ஜே.டி.எட்ஸன் இங்கிலாந்தின் டெர்பிஷயர் அருகே உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்தவர். சிறுவனாக இருக்கும்போது தாய் வேலைக்கு சென்று விட பொழுது போகாமல் எட்ஸன் பார்த்த லோன் ரேஞ்சர், ஃப்ளாஷ் கார்டன் படங்களே அவரை தப்பித்தல் சாகச கதைகளை எழுதத் தூண்டியது.
137 வெஸ்டர்ன் நாவல்களை அவர் எழுதியிருக்கிறார். 2014ல் நோய் மற்றும் மூப்பு காரணமாக அவர் மரணமடைந்தார்.
0
( பகுதி 1 )
0
சபாட் அந்த பெரிய அரங்கின் மேடையில் ஒற்றை ஆளாக நின்றிருந்தான். ஒரு தேர்ந்த மந்திரக்காரனின் உடைகளில் அவன் அம்சமாக இருந்தான். சில நாட்களாக அவன் ஷ்ரேவ்போர்ட்டில் முகாமிட்டிருக்கிறான். இன்று அவனுக்கு கடைசி காட்சி. அதுவும் இலவசம்.
அவனோடு, மறைப்பதை விட, கவர்ச்சியை வெளிக்காட்டும் உடைகளில் வளைய வந்து கொண்டிருக்கும் செலிமா, அவனது கூற்றுப்படி டிரிப்போலி சுல்தானின் அந்தப்புரத்திலிருந்து மீட்கப் பட்டவள். அவளோ, இல்லை பின்னால் ஓயாமல் டிரம்ஸை வாசித்துக் கொண்டிருக்கும் கருந்தடியனோ, கூடியிருந்த மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அவர்கள் கவனமெல்லாம் சபாட் மேல் தான். அப்படித்தான் எல்லா இடங்களிலும் இருக்கும். இருக்க வேண்டும்.
சபாட்டிற்கு ஏதோ தவறு நடக்கப் போவது போலவே ஒரு உணர்வு உறுத்திக் கொண்டிருந்தது. தன் தந்திரங்களில் இருக்கும் உத்தியை யாரும் கண்டுபிடிக்க இயலாது என்று அவன் விடும் சவாலுக்கு சாட்சியாக அரங்கிலிருந்து நான்கு நபர்களை அவன் தேர்ந்தெடுத்திருந்தான். மூன்று ஆண்கள். ஒரு பெண்.
எதனால் இந்த உறுத்தல்? அரங்கில் இருப்பவர்கள் எல்லோரும் சாதா ஆசாமிகள். மேடையின் ஓரத்தில் உட்கார வைக்கப்பட்டிருக்கும் குழுவில் அந்த மூன்று ஆண்களும் அப்படித்தான். ஆனால் அந்தப் பெண்?
அவள் கொஞ்சம் வயதானவளாக இருந்தாள். பருவ வயதில் உயரக்காரிதான். இப்போது வயது அவள் தோள்களைக் குறுக்கி கூன் போட வைத்திருக்கிறது. ஒல்லி உடம்பு தளர்ந்து போய், அதிக ஒப்பனை அவளது முக சுருக்கங்களை மறைக்க முடியாமல் தோற்றுப் போயிருக்கிறது. சே! இவள் அப்பிராணி. பயமேதுமில்லை!
சீலிமாவை எரிச்சலுடன் பார்த்தான் சபாட். அவள் தான் அந்தப் பெண்ணைத் தேர்ந்தெடுத்தாள். ஆனாலும் ஆண்களுக்கு முன்னால் முதலில் கைத் தூக்கியது அந்தப் பெண் தான். பின் எப்படி மறுக்க முடியும்?
அரங்கம் நிரம்பி வழிந்தது. பெருந்தனக்காரர்களும் பிக்காரிகளும் ஒரே இடத்தில் குழுமி இருந்தார்கள். இலவசம் இவர்களை இணைத்திருந்தது.
சிகப்பு நதி அமெரிக்காவின் வடக்கையும் தெற்கையும் பிரித்து ஓடிக் கொண்டிருந்தது. அடிக்கடி உள் நாட்டு போர் அங்கே அரங்கேறிக் கொண்டிருக்கும். ராணுவம் வந்து புரட்சியாளர்களை ஒடுக்கும். பின் சில வருடங்களுக்கு அமைதி.
சபாட் பத்து நாட்களாக தன் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறான். நல்ல வசூல். அதற்கு நன்றிக் கடனாகத்தான் இன்று இலவச நிகழ்ச்சி நடத்துகிறான். அதோடு ராணுவத்திடமிருந்து எந்த பிரச்சினையும் வரக்கூடாதென்று அவர்கள் பாசறையிலேயே அவன் முதல் நிகழ்ச்சியை ஜவான்களுக்காக நட்த்தியிருக்கிறான். அதனால் ஏதேனும் வெறுப்புணர்வு இந்த தெற்கத்திய மக்களுக்கு தன் மேல் ஏற்பட்டிருந்தால் அதை போக்கவும் தான் இந்த இலவச நிகழ்வு.
சீலிமா அந்தப் பெட்டியில் இருந்து ஒரு பெரிய ஹீலியம் பலூனை எடுக்கிறாள். அது மெல்ல உயர உயர, சபாட் காற்றில் கைகளை வீசி சூன்யத்திலிருந்து ஒரு ரெமிங்டன் டபுள் டெரிங்கர் துப்பாக்கியை எடுக்கிறான். அதால் உயரும் பலூனை சுடுகிறான். அதிலிருந்து அதீதமாக சிகப்பு புகை வெளியேறி அரங்கை நிறைக்கிறது.
