது மனதைக் கவரும். பேசி விலகிச் சென்றாலும் அந்த கானக் குரல் ரீங்காரமிடும்! ஆனால் வகுப்பில் உஸ்காரி என்பவன் உள்ளான். அவன் இயற்கையிலேயே கொஞ்சம் கோபக்காரன்.இது தேவையற்ற தலையிடல். யார் மனதில் என்ன உள்ளது என்பது யாருக்குத் தெரியும்.

ஒரு வேளை நான் துணிந்து கேட்பது என்று முடிவு செய்தால் இவர்களைத்தான் கேட்கவேண்டும்.  இவர்கள் ஏதாவதொரு வகையில் என்னைக் கவர்ந்துள்ளனர் என்று எண்ணுகிறேன்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு வகுப்பு மாணவிகள் யார் மீதும் எவ்வித ஆர்வமோ ஈர்ப்போ கிடையாது.  ஆதலால் நான் எப்போதுமே கொஞ்சம் ஒதுங்கியே  ..இருப்பேன். எனக்கு முன்பே லதா, வெரோனிக்கா , கோகிலம் ஆகிய மூவரின் தொடர்பு முற்றுப்பெறாமல் உள்ளது. இதில் நான்காவது தொல்லை ( காதல் ) தேவையில்லை

