டாக்டர் ஜி. ஜான்சன்
99. கங்கைகொண்ட சோழபுரம்
அண்ணனும் அண்ணியும் குழந்தை சில்வியாயும் ஊருக்கு வந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது – கோகிலத்தைத் தவிர. அவளுக்கு அடிக்கடி வீட்டுக்கு வரமுடியாதே என்ற கவலை. அப்படியே அம்மாவுக்கு உதவுவதுபோல் வந்தாலும் என்னிடம் முன்புபோல் தாராளமாகப் பேசமுடியாது.
ஊரில் அண்ணனுக்கு நல்ல மதிப்பு இருந்தது. அவர்தான் சுற்று வட்டாரத்தில் முதன்முதலாக கல்லூரி சென்று பட்டம் பெற்றவர். கல்விக்கு எப்போதுமே தனிச் சிறப்புதானே.
வள்ளுவர்கூட கல்விக்கு ஓர் அதிகாரம் ஒதுக்கி அதன் சிறப்பியல்புகளைக் கூறியுள்ளார். அதில் ஒரு குறள் இவ்வாறு உள்ளது:
” உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரித
லனைத்தே புலவர் தொழில். ”
கற்றாரின் அடக்கமும் அறவொழுக்கமும் இன்சொல்லும் உறுதி பயக்கும் அறிவுரையும் எல்லாரையும் இன்புறுத்துதலால் , அவரை விட்டுப் பிரிய ஒருவரும் விரும்பார் என்பதாம் என்று இதற்கு மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் விளக்கம் கூறுவார். அண்ணனிடம் இத்தகைய உயர்ந்த பண்புகள் இருந்தன. அப்போதெல்லாம் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர்கள் அவ்வாறுதான் சிறந்து காணப்பட்டனர். அண்ணன் அப்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற இளங்கலை ( பி.ஏ ) பட்டதாரி. அதன்பிறகு சென்னை மெஸ்ட்டன் கல்லூரியில் பி.டி. பட்டம் பெற்றார். அவர் அதிகம் பேசமாட்டார். எப்போதும் எதோ சிந்தனையில் இருப்பதுபோல் காணப்படுவார். அளவோடு பேசினாலும் நல்ல அறிவுரை வழங்கும் குணமுடையவர். உறவினருக்கும் கிராம மக்களுக்கும் அவரை மிகவும் பிடித்திருந்ததைப் பார்த்தேன்.
சில்வியாவுக்கு ஒரு வயது. தத்தித்தத்தி நடக்கும் குழந்தை. அம்மாவுக்கு அவள் முதல் பேத்தி. அளவு கடந்த ஆனந்தம் அவருக்கு. அண்ணி ஓரளவு கிராமத்தில் சமாளித்துக்கொண்டார். குளிப்பதில்தான் சிரமம். அவர் ஆற்றுக்குப் போகமாட்டார். தென்னங்கீற்று மட்டைகளால் குளிக்க ஓர் அறை தோட்டத்தில் கட்டி தண்ணீர் பெரிய அண்டாவில் அம்மா வைத்துவிடுவார். அண்ணி அந்த மறைவில் குளித்துவிடுவார்.
அண்ணன் காலையிலேயே மதியழகனுடன் ஆற்றங்கரை சென்றுவிடுவார். மதியழகன் அவருக்கு பால்ய நண்பர். ஒரே வயதுடையவர்கள். தொடர்ந்து படிக்கவில்லை. எங்கள் வீட்டு பண்ணையாளாக உள்ளார். ஆடுமாடுகளை பார்த்துக்கொள்வதோடு வயல்களையும் பார்த்துக்கொள்வார். எனக்கு பால்பிள்ளைபோன்று அண்ணனுக்கு
மதியழகன்.
தோட்டத்தில் இரண்டு தென்னை மரங்கள் குலை தள்ளியிருந்தன.பால்பிள்ளையை ஏறி இளநீர் பறிக்கச் சொல்வோம். அவன் கிடு கிடு வென்று மரத்தில் ஏறி இளநீர் தள்ளிவிடுவான். இறங்கியபின் அவற்றை சீவியும் தருவான். வெயில் நேரத்தில் இளநீர் பருகிவிட்டு அதன் வழுக்கையைச் சுவைத்து உண்போம். இதுபோன்ற வேலைகளில் அவன் கெட்டிக்காரன்.