அப்புறம் நடந்ததுதான் யாரும் எதிர்பார்க்காத ஒன்று! பிரம்மாண்ட திரை சீலைகள் மெல்ல கீழிறங்க ஆரம்பித்தன. அந்த சீலைகளில் கோடுங்கோல் ஆட்சி புரிந்த ராணுவ தளபதிகளின் படங்களும் அவர்களின் ஈனச் செயல்களும் சித்திரங்களாக வரையப்பட்டிருந்தன. தெக்கத்தி மக்கள் அறிந்த வரலாறு. கையாலாகாமல் கட்டுண்டு கிடக்கும் உணர்வுகள் மெல்ல தூண்டபடும் அபாயம். ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட அவர்களின் மூதாதையர்கள் கொல்லப்பட்டதும், அவர்களின் மனவிகள் சகோதரிகள், மகள்கள் வன்புண்ர்வுக்கு ஆளானதையும் மீட்டெடுக்கும் சித்திரங்கள்.
அப்போதுதான் அந்த ஆறு முகமூடி வீர்ர்கள் மேடையை ஆக்கிரமித்தனர். சுற்றிலும் இருக்கும் வெளியேறும் வாசல்களில் ஆயுதம் ஏந்திய வீர்ர்கள் இருந்தனர். இவர்கள் எங்கிருந்து திடீரென்று தோன்றினார் என்று வியப்புடன் பார்த்தனர் அரங்க மக்கள்.
சபாட் கோபத்துடன் கத்தினான். “ இது என் அரங்கம்.. யாரைக் கேட்டு உள்ளே வந்தீர்கள்?”
தலைவன் போன்ற தோற்றத்துடன் இருந்த ஒருவன் கையசைத்தான். சபாட்டின் அருகிலிருக்கும் முகமூடி அவனை மூர்க்கமாக தள்ளி விட்டான். சபாட் ஓரத்தில் இருக்கும் பெட்டியின் மீது மோதி மடங்கி விழுந்தான்.
“ யாரும் பதட்டப்பட வேண்டாம். உங்களுக்கு சில உண்மைகளை கூற நாங்கள் வந்திருக்கிறோம். வன்முறை எங்கள் குறிக்கோள் இல்லை. ஆனால் தேவைப்பட்டால் அதற்கும் நாங்கள் தயார். நம் தெக்கத்தி மண்ணின் விடுதலையைப் பற்றிய உரை இது. விருப்பமில்லாதவர்கள் இப்போதே வெளியேறலாம்.”
யாரும் எழுந்திருக்கவில்லை. எதைச் செய்யவும் அவர்களுக்கு ஒரு தலைவன், ஒரு முன்னோடி தேவைப்பட்டது.
“ ஏய் அந்த வேசியை, அடிபட்டவனை உள்ளே கொண்டு போய் கவனிக்கச் சொல் “
செலிமா இந்த நிகழ்வுக்கெல்லாம் பதட்டப்பட்டவளாகவே இல்லை. வழக்கம்போல தன் இடுப்பை அசைத்து மெல்ல நடந்து சபாட் அருகில் போனாள். அவனைக் கைத்தாங்கலாக உள்ளே கூட்டிப் போனாள்.
கூட்டத்தில் யாரும் எழுந்திருப்பதாக இல்லை. வாசல்களில் நிற்கும் ஆயுதம் ஏந்திய முகமூடி வீர்ர்களும் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.
“ கனவான்களே! கண்ணியப் பெண்களே! நாங்கள் எதையும் திருட வந்திருக்கும் கள்வர்கள் இல்லை. இன்னும் சொல்லப்போனால் உங்களிடம் இருந்து திருடப்பட்டதை மீட்டெடுக்க உதவவே நாங்கள் வந்திருக்கிறோம். அதற்கு தேவை நம் மண்ணின் விடுதலை “
நிலமை மூகமூடிக்காரனின் பக்கம் சாய்வதாக இருந்தது. சபாட் இல்லாமலே ஒரு வித மந்திரச் சூழல் அரங்கை ஆட்கொண்டிருந்தது.
கூட்டத்தின் நடுவிலிருந்து கர்னல் வின்ஸ்லோ எழுந்தார்.
“ உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் நான் இப்போது வெளியேற விரும்புகிறேன்.”
அவர் ஆர்பர்க் வின்ஸ்லோ! வக்கீல். ஷேவ்போர்ட்டின் பிரதான செய்தித்தாளான ஷெவ்போர்ட் ஹெரால்ட் டைம்ஸ் பத்திரிக்கையின் நிறுவனர், ஆசிரியர்.
“ நீங்கள் ராணுவத்தில் இருந்திருக்கிறீர்களா சார்”
“ ஆம்! அதோடு அமெரிக்க ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்க மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்திருக்கிறேன்”
“ ஏன் நாங்களும், இங்கு உள்ள எல்லோரும் அப்படி உறுதிமொழி எடுத்தவங்க தான். ஆனால் இந்த யாங்க்கி நாய்கள் தங்கள் ஒப்பந்தத்தை மீறி விட்டார்களே! “
“ ஆம் ஆம் “ என்று குரல்கள் எழுந்தன.
“ ஐயா! நீங்கள் போகலாம். இன்னும் யார் யார் தெக்கத்தி மண்ணுக்கு எதிரானவர்களோ அவர்களும் போகலாம் “
ஒரு சூழ்ச்சி வளயத்தில் மாட்டிக் கொள்வதை உணர்ந்த வின்ஸ்லோ மெல்ல தன் இருக்கையில் உட்கார்ந்தார்.
தங்கள் உரையைப் பற்றி மறுநாள் காலை வரை யாரிடமும் ஏதும் சொல்லக் கூடாது என்கிற உறுதிமொழியை கூட்டத்தினரிடம் வாங்கிக் கொண்டு அந்த பருத்த ஆள் தன் உரையைத் தொடங்கினான்.
0
உரை முடிந்து கூட்டம் கலைந்தபோது வின்ஸ்லோ தன் சாரட் வண்டியில் ஏறப் போகும்போது, மேடையில் கண்காணிப்புக் குழுவில் இருந்த அந்த வயதான பெண்மணி அவரருகில் வந்தாள்.
“ என்னை தயை கூர்ந்து வழியில் இறக்கி விடமுடியுமா?”
“ நிச்சயமாக.. எங்கே போகவேண்டும்? முதலில் ஏறிக் கொள்ளுங்கள்”
வண்டி போய்க் கொண்டிருக்கும்போது, அதைத் தொடர்ந்து இன்னொரு வண்டியும் புறப்பட்டது. அதில் இரண்டு தடியன்கள் இருந்தார்கள். ஒருவன் பெயர் மேட். இன்னொருவன் ஹெர்மி. வின்ஸ்லோ ராணுவ முகாமுக்கு தகவல் சொல்கிறாரா என்று கண்காணிக்க அவர்கள் அனுப்பப்பட்டிருந்தார்கள்.
சாரட்டின் உள்ளே அந்த பெண்மணி தன் உடையைக் களைந்து கொண்டிருந்தாள். மெல்ல தன் ஸ்கார்ப்பை கழட்டி தன் தலையை அவிழ்த்து விட்டாள். அழுந்த தன் முகத்தை துடைத்துக் கொண்டாள். இப்போது அவள் மூதாட்டி இல்லை. இளம்பெண்.
“ உன் ஒப்பனை என்னையே ஏமாற்றிவிட்டது பெல் பாய்ட்!”
பெல்பாய்ட்! தி ரிபெல் உளவாளி. அமெரிக்க உளவு துறையின் தேர்ந்த வீராங்கனை.
“ சபாட் என் ஒப்பனையை கண்டு பிடித்து விடுவானோ என்றொரு பயம் எனக்கிருந்தது.”
“ தத்ரூபம்! இனி என்ன செய்யப்போகிறாய்?”
“ இன்னும் கொஞ்சம் தூரம் போனவுடன் என்னை இறக்கிவிடுங்கள் அங்கிள் ஆல்பர்க். எனக்கு கொஞ்சம் அந்த அரங்கில் வேலை இருக்கிறது”
“ தனியாகப் போவது ஆபத்தில்லையா பெல்?’
“ எனக்கு ஆபத்து அல்வா சாப்பிடுவது மாதிரி அங்கிள்”
0
ஹெர்மியும் பர்ட்டும் பின் தொடர்ந்தபோது அந்த சாரட் சட்டென்று நின்றது. வேறு வழியில்லாமல் அவர்கள் அதைக் கடந்து போக வேண்டி இருந்தது. ஒரு திருப்பத்தில் நிறுத்தி சாரட்டை கண்காணிக்க பெர்ட்டை அனுப்பினான் ஹெர்மி.
சாரட்டிலிருந்து பெல் இறங்கினாள். வந்த வழியே திரும்ப நடக்கலானாள்.
‘ இவள் எங்கிருந்து வந்தாள்? அந்த மூதாட்டி எங்கே?’
பர்ட் ஹெர்மியிடம் ஓடினான். “ ஏதோ வில்லங்கம். மூதாட்டி ஏறினாள். இப்போ ஒரு சின்னப் பெண் இறங்கி அரங்கை நோக்கி போகிறாள்.. என்ன செய்யட்டும்?”
“ நான் வின்ஸ்லோவை தொடர்கிறேன்.. நீ அந்தப் பெண்ணை விடாதே.. எங்கே போகிறாள் என்று பார்”
மீண்டும் ஓடி திருப்பதை அடைந்த போது அந்தப் பெண்ணைக் காணவில்லை. எங்கே போயிருப்பாள். மெல்ல அடி மேல் அடி வைத்து தெருமுனையை அடைந்து திரும்பிய போது அவன் தாக்கப்பட்டான். மர்ம ஸ்தானத்தில் ஒரு உதை. பிடறியில் ஒரு வெட்டு. பெர்ட் பழந்துணிபோல கீழே விழுந்து விட்டான். பெல் கைகளை உதறிக் கொண்டாள். இனி அவளுக்கு தடையில்லை.
அரங்கை அடைந்து ஒரு இருள் சதுரத்தில் அவள் ஒதுங்கியபோது குரல்கள் கேட்டன. சபாட்டும் இன்னொருவனும் வெளியே வந்தார்கள்.
“ செலிமாவை நம்ப முடியாது. எப்படியாவது அவளை இன்றிரவு என்னிடம் சேர்ப்பித்து விடு. நான் டெக்ஸாஸ் மாநிலத்தில் நிகழ்ச்சி நடத்த வேண்டும். என் படகு இரவு புறப்பட்டு விடும்”
“ ஏன் அவள் தான் வேண்டுமா? வேறு பெண்ணை தேடேன்?”
“ தேடலாம்.. செலிமாவை விட புத்திசாலியாக்க் கூடக் கிடைப்பாள்..ஆனால் செலிமாவை விட முடியாது.. அவளூக்கு பல ரகசியங்கள் தெரியும்”
“ இரவு அவள் உன்னோடு இருப்பாள்.. நீ தனியாக தூங்க வேண்டாம் “
“ அந்த பிரஞ்சுகாரனிடம் சொல்லி விடு. வின்ஸ்லோதான் தடைமுள். அவனை நீக்க வேண்டும்”
பெல்லுக்கு துணுக்குற்றது. அங்கிள் ஆல்பர்க்கை கொல்லப் போகிறார்களா? உடனே அதை தடுக்க வேண்டும் அதோடு அந்த பிரெஞ்சுகாரனை கொல்ல வேண்டும். அதற்காகத்தானே அவள் ஷேவ்போர்ட் வந்திருக்கிறாள்.
0
அமைதியாகப் போய்க்கொண்டிருக்கும் அமெரிக்க கூட்டுறவு ஆட்சியில் கலகம் விளைவிக்கும் கூட்டம் தான் தெக்கத்திய சகோதர்கள் அமைப்பு. அதன் தலைவன் அந்த ஃப்ரெஞ்சுக்காரன் ஏற்கனவே பெல்லின் நண்பர்களை கொன்றவன்.
0
ஜெ.டி.எட்ஸனின் “ டிக்ஸி ( பகுதி 2 )
சிறகு இரவிச்சந்திரன்.
0
சில மாதங்களுக்கு முன்னால் அது நிகழ்ந்தது. ஒரு கடினமான பணியை முடித்து விட்டு சம்பாதித்த விடுமுறையை கழிக்க ‘எலிகண்ட் லேடி’ எனும் சொகுசு கப்பலில் பயணித்துக் கொண்டிருக்கிறாள் பெல் பாய்ட். அவளைப் பார்க்க வருகிறார் ஸ்டென்ஹவுஸ்.
“ தெக்கத்திய சகோதர்கள் நூறு துப்பாக்கிகளையும், ராணுவ உடைகளையும் மெம்பிஸில் ஒரு கிடங்கில் ஒளித்து வைத்திருக்கீறார்கள். அதை கனசாஸ் எடுத்து செல்வதாக திட்டம். அங்கிருந்து அவர்கள் ஒரு ஆயுதப் புரட்சியை நடத்தப் போகிறார்கள் என்று தகவல். அதை என் ஆள் ஹொராஷியோ டேரன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். எப்போது அவை வெளியேறினாலும் தகவல் தருவான். “
“ பின் நான் எதற்கு? அதுவுமல்லாமல் நான் என் விடுமுறையை கழிக்க வந்திருக்கிறேன். வேலை செய்ய அல்ல”
“ கர்னல் பாய்ட்.. உங்களுக்கு தெரியாதா? அமெரிக்க உளவுத்துறைக்கு ஓய்வே இல்லை என்பது. அதுவுமல்லாமல் ஜெனரல் உங்கள் பெயரை சிபாரிசு செய்திருக்கிறார். அதனால் நீங்கள் மறுக்கவே கூடாது”
0
ஹொராஷியோ டேரன் சுமாரான அழகுடன் அதைவிட சுமாரான அறிவுடன் இருந்தான். துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்ட கொட்ட்டிக்கு எதிரில் உள்ள ஒரு நடுவாந்திர விடுதியில் அறை எடுத்திருந்தான். அதிலிருந்து பார்த்தால் கொட்டடியில் நடப்பதைக் கண்காணிக்கலாம். பெல் பாய்டை அவன் மதிக்கவே இல்லை. தனக்கு உதவ வந்த ஏதோ ஒரு ஜூனியர் என்றே அவன் எண்ணம் இருந்தது. ஆனால் அது சீக்கிரம் மாறப்போகிறது என்பதை அவன் அறியமாட்டான்.
கொட்டடியில் உண்மையாகவே துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என்று அறிய விரும்பினாள் பெல். ஆனால்; டேரன் அதை ஏற்கனவே தான் பார்த்து விட்டதாகச் சொன்னான். அங்கு வேலையிலிருக்கும் ஒரு பணியாளை தான் ஏற்கனவே சரிக்கட்டி விட்டதாக டேரன் சொன்னான். அவன் மூலம் தான் தகவல் வருகிறதாம். எப்போது இந்த துப்பாக்கிகளும் ராணுவ உடைகளும் கப்பல் ஏறப்போகின்றன என்று அவன் சொல்வானாம்.
“ இப்போது அவன் வருகிற நேரம்.. அவன் கண்ணில் நீ படாமல் இருப்பது நல்லது அதோ பார் அவன் தான்! ஓ ரெய்லி”
பெல் உடனே வெளியேறினாள். மாடிப்படி வளைவில் ஒரு திருப்பத்தில் அவள் மறைந்து நின்று கொண்டாள். பணியாளர் உடையுடன் ஒருவன் மேலேறி டேரன் அறைக்குள் போனான். அவன் புழக்கடை கதவு வழியாக வந்திருந்தான். சில நிமிடங்களுக்குப் பின் அவன் அங்கிருந்து வெளியேறினான். இப்போது எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவன் முன் வாசல் வழியாக வெளியே போனான். பெல் அவனைத் தொடர முடிவு செய்தாள்.
ஓ ரெய்லி சமத்காரமாக டிராவலர்ஸ் ஓட்டலுக்குள் நுழைந்தான். நிச்சயமாக ஒரு பணியாள் தங்கும் ஓட்டல் வகையல்ல அது. கொஞ்சம் பெரியது.
முன் மேசையில் இருக்கும் குமாஸ்தா பெல்லைப் பார்த்து புன்னகைத்தான். உதவும் பாவத்துடன் அவளைப் பார்த்தான்.
“ அந்தப் பணியாள் என் அறைக்கு போகமாட்டான் தானே! போனாலும் அதிக சத்தம் போடமாட்டான் என்று நினைக்கிறேன்”
“ யார்? மிஸ்டர் ஷெரிஃப்பா? அவர் ஒரு துப்பறியும் போலீஸ்! இப்போது இந்த வேட்த்தில் இருக்கிறார்.. யார் மாட்டப் போகிறானோ?”
டேரன் கண்காணிப்பதை கடத்தல்காரர்கள் கண்டு பிடித்திருக்க வேண்டும். வேண்டுமென்றே ஓரெய்லியை தப்பான தகவல்கள் தர அவர்கள் டேரனிடம் அனுப்பி இருக்க வேண்டும்.
தன் அறைக்குப் போன பெல் தன் ஒப்பனையைக் கலைத்து, இளம்பெண்ணாக மாறினாள். கடினப் பணிகளுக்கான அவளது உடை கைத்துப்பாக்கியுடன் அம்சமாக இருந்தது. வெளியே வரும்போது ஒரெய்லியின் அறைக்கதவு திறக்கப்படும் ஓசை கேட்டது. பதுங்கி அவனை ஆராய்ந்தாள்.
ரெய்லி இப்போது திருத்தமாக உடை அணிந்திருந்தான். அந்த ஓட்டலுக்கு தகுதியான கோட்டும் சூட்டும் தலையில் பவுலர் தொப்பியும். அவன் தோரணை, வெளியே போவதற்கான அறிகுறிகளைக் கொண்டிருந்தது. பெல் அவனை பின் தொடர முடிவு செய்தாள்.
ரெய்லி ஒரு முறை கூட திரும்பிப் பார்க்கவில்லை. பல சந்துகளைக் கடந்து அவன் பிஜோ அரங்கை அடைந்தான். கதவைத் திறந்து உள்ளே போனான். கதவு மூடிக் கொண்டது. பெல்லிடம் இருக்கும் திறமைகளில் ஒன்று எந்தப் பூட்டையும் திறப்பதுதான். அதற்கான உபகரணங்கள் அவளிடம் எப்போதும் இருக்கும். தன் நீள பூட்ஸின் உட்பகுதியில் இருக்கும் துண்டு கம்பியை எடுத்து உள் நுழைத்து திறக்க முற்பட்டபோது மெலிதான சப்தம் அவள் பின்னால் கேட்டது. ரெய்லி யாரையோ சந்திக்க வந்திருக்கிறான். அந்த நபர் இப்போது வரக்கூடும் என்கிற எண்ணம் உறைத்தபோது, ஒரு முரட்டுக் கரம் அவளது இடது தோளைப் பற்றி திருப்பியது. அவளது தாடையில் ஒரு இடி இறங்கியது.
0
“ யார் இவ? எங்கிருந்து வந்தா?”
“ யாருக்கு தெரியும்.. நான் வரும்போது கதவை திறந்துக்கிட்டு இருந்தா”
“ கதவை நான் பூட்டியிருந்தேனே!”
“ ஆனா இவ அதை எப்படியோ தொறந்துட்டா “
அவளை அடித்தவன் மெலிசாக இருந்தான். பனியனில் டெக்ஸ்டர் என்று எழுதியிருந்த்து.
“ முதலில் இவளை அப்புறப்படுத்த வேண்டும்.. அதோடு இவள் வாயை மூட வேண்டும்.. இப்போது எல்லோரும் கூடி விடுவார்கள். அதற்குள்..”
“ அதை நான் பாரத்துக் கொள்கிறேன்.. நீ போய் என் வண்டியை எடுத்து வா.. இவளை அதில் தூக்கி போட்டு விடலாம்”
ஒரெய்லி வண்டியை எடுக்க போனான். டெக்ஸ்டர் அவளை குரோத்துடன் பார்த்தான்.
“ பெண்ணே! வீணாக அடிபட்டு சாகாதே! என் கேள்விகளுக்கு பதில் சொல்லு”
அவனை மேலிருந்து கீழாகப் பார்த்தாள் பெல். ஒரு முறை கூட அவன் கண்களில் காமம் தெரியவில்லை. அவன் ஓரினச் சேர்க்கையாளனாக இருக்க வேண்டும்.
“ உன்னை எனக்குப் பிடிக்கிறது.. எனக்கும் என் போன்ற பெண்களைத்தான் பிடிக்கும் “
தன் சாதி என்னும் அவளைப் பார்த்து அவன் லேசாக புன்னகைத்தான். இவனை வீழ்த்துவது சுலபம்.
“ இதோ பார்.. நானும் துப்பறியும் ஆள் தான்.. ஷெரிஃப் ஐரிஷ்காரர்களுடன் சேர்ந்து கலகம் பண்ணப் பார்க்கிறான். அதை முறியடிக்கத்தான் நான் வந்தேன். பின்னால் என் ஆட்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள் “
“ என்ன மிரட்டுகிறாயா? அதெல்லாம் இங்கே செல்லுபடியாகாது”
“ நான் ஏன் உன்னை மிரட்ட வேண்டும். உண்மையைத்தான் சொன்னேன்.. அதோடு இவனை மாட்டி விட்டால் உனக்கு பெரும் பணம் கிடைக்கும். நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன் “
டெக்ஸ்ட்டர் கண்களில் பேராசை தெரிந்தது. வலையில் விழுகிறான். இவனுக்கும் ரெய்லிக்கும் ஏதோ பகை இருக்கிறது.
“ சீக்கிரம்! பதினைந்து மில்லியன் டாலர்கள் சதியில் உன்னைக் கூட போட்டு தள்ளிவிடுவார்கள் “
“ என்னது பதினைந்து மில்லியனா?;’
“ உனக்குத் தெரியாதா? உன்னை வெறும் அடியாளாகத்தான் அவர்கள் பார்க்கிறார்கள். என்னோடு வா.. உனக்கு பெரும் பணம் கிடைக்கும்”
அப்போது அந்த அறையின் கதவு திறந்தது. வந்த ஆளைப் பார்த்து டெக்ஸ்ட்டர் பேயறைந்தான்.
“ நீ எப்படி இங்கே?”
“ ஹை டெக்ஸ்ட்டர்! என்னை எதிர்பார்க்கல இல்லே”
“ மெபிஸோ! நீ.. நீ இறந்து விட்டதாகச் சொன்னார்கள்?”
“ இப்போது பார்க்கிறாயே! நான் உயிரோடு இருக்கிறேனே”
“ என்ன வேணும் உனக்கு.. “
“ நான் இறந்தவனாகவே இருக்க வேண்டும்.. அதுதான் எனக்கு நல்லது.. ஆனால் நீ என்னை பார்த்து விட்டாய்.. நீ ஒரு ஓட்டை வாய் “;
பெல் தன் உடல் கோணத்தை மாற்றிக் கொண்டாள். சட்டென்று துள்ளி எழும்ப அவள் தயாராக இருந்தாள்.
மெபிஸோ தன் தொப்பியைக் கழட்டினான். தன் சிகையை பிய்த்தெடுத்தான். அவன் முகம் தெளிவாக தெரிந்தது. ஆனால் அங்கே முகமே இல்லை.. ஒரு குரூரமான, சிதைக்கப்பட்ட மாமிசக் கூடு தான் இருந்தது.
மெபிஸோவின் கரங்கள் காற்றில் அசைந்தன. ஒரு பூங்கொத்து அவன் கையில் தோன்றியது. அவன் இடக்கை டெக்ஸ்டரின் வலது கரத்தை வெட்டியது. ரெமிங்டன் துப்பாக்கி கீழே விழுந்தது. பூங்கொத்தால் சட்டென்று டெக்ஸ்டரின் முகத்தை உரசினான் மெபிஸோ! மெல்லிய கோடாக ரத்தம் அவன் கழுத்திலிருந்து வழிய ஆரம்பித்தது.
“ நன்றி மெபிஸோ! அவன் என்னை கொல்ல இருந்தான்”
“ நான் மட்டும் என்ன செய்யப்போகிறேன் என்று நினைக்கிறாய்.. எனக்கு சாட்சிகள் பிடிக்காது”
தன் மேல் பாய்ந்த மெபிஸொவை ஒரு பந்து துள்ளலில் எதிர்கொண்டாள் பெல். அவன் அடியின் வலிமை தாங்காமல் ஓரத்தில் போய் விழுந்தான். தட்டி விடப்பட்ட மண்ணெண்ணை விளக்கு கீழே விழுந்து எண்ணை பரவ ஆரம்பித்தது. நெருப்பு அதோடு சொந்தம் கொண்டாட ஆரம்பித்தது. திறந்திருந்த கதவு வழியாக ஒரெய்லி நுழைந்தான். மெபிஸோவை பார்த்ததும் அவனிடமிருந்து ஒரு சீறல் எழுந்தது. தன் கோல்ட் துப்பாக்கியை எடுத்து குறி பாரத்தான். நெருப்பு திரைசீலைகளை தின்ன ஆரம்பித்திருந்தது. பெல் உருண்டு வெளியே வந்தாள். அவளுக்கு முன்னால் மெபிஸோ தப்பியிருந்தான். எரியும் அரங்கிற்கு வெளியே கூட்டம் கூட ஆரம்பித்திருந்தது. இனி பெல்லுக்கு அங்கே வேலையில்லை.
0
“ என்ன சொன்னான் ஓரெய்லி ?’
“ சனிக்கிழமை எல்லாவற்றையும் படகில் ஏற்றப்போகிறார்களாம்.. நாளை உறுதி செய்வதாகச் சொன்னான்”
“ ஆனால் நிச்சயமாக நாளை வரமாட்டான்.. ஏனென்றால் இன்றே அவன் இறந்து விட்டான்”
“ என்ன சொல்கிறாய்?’;
பெல் மொத்த கதையையும் சொன்ன போது டேரன் கண்களில் ஒரு வித மரியாதை படர ஆரம்பித்தது. அதோடு அவன் பணியாள் இல்லை. டிராவலரஸ் ஓட்டலில் தங்கும் வசதியான ஆள் என்ற தகவல் தெரிந்த போது தான் ஏமாற்றப்பட்டதை டேரன் உணர்ந்தான். சனிக்கிழமைக்கு முன்னால் படகுத்துறைக்கு போக வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்ந்தார்கள்.
0
‘பிரெய்ரீ பெல்’ சமர்த்தாக ஆடிக் கொண்டிருந்தது. பெல் கொஞ்சம் கவர்ச்சியாக உடை அணிந்திருந்தாள். அந்த சூழலுக்கு அதுதான் தோது. சுற்றி இருந்த படகுக்காரர்கள் கெக்கலி இட்டார்கள். அவள் சட்டை செய்யவில்லை. அவளது நோக்கம் வேறு. தன் பழைய நண்பன் ஜிம் பளுட்ஸோவை பார்த்தாக வேண்டும் அவளுக்கு. அதன் பின்னால் ஒரு பெரிய திட்டமே இருந்தது.
சுற்றி இருக்கும் ஆண்கள் வக்கிரமாவதற்குள் பளுட்ஸோ வந்துவிட்டான். அவளை பத்திரமாக படகுக்குள் அழைத்தும் சென்று விட்டான். படகின் மேல் பகுதியிலிருந்து நோட்டம் விட்டபோது, கோட் சூட்டுடன் ஒரு வனப்பான ஆள் மெல்ல முன்னேறிக் கொண்டிருந்தான். அவனை எங்கோ பார்த்ததாக பெல்லுக்கு ஞாபகம்.
டேரன் தனியாக ஒரு பயணியாக அந்தப் படகில் ஏறியிருந்தான். மறுநாள் காலையில் அந்த கோட்டு சூட்டு ஆசாமி டேரனுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தாள். பிஜோ அரங்கில் இவனைப் பார்த்த ஞாபகம். ஓ அந்த சூதாடியா? இவன் இங்கே என்ன பண்ணுகிறான்.
ப்ளூட்ஸோ கேப்டனிடம் பேசி பெல்லுக்கு அனுமதி வாங்கி விட்டான். அவள் தன் மனைவி என்று பொய் சொல்லியிருந்தான். அதனால் அவள் ப்ளாட்ஸோவின் அறையிலேயே தங்க வேண்டிய கட்டாயம். ப்ளாட்ஸோ அப்படி ஒன்றும் தப்பானவன் இல்லை. அவனுக்கு ஒரு காதலி இருக்கிறாள். அவளுக்கு ஒரு விலை உயர்ந்த குல்லாவை அவன் வாங்கி வைத்திருக்கிறான். மாலை அதை பெல்லுக்கு காட்டுவதாகச் சொல்லியிருக்கிறான்.
ப்ளூட்ஸோ அந்த குல்லாப் பெட்டியை காதலுடன் கையில் வைத்துக் கொண்டு மெல்ல மூடியை திறக்க யத்தனித்தான். பெல்லின் உள்ளுணர்வு அபாயம் என்றது. பட்டென்று அந்த பெட்டியை அவன் கையிலிருந்து தட்டி விட்டாள் அவள். பெட்டி படுக்கையின் மேல் விழுந்து மூடி திறந்து கொண்டது. உள்ளே நான்கடி நீளக் கயிறு சுருண்டு கிடந்தது. கயிறு மெல்லப் பிரிந்து தலையை தூக்கி சீறியது. காட்டன் மவுத். நாகத்தை விட கொடிய விஷம். ப்ளூட்ஸோவின் கைகள் பக்கவாட்டில் இருந்த கத்தியைத் தொடுவதற்குள் பெல்லின் கைத்துப்பாக்கி அலறியது. படமெடுத்த பாம்பின் தலை சிதறியது.
ப்ளூட்ஸோவை கொல்ல திட்டமிட்டது யார்? தேவையில்லாமல் அந்த சூதாடியின் முகம் பெல்லின் நினைவுகளில் வந்தது. தகவல் சேகரிக்கப்பட்டது. அவன் பெயர் புரூனெல். சூதாடுவதை தொழிலாகக் கொண்டவன். அது மட்டும்தானா? இல்லை வேறு தொழிலும் இருக்கிறதா?
ப்ளூட்ஸோவின் சேவகனாக, ஒரு பரம விசிறியாக வில்லி இருந்தான். அவனுக்கு ப்ளூட்ஸோதான் கடவுள். வில்லி அந்தப் படகின் கரி அடுப்பை அணையாமல் எரிய விடும் வேலையில் இருந்தான். ஒரு நாள் பெல் பார்த்துக் கொண்டிருக்கும்போது புரூனெல் வில்லியிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். பிறகு போய் விட்டான்.
“ எதற்கு வந்தான் அந்த சூதாடி?;’
“ அவனது கோட்டு சூட்டில் மை கொட்டி விட்டதாம். இனிமேல் பயனில்லை என்று எரிக்கப் போட்டுவிட்டான். பெல்லின் மனதில் சிவப்பு விளக்கு எரிந்தது. ஏதோ வில்லங்கம் இருக்கிறது! வில்லியுடன் அவள் திரும்ப நடந்து வந்தபோது அது நிகழ்ந்தது. டமால் என்று ஒரு சத்தம். அதைத் தொடர்ந்து பெரு நெருப்பு. புருநெல் கோட்டு சூட்டுக்குள் வெடிகளை வைத்திருக்கிறான். அது படகின் ஆதார கரி அடுப்புகளை வெடிக்க வைத்து விட்டது. இனி படகு ஓட்டையாகும். மெல்ல மூழ்கும். நெருப்பு மொத்த படகையும் தீக்கிரையாக்கும்.
கடைசி வரை ப்ளூட்ஸோ படகை விட்டு வரவேயில்லை. கடைசி பயணி வெளியேறும்வரை அவன் படகிலேயே இருந்தான். அதோடு அவன் மடிந்தும் போனான்.
“ வில்லி ! என்னை காப்பாற்ற முயலாதே! நீ தப்பித்துக் கொள். இந்தா என் பிச்சுவா. இது அந்த புரோநெல்லின் சாவுக்கு காரணமாக இருக்க வேண்டும் “
வில்லி தன் எசமானனின் வார்த்தைகளை சத்தியமாக ஏற்றுக் கொண்டான். புரோநெல் அவன் கைகளால் தான் மரணமடையப் போகிறான்.
0
டீ பிரேசி,. புரோநெல்லுக்காக காத்திருக்கிறான். இருவரும் தப்பிக்க திட்டம் தயார். ஒரு கறுப்பன் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தான். “ மேரி உங்களை பார்க்க காத்திருக்கிறாள்” போகிற போக்கில் சொல்லி விட்டு அவன் இருளில் மறைந்து போனான்.
நினைத்தவுடனே எச்சில் ஊறியது டீ பிரேசிக்கு. மேரி லொராண்டல். அம்சங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கொண்ட தேவதை. புரோநெல் வருவதற்குள் ஒருமுறை போனால் தான் என்ன?
மேரியின் வீட்டருகில் அவன் தாக்கப்பட்டான். கண் விழித்த போது அவன் கட்டுண்டிருந்தான். கட்டிலின் ஒரு மூலையில் ஆண் உடையில் ஒரு பெண். இன்னொரு மூலையில் தனக்கு மேரியிடமிருந்து தகவல் சொன்ன அந்த கருப்பன்.
உதைகள் மூலம் கிடைத்த கதை இதுதான். பிரஞ்சுக்காரன் தான் சூத்திரதாரி. அவன் தான் எல்லாக் கொலைகளையும் செய்கிறான். இப்போது கூட ஓட்டல் டீ கிரேசில் ஒரு முக்கியக் கூட்டம் நடக்க இருக்கிறது.
புருநெல் அறை வாசலில் பெல் மெல்ல பூட்டைத் திறக்க முயல்கிறாள். ‘தட்..’ உள்ளே சாவி விழும் ஓசை கேட்கிறது. புருநெல் விழித்திருப்பானா? வில்லி கதவை உதைத்து திறக்கிறான். புயலென உள்ளே பாய்கிறான்.
புருநெல் தூங்கவேயில்லை. முழு உடையுடன் படுக்கையில் உட்கார்ந்திருக்கிறான்.அவன் கைத்துப்பாக்கி சீறுகிறது. ஆனால் ப்ளூட்ஸோவின் கத்தியுடன் பாய்ந்த வில்லியின் வேகத்தை அதன் தோட்டாக்களால் தடுக்க முடியவில்லை. கீழிறங்கிய பிச்சுவாவுடன் வில்லி புருநெல் மேல் விழுகிறான். கத்தி ஆழமாக அவனது நெஞ்சில் இறங்குகிறது வில்லி தோட்டாக் காயங்களுடன் எழுகிறான். “என் ஆசானின் ஆன்மா இனி சாந்தியடையும் “
வில்லி ப்ளூட்ஸோவின் பிச்சுவாவை பெல்லிடம் கொடுக்கிறான். ‘இனி இது அந்த பிரஞ்சுக்காரனை பதம் பார்க்கட்டும்.’
பிரஞ்சுக்காரனை தேடித்தான் பெல் ஷேவ்போர்ட் வந்தாள். ஆனால் அந்த பிரெஞ்சுக்காரன் தப்பியோடிவிட்டான். இனி அவனைத் தேடிக் கொல்லும்வரை பெல் பாய்ட் ஓயமாட்டாள்.
0
{ முற்றும் }
- ‘பறந்து மறையும் கடல்நாகம்’ – ஏற்புரை
- ப்ரதிலிபியும் அகம் மின்னிதழும் இணைந்து கட்டுரைப்போட்டி – கடைசி நாள் – 15/01/2016
- 13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (7,8)
- மருத்துவக் கட்டுரை தொண்டைப் புண்
- புத்தகங்கள்புத்தகங்கள் !! ( 4 ) கலாமோகினி இதழ் தொகுப்பு
- ஜெ.டி.எட்ஸனின் “ டிக்ஸி “
- பிரபஞ்ச மூலத் தோற்றம் விளக்கும் பெரு வெடிப்புக் கோட்பாடும் ஒரு புனைவு [Mirage] யூகிப்பே.
- மீள் வருகை
- தொடுவானம் 102- பழுதற்ற படைப்பு மனித உடல்
- முறையான செயலா?
- ஓர் உணவு விடுதியும் இரண்டு காதலிகளும்
- வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் பகுதி-1 இலக்கிய வட்டம் ஓர் அறிமுகம்