          பெஞ்சமின் என்னிடம் கேட்டான். நான் யாரையும் சென்று அழைக்கப்போவதில்லை என்றேன். அவனும் அவ்வாறே கூறினான். அவன் படித்து முடிக்கும்வரை எந்தப்  பெண்ணையும் காதலிக்கப்போவதில்லை என்றான். அவன் காதல் அனுபவமே இல்லாதவன். நான் காரணத்தைக் கேட்டேன். குடும்ப சூழல் அப்படி என்றான். நான் ஓரளவு புரிந்துகொண்டேன். இவ்வளவுக்கும் அவன்தான் அந்த ஆண்டின் விடுதி உடற்கட்டழகன் கிண்ணத்தை வென்றவன்!
சம்ருதி மேசையருகில் அமர்ந்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். நான் அருகில் சென்று அமர்ந்தேன். மேசைமீது காகிதம் இருந்தது. அதில் அந்த பதினைந்து பெண்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தது. எனக்குப் புரிந்துவிட்டது. யாரையம் மறந்துபோகக்கூடாது என்று எழுதிவைத்துள்ளான். எதையும் ஏனோதானோ என்று செய்யாமல் ஆற அமர நிதானமாகச் செய்யும் இயல்புடையவன். காலையில் கூட அவசரப்படாமல் நிதானமாகத்தான் தூங்கி எழுவான். நான்தான் அவனை எழுப்புவது வழக்கம். விழித்தபின் இன்னொரு சிறு தூக்கம் போடுவான். வகுப்புக்கும் தாமதமாக நிதானமாகத்தான் வருவான்!
          ”   என்ன யோசனை ? இது என்ன? ” தாளை எடுத்து அவனிடம் நீட்டினேன்.
          ” யாரை அழைக்கலாம் என்று யோசிக்கிறேன். ஒன்றும் சரியாக வரவில்லை என்றால் வேறு வழியில்லை, சீட்டு போட்டு பார்க்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். அதற்கு நீதான் கிளியாக மாறி ஒரு சீட்டை எடுக்கணும் ” நிதானமாகவே பதில் கூறினான்.
          ” ஏன் இப்படி? துணிந்தபின் மனமே துயரங்கொள்ளாதே தேவதாஸ் பாடலை நீதானே கண்டசாலா மாதிரி தெலுங்கில் பாடுவாய்? துணித்து உனக்குப் பிடித்த ஒருத்தியை அழைத்துப் பார்க்கவேண்டியதுதானே? ” தைரியமூட்டினேன். அவன் கண்டசாலா பாடல்களை விரும்பிப் பாடுபவன். பெண்கள்கூட இரசித்துக் கேட்பார்கள்.
          ” என் மூக்கு நன்றாக இருப்பது உனக்கு பிடிக்கலையா? ” என்றான் நிதானத்தை கொஞ்சமும் இழக்காமல்.
          இதுபோன்றுதான் வகுப்பு மாணவர்களில் சிலர் இரண்டு நாட்களும் குழப்பத்தில் ஆழ்ந்து காணப்பட்டனர். ஆனால் சிலரோ ஆனந்த தாண்டவம் ஆடினார். அவர்களுக்கு கேட்ட மாத்திரத்தில் சம்மதம் கிடைத்திருக்கும். சிலர் பெண் கிடைத்துவிட்டதை வெளியில் சொல்லாமல் இரகசியம் காத்தனர்.
          இரண்டு நாட்கள் கழித்து நாங்கள் மீண்டும் ஒன்று கூடினோம். புதிதாக யார் யாருக்கு ஜோடிகள் கிடைத்துள்ளனர்  என்பதை அறிய அனைவருமே ஆவலாக இருந்தோம்.
          வெண் பலகையில் அழிக்கும் மை பேனாவால் கணேஷ் நிச்சயமான பத்து ஜோடிகளின் பெயர்களை முதலில் எழுதினான். பின்பு புதிதாக அந்த பட்டியலில் சேர விரும்புபவர்கள் கையை உயர்த்தலாம் என்றான். மொத்தம் ஐந்து கைகளே உயர்ந்தன! ஆக அனைவருமே வலிய சென்று அழைக்க என்னைப்போலேவே தயங்கியுள்ளது தெரிந்தது. பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் அவசரம் கூடாது என்று சிலர் எண்ணியிருக்கலாம். தவறாக இப்போதே ஏன் சிக்கிக்கொள்ளவேண்டும் என்றும் சிலர் பின்வாங்கியிருக்கலாம். இன்னும் நான்கு வருடங்கள் உள்ளது என்று சிலர் இறுமாப்புடன் இருக்கலாம். அடுத்த வருடம் புது மாணவிகள் சேர்வார்கள். அவர்களில் கூட தேர்வு செய்துகொள்ளலாம் என்றுகூட சிலர் எண்ணியிருக்கலாம். எது எப்படியோ. இப்போது இருபத்தைந்து மாணவிகளில் பதினைந்து பேர்கள் ” புக்கிங் ” ஆகிவிட்டார்கள். இனி எஞ்சியிருப்போர் பத்தே பத்து மாணவிகள்தான்! இவர்களை மீதமுள்ள இருபது மாணவர்கள் பங்கு போட்டுக்கொள்ளவேண்டும்! அது எப்படி முடியும்! இது என்ன சாதாரண பொருளா பங்கு போட்டுக்கொள்ள?
          ஜெயமோகன் கை உயர்த்தினான். அவனை ” அச்சன் ” என்று நாங்கள் கிண்டல் செய்வோம். ” அச்சன் ” என்று மலையாளத்தில் அப்பாவை அழைப்பார்கள். இங்கு அது பாதிரி என்று பொருள். கல்லூரி போதகர் ஊமன் அவர்களை நாங்கள் அச்சன் என்றுதான் அழைப்போம். ஜெயமோகன் அறைக்குள் சென்றால் அவன் கைகளில் வேதநூலுடன்தான்  காணப்படுவான்.
          ” முப்பத்தைந்து பேர்களில் பதினைந்து பேர்களுக்கு பெண்கள் கிடைத்துவிட்டனர். மீதம் இருபது பேர்கள் உள்ளோம். அனால் இருப்பதோ பத்து பெண்கள்தான். ‘ அறுப்போ மிகுதி, வேலையாட்களோ குறைவு ‘ என்று வேத வசனம் சொல்வது போன்று உள்ளது  வேண்டுமானால் சிலர் இதிலிருந்து விலகிக்கொள்ளலாமே? என்னுடைய  அறைக்கு ஒரு பெண்ணை அழைத்துவந்து அவளை உபசரிக்க வேண்டும் என்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. என்னைப்போல் இன்னும் சிலர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் பிரச்னை தீருமே? ” அவன் அச்சன் என்பதால் பெண்ணை அறைக்குள் வைத்திருக்க அஞ்சினான்!
          உடன் எட்வர்ட் ரத்தினம் கையை உயர்த்தினார். அவரை நாங்கள் ” பர்மா மேன் ” என்று செல்லமாக அழைப்போம். அவர் பர்மாவிலிருந்து வந்தவர். அவர் ஜெயமோகனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
” ஆமாம். நானும் என்னுடைய உரிமையை விட்டுக்கொடுத்து மற்றவர்களுக்கு வழிவிடுகிறேன்.” என்றார். அவர் எங்கள்  அனைவரையும்விட வயதில் மூத்தவர் என்பதால் இந்த மரியாதை அவருக்கு. அவர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சலுகையில்  எங்கள் வகுப்பில் காலதாமதமாகச்  சேர்ந்தவர்.
          அவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் அதற்கு ஆதரவு நல்கவில்லை. கிடைக்கும் வாய்ப்பை ஏன் நழுவவிடவேண்டும் என்ற மனநிலை.
          பாலாஜி நாயுடு எழுந்து நின்றான். அவனுடைய உறவினர் பாப்பையா நாயிடுதான் விடுதிச் செயலாளர். அவர் சீனியர் மாணவர். அவர்மூலமாக விடுதியின் சட்டதிட்டங்களைத்  தெரிந்து வைத்திருந்தான்.
         ” இதுபோன்று யாரும் பின்வாங்க முடியாது. எல்லாருக்கும் கட்டாயமாக ஒரு பெண் விருந்தாளியாக இருக்கவேண்டும் என்பது விடுதியின் சட்டதிட்டம். மீதமுள்ள பத்து பெண்களை இருபது பேரும் பகிர்ந்துகொள்ளவேண்டும். இதுதான் இங்குள்ள பாரம்பரியம். பாப்பையா நாயுடு அப்படிதான் சொன்னார். ” பிரச்சனைக்கு ஒரு முடிவு தோன்றியது..
          ஜெயரத்தினம் குறுக்கிட்டு, ” இந்த பங்கு போடும் விதத்தை விளக்கினால் நல்லது. நமக்குள் இதனால் வீண் பிரச்னையோ மன வருத்தமோ எழக்கூடாது. ” என்றான்.
          இறுதியாக கணேஷ் பெண்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதைக் கூறினான்.
           ” அந்த பத்து பெண்களின் பெயர்களை  தனித்தனியாக சிறு காகிதங்களில்  எழுதி சுருட்டி வைப்போம். அதை ஆளுக்கு ஒன்றாக பத்து பேர் முதலில் எடுக்கவும். பின்பு மீண்டும் அதே சீட்டுகளை மீதமுள்ள பத்து பேர் எடுக்கணும்.அப்போது ஒரு பெண் இருவருக்குக் கிடைப்பாள்.” இவ்வாறு சொல்லி முடித்ததும் கூடம் அதிரும்படியான கரகோஷம் எழுந்தது!
            அவன் தொடர்ந்து கூறினான். ” இப்படி ஒரு பெண்ணை இருவர் பகிர்ந்துகொள்ளும்போது அவளை இருவரும் ஆளுக்கு ஒரு மணிநேரம்  தங்கள் அறையில் வைத்து உபசரிக்கலாம். ஆனால் அதன்பின் இரவு உணவின்போதும் கலைநிகழ்ச்சிகளின்போதும் இருவருமே அவளுடம் இருக்கவேண்டும். இதுதான் நிபந்தனை. ” இதைக்கேட்டு ஆரவாரம் மேலும் அதிகமானது
          அவன் கூறியவாறே சீட்டு எழுதி எடுத்தோம். அதில் எனக்கும் பிரேம் குமாருக்கும் லலிதாவின் பெயர் இருந்தது.
          லலிதா! ஆம் ! அவள்தான் அந்த மராட்டிய இளவரசி!
( தொடுவானம் தொடரும் )
Series Navigationநெத்தியடிக் கவிதைகள்இளைஞர்களுக்கு இதோ என் பதில்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Comments