இராஜகிளி அண்ணிக்கு நல்ல துணையானார். அவர் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர். நேரம் கிடைக்கும்போதேல்லாம் வந்து திண்ணையில் உட்கார்ந்து அண்ணியிடம் பேசிக்கொண்டிருப்பார். நான் பெரும்பாலும் பால்பிள்ளையுடன் தூண்டில் போட ஆற்றங்கரை சென்றுவிடுவேன். அங்குதான் கோகிலத்துடன் பேசுவேன்.அவள் சொன்னதையே திரும்ப சொல்வாள். நானும் சொன்ன பதிலையே திரும்ப சொல்வேன். புதிதாக ஏதும் பேசிக்கொள்ளவில்லை.
எப்போதும் தூண்டிலோடு இருப்பதைப் பார்த்த அண்ணன் ஒரு மாற்றத்திற்கு கங்கை கொண்ட சோழபுரம் கோவிலுக்கு அண்ணியுடன் பொய் வரச் சொன்னார். முன்பு அவர்தான் தஞ்சைப் பெரிய கோவிலுக்கு எங்களை அனுப்பினார். அண்ணியும் இந்தக் கோவிலைப் பார்த்ததில்லை. தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவர் இராஜராஜ சோழன் என்றும், கங்கைகொண்ட சோழபுரம் கோவிலைக் கட்டியவர் அவரின் புதல்வர் இராஜேந்திர சோழன் என்றும் கூறினார். எனக்கு உடன் இதைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. இதைப் பற்றி நான் கேள்விப்பட்டிருந்தாலும் இது இவ்வளவு அருகில் இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. இங்கிருந்து பனிரெண்டு கிலோமீட்டர் தொலைவில்தான் அது உள்ளது. அண்ணியும் அங்கு செல்ல ஆர்வமானார்.
மதிய உணவுக்குப் பின் புறப்பட்டோம். பால்பிள்ளை கூண்டு வண்டி தயார் செய்தான். எங்களை தவர்த்தாம்பட்டு பேருந்து நிற்குமிடத்தில் இறக்கி விட்டான். நாங்கள் காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்தில் ஏறினோம். அரை மணி நேரம் பிரயாணம்தான். அங்கிருந்து கங்கைகொண்ட சோழபுரம் செல்லும் பேருந்தில் ஏறினோம்.அது மீன்சுருட்டி வழியாக அரைமணி நேரத்தில் கோவில் அருகில் நின்றது.
மாலை வெயிலில் கோவிலின் கோபுரம் பளிச்சிட்டது. வீதியிலிருந்தே கோவிலின் ஒரு பகுதி நன்றாகத் தெரிந்தது. கோவிலைச் சுற்றிலும் பிரம்மாண்டமான மதிற்சுவர் எழுப்பப்பட்டிருந்தது. குறுகிய நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்தபோது கோவிலின் அமைப்பு பிரமிப்பைத் தந்தது. பெரிய பெரிய கருங்கற் பாறைகள் கொண்ட சுவர்களும் அவற்றில் காணும் சிற்பங்களும் கலை அம்சங்களும் பெரும் வியப்பை உண்டுபண்ணின. கோவில் பசும்புல் படர்ந்த பெரிய சதுப்பு நிலத்தில் கம்பீரமாகத் தோற்றமளித்தது. அதைக் காணும் எவருக்கும் ஒரு தெய்வீக உணர்வு உண்டாகி கடவுளை தோத்தரிக்கச் செய்துவிடும். அந்த கருங்கற் கோவிலில் ஒரு தெய்வீகக் கலையை என்னால் உணர முடிந்தது! உண்மையில் நான் வியந்துபோனேன். ஏனோ தெரியவில்ல்லை. தஞ்சைப் பெரிய கோவிலைவிட இந்தக் கோவிலில் அத்தகைய எழுச்சி மனதில் தோன்றியது!
படிகள் பல ஏறி கோவிலுக்குள் சென்றோம். அண்ணிக்கு கால் வலிக்கிறது என்று சொல்லி அங்கு கொஞ்ச நேரம் அமர்ந்துகொண்டார். நான் வெறுங்காலுடன் உள்ளே நடந்துசென்றபோது கருங்கல் தரை சில்லிட்டது. கோவிலின் உட்புறமும் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்து. வெளியில் உள்ள வெயிலின் தணல் கோவிலின் உள்ளே இல்லாமால் குளுமையாகவே இருந்தது. இதை உருவாக்கிய சிற்பிக்கு சிறந்த கலையுணர்வு இருந்திருக்கவேண்டும். சோழ நாட்டின் சிற்பத்திறனுக்கு இந்த கலைக்கோவில் காலமெல்லாம் அடையாளச் சின்னமாக விளங்கும்.
சோழர்களின் காலம் தமிழகத்தின் பொற்காலம். அப்போது தமிழ் நாடு சோழநாடு, சேர நாடு, பாண்டியநாடு, நடு நாடு, தொண்டை நாடு என்று சிறு நாடுகளைக் கொண்டதாக இருந்துள்ளது. அதோடு ஈழ நாடும் சோழர்களின் கைவசம் இருந்துள்ளது. இவையெல்லாம் இராஜராஜன் காலத்தில் பல போர்களில் வென்று கைப்பற்றியவை. அதோடு வேங்கியைத் தலைநகராகக் கொண்ட கீழை சாளுக்கியமும் சோழர்களின் கைவசமே இருந்துள்ளது. அதன் அரசன் விமலாதித்தனுக்கு தன்னுடைய மகள் குந்தவையைத் திருமணம் செய்துவைத்து உறவை பலபடுத்தியும் உள்ளார். இராஜராஜனின் பெயரைக் கூறும் வண்ணம் தஞ்சைப் பெரியகோவில் வானளாவி நின்று அவரின் பெருமை கூறுகிறது. தஞ்சைதான் சோழர்களின் தலைநகரம்.
இராஜராஜனின் புதல்வர் இராஜேந்திர சோழன் முடிசூட்டி அரியணை ஏறியது 1014 ஆம் வருடத்தில். அவர் தலைநகரை ஜெயங்கொண்டத்தில் மாற்றி அமைக்க முடிவு செய்ததோடு அங்கு தஞ்சைக் கோவிலைப்போன்று இன்னொரு பிரமாண்டமான கோவிலை கட்டவேண்டும் என்று முடிவெடுத்தார். அங்கு கோட்டையும் அதனுள் அரண்மனையையும் கட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்தார்.புதிய தலைநகரை ஒரு நகரமாகவே அமைக்க திட்டமிட்டார்.
நாகப்பட்டிணமும் பூம்புகாரும் தரங்கம்படியும் சோழர்களுக்கு துறைமுகங்கள். அங்கிருந்து நாவாய்களில் சோழ தேசத்து வணிகர்கள் கடலுக்கு அப்பாலிருந்த ஸ்ரீ விஜயத் திற்கும் கடாரத்திற்கும் சென்று வருவார்கள். அங்கு சீன தேசத்து வணிகர்களிடம் பண்டமாற்று வியாபாரம் செய்தனர். அவர்களை ஸ்ரீ விஜயத்தில் கடற்கொள்ளையர்களும் இதர வணிகர்களும் அடித்து துன்புறுத்தி வியாபாரம் செய்ய விடாமல் செய்துவிடுகின்றனர். அதோடு சோழர்களையும் ஏளனம் செய்கின்றனர். இதை செவிமடுத்த இராஜேந்திர சோழர் வெகுண்டெழுந்து வஞ்சினம் கொள்கிறார். கடல் படை அமைத்து அங்கு சென்று அவர்களை தண்டிக்க முடிவு செய்கிறார். ஆனால் அதற்கு போதிய நாவாய்கள் வேண்டும். சேர நாட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட இருபதுக்கு மேல் நாவாய்கள் நாகையில் உள்ளன. ஆனால் அது போதாது. ஈழ நாட்டு கடற்கரையில் மேலும் சில நாவாய்கள் செய்தனர்.
அப்போது மேலை சாளுக்கிய நாட்டு மன்னன் ஜெயசிம்மன் கீழை சாளுக்கியத்தைக் கைப்பற்றியதோடு விமலாதித்தனும் இறந்துபோகிறான்.மேலை சாளுக்கியர்களால் எப்போதும் இதுபோன்ற இடையூறு இருந்து வந்தது. அதனால் அவர்கள் தொண்டை நாடு நாடு நாடு வழியாக சோழ நாட்டுக்கும் வரும் ஆபத்து நிலவியது. அதை ஒரு முடிவுக்குக் கொண்டவர இராஜேந்திர சோழர் பெரும் படையுடன் வடக்கு நோக்கி செல்கிறார். படையை தானே தலைமை தாங்கி செல்கிறார். அவருக்கு உதவியாக அரையன் இராஜராஜன் என்பவர் சேனாதிபதியாக செயல்படுகிறார். அவருக்கு பக்கபலமாக அருண்மொழிபட்டன் என்னும் தளபதி விளங்குகிறான்.
தஞ்சையைப் பாதுகாக்க சேனாதிபதி கிருஷ்ணன் ராமன் பிரம்மராயரை நியமமணம் செய்கிறார். பாண்டிய நாட்டை ஆளும் பொறுப்பை தம்முடைய மகன் சுந்தர சோழ பாண்டியனிடம் ஒப்படைக்கிறார். கேரள நாட்டை ஆளும் பொறுப்பை இன்னொரு மகன் சோழ கேரளனிடம் ஒப்படைக்கிகிறார். பின்பு அவனை படையை நடத்திச் செல்ல வேங்கிக்கு அழைக்கிறார். ஆனால் அவன் ஓட்ட தேசத்தில் நடந்த போரில் வீரமரணமடைகிறான்.
சோழர் படையினர் நடு நாடு, தொண்டை நாடு வழியாக கீழை சாளுக்கியம் அடைந்து அதைக் கைப்பற்றுகின்றனர்.. தோல்வியடைந்த மேலை சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் வடக்கே தப்பியோடுகிறான். அங்கிருந்து படைகள் திரட்டுகிறான். அதை முறியடிக்க இராஜேந்திரர் கீழை சாளுக்கிய தலைநகர் வேங்கியில் தங்கிவிடுகிறார். அதன் அரசனாக குந்தவையின் மகன் இராஜராஜ நரேந்திரனை முடிசூட்ட முடிவுசெய்கிறார். அவனுக்கு தமது மகளையும் மணமுடிக்க ஏற்பாடுகள் செய்கிறார்.
முன்னேறிய சோழர் படையினர் அங்கிருந்து மேலை சாளுக்கியத்தைக் கைப்பற்றுகின்றனர்.அதோடு திரும்பியிருக்கலாம். ஆனால் இராஜேந்திரர் வடக்கே கங்கை வரைச் செல்லவேண்டும் என்கிறார். அங்கிருந்து கங்கை நீரை ஜெயங்கொண்டத்தில் கட்டப்படும் கோவிலுக்குக் கொண்டுசெல்லவேண்டும் என்பது அவரின் குறிக்கோள்.
அரையன் இராஜராஜன் தலைமையில் இரண்டு லட்சம் பேர் கொண்ட படை, குதிரையிலும், யானையிலும், தேரிலும், நடந்தும் ஆர்ப்பரித்தவாறு முன்னேறின.
ஓட்ட தேசம், தட்சிணலாடம், கோசலம், தண்டபுத்தி, உத்ரலாடம் போன்ற நாடுகளைத் தாண்டி போகவேண்டியிருந்தது. அங்கெல்லாம் சிற்றசர்கள் இருந்தனர். அவர்கள ஒன்றுசேர்ந்து சோழர் படையை எதிர்க்க தயாராயினர்.குறிப்பாக உத்திரலாடம் நாட்டில் ( வங்கம் ) பிரம்மபுத்ரா நதிக்கரையில் பெரும் போர் புரிந்து, கங்கையை அடைந்து அதன் தெற்கு கரையில் அந்த நாட்டு மன்னன் மகிபாலனின் படைகளுடன் கடும் போரில் ஈடுபட்டு அவனைக் கைது செய்கின்றனர். வங்க நாட்டில் மேலும் பல நாவாய்களைக் கைப்பற்றுகின்றனர். அவை பின்பு ஸ்ரீ விஜய படையெடுப்புக்கு தயாராகும் நாவாய்களுடன் சேர்க்கப்படுகின்றன.
இவ்வளவு இன்னல்களுக்கிடையில் கங்கையிலிருந்து நீர் எடுத்து வந்தனர். சுமார் நானூறு பெரிய தவலைகளில் கங்கை நீர் கொண்டுவரப்பட்டது!
ஜெயங்கொண்டத்தில் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. அதை உருவாக்கிய சிற்பியின் பெயர் நித்த வினோதப் பெருந்தச்சன் இரவி என்பவர்.கோவிலின் மகத்துவத்தைக் கண்ட இராஜேந்திரர் மலைத்துப்போகிறார். கும்பாபிஷேகம் அன்று இராஜேந்திரர் ஒரு குடம் நிறைய கங்கை நீரை தோளில் சுமந்துகொண்டு கோவில் உச்சி சென்று கலசத்தின் மீது கவிழ்த்தார்.கங்கை நீர் கலசத்தை முழுதும் நனைத்தது. நீர் தளத்திலிருந்து விமானத்தில் இரங்கி கீழே ஓடியது.
கோவிலுக்கு ” கங்கை கொண்ட சோழீஸ்வரம் ” என்று பெயர் சூட்டி சிறப்பித்தார்.
சோழர்களின் ஈஸ்வரன் சிவன். அவன் கங்கை கொண்டவன். சிவன் கங்கையை தன சிகையில் கொண்டுவந்ததுபோல கங்கையை மன்னர்களின் தலையில் ஏற்றி கொண்டுவந்தவன் இராஜேந்திர சோழன்! அதனால் அவனும் கங்கை கொண்டவன்! அவன் அவ்வாறு கண்ட தலைநகரத்தின் பெயர் கங்கை கொண்ட சோழபுரம்!
ஒரு மாபெரும் வீரத் தமிழ் மன்னனின் காலடி பதித்த புனித மண்ணில் நானும் நடந்துசென்ற மன நிறைவுடன் அண்ணியை அழைத்துக்கொண்டு இல்லம் திரும்பினேன்!
( இராஜேந்திர சோழர் பற்றிய குறிப்புகள் சிலவற்றை எழுத பாலகுமாரனின் ” கங்கை கொண்ட சோழன் ” சரித்திர நாவல் உதவியது. )
( தொடுவானம் தொடரும் )
- புத்தகங்கள் ! புத்தகங்கள் !!
- எனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 2
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூகோள நீர்மய அமைப்பு பூர்வ பூமித் துவக்கத்திலே நேர்ந்துள்ளது
- டூடூவும், பாறுக்கழுகுகளும்
- வாழையடி வாழை!
- வாய்ப் புண்கள்
- வந்தவாசி கவிஞர் மு.முருகேஷூக்கு ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது
- சாலையோரத்து மாதவன்.
- பொன்னியின் செல்வன் படக்கதை தொடராது
- கைப்பைக்குள் கமண்டலம்
- திரையுலகக் கலைஞர்களுக்கு . . .
- தினம் என் பயணங்கள் – 47 யுக்தி
- கனவு இலக்கிய வட்டம் டிசம்பர் மாதக் கூட்டம்
- 13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (1,2)
- மாமழையே வருக !
- சேவாபாரதி ‘வெற்றித் திருநாள்’ விழா நடத்தி பாரத இராணுவத்திற்கு பாராட்டு விழா
- வாரிசு
- நன்னூலாரின் வினையியல் கோட்பாடு
- எனது இறக்கைகள் பியிக்கப்பட்டிருந்தது !
- சகோதரி அருண். விஜயராணி நினைவுகளாக எம்முடன் வாழ்வார்.
- மழையின் பிழையில்லை
- தொடுவானம் 99. கங்கைகொண்ட சோழபுரம்
- 27-12-15, புதுவை -நாகரத்தினம் கிருஷ்ணாவின் நூல்களைக் குறித்த திறனாய்வு கருத்தரங்கமும் நூல் வெளி யீடும்