  1. Avatar
    ஷாலி says:

    // இப்படி ஒரு பெண்ணை இருவர் பகிர்ந்துகொள்ளும்போது அவளை இருவரும் ஆளுக்கு ஒரு மணிநேரம் தங்கள் அறையில் வைத்து உபசரிக்கலாம். ஆனால் அதன்பின் இரவு உணவின்போதும் கலைநிகழ்ச்சிகளின்போதும் இருவருமே அவளுடம் இருக்கவேண்டும்.//

    டாக்டர் ஸார்! …என்ன இது அநியாயமாக இருக்கிறது. ஆண்களாக கூடி பெண்களை பங்கு பிரித்துக் கொள்கிறீர்கள்.அந்தப் பத்துப் பெண்களுக்கும் விருப்பு,வெறுப்பு என்று ஒன்றுமே இருக்காது என்று முடிவு செய்து விட்டீர்களா? உங்களுக்கு ஒரு பெண் கிடைக்கவில்லை என்பதற்காக,ஒரு பெண்ணின் விருப்பம் அறியாமல் இரு ஆணை அப்பெண்ணிடம் வலுக்கட்டாயமாக தள்ளுவது… ஆணாதிக்க மேலாண்மையை கல்லூரியிலேயே கற்றுக் கொடுத்து விட்டார்கள் போலும்…பரவாயில்லை..ஆனால் கட்டுரை சுவையாக செல்கிறது.வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *